அடுக்குமாடிக் குடி இருப்புகள் வராத காலக்கட்டத்தில் அநேகமா எல்லா வீடுகளும் இப்படித்தான் இருந்துருக்கும் இந்த ஏரியாவில் என்பதற்கு அத்தாட்சியா நிக்குது, திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் இந்த பங்களா.
புத்தகப்பைகளோடு காமராஜர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். காம்பவுண்டுக்குள்ளில் தெருவைப் பார்த்தபடி இடதுகையை இடுப்பில் வைத்தபடி நிற்கும் சிலை. காமராஜர் நினைவு இல்லம் காலை 9 முதல் மாலை ஆறுமணிவரை திறந்துருக்கு, தமிழக முதலமைச்சர் எம் ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 1978 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுருக்கு.
வீட்டு வாசலில் நின்னு, நம்மை அன்போடு வரவேற்று உள்ளே கூட்டிட்டுப் போனாங்க.
வாசலில் இருக்கும் போர்ட்டிகோவில் ஒரு மூலையில் மேசை நாற்காலி போட்டு அதுலே தமிழகக் காவல்துறைக் காவலர் சீருடையோடு ஒரு பெண் ட்யூட்டியில் இருந்தாங்க. ஒரு வயசான அம்மாள் வீட்டைச்சுத்தம் செஞ்சு வைச்சுக்கறாங்க. இந்தம்மாள் பத்து வயசா இருக்கும்போது ஐயா வீட்டுக்கு வேலைக்கு வந்தவங்களாம். (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டம்)சுருக்கமா ஐயாவைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமா வாசலுக்கு ரெண்டு பக்கமும் எழுதி வச்சுருக்காங்க.
வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் வலதும் இடதுமா ரெண்டு அறைகள். வலப்பக்கம் அறை நூலகம். இடப்பக்க அறை ஐயாவின் படுக்கைஅறை. காலம் உறைஞ்சு நிக்கறமாதிரி நாள்காட்டி அக்டோபர் ரெண்டுலேயே நிக்குது. ஐயாவின் இறுதி நாள்:(
அடுத்துள்ள சின்ன ஹாலின் நடுவில் ஒரு மேசை. ரொம்ப சாதாரணமா ஒரு ப்ளாஸ்டிக் மேசை விரிப்பு. டைனிங் டேபிள். அந்த ஹாலில் அலுமினியச் சட்டங்களோட ஏராளமான படங்கள். இளவயது தொடங்கி முதல் அமைச்சரா இருந்தவரை சந்தித்த முக்கியஸ்த்தர்களுடன். முந்தி காலத்துலே சினிமாலே நியூஸ் ரீலுன்னு ஒன்னு போடுவாங்களே அந்த நினைவு வந்துச்சு.
அம்மாவுக்குச் செல்ல 'காமாட்சி'யா இருந்தவரின் கல்வி ஆறாம் வகுப்பு வரை. 12 வயசாகும்போதே அரசியல் ஆர்வம். (இப்பவா இருந்தால் பிஞ்சுலே பழுத்ததுன்னு சொல்வோம் இல்லை?)
ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டம், சைமன் கமிஷன் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல்ன்னு பலதில் பங்கெடுத்து எட்டுவருசம் சிறை வாழ்க்கை.
33 வயசில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர். தொடர்ந்த அடுத்தவருசத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். இப்படிப் படிப்படியா உயர்ந்து நாட்டுக்கு சுதந்திரம் 1947 கிடைச்சப்ப அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
1954 முதல் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளா தமிழ்நாட்டு முதலமைச்சர். தன்நலமில்லாமல் நாட்டின் நலம் மட்டுமே நோக்கம் என்று கருதிய வாழ்க்கை.
இப்ப எல்லோரும் சொல்லிக்கிட்டுத் திரியறாங்களே 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்'ன்னு...இதுலே இருந்தே தெரியுதே அப்போதைய ஆட்சி உண்மையாவே நல்லா இருந்துருக்கணும் என்பது. இல்லையா?
ஹாலை ஒட்டிய மாடிப்படி. மேலே ஒரு ஹால். மேலே ஏறிப்போனால் வலப்பக்கம் ஒரு திறந்தவெளி( பின்பக்கம் மொட்டைமாடி) இடப்பக்கம் இன்னொரு ஹால். இங்கே ஐயாவின் மொத்த வார்ட்ரோபும் காட்சிக்கு இருக்கு., எண்ணி மூணு சட்டை, மூணு வேஷ்டி. நாலாவது ஒன்னு பிரிச்சுக் கண்ணாடிக் கதவுக்குப்பின் காட்சிக்கு வச்சுருக்கு. ஒரு பக்கம் இருக்கும் கப்போர்டில் அவர் சமையலுக்குப் பயன்படுத்திய அஞ்சாறு பாத்திரங்களும், ஒரு அலுமியக் குக்கரும்.வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும் பால்கனியில் நாலு பிரம்பு நாற்காலிகளும் ஒரு டீபாயும். விருந்தினர்கள் வந்தால் அவுங்களோடு உக்கார்ந்து பேசறதுக்காம்.
அங்கங்கே பெரிய சைஸில் கண்ணாடிச்சட்டமிட்ட ஐயாவின் உருவப்படங்கள். "இதெல்லாம் எதுக்குத் தேவை இல்லாம? வேணாங்க்றேன்" ஐயா சொல்வது போல் மனசுக்குள் கேட்டது ஒரு குரல்.இந்த வீட்டுக்கு சிவகாமி அம்மா வந்துருக்காங்களான்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க இங்கே இருந்த பணியாளரம்மா. வயசானதுலே ஒருவேளை மறந்து போயிருக்கலாம் அந்தம்மா. ஒரே ஒருமுறை வந்துருக்காங்கன்னு இவர் சொல்றார் பாருங்க.
எளிமையா இருக்கணும். அதுக்காக இவ்வளோ எளிமையா? மனசு கசிந்தது உண்மை. இந்த வீடும் அப்போ வாடகைக்கு எடுத்த வீடுதான். இதை அரசாங்கம் விலைக்கு வாங்கி, நினைவு இல்லமா ஆக்கி வச்சுருக்கு. வீட்டைச் சுற்றி மரங்கள் செடிகள் எல்லாம் நல்ல குளிர்ச்சியா நிக்குதுங்க.மாடியிலும் நிறைய புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு வரிசையா வச்சுருக்காங்க. அதுலே இவரோட இறுதி யாத்திரை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணு தளும்பிருச்சு. ஐயா....நாட்டைக் கெடுத்துட்டாங்கையா..............மனசின் ஓலம்:( எப்பேர்ப்பட்ட மனிதர்..
இப்படிப்பட்டத் தலைவர்கள் கூட இருந்துருக்காங்களான்னு இப்போது இருக்கும் தலைமுறை வாயைப் பிளக்கத்தான் வேணும். எனக்கே இழப்பின் அருமை இப்போதான் தெரியுது .வாசலில் ஒரு கல்வெட்டு போல ஒன்னு. பெருந்தலைவர் என்ற பெயருக்கு இவரை விட்டால் வேற யார் பொருத்தம்? ரெண்டு நிமிஷம் மௌனமா மனசில் அஞ்சலி செலுத்திட்டு அறைக்கு வந்தோம்.
PIN குறிப்பு: நடந்த நிகழ்வுகளை வரிசையா எழுதும்போது எப்படியோ குடியரசு தினத்தில் வெளியிடும்படியா அமைஞ்சுபோச்சு இந்தப் பதிவு. தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த மகான்களுக்கு 'மட்டும்' இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.
அனைவருக்கும் 'குடி' அரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.
Showing posts with label Kamaraj Memorial House Chennai. Show all posts
Showing posts with label Kamaraj Memorial House Chennai. Show all posts
Wednesday, January 26, 2011
பெருந்தலைவர் என்ற பெயருக்கு .............
Posted by
துளசி கோபால்
at
1/26/2011 01:36:00 AM
50
comments
Labels: Kamaraj Memorial House Chennai, அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
