Monday, March 07, 2016

கந்தனும் காளிகாம்பாளும் !(இந்தியப் பயணத்தொடர். பகுதி 4)

அண்ணாசாலை வழியாப் போய்க்கிட்டு இருக்கும்போது கண்ணெதிரே தெம்பட்டது பிரமாண்டமான ஒரு கறுப்புத்  தொட்டி. கப்பலில் இருந்து வரும் கச்சா எண்ணெயைச்சேர்த்து வைக்கும் ராக்ஷஸ அளவுள்ள பெட்ரோல் டேங்க். ஆமா இதைக்கொண்டுவந்து  நட்டநடுவில் ஊருக்கு மத்தியில் வைப்பாங்களான்னு தான் சென்னைக்கு முதல் முதலா வர்ற  வெளியூர்/ வெளிநாட்டு சனம் நினைக்கும். நானும் அப்படித்தான்  மொதல்லே பார்த்தப்ப நினைச்சேன்.




கடைசியில் பார்த்தால்  புது சட்டசபை(யாம்!)  (இப்ப இது ஆசுபத்திரி!) தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின் ஒரு சின்ன அம்சம் கூட இல்லாமல் கவனமாப் பார்த்துக் காட்டுனதுன்னு அப்புறமாத்தான் தெரியவந்தது:-(  இப்பவும் அதைப் பார்த்தவுடன் மனதில் வெறுப்பு வந்ததே மிச்சம்.

வாலாஜா சாலை வழியா பீச் ரோடைப் பிடிச்சுக் கோட்டையைக் கடந்து பாரி முனை நோக்கிப்போறோம். போறவழியிலேயே  இதே ட்ராவல்ஸைச் சேர்ந்த இன்னொரு ட்ரைவர் நம்மை  இதே கோவிலுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக் கூட்டிப்போனார் என்பதையும் சொல்லி வச்சேன்.

'எல்லாம் புதுசுபுதுசா வர்றாங்க மேடம்.  வண்டி நிறைய இருந்தாலும் ட்ரைவர்கள் கிடைக்காமச் சும்மாத்தான் நிக்குது. அதான் அவசரத்துக்கு யாரையாவது வேலைக்கு வச்சால் இப்படி ஆகிப்போகுது'ன்னு  சமாதானம் மாதிரி ஒன்றைச் சொன்னார்.  அதுசரி. ட்ரைவர்களுக்கு ட்ரைவர் சப்போர்ட்டாத்தானே பேசணும் இல்லையோ?

பீச் ஸ்டேஷனக் கடந்து போய் இடது பக்கம் Jaffar Sarang தெருவுக்குள் புகுந்து அப்படியே மண்ணடித்தெருவோடேயே போய்  லிங்கிச்செட்டிக்கு அடுத்ததா தம்புச்செட்டிக்குள்  இடதுபக்கம் திரும்பினா கோவில். காளிகாம்பாள் கோவில்!

கோவிலுக்குப் போனதையும்  அம்பாளைப் பார்க்காததையும் சொல்லிப் புலம்புனது இங்கே:-)


கோவிலுக்கு எதிரே நல்லவேளையா பார்க்கிங் கிடைச்சது. நாங்க இறங்கி கோவிலுக்கு போறபோது தூரத்தே கொட்டு முழக்கும் நாதஸ்வரமும்! சாமி ஊர்வலம்! எதிரில்வரும் சாமி யாருன்னு இங்கே இருந்தே புரியலை. அம்மன்  பவனி போல்!ஆனாலும் சாமியைப் பார்த்துட்டே கோவிலுக்குள் போகலாம்.
நின்னுக்கிட்டு இருக்கோம். பவனி நாமிருக்குமிடம் வந்தாச்சு. முருகன்!

கோபாலுக்குப் பரவசம்!  தேடிக்கிட்டு வந்துட்டான்னாரு. இன்றைக்கு என்ன விசேஷமுன்னு  பக்கத்துலே இருந்த பூஜைசாமான் கடைக்காருகிட்டே கேட்டால்...  கிருத்திகையாம். 'சாமிக்கு தேங்காய் உடைம்மா'ன்னு சின்னக்கூடையை எடுத்துத் தர்றார். வேணாமுன்னு தலையாட்டிட்டுக் கொஞ்சநேரம் சின்ன வீடியோ எடுத்தேன்.  கடைக்காரருக்குப் பக்கத்தில் நின்னவர்  சாமியைப் படமெடுக்கக்கூடாதுன்னார்! அப்படியான்னு தலையை ஆட்டிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.


அதென்ன கந்தனுக்கும் காளிகாம்பாளுக்கும்  இப்படி பாசப்பிணைப்பில் இருக்காங்க! தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு  ரொம்பவே பலமா இருக்கே!  அதிலும் கந்தன் எப்பவும் தாய்க்கு முதல்லே வந்து நின்னுடறாரே! போனமுறையும் கந்தனை சேவிச்சபின் காளிகாம்பாள் கோவிலுக்கு  வந்தோம். இப்போ காளிகாம்பாள்வாசலில் நிக்கும்போதும் 'முதலில் என்னைப் பார்த்துட்டு உள்ளே போ'ன்றார் கந்தன்!

ஊர்வலம் கொஞ்சநேரம் நின்னு  பக்தர்கள் செஞ்ச  மரியாதையை பெற்றுக்கொண்டுநகர்ந்து போய் காளிகாம்பாள் வாசலில் இன்னும் கொஞ்சநேரம் நின்னுட்டு, கோவில் செஞ்ச மரியாதையை ஏத்துக்கிட்டு நகர்ந்து போச்சு.  நாங்களும் கோவிலுக்குள் போனோம்.

இடதுபக்கம் இருக்கும் கோவில்கடைகளையும் வலது பக்கமிருக்கும் பெரிய அம்பாள் சிலைக்கு முன் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வைக்கும் பெண்கள் கூட்டத்தையும் பார்த்துக்கிட்டே உள்ளேபோறோம். ப்ரத்யங்கரா தேவி!  எல்லோருக்கும் எதிரிகள் பெருத்துப்போயிட்டாங்க போல !   அங்கங்கே  காவல்துறை ஆட்கள் இருக்காங்க.

 உற்சவர் இருக்கும் மேடைக்கு முன்  சிலர் தியானம் செய்வது போல் உக்கார்ந்துருந்தாங்க.  ஓசைப்படாமல் நகர்ந்து  இடப்பக்கம் போய்  அங்கிருந்த வாசலுக்குள் நுழைஞ்சதும் காளிகாம்பாள் சந்நிதி.

கொஞ்ச தூரத்தில் கருவறை. கருவறைக்கருகில்  முன்மண்டபத்தில் ஆடாமல்  அசையாமல் ஒழுங்குமுறையா ஒரு கூட்டம் தரையில் உக்கார்ந்துருக்காங்க. இந்தப்பக்கம் மேடை போலுள்ள அமைப்பில் நாம் ஏறிப்போய்  சந்நிதிக்கு எதிரா நின்னு அம்பாளை தரிசிக்கிறோம். அம்பாளுக்கு முன் ஆதிசங்கரர் ஸ்தாபிச்ச மஹாமேரு!

அபிஷேகம் அலங்காரம் முடிஞ்சு  விஸ்தாரமா ஷோடஸ உபச்சாரம் நடக்குது. கண்குளிரப் பார்த்தோம். அங்கே இருந்தே தீபாராதனைகளை உயர்த்தி மக்கள் பக்கம் காமிக்கிறார் குருக்கள்.  இருந்த இடத்தில் இருந்தே  கைகளை நீட்டி நமஸ்கரிக்கிறோம். எல்லாம் முடிஞ்சு  முன்னால் உக்கார்ந்திருந்த மக்கள் எழுந்து நின்னதும் நாங்களும் மேடையில் இருந்து இறங்கும்போது  சரசரன்னு  இன்னும் காவல்துறை மக்கள்  ஓசைப்படாமல் வந்து அவுங்களுக்கும் நமக்குமிடையில் சுவர் எழுப்பறாங்க.

என்ன சமாச்சாரமுன்னு விசாரிச்சால்.... சண்டிகர் மாநில அமைச்சர் விஜயம். அட!  நாமும் சண்டிகர் வாழ்(ந்த) மக்கள்ஸ் இல்லையோ! ஹமாரா பரிவார் ஹைன்னேன்:-)

பதவியில் இருக்கும்போதே  அதிகாரவர்க்கம் முடிஞ்சவரை மற்ற மாநிலக் கோவில்களுக்கு விஜயம் செஞ்சுடறாங்க. இல்லேன்னா இவ்ளோ மட்டுமரியாதையும், தனி கவனிப்பும் கிடைக்குமா என்ன?

அவுங்க புண்ணியத்தில் நமக்கும் நல்ல தரிசனம் அமைஞ்சது! நலமுண்டாகட்டுமுன்னு  மந்திரியை மனசுக்குள்ளே வாழ்த்திட்டுக் கோவிலைச் சுத்தி வந்தோம். பாதுகாப்புக் கருதி  இன்னும் உள்ளே போகவிடாமல் தடுப்புகள்  அங்கங்கே வச்சுருந்தாங்க.

போனமுறை கோவில்பற்றி எழுதுனப்ப, நம்ம வல்லியம்மா காளிகாம்பாள் சிலையில்  மூணு தேவிகள் சேர்ந்தே காட்சி கொடுப்பாங்கன்னு பின்னூட்டி இருந்தாங்க. அடடா அப்படியான்னு  மனசு ஏங்குனது உண்மை. இப்போ  பூஜை நடக்கும்போது  காளிகாம்பாளுக்கு மூணு தலை இருக்கோ? இல்லை இடதும் வலதுமாய்  வேற தேவிகள் உண்டோன்னு  கண்களை அகலத்திறந்து கவனிச்சுக்கிட்டே இருந்தேன்.  ஊனக்கண்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே முகம். ஒரே உருவம்.

யாரிடமாவது கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னு போனால்   நேரா இருக்கு கோவில் அலுவலகம்.  அங்கே போய் விசாரிச்சேன்.  அப்படி ஒன்னும் இல்லையேம்மா. அம்பாள் ஒரே ஒரு உருவம்தான். ஆனால்  கண்களில் வலப்பக்கம் சரஸ்வதியும் இடப்பக்கம் மஹாலக்ஷ்மியும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம் என்றார்.

மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷியாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்குத்தான் நடைபெறுகின்றது.

மேலே உள்ள பத்தி  நம்ம கைலாஷி அவர்கள்  காளிகாம்பாளைப் பற்றி எழுதியதில் ஒரு பகுதி!  நன்றி : கைலாஷி!


மகாகவி பாரதியார் அடிக்கடி வந்து போன கோவில் இது. யாதுமாகி நின்றாய் காளின்னு பரவசத்தோடு பாடுனவைகள் எல்லாமே இந்தக் காளியைப்பற்றித்தானாம்.

ப்ரிட்டிஷார் அரசாண்ட காலத்தில்(1640) ஜார்ஜ் கோட்டைக்குள்  இருந்த அம்மனை தம்புச்செட்டித் தெருவுக்கு மாத்தினாங்களாம். காளிகாம்பாளின் பனிரெண்டு அம்சங்களில் ஒன்னுதான்  காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாக்ஷி அம்மன் என்கிறார்கள்.

பரவசத்தோடு வெளியே வந்தோம். அழகான பூ அலங்காரத்தோடு  ஒரு பெண்!  வித்தியாசமா இருக்கேன்னு க்ளிக்கினேன்.

கோவிலுக்குள் படமெடுக்க அனுமதி இல்லைன்னு ஒரு அறிவிப்பு பார்த்துட்டுக் கெமெராவைக் கைப்பையில் வச்சுட்டேன். யூட்யூபில் ஒரு புண்ணியவான்  13 நிமிச வீடியோ க்ளிப் போட்டு வச்சுருக்கார். நேரம் இருந்தால் பாருங்க.



ரெண்டுமுறை போயும் இன்னும் சரியாப்பார்க்காத உணர்வு இருக்கு. இன்னொருமுறை போகத்தான் வேணும். நின்னு நிதானமாப் பார்க்கணும்.  காளி கூப்ட்ருக்காடா......
 தம்புச்செட்டித் தெருவழியாவே  என் எஸ் ஸி போஸ் சாலையில் வந்து சேர்ந்தோம். கண் எதிரே உயர் நீதிமன்றம்.  கண்களைப் பறிக்கும் அழகோடு  கம்பீரமா  நிக்குது. ஹை கோர்ட்டுக்கு 150 வயசாச்சுன்னு  ஒரு நினைவு வளைவு வச்சுருக்காங்க.  அதை அடுத்து சட்ட உதவி மையம்னு ஒரு கட்டடம்.


ஏழை,பணக்காரன், அரசியல்வியாதி,சாதாரணன் இப்படி எந்த ஒரு  வித்தியாசமும், ஆளுக்கேத்தாப்போல வளையும் சட்டங்களும் இல்லாமல் இருந்தாலே நாடு உருப்பட்டுடும் என்ற நினைப்பு வந்து பொழைப்பை கெடுத்துச்சு
.
எனக்கு ராட்டன் பஸாரில் ஒரு வேலை இருக்கு. ஹேண்ட்லூம் ஹௌஸ் போகணும். நல்ல காட்டன் ஸல்வார் கமீஸ் துணிகள் அனைத்து மாநில கைத்தறி வகைகளும் கிடைக்குமுன்னு  லேடீஸ் க்ரூப்பில் சொல்லி இருந்தாங்க.  மூணு முறை அந்த ஏரியாவில் சுத்தியும் கண்டு பிடிக்கவே முடியலை.

சென்னையில் இருந்த ஒரு காலத்துலே அடிக்கடி போன கடை.  எங்கதான் போயிருக்குமுன்னு  கொஞ்சம் வயதான ஒரு பெரியவரிடம் விசாரிச்சால்....  இதோ இந்த இடம்தாம்மா. அவுங்க காலி பண்ணிக்கிட்டு  எழும்பூர் போயிட்டாங்கன்னார்.

இடத்தை க்ளிக்கிட்டு இருக்கும்போது, இன்னொருத்தர்  எல்லாத் துணிகளையும் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாத்திட்டாங்கன்னு கூடுதல் சேதி சொன்னார்.

ஆஹா...   வாங்காமல் விடுவதில்லை! சலோ எழும்பூர்ன்னு  அங்கே போய்ச் சேர்ந்தோம். ரயில்வே ஆஃபீஸ், சென்ட்ரல் ஸ்டேஷன், ரிப்பன் பில்டிங்னு  தெரிஞ்ச கட்டடங்கள் கண்ணில் பட்டாலும் சாலை முழுசும் தடுப்புகளும், நடை பாலம்,  பெரிய கூட்டமா சாலையைக் கடக்கும் மக்கள்ஸ்னு ரொம்ப  வித்தியாசமா இருக்கு எனக்கு.


 இவ்ளோ களேபரத்தில்   தலைபாகையுடன் ஒரு சிலை! யார்னு தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க. நூற்றாண்டு கொண்டாட்டமென்பது நம்ம கேமெராவில் பதிவாகி இருக்கு.

தில்லையாடி வள்ளியம்மை தமிழ்நாடு கைத்தறி விற்பனை கட்டடத்துக்குப் போய்ச் சேர்ந்து விசாரிச்சால்..... 'ஹேண்ட்லூம் ஹௌஸ் சமாச்சாரங்களிங்கே வரவே இல்லை. அது வேற இது வேற'ன்னுட்டாங்க.  அங்கே இருக்கும்  துணிமணி வகைகளில் ப்ரிண்ட் ஒன்னும் எனக்கு விருப்பமானதா இல்லை.  நம்மவருக்கு மட்டும்  வேட்டி கட்டும்போது  போட்டுக்கும் அங்கவஸ்த்திரம் ரெண்டு வாங்கிக்கிட்டு,  வழக்கமா துணிகள் வாங்கும் காஞ்சிபுரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

எனக்கானவை அங்கே  எனக்காகக் காத்திருந்தன.  யானை பார்டர் போட்ட புடவை ஒன்னு . கடை இப்போ முன்னை விட ரொம்ப நல்லா இருக்கு!  ஸில்க் காட்டனில்  வைர ஊசி டிசைனில் பத்து கஜம் புடவையும் கிடைச்சது. நல்ல டொமாட்டோ  ரெட்.  சாமிக்கு சாத்தணுமுன்னு வாங்கினோம்.



அடுத்த ஸ்டாப். மயிலை சரவணபவன். பகலுணவு முடிச்சு, அறைக்கு வந்து அரைமணி நேரம் ரெஸ்ட்.

அப்புறம் சுவாரஸியமான  ஒரு இடத்துக்குப் போறோம். எல்லோருக்கும் பிடிச்ச இடம்!



PINகுறிப்பு: சகபதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலியுடன் இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன். ஆன்மீகப்பதிவென்றால் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள், நான் எதாவது முக்கியமான தகவலைக் குறிப்பிட மறந்து போனேனா என்று சரி பார்த்துக்கொள்ள அவர்கள் பதிவை எட்டிப் பார்ப்பது வழக்கம்.  நேற்று இந்தக் காளிகாம்பாள் பதிவு எழுதும்போதும் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். 
அப்போது அவருடைய மறைவுச்சேதி எனக்குத்தெரியாது. இன்று ஃபேஸ்புக்கில் ஏஞ்சலீன் அவர்கள் எழுதியதைக் கண்டபின்..........  மனம் ஒன்னும் சரியில்லை :-(

அவருடைய ஆன்ம சாந்திக்கு நம் பிரார்த்தனைகள்.

தொடரும்............:-)



Friday, March 04, 2016

Puzzle Queen ஐஸ்வர்யா!!!!

எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியுமுன்னு சொல்றதா தெரியாதுன்னு சொல்றதான்னு  இன்னும் விளங்கலை!

ஒருநாள் தோழியிடம் பேசிக்கிட்டு இருந்தப்பப் பேச்சு வாக்கில் ஐஸ்வர்யாவைப் பத்திச் சொன்னாங்க.   அர்ஜுனன் போல ஒற்றை நோக்குன்னும் சொல்லக்கூடிய  'கவனம் சிதறாத மக்கள்' பிரிவில் இருக்கும் ஐஸ்வர்யாவின் திறமை என்னன்னா....  பஸில் செய்யறது. செய்யறதுன்ற சொற்பிரயோகமே  சரி இல்லை.  அகராதியைக் கேட்டால்...

puzzle : புதிர் , தடுமாற்றம் , குழப்பம் , திகைப்பு , மலைவு , சிக்கலான பிரச்சனை , திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி , குழப்பு , புதிரிடு , மலைவுறுத்து , குழப்பமுறு .

இப்படியெல்லாம் சொல்லி நம்மைக் குழப்பி விட்டுருது :-)


போகட்டும். புதிர் என்பதை ஓரளவு  சரியானதுன்னு  எடுத்துக்கறேன். இல்லே ... பேசாம பஸிலை puzzle என்றே சொல்லிப்போனால்தான் என்ன?

எப்பேர்ப்பட்டக் கடினமான puzzle என்றாலும் சுலபமாப் போட்டுருவாங்களாம்!  அடுத்து வந்த இந்தியப் பயணத்தில் ரெண்டு puzzle வாங்கிப்போய்த் தோழியிடம் கொடுத்து ஐஸ்வர்யாவிடம் சேர்த்தாச்சு.  இப்படியே ஒரு சில பயணங்களில் தொடர்ந்த நினைவு.


அந்தக் காலக் கட்டத்தில்தான்  மயிலுக்கு ஆசைப்பட்டு முழி பிதுங்குச்சு எனக்கு. அதையும் இங்கே நம்ம துளசிதளத்தில் போட்டு வச்சேன்:-)



அதுக்குப்பிறகும் பழியைத் தூக்கி பஸிலில் இன்னொருக்காப் போட்டேன்:-)



 ஒரு வருசம் திண்டாடித் தோல்வியை மரியாதையா ஒப்புக்கொண்டு  மயிலை  வாரிக்கொண்டுபோய் தோழி மூலம் ஐஸ்வர்யாவிடம் சேர்த்தாச். அடுத்து வந்தநாட்களிலே இப்படி ஒரு படம் அனுப்பி வச்சாங்க தோழி!

ஹைய்யோடா.........
ஐஸ்வர்யாவின் திறமையைப் பாராட்ட  வார்த்தைகளே இல்லாமப்போச்சு என்பதே உண்மை!  இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட பெற்றோரும் அவுங்க ஈடுபாடு கொண்டுள்ள Chennai Autism Support Groupமாச் சேர்ந்து ஐஸ்வர்யாவின் பஸில்களின் படங்களை அஞ்சு வருசமாக் காலண்டர்களாப் போட்டுக்கிட்டு இருக்காங்க(ளாம்).

எனக்குத் தோழிதான் சொன்னாங்க. 'இந்த வருசக் காலண்டரில் முதல் படமே உங்க மயில்தான்'னு!




என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!

Fund raising activity என்பதால் சொல்லி வச்சு ஒன்னு வாங்கியாந்தோம். தோழிதான் வாங்கி வச்சுருந்தாங்க.
தனித்தனிப் படங்களா 12 மாசங்களுக்கும் போட்டு,  முதல்பக்கத்துலே ஐஸ்வர்யாவைப் பற்றிய  சிறு குறிப்புகளோடு அட்டகாசமா இருக்கு காலண்டர்!








 அடடா.....  பேசாம இந்த யானையை முதல் மாசத்துக்குப் போட்டுருக்கலாம்!!!!








Puzzle  Queen என்ற பட்டம் ரொம்பவே பொருத்தம் தான். ஜஸ்ட் ஒரே வாரத்தில் 1000 துண்டுகளை அனாயாசமாப் போடும் ஐஸ்வர்யா,   இப்போ 1500 துண்டுகள் உள்ள பஸில் செய்யறாங்களாம்.

அம்மாடியோவ்!!!!!

சிவமணிக்கொரு சிஷ்யப்பிள்ளை ரெடி! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 3)

ட்ரம்மா இல்லை காரான்னு  கொஞ்சம் யோசனைதான். எதுக்கும் அம்மாகிட்டே கேட்டால் ஆச்சுன்னு  கேட்டப்ப, அடிக்கறதுக்கே ஓட்டு! நம்மவரும் அதுக்குத்தான் ஓட்டுப் போட்டுருந்தார். நாந்தான் கொஞ்சம் கவனத்தை வேற பக்கம் திருப்பிப் பார்க்கலாமுன்னு நினைச்சேன்.

வர்றேன்னு சொன்னதும்,  'கேட்கணுமாக்கும். வீட்டுலேதான் இருப்போமு'ன்னு சொல்லிட்டாங்க. நம்ம ட்ரைவர் சீனிவாசனுக்கு எந்த இடமுன்னு கோடி காமிச்சால் போதும்னு சொல்லி இருக்கேன்ல. அப்படியே நேரா வீட்டாண்டை கொண்டுபோய் நிறுத்தினார்.

நம்ம ஹீரோ அப்பத்தான் குளிச்சுட்டு உடை மாத்திக்கிட்டு இருக்கார். அம்மாவும் அப்பாவும் முக மலர்ச்சியுடன் வாங்கன்னாங்க. சட்னு  ரெடியாகி வந்த ஹீரோவுக்குக் கோபாலைப் பார்த்த மகிழ்ச்சி  முகத்தில்!  ரெண்டு பேருக்கும் ஒரே வேவ் லெங்த்:-)

செட்டைப் பிரிச்சு  செட் செய்ய ஆரம்பிச்சாங்க அங்கிளும்,  அப்பாவுமா!


அடுத்த நிமிஷம் அடி ஆரம்பிச்சது.! பிறவிக் கலைஞன்டா!!!   இயல்பா வருது எல்லாமே! இப்ப சொல்றேன்... எழுதி வச்சுக்குங்க.  நம்ம கனிவமுதன் இசை உலகில் ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள்  கலக்கப்போவது  உறுதி.

அங்கே இங்கேன்னு மனசை அலைய விடாமல் ஒரே குறிக்கோளுடன் இருப்பதுதான் ஸ்பெஷாலிட்டி. இப்படிச் சொல்லும்போது  நம்ம ஐஸ்வரியாவைப் பத்தி(யும்) சொல்லணுமுன்னு தோணுது. தனியாவே அவுங்களைப் பற்றி எழுதறதுதான் நியாயம்.  இன்று மாலைக்குள் தனிப் பதிவா ஒன்னு போடப் போறேன்.


சந்துருவுக்கு என்ன ஆச்சுன்னு  தெரிஞ்சுக்குங்கோன்னு கோபாலுக்கு  ஒரு அன்பளிப்பு:-)

பாலாவும் லக்ஷ்மியும் நான் எழுதவந்த காலத்துலே இருந்தே நண்பர்கள் என்பதால் இப்ப இன்னும் சொந்தம் கூடிப்போச்சு என்பதே உண்மை:-) என் நண்பர்கள் எல்லோருமே நம்ம கோபாலின் நண்பர்கள் என்பதால் இன்னும்  ஸ்ட்ராங்கான பந்தம்!

ஒருமணி நேரம் என்னமா ஓடுச்சுன்னு இன்னமும் விளங்கலை!

கிளம்பி தி நகர் வந்தோம். பகல் சாப்பாட்டுக்கான நேரம் தாண்டி இருந்துச்சு. அதுக்காக ஒன்னுமே சாப்பிடாமல் இருப்பதா? நமக்கு வேணாமுன்னாலும் நம்ம ட்ரைவர் சாப்பிட வேணாமா?  வெங்கடநாராயணா சாலை சரவணபவனுக்குப் போகலாமேன்னு போனால்.... திருப்பதி தேவஸ்தானப் பெருமாள் சந்நிதிக் கதவு திறந்துருக்கு!   அப்படி என்ன விசேஷம் இருக்கும்?  ஒரு வேளை நம்ம சென்னை விஜயம்? ஊஹூம்... நமக்கெல்லாம்  நடக்குமா?  எதோ பெரிய இடம் வந்துருக்கு போல! அதிகார வர்க்கமா இருக்கணும்.....  நிறைய காவல்துறை மக்களைக் காண முடிஞ்சது.


வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு முதல்லே  'பேட் கி பூஜா' நடத்தினோம். முடிச்சுட்டுப் பெருமாளைப் போய்ப் பார்க்கலாமே....  வேண்டாத சில ஐட்டங்களுடன் மினி டிஃபன். ரொம்ப சுமார். அதைத் தொடர்ந்து வந்த காஃபி ஓக்கே:-)

முதலில் சாப்பிட்டு முடிச்ச சீனிவாசன்,  கோவிலை மூடியாச் என்ற சேதியைக் கொண்டு வந்தார். போகட்டும், பெருமாளுக்கு அதிர்ஷ்டமில்லை.

அறைக்குப்போய் கொஞ்சநேரம் ஓய்வு. மறுபடி கிளம்பி மச்சினர் வீட்டுக்குப் போனோம். சின்னு சோகமா படுத்துருந்தது. லேசான வாலாட்டல்.
வழக்கமான உரையாடல்ஸ்.  புடவைகளைப் பற்றி பேச்சு வந்தபோது  ரெண்டு வருசத்துக்கு முந்தி மச்சினர் மனைவி அன்பளித்த புடவையை சிலாகிச்சப்ப, அது ரொம்பவே விலை மலிவுன்னாங்க.  விலையா முக்கியம்? நமக்குப் பிடிச்சிருப்பது அதி முக்கியமில்லையோ?

'அடுத்ததெருவில்தான் கடை இருக்கு அக்கா. வாங்க போய்ப் பார்க்கலாமு'ன்னு  சொன்னதால் அங்கே  போனோம். வீடுதான். கடையா மாத்தி  இருக்காங்க. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி  நடத்தும் கடை. ஆஹா....  நம்ம சப்போர்ட் கட்டாயம் இருக்கணும். க்வீன்ஸ் வார்ட்ரோப் என்ற பெயர். கசகசன்னு  கொட்டி வைக்காமல் வெவ்வேற மாநில நல்ல வகைகளைக் கொஞ்சமா வச்சுருக்காங்க.

சிலபுடவைகளைப் பார்த்துட்டு,  இன்னொரு இடத்துக்குப்போய் அங்கே உள்ள புடவைகளைப் பார்த்துட்டு வர்றோமுன்னு  சொல்லிட்டே கிளம்புனோம்.  போன இடத்தில்  ஒன்னும் சரிப்படலை. திரும்ப இங்கேயே வந்து நாலு புடவைகளை வாங்கியாச். தங்கைக்கு (மச்சினர் மனைவி)ஒன்னு, நாத்தனாருக்கு ஒன்னு. எனக்கு ரெண்டு.  முப்பது சதம் கழிவு வேற! தங்கை இங்கே நெடுநாள் வாடிக்கையாளர் என்பதால் கூடுதல் தள்ளுபடி:-)

பூவைப் பார்த்தால் விடமுடியுதா?

எனக்கு ஏனோ பூனா ஞாபகம் வந்துச்சு. ஒருமுறை நவ்தால் பூட்டு வாங்கணுமுன்னு ஒரு கடையில் விசாரிச்சோம். விலை அதிகமுன்னு நினைச்சு,   இன்னொரு கடையில் பார்க்கலாமுன்னு போனால் அங்கே இதைவிட விலை இன்னும் அதிகமா இருந்துச்சு. என்ன ஒரு  ரெண்டு மூணு ரூபாய் அதிகம். அப்பெல்லாம் ஒரு ரூ என்பதே தங்கம் போல!  திரும்ப முதல் கடைக்கே வந்து பூட்டு வேணுமுன்னு கேட்டதுக்கு,  வேற இடத்துக்குப்போய்  கேட்டுட்டு வந்ததால்  பூட்டை நமக்கு விற்கமாட்டேன், அங்கேயே போய் வாங்கிக்கோன்னு  கடைக்காரர் சொல்லிட்டார்!!!! "ஹம் நை தேயேகா. உதரீ கரீதோ"

இது எப்படி இருக்கு? நல்லவேளை நம்ம கர்னல் அப்படிச் சொல்லலை :-)

திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்சம் அரட்டை அடிச்சுட்டு அண்ணன் வீட்டுக்குக் கிளம்பினோம்.  இதுதான் லாஸ்ட் ஸ்டாப் இன்றைக்கு.


மகனுக்கு வாங்கி இருக்கும் வண்டி. நம்மவருக்கு ஓட்டிப்பார்க்க ஆசைதான். ஆனால்... முட்டுக்கட்டை போட ஒருத்தி இருக்கேனே!

நம்ம சீனிவாசனுக்கு நம்ம உலா விவரங்கள் அத்துபடி என்பதால் யார்வீட்டுக்குப் போறோமுன்னு ஒரு சொல் சொன்னால் போதும். அங்கே கொண்டுபோய் சேர்த்துருவார்.

ராச்சாப்பாடு அண்ணன் வீட்டில். எலிக்கான வடைகள்  காத்திருந்தது.

இன்றைக்கு இட்லி வடையில் ஆரம்பிச்சு அதே இட்லி வடையில் முடிச்சாச்சு.

முதல்நாள் சுத்து முடிஞ்சு அறைக்கு வந்து சேர்ந்தோம். இனி நாளைக் கதை நாளைக்கு.

குட்நைட்.

தொடரும்...... :-)