வரவேற்பில் உள்ளே நுழைஞ்சவுடன் தாமரைக்குளம். புத்தம் புதுசாப் பூத்துச்சிரிக்கும் அல்லிகள். விஸ்தாரமாப் பரந்து விரிஞ்ச ஹால். ரெஸ்டாரண்டை நோக்கி உள்ளே நடந்தோம். அங்கேயும் அழகான பூக்கள். முதலில் பார்த்த அதே பூக்கள்தான். ஆனா வாஸ்துப்படி உருளியில் வச்ச அலங்காரம். எதிரில் பெண்டாட்டியுடன் புள்ளையார்.பெரிய நடராசர் விக்கிரகத்தின் முன்னே விரிச்சக் குட்டிக் கம்பளத்தில் கச்சேரி. ஆரவாரமில்லாம இனிமையான இசை. வயலின் & மிருதங்கம்ன்னு ரெண்டே பேர். ஒரு ஏழெட்டுப்பேர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தால் அதிகம். நாங்க நால்வராப்போய் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிச்சோம். கோபால் முதல்நாள் ஏறக்கொறைய நள்ளிரவில் டெல்லியில் இருந்து 'ரெஸ்ட் எடுத்துட்டு'த் திரும்பிவந்துட்டார். மறுநாள் இந்தியாவைவிட்டுக் கிளம்பறோம்.
அண்ணன் குடும்பத்துடன் அவுட்டிங். வெளியே எங்காவது போய் சாப்பிடலாமுன்னு திட்டம். நாங்கள் கிளம்பும் மகிழ்ச்சியைக் கொண்டாட அவுங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கணுமுல்லே:-) அப்படியே கோபாலுக்கு சென்னையைச் சுத்திக்காமிச்ச மாதிரியும் ஆச்சு! புது ஷாப்பிங் ஒன்னும் செய்யமாட்டேன்னு பேச்சுவாக்குலே சொல்லியிருந்தேன். அதனால் அவரும் ஏகப்பட்ட குஷியில் இருந்தார்.
குடும்ப நண்பர்களான இனிக்கும் முதுமையில் இருக்கும் ஜோடியைப் பார்க்கப்போனோம். வேலைக்குப் போயிருந்தார் தலைவர். வயசு ஒன்னும் அதிகமில்லை எம்பத்திமூணுதான். ஆனாலும் படு ஸ்மார்ட் ஆளு. 83 லே ரிட்டயர் ஆனேன். இப்ப எனக்கு 83 ன்னார். இப்படித்தான் ஒரு ஏர்லைன்ஸ்க்கான ஸ்பெஷல் மீட்டிங்குலே, சுய அறிமுகம் செஞ்சுக்கவேண்டி வந்தப்ப, மத்தவங்களைப்போல நான் அது செஞ்சேன், இது படிச்சேன், இங்கே வேலை செஞ்சேன்னு அளக்காம எனக்கு 60 வருட அனுபவம் ஏர்லைன்ஸ்லேன்னு ஒரே வரியில் 'பஞ்ச்' டயலாக் விட்டவர் இவர். வீக்எண்டா இருந்திருந்தா அவரைப்பிடிச்சிருக்கலாம். ஒரே ஊர்லே இருக்கறாங்கன்னாலும் இப்படி நாங்க வரும்போதுதான் அண்ணன் குடும்பமும், இவுங்க குடும்பமும் சந்திக்க வாய்க்குதாம். பாலம் போடுவது நாங்கதான்:-)போனவாரம் எடுத்தபடம்:-)
ஏழு கோர்ஸ் மீல்ஸ். ஒவ்வொன்னையும் கொண்டாந்து விளம்பி அதை எப்படிச் சாப்புடணுமுன்னும் சொல்லி வைக்கிறாங்க. எல்லாம் விதேசிகளுக்கான ஏற்பாடு. ஸ்வதேசிகளுக்குச் சிரிப்புதான். அப்பாவி முகத்தோடு நான், நமக்குப் பரிமாறின தாமரைகிட்டே சோறு எப்படித் தின்னணுமுன்னு கேட்டு வச்சேன்:-)
லைவ் ம்யூஸிக் இருக்குமிடங்களில் நேயர் விருப்பம் கேக்காட்டி....நம்ம சங்கீத 'ஞானத்தை' எப்படி வெளியே காட்டிக்கிறது? சின்னஞ்சிறுகிளியே, அலைபாயுதே ன்னு வாசிக்கச் சொல்லிக்கிட்டு இருந்தோம். இன்னும் ஏழெட்டு சொல்லுங்கன்னு அவுங்க கேட்டுருந்தால் நாம் அம்பேல்:-)
தெரிஞ்ச ஒன்னுரெண்டை வச்சே ஒரு பந்தாக் காட்டிருவொம்லெ:-) ஆனா ஒன்னு பாட்டுக்கச்சேரிகளில் நமக்குத் தெரிஞ்ச பாட்டு வந்துருச்சுன்னு வையுங்க அதை நாம் ரசிக்கும் விதமே அலாதி. கூடக் கொஞ்சம் தலையாட்டல், தொடையிலே தாளம் சேர்த்துக்கிட்டா யதேஷ்டம். ஆனா முன் வரிசையில் இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா. நாம் தாளத்தைத் தப்பாப் போட்டுப் பாடகருக்கு பிபி எகிறடப்போகுது:-)
பொன்னாக மினுக்கும் பாத்திரங்களும், வகைவகையான சாப்பாடுகளும், மண்சட்டியில் கட்டித்தயிருமா அட்டகாசம். அமைதியான சூழலில் அடக்கமான அலங்காரம் உள்ள ஹாலில் இனிய உணவு. கவனிப்பும் நல்லா இருந்துச்சு. மாவுக்கேத்தப் பணியாரமுன்னா இங்கேக் காசுக்கேத்தக் கவனிப்பு:-) எரிச்சலா இருந்த ஒரே விஷயம் அங்கே ரெஸ்டாரண்ட் பணியாட்களின் சீருடைதான். என்னவோ விசித்திரமான டிஸைன். இதுவும் ஒருவேளை விதேசிகளுக்கான விசேஷமோ என்னவோ.பீச் ரோடில் அங்கும் இங்குமா போனோம். தின்னது செரிக்கணுமே. ஆனா ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லை. காரில் போயிருக்கக்கூடாதாம். நடக்கணுமாமே.... சரி. அப்பக் கபாலியை நாலு சுத்துச்சுத்துனா ஆச்சு. மயிலைக் கச்சேரி ரோடில் இருந்து கிழக்கு மாடவீதி திரும்பும் இடத்தில் ஒரு ஜெயின் கோவில் இருக்குன்னு பார்த்துவச்சுக்கிட்டேன். ராஜஸ்தான் மார்பிள். நுணுக்கமான ஜன்னல் வேலைப்பாடுகளுடன் சுற்றுச்சுவர் அட்டகாசம். ஆனால் வாகனங்களின் புகையால் நிறம் மங்கி அழுக்காக் கிடக்கு. ஸ்வேதாம்பரர் கோயில், பெயருக்கேற்றபடி அப்பழுக்கில்லாத வெள்ளையா ஒரு காலத்தில் இருந்துருக்கலாம். ஆனா இப்போ இல்லை(-:
தி.நகரில் ஒரு ஜெயின் கோயிலைப்பத்தி (சாந்திநாத் கோவில்) சொல்லியிருந்தேனில்லை சில வருசங்கள் முந்தி. அதைவிட இது இன்னும் அழகாப் பாரம்பரியமானக் கட்டிடக்கலையோடு இருக்கு. அதைவிடப் பழசுன்னாலும் சௌக்கார்ப்பேட்டையில் இருக்கும் ஜெயின் கோவில்தான் சென்னையில் ஆகப் பழசாம். மூத்த கோவில். எல்லாம் மார்வாடிங்க, இங்கே வந்த காலத்தில் ஆரம்பிச்சது. மனுசன் எங்கே போனாலும் இஷ்ட தெய்வத்தையும் மதத்தையும் கூடவே கொண்டு போவான் என்பதில் ஐயமே இல்லை. அப்படித்தானே இந்தச் சர்ச்சுகளும் மசூதிகளும் வந்துருக்கும்?
தமிழ்நாட்டுலேயும் சமணர்கள் ஆயிரத்திநானூறு, ஐநூறு வருசங்களுக்கு முன்னேயே இருந்துருக்காங்கன்னாலும் இப்படி மார்பிள் கட்டிடங்கள் கட்டுனதாத் தெரியலை. நம்ம நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் தீர்த்தங்கரர்கள் சிலை தூணில் செதுக்கி இருக்கு. அதுவும் சமணர்கள் கோயிலாத்தான் ஆரம்பகாலத்துலே இருந்துருக்குமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களாம். ஏறக்கொறைய 85,000 சமணர்கள் தமிழ்நாட்டுலே இருக்காங்களாம். ஒரு முறை சித்தன்னவாசல் போகணும்.
போய்வந்தவங்க யாராவது இருந்தாப் பதிவு ஒன்னு போடுங்களேன்.
வருசாவருசம் மகாவீர் ஜெயந்தின்னு தேசிய விடுமுறை விடறதால் ஜெயின் மதத்தை நிறுவினவர் அவர்ன்னு நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோமே.... அது சரியான தகவல் இல்லை(யாம்) அவர் 24 வது தீர்த்தங்கராராம். இப்போதைக்கு இவர்தான் கடைசி. இந்த மதத்துலேயும் ஒரு ஆறேழு உட்பிரிவுகள் இருக்கு.(ஹூம்....எதுலேதான் இல்லை? உங்க மதத்துலே இத்தனை சாமி, இத்தனை பிரிவுகள் இருக்கான்னு கேக்கும் வெள்ளைக்கார நண்பர்களுக்கு, 'நிறைய சாமிகள் இருக்காங்க. நிறைய பிரிவுகள் இருக்கு. ஆனால் ஒரே சாமியைக் கும்பிடும் உங்களுக்கு ஏகப்பட்ட பிரிவுகள் இருக்கேன்னு எனக்கு வியப்பு'ன்னு சொல்வேன். ஒரு இடத்துலே சிலது ஒத்துவரலைன்னா இன்னொரு உட்பிரிவு ஆரம்பிப்பது மனுச இயல்பு இல்லீங்களா? அதுக்கும் நாலுபேர் வந்து சேர்ந்துட்டாங்கன்னா அது மெள்ள மெள்ள வளர்ந்துபோயிருது. )
இந்த பேச்சு எங்கியோ போய்க்கிட்டு இருக்கு பாருங்க. அது கிடக்கட்டும். சென்னையில் மட்டும் சின்னதும் பெருசுமா நாப்பது சமணக்கோயில்கள் இருக்காம். (இது தெரியாம தி.நகர் கோயில் மட்டும்தான் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்துருக்கேன் ) இந்த மயிலாப்பூர் ஜெயின் கோவில் ஸ்வேதாம்பரர், சமணர்களின் 12வது தீர்த்தங்கரர். கோயிலுக்கு முன்னாலே வண்டியை நிறுத்திட்டுக் கோபாலும், அண்ணனும் இறங்கிப்போயிருந்தாங்க. சமயம் பார்த்துக் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு. நானோ கோவிலைக் கண்ணால் படம் புடிச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தால் வண்டி முழுசும் காஃபி & பஜ்ஜி வாசனை தூக்கிக்கிட்டுப் போகுது. நரசூஸ் காஃபி(பொடி) வாங்கப்போனாங்களாம். பேஷ் பேஷ். கூடவே பக்கத்துக் கடையில் சுடச்சுடப் போட்டுக்கிட்டு இருக்கும் பஜ்ஜிகளில் நாலு வந்துருக்கு. ஹேண்ட் பேக்லே 'டயாஸ்டாப்' இருக்கும் தைரியத்தில் நானும் ஒரு விள்ளல் எடுத்துக்கிட்டேன். வடை வாசம் வேற பஜ்ஜி வாசம் வேற, என்னதான் ஒரே எண்ணெயில் சுட்டாலும்!!கபாலீஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்துக்கு முன் காரை நிறுத்த இடம் கிடைச்சது. இன்னும் அவ்வளவாக் கூட்டம் வரலை. நுழைஞ்சதும் நேர் எதிரா இருக்கும் புள்ளையாருக்கு முதல் வணக்கம். மூஞ்சூரு நல்லா பெருசா பெருச்சாளி சைஸுலே இருக்கு. வலதுபக்கம் சுத்துனதும் முருகன் சந்நிதி. அவருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு கற்பகாம்பாளைத் தரிசிக்கப்போனோம். தெற்கே பார்த்தபடி உண்மையான ஆள் சைஸுலே அம்மன் சிலை. நம்ம காந்திமதி போல! (அம்மனுக்குச் சாத்திய பட்டுப்புடவைகளை இங்கே ஒரு விலைக்கு வாங்கிக்கலாமாம். சில நாட்களில் அந்தப் புடவைகளைத் துவைச்சுக் காயப்போட்டுருப்பதையும் பார்த்துருக்கேன்.) அம்மன் சந்நிதியை வலம் வரலாம். நல்ல விஸ்தாரமா இருக்கு. வெளியே வந்தவுடன் அடுத்து லிங்க ரூபத்தில் நம்ம கபாலி. மேற்கு பார்த்த சந்நிதி. இங்கே வலம் எல்லாம் வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் அதுக்கு வழி இருக்கான்னுக்கூடப் பார்த்ததில்லை.
அப்புறம் கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவரும்போது பசு மடம், தலவிருட்சம்(புன்னை) எல்லாம் பார்த்தோம். மாடு பாப்பாக்கள் நாலைஞ்சு இருக்கு.நல்ல சுத்தமா ஆரோக்கியமா இருந்தாங்க. அதை வச்சுத்தான் பராமரிப்பைப் புரிஞ்சுக்க முடியும். இடதுமூலையில் சனீஸ்வரர் சந்நிதி. அதை வலம் வந்து வலப்பக்கமாவே வந்தால் நமக்கு வலதுபக்கம் நவகிரக சந்நிதிகள். அதையும் சுத்திட்டு வலத்தைத் தொடர்ந்தால் முதல்லே பார்த்த புள்ளையார் வந்துருவார்.மேற்கு கோபுரவாசலுக்கு முன்புறம் திருக்குளம் இருக்கு. பெரிய குளம்தான் நடுவில் நீராழி மண்டபம் ஜோர். அறுபத்திமூவர் திருவிழாவின்போதும்(பங்குனி மாசம்) தெப்பத் திருவிழாவின்போதும்(தைப்பூசம்) அலங்காரம் ரொம்பவே நல்லா இருக்குமாம். எல்லாம் போட்டோக்களில்தான் பார்த்துருக்கேன். ரொம்பவே சிம்பிள் & ஸ்வீட்டான தேர். அழகாவும் இருக்கு. அந்த 63 பேரையும் வீதிக்குக் கொண்டுவந்து வலம்வர வச்சுருவாங்க. அதனால் மயிலையே கயிலையாட்டம் இருக்குமாம்.
சமீபத்தில் ஒரு நாவல் வாங்கினேன்.பாலகுமாரன். புருஷவதம். பெயரே அப்படிச் சட்னு கவ்வி இழுத்துருச்சு. இன்னும் என்னென்ன வதைகள் பாக்கி இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு. அதுலே கபாலி கோயில் மதில் சுவரைக் கடல் அலை வந்து மோதாம இருக்க, மதிலுக்கருகில் பாறைகள் போட்டு வச்சுருந்தாங்கன்னு படிச்சதும் லேசான குழப்பம். கோவில் சரித்திரம் தெரியவந்தப்ப எல்லாமே க்ளியர் ஆயிருச்சு.
இப்ப இருக்கும் கோவில் ஒரு முன்னூறு வருசப் பழசுதான் அதுக்கு முந்தி கபாலி இருந்த இடம் சாந்தோம் சர்ச் இருக்கு பாருங்க அந்த இடமாம். அங்கே இருந்த கோவிலை எதுக்கு இடிச்சாங்கன்னு தெரியலை. சர்ச் கட்டத்தான் இடிச்சாங்கன்னு ஒரு இடத்துலே இருக்கு. இன்னும் சுவையான குறிப்புகள்கூட இருக்கு. படிச்சுத்தான் பாருங்களேன்.
இதைப் படிச்சதும் நம்ம தாஜ்மஹாலைப் பத்தி வந்துக்கிட்டு இருந்த செய்திகள்கூட உண்மையா இருக்குமோன்னு ஒரு சம்சயம். எப்படியோ பழைய கோவில் இருந்துருந்தா அதுக்கே வயசு ஆயிரத்துநூறு தாண்டி இருக்கும்! கோயிலுக்குள்ள ஒரு விசேஷம் என்னன்னா ஸ்ரீ ராமர் வழிபட்டுருக்காராம். எப்போ? சீதையைத் தேடிக்கிட்டு வந்தப்பயா? அது ஆச்சே.....ரெண்டு அவதார காலத்துக்கு முன்பு!!!
சரி. நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். கோவிலை விட்டு வெளியே மாடவீதியில் தேர்முட்டி அருகே வரும்போது, ஒரு சின்னக் கூட்டம் தெருவை அடைச்சாப்புலெ. அப்பத்தான் அண்ணன் ஒரு உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தக் கூட்டம் பஜ்ஜிக்காக வெயிட்டிங்ஸ். அங்கேதான் மயிலையில் தலை சிறந்த பஜ்ஜி கிடைக்குமாம்.வேணாம் விஷப்பரிட்சைன்னு அவரை அடக்கவேண்டியதாப் போச்சு. தங்கையின் கடமையைச் சரிவரச் செஞ்சேன்:-)
தொடரும்.......:-)
Sunday, July 05, 2009
சாப்புடச் சொல்லித் தர்றாய்ங்கப்பா!!..........(2009 பயணம் : பகுதி 40)
Posted by
துளசி கோபால்
at
7/05/2009 02:40:00 PM
25
comments
Labels: அனுபவம், கபாலி, தக்ஷின், ஜெயின் கோவில்
Friday, July 03, 2009
முறுக்கு மீசையும் மசால் வடையும்!!..........(2009 பயணம் : பகுதி 39)
என்ன விசேஷம் இவ்வளவு கூட்டம் மேயுது? அதுவும் கரை வேட்டிகளா, இந்த நேரத்தில்? பீச் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். எல்லாம் உள்ளூர்தான். சிடி செண்டர்ன்னு ஒன்னு இருக்காமே. அதைப் பார்க்காம இருந்தால் என் ஜென்மம் சாபல்யமடைவது எப்படி?
அம்மா உண்ணாவிரதம் (நாலு மணி நேரத்துக்கும் கூடுதலாக) இருக்காங்களாம். பீச் ரோடு முழுக்க பேனர்களும் அடிபொடிகளின் கூட்டங்களும் 'ஜெ ஜெ' ன்னு இருக்கு. இங்கே அங்கேன்னு 'காவல்' கை காமிச்சதுலே நாங்க பாசாதிக்குப் பக்கம் வந்துருந்தோம். கண்டுக்கிட்டுப் போயிறலாமுன்னு கோயிலுக்குள்ளே நுழைஞ்சோம். விசேஷ சீட்டெல்லாம் வேணாமுன்னு அண்ணி பரபரன்னு பொதுவழியில் நுழைஞ்சுட்டாங்க. நானும் காசு கொடுக்காமப் பார்த்தேன்னு கேஆரெஸ் கிட்டேச் சொல்லிக்கலாமுன்னு பின் தொடர்ந்தேன். சாமி முன் திரை போட்டுப் உச்சிக் கால பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. வளைஞ்சு போகும் கம்பி வரிசைகளுக்கிடையில் காத்து நிக்கறோம்.
திடீர்ன்னு நமக்கு முன்னால் இருந்த நாலைஞ்சுபேர் வரிசையை விட்டு விலகி வெளியே போனதால் நமக்குக் கொஞ்சம் முன்னேறும் வாய்ப்பு கிடைச்சது. சரியாப் படிக்கட்டில் இருக்கோம். இனி வலது பக்கம் இருக்கும் ராமர், ரங்கநாதன் சன்னிதிகளைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால்தான் மீசைக்காரனைத் தரிசிக்க முடியும்.
தரிசனத்துக்குக் காத்திருக்கும்போது மனசுக்குள் ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தாலும் கண் பரபரன்னு அலையுது. திருடர்கள் இருக்காங்களாம் கவனமா இருங்கோன்னு எழுதிப்போட்டுருக்கு அங்கங்கே. பட்டர்களைச் சொல்லலைன்னு நம்புவோம். உள்ளூர் வாசிகள் சில வயசான பெண்கள் கண்களில் வெறுமையோடு காத்திருப்பதையும் பார்த்தேன். அவரவருக்கு அவரவர் கவலை. ஆனாலும் இப்படிப் புகழ்பெற்ற கோவில்களுக்குப் பக்கத்திலே வசிக்கும் உள்ளூர்க்காரர்களை நினைச்சால் எனக்குப் பாவமா இருக்கும். அக்கடான்னு ஒரு நாளாவது ஆற அமர தரிசனம் கிடைக்குமோ என்னவோ? தினம்தினம் டூரிஸ்ட் கூட்டத்தோடு முட்டிமோதி....... ச்சீன்னு ஆகிடாதோ?
நமக்கிடதுபுறத்தில் ஆஞ்சநேயரும், ஆழ்வார்கள் வரிசையும். இந்த பதினொன்னு ப்ளஸ் ஒன்னு ஃபார்முலாவைப் பத்தி அண்ணனிடமும் புலம்புனதைக்கேட்டு நாங்கள் திருவிடந்தை போனப்ப அங்கிருந்த பட்டரிடம் விசாரித்தார். ஆண்டாளுக்கு எப்பவும் தனிச் சந்நிதின்னு அவர் சொன்னாலும் விடாம, அந்த பன்னிரெண்டில் ஆண்டாளும் ஒன்னான்னு கேட்டு, ஆமாம்னு பதில் வந்ததும்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு. நாம் ஒரு பொய் சொல்லிட்டோமுன்னு நாளைய சரித்திரத்தில் வந்துறக்கூடாது பாருங்க.:-)
சரேல்னு திரை விலகியது. முட்டைக் கண்ணும் முறுக்கிவிட்ட முரட்டு மீசையுமா கண்ணுக்கு நேராய் மிரட்டும் பார்த்தசாரதி. பளபளன்னு புதுசா பெயிண்ட் அடிச்ச மீசையோ? மின்னுதே இப்படி! நாங்க நின்ன இடம் சரியான இடமாப்போச்சுன்னு நினைக்க நினைக்க, மனசுலே ஒரு பூரிப்பு. வரிசை மெதுவா நகர்ந்துச்சு. நம்ம ராமர் கூட்டத்தையும், ரங்காவையும் சேவிச்சுக்கிட்டு மூலவரை நோக்கிப் போனோம். தீர்த்தம் கிடைச்சது. எனக்கொரு தேங்காய் மூடியும் துளசியும்.
'தட்டுலே எவ்வளவு போட்டே?' அண்ணியின் மிரட்டல்:-)
"பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்..............."
"அதானே பார்த்தேன்"
கோயிலை வலம் வந்தோம். பழமையான கோவில் 1200 வருசத்துக்கு முந்தி எப்பவோ கட்டியிருக்காங்க. அப்பெல்லாம் இங்கே துளசிவனம்தான். ப்ருந்தாரண்ய ஸ்தலமாம். ஸ்வாமி, சாமியா நிக்காம ஆசாமியா நிக்கும் கோவில் இது. நம்மளில் ஒருத்தர் என்ற சுவாதீனம் வந்துரும் இவர் முகம் பார்க்கும்போது. எட்டடி உயரம். சங்கு சக்கரம் எல்லாம் மிஸ்ஸிங். பாரதப்போரில் பார்த்தனுக்குச் சாரத்யம் செஞ்ச கையோட இங்கே வந்துட்டார் எம் பெருமாள். ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கக்கூட நேரமில்லை(-: அந்த 108 இல் இதுவும் ஒன்னுன்னாலும் பெருசாப் பிரமாண்டமா இல்லாமச் சுமாரான அளவுலேதான் இருக்கு. ஒருவேளைக் கோவிலைச் சுத்தி நெருக்கமா வீடுகள் இருப்பதால் அப்படித் தோணுச்சா? அல்லிக்குளம் எதுத்தாப்புலே அந்தப் பக்கம் கம்பி வேலியுடன். ரெண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் கோவிலின் முன்வாசல் மண்டபம். இதுக்கும் கம்பிக் கட்டங்கள் போட்டுவச்சுருக்கு. சும்மா விட்டால் சோம்பேறிகள் கூட்டம் வந்துருதாம்.
மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்ப வேலைகள். அசோகவனத்தில் மரத்தடியில் அமர்ந்துள்ள சீதை, இன்னொரு தூணில் வெண்ணெயை ஈஷிண்டிருக்கும் ஆஞ்ச நேயர் இப்படி விதம் விதமாய். நம்ம ஜனங்களும் கவனமாப் பார்த்துத் தனக்கு வேண்டிவர்களைக் கொண்டாடிக்குவாங்க.
இதுவரை கணக்கில்லாத முறை போயாச்சு. ஆனாலும் இந்த வேங்கட கிருஷ்ணனைத்தவிர ருக்மிணியையோ பலராமரையோ பார்க்கவே இல்லை. கோவில் காலண்டரில் பார்த்ததோடு சரி. ஆஜானுபாகுவா நிற்பவரைக் கவனிப்பதிலேயே அங்கே நிக்கும் ரெண்டு நிமிஷம் போயிருது. சதா ஜனக்கூட்டம்தான். முட்டிமோதிப் பார்க்கத் தோணறதில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டுமுன்னு விட்டுவச்சுருக்கேன். அனிருத்தனும் ப்ரத்யும்னனும்கூட இருக்காங்களாம் உள்ளே. இருக்கட்டுமே.......யார் வேணாமுன்னா?
தாயார் பெயர் வேதவல்லி. வழக்கம்போல் வலப்புறம் தனிச் சந்நிதியில். இடதுபக்கம் தனிச் சந்நிதி நம்ம ஆண்டாளம்மாவுக்கு. மூலவர் இருக்கும் கருவறைக்கு நேராப் பின்பக்கத்தில் நரசிம்மர். உக்ர நரசிம்ஹமாம். அழகான சிங்கர்..அங்கேயும் தீர்த்தம் சடாரி எல்லாம் கிடைச்சது இன்னிக்கு. நேர் எதிரே இன்னொரு வாசல். யானை இருக்கான்னு எட்டிப் பார்த்தேன். ஊஹூம்(-:
யானைக்கு அருளியவராக கஜேந்திர வரதராஜர் தனிச் சந்நிதியில் இருக்கார். இந்தக் கோவில் யானைதான் நம்ம முண்டாசுவைத் தூக்கி வீசியதாம். அந்த யானைக்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கக்கூடாதா? ஹூம்.... அது ஆச்சு எம்பளத்தெட்டு வருஷங்கள் முந்தி.
வைணவக் கோயில்களுக்குரிய எல்லாம் இங்கேயும் அழகா அம்சமா இருக்கு. மார்கழி மாசம் பூராவும் மூலவர் எண்ணெய்க் காப்பில் இருப்பார். அப்போ அவரைத் தரிசிக்க முடியாது. அதானே நியாயமும், இல்லையா? ஆம்பளை எண்ணெய் தேய்ச்சிண்டு நின்னுருந்தால் எட்டிப் பார்ப்பதா?....ச்சீச்சீ......
மடப்பள்ளி அருகே பிரஸாதக் கடை. புளியோதரையும், மைசூர் பாகும், அதிரசமும் வாங்கினோம். என்னதான் இந்தப் புளியோதரையைப் பற்றி 'தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ' தாளிச்சிருந்தாலும் திங்கத் தைரியம் வரலை எனக்கு. அண்ணனும் அண்ணியும், 'பேஷ் பேஷ்'னு பாராட்டுனாங்க. ஆனா எனெக்கென்னமோ அந்த அதிரஸம் சூப்பரா இருந்துச்சு. இப்பத்தான் செஞ்சு வந்து, இன்னும் இளம்சூட்டோடு வாயில் போட்டதும் கரைஞ்சது. இன்னும் வாங்கிக்கோன்னு அண்ணன் சொல்லியும், பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்கத் தவறினேன். ஞானம் வந்து ரொம்ப நாளாச்சு. 'ஆசையே 'துன்பத்திற்குக்' காரணம்.
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் பேயாழ்வார் என்று மூவரால் மங்களசாஸனம் செய்யப்பட்டத் திருக்கோவில் இது. பிரிட்டிஷ்காரன் முதல்முதலில் சென்னைப்பட்டினத்துக்கு வந்து, அப்போதிருந்த நவாபிடம் லீஸ் எடுத்து வாங்கின குக்கிராமம் இந்தத் திருவல்லிக்கேணிதானாம். கோவிலைப் பார்த்து என்ன நினைச்சானோ!!!
பதிவர் சந்திப்பு நடந்த அதே ஃபுட் கோர்ட் ஆஃப் சிட்டி செண்டர். சுத்திப் பார்த்தால் சாப்பாடு அயிட்டங்கள் ஒன்னும் சரிப்படலை. வந்ததுக்குக் கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யலாமுன்னு பலது பார்த்துட்டு, மகளுக்கு ஒரு பரிசுப் பொருள் வாங்கினேன். ஒரு இடத்தில் புர்க்கா வித்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னு வாங்கிக்கணுமுன்னு ஆசை. ஆயிரத்து ஐநூறுலே இருந்து அஞ்சாயிரம்வரை வகைவகையா இருக்காம். விசாரிச்சதோடு சரி.
வம்பு வேணாமுன்னு சரவணபவன் (ராதாகிருஷ்ணன் சாலை) போய்ப் பகலுணவை மூணு மணிக்கு முடிச்சுட்டு வெளியே வரும்போது வெளியே வாசலில் சமைக்கும் அறிகுறிகள். என்னன்னு பார்த்தால் வடை(யாம்). சாயங்காலம் டிஃபனுக்கு ரெடியாகுதாம். அசுவாரசியமா என்ன வடைன்னு கேட்டுவச்சேன். பாவி..... மசால்வடைன்னு பதில் வருது. பத்து நிமிஷம் காத்திருந்து, சுடச்சுடச் செஞ்சு கொடுத்ததை பார்ஸல் வாங்கிக்கிட்டு வீடுவந்தோம்.
போன ஜென்மத்துலே எலியா இருந்திருப்பேனோ? வடை வாசம் மூக்கைத் துளைக்குதே:-)
தொடரும்.....:-)
பி.கு: கெமெராவின் சார்ஜர் காணாமப்போயிருச்சுன்னு தேடல்.அதனால் கெமெராவைக் கொண்டு போகலை. படங்கள் மிஸ்ஸிங் ஆன பதிவு இது(-:
சுட்டவை ரெண்டு மட்டுமே:-)
Posted by
துளசி கோபால்
at
7/03/2009 04:49:00 AM
35
comments
Labels: அனுபவம், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி
Wednesday, July 01, 2009
தினம் ஒரு புதுப்பொண்ணைக் கட்டுனாக் கசக்குதா??.........(2009 பயணம் : பகுதி 38)
"இந்த மாலையைக் கழுத்துலே போட்டுண்ட்டுக் கோயிலை ஒம்போது தடவை சுத்தி வாங்கோ."
"எல்லோருமா?"
"இல்லை. நீங்க மட்டும் தான்"
அதானே..... எல்லோரும் சுத்துனா,கூட வந்த எல்லோருக்கும் இன்னொரு கல்யாணம் ஆயிருச்சுன்னா? ஒன்னை வச்சேப் படைக்கமுடியலைன்னு அவனவன் அழறான்:-)
" சுத்திட்டு இங்கே வரணுமா சாமி?"
" மாலையைக் கொண்டுபோய் வீட்டுலே பூஜை ரூமில் மாட்டிவையுங்க. கல்யாணம் ஆனவுடன் திரும்ப இந்த மாலையை இங்கே கொண்டு வாங்க"நித்தியக் கல்யாணப்பெருமாள் சந்நிதியில் நிக்கிறோம். திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் ஆலயம். அந்த 108 இல் இதுவும் ஒன்னு. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கே பெருமாளுக்கு ரெண்டு 'கதைகள்' இருக்கு. சொல்றேன், சொன்னாக் கேட்டுக்கணும். சாமி விஷயம், ஆராயக்கூடாதுன்னாலும் மனசு இருக்கே.....குரங்கு. சொன்ன பேச்சைக் கேக்குதா?
முதல் கதையைப் பார்க்கலாம். பலி என்ற பெயரில் அசுர அரசன் ஒருத்தர் இருந்தார். (மகாபலி புரம்? இந்தப் பக்கம்தான் ஆண்டுருப்பார் போல) ரொம்ப நல்லவர், நல்லாட்சி கொடுத்துருக்கார். அவருடைய நண்பர்களான இன்னும் சில அரக்கர்கள் மாலி, சுமாலி, மால்யவன் என்ற மூவரும் தேவர்களோடு போர் புரிய இவரோட உதவியைக் கேட்டுருக்காங்க. என்ன போர் வேண்டிக்கிடக்கு? வெறும் அக்கப்போர்ன்னு சலிச்சுக்காதீங்க. நண்பர்கள் கூட்டமுன்னு ஒன்னு இருக்கே அவுங்களாலே உதவியும் வரும் உபத்திரவமும் வரும். பாவம் பலிச் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைச்சது ரெண்டாவது.. 'சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டே' ன்னு மலையாளப்பழமொழி ஒன்னு நினைவுக்கு வருது.முதலில் மனசாட்சிப்படி நடந்துக்கணுமுன்னு மாட்டேன்னுதான் சொல்லி இருக்கார். ஆனால் நண்பர்கள் கேட்டாங்களா? பிடுங்கி எடுத்துருக்காங்க போல. இவருக்குக் கெட்டகாலம். துஷ்டனைக்கண்டால் தூர விலகி இருக்கவேணாமோ! ஊஹூம்.....சண்டையில் அரக்கர்கள் ஜெயிச்சாங்கதான். ஆனால் தேவர்களைக் கொன்ற (?? அமிர்தம் உண்ண வகையில்லாத ஏழைத் தேவர்கள்) பாவம் பலியைப் பீடிச்சது. பாவம் போக்கிக்க பலி, தவம் செஞ்சார். மகா விஷ்ணு, போயிட்டுப்போறது போன்னு அவருக்குத் தரிசனம் தந்து விமோசனம் கொடுத்தார். பன்றியுடன் சேர்ந்த கன்று போல் கெட்டவங்களுடன் சேர்ந்துக் கெட்டுப்போயிட்டியேடா பாவி. உனக்கு பன்றிதான் லாயக்கு. அதனால் பன்றியாகவே தோன்றினால் ஆச்சுன்னு வராக ரூபத்தில் காட்சி கொடுத்துருக்கார் போல! அந்த இடம்தான் இது.
இவர் எப்படி நித்தியக் கல்யாணப்பெருமாள் ஆனாராம்?
காலவர்னு ஒரு ரிஷி இருந்துருக்கார். இவரோட தர்மபத்தினி குனி என்ற பெண்.
இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமான கதை இப்படிப்போகுது.
அன்மேரீட் நாட் அலவுடு இன் சொர்க்க(மா)ம். இது தெரியாம குனி என்ற பெயருள்ள ஒரு பொண்ணு, கலியாணம் கட்டுமுன்பே சொர்க்கத்துக்குப் போகணுமுன்னு தவமிருந்தாங்க. 'கேட்'க்கிட்டேயே நாரதர் சொல்லிட்டார் உள்ளே வரக்கூடாதுன்னு. திடீர் மாப்பிள்ளைக்கு எங்கே போகன்னு தேடுனதில்தான் திடீர் மாப்பிள்ளையா இந்த ரிஷி, காலவர் கிடைச்சார்.
இவுங்களுக்கு 360 குழந்தைகள் பிறந்தாங்க. அத்தனையும் பொண்ணு. காலவருக்குத் தெரியலை அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு. இவர்தான் ஏற்கெனவே ஆண்டியாச்சே. பிந்தாஸா இருந்துட்டார். பொண்ணுங்களைக் கல்யாணம் கட்டி அனுப்பலாமுன்னா.......வசதி இல்லை. கடவுள் கொடுத்தார். ஆகையால் கடவுளே பொறுப்பெடுத்துக்கிடணுமுன்னு வேண்டிக்கிட்டாங்க. நம்ம மகாவிஷ்ணுவுக்கு யாரும் அழுது வேண்டுனாப் பிடிக்காது. மனசு அப்பfடியே இளகிரும்.
வாலிபனா வேஷம்(!) போட்டுக்கிட்டு காலவர் வீட்டுக்கு வந்தார். மூத்தமகளைக் கட்டிக்கிறேன்னு சொல்லி, உடனடியாக் கல்யாணமும் பண்ணிக்கிட்டார். கட்டுன கையோடக் கோயிலுக்குப் போனாங்க பொண்ணும் மாப்பிள்ளையும். அம்புட்டுதான்......மந்திரமோ மாயமோன்னு ரெண்டுபேரும் மறைஞ்சுட்டாங்க.
மறுநாள் ரெண்டாவது பொண்ணையும் கட்டறேன்னு போயிருக்கார். இப்பவும் நேத்துக் கதைபோலவே நடந்துருக்கு. மூணாம் நாள் மூணாவது பொண்ணு. இப்படியே 360 பொண்ணுங்களையும் அசராமக் கட்டிக்கிட்டார். எவ்வளோ கிடைத்தாலும் தாங்குவேன்னு....அம்புட்டு நல்லவர். அந்த அப்பா காலவரைப் பாருங்க. என்னடா....பொண்ணைக் காணோமேன்னு ஒரு பயம் வேணாம். பெத்ததுகளைக் கரையேத்துனாப் போதுமுன்னு இப்படியாப் பண்ணறது? ஊர் சனங்களை என்னான்னு சொல்றது? 'யோவ். எங்க பேட்டைப் பொண்ணு எங்கேய்யா?'ன்னு ஆரம்பத்துலேயே ஆட்டி வச்சுருக்கவேணாமா? தினம் கல்யாண விருந்துலே மொக்கிக்கிட்டு இருந்துருப்பாங்களோ...
மொத்தக் கூட்டத்தையும் ஏறக்கட்டுனதும்தான் பொண்ணுங்களைக் காணோமேன்னு கோயில் கருவறையில் போய்த் தேடுனார் காலவர். எல்லாப் பெண்களும் லக்ஷ்மி ரூபத்தில் ஜொலிக்க, அனைவரையும் ஒன்னாச் சேர்த்து ஒரே லக்ஷ்மியா ஆக்கித் தன் இடது மடியில் வச்சுக்கிட்டாராம் ஸ்ரீ விஷ்ணு. லக்ஷ்மியாகிய 'திரு' வுக்கு இடம் கொடுத்ததால் திருவிடந்தைன்னு பெயர் வந்த காரணம் சொல்லப்படுகிறது.
கதையின் இன்னொரு வர்ஷன் என்னன்னா.........
முதல் பொண்ணுக்குப் பைசா செலவில்லாம மாப்பிள்ளை வீடு தேடிவந்ததும் காலவருக்கு ரொம்ப சந்தோஷம்.இன்னும் 359 இருக்கே. இவுங்களுக்கெல்லாம் இப்படி அதிர்ஷ்டம் கிடைக்குமா? யாராலே மெனெக்கெட்டு அலைஞ்சு மாப்பிள்ளை தேட முடியுது? பேசாம இந்த மாப்பிள்ளைக்கே எல்லாரையும் கட்டிக்கொடுத்துடலாமுன்னு மாப்பிள்ளைகிட்டே மன்றாடி இருக்கார். ஒன்னு வாங்கினால் மீதி இருக்கும் எல்லாமே இலவசம்.
விஷ்ணு பார்த்தார். ஒரே நாளில் முன்னூத்து அறுவதுமுறைத் தாலி கட்டுனா , கை என்னத்துக்கு ஆகும்? எனக்கு ஆட்சேபனையே இல்லை. ஆனால்.... ஒரு நாளைக்கு ஒரு கல்யாணமுன்னு வச்சுக்கலாம். புதுமாப்பிள்ளையாவே தினமும் இருந்தா என்னக் குறைஞ்சுடப்போகுது?
காம்ப்ரமைஸ் ஆச்சு. எல்லாம் முடிஞ்சபின் எல்லாரையும் சேர்த்து ஒரு அம்சமா ஆக்கிட்டார். அதானே 360 புடவை, அதுக்கு ஏத்த ஆக்ஸெஸரீஸ் வாங்கிக் கட்டுப்படி ஆகுமோ!!!
அப்பெல்லாம் வருசத்துக்கு 360 நாள்தான் போல. தெரிஞ்சுருந்தா இன்னும் அஞ்சு சேர்த்துப் பெத்துப்போட்டிருக்கலாம். இந்தக் காலவர் & குனி செட்.
தலபுராணங்களைத் தெரிஞ்சுக்கிட்டால் இப்படித்தான் சமயத்தில் தலை சுத்தறதுபோல் இருக்கும். இதையெல்லாம் ரொம்பக் கண்டுக்கக்கூடாது. கல்யாணமாகலையேன்னு ஏங்கும் பலருக்கு, இந்தக் கோவில் ஒருவித ஆசுவாசமும் ஆறுதலும் தருது என்பது மட்டும் சத்தியமான உண்மை.
பெருமாளுக்குக் கல்யாணம் ஆனதுபோல நமக்கும் ஒரு நாள் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கும்வரைக்கும் கலியாணத்துக்கு நிக்கும் இளைஞர் இளைஞிகள் பிரார்த்தனைக்கு வந்துக்கிட்டுத்தான் இருப்பாங்க. நாங்க அங்கே இருந்தக் கொஞ்ச நேரத்துலேயே மூணு பொண்களும், ரெண்டு பையர்களுமாக் கைகளில் மாலையுடன் வந்து, பட்டர் கடவுள் காலடியில் வச்சுப் பூஜிச்சுத் திரும்பக் கொடுத்த மாலையைக் கழுத்தில் அணிஞ்சுக் கோயிலைச் சுத்திவந்தாங்க. அதிலே ரெண்டு பொண்கள் ஒன்பது சுற்றில் எந்தச் சுற்றிலோ சிநேகமாகிப் பேசிக்கிட்டேச் சுத்தறதையும் கவனிச்சேன்.அதேபோல கலியாணம் முடிச்ச ஜோடிகள் ரெண்டு செட் மாலையும் கழுத்துமாச் சுவாமி தரிசனத்துக்கும் வந்ததையும் பார்த்தேன்.
நம்புனாத்தான் சாமி. நம்பிக்கைதான் வாழ்க்கை.
நம்ம மீனா கூட இங்கே கோயில் சுத்துனதாக் கேள்வி. இப்பப் பாருங்க இந்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது.கோயில் ரொம்பப் பழசுதான். ஒரு ஆயிரத்தைஞ்ஞூறு வருசங்கள் ஆகி இருக்கலாம். உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. வெளியே ஒரு மண்டபத்தூண்களில் தசாவதாரமும் செதுக்கி வச்சுருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு. இங்கிருந்து ஒரு 18 கிலோமீட்டர் போனா மகாபலிபுரம் வந்துரும்.
இங்கே எப்பப் போனேன்? அதான் தக்ஷிண சித்ரா விலிருந்து கிளம்பிப் பகல் சாப்பாட்டுக்கு அறுசுவை அரசுக்குப் போனோம். கிட்டத்தட்ட மூணுமணியாயிருச்சு. டிஃபனும் ரெடியாகலை. ரெண்டுங்கெட்டான் வேளையாப் போச்சு. இருக்கறதைக் கொடுங்கன்னு வாங்கினதுதான். சிலாகிக்கரமாதிரி ஒன்னும் இல்லை. ஆனாலும் நம்ம பசி ருசியும் அறியுதே:-)
சாப்பாடு ஆனதும்தான் இவ்வளவு தூரம் வந்தோமே கோயிலுக்கும் போயிட்டுப்போகலாமுன்னு அண்ணன் சொன்னார். நாங்க போகவும் கோயில் திறக்கவும் சரியா இருந்துச்சு. திரை போட்டு உள்ளே பூஜை நடந்துக்கிட்டு இருக்கும்போது, காத்திருக்கும் பொறுமை இல்லாத இளைஞர் ஒருத்தர் கற்பூர வில்லைகளைப் படிக்கருகில் தானாய் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார். சமீபகாலமாய்க் கோவில்களில் கற்பூரத்துக்குத் தடைன்னு நான் கேள்விப்பட்டுருந்தேன்.
நந்தி வாங்கிக்கலாம்எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். கேள்விப்பட்டது மெய்யா இல்லை பொய்யா?
தொடரும்.......:-)
Posted by
துளசி கோபால்
at
7/01/2009 01:40:00 AM
41
comments
Labels: அனுபவம், திருவிடந்தை, நித்திய கல்யாணப்பெருமாள்
