Showing posts with label அனுபவம் Shimla. Show all posts
Showing posts with label அனுபவம் Shimla. Show all posts

Tuesday, May 10, 2011

ஷிம்லா ஸ்பெஸல் (தொடர்ச்சி.... 1)

நமக்குப் போக வேண்டியது மால் ரோடு. அங்கே வண்டிகளுக்கு அனுமதி இல்லை. வண்டிக்குப் பார்க்கிங் பெரிய பிரச்சனை இங்கே.
கீழே போகும் சாலையில் போனால் பார்க்கிங் தனி இடம் இருக்கு. மால் ரோடுக்கு லிஃப்ட் இருக்குன்னாங்க. முதலில் இந்த லிஃப்ட் சமாச்சாரம் புரிபடலை. ப்ரதீபை வண்டியை பார்க்கிங்லே போட்டுட்டு சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு லிஃப்ட் ஏறி சுத்திப்பார்க்கச் சொல்லிட்டு நாங்க லிஃப்ட்க்குப் போனோம். ஏழு ரூபாய் ஒரு ஆளுக்கு ஒன் வே. ரெண்டு லிஃப்ட் இயங்குது. சின்ன சைஸ். ஒரு அஞ்சாறு பேர் போகலாம். ஆனால் புளிமூட்டைபோல அடைச்சுக் கூட்டம் இடம் பிடிக்குது. மூட்டையோடு மூட்டைகளா நாமும் போனோம். ஒரு இடத்தில் நின்னபிறகு வெளியேறி மற்ற ஆட்களைப் பின் தொடர்ந்தோம். மரப்பாலத்து நடை பாதையில் இப்படி அப்படின்னு கொஞ்ச தூரம் போய் இன்னொரு லிஃப்ட். அதுலே ஏறிப்போனால் அது போய் நிற்கும் இடம் மால் ரோடு.
லிஃப்ட் கட்டிடம்
டிக்கெட்
லிஃப்ட் நடைபாதை
இது நல்ல ஐடியா இல்லே? ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் போறாங்கன்னாலும் பதினாலாயிரம் ரூ வருமானம் வருமுல்லே? அதுலே செலவு நாலாயிரம் போனாலும் நிகர லாபம் நாளுக்குப் பத்தாயிரம்!

மால் தெரு வண்டி நடமாட்டம் இல்லைன்னு பேரே தவிர கூட்டமெல்லாம் அங்கேதான். அங்கேயும் கீழேயும் மேலேயுமா மலைப்பாதைகள். பூராவும் கடைகள். மேலே போனால் நல்ல இடங்கள் இருக்கும் சாப்பிடன்னார் கோபால். மொட்டை வெய்யிலில் ஏற்றத்தில் ஏறிப்போக முடியலை. இறக்கத்தில் கொஞ்சதூரம் போனோம். தாகம் வேற! வரும் வழியில் நளினி ரெஸ்ட்டாரண்ட் தென்னிந்திய உணவு(ம்) கிடைக்கும். கண்ணில் பட்டுச்சுன்னேன். விட முடியுமா? அங்கேயே போனோம். எனக்கு ஒரு தோசை. கோபாலுக்கு ஒரு தாலி(?):-))))) தோசை நாட் பேட். தாலி சகிக்கலை:(
அடுத்த பகுதியில் இருந்து தமிழ்ப்பேச்சரவம் கேக்குதேன்னு கை கழுவப்போகும்போது பார்த்தால் ஷால், ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு பெரிய குடும்பம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
தேவாலயமும் நூலகமும்

காளிபாரி கோவில் இருக்காம். அப்புறம் க்றைஸ்ட்சர்ச் இருக்காம். ஊர்ப்பாசம் விடலை. சரிவுப்பாதையில் மெள்ள ஏறி மேலே சர்ச்சுக்குப் போனோம். சண்டே சர்வீஸ் முடிஞ்சு மூடிக்கிடக்கு. மலையில் இருக்கோம் என்ற உணர்வே வரலை. பெரிய சமநிலம். ஒரு பக்கம் நூலகம். கட்டிடங்கள் எல்லாம் ப்ரிட்டிஷ் காலத்து ஸ்டைல். ஜேஜேன்னு கூட்டம். 90 சதமானம் சுற்றுலாப் பயணிகள்தான். கூட்டதினருக்கு வேண்டி இருக்கேன்னு பஞ்சு மிட்டாய் முதல் சவாரிக் குதிரைகள்வரை வகைவகையா வியாபாரம். இந்திரா காந்தி சிலைக்குப் பக்கத்தில் பெரிய கூடாரத்தில் Thalassemia பாதிப்பு உள்ளவர்களுக்காக ஒரு ஒன்றுகூடல் மீட்டிங். பழைய கால வட்டவடிவக் கட்டிடத்தை ரெஸ்ட்டாரண்ட் ஆக மாற்றி வச்சுருக்காங்க. ஒரு இடத்தில் ஆர்ட் எக்ஸிபிஷன் நடக்கும் கட்டிடத்தின் வெளியே தரை முழுசும் வரைஞ்சு வைச்சிருக்கும் ஓவியங்கள். பக்கத்துலேயே அமெச்சூர் நாடக சொஸைட்டி. இது 1873 லே ஆரம்பிச்சது. நம்ம ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் போட்டு ஜமாய்ச்சுருப்பாங்க. இப்பவும் நடக்குது போல!


இந்தச் சதுக்கத்தில் சினார் மரம் ஒன்னு அரியவகைன்னு தகவலோடு அங்கே நிக்குது. கெயிட்டி தியேட்டர், போலீஸ் தலைமையகம், டவுன் ஹால், நகர சபைக் கட்டிடம் எல்லாமே வெள்ளையர் கட்டி வச்சுட்டுப் போனவைகளே. முதல் வீடு இங்கே 1822 இல் கட்டுனாங்களாம்.கிருஷ்ணா பேக்கரியில் தள்ளுமுள்ளாக் கூட்டம். மோதகம் போல ஒன்னு தட்டுதட்டா வாங்கி மக்கள் ஸ்வாஹா பண்ணிக்கிட்டு இருக்காங்க. நானும் கூட்டத்தில் ஐக்கியமானேன். இதன் பெயர் மோமூஸ். இனிப்பான்னு கேட்டால் ஸ்பைசியாம். ஐயோ..... வேணாம். இனிப்புக் கொழுக்கட்டைன்னு நினைச்சேனே:( (கோபாலுக்கு வாங்கிக் கொடுத்துருக்கலாமோ?)
நகரசமைக் கட்டிடம் & காவல்துறை தலைமையகம்

இந்த காளி பாரி கோவிலில் இருக்கும் தேவிக்கு ஷ்யாமளான்னு ஒரு பெயர். இதையொட்டித்தான் இந்த நகரை நிர்மாணிச்சப்ப ஷிம்லான்னு பெயர் வந்துருக்கு. கேட்டதும்(இந்த) சண்டிக்கு நல்ல சந்தோஷம். ஏற்றத்தில் நடக்கும்போது மூச்சு இளைக்குது (உடல் இல்லை. மூச்சு மட்டும்) என்றதால் காளி கோவிலுக்குப் போகலை. இந்தச் சதுக்கத்தில் இருந்து தலையை அண்ணாந்து பார்த்தால் மலை உச்சி முகட்டில் ஹனுமான் சிகப்பா தெரிஞ்சார். அது நம்ம லிஸ்டில் இருக்கும் கோவில்.
மறுபடி எவ்வேழு ரூ கொடுத்தி லிஃப்டில் இறங்கிக் கீழே வந்தோம். இப்போ ரெண்டே முக்கால் மணி ஆச்சு. பீமாகாளி கோவிலுக்கும் ஜாக்கூ மந்திருக்கும் போயிட்டு வரணும். பேசாம உள்ளுர் வண்டி ஒன்னு பிடிச்சால் எளிது. வழி தெரியாமத் தடுமாற வேணாமுன்னு லிஃப்ட் இருக்கும் வளாகத்தில் விசாரிச்சோம். ஏராளமான டூரிஸ்ட் டாக்ஸிகள் குவிஞ்சு கிடக்கு. நோ பேரம். எல்லாம் ஃபிக்ஸட் ப்ரைஸ். டூரிஸ்ட் அஸோசியேஷன் குறிப்பிட்ட கட்டணமாம். 350 ரூ போகவர. ஆனால் பீமகாளி கேள்விப்படலையாமே. ஜாக்கூ மந்திர் அடிவாரத்தில் பாபா பாலக்நாத் மந்திர் இருக்குன்னாங்க. எவ்வளவு நேரமாகுன்னா.... ஒரு மணியில் போயிட்டு வந்துடலாமாம். சரின்னு கிளம்பினோம்.

நம்ம திட்டம் என்னன்னா சரியா நாலு மணிக்கு ஷிம்லாவை விடணும். இருட்டு வருமுன் மலைப்பாதையைக் கடந்துடணும். அம்புட்டுதான்.

ஜாக்கூ மலைக்குப்போகும் வழி குறுகலான மலைப்பாதை. சாதாரணச் சின்ன வண்டிதான். இண்டிகா. இது மலை ஏறுமான்னு எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் சின்ன முக்கலோடு ஏறுச்சு. வளைஞ்சு வளைஞ்சு நாலு கிலோ மீட்டர் போகணும். ஒரு இடத்தில் ரொம்ப ஷார்ப்பான வளைவு. அங்கே ஒரு சமநிலையில் கொஞ்ச இடம் நேரா அங்கே போய் வண்டியைத் திருப்பி நிறுத்திட்டு இந்த வளைவுலே ஏறணும். ட்ரைவர் வண்டியைத் திருப்பி நிறுத்திட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்க ரெடியாகும் விளையாட்டுக்காரர் நல்லா நிதானமா நாலைஞ்சு முறை ஆழ்ந்த மூச்செடுத்து விர்ன்னு கிளம்புவதுபோல உயரப்பாதையில் கிளம்பினார்!!!!


வர்ற வழியில் கோவில் எத்தனை வருசத்துக்கு முந்தி கட்டுனாங்கன்னு ட்ரைவரைக் கேட்டார் கோபால். (எனக்கு மேட்டர் தேத்தித் தர்றாராம்.)ப்ராச்சீன் என்றார் ட்ரைவர். ஹனுமன் வந்து இறங்குனதில் மலை பூமிக்குள்ளே போயிருச்சுன்னார். கதையை உங்களுக்கு அப்புறமாச் சொல்றேன்னு கோபாலிடம் ரகசியமா(தமிழில்) சொல்லிட்டுக் குரங்கு நடமாட்டம் அதிகமான்னு ட்ரைவரிடம் கேட்டால்.... அங்கே பூஜை சாமான்கள் விற்குமிடத்தில் குச்சி கிடைக்கும். ஆளுக்கொன்னு எடுத்துக் கையில் வச்சுக்குங்க. மூக்குக் கண்ணாடியைக் கழட்டிடணும். பறிச்சுக்கிட்டு ஓடிடும் என்றார்.

பாதையில் போகும்போது ஒரு ரெண்டு வளைவுகள். கோவில் வாசலுக்கு வந்தோம். பாபா பாலக் நாத்தை தரிசிக்கணும். செருப்புகளை விட தனியா சின்ன அறை. கம்பிக் கதவோடு. வாசலில் விட்டால் குரங்கு கொண்டு போயிருமாம். சந்நிதிக்குள் போனால் பாபா பாலக் நாத் மயில் வாகனத்தில்! அட! நம்ம முருகன்!!!!! தரிசனம் ஆனதும் படம் எடுக்கலாமான்னால்.... தாராளமா ன்னு பதில் கிடைச்சது.
முருகா!!!


Monday, May 09, 2011

ஷிம்லா ஸ்பெஸல்

என்ன ஒரு ரெண்டரை மணி நேரத்துலே போயிறலாம்னு பிரதீப் சொன்னதும் ஆ....ன்னேன். நெட்டுலே ஹிமாச்சல் வலைப்பக்கத்தில் மூணரை மணின்னு போட்டுருக்கு. அப்ப ப்ளஸ் ஒன்னுன்னு சேர்த்தால் நாலரை ஆகும். ஆனா.... கூகுள் மேப் சொல்லுது, ரெண்டு மணி நேரத்தில் போகலாமாம். மனோ வேகத்திலா?

'நிறையதடவை போய் வந்துருக்க ஆள் சொன்னா நம்ப மாட்டியா?' கோபால் குறுக்கிட்டார். வெறும் 129 கிமீதானே?

எட்டரைன்னு நல்ல நேரம் குறிச்சு எட்டு இருவதுக்குக் கிளம்பிட்டோம். அன்னையர் தினம். நேற்று இஸ்கான் கோவிலில் வாங்கிய யசோதா கிருஷ்ணர் பொம்மையைப் படம் எடுத்து ஒரு வாழ்த்துப் பதிவு போட்டுட்டேன். இனி இன்னிக்குப்பூரா அன்னையர் தினம் கொண்டாட்டம்தான்.

ஷிம்லா போகும் வழியில் பாபா ரத்னசாமி கோவிலுக்குள் போய் அஞ்சு நிமிசம் சாமி கும்பிட்டோம். அங்கே இருக்கும் நம்மாட்களைப் பார்த்து நலம் விசாரிப்பு. இதுக்குத்தான் போனதே! பக்கத்துலே மேம்பாலம் வருதுன்னு கோவில் காம்பவுண்டை இடிச்சு வச்சுருக்கு!

பிஞ்சோர் தாண்டி கல்கா. காளியின் கோவிலை போற போக்கில் பார்த்து ஒரு கும்பிடு. கல்கா கோவில் தாண்டுனதும் மலைப்பாதை ஆரம்பிச்சுருது. இதுக்கு முப்பது ரூ வாங்கிடறாங்க.

ஷிம்லா போக கல்காவில் இருந்து ரயில் இருக்கு. மீட்டர் கேஜ். மலைப்பாதையில் ஊர்ந்து போகும் ரயிலில் இருந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கணுமுன்னு ரொம்ப நாளா ஒரு திட்டம்.ஒரு சனிக்கிழமை காலை எட்டரைக்கு ரயில் பிடிச்சா......அஞ்சரை மணி நேரப் பயணத்தில் மலைகளின் ராணியிடம் ஒரு நாள் தங்கி மறுநாள் ஞாயிறு மாலை திரும்பி வரலாம்.

நமக்கெங்கே விடியுது. ரொம்பப் பக்கத்தில் இருப்பதால் ஒரு வீக் எண்ட் போகலாம், போகலாமுன்னு அம்பத்தி ரெண்டு வீக் எண்டுகளைத் தாண்டியாச்சு.

அதான் இன்னிக்கு மதர்ஸ் டே கொண்டாட்டம் மலைகளின் ராணியின் மடியில்ன்னு சட்னு கிளம்பிட்டோம். நோ ரயில். அதுக்கே போக வர பதினோரு மணி நேரம் ஒதுக்கணுமே. போற அவசரத்துலேயும் ஹிமாச்சல் ப்ரதேஷ் வலைப்பக்கம் எட்டிப் பார்த்து முக்கியமான நாலு கோவில்கள் விவரம் எழுதி வச்சேன்.( வச்சதோடு சரி. எடுத்துப்போக மறந்தது கிளைக்கதை)
சண்டிகரை விட்டதுமே ரோடில் பயங்கர ட்ராபிக் ஜாம்

தரமான சாலைன்னு சொல்ல முடியாது. அங்கங்கே குண்டும் குழியுமாத்தான் கிடக்கு. சின்னச்சின்ன ஊர்களைக் கடந்து போறோம். உயரம் மெல்ல கூடிக்கிட்டே போகுது. தரம்பூர் என்ற கொஞ்சம் பெரிய ஊரைக் கடக்கும்போது கோபால் ஒரு முக்கியமான இடத்தைப் பார்த்து வச்சுக்கிட்டார் என்பது எனக்கு மாலையில் தெரிஞ்சது.

மலைச்சரிவில் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் வீடுகள் உயரம் கூடக்கூட கொஞ்சம் அதிகமா இருக்கு.

வழியில்வந்த ஸோலன் என்ற ஊர், அந்த மாவட்டத்தின் தலைநகர். சாலையில் கடைகளும் மக்கள் நடமாட்டமும் கொஞ்சம் கூடுதல்தான். இந்த ஷிம்லா போகும் சாலையில் ட்ரக்குகள், கார்கள் நடமாட்டம் அதிகப்படியாவே இருக்கு. காய்கறி ஏற்றிக்கொண்டுபோகும் வண்டிகள் பார்த்தால் மேலே ஒன்னும் விளையாது போல இருக்கே!

தாராதேவி என்னும் ஊருக்காகக் காத்திருந்தேன். ஊரும் வந்துச்சு ஆனால் நாம் போகணும் என்று இருந்த கோவிலைக் காணோம்! வாயில் இருக்கே வழின்னு விசாரிச்சால் நாம் இதுக்கு முன்னே கடந்துவந்த ஷோகி என்னும் ஊர்லே இருக்காம் இந்தக் கோவில். ஒரு அஞ்சு கிலோமீட்டர் பின்னே போகணும். நோ ஒர்ரீஸ். வரும்போது பார்த்துக்கலாம்.
அடுத்த கோவில் சங்கட மோசன் மந்திர். ஷிம்லா போகும் வழியிலேயே இருக்கு. நல்ல வேளையா கோவிலுக்குப்போகும் வழி வளைவு வச்சுருக்காங்க. சாலையில் இருந்து கீழே இறங்கிப்போகணும். அப்பப்பா.....எப்படிக் குறுகலான பாதை. அதிலும் ஓரமா வண்டிகளை நிறுத்தி வச்சுருக்காங்க. கவனமாப் போகணும் நாம். அதிக தூரம் இல்லை. ஒரு முன்னூறு மீட்டர் இருக்கலாம். கோவிலுக்கு முன்னே வண்டிகள் நிறுத்தும் இடம் இருக்கு. வளாகத்துக்குள்ளே நுழைஞ்சால் கண்ணைக் கவர்வது நம்ம தென்னிந்தியக் கோபுரத்தோடு இருக்கும் ஒரு கோவில். இது புள்ளையாருக்கு! கோபுரம் முழுசும் புள்ளையாரே புள்ளையார். பதினாறுவிதக் கணபதிகளாம்! எப்போ யார் கட்டுனாங்க என்ற விவரம் கிடைக்கலை:( இடதுபக்க ஓரமா இருக்கு கோவில். நடுவில் உள்ள பாதையில் இடப்புறம் நவகிரக சந்நிதி. வலப்பக்கம் கண்ணாடி அறையில் சிவலிங்கம். எதிரில் அழகான சதுர மேடையில் நந்தி!

இடது புறம் வெள்ளைக் குமாச்சிதான் நவகிரகங்களுக்கு.
இன்னும் நேராப் போனால் சங்கட மோசன் கோவில். வாசலின் ரெண்டு பக்கமும் யானைகள். உள்ளே ஹால் . அதன் மறு கோடியில் மூணு சந்நிதிகள். நடுவில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும். அவருக்கு வலப்புறம் நெஞ்சைத் திறந்து அங்கு வீற்றிருக்கும் ராமனையும் சீதாவையும் காண்பிக்கும் ஆஞ்சநேயர் ( இவர்தான் எல்லா சங்கடங்களையும் தீர்க்கும் விமோசனர்) விஷ்ணுவுக்கு இடப்புறம் மஹாதேவர் மனுஷ்ய ரூபத்தில்!
ஹாலில் ஒரு பெரிய கோஷ்டி பஜனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இங்கே உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.
தரிசனம் முடிச்சுப் பிரஸாதம் ( வெள்ளைச்சீனி மிட்டாய்) வாங்கிக்கிட்டு வெளியே வந்தால் கொஞ்சம் நாலைஞ்சு படி இறங்கினால் பெருசா முற்றம். அதிலும் ஒரு சந்நிதி.பரம் பூஜ்ய ஸ்ரீ பாபா நீம் கரோரி மஹராஜ் அவர்களின் சந்நிதியாம். மூடிக்கிடக்கு. இந்தக் கோவிலை புனருத்தாரணம் செஞ்சது இவர்தான். ப்ராசீன் மந்திரா இது இங்கேயே இருந்த கோவிலாம். கோவிலுக்கு வயசில்லைன்னால் அது ப்ராச்சீன். சுத்து வட்டமா உக்கார ஏதுவா சுவர் கட்டி வச்சுருக்காங்க. மலைகளையும் அதில் இருக்கும் கட்டிடங்களையும் பார்த்து ரசிக்கலாம் மேக மூட்டம் இல்லாமல் இருந்தால்......
நல்ல சுத்தமான வளாகம். குழந்தைகள் விளையாட சின்னதா ஒரு பார்க், பக்தர்களின் வசதிக்காக ரெஸ்ட்ரூம் ஒன்னும் இருக்கு. சுத்தம் செஞ்சு வைக்க ஒரு பணியாளரும் இருக்காங்க. பாராட்டப்படவேண்டியது. எல்லா சங்கடமும் விமோசனம் ஆகிருது!

அஞ்சே கிலோமீட்டர் தூரத்தில் ஷிம்லா நகருக்குள் நுழைஞ்சுடறோம். சுற்றுலாப்பயணிகளுக்கான அலுவலகம் ஒன்னு கண்ணில் பட்டது. பார்க்க வேண்டிய இடங்களை விசாரிச்சால் அச்சடிச்ச விவரம் ஒன்னு கொடுத்தாங்க. வெள்ளையர்கள் காலத்தில் கடும் வெய்யிலில் இருந்து தப்பிக்க இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு நிறைய கட்டிடங்களைக் கட்டியிருக்காங்க. அதுலே வைஸ்ராய் மாளிகையும் ஒன்னு. இடப்புறம் மேலே போகும் பாதையில் போய் அதைப் பார்த்துக்கிட்டுப் போங்கன்னு அலுவலர் சொன்னார். அட்வான்ஸ் ஸ்டடீஸ்ன்னு கேளுங்கன்னார். வாசலில் இருந்த ஒரு பயணிகளுக்கான அறிவிப்பில் ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் சம பங்குன்னு சொல்லாமல் சொல்லி இருக்கு:-)
நாங்களும் அங்கங்கே 'அட்வான்ஸ் ஸ்டடீஸ்'ன்னு கேட்டுக்கிட்டே மலைப்பாதையின் வழியாக மேலேறிப்போய் வைஸ்ராய் மாளிகையை அடைஞ்சோம். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி இங்கே இப்போ இந்த மாளிகையில் வகுப்புகள் நடத்துது. உள்ளே மரவேலைப்பாடுகள் எல்லாம் அழகா இருக்கு(மாம்) வைஸ்ராய் மாளிகையாச்சே. இங்கிலாந்து ஸ்டைலில் கட்டி இருக்காங்க.

நாங்க போனபோது மணி பனிரெண்டேகால். கைடு ஒருத்தருடந்தான் உள்ளே போகணுமாம். கைடு 12.50க்குத்தான் வருவாராம். உள்ளே போக ஒரு ஆளுக்கு 20 ரூ கட்டணம். நம் வண்டி உள்ளே வந்து நம்மை இறக்கிவிட்டுப்போக ஒரு 20 ரூ கட்டணம் ஏற்கெனவே கொடுத்தோம். அரைமணி நேரம் காத்திருக்க பொறுமை இல்லை. பாவம் நம்ம டிரைவர், வழியில் எங்கேயும் டீ குடிக்கக்கூட நிறுத்தலை. முதல்லே ட்ரைவரை சாப்பிட அனுப்பணும். வெளியே இருக்கும் அழகான தோட்டத்தைச் சுத்திப் பார்த்துட்டு அங்கங்கே ஜன்னல் வழியா உள்ளே நோட்டம் விட்டுட்டுக் கிளம்பிட்டோம்.
வைஸ்ராய் மாளிகை


பதிவின் நீளம் கருதி பாக்கி நாளை:-)