Sunday, August 05, 2007

எங்கூரு 'சங்கமம்'

ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. வருசாவருசம் நடத்துறாங்கன்னு சொன்னாலும், ஒரு வருசம் இங்கே 'கிறைஸ்ட்சர்ச்' லேன்னா இன்னொரு வருஷம் வெல்லிங்டன்.


ஊர் உலகத்துலெ இருந்தெல்லாம் கலைஞர்கள் இதுலே கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும்,இல்லேன்னா ச்சும்மா வேடிக்கை பார்க்கவுமுன்னு கூடறதுதான். பெரிய புகழ்பெற்றவர் முதல் சாதாரண பஸ்கர்கள் வரை கலந்துகட்டி ஜாம் ஜாமுன்னு இருக்கும். இந்த வருசம் நம்ம சார்லி சாப்ளினோட பேத்தி வந்துருக்காஹ.





கலைவிழான்னா ஒரு 'தீம்' வச்சுக்கணுமுல்லே? இந்த விழாவுக்கு 'ஸ்நோ ஆர்கிட்'. துணியிலே செஞ்சு அதுக்குள்ளே காத்தை ரொப்பி, ஒம்போது மீட்டர் உயரத்துக்கு ஒரு மரமா நிறுத்தி வச்சுருக்காங்க. காத்தூதும் மிசினுக்கு

ஆ(ஃப்)பு வைக்கும் நாள் ஆகஸ்ட் 12 நடு இரவு. இந்த வருசம் விழா (நேத்து ) ஜூலை 26 ஆரம்பம். 18 நாள் கொண்டாட்டம். ஆட்டம், பாட்டம்,நாடகம், நடனமுனு அங்கங்கே வெவ்வேற இடத்துலே என்னென்னவோ நடக்குது.



எங்க ஊர் கதீட்ரல் வாசலில் இருக்கும் நகரச் சதுக்கத்தில் மல்டிமீடியா ஏற்பாடு செஞ்சு,ஒரு ஷோ நடந்துக்கிட்டு இருக்கு. காப்டன் குக் வந்தது முதல் என்னென்னா ஆச்சுன்னு ஒலியுமொளியுமா விளக்குறாங்க. 'விளக்கு'ன்னதும் ஞாபகம் வருது, நம்ம தேவாலயமுகப்பில் சிகப்பு வட்டத்துலே ஒளிக் 'கோலம்' போட்டுக்கிட்டு இருக்கு. ஒரு 25 மீட்டர் தூரத்துலே இருந்து ஒளிக்கதிர்கள் பாய்ஞ்சு வருது. இதுக்குப்பேர் 'விண்ட்டர் ரோஸ்'

'குக்' காட்சி காமிக்கும் விநோத மேடையைச் சுத்திக் குடைகளால் ஒரு அலங்காரம்.





சதுக்கத்துலே இன்னொரு பக்கம் டெல்ஸ்ட்ரா கம்பெனி ஸ்பான்ஸார் செஞ்ச 'டேலண்ட் ஷோ'கூடாரம். முப்பத்தி அஞ்சு வெள்ளி டிக்கெட். கூடாரத்தை ரெண்டு பகுதியாப் பிரிச்சு வச்சுருக்காங்க, மேடைஉள்ள பகுதி சின்னதாவும், மக்கள்ஸ் 'தாகம்'தீர்க்கும் பகுதி பெருசாவும்! கலைஞர்களுக்கு மட்டுமில்லை,கலையை ரசிக்கிறவங்களுக்கும் ஒரு மயக்கம் வேண்டித்தான் இருக்கோ?


சதுக்கத்தின் ஒரு பக்கம் UFO டிஸைன்னு ஒரு நீளவட்டமா செஞ்சு கம்பியிலே நிறுத்திவச்சுருக்கு.எனக்கென்னவோ இதைப் பார்த்தா இங்கத்து 'ரக்பி' பந்துதான் ஞாபகம் வருது. ஆனா இந்த டிஸைன் & ஷேப்லே இதுவரை உலகம் முழுக்க 96 மட்டும்தான் கட்டி இருக்காங்களாம். அப்ப இது தொன்னுத்தாறுலே ஒண்ணு! பின்லாந்துக்காரர் Matti Suuronen 1968லே முதல்முதலா இதை வடிவமைச்சாராம்.



இன்னொரு பக்கம் நியூஸிகளின் கனவான 'கால் ஏக்கர்', இப்ப எப்படி கனவாவே போய்க்கிட்டு இருக்குன்னு சொல்லுது. இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்திறங்கிய மக்கள் அந்தக் காலத்துலே கால் ஏக்கர் நிலம், அதுலே ஒரு வீடு என்னும் கனவோடு வந்தவங்களாம். காணி நிலம் வேணுமுன்னு பாரதி அவுங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்லி இருக்கார்! ஆமாம், கால் ஏக்கர்ன்னா எத்தனை சதுர மீட்டர்?



நம்ம தேவாலயத்தைத் தொட்டுக்கிட்டுப் புல்வெளியில் ஒரு பெரிய திரை. நீரும் நெருப்பும் படம் காமிக்கப் போறாங்களாம்,( Fire,water and film) அடுத்தவாரம். இப்ப அங்கே மாலை 6 முதல் மணிக்கு ஒரு தடவை நாளைக்கு மூணு முறை, மவொரிகளின் தயாரிப்பான இயற்கைக் காட்சி அனிமேஷன் ஷோ நடக்குது. எல்லாம் இலவசம்தான். நின்னு பார்க்கத்தான் ஆள் வேணும்.



ஜப்பான் உணவுகள் விற்கும் கடையில், வாடிக்கையாளர்களைக் கவரும்விதம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த (ப்ளாஸ்டிக்) உணவுகளை உங்களுக்காக சுட்டுக்கிட்டோம்:-)






இதையெல்லாம் ஒரு சுத்து வேடிக்கை பார்த்துக்கிட்டே நாங்க போய்ச் சேர்ந்தது 'ராயல் ஐஸக் தியேட்டர்'க்கு. க்யூபா நாட்டு நடனம் பார்க்க வந்துருக்கோம். பதினேழு பெண்கள், பாடகர், கீபோர்டு, கிட்டார் , ட்ரம்ன்னுஆறு ஆண்கள்னு மொத்தம் 23 பேர் கொண்ட கலைக்குழு.


இந்த தியேட்டருக்கு இப்பத்தான் முதல்முறையா வர்றோம். இப்படின்னு ஒண்ணு இங்கே இருக்குன்றதுகூட இதுவரை தெரியாது(-: டிக்கெட்டு கிடைச்ச(???)பிறகுதான் எங்கே, என்னன்னு தேடினேன். 20 நிமிஷத்துக்கு முன்னே அங்கே இருக்கணுமாம். அட......... இந்த இடம்தானா? எத்தனை முறை இதைக் கடந்து நடந்து போயிருக்கேன்.ஒரு தடவையாவது மேலே நிமிர்ந்து முழுக் கட்டடத்தையும் பார்த்தேனா? இல்லையே.(-:







ரொம்ப அடக்கமானவள்ன்னு நான் சொன்னா நம்புவீங்கதானே?
இன்னும் சில மாசத்துலே 100 வயசாகப் போகுது இதுக்கு. ரெண்டு வருசத்துக்கு முன்னேதான் பழமை கொஞ்சம்கூட மா(ற்)றாமல் புதுப்பிச்சு இருக்காங்க. 1266 இருக்கைகள். அம்மாடியோவ்........... கூட்டமே இல்லாத அந்தக் காலத்துலே யாருக்காக இப்படிக் கட்டி வச்சாங்களாம்? இங்கே படங்கள் எடுக்கத் தடா. ஆனா முழு விவரமும் படங்களாவும், ஒரு 'வர்ச்சுவல் டூரோடும்' அவுங்களெ இங்கே போட்டு வச்சுருக்காங்க.



நம்ம இருக்கைக்காக மாடிக்குப்போனோம். அங்கே ஒரு ஃபோயர்லே bar சுறுசுறுப்பா இயங்குது. கலையும் குடியும் கைகோர்த்து நடக்கணும் என்பது எழுதப்படாத ஒரு விதி. அந்த ஹாலின் அடுத்த பகுதியிலே இதுவரை இங்கே நடந்த காட்சிகளின் போஸ்ட்டர்கள் சுவர் முழுக்க. நிக்கலஸ் நிக்கல்பி முதல் நட் க்ராக்கர் வரை பலவிதங்கள். நிறைய Ballet, guitar,Jazzன்னு பிரபலமானவங்க வந்து போயிருக்காங்க. அப்படியே பார்த்துக்கிட்டு வந்தப்பச் 'சட்'னு கண்ணு ஒரு இடத்துலே நின்னுச்சு. 'ஆனந்த சங்கர் பரத நாட்டியம்'. அட!!! எப்ப நடந்துச்சு? 1992. ம்ம்ம்ம்ம்ம்... அப்ப நாம்இங்கேதானே இதே ஊருலே இருந்தோம். எப்படி இதை மிஸ் செஞ்சோம்? என்னவா இருந்தோம்?
என்ற எல்லாக்கேள்விக்கும் கோபால் 'டான்'ன்னு ஒரே வரியில் பதில் சொல்லிட்டார்.

" நாறிக்கிட்டு இருந்தோம்"




இன்னும் போஸ்ட்டரைக் கவனிச்சுப் பார்த்ததுலே டிக்கெட் 30 டாலர்னு போட்டுருக்கு. அதான்.................... அதேதான்.நமக்கு அப்ப இருந்த 'ப்ரயாரிட்டி' வேற, இல்லையா? 15 வருசத்துலே மாற்றங்கள் வந்துருக்குதானே? இனிமே வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக்கலாமுன்னு ஒருமனதா ஒரு முடிவு:-))))



வாசலில் நம்ம டிக்கெட்டைக் கிழிச்சுக்கொடுத்து, ரொம்ப மரியாதையோடு கூட்டிட்டுப்போய் உக்காரவச்சாங்க. மேடையின் நட்டநடுப்பகுதிக்கு நேரா இருக்கு என்னோட இருக்கை. அடடா........ ஒரு தியேட்டர் பைனாக்குலர்ஸ் இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். அதுவும் அந்த ஓல்ட் விக்டோரியன் ஸ்டைல்............. அதான், பட்டாம்பூச்சியை ஒரு தங்கக் குச்சியில் ஒட்டவச்ச மாதிரி இருக்குமேங்க. ஓபெரா கண்ணாடி. பழைய 'பீட்டர் ஃப்லிம்ஸ்'லே பார்த்துருப்பீங்கதானே? அதேதான். ஹூம்.......... மக்கள்ஸ் வந்துக்கிட்டு இருந்தாங்க. கையிலே ஒரு லிஸ்ட்டை வச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தர் பேரையும் செக் பண்ணிக்கிட்டு, கை குலுக்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்காங்க ரெண்டுபேர். நம்ம முறை வந்ததும், குலுக்கின கைக்குள்ளெ வந்துச்சு ஒரு ச்சீட்டு. இடைவேளைக்கு அந்த பார்லே இருந்து ஒரு காம்ப்ளிமெண்ட் ட்ரிங்! குடிச்சுட்டாப் போச்சு:-)





எக்கச்சக்கமா ப்ளாஸ்டிக் முத்து, வெள்ளை நிறக் கண்ணாடி மணிகள் வச்சு அலங்கரிச்சிருந்த ஒரு மேல்ச்சட்டைபோட்டுக்கிட்டு ஒரு வயதான(??) பாட்டி வந்திருந்தாங்க. முகத்தில் ஒரு சுருக்கமும் இல்லை. எல்லாம் கழுத்திலேதான். காலையில் இருந்து தலை அலங்காரத்தைக் கவனிச்சிருப்பாங்க போல. ரோலர்ஸ் வச்சு அழகா செட் செஞ்ச,ஒரே ஒரு இழைகூட இப்படி அப்படிக் கலைஞ்சு போகாத பஞ்சுக் கூந்தல், எனக்கென்னவோ 'நீதிபதிகள் போடும் விக்'கை ஞாபகப்படுத்துச்சு. அவுங்க பார்ட்னருக்கு நேரெதிரான தலை அலங்காரம். பளபளவென டாலடிக்கும் வழுக்கைத்தலை.விளக்கு எப்போ அணைப்பாங்களொன்னு என் கவலை. கண்ணெல்லாம் ஒரேதாக் கூசுது. (ச்சும்மாக்கிட. உனக்கும் காலம் வரும்னு




மனசாட்சி கூவுது)



மக்கள்ஸ் வரவர, கடலலை பொங்கி வர்றதுபோல ஒரு ஓசை. எல்லாரும் ஒருவரோடொருவர் குசலபிரசனம். எல்லாரும் எல்லாரையும் பல வருசங்கள் பார்க்கலை போல. ஆனா விளக்கு அணைய ஆரம்பிச்சதும், எதோ சுவிட்ச் போட்டாப்போல ' கப்சுப்.'



சொல்லிவச்சமாதிரி எல்லாரையும் ஒரே அச்சுலே போட்டு வார்த்தெடுத்த நடன மணிகள். ஒல்லிக்குச்சி உடம்புக்காரின்னு பாடலாம். அவுங்க நாலைஞ்சு பேர் சேர்ந்தா நாங்க ஒருத்தர்:-)))) பயங்கர ஸ்பீடுலே நடன அசைவுகள். சிகப்புத் திரையும்,கறுப்புப் பாவாடைகளும், சிகப்பு ப்ளவுஸ்களுமா கம்யூனிசத்தை ஞாபகப்படுத்துச்சு. அதுக்கப்புறம் வந்த நடனங்களில் நீலம், வெள்ளை, பிங்ன்னு ப்ளவுஸ் கலர்கள் மட்டுமே மாறிக்கிட்டு இருந்துச்சு. பாவாடைகளும், கால் சராய்களும் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.







Danza Cuba, all female dance company. Spanish, Afro-Cuban folkloric dances, Flamenco meets Ballet இப்படித்தான் விளக்கம் கொடுத்துருந்தாங்க. இதெல்லாம் என்னா புரியுது நமக்கு? castanets கையிலே ஒளிச்சு வச்சுக்கிட்டு, இசைக்குத் தகுந்தாப்புலே அதுலே இருந்து வந்த 'டுக்டுக்' நல்லாத்தான் இருக்கு. கொஞ்சம்கூட தொய்வே இல்லாத ஒன்னரை மணி நேர நடனம். நடுவிலே வந்த இடைவெளியிலே ச்சீட்டுக்குப் பண்டமாற்றா 'நான்' வெறும் பழரசம் குடிச்சேன். பாதத்தைத் தாண்டி ஒரு மீட்டர்வரைக்கும் நீட்டி இருந்த ஃப்ரில் பாவாடை, தரையோடு உரசிவந்த நடனம் முழுசும்,எனக்கு ஒரே டென்ஷன். விழுந்துவச்சா என்னா கதின்னுதான்.


நடனம் முடிஞ்சு வெளியே வந்ததும், சதுக்கத்தின் பக்கத்தில் இருந்த மில்லினியம் ஹொட்டலில் ஒரு supperக்கும் அழைப்பிதழ் இருக்கு. ஆனா........... போகலை. குடிமகன்களுடன் பொய்முகம் காட்டிப் பேசணுமா? அதுக்குப் பதிலா 'கிறைஸ்ட்சர்ச் பை நைட்' ன்னு கலைவிழாவை வேடிக்கைப் பார்த்துட்டுப் போகலாம். மீண்டும் ஒரு மனது, ஒரு முடிவு:-)





"அருமையா நல்லாத்தான் ஆடுனாங்க. ஆனா மனசுலே பதியலை. அந்த நிமிஷம் பார்த்து அனுபவிச்சதோடு சரி"



" நமக்குத் தெரிஞ்ச இசை இல்லாததும் ஒரு காரணமா இருக்கலாம்"


" இதுக்கு 65 டாலர் டிக்கெட், கொஞ்சம் கூடுதல் இல்லையா?"





" ஆமாம். இத்தனை பேர் வந்து போற ஏற்பாட்டுக்கெல்லாம் செலவு ஆகி இருக்குமுல்லே? "



" அதுவும் சரிதான். ஆனா காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கணுமுன்னா நான் வந்தே இருக்கமாட்டேன். கூபா டான்ஸா......... எப்படி இருக்குமோ.............இதே காசுக்கு வேற ஷோ போயிருப்பேன்"



" பிபிஎஸ் க்ளப் மெம்பர்களுக்கு எதாச்சும் பரிசு




கொடுக்க(ணு)லாமேன்னுதான்.............. "





" இதுக்குப் பதிலா ஊருக்குப் போற டிக்கெட்டுலே, நல்ல டிஸ்கவுண்டு கொடுக்கலாமுல்லே?"



" சரியாப்போச்சு,போ. 65 லே வேலையை முடிக்கலாமுன்னா 650க்கு வேட்டு வைக்கிற?"


" போட்டும். ஒரு புது அனுபவம்தான். அங்கே ஃபோயர்லே பெரிய விளம்பரம் வச்சுருந்தாங்களே, கவனிச்சீங்களா? இந்த டான்ஸ் ஸ்பான்ஸார் செஞ்சது 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்'ன்னு.
------------------

Friday, August 03, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 4

நடப்பவைகளைப் பார்க்கும்போது, அதிலும் நெருங்கியநண்பர்கள் உறவினர்கள் வாழ்க்கையில் திடீரென்றுநடந்துவிடும் உயிர் இழப்புகள், நிலையாமையை நினைவுபடுத்திக்கொண்டேஇருக்கிறது.

உலகில் பிறந்த கணம் முதல் நம்முடைய நாட்கள் எண்ணப்பட்டு, தினம் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டே வரும் என்பதை இந்தமாதிரி நிகழ்வுகளில்தான் உணர்கின்றோம். இருக்கும் கொஞ்ச காலத்தில் என்னென்ன செய்தோம், செய்திருக்கலாம்..........

யோசனைகள்.......... யோசித்துக்கொண்டே .............


நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவியின் ஆன்ம சாந்திக்கும், நண்பர் குடும்பத்தினருக்கு இவ்விழப்பைத் தாங்கும் மனவலிமை கிடைக்கவும் கடவுளை வேண்டுகின்றேன்.


காலனும், காலமும் ஓய்வெடுப்பதே இல்லை (-:

------------------------------------------------------------------------------------


பெங்களூர்லே இருந்து இங்கே மேல்படிப்புப் படிக்கிறதுக்காக வந்துருக்காருன்னு ஒரு இளைஞரைக் கூட்டிக்கிட்டு வந்தார் நம்ம நண்பர். இவரும் இளைஞர்தான். பெங்களுருக்காரு ஆர்கிடெக்ட் படிப்பு முடிச்சுட்டு, இங்கே வந்துருக்கார்.


ஆஹா.......... ஆர்க்கிடெக்ட்ன்னு காதுலே விழுந்ததும் ச்சும்மா இருப்போமா? வீட்டோட ப்ளானைக் காமிச்சோம். அவருக்கும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. ப்ளானில்தான் வீட்டு முன்புறம்,பின்புறம்னு நாலு பக்கமும் எப்படி இருக்குமுன்னு எலிவேஷன் படம் வரைஞ்சு கொடுத்துருக்காருல்லெ பாய்ட்.


அதுவுமில்லாம அதை ஒரு 3D லே போட்டுக் காமிக்கறேன்னும் சொல்லி இருக்கார்.இந்த நண்பர் பெயர் ஜெயந்த், ( ராஜஸ்தானாம் சொந்த ஊர்) என்கிட்டே ஒரு வரைபடம் கொடுங்க. இந்த வீட்டோட மாடல் செஞ்சு தரேன்னு சொன்னார். கவுன்சில், லைட்டிங்,ப்ளம்பிங், கூரை, ஜன்னல், கதவு லொட்டு லொசுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும்,அதுக்குண்டான நிறுவனங்களில் ப்ளானைக் கொடுக்கணுமேன்னு நிறைய(ஒரு 100 இருக்குமோ?) ஃபோட்டோ காப்பி எடுத்து வச்சுருந்ததுலே ஒண்ணு கொடுத்தோம்.ரெண்டு வாரத்துலே 'வீட்டைக் கொண்டுவந்து கொடுத்தார்' .


ஹப்பா............. அழகாத்தான் இருக்கு.கூரை கூட நாம் தெரிஞ்செடுத்த 'நியூ டெனிம் ப்ளூ' கலருலே அட்டையாலே செஞ்சு ஜமாய்ச்சுட்டார். ம்ம்ம்........ வெறும் ப்ளூ கலராத் தெரியுதோ? 'கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றது எவ்வளோ சுலபம்' பாருங்க:-)



தினமும் மானசீகமா அந்த வீட்டுக்குள்ளே புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருந்தேன். 'இந்த வீடு இப்ப ஷோ கேஸ்லே இருக்கு':-) நம்ம வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, இதைப் பார்த்தா ஆச்சரியத்தோட,இந்த வீடுதான் இந்த வீடா? ன்னு கேக்கறப்போ ஜெயந்தை நினைச்சுக்கறதுதான்.



சமையலறை 'டிஸைனர்' ஒருத்தரைப் போய்ப் பார்த்து,நம்ம சமையல் அறை அளவைக் கொடுத்தோம். 'டிஸைனர் கிச்சன்' வருது!நம்ம சமையல் அறை 13 அடிக்கு 13 அடி. எல்லாரும் இது ரொம்பப் பெருசுன்னு சொல்றாங்க. ஆனா இப்ப நம்ம இருக்கறதுலேயும் இதே அளவுதானே இருக்கு? இதையும்தான் பெரூஊஊஊஊசுன்னு வர்றவங்க சொல்றாங்க. என்னத்தைப் பெருசோ, ஒரேசமயம் 'ரெண்டு' மூணு பேர் இருந்து சமைக்கணுமில்லை:-))))



நம்ம டிஸைனர் பேரு 'ரேச்சல்'. ஒரு நாலஞ்சு தடவைப் போக வேண்டியிருந்தது. 'இவங்களும்' நாம என்ன சொல்றோம்னு கேட்டுட்டு,'அவுங்களுக்குப் பிடிச்சமாதிரி' ஒண்ணை வரைஞ்சு வச்சிட்டாங்க. இந்த ஆளுங்களுக்கு இதே வேலையாப் போச்சு! இத்தனைக்கும் நம்ம தேவை என்னன்னு இவரு ஒரு படமா வேற வரைஞ்சு தந்தார். நான் இன்னும் ஒரு படி மேலே போய், இங்கே 'ரெடிமேட்' ஆ கிடைக்கற டிஸைன் கட்டிங் எடுத்து, வெட்டி ஒட்டி ஒண்ணு தயார் செஞ்சும் காண்பிச்சேன். அதையெல்லாம், தலையைச் சுத்தி தூக்கிக் கடாசிட்டு,அவுங்க வேலையை அவுங்க பாத்தாங்க!
அது வேணாம், எங்களுக்கு இப்படி,இப்படி இருக்கணும்னு ரெண்டு மூணுவாட்டி திருப்பித்திருப்பிச் சொல்லி அவுங்க மண்டையிலே ஏத்தணும்!



ஒருவழியா அதுவும் சரியாச்சு. கொஞ்சம் 'மாடர்னா' இருந்துச்சு. வெள்ளைக்காரன் சமைக்க அரிசி எவ்வளவு வாங்குவான் தெரியுமா?அரைக் கிலோ. ஆனா, நாம? ஒரு 25 கிலோ மூட்டை வாங்கறோமா இல்லையா? அதுக்கும்,வகைவகையான பருப்புங்க,மசாலா அது இதுன்னு சேமிச்சு வைக்க நிறைய அலமாரிங்க வேணாமா? ஒரு மாதிரியா, நாம சொன்னதுபோல அவுங்க வரைஞ்சாங்க! 1600 டாலர் செலவாச்சு.



இப்ப, அதை செய்யறதுக்கு ஒரு 'ஜாய்னர்'வேணுமுல்லே. அதுக்கு மூணு இடத்துக்கு அனுப்பி தோராயமா எவ்வளவு செலவு ஆகும்னு பார்த்துச் சொல்றேன்னும் சொன்னாங்க. அதுக்கு முதல்லே, அடுக்களையிலே, பெஞ்ச் டாப், கப்போர்டு இதுக்கெல்லாம் என்ன கலர்,என்ன மெட்டீரியல்னும் பாக்கணும். மார்பிள், க்ரானைட் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு. ஆனா நம்ப 'பட்ஜெட்'உதைக்குதே! கடைசியில் ரேச்சல் வாங்கித் தந்த quote களின் படிப் பார்த்தா, வெறும் அடுக்களை மட்டும்தான் கட்டிக்கணும். நாமெல்லாம் ஊர்க்குருவி. அவ்வளவு மேலே பறக்க முடியாது.




'காம்பரமைஸ்' இதோட முழு அர்த்தமும் இப்பத்தான் எனக்குப் புரியுது. 'திடீர் புத்தர்' ஆனேன்! ஆசையே துன்பத்திற்குக் காரணம்!என்ன ஞானோதயம்...........எப்ப வந்துருக்குன்னு பாருங்க!



நமக்குத் தெரிஞ்ச ஒரு தோழி வீட்டுலே இருந்த அடுக்களையைப் புதுப்பிச்சாங்களா,அதை வந்து பாருங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு நாளு அங்கெ போனோம் பார்க்கறதுக்கு. சின்ன இடமா இருந்தாலும் நல்லா அருமையா இருந்துச்சு. இப்ப திடீர்னு அது எங்களுக்கு நினைவு வந்துச்சு. அந்த அடுக்களை செஞ்ச ஆளையும் கேட்டுப் பாக்கலாம்னு முடிவு செஞ்சு அதுக்கும் ஏற்பாடு செஞ்சோம். அந்த ஆளு 'ஹாங்காங் சீனர்'.அவரு அவரோட வீட்டுக்கு நம்மக் கூப்பிட்டாரு. அவரு வீட்டுலே போய்ப்பாத்தா, அம்மாடீ..... என்ன அட்டகாசமான அடுக்களை! ரொம்ப விசாலமா, நிறைய அலமாரிங்களொட, நல்ல க்ரானைட் போட்டு பள பளன்னு இருக்கு! அவரேதான் செஞ்சிருக்கார். உடனே தீர்மானிச்சுட்டேன், அவரைக் கொண்டே நம்ம அடுக்களையை முடிக்கலாம்னு.



அவர் பேரு 'கிங்'. 'கிச்சன் கிங்'ன்னு வச்சிருக்கலாம்! அவரு டிஸைனைப் பாத்துட்டு, சில மாறுதல் செஞ்சாரு. நமக்குப் பிடிச்சிருந்தா ஏத்துக்கலாம். இல்லைன்னா, 'ரேச்சல்' வரைஞ்சபடி செய்யறேன்னார். இவரு ச்சீனர்ன்னாலும், நம்ம ஆசியாவைச் சேர்ந்தவர். முக்கியமா அரிசி திங்கறவர். நம்மைப் போலவே சிந்திக்கிறார்! அவரு சொல்லற மாத்தமும் ஞாயமாத்தான் இருக்கு.'சிம்மெட்ரிக்கலா' இருக்கணும்னும் சொல்றார். நல்ல உழைப்பாளி மட்டுமில்லை, நேர்மையா இருக்கார் அப்டின்னு தோணுச்சு. சரின்னு அவரையே செய்யச் சொல்லணும்னு பேசிகிட்டோம். 'கிங்' அதற்குண்டான படங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் போட்டு, ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்துட்டு, மூணு வாரம் விடுமுறையிலே அமெரிக்கா போயிட்டார் மாமனாரை பார்க்க. நமக்கும் 3 வாரம் இருக்கு, இதைப் பத்தி ஆலோசிக்க!



எங்கிட்டே ஒரு பழக்கம்( கெட்ட/நல்ல எப்படிவேணா எடுத்துக்குங்க)இருக்கு. ஒரு பொருளை வாங்கணும்னா 100 தடவை யோசிப்பேன்.வாங்கினபிறகும், அதுக்கு சரியான விலை கொடுத்தமா இல்லை ஏமாந்துட்டமான்னு ஒரு 1000 தடவை 'செக்' செய்வேன். "இந்தப் பழக்கம் எப்பத்தான் உன்னை விட்டுப் போகப்போதோ" ன்னு சொல்லிகிட்டிருந்த கோபாலையும், இப்ப இது மெதுவா தொத்திக்கிச்சு.ஆனா என்னளவு மோசம் இல்லை!



நேரம் கிடைக்கறப்பல்லாம், அங்கெ, இங்கென்னு போய், எல்லாத்துக்கும் விவரம் சேகரிச்சுகிட்டே இருந்தோம்.உண்மையைச் சொன்னாவிவரம் ரொம்பவே கூடிப் போச்சு! அதுனாலெ முடிவு எடுக்கறதும் ரொம்பக் கஷ்டமாவும் ஆயிருச்சு! ஒண்ணைவிட ஒண்ணு நல்லா இருக்கு. எதைஎடுக்கறது, எதை விடறதுன்னு வம்பாவேப் போயிருச்சுங்க.



நாளு ஓடிகிட்டு இருக்கு! குடித்தனக்காரைக் காலி செய்யச் சொல்லி 'நோட்டீஸ்' குடுத்து 6 வாரமாகப் போகுது! இது வீட்டுச் சொந்தக்காரருக்கு இருக்கற சட்டம். ஆனா, குடித்தனக்காரங்க காலி செய்ய நினைச்சா அவுங்க 3 வாரம் 'நோட்டீஸ்' தந்தா போதும்!



இப்பத்தான் ஒரு 'ஐடியா' வந்தது. இந்த வீட்டை'க் கட்டும் விஷயத்தையே ஒரு 'ஜர்னல்'லாக எழுதினால் என்ன? எழுதிட்டாப் போச்சு! இப்பத்தான் 'மரத்தடியில் எழுத்தாளர்'னு ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கே! எழுதிப் பழகறதுக்கும் ஒரு விஷயம் வேண்டாமா? நாளையிலிருந்து நடக்கறதை தினம் எழுதிட்டு வரணும். கூடவே 'டிஜிட்டல் கேமெரா'வில் படங்களும் எடுக்கலாம். அப்புறமா அவைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை வடிவில் எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! ஹூம்....... எல்லாம் உங்க நேரம்:-)



( அப்ப நான் பதிவராக ஆகலை. துளசிதளம் ஆரம்பிக்காத காலம் அது.)



தொடரும்................

Wednesday, August 01, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 3

போன பதிவுக்குப் பின்னூட்டப் பெட்டி வரலைன்னு நண்பர்கள் சொன்னாங்க. என்ன, எங்கே பிழையென்று புரியலையேங்க.



சரி, விஷயத்துக்கு வர்றேன். இப்ப எங்கிருக்கோம்? ஆங்! 'பில்டர்'


பேப்பர்லே பாத்து, நாலைஞ்சு ஆளுங்களைக் கூப்பிட்டோம். தனித் தனியாத்தான்! மூணு ஆளுங்க வந்தாங்க.



ஒரு ஆளு, இதுக்கு முதல்லே 'க்வீன்ஸ்டவுன்'ங்கற ஊர்லே சில வீடுகள் கட்டிய அனுபவத்தோட இந்த ஊருக்கு வந்திருக்கார்.அவரு கல்யாணம் பண்ணப்போற பொண்ணுடைய ஊரு இதுதான்னதாலெ இங்கே வந்துட்டேன்னு சொன்னார். ஆளைப் பார்த்தா நல்லவர் போல இருக்குதுன்னு என் உள் மனசு சொன்னது.'மாஸ்டர் பில்டர்' சான்றிதழ் இருக்கான்னு கேட்டப்ப இன்னும் அதுக்குரிய தகுதியை அடையலேன்னு சொன்னார். இன்னும் சில வீடுகள் முடிக்கணும்னு சொன்னார்.



சில குறிப்பிட்ட எண்ணிக்கை வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு, இதற்காக விண்ணப்பித்தால், அவர்கள் வேலையின் தராதரத்தைப் பரிசோதித்து 'மாஸ்டர் பில்டர் அசோஸியேஷன்' இந்தத் தகுதியை வழங்கும். இது இவர்களது திறமைக்குக் கொடுக்கப்படும் சான்றிதழ். இதனால், நமக்கு சில அனுகூலங்களும் உண்டு. கட்டிடம் சரியாகக் கட்டப்படவில்லை என்றால்புகார் செய்தால், நடவடிக்கை எடுப்பார்கள். நமக்கு நஷ்டஈடும் கொடுப்பார்களாம். நாம நஷ்டஈடு வாங்கவா வீடு கட்டறோம்?



அடுத்த ஆளு, இங்கேயே இருக்குறாரு. 'மாஸ்டர் பில்டர்' சான்றிதழ் வாங்கியிருக்கார். ஆனா ஆளோட பேச்சும், நாம சொல்றதைப்புரிஞ்சு நடக்கறதும் சரியில்லைன்னு ( அதுதான், உள்மனசு சொல்லுமே!) தோணுச்சு. கொஞ்சம் கெத்தா உக்காந்துருந்தாரோ? தொழில் தெரிஞ்சவங்களுக்கு இருக்கும் கர்வமோ என்னவோ?


மற்ற ஆளு, ஒரு சதுர மீட்டருக்கு 50 டாலர்னு சொன்னார். நம்ம வீடு 261 சதுர மீட்டர் வருது. இவ்வளவு கொஞ்சமா சொல்றாரேன்னு சந்தேகமா இருந்துச்சு.



நமக்குப் பாருங்க, 'நிறையக்கேட்டால், ஏமாத்துறான், கொஞ்சமாக் கேட்டா வேலை தெரியாதவன்'. இப்படியெல்லாம் நிறைய சந்தேகங்கள் வந்துருது!



யோசிச்சு(!)பாத்தப்ப, முதல்லே வந்த ஆளுக்குத்தான் என் மனசு(!) நிறைய 'மார்க்'( தப்பா நினைக்காதீங்க, இது வேற மாதிரி மார்க்)போட்டிருந்துச்சு. அவரையே ஏற்பாடு செஞ்சிறலாம்னு முடிவு செஞ்சோம். அவரைக் கூப்பிட்டு, விஷயத்தைச் சொன்னோம். அவருகிட்டே எந்த வேலைக்கு எவ்வளவு செலவுன்னு விளக்கமா 'லிஸ்ட்'எழுதச் சொன்னோம். எழுதிக் கொண்டுவந்தாரு.



'பில்டரு'டைய வேலைத் திறமையைப் பாத்துட்டு, அதாவது அவராலெ கட்டப்பட்ட வீடுங்களைப் பார்த்துட்டு முடிவு செய்யணும்னு எல்லா வீடு கட்டற புஸ்தகங்களிலேயும் போட்டிருக்கு.இங்கேதான், 'டூ இட் யுவர் ஸெல்·ப்'னு எல்லா வித வேலைக்கும் புஸ்தகங்கள் எக்கச்சக்கமாக் கிடக்குதே. அதப் பாத்துதான் விஷயங்களைத் தெரிஞ்சுகிறது.வாராவாரம் உள்ளூர் லைப்ரெரிக்குப் போய் ரெண்டு பேர் கார்டுலேயும் 'வீடு கட்டும் விதம்' புத்தகங்களை ஆளுக்கு இருபதுன்னு அள்ளிக்கிட்டு வருவோம். நம்ம 'பில்டர்' இந்த ஊருலே ஒரு பெரிய வீடு கட்டியிருக்கார். அது இந்த நாட்டுலே 'ரக்பி' விளையாடுறவருடைய அண்ணன் வீடாம்! அங்கே கூட்டிட்டுப் போய் காட்டறேன்னார். ஒரு நாள் போனோம். வீடா அது? பிரமாண்டமான மாளிகை. இதுக்கு முன்னாலே நம்ம வீடு ச்சும்மா ஒரு அவுட் ஹவுஸ் தான். இதையெல்லாம் பார்த்து மனம் தளர்ந்தால் எப்படி? நம்மூர் க்ரிக்கெட் ஆளுங்க மாதிரி இங்கே ரக்பி ஆளுங்க சம்பாத்தியம். 'ரக்பி அண்ணன்'னா ஐவேஜ்க்கு என்ன கொறைச்சல்? பில்டர் முந்தி இருந்த ஊர்லே'க்வீன்ஸ்டவுன்' சில வீடுகள் கட்டுனார்னு சொன்னார்லே, அவுங்க ·போன் நம்பரும் கொடுத்தார். நாங்க ·போன் போட்டுக் கேட்டோம்.அவுங்க சொன்னது," நல்லா கட்டிக் கொடுத்தார். நல்ல ஆளு, நேர்மையானவர்"



நாம தேர்ந்தெடுத்த ஆளு நல்லவர்னு தெரிஞ்சதுலே ஒரு திருப்தி வந்துச்சு. இப்பவும் இங்க சில வீடுங்களை ஆரம்பிச்சிருக்கறதாலே ஜூலை மாசம் 26க்குத்தான் நம்ம வீட்டை ஆரம்பிக்க முடியும்னு சொன்னாரு.


மொத்தம் அவருக்குத் தர வேண்டியது எவ்வளவுன்னு பேசி முடிச்சோம்.. இது அவருக்குண்டான கூலி/சம்பளம் மட்டும். மத்த சாமான்கள் எல்லாம் நாமே தெரிவு செஞ்சு, அது அதுக்கு தனியா நாமே வாங்கிக் கொடுக்கறதுன்னு ஏற்பாடு. கலர் தெரிவுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஜன்னல் ஃப்ரேம்களுக்கு என்ன கலர்னு முதல்லே முடிவு செஞ்சுறணும்.அப்புறம் கூரையும் அதே கலர்லே வந்துரும். சுவருக்கு அடிக்கும் கலர்களை வீட்டோட உள்புறம், வெளிப்புறத்துக்கு இந்தக் கூரையோடு மேட்ச் ஆகறமாதிரி செஞ்சுக்கணும். கூரைக்கும் என்னமாதிரி டிஸைன்லெ ஓடு வேணுமுன்னும் பார்க்கணும். ஓடுகள் இணையும் இடம் எந்த டிஸைன் வரணுமுன்னு முடிவு செய்யணும். இதுக்கெல்லாம் ஒரே வழி,புது வீடுகள் வந்துக்கிட்டு இருக்கும் ஏரியாவில் போய் அங்கே இருக்கும் வீடுகளுக்கு எப்படி போட்டுருக்காங்க, எது நமக்குப் பிடிச்சிருக்குன்னு பார்த்து மிக்ஸ் & மேட்ச் பண்ணிக்கிறதுதான். கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் 'வீடு பார்க்க'ஓடறதும் முக்கியம்.



ஒரு வீடுகட்டற செலவு என்னன்றதுக்கு 'ஸ்கை இஸ் த லிமிட்'ன்னு சொல்லலாம். எந்த மாதிரி ஜன்னல், கதவு, கதவுக்குப் போடற கைப்பிடி, எந்த மாதிரி வேலைப்பாடு,அடுக்களையிலே எந்த மாதிரி அடுப்பு, மத்த வசதின்னு ஆயிரம் இருக்குல்ல!நம்மகிட்ட இருக்கற 'ஐவேஜ்'ஜைப் பொருத்துத்தானே செய்யணும்? நடுத்தர 'பட்ஜெட்'ன்னு பார்த்தாலுமே, ஒரு ச.மீ.க்கு 1000 டாலர்னு ஆகுமாம். சரி அப்படியே வச்சாலும், நம்ம வீட்டுக்கு 261,000 ஆகும். இதுக்குள்ளேயே முடிச்சா அதிர்ஷ்டம்தான்! ஆனா............ நாம் நினைக்கற மாதிரி இருக்காது(-: எல்லாம் மாவுக்கேத்த பணியாரம்.



இருந்திருந்து ஆசையாக் கட்டற வீட்டுக்கு, நல்ல தரமான சாமான்களெப் போடவேண்டாமா? நூறு டாலர் விலையிலே ஒரு குழாய் ( பைப்)இருக்குன்னு வையுங்க. அதைவிட இன்னும் நல்லா இருக்கறது 150. ரொம்பவே நல்லா இருக்கறது 400 அப்படின்னு ஏறிகிட்டே போகுது.இப்ப நாம முடிவு செய்யவேண்டியது, 400 இல்லாட்டியும், குறைஞ்சது ஒரு 200 லே இருக்கறதையாவது போடணும்லே.



இப்படி ஒவ்வொரு பொருளாப் பாத்து பாத்து 'லிஸ்ட்' போட்டதுலே, ஐய்யய்யயோ..........என்னா செய்யறது?



மறுபடி, கவனமாப் பாத்து, எதை எதைக் குறைக்கணும்னு இன்னொரு'லிஸ்ட்' போடறதுதான்!


குரங்கு அப்பம் புட்ட கதைதாங்க! என்னதான் குறைச்சாலுமேக் கையைக் கடிக்குது.(குரைக்கும் நாய் கடிக்காதுன்னு யாரோ ச்சும்மாச் சொல்லி வச்சுருக்காங்க!) இது வீட்டுக்கு மட்டும்.இது இல்லாம இடத்துக்குத் தனிக்காசு.நல்லவேளையா முன்னாலேயே இந்த இடத்தை வாங்கிப் போட்டுருந்ததாலே தப்பிச்சோம். தற்சமயம் வீடு, நிலம் எல்லாம் தாறுமாறா விலை ஏறிக்கிடக்குது!



யானை அசைஞ்சு தின்னும், வீடு அசையாமத் தின்னுமுன்னு ச்சும்மாவா சொன்னாங்க !!!!


இந்தியக்காசுக்குக் கணக்குப் போட்டா **** ரூபாய்க்கு மேலே போயிடுது. இவர் சொல்றாரு," **** ரூபா வீட்டுக்கு சொந்தக்காரிஆகப்போறே" (ஆமாமாம்......டாலர்லே கணக்குன்னா நம்பர்ஸ் ச்சின்னதா இருந்துருமே(-:......... பெருசாச் சொல்லணுமுன்னா 'டகால்'னு ரூபாய்க்கு மாத்திக்கறது ஒரு டெக்னிக்)



நினைச்சாவே பிரமிப்பா இருக்கு, எனக்கு வந்த 'வாழ்வை'ப் பாத்தியான்னு! எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுலே, நாங்க 'குடி' போன வீடு(???) நாலடிக்கு எட்டடி இருந்த ஒரு வெராண்டாவை ஒரு கதவு மட்டும் வச்சு ரூமா மாத்தியதுதான்! அங்கிருந்து ஆரம்பிச்ச வாழ்க்கை.கொஞ்சம் கொஞ்சமா ( ரொம்பக் கொஞ்சமா,ஆமையாட்டம்) முன்னேறி இப்ப இந்த க்ஷணம் நாலு படுக்கை அறை இருக்கற வசதியான வீட்டுலெதான் இருக்கோம். ஆனா என்ன.......... வீடு பழசு. கட்டி அம்பது வருசத்துக்குமேலெ ஆயிருக்கும். பழைய வீடு= குளிர் !



இப்ப முப்பது வருஷம் கழிச்சு, பெருமாள் அனுக்ரஹம் செஞ்சிருக்கார்! இதுவும் நாலு படுக்கை அறைதான். ஆனா, புத்தம் புதுசு! குளிரா இருக்காது! ( அப்படின்னு ஒரு நினைப்பு)



ஜூலை மாசம் வீடு கட்ட ஆரம்பிக்கணும்னா, அங்கே இருக்கற பழைய வீட்டை அப்புறப் படுத்தணுமே! குடித்தனக்காருங்க இருக்காங்களே!குறைஞ்சது ஆறு வாரத்துக்கு முன்னாலே அவுங்களுக்குச் சொல்லணும்னு சட்டம் இருக்குது.அதனாலே ஜூன் மாசம் கடைசியிலே குடி இருக்கறவங்களைக் 'காலி' செய்யறதுக்கு, மே மாசம் நடுவிலே நோட்டீஸ் கொடுத்தோம்.



இங்கெல்லாம், பழைய வீடுங்களை முக்கியமா மரத்தாலேயே முழுக்க முழுக்கக் கட்டப்பட்ட வீடுங்களை அப்படியே 'அலேக்கா' தூக்கிடுவாங்க! பெரிய்ய்ய்ய்ய 'ட்ரக்' வண்டியிலே வீடுங்க அப்படியே போகறதைப் பார்த்துருக்கேன். இதை அப்படியே ஒரு இடத்துலே வச்சு விற்பாங்க! சிலபேரு அப்படியே வாங்கி அவுங்க இடத்துலே வச்சிட்டாங்கன்ன வீடு பழையபடி வசிக்க ஏற்றதா ஆயிரும்.நம்ம வீட்டுக்குக் காசும் தருவாங்க. ஆனா அவுங்க விக்கறப்ப நல்ல விலைக்கு விற்பாங்க. இதுவும் இங்க ஒரு வியாபாரம்தான்.



இதையும் 'தூக்கலாம்'னு சில 'ரிமூவல் கம்பெனி'களைக் கேட்டோம். அவுங்களும் வந்து பாத்துட்டுப் போனாங்க. அதுலே மத்தவுங்களைத் தவிர ஒருத்தருமட்டும் நமக்கு 7000 தாரேன்னு சொன்னார். அந்தக் காசை , இடத்தை சீராக்கறதுக்கு வச்சுக்கலாம்னு இருந்தோம்.அப்புறம் அவுங்க ' வீட்டு இன்ஸ்பெக்ஷன்' வந்தப்ப, 'அந்த வீட்டை தூக்க முடியாது. காங்க்ரீட் கல்லுக்குள்ளே சிமெண்ட் வச்சுக் கட்டியிருக்குது. இடிச்சுத்தான் அப்புறப் படுத்தணும்'னு சொல்லிட்டு, 'இப்ப நீங்கதான் இடிக்கறதுக்கும் காசு தரணும்'னு சொல்லிட்டாங்க! இடிபாடுகளையெல்லாம் அகற்றி சுத்தம் செஞ்சு மரங்களையெல்லாம் வேரோடு அப்புறப்படுத்தி, நிலத்தை சீராக்கி, சமப்படுத்திக் கொடுக்கறதுக்கும் சேர்த்து ( பேரம் பேசிதான்)10,500ன்னு முடிவாச்சு. செலவு இன்னும் கூடிப்போச்சேன்னு நான் வருத்தப்பட்டப்ப, கோபால்தான் சமாதானப்படுத்துனார்.



காங்க்ரீட், சிமெண்ட் சம்பந்தப்பட்ட கழிவுகளையெல்லாம் அதுக்குன்னே தனியா இருக்கும் இடத்துலே கொண்டுப்போய் போடணும். இந்த 'டம்பிங்' செய்யறதுக்கு காசு கூடுதல். மரம் மட்டைக் கழிவெல்லாம் நிலத்தை ஒண்ணும் செய்யாதுன்னு அதுக்குன்னு இருக்கற இடம் கொஞ்சம் மலிவு. நாம் கொடுக்கற காசுலே முக்காவாசி இதுக்கே போயிரும். காவாசிதான் அவுங்களுக்குக் கூலி.

தொடரும்.................