அஞ்சு நிலைக் கோபுரத்தோடு இருக்கும் கோவில்வாசலுக்கு வந்து சேர்ந்து, முன்னே பார்த்த பூக்காரம்மாவிடம் 'துளசி'வாங்கிக்கிட்டு இருக்கும்போது கோவில் கதவுகளைத் திறக்க ஒருத்தர் வந்தார். ரெண்டு வெள்ளையர்களும் வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.
'ஹோ'ன்னு பரந்து விரிஞ்சு போகும் முன்மண்டபம். முதல் பிரகாரமா என்ன? சுற்றிவர வழி இல்லை. ரெண்டு பக்கமும் திண்ணை போல உயர்த்திக் கட்டிய இடத்தில் வரிசையா சந்நிதிகள். நேரெதிரா இன்னொரு பெரிய வாசல் கதவுகள். ஸ்ரீராமஜெயம்! இதைத் திறக்கப் பட்டர் வரணுமாம். அதுவரை?
முன்மண்டபத்துச் சிற்பங்களையும் சந்நிதிகளையும் க்ளிக்கோ க்ளிக்ஸ்.
பெரிய வட (கை)முறுக்கு!
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹன், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ கிருஷ்ணன், அப்புறம் நம்ம ஆண்டாள். வழக்கம்போல் அவளுக்கு 'தூமணி மாடம்' கள்ளக்குரலில் பாடினேன். சின்ன உருவம்தான். கட்டி இருக்கும் புடவையை எங்கோ பார்த்த நினைவு! எங்கே? நிமிஷநேரத்தில் பிடிபட்டது. என் தீபாவளிப்புடவை! ஆனால் இதுக்கு அரக்குக் கலர் பார்டர் சூப்பர்! நம்மதோ.... மஞ்சள். போயிட்டுப்போறது. இப்ப என்ன செய்ய முடியும்? அவசரப்பட்டு வாங்கிட்டோமோ? நானெங்கே வாங்கினேன். இவருடைய செலக்ஷனாச்சே! செலக்ஷன் திறமை? கொஞ்சம் போறாதுதான்..... என்னைப் பார்த்தால் தெரியாதோ:-))))
மண்டபத்தூண்களில் நெடுநெடுன்னு உசரமான மனிதர்களின் சிற்பங்கள். நளினமான போஸ்களில் ஒவ்வொன்னும் கண்ணைப் பிடிச்சு நிறுத்துனது உண்மை! ஒரு மனிதரின் காலண்டை நீண்ட விரல்களோடு இறைஞ்சும் பாவனையில் இருந்த குரங்கன், ஜோர்!
கூப்பிய கைகளுடன் அனுமனும் ஒரு தூணில்.
நாலரை மணி போல சாவிக்கொத்துடன் வந்த பட்டர் ஸ்ரீராமஜெயம் வாசலைத் திறந்தார். கண்முன் பலிபீடமும் கொடிமரமும்.
இடப்பக்கம் தூரத்தில் கருடவாகனங்கள் சின்னதும் பெருசுமா காத்து நிக்குது. இந்தப்பக்கம் கம்பி அறையில் ஆழ்வார்கள், கோவில் பவர் சப்ளைக்கு இன்சார்ஜ்!
இனி படம் எடுக்கக்கூடாது என்ற உணர்வில் கேமெராவைப் பைக்குள் வைத்தேன். கண்களைச் சுழற்றியபடியே பட்டர் போன திசையில் போனால் தாயார் சந்நிதி முதலில். நாலைஞ்சு படி ஏறிப்போகணும். உஜ்ஜீவன தாயார். உய்யவந்த நாச்சியார். நம்மை உய்விக்க வந்த தேவி! கை அசைத்துக் கூப்பிட்ட பட்டர், குங்குமப்ரசாதம் கொடுத்தார்.
பட்டரைப்பின் தொடர்ந்தோம்..... அடுத்து சத்திய மூர்த்திப்பெருமாள் சந்நிதி. நின்ற திருக்கோலம். லேசாத் திருப்பின கையில் ப்ரயோகச் சக்கரம். ரெடியா இருக்கு பாய்ஞ்சு கிளம்ப!
கோபால் கைகளில் இருந்த துளசி இப்போ பெருமாள் கழுத்தில். தீப ஆரத்தி முடிஞ்சு துளசியும் தீர்த்தமும் கிடைச்சது. சந்நிதியின் கம்பிக்கதவைச் சார்த்தின கையோடு நம்மை நோக்கித் தலையாட்டியபடியே விடுவிடுன்னு முன்னால் போன பட்டரைத் தொடர்கின்றோம். இடப்பக்கம் திரும்பி உள்ளெ போய் இன்னொரு இருட்டான வழியில் போறோம். குகை போல இருக்கேன்னால்....
சடார்னு கண் முன்னால் சினிமாஸ்கோப் திரை போல லேசா வளைஞ்சு இருக்கும் அகலமான இடத்தில் எம் பெருமான் கிடக்கிறார்! இந்தச் சுவத்துக்கும் அந்தச்சுவத்துக்கும் இடையே இடைவெளி இல்லாமல் ..... அடடா..... அம்பது அறுபதடி நீளம் இருக்குமோ!
மூணு படிகள் ஏறிப்போனால் இன்னும் கிட்டக்கப் பார்க்கலாம். மேலே வா ன்னு கைகாமிச்சார் பட்டர். ஹைய்யோ.... என்னன்னு சொல்வேன்!
தீபச்சுடரால் ஆரத்தி காமிச்சவர், ஒன்னும் சொல்லாமலே எங்களை அங்கே விட்டுட்டு மடமடன்னு படி இறங்கி வந்தவழியே போயிட்டார்.
ஏகாந்தசேவை! நமக்கா..... கண்களை அகல விரிச்சு பெருமாளையும் அவர் பின்புலத்துலே இருப்பவர்களையும் கண்ணால் க்ளிக்கி மனசில் சேமிக்க முயற்சிக்கிறேன். ஊஹூம்..... ஹைய்யோ ஹைய்யோ!
ஏன் ஓடுறாங்க? தீக்கனல்கள் பாய்ஞ்சு வருது அவர்களை விரட்டிக்கிட்டு! அக்னி அம்புகள்! பாய்ச்சுவது யாராம்? ஆதிசேஷனின் தலைகள்தான்.
பெருமாள் தூங்கற நேரமாப் பார்த்து, மது , கைடபர் என்ற அரக்கர்கள் பூமாதேவியை கிட்நாப் செய்ய நைஸா வந்துருக்காங்க. முழிச்சுக்கிட்டு குடைபிடிச்சுக்கிட்டு இருக்கும் ஆதிசேஷனுக்குக் கோபம் வந்துருது. தூங்கும் எஜமானைத் தொல்லைப்படுத்த வேணாம். நாமே அரக்கர்களை ஓட்டிப்பிடலாமுன்னு தீச்சுவாலையை அனுப்பிக்கிட்டு இருக்காங்க. அரக்கர்கள் பதறி ஓடும்போது பெருமாள் 'அறிதுயிலில்' இருந்து முழிச்சுக்கிட்டுக் கண்ணைத் திறக்கிறார்.
ஐயோ.... (பெருந்) தலை இருக்க, நம் தலைகளை ஆட்டிட்டோமேன்னு ஒரு பயத்துலே சீறும் தலைகளைப் பின்வாங்கிப் பதுங்க நினைக்கும்போது ,'சபாஷ் பசங்களா. நல்ல வேலை செஞ்சீங்க'ன்னு பாராட்டும்விதமா வலது கையால் கைக்கு எட்டின தலையை வருடிக்கொடுக்கிறார் எம்பெருமாள்!
'தலைகளைச் சுருக்கி இழுத்துப் பதுங்கும் சேஷனைப் பார்க்காமல் விடாதே'ன்னு அண்ணி சொன்ன கதையை, நம்ம வகையில் கொஞ்சூண்டு விஸ்தரிச்சு கோபாலிடம் அப்போ சொன்னதே உங்களுக்கும் சேர்த்துதான்:-)
பின்புலத்தில் ஏகப்பட்ட தேவர்களும் ரிஷி முனிவர்களும் இருக்காங்க. யார் யார் யாருன்னு சொல்லக்கூட அங்கே யாருமில்லை!
முன்பக்கம் உற்சவர்களை வைக்க ஒரு காங்க்ரீட் மேடை போட்டுருக்காங்க. ஐயோ.... Eyesore என்றுதான் சொல்லணும். தாய்ச்சுண்டு இருக்கும் பெருமாளின் வயிற்றுப்பக்கம் சரியா இருந்து மறைக்குது:(
குடைவரைக்கோவில். மலையை அப்படியே குடைஞ்சு அதில் புடைத்து நிற்கும் வகையில் செதுக்கி வச்சுருக்கும் அற்புத சிற்பங்களால் ஆன சந்நிதி. கோபால் படி இறங்கிப்போறார். நானோ, நின்ன இடம் விட்டு நகராமல் முழு சீனையும் கண் வழியா மனசுக்கு அனுப்பிக்கிட்டே மாய்ஞ்சு நிக்கறேன். அஞ்சு நிமிசம் இருக்குமோ? காலடிகள் சப்தம் கேட்டுத் திரும்பினால் ஒரு நாலைஞ்சு பேர் வந்துக்கிட்டு இருக்காங்க.
இன்னொருக்கா 'அவனை' சேவிச்சுக்கிட்டு மனசில்லா மனசோடு படி இறங்கிப்போனேன். விவரம் கேட்டுக்கணுமேன்னு பட்டரைத் தேடினேன். முன்மண்டபத்தில் நாங்க காத்திருக்கும் சமயம் எதிரில் வந்து உட்கார்ந்து எங்களோடு பேசிக்கிட்டு இருந்த பெண்மணியிடம் சைகையில் என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார் பட்டர். ஓ...... அதுதானா? ஏண்டா பெருமாளே.... இப்படிப் பண்ணிட்டே?
அப்புறம் பயணம் முடிஞ்சு வீடு திரும்பினதும் வலைவீசுனதில் சில சமாச்சாரங்கள் கிடைத்தன. அனந்த சயன பெருமாள் முப்பதடி நீளமாம். நம்ம ரங்கனைவிடக் கூடுதல் . இந்தியாவிலேயே பெரிய பெருமாள் இவர்தான்னு தெரியவந்துச்சு. கிபி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட கோவில். ஸோ.... முதலில் கோவில். அப்புறம் கோட்டை!
திருமங்கை ஆழ்வார் வந்து பாடிவச்சுட்டுப் போயிருக்கார். 108 வைணவ திவ்ய தேசங்களில் திருமெய்யத்துக்கு 43 வது இடம். ( இந்த ஊருக்கு பழைய பெயர் திரு மெய்யம்தான். அதை காலப்போக்கிலோ என்னவோ திருமயம் என்று ஆக்கிட்டாங்க.) எல்லாம் சிவமயம் என்பதுபோல் எல்லாம் திருமயம் என்று ரைமிங்கா இருக்கட்டுமேன்னா?
தேசபக்தர் சத்தியமூர்த்தி இங்கேதான் பிறந்துருக்கார். பொதுவா ஊரில் இருக்கும் கோவில்களின் மூலவர்கள் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்துருக்கே! அதன்படி மெய்யப்பன் என்ற பெயருக்கும் கூட மூலம் நம் திருமெய்யர்தான்:-)
கோட்டை இருக்கும் குன்றின்கீழே இருக்கும் இந்தப்பெருமாள் கோவில் போலவே ஒரு சிவன் கோவிலும் இருக்கு. ரெண்டுமே குடைவரைக் கோவில்கள். குகைக்கோவில்கள். ரெண்டு ராஜகோபுரங்களிலும் உயர வித்தியாசம் இருக்கோ? . ஒன்னு அஞ்சும் ஒன்னு மூணுமா நிலைகள். சட்னு பார்க்கவும் ஒன்னு போலவே. கவனிச்சுப் பார்த்தால்தான் வெவ்வேற டிஸைன் என்று தெரியும்.
சைவம், வைணவம் ரெண்டுமே ரெண்டு கண்கள் என்று சொல்வதைப்போல் சிவனும் விஷ்ணுவும் சைடு பை சைடாத்தான் இருக்காங்க. இவர் சத்திய மூர்த்தி, அவர் சத்திய கிரீஸ்வரர். சத்தியம் எல்லோருக்கும் பொது! சத்தியம்= உண்மை=மெய். சரியா வருதோ?
நேரம் இல்லை என்பதால் சிவனை தரிசிக்காமல் கிளம்ப வேண்டியதாப் போச்சு:(
பெருமாள் கோவில் சந்நிதித்தெருவில் ஒரு வீட்டில் 'இங்கு காபி கிடைக்கும்' என்ற போர்டு. கிளம்புமுன் ஒரு காபி இருக்கட்டுமேன்னு பார்த்தால்.... நம்ம நேரம், 'இன்றைக்கு அந்த மாமி எங்கியோ போயிருக்காங்க'ன்னு வீட்டு வாசலில் பூஜைப்பொருட்கள் தேங்காய் பழக்கடை வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தவங்க சொன்னாங்க.
'என்னைப் பார்க்கலை அதான் உனக்கு காஃபி இல்லை'ன்னு சிவன் சொல்லிட்டாரு போல!
போகட்டும். ஒரு வேளை காஃபி இல்லைன்னா என்ன? வாங்க ... நம்ம நூத்தியெட்டில் அடுத்த கோவிலுக்குப் போகலாம்.
தொடரும்...........:-)
PINகுறிப்பு: நம்ம பத்ரியிடம் சுட்ட ஒரு படம் அந்த சினிமாஸ்கோப்பு. அவருக்கு நம் நன்றிகள்.
.jpg)

