Monday, July 09, 2007

எ.கி.எ.செ? பகுதி 8

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகரைத்தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். காலையில் 11 மணிக்குக் கோயிலை பூட்டிருவாங்களாம். மேப்பைப் பார்த்துக்கிட்டேதான் வந்தோம். ஹைவே(Mt Lindesay Highway) 13 இல் வந்துசவுத் மெக்ளீன் பகுதியில், மெக்ளீன் பார்க்குக்கு அடுத்ததுன்னு விலாவரியாப் போட்டுருக்கு. இதோ,மூணாவது முறையா இதே இடத்துக்கு வந்து , மொதல்லே முழிச்சுப் பார்த்தமாதிரி அதே முறைப்பில் இப்பவும் அந்தப் பார்க்கை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பார்க்குக்கு இடது பக்கம் 'ஹிண்டூ டெம்பிள்'னு மேப்லே போட்டுருக்கே! ஆனா............ பார்க் இதோ இருக்கு. அப்ப டெம்பிள் எங்கே? கவுண்டமணி செந்தில் கணக்காப் புலம்ப வச்சுட்டாரே இந்த பிள்ளையார்!


காலையில் கண்ணு முழிச்சதே சூர்யா நினைவாலே. நம்ம ஜே எஸ் சூர்யாங்க. அவர் படத்துலே வர்ற ஆ(ஹ்)ஆ(ஹ்) சவுண்டு கேட்டுத்தான். இது ப்ரிஸ்பேன் காக்கா. அச்சு அசலா அப்படியே கத்துது. மோட்டலில் இருக்கும் யூகலிப்டஸ் மரம். ஒரு பட்டைகூட இல்லாம மொழுமொழுன்னு அப்படியே உரிச்சு வச்சுருக்கு. அதோ உச்சியில் சூர்யா.ச்சேச்சே...........காக்கா.
நாப்பது நிமிஷ ட்ரைவ். இங்கே வந்து அரைமணி நேரமாச்சு. சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். யாரையாவது கேட்டுப்பார்க்கலாமான்னா ஈ, காக்கையைக் காணொம். மடிக்கணினியை எடுத்துக் கோவிலோட வலைப்பக்கத்தைப் பார்த்தால் அதுலே ஒரு தொலைபேசி எண் இருக்கு. அதுக்கு அடிச்சுக் கேக்கலாமுன்னு கூப்புட்டா........ மணி அடிக்குதே தவிர,யாரும் எடுக்கலை. பூசை நேரம் 9 மணிக்காம். இப்பவே மணி ஒம்போதேகாலாயிருந்துச்சு. பத்தரை மணிக்கு ஒரு நண்பரை, வேற ஒரு இடத்தில் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு. 25 நிமிஷப் பயணம் போகணும்.

பார்க்குக்கு இந்தப்பக்கம் எதிரெதிரா ரெண்டு வீடுகள். ஒரு வீட்டுக் கதவைத் தட்டினோம். வீட்டம்மா நல்லவங்களா, இன்முகத்தோடு சொன்னாங்க. கோயில் அங்கேதான் இருக்காம்(!!!) அதுக்கு நுழைவாசல் இப்ப நாங்க நிக்கற தெருவுக்கு முன் தெருவாம். நாங்க முதல்லே வந்த ஹைவேயில் திரும்பிப்போனா முதல் இடது பக்கம் கோயில்.தொந்திரவு கொடுத்துட்டோம். மன்னிச்சுக்குங்கன்னதுக்கு, அட....... நீங்கவேற. நிறையப்பேர் இப்படி எங்களைத்தான்வந்து கேக்கறாங்க. பழகிப்போச்சு'ன்னு சொன்னாங்க.

ஒரு போர்டாவது வச்சுருக்கலாம் கோவில் இந்தப் பக்கமுன்னு. புலம்பிக்கிட்டே அவுங்க சொன்ன முதல் இடது திரும்புனா இந்துக் கோயில்னு ஒரு போர்டு இருக்கு. எப்படி இதைத் தவறவிட்டோம்? ம்ம்ம்ம்........ புரிஞ்சுபோச்சு.மெயின் ரோடைப் பார்க்காம ஒரு ஆங்கிளில் இருக்கு (-: வண்டியை உள்ளெ கொண்டு நிறுத்திட்டு,கோயிலின் பக்கவாட்டுக் கதவுக்குள்ளெ ஓடி நுழையறப்ப பூஜைமணிச் சத்தம் கணகணன்னு ஒலிக்குது. பிள்ளையாருக்கு நைவேத்தியம் காமிச்சுக்கிட்டு இருக்கார் குருக்கள். இன்னொருத்தர் கையில் ஒரு பெரிய ஜால்ரா. ச்சின்ன டவரா போலஒரு கிண்ணம். உள்ளே ஒரு பிடி மஹா நைவேத்தியம்( வெறுஞ்சோறு) ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை ஏத்திஒரு சுத்துச் சுத்திட்டு அந்த தீச்சுவாலைமேலே உள்ளங்கையை வேகமா ஆட்டி 'கப்'னு கற்பூரத்தை அணைச்சார் குருக்கள்.

என்ன நடக்குது? ஆ........ன்னு பார்க்கறேன். அந்தக் கற்பூரத்தட்டு, நிவேதனம் இருக்கும் கிண்ணம் எல்லாம் எடுத்துக்கிட்டு,கருவறையின் வலது பக்கச்சுவரில் இருக்கும் இன்னொரு தெய்வ உருவத்துக்கு முன்னால் கற்பூரத்தை மறுபடி கொளுத்தி,கிண்ணத்தைத் திறந்து காட்டி கற்பூர ஆரத்தி ஒரு சுத்து, மறுபடி கையை விசிறுனதுலே கப்னு கற்பூரம் அணைஞ்சது. இப்ப அடுத்து இன்னொரு சந்நிதி. எல்லாம் முன்னே சொன்னபடி. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இங்கத்து சிஸ்டம். ஜால்ரா தட்டுறவர் கூடவே போறார். அவர் பின்னால் நாங்களும். வலம் வந்துகிட்டே இடது வலதுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும்குட்டிக்குட்டிச் சந்நிதிகளை தரிசிச்சுக்கிட்டே வர்றோம். எல்லாருக்கும் காமிச்சபிறகு அதே பக்கவாட்டுக் கதவு வழியா குருக்கள் போயிட்டார்.

நாங்க ரெண்டுபேர் மட்டும் கொஞ்சம் ஆறஅமர மறுபடி ஒவ்வொரு சந்நிதியாப் பார்த்துக்கிட்டே வந்தோம். பண்ணைகளில் இருக்கும் ஷெட் போல ஒரு இடம். இதையே கோவிலா மாத்தி இருக்காங்களோ?

கோவிலுக்குள்ளெ நுழைஞ்சது இடதுபக்கக் கதவு வழியா. இது அர்த்த/மகா மண்டபம். முன்வாசலைப் பார்த்த ஒரு சந்நிதி. ஸ்ரீ செல்வ விநாயகருக்கு. அழகான மண்டபம். கருவறையைச் சுத்தி வலம்வரலாம். வலம் வரும்போது பின்னால் திறந்தவெளியா இருக்கும் முற்றத்தில் நமக்கு இடது புறம் ஆஞ்சநேயர் அவருக்கு நேர் எதிரே ஸ்ரீதேவி, பூதேவி சகிதமுள்ள ஸ்ரீ நாராயணன். நமக்கு வலதுபக்கம் வள்ளி தேவானையுடன் ஸ்ரீ முருகன். கொஞ்சமா சந்தனம் பூசிச் சந்தனக்காப்பில் இருந்தார். அவருக்கு நேர் எதிரே சரஸ்வதி.

கருவறையின் வெளிப்பக்கச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, (பிள்ளையாருக்கு நேரே பின்னால்) லிங்கோத்பவர்,பிரம்மா.இவர்களைக்கடந்து நாம் மறுபடியும் அர்த்தமண்டபத்தில் நுழையும்போது நமக்கு வலதுபுறம் துர்கா, இடதுபுறம்சிவன் அமிர்தகதேஸ்வரர்,சமயக்குரவர் நால்வர். இன்னொரு மாடம் போலுள்ள இடத்தில் உற்சவ மூர்த்திகள். தில்லை நடராஜர் சபை என்று எழுதிய இடத்தில் நடராஜனும் சிவகாமியும்.

யாரையும் விட்டுறக்கூடாதுன்ற எண்ணத்தில் எல்லாரும் நெருக்கியடிச்சு நிக்கிறாங்க. அதானே? பிரம்மா கூட இருக்காரே! மண்டபத்தில் ஒரு ராமகிருஷ்ணரின் மார்புவரை உள்ள சிலை. முன்வாசல் அருகே நவகிரகங்களுக்கு ஒரு சந்நிதி. கவனமா இருந்தால் பக்கச் சுவத்தில் இடிச்சுக்காம வலம் வரலாம். பிள்ளையாருக்கு எதிர்ப்புறம், நவகிரகத்தையொட்டி ஒரு பைரவர்.

முன்வாசலில் போய் நின்னு கோபுரத்தைப் பார்த்தோம்.சின்னதா குட்டியா அழகான கோபுரம்,வெளிர் நிறத்தில். அதிலே இருக்கும் தெய்வ உருவங்கள் எல்லாம் சாம்பல் நிறத்தில். அம்சமா இருக்கு. இதே நிறத்தில்தான் பின்னால் கருவறை மேலே உள்ள விமானமும், குட்டிச் சந்நிதிகளில் இருக்கும் விமானமும்.

வெளியே மரத்தடியில் குருக்கள் நின்னுக்கிட்டு இருந்தார். பக்கத்துலேயே ஒரு வீடு. அவருக்குக் கொடுத்துருக்காங்களாம்.அந்த ஒம்போது மணிப் பூஜைதான் இன்னிக்குக் கொஞ்சம் பிந்திருச்சாம். புள்ளையாருக்கு பயங்கர குறும்புப்பா........ ஒம்போதுக்கு நம்மை அங்கே அலைய விட்டுட்டு, இங்கே அடுப்புப் பத்தவைக்கிறதைத் தள்ளிப்போட்டுருக்காரு பாருங்க.

கொஞ்சநேரம் குருக்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன். இலங்கையிலிருந்து இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சாம்.மற்ற வெளிநாட்டுக்கோயில் குருக்களைப்போல் இல்லாம ரொம்பவே சிம்பிளா(??) இருந்தார். சாமியும்தான், பேரில் மட்டும்'செல்வ' வச்சுக்கிட்டு இருக்கோன்னு எனக்குத் தோணுச்சு. எனக்குப் பாருங்க, இந்த 'தோணல்கள்' பொழுதன்னிக்கும் தோணிரும்.திரும்பிப்போகும்போது மனசுலே என்னென்னவோ ***கள். கடவுளர்களுக்கு நைவேத்தியம் காமிக்கும்போது ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனிக் கிண்ணத்துலே வச்சுக் காமிக்கக்கூடாதா? இல்லேன்னா கொஞ்சம் நிறையவாவது காமிக்கலாமே? பிள்ளையார்(யானை)பசிக்கு சோளப்பொறி போல ..............பாவம் சாமி. என்னமோ காக்காய்க்கு வைக்கறதைப்போல ஒரு பிடி. ஹங்.........ஒருவேளை அதை காக்காய்க்கே வச்சுடறாங்களொ என்னவோ? அங்கேதான் காக்காய்ங்க இருக்கே! என்ன அஞ்ஞானம் பாருங்க.

ஏன் கோயிலில் பக்தர்களே இல்லை? வேலை நாள் என்றதாலா? ஒருவேளை சாயங்காலமா வருவாங்களோ? இல்லெ வீக் எண்டுலேமட்டும் வருவாங்களா? சிட்டியைவிட்டு இவ்வளோ தூரத்துலே வனாந்தரத்துலே இருக்கே! மறுபடி ***கள்.

குறிப்பிட்ட நேரத்துலெ நண்பரைச் சந்திக்க முடிஞ்சது. அன்னிக்குப் பகல் சாப்பாடு 'ப்ரவுன்ஸ் ப்ளெயின்ஸ்' என்ற இடத்தில் இருக்கும் 'க்ராண்ட் ப்ளாஸா'வில். பெரிய ஷாப்பிங் மால். சில சினிமா அரங்குகள்கூட இருக்கு இதுலே.ஃபுட் கோர்ட்லே உச்சிவானம் தெரியும் அருமையான கண்ணாடிக்கூரை. இதுமாதிரிதான் நம்ம வீட்டுலே போடணுமுன்னுநான் யதார்த்தமாச் சொன்னதைக்கேட்டு அப்படியே நடுநடுங்கிட்டார் இவர். மனசுக்குள்ளேக் காசைக் கணக்குப் போட்டுப் பார்த்திருப்பார்போல!

மனசு, உடம்பு, ஆன்மா மூணுக்கும் நான் உத்திரவாதமுன்னு சொல்ற கடை. அமித்திஸ்ட் கலர்லே அழகழகாப் பொருட்கள்.என்னோட கலராச்சேன்னு உள்ளெ போய்ப் பார்த்தேன். பிள்ளையார் ஒருத்தர் அகப்பட்டார். 'கணேஷாவைத் தேர்ந்தெடுத்ததுக்கு வாழ்த்து(க்)கள். குறைவில்லாத செல்வம், தடைகளை நீக்குதல், வாழ்வில் நீங்காத வளம், எடுத்த காரியத்தில் வெற்றி.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ அவரோட கல்யாண குணங்களைன்னு ஒரு பக்கம் வர்ற அளவுக்கு விவரிச்சு வச்சுருக்கும்ஒரு நோட்டீஸை, ஒரு சந்தனமரப் பெட்டியில் இருந்து எடுத்து நம்ம அமித்திஸ்ட் பிள்ளையாருடன் சேர்த்து அழகா பொதிஞ்சு கொடுத்தாங்க கடைக்காரம்மா. பத்திரமாக் கொண்டுவந்து அறையிலே வச்சுப் பிரிச்சுப் பார்த்தேன். ச்சும்மா சொல்லக்கூடாது.......அருமையாச் செஞ்சுருக்காங்கச் சீனாவுலே! He is the patron saint of students who pray to him to pass their exams!! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வந்த நினைவுக்காச்சு.

இங்கே இன்னொரு கடையிலே நுழைஞ்சு மைக்ரோவேவ் பாத்திரம் ஒண்ணு வாங்கிக்கிட்டோம். இன்னிக்காவது நல்ல காஃபியாப்போட்டுக் குடிக்கணும். அங்கே விதவிதமா கைக்கடிகாரம் இருந்துச்சு. மகளுக்கு ஒண்ணு வாங்கிக்கலாமுன்னு சிலதைத் தேர்ந்தெடுத்து,கைத்தொலைபேசியில் படம் புடிச்சு அவளுக்கு அனுப்பி, அவள் தேர்ந்தெடுத்ததை வாங்கின்னு கொஞ்ச நேரம் ஆச்சு.முந்தியெல்லாம் நூத்தம்பது, இருநூறுன்னு செலவு செஞ்சு வாஙகுனதைவிட, இப்ப வேணுங்கறதை பேஷன் மட்டும் பார்த்து,இருவது, முப்பதுக்கு வாங்குறது நல்லாதான் இருக்கு. எப்படியும் ஒரு வருசத்துக்கு பேட்டரி வந்துருது. திரும்பி இங்கே பேட்டரிமாத்துறதுக்குத்தான் பதினைஞ்சு டாலர் ஆகிருது(-: இளவயசுக்காரங்களுக்கு, வாட்ச் இப்ப பேஷன் அக்ஸெஸரீஸ்னு ஆகிப்போச்சு.

மாலையில் மறுபடியும் ஆத்தங்கரை விஸிட். அக்ஸ்மாத்தா எட்டிப்பார்த்தப்ப, ராக் கிளெய்ம்பிங்குக்கு, குனிஞ்சுக் கயிறு கட்டிட்டு நிமிர்ந்த ஒருத்தர் எப்படியோ தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை...........என் தொண்டையில் இருந்து சத்தம்எழும்புறதுக்குள்ளே சமாளிச்சுட்டார். ( கத்தி இருந்தேன்னா அதைக் கேட்டே அதல பாதாளத்துலே போயிருப்பார்) எனக்குத்தான்உயிரே போறமாதிரி நெஞ்சு அடைச்சிருச்சு. 'விழுந்துருந்தா என்ன கதி?'ன்னு சொன்னதுக்கு, 'செத்துப்போயிருப்பேன்' னுகூலா சொல்றாருப்பா. கரணம் தப்புனா மரணம் (-: அந்த அரை இருட்டிலும் கருமமே கண்ணாயினார் போல மக்கள்ஸ் ஓடறதும், உடற்பயிற்சி செய்யறதுமா இருக்காங்க.

குழலூதும் 'கண்ணன்' சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு. The church of Jesus Christ of the latter-day saintsBrisbane Australia Temple. பளிங்கு, டைல்ஸ், மொஸைக்குன்னு இழைச்சு இழைச்சுக் கட்டி இருக்கும் விஸ்தாரமான கோயில்.சுத்திவர பாதிரிப்பூ(Plumeria, Frangipani ) மரங்களும், பர்ட் ஆஃப் பாரடைஸ் பூச்செடிகளும். நாளைக்கு காலையில் வாக்கிங் போகும்போதுன்னு மறக்காமக் காமெராவைக் கொண்டுவரணும்.

அன்னிக்கு ராத்திரி அகஸ்மாத்தா டிவியைப் பார்த்துட்டு மனசெல்லாம் ஒரு வலி. அடப்பாவிகளா.............. ஒரு இனத்தையே எப்படி அழியற நிலமைக்குக் கொண்டுவந்துட்டீங்கன்னு வேதனனையாப் போயிருச்சு.

தொடரும்...........

Thursday, July 05, 2007

8க்கால லட்சணத்தின் 8ப்பட்டி பயணம்.

எட்டுப்போடச்சொல்லி இதுவரை எட்டுப்பேர் கூப்புட்டாச்சு. இனியும் ச்சும்மாஇருந்தா............. சரிப்படாதேன்னு பார்த்தா, சொல்லிக்கறமாதிரி ஒண்ணும் அகப்படலை.


என்னையும் பயணத்தையும் பிரிக்கவே முடியாதுன்னு தோணுதில்லே?. பொறந்ததுலே இருந்தே இப்படி ஊரூராப் போய்க்கிட்டுத்தானெ இருக்கேன்.அதனாலே மனசுலே நிக்கும் எட்டுப் பயணத்தைச் சொல்லிறலாமுன்னு துணிஞ்சாச்சு. காலவரிசை(?)யில் இருக்காது.


1. ஹனி மூனுக்குத் தனியாப் போனேன்:-)



மெட்ராஸ்லே இருந்து வால்ட்டேர்க்குப் போறென். ரயில் பயணம். முன்பின் தெரியாத ஊருக்குத் தனியாப் போறதாலே கொஞ்சம் மனசு திக்திக். ஸ்லீப்பர் கிடைக்கலை. நல்லதுதான். ரா முழுசும் தூங்காம உக்காந்தே இருக்கணும். கூடக் கொண்டு போறது, கொஞ்சம் பாத்திரபண்டமுன்னு வீட்டுச்சாமான்கள். கோட்டைவிடாம இருக்கணுமேன்னு கவலை.

காதல்கணவன் வேலை செய்யும் ஊருக்குப் போகும் ஆர்வம், பயம் எல்லாம் கலந்துகட்டியா ஒரு உணர்வு.இவர் அங்கே போய் ஒரு மாசமாகுது. வீடு பார்த்துட்டேன்னு வந்த கடுதாசியைப் பார்த்ததும் கிளம்பிட்டேன்.
என்ன வாங்கிக்கணுமுன்னு தெரியாம, ராத்திரியில் ரயில் பயணத்துலே குளிர் கூடுதலா இருக்குமுன்னு ஒரு ஸ்கார்ஃப் மட்டும் புதுசா வாங்குனேன். எல்லாரும் தூங்க ஆரம்பிக்கும் நேரம், நானும் ஸ்கார்ஃப் எடுத்துக் காதைமூடிக் கட்டிக்கிட்டு இருட்டில் வேடிக்கை(?) பார்த்துக்கிட்டே ஜன்னலோரம் உக்கார்ந்துருக்கேன்.



எப்பத் தூங்கினேன்னு தெரியலை. சத்தம் கேட்டுக் கண்ணு தொறந்தப்ப கிருஷ்ணா நதிமீது பாலத்துலே 'தடக் தடக்'னு ரயில் போகுது. எல்லாரையும் போலவே சில்லறைக் காசை நதியில் விட்டெறிஞ்சேன். ( அதெல்லாம் கண்ணு பார்த்தாக்கை செஞ்சுருமுல்லெ?)



பத்துமணி அளவில் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்துச்சு. எனக்காகக் காத்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்ததும் என் திக்திக் எல்லாம் பக்னு நின்னுச்சு. வீடு(???) போய்ச் சேர்ந்தோம்.


இப்ப இதை எழுதறப்பதான் நினைவு வருது, என் புது சில்க் ஸ்கார்ஃப். காணொம்(-: (உலகை மறந்து இருந்துருக்கேன் பாருங்க) ஜன்னல் காத்துலெ எங்கே அடிச்சுக்கிட்டுப் போச்சோ! அச்சச்.........


2 .திமிங்கிலத் தாய்.



மகளும் நானுமா, டிஸ்னி லேண்ட் பார்க்கறதுக்குன்னு லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போய்க்கிட்டு இருக்கோம். போனோம் வந்தோமுன்னு ஒரே ஒரு வாரம். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிஞ்சு அஞ்சுவாரம்தான் ஆகி இருந்துச்சு. கோபால் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். அங்கே இருந்து கிளம்பி வந்து எங்களை எல்.ஏ. ஏர்போர்ட்லே சந்திக்கிறதா ஒரு ஏற்பாடு. எல்லாரையும் போல எல்.ஏ. சுத்துனது இருக்கட்டும். இப்பச் சொல்லவந்தது, அங்கிருந்து San Diego வுக்கு ஒரு நாள்போய் வந்தது.


திமிங்கிலத்தைப் பார்க்கப்போறோமுன்னு குஷியில் இருக்கேன். 'ஸீ வொர்ல்ட்' உள்ளே பலவிதமான ஷோ நடக்கறதாலே,சரியாத் திட்டம் போட்டோமுன்னா ஏறக்குறைய எல்லாத்தையுமே பார்த்துறலாம். ஒவ்வொண்ணுக்கும் இடைவெளி ஒரு 10 நிமிஷம், கூடிப்போனா 15 நிமிஷமுன்னு இருக்கு. ஒரு கோடியில் ஒண்ணைப் பார்த்துட்டு, அதுக்குள்ளே மறு கோடியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஓடணும். கையில் அட்டவணையும், மேப்பும் கொடுத்துடறாங்க.



திமிங்கிலக் குளத்தைத் தாண்டும்போது, என்னமோ ப்ளாஸ்டிக்லே செஞ்ச ராட்சஸ பொம்மை மாதிரி வழுவழுன்னு ஒரு மினுங்கலோடு, ஒரு திமிங்கிலம் நிக்காம படபடன்னு சுத்திச் சுத்தி வந்து தண்ணீரை வாலாலே அடிச்சுக்கிட்டு இருக்கு.ஒரு அஞ்சாறு பேரைத்தவிர அங்கே அப்ப யாரும் இல்லை. அந்தக் குளத்தோட பக்கச்சுவர் எல்லாமே கண்ணாடிச்சுவர் .தண்ணீர் ஒரு கலங்குன அழுக்காத் தெரியுதேன்னு கவனிச்சா............. அந்தத் திமிங்கிலம் குட்டி ஈனப்போகுது.



அதோட அடிவயித்துப் பகுதியிலே இருந்து ரெண்டு/ மூணடி நீளத்துலே குட்டியின் உடல் பகுதி வெளியே வந்து அப்படியே நீட்டிக்கிட்டு இருக்கு. பிரசவ வேதனையில் துடிக்குதுபோல அந்த அம்மா. வலி பொறுக்கமாட்டாமத்தான் வலைத் தூக்கித்தூக்கி அடிச்சுக்கிட்டு இருக்கு. பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. நேரமாக ஆக குளத்துத் தண்ணீர் முழுசும் ரத்தச்சிகப்பா ஆயிருச்சு. அதுக்குள்ளே நிகழ்ச்சிக்கு நேரமாச்சு இவுங்க அவசரப்படுத்துனதுலே,மனசில்லா மனசோடு அங்கிருந்து ஓட வேண்டியதாப் போச்சு.


ரெண்டு மணி நேரத்துக்குப்பிறகு 'ஷாமு' வின் ஷோ பார்க்க அதே இடத்துக்கு வந்தோம். அதுக்குள்ளே, அங்கே எதுவுமே நடக்காதது போல பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு,புதுத் தண்ணீர நிரப்பி வச்சுருக்காங்க. வெள்ளையும் கருநீலமும் 'பேட்ச்' போட்டமாதிரி Blue whale ரெண்டு நீந்தி விளையாடிக்கிட்டு இருந்துச்சுங்க. விசாரிச்சதுலே தெரிஞ்சுக்கிட்டது, அம்மாவையும் குழந்தையையும் வேற குளத்துக்கு மாத்திட்டாங்களாம். இருவரும் நலமாம். அப்பாடான்னு இருந்துச்சு.


( இன்னும் கூட எனக்கு ஒரு சந்தேகம்தான். இந்த திமிங்கிலங்கள் ப்ளாஸ்டிக் பொம்மைகளோன்னு)



3. கொதிக்கும் காதல்ச்சின்னம்



தாஜ் மகாலைப் பார்க்கக் குதிச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்காக....? இப்படிக் கொதிக்குற வெயில் காலத்துலேயா போகணும்? என்ன செய்யறதுங்க? அப்பத்தான் ஒரு ச்சான்ஸ் கிடைச்சது. காதல் சின்னமான தாஜ்மஹாலைத் தனியாப்போய்ப் பார்த்துட்டு வந்துறப் போறாரேன்னு இவர்கிட்டே ஒரு சத்தியம்( கைகேயி மாதிரி?) வாங்கி வச்சிருந்தேன். இவர் அப்ப அடிக்கடி வேலை விஷயமா டெல்லிவரை போய்வந்துக்கிட்டு இருந்தார். இப்ப ரெண்டு பேரும்........ இல்லை நாங்கமூணு பேரும் சேர்ந்து போறோம். மகளுக்கு வயசு 10.



ரயில் மேலே இருக்கும் ஆசையாலே டெல்லிக்கு ரயில்னு முடிவாச்சு. ஏறக்குறைய ரெண்டு நாள் பயணம்.ஜாலின்னு இருக்கேன். நம்ம (கூபெ) பெட்டியில் இன்னொரு தம்பதிகளும் இருக்காங்க. அவுங்களோட ரெண்டு பசங்க. அதுலே அந்தப் பசங்க ஓயாமச் சண்டை போட்டுக்கிட்டுப் பயணம் முழுசும் (ராத்திரி கொஞ்ச நேரம் தூங்குனதைத் தவிர) சத்தம் போட்டு அழுதுகிட்டே வந்து.................... சரியான தலைவலி. போதாக்குறைக்கு ஏ.ஸீ. ஸ்லீப்பர் பெட்டின்னு ரெட்டைக்கண்ணாடி ஜன்னல்கள், வெளியே ஒண்ணுமே தெரியலை(-:



இந்த அழுகைச் சத்தத்துக்குப் பயந்துக்கிட்டு நாங்க வெளியே கதவுக்குப் பக்கத்தில் நின்னே பயணிச்சோம். ஆக்ராவிலேன்னா 52 டிகிரி சூடு. திரும்பி வரும் பயணத்து எடுத்த ரயில் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சுட்டு, விமானத்துலே சென்னைக்குவந்து சேர்ந்தோம். காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, காதல் உணர்வே இல்லாமக் காதல் ச்சின்னத்தை ஒரு கடமையாப் பார்த்தவங்க நாங்களாத்தான் இருப்போம்(-:




4. வாங்க (?) நினைச்ச நகை.



வெளிநாட்டு வேலை கிடைச்சு, நானும் இவருமா ஃபிஜித்தீவுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். நமக்கு ஹாங்காங்லே ஒரு மூணு நாள் தங்கல். நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்தாலும், சாப்பாட்டுலே என்ன இருக்குமோன்னு பயந்துக்கிட்டு,தெருவோரக் கடைகளில் நம் கண்ணுமுன்னாலே போட்டுத்தரும் ஆம்லெட்டையும் ரொட்டியையுமே தின்னுக்கிட்டு ஊர் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம். ஓஷன் பார்க் லே டால்ஃபின் ஷோ அருமையா இருந்துச்சு. கடைவீதிகளில் சுத்துனப்ப, ஒரு நகைக் கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருக்கும் ஜேடு நெக்லேஸ் விலையை விசாரிக்கலாமுன்னு கேட்டா......... அந்த ஆள் அதை எடுத்து என் கையிலே கொடுத்துட்டார். அழகோ அழகுன்னு ஜொலிக்குது. விலை எவ்வளவுன்னு கேட்டா, மொழித் தகராறு. முழிக்கிறார். அப்புறம் கால்குலேட்டரில் படபடன்னு தட்டி நம்மகிட்டேகாமிச்சதைப் பார்த்ததும், அப்படியே நடுங்கிப் போயிட்டேன். ரெண்டரை லட்சம் ஹாங்காங் டாலர். நமக்கு அப்ப இந்திய அரசாங்கம் கொடுத்த ஃபாரின் எக்ஸ்சேஞ்சு காசு எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே 41 அமெரிக்கன் டாலர்!


பேரம் பேசிப் பார்த்திருக்கலாமோ?:-)




5. சொன்ன பேச்சைக் கேக்கணும்.



எடின்பரோ ஏர்ப்போர்ட்டில் இருந்து நாங்க தங்கப்போற ( B & B) வீட்டுக்குத் தொலைபேசுனப்ப, அந்தம்மா படிச்சுப்படிச்சுச் சொன்னாங்க, 'எடின்பரோ ஸ்டேஷன்லெ இருந்து ரயிலைப் புடிச்சு வாங்க'ன்னு. ப்ரெஸ்ட்டன் பான் ஸ்டேஷனில் இறங்கணுமாம். ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் எடுத்துப் போனோம். அங்கே ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் ரயில்இருக்காம். நாம்தான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாச்சே. நேரத்தை ஏன் வீணாக்கணும்? பஸ் புடிச்சுப் போய் சாமான்களை வச்சுட்டு, மறுபடி இங்கே வந்து சுத்திப்பார்க்கலாமுன்னு அங்கே இங்கே விசாரிச்சு பஸ்லெயே போறொம்.ஒரு இடத்துலே எங்களை இறக்கிட்டு, வலது பக்கம் நேராப் போங்கன்னு கைகாமிச்சு விட்டார் ஓட்டுனர்.



பகல் மணி 12. ஜாலியா நடக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிஷத்துக்குள்ளே காலெல்லாம் பின்னுது. கையிலே ஆளுக்கொருபை வேற. ரெண்டு மூணு செட் துணிகள்தான். ஆனாலும் பொணமா கனக்குது. வேர்த்து ஊத்துது. பல்லைக் கடிச்சுக்கிட்டே இன்னும் ஒரு பத்து நிமிஷம் நடந்தோம். உக்கார ஒரு நிழலுமில்லாம மொட்டை ரோடு. தாகம் நாக்கை வறட்டுது. எதோ பாலைவனத்துலெ போறமாதிரி இருக்கு. இன்னும் எவ்வளவு தூரமுன்னு தெரியலை. யார் கிட்டே கேக்கறது? கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு ஜீவனும் இல்லை. இனி ஒரு எட்டும் வைக்கமுடியாத நிலை. ஆறது ஆட்டுமுன்னு ரோடு ஓரத்துலேயே பையைப் போட்டு அதுமேலே உக்கார்ந்தாச்சு.



ஆபத்பாந்தவனா, அனாதை ரட்சகனா அந்தப் பக்கம் காருலே வந்த ஒரு இளைஞர், வண்டியை நிறுத்தி என்ன ஏதுன்னு விசாரிச்சு,எங்களை ஏத்திக்கிட்டு வந்து ப்ரெஸ்டன் பான் ஸ்டேஷன் வாசலில் விட்டார். கார்லெயே 20 நிமிஷமாச்சு. அவருக்கு பல முறை நன்றியைச் சொல்லிட்டு, நம்மகிட்டே இருந்த விலாசத்தைத் தேடி நடந்தோம். சொன்னா நம்ப மாட்டீங்க......... எண்ணிப் பத்தே எட்டு.


6. இல்லாமல்போன இரட்டையர்கள்




எந்த ஊருக்குப்போனாலும், அங்கே மேலே ஏறிப் பார்க்கும் டவர் மாதிரி எதாவது இருந்தா அங்கே கட்டாயம் போகணுமுன்னு இவர் துடிப்பார். நல்ல வியூ கிடைக்குமாம். நியூயார்க் நகரம். உலக வர்த்தக மையத்து வாசலில் நிக்கறோம். நேத்துதானே எம்பயர் ஸ்டேட் கட்டிடத்துலே ஏறிப் பார்த்தோம். இப்ப எதுக்கு இங்கேன்னு நான் கத்திக்கிட்டு இருக்கேன். சுதந்திர தேவி சிலைக்குப் போற அவசரம் எனக்கு. மகளும் அப்பாவோட கூட்டு சேர்ந்துட்டதாலே ரெட்டை கோபுர உச்சிக்குப் போகவேண்டியதாப் போச்சு. அங்கே இருந்து வ்யூ நல்லாவே இருந்தது. சுதந்திரதேவியும் ஜொலிச்சுக்கிட்டு இருந்தாள்.



அடுத்த ரெண்டாம் வருஷம் இந்த ரெட்டைக்கோபுரங்கள் இல்லாமலேயே போயிருச்சு(-:


நல்ல வாய்ப்பைக் கைவிடப் பார்த்தேனே.



7. ஏமாறச் சொன்னது நானா?



முதல் முறையா இந்தியாவுக்கு போறொம். கையில் துறுதுறுன்னு ஒரு வயசு அஞ்சு மாசக் குழந்தை. உற்றார் உறவினருக்குன்னு எக்கச்சக்கமா சிங்கப்பூர்லெ சாமான்களை அளவு தெரியாம வாங்கிக் குவிச்சுட்டோம். ஏர்ப்போர்ட்லே ஓவர் வெயிட்டுன்னு சொல்லித் தீட்டிட்டாங்க.அதுக்குப் பணம் கட்டணும். நான் சிங்கப்பூர் டாலரா மாத்தி எடுக்க மணி எக்ஸ்சேஞ்சுலே, கைப்பையிலே இருந்து காசை எடுத்துக் கொடுத்துட்டு நின்னுக்கிட்டு இருக்கேன். கால் அருகில் நின்ன குழந்தை ஓடி விளையாடிக்கிட்டு அப்படியே ஓடிப்போயிருச்சு.என்ன செய்யறதுன்னு திகைச்சு கவுண்டரில் அவுங்க நீட்டுன காசை எடுக்காம குழந்தை பின்னாலேயே ஓடுறேன். என்னை அலைக்கழிச்சுக் கடைசியில் கையில் அகப்பட்டது.



இப்ப நான் காசை விட்டுட்டு வந்த கவுண்ட்டர் எங்கே இருக்குன்னு தெரியலை. ஒரு வழியாத் தேடித்தேடிக் கண்டுபிடிச்சு, அந்தக் கவுண்டரில் இருந்த ச்சீனப் பெண்கிட்டே மன்றாடிக் காசை வாங்கிட்டு வந்து இவர்கிட்டே கொடுத்தால், கத்தறார். இவ்வளவு நேரம் எங்கே போ(ய்த் தொலைஞ்சே)னேன்னு. இவருக்குப் பின்னாலே வரிசை வளர்ந்துக்கிட்டே போய் மத்த எல்லாருக்கும் கஷ்டமாயிருச்சாம். குழந்தை ஓடிருச்சுன்னு சொன்னதுக்கு, 'நீ பாட்டுக்குக் காசைக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போய்த் தேடக்கூடாதா? ஏர்ப்போர்ட்டுக்குள்ளெதானெ இருக்கும். எங்கே போயிறப்போது?'


கதையைக் கேட்டீங்களா? பாம்பே வந்து சேரும்வரை ( மறக்காம) மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டே வந்தேன்.


போதாக்குறைக்கு பொன்னம்மான்னு ஏர்ப்போர்ட்லே இருந்து ப்ரீ பெய்ட் டாக்ஸி எடுத்து, தாதர் வந்து பூனா போக வண்டிக்குக் காத்திருக்கோம். பூனா வண்டி காலை அஞ்சு மணிக்குத்தானாம். எங்களை ஏர்ப்போர்ட்லே இருந்து தாதர்லே இறக்குன பஞ்சாபி ட்ரைவர் 500 ரூபாய் இனாம் வேணுமுன்னு தொந்திரவு செஞ்சுக்கிட்டே நிக்கறார். (22 வருசத்துக்கு முன்னாலே 500 ரூபாய்ன்னா அது அதிகம்தானே?) 100 ரூபாய் கொடுத்ததுக்கு வாங்கிக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்கறார். பாம்பே ஏர்ப்போர்ட்லேயும் எங்ககிட்டே சாமான்களுக்கு முப்பதாயிரம் ஃபைன் கட்டச் சொல்லி, ஒரு மணி நேரம் வாக்குவாதம் செஞ்சு கடைசியில் பத்தாயிரம் கட்டினோம். அந்தக் கடுப்பு வேற இவருக்கு.



பஞ்சாபி ட்ரைவர் சொல்றார், ' நீதான் விதேசத்துலே நல்லா சம்பாரிப்பியே, கொடுத்தா என்ன? '



முடியவே முடியாது. 100தான் தருவேன். வேணாமுன்னா போன்னு இவர் சொல்றார். பூனா வண்டி வரும்வரை துணையாச்சுன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு நான் இருக்கேன்:-) அப்புறம் பூனா டாக்ஸி எடுத்தபிறகு 200 கொடுத்துஅனுப்புனார். அப்பெல்லாம் மலையிலே ஏறி இறங்கும் பாதைதான். (இப்போ சுரங்கப்பாதை ரொம்ப நல்லா இருக்குன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார். நான் இதுவரை அதுலே போகலை) ஒரு மணி நேரம் மலை மேலே ஏறி, இறக்கம் வர்றதுக்குமுன்னே ஒரு டீக்கடை இருக்கு. அங்கே குழந்தைக்குப் பாலுக்குக் கொஞ்சம் வெந்நீரும் வாங்கிக்கிட்டு நாமும் ஒரு டீ குடிக்கலாமுன்னு நிறுத்திட்டு, இவர் மூணு டீ வாங்குனார்,ஓட்டுனருக்கும் சேர்த்து. அப்புறம் கீழே இறங்கும் சமயம் இந்தியாவுலெ இந்த மூணு வருசத்துலே எல்லாம் பயங்கரமா விலை ஏறிப்போச்சுன்னு புலம்பறார். ஒரு டீ நாலரை ரூபாயாம்.




இதைக்கேட்ட ஓட்டுனருக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. இல்லியே, நான் தினமும் இதே கடையில்தான் டீ குடிக்கறேன்.ஒன்னரை ரூபாதானேன்னு சொல்றார். அப்புறம் விஷயம் விளங்குச்சு. டீக்குக் காசு கொடுக்கறப்ப நாலரைன்னு கடைக்காரர் சொன்னாராம். இவர் ஒரு டீயா?ன்னு கேட்டுருக்கார். அட! 'ஏமாளி'ன்னு கண்டுக்கிட்ட கடைக்காரர், ஆமாம்னு தலையை ஆட்டுனதும் இவர் பதிமூணரை ரூபா கொடுத்துட்டு வந்துருக்கார்:-)))))


கோபத்தை மறந்து 'பக்'னு சிரிச்சேன்.



8. ஆத்தோடு போகாத ஆத்தா :-)




இது உள்நாட்டுப் பயணம். எனக்கு கங்கை நதியைப் பார்க்கணுமுன்னு ஒரே ஆசை. 'அப்படியே கங்கையில் இறங்கிருவேன்,திரும்ப வரமாட்டேன்'னு சொல்லிக்கிட்டு இருப்பேன். என் மகளும், 'அதெல்லாம் இல்லை, ச்சும்மானாச்சும் சொல்றீங்க' ன்னுவா.


இங்கே 'மில்ஃபோர்டு சவுண்ட்'னு ஒரு இடம் இருக்கு. (அதைப்பத்தி நிறையவே சொல்லணும். அது இன்னொரு சமயம். ) அங்கே ஒரு மூணு மணிநேரப் படகுப் பயணம் இருக்கு. மூணடுக்கு ஃபெர்ரியில் கொண்டு போவாங்க. சுத்தி மலை இருக்கும். அதுலே அங்கங்கே நீர்வீழ்ச்சிகள். அதுலே ஒரு நீர்வீழ்ச்சிக்கு ரொம்பப் பக்கமா இந்தப் படகைக் கொண்டு போவாங்க. மழைக்கோட்டுபோட்டுக்கணும், கேமெரா எல்லாம் உள்ளே வச்சுறணும்னு முதலிலேயே சொல்லிருவாங்க. அதனாலெ ஒரு எதிர்பார்ப்போடுதான் எல்லாரும் மேல் தட்டுலே இருப்போம். அங்கே பக்கத்துலெ படகை நிறுத்துனதும், ரொம்ப உயரத்தில் மலை உச்சியில் இருந்து நம்மையே 'பகீரதன்'னு நினைச்சுக்கிட்டு கீழே இறங்கும் 'ஆகாச கங்கை' !! அதுலே தொப்பலா நனைஞ்சபிறகு என் மனசுக்குள்ளெ ஒரு உணர்வு வந்துச்சு பாருங்க, அதை எப்படி எழுத்துலே சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறேன். கங்கையைநேரில் தரிசிச்சமாதிரி மனசு நிறைஞ்சு போச்சு.



மகளுக்குத்தான் ஏமாத்தம், நான் கங்கையோடு போகலையேன்னு :-)))))))

---------


இந்தத் தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்க விரும்புவது உங்க எல்லாரையுமேதான். இதுவரை கலந்துக்காதவங்க,வந்து அடிச்சு ஆடுங்க.
ஏற்கெனவே பதிவு நீண்டு போச்சு. இதுலே விளையாட்டின் விதிகள் வேற இங்கே எழுதணுமா?:-))))))


விடு ஜூட்...............

Tuesday, July 03, 2007

நாங்க கப்பல் வாங்கியிருக்கொம்லெ

இப்ப ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாலெதான் வாங்குனோம். பழைய கப்பல் ரொம்பவே பழசாகிப்போச்சு. அதுக்குப் பதிலா வேற ஒண்ணு வாங்கிக்கணுமுன்னு தீர்மானிச்சு, அதுக்கு ஆர்டர் கொடுத்துக் கட்டி முடிக்கவே இம்மாநாளு ஆகிருச்சு.


நம்ம பக்கத்தூருக்காரங்கதான் கட்டிக் கொடுத்தாங்க. நெதர்லேண்ட் கம்பெனிதான். ஆனா ஆஸ்ட்ராலிய கப்பல் கட்டும் கம்பெனியுடன் சப் காண்ட்ராக்ட். மெல்பேர்ன் நகரத்துலே இதைக் கட்டி முடிச்சு,எங்க 'அம்மா' போய்ப் பார்த்து 'ஆசீர்வதிச்சது' போனமாசம் 13 தேதிக்கு. தேதியைக் கவனிச்சீங்களா? பதிமூணு. வெள்ளைக்காரங்களுக்கு ஆகாத நம்பர். ஆனா இந்தப் பதிமூணு வர்றது வெள்ளிக்கிழமையா இருந்தாத்தான் ஆபத்து கூடுதலாம். 'ப்ளாக் ஃப்ரைடேன்னு சொல்றாங்க அதை. அதுகிடக்கு விடுங்க.எங்கம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனா ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காணுவார். அது போதாதா என்ன?

கப்பலுக்குப் பேர் HMNZS Canterbury L421. எங்கூரு பேர் என்றதாலே எங்களுக்குத்தானே முன்னுரிமை தரணும்?கப்பல் ஆஸியிலே இருந்து கிளம்பி, நேரா எங்கூரு துறைமுகம் 'லிட்டில்டன்' வந்துருச்சு. எங்க காசுலே வாங்குனதை,எங்களையெல்லாம் கூப்புட்டுக் காமிக்கணுமா இல்லையா?

கூப்புட்டாங்க. July 1, ஞாயிறு மதியம் ஒன்னு முதல் நாலரை வரை. நாங்களும் சாப்பாடு முடிச்சுக்கிட்டு நிதானமாக் கிளம்புனோம். அப்பவே பகல் ஒன்னரை மணி. லிட்டில்டன் நெருங்க நெருங்க கார்க்கூட்டம் அதிகமா ஆகுது.'நாலு பேர் = கூட்டம்' என்ற என்னோட ஈக்குவேஷன் இதுக்குச் சரிப்படாது. உண்மையான கூட்டம். டன்னலுக்குள்ளே போகவே நேரமாச்சு. அப்படி ஊர்ந்துக்கிட்டு இருக்கோம். ஏங்க, நாந்தான் உங்களுக்கெல்லாம் சொல்லணுமேன்னுஓடிக்கிட்டு இருக்கேன். மத்தாளுங்களுக்கு என்னா இப்படி ஒரு 'தேச பக்தி'?

ச்சின்ன ஊர், அந்த லிட்டில்டன்ன்னு சொல்றது. வீடுங்க எல்லாம் மலைச்சரிவிலே. ரோடுங்க எல்லாம் ஒரே ஏத்தமும்,இறக்கமும். ரொம்ப நாளுக்கு முன்னாலே 'ஃப்ரைட்டனர்ஸ்' The Frightenersஒரு படம் வந்துச்சுங்களே நினைவிருக்கா? மைக்கேல் ஜே ஃபாக்ஸ் நடிச்சது. அதை இந்தூர்லெதான் எடுத்தாங்க. அந்தக் கல்லறைத் தோட்டமெல்லாம் இங்கத்து இடம்தான். இந்தப் படத்தோட இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் (Peter Jackson) இங்கே நியூஸியிலே பிறந்தவர். அந்த அபிமானத்துலே அவரோட படங்களில் சில இடத்தையாவது இங்கே எடுக்கணுமுன்னு ஆர்வம். அதுக்கப்புறம் அவரோடலார்ட் ஆஃப் த ரிங்(LOTR) முழுப்படமும் இங்கே நியூஸியில்தான் எடுத்தார். அந்த இடங்கள் எல்லாம் இப்பப் பெரிய சுற்றுலாத்தலமா ஆகி இருக்கு.

இந்த லிட்டில்டன்லேதான் ஆதிகாலத்துலே வெள்ளையர்கள் முதல்முதலில் காலு குத்துனது. அதனாலேதான் இந்தஊர் இருக்கும் கேண்டர்பரி தொகுதியை 'மெயின்லேண்ட்'ன்னு இப்பவும் குறிப்பிட்டுச் சொல்றது வழக்கம்.
டன்னலைவிட்டு வெளியில் வந்தவுடன் கண்முன்னே 'பளிச்'ன்னு நிக்குது கப்பல். அதுமேலேயும், அக்கம்பக்கமும்கட்டெறும்பு ஊருதோன்னு ஒரு மெலிசான நகர்வு. அட! அம்புட்டும் ஆள்க் கூட்டம். வண்டியை நிறுத்த இடம்தேடி அலையவேண்டியதாப் போச்சு. இண்டு இடுக்கு விடாம தெருவின் ரெண்டு பக்கமும் அடைச்சு நிறுத்தி இருக்காங்க.

ஒரு தெருவுலே இடமிருக்கான்னு தேடிப்பார்த்துட்டு, மடங்கித் திரும்புறோம். அப்ப 'கணகண'ன்னு மணிஅடிக்குது. நாங்க நிக்கற இடம் ஒரு தீயணைப்பு நிலையம். 'ஓரங்கட்டு, ஓரங்கட்டு'ன்னு சொல்லி வழிவிட்டு ஒதுங்குனோம்.ஒன்றன்பின்னாலே ஒன்றா, அங்கே இருக்குற ரெண்டு தீயணைப்பு வண்டிகளும் ஷட்டரைத் திறந்துக்கிட்டு வெளியே வருதுங்க.இதுவரை நான் பார்க்காத காட்சி. (க்ளிக் க்ளிக்)
அடிச்சுப்பிடிச்சு, மூணாவது தெருவிலே வண்டியை நிறுத்திட்டு போறொம்.
இறக்கமான ரோடு. கண்ணு முன்னாடி கடலில்'நம்ம' கப்பல். போற வழியிலேயே சரித்திரக்குறிப்பு ஒண்ணு இருக்கு. 1850லே கப்பலில் வந்து இறங்கிய மக்கள் தங்குன இடம் இதுதான்னு. பெரிய மலைப்பாம்பு போல வளைஞ்சு நிக்கும் வரிசையில் நாங்களும் கலந்தப்ப மணி2.45. எங்களுக்கு முன்னாலே ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரர்கள். அவுங்களோட பெண் குழந்தை வயசு ஒரு 6 இருக்கும்.ரொம்ப அழகா தலையைக் கட்டம் கட்டமா பாத்தி பிரிச்சுப் பின்னிய முடி அலங்காரம். கிட்டப் பார்த்தா சன்னமா ஒரு சடைபின்னி இருக்கு. யப்பாடா.......... எவ்வளோ பொறுமை வேணும்!!!!

நாலரை மணிவரை மட்டுமே உள்ளெ போய்ப் பார்க்க முடியும். வரிசை ரொம்ப மெதுவா நகருது. துறைமுகத்துக்குள்ளே இறங்கும்தெரு, பாலம் எல்லாம் போக்குவரத்தை மூடியாச்சு. கப்பல் உள்ளே பார்க்க வேணாமுன்னா நாம பாட்டுக்குப் போய்வெளியே கப்பலைத் தொட்டுப் பார்த்துட்டும் வரலாம். அதுக்கு வரிசையில் நிக்க வேணாம். ஆனா நம்ம இலக்கே வேற!மக்களை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே நகர்ந்துக்கிட்டு இருந்தோம். மூணரை மணியானப்ப, சில Sea Cadets வந்து,இனிமேற்பட்டு வரிசையில் சேரவர்றவங்களை அனுமதிக்கவிடலை. வரிசையின் கடைசியில் இவுங்க சேர்ந்துக்கிட்டு,எதிர்புறமா திரும்பி நின்னுக்கிட்டாங்க. நாசுக்கா மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வந்தவங்களைத் திருப்பி அனுப்பிக்கிட்டு இருந்தாங்க.

துறைமுகத்துலே கண்டெயினர் ஏத்தறதுக்குப் புதுசா இன்னும் ரெண்டு க்ரேன் அமைச்சிருந்தாங்க. சுறுசுறுப்பாஅந்த வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஏற்றுமதிக்காகக் காத்திருக்கும் மரங்கள் ஒரு பக்கம் அடுக்கடுக்கா.(இப்படி ஏத்திவிட்டா.........இனிமே எங்களுக்குப் ப்ளாஸ்டிக் கிறிஸ்மஸ் மரம்தானா? )அங்கே இருந்து திரும்பிப் பார்க்கும்போது மலையின் இந்தப் பக்கமெல்லாம் விதவிதமான வீடுகள். டைம்பால் ஸ்டேஷன் பக்கம் எதோ ஒரு டவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு ரஷ்யாக் கப்பல் நின்னுக்கிட்டு இருந்துச்சு. நம்ம 'ரஷ்யா ராம்ஸ்' நினைவுக்கு வந்தார்.

பாலம்விட்டுக் கீழே இறங்குனதும், நேவி வண்டி ஒண்ணு காட்சிக்கு இருந்துச்சு. ஒரு பஸ்தான். உள்ளே போனா,கடற்படையின் சேவை, மற்றவிவரங்கள் எல்லாம் படங்கள் மூலம். கூடவே ஆறு கணினித்திரைகள். எல்லாம்டச் ஸ்க்ரீன். கொஞ்சம் அங்கேயும் நேரம் போக்கிட்டு, மறுபடி வரிசையில் நம்ம இடத்துலே சேர்ந்துக்கிட்டேன்.கடற்படையில் சேரச்சொல்லி விளம்பரங்கள் இருந்துச்சு. ஆளுங்க வரமாட்டேங்கறாங்களாமே! எனக்கு வேலைகிடைக்குமான்னு பார்க்கணும்:-)

கப்பலுக்குள்ளில் இருந்து, 'காணாமப்போன அப்பா அம்மா'க்களின் அறிவிப்பு மைக்லே வந்துக்கிட்டு இருந்துச்சு.பசங்க பத்திரமா இருக்காங்களாம். நமக்கு பின்னாலே நின்னிருந்தவர், கப்பலுள்ளெ பார்த்துட்டுத் திரும்பி வந்துக்கிட்டு இருந்த நண்பரிடம், 'எப்படி இருக்கு?'ன்னு கேட்டார். நானும் கொஞ்சம் காதைத் தீட்டிக்கிட்டு நின்னேன்,ப்ரிவியூ கிடைக்குமேன்னு. அந்த மனுஷர், அதை மட்டும் விட்டுட்டு, எங்கே இருந்து,எத்தனை மணி நேரம் வரிசையில் நின்னார்ன்றதை மட்டுமே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருந்தார். செலக்டிவ் அம்னீஷியா?

மணி அஞ்சு. இன்னும் வெளியேதான் கப்பல்கிட்டே நிக்கறோம். மேல்தளத்துலே பறந்துக்கிட்டு இருந்த கொடியை,அதுக்குரிய மரியாதையோடு இறக்குனதைப் பார்த்தேன். குளிர்காலத்தில் அஞ்சு மணிக்கு. இதுவே வெய்யில்காலமாஇருந்தா ஆறு மணிக்காம். சில ஆர்மி வண்டிகளை வெளியே கொண்டு போனாங்க. இதெல்லாம் கப்பலுக்குள்ளேஇருக்குமாம். உள்ளூர் ட்ரைக்க்ளீன் கம்பெனி வண்டி ஒண்ணு வந்து சுத்தம் செஞ்ச அம்பது அறுவது சீருடைகளைக் கொடுத்துட்டுப்போச்சு.

5.20க்கு ஏணிப்படியில் கால் வச்சோம். அதுக்குள்ளெ நல்லா இருட்டிப்போச்சு. ஏறிப்போனதும் அங்கே பெரிய ஓப்பன்டெக். வலது புறம் பெரிய ராட்சஸக் கதவு. உள்ளே பிரமாண்டமான ஹால். கீழே இருந்து பார்க்கும் போது இதோடஅகலம் அவ்வளவாத் தெரியலை. பத்து பதினைஞ்சு கொடிகள் ஒரு பக்கமா இருந்துச்சு. ஒவ்வொரு மாடியா ஏறிப்போனோம்.நாலாவது மாடியில், ப்ரிட்ஜ். எல்லாம் கணினிகள். பழைய கப்பலில் இருக்கறது போல இல்லாமல் மாடர்ன் டெக்னாலஜி.300 டிகிரி வரை பார்க்கும் வசதி. பசங்க எல்லாரும் முண்டியடிச்சுக்கிட்டு, அங்கிருக்கும் குமிழ்த் திருகிகளையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம பங்குக்கு நாமும்! பச்சை முகக் காம்பஸ் ஒண்ணு கிழக்கு மேற்கைச் சொல்லிக்கிட்டு இருக்கு. ( நம்மூரா இருந்தா உள்ளெயே விடமாட்டாங்கன்னு இவர் சொன்னார். ஆமாமாம், அப்படியே விட்டாலும் செக்யூரிட்டி செக்கப்புன்னு கேமெரா, செல்பேசி எல்லாத்தையும் பிடுங்கிருவாங்க)

கீழே இறங்கி வரும்போது மொத்தம் ஏழு மாடிகள். அழகா, வரிசை பிசகாமல் ஒயரிங் செஞ்சு இருக்கறதைக் கோபால்'ரஸிச்சார்'! இருக்காதா பின்னே? ஒவ்வொரு மாடியிலும் வெவ்வேறு வசதிகள். ஹாஸ்பிடல் ரூம், ஜிம், பொழுதுபோக்கும் அறை, படுக்கை அறைன்னு ஜோரா இருக்கு. நாலு மூலையிலும் பங்க் பெட். ஒவ்வொண்ணிலும் மூணுஅடுக்கு. தலையணை, போர்வை வச்சுக்கறதுக்கு வலை அலமாரி. ச்சின்ன வாஷ் பேஸின். ஆனாலும் 12 பேர் ஒருஅறையில் என்றது அவ்வளவு நல்லாவா இருக்கும்?

பெரிய பெரிய விஸ்தாரமான ஹால்கள். கப்பலுக்குப் புதுசாக் கொடுத்த கூடுதல் ப்ரொபெல்லர், மற்ற உதிரி உபகரணங்கள்ன்னு கிரகப்பிரவேசம் ஆன புது வீட்டுலே இருக்கறமாதிரி சாமான்கள். இன்னும் ஒண்ணும் எடுத்து அடுக்க நேரமில்லை.கேண்டர்பரின்ற பெயருக்குப் பொருத்தமா ஒவ்வொரு ஹாலுக்கும், ரூமுக்கும், காரிடாருக்கும் உள்ளூர்லே இருக்கும்தெரு, இடங்களின் பெயர்களை, 'கதீட்ரல் ஸ்கொயர், டீன்ஸ் அவென்யூ'ன்னு வச்சுருக்காங்க. எல்லாம் அழகா அம்சமா இருக்குன்னாலும், இந்த காரிடாரில் நடக்கும்போது மெலிசான (துர்)நாத்தம். ஒருவேளை ஸ்டில் வாட்டர்லே நிக்கறதாலேயா?

ஒரு தளம் பூராவும் வண்டிகள் நிறுத்தறதுக்காம். அதுகளைக் கப்பல் வயித்துக்குள்ளெ ஏத்த இறக்க பிரமாண்டமான கதவு. அங்கிருந்த அதிகாரியிடம் கொஞ்சநேரம் பேசுனதில் கிடைச்ச விவரங்கள். இப்ப இதுலே 83 பேர் வேலைசெய்யலாமாம். இன்னிக்குக் கணக்குலெ 60 பேர்தான் இருக்காங்களாம். அவசியம், ஆபத்துன்னு வரும்போது 500 ஆட்களுக்கு இடவசதி இருக்கு. ஒரு நாளைக்கு அம்பதாயிரம் லிட்டர் கடல் தண்ணீரைச் சுத்தம் செஞ்சு பயன்படுத்தும் வசதி . உணவுப்பொருட்களைச் சேமிக்கும் அறை, அடுக்களைகள் எல்லாம் நல்ல பிரமாண்டமான அளவில் செஞ்சுருக்கு. மேல்தளத்துலே ரெண்டு ஹெலி பேட் களுக்கு இடம் ஒதுக்கி இருக்காங்களாம்.

மத்த 'புள்ளி' விவரங்கள்:

மொத்தக் கப்பலின் எடை 8000 டன்

கப்பலின் நீளம் 131 மீட்டர்

அகலம் 23.4 மீட்டர்

பயணிக்கும் வேகம் 19 நாட்

60 டன் எடை தூக்கும் க்ரேன் வச்சிருக்காங்க.

25mm Cannon இருக்குச் சுட்டுத்தள்ள(??)

நாலு ஹெலிக்காப்டர் தங்குமிடம்

ஒரு Ready-use hanger for Seasprite.

கப்பல் படம் போட்டு, எல்லா விவரங்களும் அடங்கிய பெரிய போஸ்டர், நமக்கெல்லாம் அன்பளிப்பு.

கடைசியா ஒரு கேள்வி.

ஆமா.........இது என்ன விலை இருக்கும்? அட...... தெரிஞ்சா ஒண்னு ரெண்டு வாங்கிப்போடலாமுன்னுதான். விலையைச் சொன்னதும், ரொம்பவே மலிவுன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார். வெறும் 100மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்தானாம்.( எங்கூருக்காசு ஒரு 130 மில்லியன் வரும்)

மறுபடி மூணு மாடி ஏறி வெளியே வரும்போது திருப்பதியில் வரிசையில் நின்னு சாமி பார்த்த மாதிரி திருப்தியா இருந்துச்சு. மணி ஆறு.

கால் கெஞ்ச கெஞ்ச, மூச்சு வாங்கிக்கிட்டு ஏத்தத்துலே 15 நிமிஷம் ஏறிக் காரைக் 'கண்டுபிடிச்சு' வீடு வந்து சேர்ந்தோம்.