Wednesday, January 26, 2011

பெருந்தலைவர் என்ற பெயருக்கு .............

அடுக்குமாடிக் குடி இருப்புகள் வராத காலக்கட்டத்தில் அநேகமா எல்லா வீடுகளும் இப்படித்தான் இருந்துருக்கும் இந்த ஏரியாவில் என்பதற்கு அத்தாட்சியா நிக்குது, திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் இந்த பங்களா.


புத்தகப்பைகளோடு காமராஜர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். காம்பவுண்டுக்குள்ளில் தெருவைப் பார்த்தபடி இடதுகையை இடுப்பில் வைத்தபடி நிற்கும் சிலை. காமராஜர் நினைவு இல்லம் காலை 9 முதல் மாலை ஆறுமணிவரை திறந்துருக்கு, தமிழக முதலமைச்சர் எம் ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 1978 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுருக்கு.
வீட்டு வாசலில் நின்னு, நம்மை அன்போடு வரவேற்று உள்ளே கூட்டிட்டுப் போனாங்க.

வாசலில் இருக்கும் போர்ட்டிகோவில் ஒரு மூலையில் மேசை நாற்காலி போட்டு அதுலே தமிழகக் காவல்துறைக் காவலர் சீருடையோடு ஒரு பெண் ட்யூட்டியில் இருந்தாங்க. ஒரு வயசான அம்மாள் வீட்டைச்சுத்தம் செஞ்சு வைச்சுக்கறாங்க. இந்தம்மாள் பத்து வயசா இருக்கும்போது ஐயா வீட்டுக்கு வேலைக்கு வந்தவங்களாம். (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டம்)

சுருக்கமா ஐயாவைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமா வாசலுக்கு ரெண்டு பக்கமும் எழுதி வச்சுருக்காங்க.


வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் வலதும் இடதுமா ரெண்டு அறைகள். வலப்பக்கம் அறை நூலகம். இடப்பக்க அறை ஐயாவின் படுக்கைஅறை. காலம் உறைஞ்சு நிக்கறமாதிரி நாள்காட்டி அக்டோபர் ரெண்டுலேயே நிக்குது. ஐயாவின் இறுதி நாள்:(
அடுத்துள்ள சின்ன ஹாலின் நடுவில் ஒரு மேசை. ரொம்ப சாதாரணமா ஒரு ப்ளாஸ்டிக் மேசை விரிப்பு. டைனிங் டேபிள். அந்த ஹாலில் அலுமினியச் சட்டங்களோட ஏராளமான படங்கள். இளவயது தொடங்கி முதல் அமைச்சரா இருந்தவரை சந்தித்த முக்கியஸ்த்தர்களுடன். முந்தி காலத்துலே சினிமாலே நியூஸ் ரீலுன்னு ஒன்னு போடுவாங்களே அந்த நினைவு வந்துச்சு.
அம்மாவுக்குச் செல்ல 'காமாட்சி'யா இருந்தவரின் கல்வி ஆறாம் வகுப்பு வரை. 12 வயசாகும்போதே அரசியல் ஆர்வம். (இப்பவா இருந்தால் பிஞ்சுலே பழுத்ததுன்னு சொல்வோம் இல்லை?)

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டம், சைமன் கமிஷன் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல்ன்னு பலதில் பங்கெடுத்து எட்டுவருசம் சிறை வாழ்க்கை.

33 வயசில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர். தொடர்ந்த அடுத்தவருசத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். இப்படிப் படிப்படியா உயர்ந்து நாட்டுக்கு சுதந்திரம் 1947 கிடைச்சப்ப அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

1954 முதல் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளா தமிழ்நாட்டு முதலமைச்சர். தன்நலமில்லாமல் நாட்டின் நலம் மட்டுமே நோக்கம் என்று கருதிய வாழ்க்கை.

இப்ப எல்லோரும் சொல்லிக்கிட்டுத் திரியறாங்களே 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்'ன்னு...இதுலே இருந்தே தெரியுதே அப்போதைய ஆட்சி உண்மையாவே நல்லா இருந்துருக்கணும் என்பது. இல்லையா?


ஹாலை ஒட்டிய மாடிப்படி. மேலே ஒரு ஹால். மேலே ஏறிப்போனால் வலப்பக்கம் ஒரு திறந்தவெளி( பின்பக்கம் மொட்டைமாடி) இடப்பக்கம் இன்னொரு ஹால். இங்கே ஐயாவின் மொத்த வார்ட்ரோபும் காட்சிக்கு இருக்கு., எண்ணி மூணு சட்டை, மூணு வேஷ்டி. நாலாவது ஒன்னு பிரிச்சுக் கண்ணாடிக் கதவுக்குப்பின் காட்சிக்கு வச்சுருக்கு. ஒரு பக்கம் இருக்கும் கப்போர்டில் அவர் சமையலுக்குப் பயன்படுத்திய அஞ்சாறு பாத்திரங்களும், ஒரு அலுமியக் குக்கரும்.
வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும் பால்கனியில் நாலு பிரம்பு நாற்காலிகளும் ஒரு டீபாயும். விருந்தினர்கள் வந்தால் அவுங்களோடு உக்கார்ந்து பேசறதுக்காம்.

அங்கங்கே பெரிய சைஸில் கண்ணாடிச்சட்டமிட்ட ஐயாவின் உருவப்படங்கள். "இதெல்லாம் எதுக்குத் தேவை இல்லாம? வேணாங்க்றேன்" ஐயா சொல்வது போல் மனசுக்குள் கேட்டது ஒரு குரல்.
இந்த வீட்டுக்கு சிவகாமி அம்மா வந்துருக்காங்களான்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க இங்கே இருந்த பணியாளரம்மா. வயசானதுலே ஒருவேளை மறந்து போயிருக்கலாம் அந்தம்மா. ஒரே ஒருமுறை வந்துருக்காங்கன்னு இவர் சொல்றார் பாருங்க.

எளிமையா இருக்கணும். அதுக்காக இவ்வளோ எளிமையா? மனசு கசிந்தது உண்மை. இந்த வீடும் அப்போ வாடகைக்கு எடுத்த வீடுதான். இதை அரசாங்கம் விலைக்கு வாங்கி, நினைவு இல்லமா ஆக்கி வச்சுருக்கு. வீட்டைச் சுற்றி மரங்கள் செடிகள் எல்லாம் நல்ல குளிர்ச்சியா நிக்குதுங்க.
மாடியிலும் நிறைய புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு வரிசையா வச்சுருக்காங்க. அதுலே இவரோட இறுதி யாத்திரை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணு தளும்பிருச்சு. ஐயா....நாட்டைக் கெடுத்துட்டாங்கையா..............மனசின் ஓலம்:( எப்பேர்ப்பட்ட மனிதர்..

இப்படிப்பட்டத் தலைவர்கள் கூட இருந்துருக்காங்களான்னு இப்போது இருக்கும் தலைமுறை வாயைப் பிளக்கத்தான் வேணும். எனக்கே இழப்பின் அருமை இப்போதான் தெரியுது .
வாசலில் ஒரு கல்வெட்டு போல ஒன்னு. பெருந்தலைவர் என்ற பெயருக்கு இவரை விட்டால் வேற யார் பொருத்தம்? ரெண்டு நிமிஷம் மௌனமா மனசில் அஞ்சலி செலுத்திட்டு அறைக்கு வந்தோம்.

PIN குறிப்பு: நடந்த நிகழ்வுகளை வரிசையா எழுதும்போது எப்படியோ குடியரசு தினத்தில் வெளியிடும்படியா அமைஞ்சுபோச்சு இந்தப் பதிவு. தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த மகான்களுக்கு 'மட்டும்' இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் 'குடி' அரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.



Monday, January 24, 2011

பட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............

நகைக்கடையோ, துணிக்கடையோ எனக்குப் பிரச்சனையே இல்லை. ஆனால் எதை எடுக்க, எதை விட்டுடன்னு மயங்கி நிற்பது புத்தகக் கடைகளில்தான். மனசுக்குள்ளே குறிச்சு வைக்கும் லிஸ்ட் எல்லாம் அப்படியே மாயமாப் போயிரும் உள்ளே நுழைஞ்சதும்.

எங்கூர்லே எங்க நூலகத்துக்குப் புத்தகம் தெரிஞ்செடுத்து வாங்கும் மூவர் கமிட்டியில் நானும் ஒருத்தி. குழந்தைகளுக்கான நூலகம் என்றதால் படம், கருத்து, கதை சொல்லிய விதம், ப்ரிண்ட் சைஸ், புத்தக வடிவமைப்பு, எந்த வயதுக்கேற்ற குழந்தைகளுக்கானதோ அதை அவர்களால் கையில் பிடிச்சு ஹேண்டில் செய்ய முடியுமா, அட்டைப்படம் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்கா? இப்படிப் பலகோணங்களில் கவனிச்சுத் தெரிவு செய்யணும். பிறந்த குழந்தை முதல் ஒரு வயசு வரைன்னா புத்தகம் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் ஆகாம இருக்கும்படியும் அளவு பெருசா இல்லாமல் ரொம்பக் குட்டியாவும் இல்லாமல், பக்கங்கள் ஆறு அல்லது எட்டு இருக்கும்படியான போர்டு புக் என்பவைதான் சரியாக இருக்கும். குட்டிக் கைகள் கிழிச்சுப்போட உஷாரா இருக்குமே:-))))

இதெல்லாம் அடுத்தவங்களுக்கு வாங்கும்போது. தனக்குத் தனக்குன்னா......
நம்ம பேட்டையின் மாலுக்குப் போகும்போது, அங்கிருக்கும் புத்தகக்கடைகளில் ( மாலுக்கு ரெண்டு புத்தகக் கடைகள் கேரண்டீ) ஒருமுறை புரட்டிப் பார்த்துட்டு பெரியவங்களுக்கான நூலகத்தில் அந்தப் புத்தகம் இருக்கான்னு பார்த்துட்டு, இல்லைன்னா ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சாப் போதும். நூலகம் அதை வாங்கிட்டு நமக்கு போன் செஞ்சு 'நீ கேட்டது வந்துருக்கு. வந்து எடுத்துக்கிட்டுப் போ'ன்னுவாங்க. நாலு வாரம் வச்சுக்கலாம். ஏற்கெனவே இருந்து, வெளியே யாராவது எடுத்துப்போயிருந்தால் அதுக்கும் நமக்கு அது தேவைன்னு ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சால் அது வந்தவுடன் நம்மைக் கூப்பிட்டுச் சொல்வாங்க. ஆன் லைன்லே கூட ரிக்கொஸ்ட் போட்டுக்கலாம். நூலகங்கள் ரொம்ப நல்ல முறையில் நடப்பதால் தனியாக் காசு போட்டு வாங்கிக்கணும் என்ற அவசியமே இல்லை. அப்படியும் வாங்கித்தான் ஆகணும் என்ற தேவை இருந்தால் பழைய புத்தகக்கடையில் சின்ன விலைக்குக் கிடைக்கும். வாங்கிப் படிச்ச யாராவது படிச்சு முடிச்சதும் ஸ்ப்ரிங் க்ளீனிங்ன்னு பழையபுத்தகக் கடையில் தள்ளி விட்டுருவாங்க. என்ன.... சில மாசங்கள் பொறுத்துருக்கணும், அவ்ளோதான்.

நமக்கான வரவேற்பா ரெண்டு யானைகளும் புள்ளையாருமா புத்தக அடுக்குக்கு மேலே இருந்து 'வா வா' ன்னு கூப்புடறாங்க புதுப்புத்தக உலகில்:-)

தமிழ்ப்புத்தகங்கள் வேணுமுன்னா நமக்குச் சென்னையை விட்டால் வேற கதி இல்லை. எவ்வளவு காசு செலவு செய்யறோம் என்பதைவிட எவ்வளவு கனம் இருக்கும் என்ற ஒரே கவலைதான். இருக்கும் 20 கிலோவில் அஞ்சு கிலோவுக்கு மேல் வாங்கிக்க முடியாது.

இப்பதான் உள்நாட்டு வாசமாச்சேன்னு போனவருசமும் நியூ புக்லேண்ட்ஸ் போய் மேய்ஞ்சுட்டு வந்தேன். இந்தப் பயணத்திலும் வருசக்கடைசி நாளில் போனேன். பொதுவா புத்தகத்திருவிழாவில் வாங்கறதில்லை. நாம் சென்னை வரும் சமயம் புத்தகத்திருவிழா நடக்கணுமே அதைச் சொல்லுங்க. இதுவரை ரெண்டே முறைதான் திருவிழா பார்த்துருக்கேன்:(

இந்தக் கடைக்கே பட்டிக்காட்டாளுன்னா..புத்தகத்திருவிழாவில் .......அம்மாடா......... கண்ணு பிதுங்கி வெளி வராதது என் முன்னோர் செஞ்ச புண்ணியம்!
கண்ணில் பட்டவைகளைப் பார்த்து அங்கே சில அங்கே சிலன்னு பொறுக்கி வச்சுக்கிட்டு இருக்கேன். கோபால் இன்னொரு அடுக்குலே தீவிரமா என்னமோ தேடறார். என்னவா இருக்குமுன்னு பார்த்தால்............. நம்ம புத்தகங்கள் இருக்கான்னு தேடறாராம்:-)))))) தேடியது கிடைச்சதும் ஒரு (அல்ப) சந்தோஷம் அவர் முகத்தில்.

இரவில் கொஞ்ச நேரம் படிக்கன்னு தோழி வீட்டில் இருந்து சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் முதல் பாகம் எடுத்து வந்தேன். தினம் ஒன்னு ரெண்டுன்னு 20 கதைகளைத்தான் படிச்சு முடிச்சுருந்தேன். நைஸா ஆட்டையைப் போட்டுருக்கலாம். தோழிதானேன்னு............. ஆனால் அதுலே சுஜாதா கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருக்கார். அபேஸ் செஞ்சால் நியாயமே இல்லை.

கடையில் தேடுனப்ப முதல் தொகுதி கிடைக்கலை. போனாப்போகுதுன்னு விட்டுட்டு வாங்கிய புத்தகங்கள் பட்டியலைப் பாருங்க. முட்டாய்க்கடையைக் கண்டு மிரண்டு நிற்கும் மனநிலையில் புத்தகங்களை தலைப்பின் கவர்ச்சிக்காக, அட்டைப்படத்துக்காக, மனசில் வந்துபோன எழுத்தாளர்களுக்காக, முன்னே எப்பவோ படிக்கணுமுன்னு நினைச்சதுக்காக, தெரிந்த பெயர்களுக்காக, விஷ்ணுபுரம் வாசிப்பு முடிஞ்சு தோழியுடன் சின்ன விமரிசனம் செஞ்சப்ப, 'நீங்க பின் தொடரும் நிழலின் குரல்' முதல்லே வாசிச்சுட்டு அப்புறம் விஷ்ணுபுரம் வாசிக்கனும் என்ற பரிந்துரைக்காகன்னு வாங்குனதுதான். இந்தப் பயணத்துலே கலந்துகிட்டப் புத்தக வெளியீடுகளில் வாங்கிய சில புத்தகங்களையும் கடைசியில் சேர்த்துருக்கேன்.

கடைசியில் இருக்கும் பக்திப்பரவசம் எல்லாம் கோபால் வாங்கியிருக்கார். (ஆனாலும் மனுஷருக்கு ஆழ்ந்த பக்தி இருக்கு, கேட்டோ!!)



சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2

பின் தொடரும் நிழலின் குரல் ஜெ.மோ

வண்ணதாசன் முத்துக்கள் பத்து

தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன்

பூமியின் பாதிவயது அ.முத்துலிங்கம்

கூப்பிடுவது எமனாக இருக்கலாம் வாமு கோமு

மாலை நேரத்து மயக்கம் பாலகுமாரன்

தப்பித்தால் தப்பில்லை : சுஜாதா


டிசம்பர் தர்பார் எல்லேராம்

சாப்பாட்டு புராணம் சமஸ்

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது எஸ் ரா

கஜராஜன் குருவாயூர் கேசவன்

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்


குமுதம் வினா விடை கிருபானந்த வாரியார்

பாடிக்களித்த 12 பேர்

நலம்தரும் நாராயணீயம்

பக்தி ஸுதா

தெய்வீக துதிப்பாடல்கள்

மகாலக்ஷ்மி வழிபாடு

Learn Tamil in 30 days

Learn Himdi in 30 days


புத்தக வெளியீடுகளில் வாங்கியவை

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் உலகம்: முருகேசபாண்டியன்

இப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன்ரஞ்சனா


துயில்: எஸ் ரா



சென்னை ஏர்ப்போர்ட்டில் காத்துருந்த போது வாங்குனது.

கரையோர முதலைகள் பாலகுமாரன்

இனி நேரம் உண்டாக்கிக்கணும் ஒன்னொன்னா வாசிச்சு முடிக்க. அடுத்த கொள்முதல் அநேகமா நாடு திரும்பும் சமயமாக இருக்கலாம்.


கைக்கடக்கமா ரெண்டு புத்தகப் பைகளைத் தூக்கிக்கிட்டு அடுத்துப் போனது ஒரு 'உண்மையான பெரியவர்' வீட்டுக்கு.


Friday, January 21, 2011

பேச்சு...... எங்கள் மூச்சு.

அடையார் அனந்த பத்மநாபனிடம் கொஞ்சம் 'பெர்ஸனலா பேசிக்கிட்டு' இருந்தப்ப....தோழி ஃபோன் செஞ்சு 'இன்னும் கிளம்பலையா?ன்னாங்க. 'வந்துக்கிட்டே இருக்கேன்"'னேன். சந்திப்புக்கு நொறுக்ஸ் வேணுமான்னப்ப..... நான் கிராண்ட் ஸ்வீட்ஸ் போய் கொஞ்சம் 'சமாச்சாரங்கள்' வாங்கிக்கணும் அப்படியே நொறுக்ஸ் எதாவது வாங்கினால் ஆச்சுன்னேன்.
திருவான்மியூர் மாமி வீட்டுக்குப்போய் கொஞ்சம் கதையடிச்சு (நாட்டு நிலவரம் தெரிஞ்சுக்க வேணாமா?) இன்றைய மற்ற எங்கேஜ்மெண்ட்களைச் சொன்னப்ப.... 'முந்திமாதிரி எல்லாம் நம்பர் வாங்கிக்கிட்டுக் காத்திருக்கவே வேணாம். வேணுங்கறதைச் சட்னு வாங்கிக்கலாம். அக்காதங்கை ரெண்டு பேரும் கடையை பாகம் பிரிச்சுக்கிட்டாங்க. ஒருத்தர் இனிப்பு வகைகளும் ஒருத்தர் காரப்பலகாரமுமா இருக்காம். ஆனா தயாரிப்பு எல்லாம் ஒரே இடத்தில் செஞ்சு வருது. க்ராண்டின் சரித்திர நிகழ்வு விளங்குச்சு.
குழிப்பணியாரம், அடை செய்யும் தனிச்'சந்நிதி'யின் பக்கத்தில் ஜிலேபி அடுப்பு ஒன்னு புதுசா முளைச்சுருக்கு. வியாபாரம் நடக்கும் பெரிய ஷெட் ரெண்டாய் தடுப்பு சுவர் வச்சு பிரிக்கப்பட்டு அடுத்த பகுதியில் மேஜை நாற்காலிகள் எல்லாம் போட்டு சாப்பிடும் வகையில் உரு மாற்றம்.
என்னதான் வீட்டுச்சமையல் 'மாதிரி'ன்னாலும் அடுப்படியைக் கொஞ்சம் நீட்டா வச்சுக்கக்கூடாதா என்ன?

புளிக்காய்ச்சல் ரெண்டு பாட்டில், பருப்புப்பொடி ஒரு பாட்டில் . நம்ம ஷாப்பிங் ஆச்சு. இப்போ சந்திக்கப்போகும் நண்பிகளுக்காக நொறுக்ஸா கொஞ்சம் கை முறுக்ஸ்.
திருவான்மியூருக்குப் புறப்பட்ட நிமிசம் முதல் 'எனக்கு சரியா ரோடுங்க தெரியாது மேடம். இதுக்கு முன்னே கம்பெனிக்கு வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்'னார் ட்ரைவர். கோடி அர்ச்சனையின் பயன்! 'இது நம்ம பேட்டை. நான் வழி சொல்றேன்' னு நேரா, இடது வலதுன்னு வழி சொல்லிக்கிட்டே பெஸண்ட் நகரில் ஒரு வேலையை (என்ன பொல்லாத வேலை? தமிழ்ப்படங்கள் டிவிடி விக்கும் தள்ளுவண்டியில் பர்ச்சேஸ். சண்டிகரில் படங்கள் ஒன்னும் கிடைக்கறதில்லை) முடிச்சுக்கிட்டு திருவான்மியூர், அடையார், காந்திநகர்னு சுத்தி 'செம்மொழிப் பூங்கா'வுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இப்போதைய ஸ்பெஷல்? தோழியருடன் ஒரு சந்திப்பு. இங்கே வர்றதுக்குள்ளே ரெண்டு மூணு முறை அலைபேசி அழைப்பு. வந்தாச்சா? எங்கே இருக்கே? முன்னாடியே இருங்க. வந்துக்கிட்டே இருக்கேன். குடும்பத்தோடு வர்றேன் கூட்டம் அதிகமா இருக்கு. நான் டிக்கெட் வாங்கி வச்சுடவா? இப்படித் தகவல் பரிமாற்றம். இடம் என்னவோ வழக்கமா பதிவர் சந்திப்பு நடந்துக்கிட்டு இருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் தான். புது வேஷம் போட்டுருக்கு இப்போ. அதனால் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம் எங்களுக்கு.

ஜே ஜேன்னு கூட்டம். வண்டியைப் பார்க் பண்ணிட்டு வந்து சேர்ந்துக்குங்கன்னு கோபாலிடம் சொல்லிட்டுத் தோழிகள் கும்பலில் கலந்தேன். குடும்பத்துடன் வந்த தோழியின் குடும்பத்துடன் இவர் தோட்டம் சுத்திப் பார்க்க எஸ் ஆகிட்டார் ஒரு சுத்துப் பார்த்துட்டு அறைக்குப் போயிடுவார். நான் அப்புறமா என் 'பேச்சை முடிச்சு(?) ஆட்டோ பிடிப்பேன். தோழி ஒருவருக்கு கால்மூட்டுப் பிரச்சனை என்றபடியால் அவரை அலையவிடாமல் முன்பகுதியிலேயே காத்துருந்து அவரைப் பிடிச்சோம். அங்கேயே ஒரு இடத்தில் உக்கார்ந்தாச்சு. மேடைமேடையாச் சுவர் வச்சுக் கட்டி இருக்காங்க. அந்தக் குட்டிச்சுவர்லே எதிரும் புதிருமா உக்காந்துக்கிட்டோம். முகம் பார்த்துப் பேசணுமுல்லெ? செயற்கை நீரூற்றுகள், லைட்டிங் எல்லாம் நல்லாவே இருக்கு.

என்னைத்தவிர மற்றவர்கள் உள்ளூர்வாசிகள்தான். ஆனாலும் சந்திக்க நேரமில்லாம ஓடும் மக்கள். இதுலே இன்னொரு தோழி வந்துக்கிட்டே இருக்கேன்னு அரைமணிக்கொரு தடவையா ரெண்டரை மணி நேரமாச் செல்லிக்கிட்டே இருக்காங்க. இதுக்கிடையில் நம்ம சீனா சார் 'செல்'லினார். 'வெளியே இருக்கேன். அறைக்குப் போனதும் பேசறேன்'னு சொன்னேன்.

ஏழரை ஆனதும் கைப்புள்ளெக்காரி நெளிய ஆரம்பிச்சாங்க. பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணுமே. கடமைகள் காத்திருக்கே. வந்துக்கிட்டு(??) இருந்த தோழி இன்னும் வந்தே சேரலை. 'எல்லோரும் கிளம்பும் சமயம். இனிமே வந்தா ........... பூங்காவின் வாசலைத்தான் பார்க்கணும். திரும்பிப்போங்க'ன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். ரெண்டரை மணி நேரம் 'பேசோ பேசோ'ன்னு பேசித் தீர்த்துருக்கோம். ஆனாலும் என்னமோ சொல்ல விட்டுப்போனமாதிரி இருக்கு!

நம் தேசிய குணம். விட்டுட முடியுமா? நாடு முழுக்க ஒரு நாள் பேசத் தடா போட்டால் மக்கள் தொகை அம்பது சதம் அவுட் ஆகிரும். பேசாமயே செத்துருவோம்லெ!


இந்த கலாட்டாவில் பூங்காவைப் படம் எடுக்கணும் என்பதே சுத்தமா மறந்துபோச்சு. சுத்திப்பார்க்கப் போனவரிடமாவது கெமெராவைக் கொடுத்து அனுப்பி இருக்கலாம்:(

அதான் இருட்டிப் போச்சேன்னு சமாதானம் செஞ்சுக்கிட்டேன்.
சுட்ட படம். சென்னை ஆன்லைனுக்கு நன்றி.

பதிவர் செந்தில்குமார் எடுத்த செம்மொழிப் பூங்கா படங்கள் இங்கே. அருமையா இருக்கு. அவருக்கு என் நன்றிகள்.


அறைக்கு வந்து சீனா சாரைக் கூப்பிட்டால் 'சென்னைக்கு வந்துருக்கோம். உங்களை சந்திக்க ஆவல்'ன்றார்! மறுநாள் பகல் மூணு மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கியாச்சு.

தினம்தினம் வெளியிலே சாப்பாடு அதுவும் ஒரே ரெஸ்ட்டாரண்டுன்னா உண்மையிலேயே போரடிச்சுத்தான் போகுது. வெங்கட நாராயணா ரோடு சரவணபவன் இந்தப் பயணத்துக்கு வாய்ச்சது. பாண்டி பஸாரை விட இங்கே கொஞ்சம் சுத்தமாவே இருக்கு. இரவு சாப்பாடுக்கு அவ்ளோதூரம் போகணுமான்னு ஒரு நாள் சோம்பல். அடுத்து இருந்த அமராவதியில் 'டேக் அவே' வாங்கினோம். ஆர்டர் செய்ய உள்ளே போனப்ப எல்லா இடமும் காலியாக் கிடந்துச்சு. பத்து நிமிசம் காத்திருந்து வாங்கிவந்தோம். மெனுகார்டில் போட்டுருந்த விலைப்படி 210. ஆனால் நம்மகிட்டே வாங்கினது 325. அது பழைய மெனு கார்டாம். அம்பது சதமானம் விலை ஏற்றம்? கொள்ளைதான் போங்க:(

கொள்ளைன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. சுற்றும் தூரம் அதிகமுன்னா ட்ராவல்ஸ் வண்டி. அக்கம்பக்க்க்க்க்க்க்ம் மட்டுமுன்னா ஆட்டோன்னு இருந்தோம். அதிலும் மலைக்குப்போக மாலை போட்டுருக்கும் ஆட்டோக்காரகள் கொள்ளை அடிப்பதில் ரொம்பவே தீவிரமா இருந்தாங்க. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகக்கூட அம்பது. வேணாமுன்னு தலை அசைச்சதும் பின்னாலேயே வந்து நிக்கும் சாதாரண ஆட்டோக்காரர் முப்பதுன்னுவார். ஒருமுறை தி நகர் க்ளோபஸ்லே இருந்து லஸ் சர்ச்சுக்கு 200 கேட்டார் ஒருத்தர்! அதனாலே 'மாலை போட்ட ஆட்டோ'ன்னா........ வேணவே வேணாமுன்னு வெறுப்பா இருந்தது.