Wednesday, July 06, 2016

திரு செம்பொன் செய் திருக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 56)

இலங்கையில் ராம ராவண யுத்தம் முடிஞ்சது. இலங்கை மன்னன் போய்ச் சேர்ந்தான். அவனைக்  கொன்றதால் நம்ம ராமனுக்கு ப்ரம்மஹத்தி  தோஷம் வந்து சேர்ந்தது. என்ன செய்யலாம் என்ற யோசனையோடு, சீதையுடன்  ராமேஸ்வரத்துக்குத் திரும்பி வர்றாங்க ராமனும் லக்ஷ்மணனும்.

அங்கே  சிவனைப் பூஜிக்கவேணும் என்று சிவலிங்கம் ஒன்னு  தேவைன்னு  ராமன்  சொன்னதும்தான்  நம்ம ஆஞ்சி, 'இதோ நான் கொணாந்துடறேன்'னு கிளம்பிப் போனார்.  பூஜைக்கு நேரமாகுதேன்னு  கவலைப்பட்ட கணவருக்காகத்  தானே அங்கு இருந்த கடற்கரை மண்ணால் ஒரு லிங்கம் பிடிச்சு வைக்கறாங்க சீதை.




பூஜை பாதி நடந்துக்கிட்டு இருக்கும் சமயம் ஆஞ்சி,  கையில் சிவலிங்கத்தோடு      திரும்பி வந்தார். ஒரிஜினல் லிங்கமாம்.  காசியில் இருந்து கிளப்பிக்கிட்டு வந்தது! அங்கே இருந்த லக்ஷக்கணக்கான சிவலிங்கங்களில்  எப்படி இதைக் கண்டுபிடிச்சாராம்?  அதுக்கும் ஒரு 'கதை' இருக்கு:-)

'நான் கொண்டு வரேன்'னு     ஹனுமன் புறப்பட்டு காசிக்குப்போறார்.  அங்கே  எங்கே பார்த்தாலும்  சிவலிங்கங்களே!  லக்ஷக்கணக்கில் கொட்டிக்கிடக்கு. எது உண்மை? எது ரிப்ளிகான்னு தெரியாமல் தவிச்சு நின்ன நொடியில் கருடர் ஒரு லிங்கத்தைச் சுற்றிப் பறந்து  சேவிக்கிறார். ஓஹோ.... இதுதான்  அசல் னு தெரிஞ்சுக்கிட்ட ஆஞ்சி, அதைக் கிளப்பிக்கிட்டு தெற்கே பறக்கறார்.

காசிக் காவலர்  காலபைரவருக்கு கோபமான கோபம். அதெப்படி என்னாண்டை  பெர்மிஷன் வாங்காமத் தூக்கிண்டு போகலாமுன்னு  அனுமன் மேல் சாபம்  விடப் பார்த்தார்.  மற்ற தேவர்கள் எல்லாம், 'வேணாம். இது ஸ்ரீ ராமனுக்காகத்தான் கொண்டு போறார்'னு விஷயத்தை விளக்குனதும் கோபம் தணிஞ்சு 'கொண்டுபொய்க்கோ' என்றவர்,  நாவில் நிற்கும் சாபம் வீணாப்போயிருதேன்னு  உண்மை லிங்கத்தைக் காட்டிக்கொடுத்த  கருடருக்கு      'இனி உனக்கு காசியில் இடம் இல்லை'ன்னுட்டார்னு  ஒரு புராணக் கதை.

காலபைரவர், நம்ம கூர்க்கா மாதிரி. கத்தியை வெளியே எடுத்தால் ரத்தம் பார்க்காம திரும்ப உள்ளே வைக்கமுடியாதாமே!

கருடர்  லிங்கத்தைச் சுத்தும்போது பல்லியும் உச்சுக்கொட்டிச்சாம். அதனால் அதுக்கும் ஊருக்குள் வரத் தடா! (இது நம்ம துளசிதளத்துலே காசிப் பயணத்தில் இருக்கு)

சட்னு கோபம் வந்துருச்சு ஆஞ்சிக்கு.  'அதெப்படி நான் இம்மாந்தூரம் போய் கஷ்டப்பட்டுக்  கொண்டு வந்துருக்கேன். ஒரு அஞ்சு நிமிட் லேட் ஆனால் என்ன,  பொறுமை காக்கப்டாதா'ன்னு பொரிஞ்சு தள்ளறார்.

'சரிப்பா ஆஞ்சி.  சீதையின் மணல் லிங்கத்தை எடுத்துட்டு, அங்கே இதை வச்சுரு'ன்னு ராமர் சொல்ல, அலட்சியமா அதை ஒரு கையால் தூக்கி எடுக்கப் போனால்... அது அசைஞ்சு கொடுக்கலை. அப்புறம் ரெண்டு கைகளால் இழுத்தாலும்.... ஊஹூம்... :-(  அதான் அனுமார் வால் இருக்கே...  அதை வச்சு எடுத்துடலாமுன்னு லிங்கத்தைச் சுத்திக் கயிறு கட்டுனமாதிரி வாலைச் சுத்தி வச்சு கிளப்பப்  பார்த்தாலும், வாலுக்குக் காயம் பட்டு ரத்தம் கொட்டுச்சே தவிர  லிங்கம் இம்மியும் அசையலை.

அப்படிக் கொட்டுன ரத்தம் காரணம் அங்கே ஒரு இடத்தில் மண்ணெல்லாம் ரத்தச் சிகப்புன்னு  எங்க தாடிமாமா சொல்லக் கேட்டுருக்கேன்.  அகாலத்தில் இறந்துபோன தன் தம்பியின் (என் சின்ன மாமா) அஸ்தி கரைக்க ராமேஸ்வரம் போய் வந்தவர் அவர்)


சீதையின் பவர் என்னன்னு புரிஞ்சுக்கிட்ட ஆஞ்சி, தலை தாழ்ந்து அந்த மணல் லிங்கத்தை வணங்கினார்னு  போகுது கதை.  அது இருக்கட்டும். இப்போ நம்ம கதையைப் பார்க்கலாம்.

அயோத்திக்குத் திரும்பிப்போகும் வழியில் த்ருட நேத்ர  மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கறாங்க நம்ம ராமர் அண்ட் கோ.  அப்போ முனிவரிடம், 'இந்த ப்ரம்மஹத்தி தோஷத்துக்குப் பரிகாரம் உண்டா'ன்னு கேக்க, அவர் சொல்றார் ' தங்கத்தால் பசு ஒன்னு செஞ்சு, அதன்மேலே ஏறி நாலு நாள் உக்கார். அதுக்கப்புறம் அந்தப் பசுவை ஒரு ப்ராமணனுக்குத் தானம் செஞ்சுரு'ன்னு.

அதே போல ஆச்சு.  அவ்ளோ தங்கம் ஏது, எப்படின்னெல்லாம்  என்னைப்போல் குண்டக்க மண்டக்கன்னு யோசிக்கப்டாது கேட்டோ :-)

தானம் வாங்கிய ப்ராமணனுக்கு,  தனக்கெதுக்கு இவ்ளோ தங்கம்னு தோணிப்போக, அதை அப்படியே வித்துட்டு, அதுலே  கிடைச்ச காசை வச்சு  ஒரு கோவில் கட்டிட்டார்.  அதுவும் ராமனே  மூலவரா இருக்கட்டுமேன்னு...

அதானே....  தோஷம் தீரக் கொடுத்த பொருளைக்  கைநீட்டி  வாங்குன தோஷம் தனக்கு வந்துட்டா  என்ன  செய்யறதுன்னு பயம் வந்துருக்குமோ.....

எப்படியோ கோவில் வந்துருச்சு.  நாமும் அதன் வாசலில் வந்து இறங்கியாச்சு.

 திரு செம்பொன் செய்  கோவில். திருநாங்கூர் திவ்யதேசக்  கோவிலில் ஒன்னு! செம்பொன் அரங்கர் என்று இவரைக் கொண்டாடலாம்.


வாசல் சுற்றுச்சுவரில்  நுழையும் வழியில் ரெண்டு பக்கமும்  பெரிய, சிறிய திருவடிகள் அழகா உக்கார்ந்து வரவேற்பது  பிடிச்சிருக்கு!

கண்ணுக்கெதிரே பலிபீடம், பெரிய திருவடி சந்நிதி மட்டும்தான். கொடி மரம் கிடையாது.  கோவில் வாசலுக்குள் நேராப் போயிடலாம்.
பார்க்கும்போதே ரொம்பச் சின்னக்கோவிலா இருக்கே....   பசு வித்த  காசுக்கு இவ்ளோதான் போலன்னு நினைச்சேன்.  ஆனால்......

உள்ளே போகப்போகக் கொஞ்சம் விஸ்தாரமாத்தான் இருக்கு.

கருவறையில்  மூலவர் பேரருளாளர் , தன் தேவியருடன்   நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவு மானானை
ஏழிசையில் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள்
செம்பொன் செய், கோயிலுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே

திருமங்கை ஆழ்வார் பாசுரம். இங்கேயும் பத்துப் பாடல்கள். (1268- 1277)

 கருவறை முன் மண்டபத்தில்  வழக்கம் போல் கதை எழுதி இருக்கு. நாலைஞ்சு வரி வாசிச்சப்ப....  கொஞ்சம் சுவை உள்ள கதைன்னு புரிஞ்சது. ஆனால் எதையும்  பார்த்துப் படிக்கவிடாமல் கண்டான்முண்டான் சாமான்கள்.  ஏந்தான் பெருமாள் கோவில்களில் இப்படிப் போட்டு வைக்கிறாங்களோன்னு.....   கோபமும் வருத்தமும் வரத்தான் செஞ்சது.


தௌம்யரிடம் சிஷ்யனாக இருந்த உபமன்யூ, குருவுக்காக தான் பிக்ஷை எடுத்து வந்த அன்னத்தையெல்லாம்  கொடுத்துட்டு, தன் பசிக்கு எருக்கம்பால் குடித்து வந்தாராம்.

(அச்சச்சோ.... இவருக்காகத் திருப்பாற்கடலையே திரு வண்புருஷோத்தமன் கோவிலுக்குக் கொண்டு வந்த   புருஷோத்தமவல்லித் தாயாருக்கு இது தெரியுமோ!  ஏம்ப்பா....  உபமன்யூ,   கூப்புடு தூரத்துலே  ( வெறும் 500 மீட்டர்தான்) குளம் நிறையப் பால். அதுவும் உனக்காகவே பெருமாள் அனுப்பி வச்சது  இருக்கே...   இப்படி எருக்கம்பாலைக் குடிக்கலாமோ? ப்ச்.....  )


இதனால் இவருக்குக் கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமா போயிருக்கு. அப்புறம்...? விஷயத்தை தெரிஞ்சுக்கிட்ட குரு,  பேரருளாளனை    வணங்கி வேண்டிக்கச் சொல்றார். அதேபோல்  மனம் உருகி மஹாவிஷ்ணுவை வேண்டியதும்,  சங்கு சக்ரதாரியாகத் தோன்றி, உபமன்யூவுக்குக் கண்பார்வை கொடுத்து தன்னையும் தரிசனம் செஞ்சுக்க வச்சார். (இப்படித்தான் எழுதி இருக்குமுன்னு  நினைக்கிறேன். சரியா வாசிக்க முடியலை)
இன்னொரு இடத்தில், முகுந்தன் என்ற  ஏழை அந்தணர் ஒருவர் இங்கே மூன்று நாளில் முப்பத்தியிரண்டாயிரம் முறை எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய ' வை ஜபம் செய்து,  செல்வந்தர் ஆனார் னு  இருந்தது.  அப்ப சரி. இப்போ பலிக்குமான்னு தெரியலை. ஆகக்கூடி....

 வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் கொடுக்கும் பேரருள்  செய்பவர்  இவர் என்று புரிஞ்சது.

முகுந்தனுக்குச் செல்வம் கிடைச்சதைப் பற்றி ஒரு இடத்தில் வாசிச்சேன். சுவாரசியம்தான். ஒரே அலிபாபா சமாச்சாரமா இருக்கு:-) போகட்டும் உபந்நியாசத்தில் இப்படிச் சுவைபடச் சொல்றதெல்லாம் சகஜமில்லையோ :-)

காஞ்சிபுரத்தில் காச்யபர்  என்றொரு ஏழை அந்தணர் இருந்தார். முதுமையில் குடும்பத்துக்குத் தேவையான பொருள் இல்லாமல்  வீட்டுக் கஷ்டம் அதிகமாயிருச்சு.  மூத்த மகன் முகுந்தன், அப்பா படும் கஷ்டம் பொறுக்கமாட்டாமல்,  காவிரிக்கரைப் பிரதேசங்களுக்குப்போய் எதாவது சம்பாரிச்சுக்கிட்டு வரேன்னு கிளம்பிப்போறான்.

பயணத்துலே அப்படியே இந்த செம்பொன் செய் கோவிலுக்கு வந்து சேர்ந்தவன், மூலவரை மனம் உருக வேண்டிக்கிறான்.  அவனுக்காக மனம் இரங்கிய பெருமாள்  திரு அஷ்டாக்ஷரத்தை  உபதேசிச்சு, இதை முப்பத்திரெண்டாயிரம் முறை  சொல்லுன்னுட்டு மறைஞ்சுட்டார்.

நம்பிக்கையோடு,  மூணுநாள் இடைவிடாம  அந்த எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிச்சு  பெருமாள் சொன்னபடி,  முப்பத்திரெண்டாயிரத்தை முடிச்சுட்டுக் கோவிலில் இருந்து கிளம்பி  தென்திசை நோக்கிப் போறான். அஸ்தமன சமயம் ஆகிருச்சு.  காவிரியாத்தங்கரையில்  நித்யகர்மாவை முடிச்சுக்கிட்டு  திரும்ப நடக்கத் தொடங்கினான்.

நடந்து நடந்து ஒரு காட்டுப்பகுதிக்கு வந்துட்டான்.  நல்லாவே இருட்டிருச்சு.  காட்டு மிருகங்களுக்குப் பயந்து, அங்கிருந்த பெரிய ஆலமரத்துலே ஏறி, ரெண்டாய்ப்பிரியும் கிளைகளுக்கு நடுவில் படுத்துத் தூங்கிடறான். இந்தக் காட்டுலே ஏராளமான குரங்குகள் இருக்கு.  இப்போ இந்த இடத்தில் ஒரு ஊர் வந்துருச்சு. குரங்குப்புத்தூர்னு பெயர்!

திடீர்னு எதோ பேச்சு சத்தம் கேட்டுக் கண் முழிச்சுப் பார்த்தால் ஜெகஜோதியா வெளிச்சம். தலையை லேசாத்திருப்பி மரத்தடியைப் பார்த்தால்....  தீவட்டி பிடிச்ச கைகளுடன்  ஒரு கூட்டம்!  முதுகுலே  ஏகப்பட்ட மூட்டைகள்!   ஓசை எழுப்பாமல் என்னதான் நடக்குதுன்னு கவனிக்கிறான்.

'நாராயணபூதமே!   விலகிக்கொள் ' இப்படிப் பத்துமுறை கத்தறாங்க!   மரத்தடியில் இருந்த ஒரு பெரிய பாறை, விலகி வழி விட்டது!   உள்ளே போய் கொண்டு வந்த மூட்டைகளை வச்சுட்டு வெளியே வந்த ஆட்கள்,  'நாராயணபூதமே...  மூடிக்கொள்' னு பத்து முறை கத்துனதும் பாறை மூடிக்கிச்சு.  எல்லோரும் கிளம்பிப் போயிட்டாங்க.

நடுக்கத்தோடு, எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருந்த முகுந்தனுக்கு  மனசுலே பயம் வந்துருது. மெள்ள மரத்தில் இருந்து இறங்கி வந்து பாறைக்கு முன்னால் நிக்கறான்.  மனசுலே தைரியத்தை வரவழைச்சுட்டு, 'நாராயணபூதமே!   விலகிக்கொள் ' னு பத்துமுறை கத்தறான்.  பாறை...........   விலகுது!

  உள்ளே எட்டிப்பார்த்தால்..... பொன்னும் மணியுமா மூட்டை மூட்டையாக் கொட்டிக்கிடக்கு!

திகைச்சுப்போய் நின்னவனுக்கு ஒரு அசரீரி  கேட்டது.

" முகுந்தா....   உனக்கு வேண்டிய அளவு நவமணியணிகளை எடுத்துக்கொள்"

மறுபேச்சு சொன்னானோ?  ஊஹூம்......

வேணுங்கறதை வாரி எடுத்தான். வெளியே வந்ததும்....  'நாராயணபூதமே...  மூடிக்கொள்' னு பத்து முறை கத்துனதும் பாறை மூடிக்கிச்சு.

இதுக்குள்ளே பொழுதும் விடிஞ்சுருச்சு! எங்கே பார்த்தாலும் குரங்குகள் தவிர வேறொன்னுமில்லை.

எப்படியோ கஷ்டப்பட்டுச் சுமைகளைத் தூக்கி அண்டையிலிருக்கும் ஊருக்கு வந்தவன்,  பொதி மாடுகள் ரெண்டை 'விலைக்கு வாங்கி' செல்வங்களைக் காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தானாம்.

 அப்புறம்?

பெருமாளை ஆராதித்து, தானதருமங்கள் செய்து, மனைவி மக்களுடன் இனிதாக வாழ்ந்து, பின்னர் பரமபதம்போய்ச் சேர்ந்தான்!

written by Sri U.Ve.Vidwan Egai Vedanta Desika Thatacharya Swami. நான் கொஞ்சமா மசாலா தூவினேன்:-)



கோவிலை வலம்  வர்றோம்.  தனிச்சந்நிதியில் தாயார்.

தாயார் பெயர் அல்லி மாமலராள்!   ஹைய்யோ!!!!    என்ன அருமையா இருக்கு!!! பெயரில் இருக்கும் அழகு சந்நிதிக்குள்ளில் இல்லை :-(
தாயாரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்துச்சு எனக்கு ..ப்ச்.


கோவிலில் மராமத்து வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.




காலை 7 முதல்  10,  மாலை 6 முதல் 8 மணி வரைதான் கோவில்  திறந்திருக்கும். நம்ம குமார்   செல்லில் தகவல் அனுப்பியபடியால் பட்டர்ஸ்வாமிகள் வந்து  தீபாராதனை காமிச்சதும்  நமக்குத் தீர்த்தமும் சடாரியும் கிடைச்சது.


 யாகசாலையும் துளசிமாடமும் !


தொடரும்....   :-)



14 comments:

said...

உங்களோடு எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது, பதிவு மூலமாக. அரிய படங்கள். அழகான பதிவு.

said...

செம்பொன் அரங்கரை பல வருடங்கள் ஆகி விட்டது. இப்போது உங்கள் தளத்தில் மீண்டும் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.

said...

நல்ல தரிசனம்...கதைகளையும் தெரிந்து கொண்டு தொடர்கிறேன் டீச்சர்...

said...

கதைகளைப் படித்தபின் மீண்டும் ஒரு முறை ரிவைண்ட் செய்ய முனைந்தால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை

said...

பழைய கதைகள்ள பல எடங்கள்ள... தீட்டு போகுறதுக்கு பசுகர்ப்பம் இருந்து வெளிய வந்தா தூய மறுபிறப்புன்னு சொல்லிருக்கு. அந்தப் பசு தங்கப் பசுவா இருக்கனும். அந்தத் தங்கம் அந்தணர்களுக்குக் கொடுத்துறனும். சூப்பர் ஐடியா. இது இராஜராஜாசோழனும் செஞ்சிருக்காராம். அதுக்கப்புறம் தான் பதவி ஏற்றார்னு சொல்றாங்க. ஒரு நாட்டுப்புறக் கதைல ராணி மங்கம்மா இடக்கைல வெத்தல போட்டதுக்கு ஒரு அந்தணர் இந்த யாகம் செய்யச் சொல்லி தங்கப்பசுவைத் தானம் வாங்கியிருக்காராம். ஒரு ஆள் உள்ள உக்காரும் அளவுக்குத் தங்கப்பசு. லக்கி பிரைஸ்தான்.

உங்களுடைய பதிவுகள்ளதான் எத்தனையெத்தனை கதைகள். உண்மை. புனைவு. புராணம். இப்படி எத்தனை பேர்கள்ள இருந்தாலும் கதைகள் சுவையானவைதான்.

said...

அலிபாபா குகை மாதிரி இங்கேயுமா.... நல்ல கதை! :)

தொடர்கிறேன்.....

said...

திரு செம்பொன் அரங்கனார்திருக்கோவில்...நல்ல தரிசனம்...


பெரியதிருவடி, ஆஞ்சிநேயரின் படங்கள்ரொம்ப அழகு..

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவை ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

அப்போதைக்கு இப்போது மாற்றங்கள் ஏதும் உண்டோ?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

கதைகளைச் சொல்லப்போனால்.... எக்கச்சக்கமா இருக்குப்பா!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நாம் வளர்ந்த காலத்தில் நமக்குச் சொல்லப்பட்ட கதைகள்தான் எப்பவும் நினைவில் இருக்கும். பசுமரத்தாணி!

இப்போ நமக்குக் கிடைக்கும் கதைகளை ரசிப்பதோடு சரி. அடிப்படைக் கதைகளுடன் ஒரு சம்பந்ததோடு போய்க்கொண்டிருக்கின்றன இவை எல்லாம்!

ஒன்னுவிடாமல் நினைவில்நிற்பது கஷ்டம்தான் !

said...

வாங்க ஜிரா!


கற்பனைக்கு எல்லையே இல்லை என்பதுதான் புராணக்கதைகளை வாசிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு!

ரசிக்க முடிஞ்சால் நமக்கும் நல்லதே! எப்படியெப்படிக் கொண்டுபோய், கடைசியில் எங்கே வந்து முடிக்கறாங்க பார்த்தீங்களா!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

திறந்திடு ஸீ ஸேம்.............. மட்டும்தான் இல்லை :-)


சனத்தை எப்படியெல்லாம் இழுத்து வச்சுக் கதை கேக்க வைக்கிறாங்க பாருங்க !!!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசனைக்கு நன்றி.