Showing posts with label காஞ்சி- காசி பயணம். Show all posts
Showing posts with label காஞ்சி- காசி பயணம். Show all posts

Friday, February 07, 2014

ஒரு நடை காசிக்குப்போகலாம், வாறீகளா?


"கடைசி ஆசை என்ன?"

மனம் யோசிக்கும் முன் வாய் சொன்னது   "காசி".

"சரி. போயிடலாம்.சிங்கப்பூரில் இருந்து டில்லி இல்லைன்னா க(கொ)ல்கத்தா  ஃப்ளைட் இருக்கு. அங்கிருந்து  லோகல் ஃப்ளைட் வாரணாசிக்கு. ஓக்கேதானே?"

"இன்னும் ஷார்ட் கட்டா ஒரு ரூட் இருக்கே!"

"எப்படி எப்படி?"

"சிங்கையில் இருந்து சென்னை.  அப்புறம் அங்கிருந்து  டில்லியோ இல்லை கொல்கத்தாவோ?"

"சரியாப்போச்சு. இப்படிச் சுத்தி வளைச்சுப் போகணுமா?"

"ஆமாங்க. இந்தியான்னதும், சென்னையில் கால்குத்தாமல் போய் வர மனசு சம்மதிக்கலையே:("

"அப்படீன்னா  ஒரு வாரத்தில் போய் வரமுடியாது. லீவெல்லாம் என்னன்னு பார்த்துட்டுச் சொல்றேன். ரெண்டு வாரம் போதும்தானே?"

பரபரன்னு  என் மனசு கோட்டை கட்ட ஆரம்பிச்சது. அடுத்த செஷனுக்குள்ளே பக்காவா ப்ளான் பண்ணிக்கணும்.

"சென்னையில் குடும்பத்தையும் நண்பர்களையும் சந்திக்கணும்.  காஞ்சிபுரம் போய்  இந்தமுறை ரெண்டு நாள் தங்கி, தொண்டைநாட்டு திவ்ய தேசங்களை தரிசிக்கணும். அப்புறம்  இதுவரை  போக சான்ஸ் கிடைக்காமல் இருக்கும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முக்கியமாக பூரி ஜகந்நாத் தரிசனம்.  காசியில் அதிகநாள் தங்கி அக்கம்பக்கம் எல்லாம் ஒன்னுவிடாமல் பார்க்கணும். அலஹாபாத் த்ரிவேணி  சங்கமம்  இன்க்ளூடட்.  இவ்ளோதூரம் போயிட்டு  அப்படியே  இன்னும் கொஞ்சதூரத்தில் (??!!) இருக்கும் இன்னொரு மோட்சபுரி  அயோத்யாவையும் தரிசனம் செஞ்சுக்கணும். திரும்பவும் சென்னை வந்துட்டு  சிலநாட்கள்  ஓய்வெடுத்துக்கிட்டு  பேசாம சிங்கை வந்து  சீனுவைக்கண்டுக்கிட்டு நியூஸி வந்துடலாம்."

திட்டத்தைக் கேட்டதும் கோபால் 'ஆடி'ப்போயிட்டார்.  அடக்கடவுளே.... சும்மா  இருக்காமல் (என்னை அறியாமல் ) வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா:(

பாவம்:(  அவரைச் சொல்லி என்ன பயன்?  எனக்குக் கொஞ்சம்(?) உடம்பு சரி இல்லை. தினமும் காய்ச்சல் வரும்.  மூணு மணி  நேரம் இருக்கும். போகும்.  பொது மருத்துவர் , பலமுறை  ரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தும், தன்னால்  ஆகாதுன்னு  மருத்துவமனைக்குக் கையைக் காமிச்சுட்டார். நான் சொல்லி இருக்கேன்ல,  எங்க ரீஜன் முழுசுக்கும் ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான். அதுவும் அரசாங்கம் நடத்துதுன்னு.  அங்கே கூப்பிட்டாங்க.  ஒரு மூணு மாசம் எக்ஸ்ரேக்கள், ஸிடி ஸ்கேன்கள், எம் ஆர் ஐகள் அது இதுன்னு இடைவிடாத பரிசோதனைகள். எங்கூர் ஆஸ்பத்திரியில் உள்ள  எல்லா விதமான மெஷீன்களுக்குள்ளூம் புகுந்து புறப்பட்டேன். நியூக்ளியர்  பாடி ஸ்கேன்  என்று கூட ஒன்னு!

ஒவ்வொரு சோதனை முடிஞ்சதும்  ஒரு ஸிடி கொடுத்துருவாங்க. ஒரு சின்ன லைப்ரரி வைக்கும் அளவுக்கு  இப்ப  நம்மிடம் இருக்கு:-))  எனக்கு என்ன பிரச்சனைன்னு  எனக்கும் தெரியாது அவுங்களுக்கும் தெரியாது!  இன்னும் புதுசா எதாவது மெஷீன் ஆஸ்பத்திரிக்கு  வந்துருக்கான்னு கூடக் கேட்டுருக்கேன் எனக்கான மருத்துவ  நிபுணரிடம்.

ஒரு வழியா  ஒரு லிம்ப் நோட்,  அளவில் பெருசா வளருதுன்னும் அது புற்று நோய்  சம்பந்தமுள்ளதா இருக்கலாமோன்னும் யூகம்.  அதுக்கு ஒரு பயாப்ஸி செஞ்சு  புற்று இல்லைன்ற குட் நியூஸ் கொடுத்த கையோடு,   அந்த வளர்ச்சியைத் தடுக்க  மருந்து எடுத்துக்கணுமுன்னு  சொன்னார் மருத்துவர்.  ஆஹா நோ ஒர்ரீஸ்ன்னு சொன்னதும் மருந்து வகைகளை  வீட்டுக்கு  அனுப்பினாங்க.  மயக்கம் போட்டு விழாத குறை.  பதினேழு மாத்திரைகள் . ஒரே சமயத்தில் முழுங்கணும்.

முதல் பத்து நாட்கள்  மருந்தின் வீரியத்தாலும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனதாலும்  இப்பவோ எப்பவோ என்ற நிலைக்குப் போனதும் கோபால் பயந்துட்டார்.  கடைசி ஆசை என்னன்னு கேட்டது அப்போதான்.
பிறகு  மருத்துவர் வேற மருந்துகளை மாத்திக்கொடுத்தார். எண்ணிக்கை என்னவோ அதே தான்:( அதிகம் பிரச்சனை இல்லாமல் ஆனது. இதுக்கிடையில் ஒவ்வொரு முறை மருத்துவரைப் பார்க்கப்போகும் முதல் நாள் ரத்தப் பரிசோதனைக்குப்போய் வரணும். மாசத்துக்கு மூணு நாலு முறை.







கோபாலுக்கு பயம் தெளிய ஆரம்பிச்சது. ஆனால் கைகேயிக்குக் கொடுத்த வாக்கை  கேன்ஸல் செய்ய முடியுமோ?
வார்த்தை தவறி விட்டாய் கண்ணப்பான்ற குற்றச்சாட்டை  தினமும் தாங்க  திடமனசு வேணுமே!  இப்படித்தான் ஆரம்பிச்சது நம்ம காசிப் பயணம்.



வருசாந்திர லீவும்  கூடவே இன்னும்  சிலநாட்களும் சனி ஞாயிறுகளுமா  கூட்டிப்பெருக்கி  மூணரை வாரம் என்று முடிவாச்சு. ஒருமாதிரியா இதைச் சரி செஞ்சு ஏர்லைன்ஸ் டிக்கெட்டுகளையும்  தங்குமிடங்களையும் தேர்ந்தெடுத்து  தேவையானவைகளைச் செஞ்சு முடிக்கணும்.  முதலில் நம்ம ராஜலக்ஷ்மிக்கு  ஹாஸ்டல் கிடைக்கணுமே!  வழக்கமான இடத்தில்  போன ஜனவரியிலேயே புக்கிங்  முடிஞ்சு போச்சு.  கடைசியில் செயிண்ட்  க்ளாஸ் அமைஞ்சது.






கிறிஸ்மஸ் தினம் காலை  நியூஸி ஒன்பது மணிக்கு விமான நிலையம்போய்ச் சேர்ந்தோம். ஸ்மாட்ர்ட்கேட்ஸ்  வச்சுருப்பதால்  ஆஸி அண்ட் நியூஸி  குடிமக்கள்  வரிசையில் நின்னு கவுண்ட்டர் ஆஃபீஸரைப் பார்க்க வேண்டியதோ, பாஸ்போர்ட்டில்  அவுங்களிடம் ஸ்டாம்ப் வாங்கிக்க வேண்டியதோ இல்லை. எல்லாம்  மெஷீன் செஞ்சுருது. Departure card formalities ரொம்பவே எளிமைப்படுத்திட்டாங்க.  பாஸ்போர்ட் நம்பரை எழுதினால் போதும். பயணியின் கையொப்பம் கூடத்  தேவை இல்லையாம். செல்ஃப் சிங்கை வழியாகச் சிங்காரச்சென்னை. இருபத்தியிரண்டு  மணி நேரம் ஆச்சு சென்னையில் நம்ம தங்குமிடத்தில் போய்ச் சேரும்போது.

கூடவே வாங்க.  என்னதான் ஆச்சுன்னு பார்த்துடலாம். ஓக்கேவா?

தொடரும்........:-)

PIN குறிப்பு:  படங்கள்  சிங்கை விமான நிலையம் சாங்கியில் பார்த்த காட்சிகளில்  சில. Peranakan Museum  கடனுதவி செய்த பொருட்கள் இவை.