ஸ்ரீகாந்த், விஜயகாந்த், ரஜினிகாந்த், நளினிகாந்த் இப்படி நமக்குச் சில காந்துகளைத் தெரியும். யாருக்காவது டோ(தோ)சகாந்த் தெரியுமா? இன்னிக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைச்சது.
பகல் மூணுமணிவரை கூடுதல் டைம் கிடைச்சுருக்கு செக் அவுட் செய்யன்னு துணிமணிகளை அடுக்கறதும் இடைக்கிடையே ஆபீஸ் மெயில்களுக்கு மறுபடி அனுப்பறதுமா ஒருத்தர். வேளை வரட்டுமுன்னு நிதானமா வலைமேய்வது இன்னொருத்தர்.
"ஒரு மணி ஆச்சே...போய் சாப்பிட்டுட்டு வரலாமா? "
"ச்சைனா டவுன் போயிட்டு வந்து சாப்பிடலாம்."
"அடடா..... மறந்தே போயிட்டேன். ஒரு மணி நேரமாச்சு நான் வந்து . அப்பவே சொல்லி இருக்கக்கூடாதா?"
"பரவாயில்லை நீங்க உங்க வேலையைப் பார்த்து முடிக்கட்டுமுன்னு பொறுமையா இருந்தேன். என்ன செய்யறது? அப்பப்ப உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துருதே!"
டாக்ஸியில் போகும்போது....... 'அங்கே என்ன வாங்கணும்? இல்லே....ச்சும்மா வேடிக்கை பார்க்கவா? '
"மாத்திக்கணும். ஹாங்காங்கா இல்லை பேங்காக்கான்னு முடிவு செஞ்சுக்கலை. ஹாங்காங்கே இருக்கட்டும். அதுதான் நீங்களா ஒருமுறை வாங்கி வந்தது."
"சொல்லவே இல்லை.....கொண்டு வந்தியா அதை? "
" பின்னே?"
கால்நூற்றாண்டுக்கு முன் வந்த கடை எப்படி நினைவிருக்கும். போற போக்கில் சட்னு ஒரு கடையில் நுழைஞ்சோம். பயங்கரக்கூட்டம். சின்னதா இருக்கும் கவுண்டரில் எட்டிப்பார்க்கவும் தலையை நுழைக்க முடியாது. கொஞ்சம் மங்கலான நிறத்தில் மூணு அடுக்களாத் தொங்குது.
கிடைச்ச இடைவெளியில் நுழைஞ்சோம். நின்ன நேரத்தில் பார்த்து வச்ச ஐட்டத்தைக் காமிச்சவுடன் பரபரன்னு எடுத்துக் கையில் கொடுத்தார் 1 விற்பனையாளர். ரெண்டு தாய்பத் வெயிட்.
இங்கே தங்கத்துக்கு எடை, நம்மூர்போல கிராம், பவுன் கணக்கு இல்லை. கேரட்டும் கூடுதல். எல்லாம் 23 கேரட் மட்டுமே. நகை வகைகளிலும் காதணின்னு ஒன்னுமே இல்லை. நெக்லேஸ், கல்லுவச்சதுன்னு கிடையவே கிடையாது. சங்கிலிகள் மட்டுமே. ஒன்னு, ரெண்டுன்னு பத்து தாய்பத் எடைகள்.
(பத்துன்னதும் ஆதிகேசவனின் செயின் நினைவுக்கு வந்துச்சு.அம்மாம் பெருசெல்லாம் இங்கே இல்லை )
நீளம், குட்டைன்னு ரெண்டே அளவு.
ஒரு தாய்பத் தங்கம் = 15.16 கிராம்.
அன்றைய விலையைச் சாக்பீஸால் கண்ணாடியில் எழுதி வைச்சுடறாங்க. சேதாரம் செய்கூலின்னு தனித்தனியா இல்லாம எல்லாமே 'அடக்கம்'ரெண்டு தாய்பத் எடைக்கு ஒன்னு செலக்ட் செஞ்சாச்சு. நம்ம ஹாங்காங் ட்விஸ்ட் செயினை மாத்திக்கணும். எடைபோட்டுப் பார்த்து அதுக்கு ***** விலை போட்டாச்சு. அனைத்துவகைக் கடனட்டையும் எடுப்பாங்கன்னு ஒட்டிவச்ச படங்களைப் பார்த்துட்டு க்ரெடிட் கார்டை வெளியில் எடுத்தால் 3 சதமானம் கூடுதல் கொடுக்கணுமாம்.
எதிரில் இருக்கும் ஏடிஎம்மைப் பார்த்துவச்சுக்கிட்டது நல்லதாப் போச்சு. கேஷாவே எடுத்துக் கொடுத்துடலாம். அங்கே போனால் அப்படியே வரமுடியுதா.... அதுக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு நகைக்கடையில் எட்டிப் பார்த்தேன். ஈ காக்கா இல்லை. வாய் வார்த்தையா இந்த செயின் எவ்வளவு பெறுமுன்னு கேட்டால் கணக்கான கணக்கைக் கேல்குலேட்டரில் போட்டு அழிச்சுப்போட்டு.......ரொம்பக் குறைவா ஒரு தொகை சொன்னாங்க. முந்திக்கடையை விட மூவாயிரம் கம்மி.
பணத்தோட பழைய கடைக்கே போனோம். அஞ்சே நிமிசம். வேலை முடிஞ்சது. நம்ம ஹாங்காங்கை ஒரு திரவத்தில் போட்டு எடுத்துவந்து சின்ன பாலித்லீன் கவரில் போடும்போது பார்த்தால் அப்படி ஜொலிக்குது. 'ஐயோ..... மாத்திட்டோமே'ன்னு மனசுலே அல்லாடல்.
சைனா டவுன் பரபரப்பில் டாக்ஸி பிடிச்சால்..... இலவசமாக் கொண்டு விடறேன்..... ஒரு நகைக்கடைன்னு ஆரம்பிச்சார் ட்ரைவர். ஆளை விடு சாமி. மீட்டரைப்போடு. நேரா ஹொட்டேல். வந்து சேர்ந்து பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு செக்கவுட் செஞ்சுட்டு இன்னொரு டாக்சியில் சுவர்ணபூமிக்குப் போய்ச் சேர்ந்தோம்.அங்கேயும் அரசர் பலபடங்களில் பலவித போஸ்களில் நின்னு நம்மை நமஸ்காரம் செஞ்சு, வந்துட்டுப் போறவங்களுக்கு நன்றின்னார்.
வழியெல்லாம்....... ' என்னமோ ஒரு கடையில் நுழைஞ்சு இப்படி இவ்வளோ காசை தண்டம் பண்ணிட்டே. நல்ல தங்கமோ என்னவோ..... இந்தியாவைவிடக் கூடுதல் ரேட்டோ.....' ன்னு ஒரே தொணப்பல்.
"இதுக்காச்சும் ரீஸேல் உண்டு. நீங்க சொன்ன ஹேண்ட் பேகை வாங்கி இருந்தால்...................." (போதுண்டா சாமி)
அப்புறம் வலையில் கடைப்பெயரைத் தேடுனதில் அது புகழ்பெற்ற நம்பிக்கையான பெரிய கடைகளில் ஒன்னா இருக்கு. Hang Seng Heng ( Thailand ) Co., Ltdநாம் இப்போ போறது பாங்காக் ஏர்வேஸில். கம்போடியாவில் இருக்கும் சியாம்ரீப் என்னும் ஊருக்குப் போறோம். செக் இன் ஒரு சிரமமும் இல்லாமல் முடிஞ்சது. ஏகப்பட்ட கவுண்ட்டர்கள் திறந்து வச்சுருக்காங்க.
அரண்மனைக்காவலுக்கு நிற்கும் பூதங்களும் அரக்கர்களும் இங்கே வரிசைக்கு ஒன்னா அலங்காரமா நிக்கிறாங்க. Askan Mara, Sahassadeja, Viruncamban, இப்படி மொத்தம் பனிரெண்டு பேர். இவுங்க வாழ்க்கை வரலாறுக் குறிப்புகள் கூட எழுதி வச்சுருக்காங்க.ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு. அந்த டோசகாந்த்.
மரகத புத்தரின் காவலன் சகஸ்ஸதேஜா, நம்ம ராவணனோட பெஸ்ட் ஃப்ரெண்டாம். இவருக்கு ஆயிரம் முகங்களும் ரெண்டாயிரம் கைகளுமாம். இவரைக் கொன்னது ஹனுமான்தானாம்.
முதலில் பாங்காக் வரும் பயணிகளை வரவேற்கும் விதமா அர்ரைவல் ஹாலில்தான் இவுங்களை வச்சுருந்தாங்களாம். அங்கே வேலை செய்யும் பணியாளர்கள், இது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருமுன்னு அபிப்ப்ராயப்பட்டதால் இந்த பன்னெண்டு பேரையும் வழியனுப்புப் பகுதிக்கு அனுப்பிட்டாங்க. கெட்ட சமாச்சாரம், துரதிர்ஷ்டமெல்லாம் பயணிகளுடனே கிளம்பிப் போயிறட்டுமுன்னு!
.
விமானநிலையம் அமைக்க வாங்குன இடம் வெறும் எட்டாயிரம் ஏக்கர் நிலம்!!!! வளாகம் மட்டும் அறுபது லட்சத்து அறுபதாயிரம் சதுர அடிகள். உலகத்துலேயே அதி உயரமான கண்ட்ரோல் டவர் 434 அடி. முன்னூத்தி அறுபது செக்கின் கவுண்டர்கள் இப்படி எல்லாமே பிரமாண்டம்.இந்த செப்டம்பர் 2010 வந்தால் சுவர்ணபூமிக்கு நாலு வயசு. இதைக் கட்டுனதும் உலகெங்கும் உள்ள ராஜகுடும்பத்தினரை இங்கே வரவழைச்சு பெருசாக் கொண்டாட்டம் நடத்தி இருக்காங்க.
இவ்வளவு பெரிய இடம் நகரத்துக்குள்ளே கிடைக்குமா? அதான் பாங்காக் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்துலே சுவர்ணபூமியைக் கட்டி இருக்காங்க.
இமிக்ரேஷன் முடிஞ்சது. இங்கேயும் தரையில் கால் வரைஞ்சு வச்சுருக்கு. அதுக்குமேல் ஒவ்வொருத்த்ரா நிக்கணும். நம்மை ஒரு படம் புடிச்சு வச்சுக்கறாங்க. அப்புறம் கையில் கொண்டுபோகும் பையையும் கேபின் பேக், கணினி எல்லாம் வெளியில் எடுத்து ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ணும் சமயம் நம்ம காலணிகளையும் கழட்டி தனியா அதுக்குன்னு இருக்கும் ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ண அனுப்பனும்.
இதைக் கடந்தால் பாற்கடல். வாசுகியைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கித் தலைப்பக்கம் பக்கம் அசுரரும் வால் பக்கம் தேவர்களுமா பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க.வேடிக்கை பார்த்துக்கிட்டே போய் காஃபி வொர்ல்ட்லே கப்புச்சீனோ வாங்கிக் குடிச்சுட்டு நம்ம கேட்டை நோக்கிப் போனோம். இங்கே வெளிவிலைக்கும் விமானநிலைய விலைக்கும் வேறுபாடு ரொம்ப ஒன்னும் இல்லை. இந்த காஃபியே பாருங்க வெளியில் ஒரு நாள் இதே கடையில் குடிச்சது 70 பத். இங்கே 80. நம்மூர்போல் உள்ளே கொள்ளை அடிக்கறதில்லை(யாக்கும்)
வந்து நின்ற ஒரு விமானத்தில் இருந்து பைகளை இறக்குவதையும், சாப்பாட்டு கண்டெய்னர்கள் இறக்குவதையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிம்ம்மதியா சலனமில்லாம இருந்த என் மனசுலே கோபால் கல்லைத் தூக்கிப் போட்டார். சும்மா இருக்காம கம்போடியா விஸா ஃபார்ம் வாங்கிவரேன்னு போனவர் கொண்டுவந்து கொடுத்ததைத் திறந்தால்..............
ஃபோட்டோ ஒட்டணுமாம். கைவசம் இல்லையே!
ஙே :(
PIN குறிப்பு. டுக் டுக் படம் போடவில்லையாமே இதுவரை? இதோ போட்டாச்சு.
தொடரும்.....................:-)
Wednesday, August 04, 2010
தோசகாந்த்!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 13)
Posted by
துளசி கோபால்
at
8/04/2010 03:58:00 AM
24
comments
Labels: Bangkok, அனுபவம் Suvarnabhumi
Tuesday, August 03, 2010
தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன, முழம் என்ன?........................(தாய்லாந்து பயணம் பகுதி 12)
கால் வலிக்க வலிக்க அரண்மனையைச் சுத்திப்பார்த்துட்டு வெளியே வந்து இங்கே இறக்கிவிட்ட 'டுக் டுக்' ஆளைத் தேடுனா..............கண்ணில் தெம்படலை. ஏற்கெனவே எனக்கு நம்பிக்கை இல்லாமல்தான் ஒப்புக்குத் தேடுனேன்னு வையுங்க. சாலையைக் கடந்து நடைபாதைக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போனப்ப அங்கிருந்த டுக் டுக் வண்டியில் விசாரிச்சால் 'சிட் லொம்' எரவான் கோயிலுக்கு 200 கொடுன்னு கேக்கறாங்க. இது கூடிப்போச்சே.... இன்னும் கொஞ்சம் தேடலாமுன்னு மெதுநடை போட்டேன். எதிரில் வந்த டுக்டுக் நின்னுச்சு. 120 கொடுத்தால் போதுமாம். ஆளைவிடு. 60தான் தருவேன். அதுவே கூடுதல். வரும்போது 30தான் கொடுத்தேன்..... மனசுலே ஒரு சுருக். அடடா..... எங்கே கொடுத்தேன்? அட ராமா!!!
திரும்பிவந்து என்னைக் கொண்டுபோய் ஹொட்டேலில் விட்டால் கொடுப்பதாகத்தானே பேச்சு. அந்தப் பையன் (பெயர் : காங்)தான் வரவே இல்லையே. நம்மால் ஒரு 300 பத் பெட்ரோல் கிடைச்சுருக்கே. அதுதான் சார்ஜ்னு மனசை சமாதானப்படுத்திக்க வேண்டியதாப் போச்சு. இந்த அழகுலே யாரைப்பார்த்தாலும் அந்த காங் மாதிரியே இருக்கு. அதெப்படி எல்லா தாய்களுக்கும் ஒரே முகம்? நமக்குத்தான் என்னவோ ஆகிக்கிடக்கு:(
120 கேட்ட ஆள் தடதடன்னு பின்னாலேயே ஓடிவந்து 30 கொடுத்தாப்போதும். ஒரு நகைக்கடை ஸ்டாப் போட்டுக்குவேன்னு இறங்கிவந்தார். நானுமொரு இரக்கத்தால் சரின்னேன்.
இடுகைத் தலைப்பு இங்கே வரணும்:-)
'மவனே....ஏற்கெனவே போன கடையா இருக்கணும். அப்ப இருக்கு உனக்கு......'
நமக்கும் ஆறுமணிக்குள்ளே அறைக்குப்போனால் போதாதா? நல்லவேளை இது வேறொரு நகைக்கடை. ஊர் முழுக்க இந்தக் கடைகள்தான் போல! யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு இருக்கும் ஏராளமான விற்பனைப்பிரிவு ஆட்கள், காவல்காரர், கேட் மேன் இப்படி கடையை மெயிண்டெய்ன் செய்யவே நிறைய செலவாகுமே. உள்ளே வரும் டூரிஸ்ட்களைப் பார்த்தால் என்னைப்போல ஒன்னுமே வாங்காம வேடிக்கைமட்டும் பார்த்துப் போறவங்கதான் அதிகம். பின்னே எப்படிக் கட்டுபடி ஆகுது? சரி. ஆண்டிக்கு எதுக்கு அம்பாரம் கணக்கு?
பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பத்து நிமிசம் பார்த்தோமா வந்தோமான்னு இருக்கணும். அப்படியும் ஒரு பெண்டெண்ட் கண்ணுலே விழுந்துருச்சு:(
விலை பேரம் படியலை. நானும் கொஞ்சம் மோசம். அடிவிலைக்குக் கேட்டால் எப்படி?
நேராக்கொண்டுபோய் மாரியம்மன் கோவிலில் நின்னுச்சு டுக்டுக். வந்தாச்சுன்னு கைநீட்டுன ஆளைப்பார்த்து .ஏம்ப்பா..... இது சிலோம் கோவிலாச்சே. நான் சிட் லொமுன்னு சொன்னது மறந்து போச்சா? எரவான் கோவில்னு 'அபிநயத்துலே' காமிச்சேனே!
அச்சச்சோ...... அந்தக் கோவிலா? தப்பா நினைச்சுட்டேன். ஸாரி ஸாரி....ன்னு வண்டியைத் திருப்புனார். இதுவே சென்னையா இருந்தா?
சுத்திச்சுத்திவந்த ஸீன் இங்கே:-))))
இதுக்குள்ளே ரெண்டு முறை செல்லில் கூப்பிட்டுட்டார் கோபால். அறைக்குத் திரும்பிட்டாராம். இளநீர் ஒன்னு வாங்கிக் குடிச்சுட்டு அறைக்கு வந்தேன். மாலை உலாவுக்குக் கிளம்பி நடை மேம்பாலம் வழியாவே SIAM ரயில் நிலையம் நோக்கி நடந்தோம். மேலே தடதடன்னு ரயில்கள் பறந்துக்கிட்டே இருக்கு. எந்த நெரிசலிலும் சிக்கிக்காம நிம்மதியா நடக்க இதைவிட சூப்பரா ஒரு இடம் இருக்கமுடியுமா? அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் புத்தர் கோவில் இங்கேதான் இருக்கணும். அடையாளம் பார்த்து வச்சுருக்கேன்னு தேடிக்கிட்டே போனதில் வலதுபக்கம் கீழே அதுக்குண்டான நுழைவு வாசல் தெரிஞ்சது. இப்ப மூடி இருக்கு. நாளைக்குக் கட்டாயம் வந்து பார்க்கணுமுன்னு மூளையில் முடிச்சு போட்டு வச்சேன்.மேம்பாலத்தில் நடக்க நடக்க சியாம், செண்ட்ரல் வொ(ர்)ல்ட் என்னும் பெரிய மால் வருது. சிட்லோம் ரயில் நிலையத்தில் இறங்கி மேம்பாலத்தோடு நடந்து அப்படியே மாலுக்குள்ளே போயிரலாம். தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய மாலாம் இது. எட்டு லட்சத்து முப்பதாயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவு. உள்ள வளாகத்துலே கடை கண்ணிகளுக்கு ஒதுக்குனது அஞ்சு லட்சத்து அம்பதாயிரம் சதுர மீட்டர்.
சம்பாரிக்கும் காசு முழுசையும் தொலைக்கச் சரியான இடம். எனக்கு எதாவது வாங்கித் தரணுமாம் கோபாலுக்கு. ஆசையா ஒரு ஹேண்ட் பேகை எடுத்துப் பார்த்துட்டு ஸேல் நடக்குது. வேணுமுன்னா வாங்கிக்கம்மான்னார். நம்ம தேடலே தனி. இந்த ஹேண்ட்பேக் புளிக்குது வேணாமுன்னுட்டேன். விலை ஜஸ்ட் 25000 பத். அஞ்சு சதமானம் டிஸ்கவுண்ட். இப்பச் சொல்லுங்க அதை வாங்கி இருந்தா அதுக்குள்ளே ஒரு லிப்ஸ்டிக் வைக்கத்தான் மீதிக் காசு இருக்கும். முப்பத்தியேழாயிரம் ரூபாய்ன்றது அநியாயமில்லையோ? இது இப்படின்னா மற்ற பொருட்களின் விலையை உங்க ஊகத்துக்கே விட்டுடலாம்.
"நாளைக்கு மத்தியானம் கிளம்பறோம். பாங்காக் எல்லாம் நல்லாச் சுத்திட்டதானே?"
" இல்லையே..... எனக்கு ச்சைனா டவுன் போகணுமே."
"இன்னிக்கு ரொம்ப லேட்டாகிருச்சு. நாளைக்குப் போகலாம். அரைநாள் மட்டும் வேலை. சீக்கிரம் வந்துருவேன்."
"எனக்கும் காலையில் புத்தர்கோவில் பார்க்கணும்"
Pathum Wanaram
அட! வானரம்!!! நம்ம ஹனுமானா? அதுவும் பாத்தும்.... ஒரு வேளை மலையாளமோ? சிரிப்புதான் வந்துச்சு..... (மலையாள ஸ்லாங்லே சொன்னால் 'ஒன்' போகும் குரங்கன்னு............)
இருக்காது...பார்க்கும் வானரமாக இருக்கணும். பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ரெண்டுக்கும் இடையில் (சியாம் பாரகன் & செண்ட்ரல் வொர்ல்ட் ) அமைதியா உக்கார்ந்துருக்கு இந்தக் கோவில்.மால்களுக்கு நடுவில் (பெரு)மாள்.
பெரிய தோட்டமா இருக்கு. ரொம்பவே வயசான போதிமரச் சுவட்டில் புத்தர் சிலைகளைவச்சு பூஜை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கும் சின்னதா ஒரு ஃபென்ஸ் போட்ட தாற்காலிகத் தடுப்பு.அடுத்துள்ள ஒரு பெரிய கூடாரத்தில் வார புத்தர்கள். சின்னதா உசரம் இருக்கும் ஒரு பெரிய நீளமான மேடையில் புத்த பிக்ஷூ ஒருத்தர் உக்கார்ந்து வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கறார். ஒன்னும் ரெண்டுமா மக்கள் வந்துபோய்க்கிட்டே இருக்காங்க.
புத்தரைப் பணியும் யானையும் , பின்னே எலியா இல்லை குரங்கான்னு தெரியாத ஒன்னும்!
அடுத்த சுற்றுச்சுவர் வாசல் வழியாக் கோவிலுக்குப்போனேன். கோவில் கதவு மூடி இருக்கு. ஏழுதலையார், என்ன? எப்ப வந்தேன்னு விசாரிக்கும் பாவனையில் தலை தூக்கி நிற்கிறார். அழகான கோவிலுக்குப் பின்புறமா ஒரு அழகான ச்செடி. கோவிலில் பழுதுபார்க்கும் வேலை நடக்குது. ஓஹோ.... அதனால்தான் சாமிச்சிலைகளை வழிபாடு முடங்காமல் இருக்க மரத்தடியில் வச்சுருக்காங்களோ?
விஹார்னுக்குப் பின்னே வெள்ளை ச்செடி
ஊஹூம்.............. இல்லை. ஒரு ஆறு பேர் கோவிலில் கொல்லப்பட்டாங்களாம்:(
ஐயோ!! எப்போ? ஏன்?
இந்த வருசம் மே மாசம் செஞ்சட்டைக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடந்துச்சுன்னு, ஷாப்பிங் செண்டருக்குத் தீ வச்சுட்டாங்கன்னு ( ஒரு 18 மாடிக் கட்டிடம் ) சொன்னேன் பாருங்க. அப்ப நடந்த கலாட்டாவில் இந்த சோகம் நடந்துபோச்சு. எல்லோரும் சிவிலியன்ஸ். அஞ்சு பொதுமக்களும் ஒரு நர்ஸம்மாவும். கோவிலுக்குள்ளே சுவரெல்லாம் குண்டு துளைத்த அடையாளம் இருக்காம். இத்தனைக்கும் அரசரோட காவல்படை மேலே பறக்கும் ரயில் பாதையிலே இருந்து கோவிலைப் பாதுகாக்கக் கண்காணிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க. கோவிலுக்கும் இவுங்களுக்கும் 300 மீட்டர்தான் இடைவெளி.அடிபட்டு உயிர் பிழைச்ச ஒருத்தர் துப்பாக்கிக்குண்டு தாக்கியது மேலே ரயில்பாதையில் இருந்துதான்னு சொல்றார். புத்தர் கோவில் என்பதுஅடைக்கலம் கொடுக்கும் இடம். ஆனால் கலாட்டாவுலே பயந்துபோய் புகலிடமா இங்கு வந்து ஒடுங்கின மக்கள் மேல் துப்பாக்கியைத் திருப்புனது பயங்கரம். நடந்த அநியாயத்தைப் பார்த்து நடுங்கிப்போய் கிடக்கறாங்க அக்கம்பக்கம் கோவிலையொட்டிக் குடி இருக்கும் மக்கள்.
அதுதான் இப்போ இந்த இடம் ஜிலோன்னு கிடக்கு. இது ஒன்னும் தெரியாமலேயே உள்ளே போய் சுத்திப்பார்த்துப் படம் எடுத்துக்கிட்டு இருந்தேன் அப்போ.அரசர் நாலாம் ராமா, 1857 இல் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கார். அப்போ இந்த ஏரியா முழுசும் நெல் வயல்கள்தானாம். அரண்மனைக்கு (Sa Pathum Palace) பக்கத்துலே ஒரு கோவில் இருக்கட்டுமேன்னுதான். முழுப்பெயர் Wat Pathum Wanaram Ratcha Wora Viharn அரசகுடும்பத்துக்கோவில்கள் வரிசையில் இதுக்கு மூணாம் இடம் கிடைச்சுருக்கு.
விஹார்ன் கூரை முகப்பு
அரசகுடும்பத்தில் இறந்தவர்களை எரியூட்ட இங்கே ஒரு க்ரெமெடோரியம்கூடக் கட்டி இருக்காங்க. 'மேரு மலை' போல டிஸைன் செஞ்சுருக்காங்களாம். ஆனால் பார்க்கக் கிடைக்கலை. இந்த வளாகத்துக்குள்ளே புத்தபிக்குகளுக்கான மடாலயமும் பயிற்சிக் கல்லூரியும் இருக்கு.காலாற நடந்துபோய் கிடைச்சதையெல்லாம் கேமெராவில் சுட்டுக்கிட்டு வரும்வழியில் வழக்கம்போல் எரவானையும் வணங்கி போயிட்டுவாரேன்னு சொல்லிட்டு நிதானமா அறைக்கு வந்து சேர்ந்து கோபால் வருகைக்குக் காத்திருந்தேன். எண்ணித்துணிந்த 'கருமத்தை' முடிக்காமல் கிளம்ப முடியாது:-))).
தொடரும்................................:-)
Posted by
துளசி கோபால்
at
8/03/2010 05:46:00 PM
21
comments
Labels: Bangkok. அனுபவம்
Monday, August 02, 2010
ராசாவூட்டுத் தண்ணீர் பந்தல்........................(தாய்லாந்து பயணம் பகுதி 11)
அந்த மரகதபுத்தர் இருக்கும் வளாகத்துலே ஒரு பக்கம் பூராவும் தங்கமாகவும், கல் வச்சதும், கண்ணாடி பதிச்சதும், போர்ஸலீன் பூக்களை வச்சுப்பிடிப்பிச்சதுமா ஏராளமான ச்செடிகள் இருக்கு.. இதெல்லாம் நட்டு வச்ச செடிகளா? இல்லையில்லை. 'கட்டி வச்ச ச்செடிகள்'. நட்டு வச்ச செடிகள் எதையுமே தன்னிச்சையா தழைச்சு வளர விடலை இங்கே. போன்ஸாயா குறுக்கியும் அலங்காரமா வெட்டியும் வச்சதுகள்தான் எல்லாமே. மரக்கிளையில் கூட இலைகள் உருண்டையா பந்துபந்தா இருக்குன்னா பாருங்களேன்!ச்செடின்னதும் நினைவுக்கு வரும் ஒரு விஷயம்..... அரண்மனையை விடக் கூடுதலா ச்செடி (chedi) இருப்பது நம்ம 'கிடந்தார் புத்தர்' கோவிலில்தான் .சின்னதும் பெருசுமா 99 செடிகள் அங்கே இருக்கு இங்கே ஒரு எழுபதுவரை இருக்கலாம். வெவ்வேற காலக்கட்டத்தில் வெவ்வேற அரசர்களால் கட்டப்பட்டதால் இந்த வளாகம் என்னவோ திட்டமிடாமல் கட்டுனதைப்போல ச்செடிகள் எல்லாம் கூட்டங்கூட்டமா நெருக்கியடிச்சு நிக்குதோன்னு ஒரு தோணல்.
தங்கச்செடியைத் தாங்கி நிற்கும் அரக்கர்கள்
மரகத புத்தர் வளாகத்தைச்சுற்றிலும் ப்ரமாண்டமான அகலத்தோடு வெராந்தா ஓடுது. சுவர் முழுக்க ராமக்கீயம் வரைஞ்சு வச்சுருக்காங்க. நம்ம ராமாயணம்தான் இது. ஆடை அலங்காரம் எல்லாம் அவுங்க வழக்கபடி இருக்கு. சில சித்திரங்கள் அட! போடவைக்குது.
போரில் 'நாகபாச'த்தால் அடிபட்டு மயங்கி வீழ்ந்த லக்ஷ்மணனை ராமன் மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்புவது, மேலாடை இல்லாத சீதை அசோகவனத்து 'பங்களா'வில் ராவணன் கெஞ்சிகிட்டே பின்னால் வர போ போன்னு முன்னால் வேகமா நடப்பது, காட்டில் அருவியில் ராமன் குளிப்பது, ஹனுமன் கடலரக்கியோடு சண்டை போடுவது, வாலில் அரக்கனைக்கட்டி ஆத்துலே அமுக்கறது இப்படி ஏராளம் ஏராளம்!!!!
நின்னு நிதானமா இந்தச் சித்திரங்களைப் பார்வையிடவே ஒரு மூணு நாலு மணி நேரம் எடுக்கும். அந்த அளவுக்கு விஸ்தாரமாவும் நுணுக்கமான விவரிப்புகளுடன் வரைஞ்சுருக்காங்க. இதைப் பராமரிப்பது மாபெரும் வேலைதான். காலத்தால் வெளிறிப்போன வண்ணங்களுக்கு மறு உயிர் கொடுத்து புதுப்பிக்கும் வேலை மட்டும் உண்மையான ஆர்வம் உள்ள ஒரு கலைஞனுக்குக் கிடைச்சதுன்னா........அவன் வாழ்நாள் போதாது!!!!
இந்தப்பகுதியைப் பார்வையிடும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்களின் வழிகாட்டி விளக்கிச் சொல்றதைக் கேட்டு 'ஹைய்யோ'ன்னு ஆகிப்போச்சு. பயங்கரமா ரீல்ஸ் விட்டுக்கிட்டு இருந்தார். ஒருவேளை நாம் கம்பனை(மட்டும்) படிச்சவங்களா இருப்பதாலும், ராமாயணக்கதைகளைச் சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவர்களா இருப்பதாலும் இப்படித் தோணுதோ என்னவோ! அந்தச் சுற்றுலாக் குழுவினரும் கதையைக் கவனமாக் கேட்பதுபோல எனக்குத் தோணலை.தோட்டம் அழகு. அருமையான பராமரிப்பு. அங்கங்கே சிலைகள். மரகத புத்தர் கோவிலுக்கு முன்னே முற்றத்தில் ரெண்டு பக்கமும் எருமைகள் நிற்கும் ஒரு தனிச்சந்நிதி. சுத்திவர ஊதுவத்தி ஸ்டேண்டா தொட்டிகள். அங்கிருக்கும் புத்தருக்கு வழிபாடாத் தங்கரேக் ஒட்டிவைச்சுக்கிட்டு இருக்காங்க உள்ளூர் பக்தர்கள். நான் மடத்தனமாக் கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு போகலை. நாக்கோ வரளுது. வெய்யில் வேறு இந்தப்போடு போடுதேன்னு ஓய்வுக்காக ஒரு அஞ்சு நிமிசம் இதுக்குப் பக்கத்தில் இருக்கும் மேற்கூரை போட்டு, நாலுபக்கமும் திறந்த மண்டபம் ஒன்னில் உக்கார்ந்துருந்தேன்.
அப்போ என்னைக்கடந்து போன ஒரு பிஞ்சு, (கூடிப்போனால் ஒரு மூணுவயசு இருக்கும்) என்னைத் திரும்பிப் பார்த்துட்டு, 'சட்'னு ரெண்டு கைகளையும் குவிச்சு ஒரு வணக்கம் போட்டுச்சு. குழந்தையிலிருந்தே இந்தப் பழக்கம் வளர்ந்துருது. நம்ம ஹொட்டேலிலும் அந்தஸ்து, பதவி வேறுபாடுகள் இல்லாம 'கேட் மேனு'க்குக்கூட மேனேஜர் கைகூப்பி வணக்கம் சொல்வதைப் பார்த்துருக்கேன்.
மரகத புத்தர் கோவிலைச்சுத்தி இப்படித் திறந்தவெளி மண்டபங்கள் பனிரெண்டு இருக்கு. உசரம் குறைஞ்ச திண்ணையில் உக்காருவதுபோல இங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கலாம்.
அங்கோர்வாட் மாடல்
கூட்டமாக் கோவில்களுக்கு மத்தியில் ஒரு மேடையில் நம்ம கம்போடியா 'அங்கோர் வாட்' மாடலைச் செஞ்சு வச்சுருக்காங்க. இது அரசர் நாலாம் ராமா காலத்துலே உண்டாக்குனதாம்.
பாதி மிருகம் பாதி மனிதன், பாதிப்பறவை மீதி மனிதன்னு ஏராளமான சிலைகள் அங்கங்கே. கின்னரர்களாம். கையில் ஏன் இசைக்கருவிகளை வைக்கலை?போதி மரம் ஒன்னு சுற்றிலும் மேடையோடு ஒரு முற்றத்தில். இது 'கன்றாக' இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். மேடையைச்சுத்தி இருக்கைகள் போட்டுருக்காங்க. ஞானம் வேணுமுன்னு நாமும் தவம் இருக்கலாம். பாங்காக் நகரத்திலும் எங்கே பார்த்தாலும் அரசமரங்கள்தான். நாங்க இப்போ வசிக்கும் சண்டிகர் நகரில் இப்படி இருப்பதால் வரும் ஞானம் வராமலா இருக்கப் போகுதுன்ற 'ஞானம்' பெற்று தெளிவடைந்தேன்.
மரகதபுத்தர் வளாகத்தைவிட்டு வெளியில் வந்தால் மகாராஜா வச்சுருக்கும் தண்ணீர்ப்பந்தல் இருக்கு. ராயல் சாரிடபிள் ப்ராஜெக்ட் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தருவது புண்ணியமில்லையோ? 25 பத்துக்கு லைச்சி ஜூஸ் கிடைக்குது. நல்லா இருக்கட்டும் புண்ணியவான். குடிச்சுட்டு அடுத்த வளாகத்துக்குப் போனேன். PHRA VIHARN YOD
வெவ்வேற வளாகத்துக்குப் போகும் வாசல்களில் எல்லாம் காவல்கார பூதங்கள் நிக்குது. அவுங்களுக்கு தனித்தனி பெயரெல்லாம் உண்டு.
எமரால்ட் புத்தரின் காவலன் ஸஹஸ்ஸ டேஜா ( GIANT SAHASSADEJA)
ஆயுதசாலை ஒரு பெரிய ஹாலில் அமைஞ்சுருக்கு. இதுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அந்தக்காலப்போர் ஆயுதங்களைப் பார்வையிடலாம். இதையொட்டி இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தின் (Chakri Mahaprasat Hall) ரெண்டு புறமும் யானைகள் நிற்கும் மாடிப்படிகளின் நுழைவு. ரெண்டு படிகளுக்கும் முன்னால் ஒவ்வொரு போர்வீரர் மணைபோல ஒரு மரப்பெட்டி மேல் ஏறி நின்னு காவல் காக்கறாங்க.அப்போ அங்கே இன்னொரு போர்வீரர் வந்தார். இடுப்பில் இருந்து என்னவோ ஒன்னை (சாவி?) பரிமாறிக்கிட்டதும் புதியவர் இடம் மாறி மணைமேல் ஏறி நின்னுட்டார். பழையவர் டக் டக்''ன்னு லெஃப்ட் ரைட்டு போட்டுக்கிட்டு மிடுக்கா நடந்து போனார். காவல் பணி நேரம் முன்னவருக்கு முடிஞ்சுருச்சு போல. சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்''ன்னு பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் பார்த்தது நினைவுக்கு வந்துச்சு ( எப்படி அங்கே(யும்) போனதை நைஸா உங்களுக்கு சொல்றேன் பாருங்க! )
நாம் நுழைவுக்கட்டணமா செலுத்தும் 350 பத், கொஞ்சம் கூடுதலோன்னு நினைக்கவிடாம இன்னும் ரெண்டு சமாச்சாரங்களுக்கும் சேர்த்தேதான் இதுன்னு சொல்லும்விதமா Vimanmek Mansion என்னும் தேக்குமரத்தால் கட்டப்பட்ட ஒரு அரசமாளிகைக்கு (ஆசியாவிலேயே பெருசாம்) இலவசமாப் போய்ப் பார்க்க அனுமதியும் (தனியா இங்கே போகணுமுன்னா 100 பத் கொடுக்கணும்) அரசரோட அரச உடைகள், மரகதபுத்தரின் மற்ற ரெண்டு காலத்துக்கான தங்கத்தாலான மாற்று உடைகள், பழங்கால நாணயங்கள் காட்சிப்பொருளா வச்சுருக்கும் ஒரு இடத்தையும்(Pavilion of Regalia) இலவசமாப் பார்த்துக்கலாம். முதல் அனுமதிச்சீட்டு வாங்குன ஏழுநாள் வரை இது செல்லுபடியாகும். அதானே ஒரே நாளில் அங்கிட்டும் இங்கிட்டுமா எப்படிப் பார்க்கறது? ஆனா அந்த ரெண்டு இடங்களுக்கும் போக நேரமில்லாமப் போச்சு:(
கிராண்ட் பேலஸ் வளாகம் பெருசுன்னாலும் பொதுமக்கள் பார்வைக்கு மூணில் ஒரு பாகம் மட்டுமே அனுமதி. கம்பிகேட்டுகளுக்குள்ளில் ராஜகுடும்பத்துக்காரர்கள் மாளிகை தெரியுது. இப்போ இருக்கும் அரசர் வேற ஒரு இடத்தில் அரசமாளிகையில் (சித்ரலதா மாளிகை) குடி இருக்கார். அரசகுடும்பத்துப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமா இது முந்தி இருந்துச்சாம்.
இவருக்கு முன்னால் இருந்த எட்டாவது ராமர் அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதும்கூட இந்த இடமாற்றத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம். இந்த சேதி தெரியவந்தவுடன், ராத்திரி நேரங்களில் ச்செடிகளைச்சுற்றி 'காவியமா நெஞ்சில் ஓவியமா'ன்னு தாய்மொழியில் பாடிக்கிட்டு உலாத்துவாங்களோ முன்னோர்கள் என்ற எண்ணம் என் மனசில். கோட்டை மதில்கள் நல்ல உசரமா இருப்பதால் நம்ம கண்ணுக்குப் புலப்படமாட்டாங்க இல்லே? உசரம் மட்டுமில்லை, சுத்தளவும் கூடுதல்தன். மதில் சுவர்களின் மொத்த நீளம் 1900 மீட்டர்கள்!!!!!
ஏராளமான படங்களை எடுத்துத் தள்ளிட்டேன் . அரண்மனைன்னு ஒரு ஆல்பத்துலே போட்டுவச்சுருக்கேன். விருப்பம் இருப்பவர்கள் பார்த்துக்கலாம்.
தொடரும்.............................:-)
Posted by
துளசி கோபால்
at
8/02/2010 12:21:00 AM
30
comments
