Showing posts with label அனுபவம் gokarna. Show all posts
Showing posts with label அனுபவம் gokarna. Show all posts

Tuesday, April 27, 2010

ருத்ரபூமியில் கோபத்துக்குப் பஞ்சமேது?

வேறென்ன கோவில்கள் இங்கே இருக்குன்னு தப்பா ஒரு கேள்வியைக் கேட்டுட்டேன். 'தடுக்கி விழாமப் போ'ன்னாங்க. முக்கியமானதுன்னு இருக்கும் மஹாகணபதி க்ஷேத்ரத்தைக் கட்டாயம் கண்டுக்கணும். சிறுவனா வந்து 'ஆப்பரேஷன் ஆத்மலிங்கம்' (சொல் உபயம்- அமைதிச்சாரல். நன்றி) ட்யூட்டியில் மேஜர் பார்ட் இவருக்குத்தானே? அதுக்கு நன்றிக்கடனா வச்ச சிலை. புள்ளையார் சின்னப்புள்ளை உருவமா நிக்கறார். இப்போ இருக்கும் கோவில் 1500 வருசப் பழசு.
மஹாபலேஷ்வர் கோவிலில் இருந்து அதே தெருவில் ஒரு ரெண்டு நிமிச நடையில் இந்தக் கோவில் இருக்கு. வாசலில் கொஞ்சம் பூவையோ இல்லை அருகம்புல்லையோ ஒரு இலையில் வச்சு விற்கும் பெண்களின் கூட்டம் ஏராளம். அந்த ஏரியா முழுசும் கோக்கள் நிதானமா நடைப்போட்டுக்கிட்டு இருக்குதுங்க. பக்தர்கள் வாங்கித் தரும் வாழைப்பழங்கள்தான் முழுநேர உணவு போல! நமக்கு வாகா அங்கங்கே கடை முன்னால் நிக்குதுகள்.
கணபதி கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் முன்னால் ஒரு நீண்ட ஹாலும் அதை அடுத்து ஒரு கருவறையும். ப்ரவுனும் தங்கமும் கலந்தது போல் இருக்கும் கல்லால் செய்யப்பட்டுருக்கார். இவருக்கும் அபிஷேகம் இடைவிடாமல் நடக்க தலைக்கு மேல் பாத்திரம் தொங்குது. பால் நீர் ன்னு எதாவது கொண்டுவந்து மக்கள் அதை நிரப்பிக்கிட்டே இருக்காங்க. அருகம்புல் கொத்தை அவர் தலையில் வைப்பதும், செம்பில் தனியாப் பால் கொண்டு வந்து சொட்டுப்பாத்திரத்தில் விடாமல், டைரக்ட்டா இவர் தலையில் ஊத்துவதுமா அவரவர் விருப்பபடி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கருவறைக்குள்ளே நுழையணுமுன்னா டிக்கெட் வாங்கிக்கணும். ஒத்தை ரூபாய்தான். எங்கே வாங்கணுமுன்னா ஹாலின் ஒரு ஓரத்தில் கவுண்ட்டர் இருக்காம்.

ரெண்டு டிக்கெட் கொடுங்கன்னு பத்து ரூபாய் நீட்டுனதும் கவுண்ட்டர் மனுஷர் அப்படியே கொதிச்சுப் போயிட்டார்! அவர்முன்னால் மேசையில் ஒருரூபாய் ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய் நாணயங்கள் கோபுரங்கள் போல அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. சில்லறையாக் கொண்டு வரணுமாம். நம்மகிட்டே உண்மையாவே சில்லறை ஒன்னும் இல்லை. இருந்ததெல்லாம் வழிச்சு வாழைப்பழம் வாங்கியாச்சு மாடு பாப்பாக்களுக்கு.
'பரவாயில்லை. பத்து ரூபாய் வச்சுக்குங்கோ .ரெண்டு டிக்கெட் கொடுங்கோ'ன்னா அவருக்கு இன்னும் அசாத்தியமாக் கோபம் வருது. நம்ம கோபால் காசுக் குவியலைக் காட்டி அதுலே இருந்து அஞ்சு ரூபாயைத் தந்தால் போதும். மீதி வேணாமுன்னார். 'இனாம் ஒன்னும் வேணாம். இதோ ரெண்டு டிக்கெட். எடுத்துக்கோனு நம்ம பத்து ரூபாயையும் ரெண்டு டிக்கெட்டையும் கவுண்ட்டர் ஜன்னல் வழியாத் தள்ளிக்கிட்டே கத்தக் குரலெடுத்தார். ருத்ரபூமியாச்சே.... அதே கோபம் நமக்கும் ஏறாதா? நான் அந்த ரெண்டு டிக்கெட்டையும் மறுபடி உள்ளே தள்ளிட்டு எனக்கும் இலவசம் ஒன்னும் வேணாம். அப்படிப்போய் சாமியைப் பார்க்காட்டிப் பரவாயில்லை. கோவிலில் உக்கார்ந்துக்கிட்டு இவ்வளோ கோபம் கூடாதுன்னு சின்னதாக் கத்துனேன். (மந்திர்மே பைட்கி இத்னா குஸ்ஸா அச்சா நையே)

ஒரு நொடி தலையைத் தூக்கி என்னை ஏறெடுத்துப் பார்த்த மனிதர்..... கொஞ்சம் தழைவான குரலில் தரிசனம் முடிச்சுட்டு அப்புறமாச் சில்லரை மாத்திக் கொடுங்கன்னார். நான் ஒன்னும் சொல்லாம கவுண்டரை விட்டு நகர்ந்துட்டேன். கருவறைக்குப் போகும் படிக்கருகில் ஒரு அர்ச்சகர் தட்டுலே நிறையச் சில்லரைக்காசு இருந்துச்சு. அங்கே போய் பத்துக்குச் சில்லரை கேட்டதும் கொஞ்சம் முழிச்சார். பரவாயில்லை கொடுங்க. எல்லாம் இங்கேதானே திரும்பிவரப் போகுதுன்னதும் கொடுத்துட்டார். சரியான சில்லரையா ரெண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு 'gகேட்'டுக்குச்சியை(!) தாண்டி புள்ளையாரின் தொப்பை வயித்தைத் தொட்டுத் தடவிக் கும்பிட்டேன்:-)
கோவில் தேர் நின்ன இடம் தாண்டி எதிர்வரிசைக்குப் போனால் ஸ்ரீ வெங்கடரமண ஸ்வாமிக்கு ஒருதனிக்கோவில். இந்தப் பக்கங்களில் தேர் அலங்கரிப்பது ரொம்ப வித்தியாசமா இருக்கு. வெள்ளையும் சிகப்புமா முக்கோணக்கொடிகள் வச்சே அலங்கரிச்சுடறாங்க. வழியில் கரகம் போல் அலங்கரிச்ச ஒன்றைத் தலையில் வச்சுக்கிட்டு ஒரு கூட்டம் கொட்டுமுழக்கோடு ஆடிக்கிட்டே வந்தாங்க. கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ஒரு வெள்ளைக்காரர் ஆட ஆரம்பிச்சார்.
பெருமாள் கோவில் பழமையான கோவில்தான். நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை. கோவிலின் முன் மண்டபம் நல்லா கலர்ஃபுல்லா இருக்கு. மூலவர் கொஞ்சம் இருட்டுலேதான் நிக்கிறார். பண்டிட் ரொம்ப நல்லா தீபாராதனை செஞ்சு ப்ரஸாதம் கொடுத்தார்.




கோவிலை ஒட்டிய வீதியில் சின்னச்சின்னத் திண்ணைகள், பொட்டிக்கடைகளா மாறி இருக்கு! வீட்டையும் பார்த்துக்கிட்டு அப்படியே யாவாரத்தையும் பார்த்துக்கறதுதான்! நம்ம ஊர்ப்பக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இப்படித்தான் இருக்கும். நாம் மாறிட்டோம், அவுங்க இன்னும் மாறலை. செல்ஃபோன் பயன்படுத்தும் விஷயத்தில்கூட தமிழ்நாடுதான் முன்னேறிக்கிடக்கு. அம்பானிகளையும் டாடாக்களையும் இன்னும் பணக்காரரா ஆக்கியே தீரணுமுன்னு சபதம் எடுத்துருக்கோமுல்லே?
கொஞ்சம் வயதான மலைநாட்டுப் பெண்கள் தமிழ்சினிமா நாயகிபோல ஒரு உடை போட்டுருந்தாங்க. வெய்யிலுக்கு இதமா இருக்குன்னு பார்த்தாலே தெரியுது.
ஊருக்குள் நிறைய வெள்ளைக்காரகளைப் பார்த்தேன். இங்கே ஓம் பீச்ன்னு ஒன்னு இருக்காம் ஹிந்தியில் ஓம் என்ற எழுத்துவடிவமா கடற்கரை இருக்குதுன்னாங்க. அங்கே கேம்ப் சைட்டும் கொஞ்சம் மலிவான தங்குமிடங்களும் இருக்குன்னு வெள்ளைக்காரர்கள் அங்கே தங்கிடறாங்களாம். இவுங்கெல்லாம் நம்மைப்போல ஒரு நாள் ரெண்டு நாளுன்னு இல்லாம ரெண்டு மாசம் மூணு மாசமுன்னு தங்கி நிதானமாச் சுத்திப் பார்க்கும் ஆட்கள். ஆனால் இவுங்களுக்குக் கோவிலுக்குள் போய் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை:(

சமஸ்கிரதம் படிக்கவும், வேதங்களைக் கத்துக்கறதுக்கும் இங்கே கல்வி நிலையங்கள் , இருக்கு. நாடெங்கிலும் இருந்து மாணாக்கர்கள் வர்றாங்களாம்.


இன்னும் ஏராளமான கோவில்களும் கடற்கரைகளும் இருந்தாலும் நேரம் இல்லாததால் கிளம்பினோம். காலையில் வந்த அதே தேசீய நெடுஞ்சாலை 17 இல்தான் திரும்பிப்போகணும். பகல் சாப்பாட்டுக்கு அங்கே இங்கேன்னு தேடி ஒன்னும் சரிப்படலைன்னு முருதேஷ்வராவில் இருக்கும் ஆர். என் எஸ். ஹைவே ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். சிம்பிளான டைனிங் ஹால். ரெஸ்ட்ரூம் எல்லாம் படு நேர்த்தியாச் சுத்தமா இருக்கு. பயணத்துலே இதுதான் பெரிய ப்ராப்லமாப் போயிருது. இன்னும் நம்ம மக்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சரியா இல்லை என்றது எனக்கு ரொம்பவே வருத்தமான விஷயம். செல்ஃபோன் வளர்ச்சியையும் வசதிகளையும் பார்த்தால் இதுலே எல்லாம் முன்னேறத் தெரிஞ்ச நம்ம மக்கள் எப்படி அடிப்படை சுகாதார அறிவே இல்லாம இருக்காங்கன்னு நொந்துக்கத்தான் வேணும்.

இங்கிருந்து சுமார் ஒன்னரை மணி நேரப்பயணம். கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தாச்சு. நீண்ட மதில் சுவர்களைச் சுற்றி கோவில் முகப்புக்கு வந்து உள்ளே நுழைஞ்சால் கொடிமரத்தைத்தாண்டி ஏழெட்டு டீன் ஏஜ் பெண்கள் நடனமாடிக்கிட்டு இருக்காங்க. பாட்டுப்பாடிக்கிட்டே ஒரு இளம்பெண் பக்தியோடு நடந்து அந்தப்பெண்கள் கூட்டத்தில் புகுந்து போறாங்க.



"தாயே மூகாம்பிகா..... இது என்ன உன் விளையாட்டு"!!!!

ஷூட்டிங் நடக்குது. பக்திப்பாடல்களுக்கான படப்பிடிப்பாம்.
கோவில் வாசலில் 'செல்ஃபோனுக்குத் தடா'ன்னு அறிவிப்பு இருக்கு. உள்ளே மக்கள் தாராளமா இங்கேயும் அங்கேயுமாப் பேசிக்கிட்டு இருக்காங்க!

முதலில் பிரகாரங்களைச்சுற்றி வந்து அங்கே இருக்கும் சந்நிதிகளில் சேவிச்சுட்டு அப்புறமா மூலவரைப் பார்த்து சேவிப்பதுதான் மரபுன்னு நினைக்கிறேன். ஆனா .... அது என்னவோ முதலில் மூலவரை நோக்கி ஓடுவதே எனக்குப் பழக்கமாகிப் போயிருச்சு. சரியான இடும்பி:(

"ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே "மூகாம்பிகையே

பத்மாசனம் போட்டு உக்கார்ந்து அருள் பாலிக்கும் அம்பாள் (காலடியில்) காலுக்கு முன்னே சிவன் லிங்க ரூபத்தில். அதில் ஒரு தங்கரேகை ஓடுதாம். அபிஷேக சமயத்தில் தெளிவாகத் தெரியுமாம். ஆனா ஆறுமணிவரை காத்துருக்கணும். சதுரமான பீடத்தின் நடுவில் பளபளன்னு செம்பு மூடி போட்டு வச்சுருக்காங்க.

மீதி அடுத்த இடுகையில்......................

Sunday, April 25, 2010

பசுவின் காது

78 கிலோமீட்டர்தான் ஒன்னரை மணி நேரம் பயணம். வழியிலே எங்கேயும் நிறுத்தலை. வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்ததுதான். Grand Canyon வந்துட்டோமோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன். செம்மண் குன்றுகளை பெரிய பெரிய துண்டுகளா வெட்டி எடுத்து அப்படியே ராட்சஸ மைசூர்பாக்காட்டாம் அடுக்கி வச்சுருக்காங்க. இதை அடுக்கி வீடு கட்டிக்கலாம். கேரளாவில் இப்படி கட்டுன வீடுகளைப் பார்த்துருக்கேன். இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் போனால்....இந்த செம்மண் குன்றுகள் ஹிஸ்டரி ஆகிரும். இந்தச் செம்மண் காட்டிலே எக்கசக்கமா முந்திரி மரங்கள் நிக்குது.
ஒரு வளைவில் திரும்புனதும் கடலோரப்பாதை வந்துருது. கொஞ்ச தூரத்தில் உப்பளங்கள் தென்பட்டது. கடல் தண்ணீரைப் பாத்திக் கட்டி விட்டுருக்காங்க. அங்கங்கே சின்னச்சின்னக் குவியல்களாக் குவிச்சுருக்கும் உப்பு..

ஊருக்குள் வர்றதுக்கு முன்னாலேயே 'ஓம் பீச்' இந்தப் பக்கம்னு வலதுபக்கம் போகச் சொல்லி ஒரு கைகாட்டி. 'ஓஹோ அப்படியா'ன்னு நாம் இடதுபக்கம் போனோம். ரொம்பப் பழைய ஊர். குறுகிய தெருக்களொடு இருக்கு கோகர்ணம். ஏழு முக்தி ஸ்தலங்களில் ஒன்னு. தக்ஷின் காசி என்ற புகழ். இங்கே பித்ருகடன் செய்தால் முன் பத்துத் தலைமுறை, பின் பத்துத் தலைமுறை, இப்போ இருக்கும் தலைமுறைன்னு 21 தலைமுறைக்குக் கடன் செய்த பலனாம். இங்கே வந்து இறந்தவர்களுக்கு டைரக்டா சொர்கம்தானாம். இன்னொரு பிறவி என்பதே இல்லாமல் போயிருமாம். எப்பேர்ப்பட்டப் படுபாதகம் செய்தவங்களுக்கும் இங்கே உள்ள மஹாபலேஸ்வரரைத் தரிசனம் செய்தால் பாவம் நீங்கி மோக்ஷம் உறுதியாம்.

கோகர்ணம் பெயர்க்காரணம், விளக்கம் ரெண்டு மூணு இருக்கு. அதுலே ஒன்னு ரொம்ப சுவாரசியமானது. வந்து உக்காருங்க. கதையை ஆரம்பிக்கலாம்.


கோடானகோடி யுகங்களுக்கு முன்னே....... ப்ரளயம் வந்து எல்லாமே அழிஞ்சு போன காலக்கட்டம். அப்போ இருந்த ப்ரம்மாவுக்கு புது சிருஷ்டி செய்யவேண்டிய நிர்ப்பந்தம். மனசை ஒருமுகப்படுத்தி த்யானம் செஞ்சுக்கிட்டு இருக்கார். கடுமையான தவத்தின் முடிவில் ப்ரம்மாவின் நெற்றியில் இருந்து ருத்திரன் வெளிப்பட்டு நிக்கிறார். கண் திறந்து பார்த்த ப்ரம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. படைக்கும் தொழிலை ருத்திரரைவிட வேறு யாரால்சிறப்பாகச் செய்யமுடியுமுன்னு சிந்திச்சு, 'நீங்கதான் பொருத்தமானவர். உங்க கையாலே எல்லாத்தையும் படைச்சுருங்க'ன்னு சொல்லி வேண்டிக்கிட்டார். (எப்படியோ வேலையை நைஸா ருத்திரன் தலையில் கட்டியாச்சு)

'அதுக்கென்ன, செஞ்சுறலாம். நான் படைக்கும் ஜீவராசிகள் எல்லாம் நற்குணங்கள் மட்டுமே பொருந்தியதாகவும், என்றென்றைக்கும் அழியாமல் நிலைத்து வாழ்வதாகவும் இருக்கப்போகுது பார்'ன்னு சொல்லிக்கிட்டே பாதாள லோகத்துக்குப்போய் தவம் இருக்க ஆரம்பிச்சார் ருத்திரர். (ஆன்னா ஊன்னா தவம் இருந்துவாங்களே!)

இதோ அதோன்னு காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு. இங்கே ப்ரம்மா வெயிட்டீஸ். மூணு யுகாந்திரங்கள் போயிருச்சு ஒன்னும் நடக்கலை. இவர்வேற சத்வம் , ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஆன உயிர்களைப் படைக்காமல் எல்லாமே சாத்வீக குணமுள்ளவையாக படைக்கறேன்னு போயிருக்கார். இப்படி இருந்தால் சமுதாயத்துலே கலவரமும் ஒழுங்கீனமும் பெருகித் தாறுமாறா ஆகிருமேன்னு கவலையா வேற இருக்கு. ருத்திரனுடைய ஆவேசத்தை நினைச்சுப் பார்த்தால் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல முடியலைன்னு கவலைப்பட்ட ப்ரம்மா, தாமே படைக்கும் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சுட்டார். முக்குணங்களும் உள்ள பல்வேறு ஜீவராசிகள் பொறந்தாச்சு பூமியில் நிகழ்ந்த மாறுதல்கள் எல்லாம் தவத்தில் இருந்த ருத்திரனுக்கு ப்ரகிருதி மூலம் தெரியவந்துச்சு. 'என்கிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் செஞ்சு முடிக்கறதுக்குள்ளே அப்படி என்ன அவசரம்'னு ஆவேசமாக் கிளம்பி வர்றார்.

பாதாள லோகத்துலே இருந்து பூலோகம் வர்ற வழி தடைபட்டுப்போய் பெருசா பூமி தலைக்குமேலே நிக்குது. தலையாலே முட்டி ஒரே இடி.யில் இடிச்சுப் பிளந்துட்டு வெளிவரப்போகும் சமயம். பூமாதேவி, ருத்திரனை வணங்கி பணிவாகச் சொல்றாள். "தயவு செய்யுங்க. உங்க கோபத்தையும் வேகத்தையும் என்னால் தாங்க முடியாது. உங்க உருவைச் சுருக்கிச் சின்னதாக மாற்றி என் காது வழியாக மெதுவாக வெளியே வந்தால் உங்க பாரத்தைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியும். கருணை காட்டுங்க."

பூமாதேவி பசுவைப்போல் பொறுமையுடன் வணங்கிச் சொன்னது ருத்திரனுக்குப்பிடிச்சுப்போச்சு. சரின்னு சம்மதிக்கிறார். பூதேவியும் பசுவாகவே உருவம் எடுத்து நிக்கறாள். உடனே தன் உடலைச்சுருக்கிக் கட்டைவிரல் அளவான ரூபம் எடுத்து அவள் காது வழியாக மெதுவே ருத்திரன் வெளிப்பட்டார். உன்னுடைய 'ஆட்டிட்யூட்' ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்று முதல் பூமியின் இந்த நிலப்பகுதிக்கு கோ கர்ணம் (பசுவின் காது) என்ற பெயர் இருக்கட்டும். இந்த இடத்தைச் சுற்றி பதினைஞ்சு மைல் அளவுள்ள இடங்களுக்கு க்ஷேத்ரம் என்ற புகழ் இருக்கட்டும்னு சொல்லி பூமாதேவியை ஆசீர்வதிச்சுட்டுக் கோபத்தோடு ப்ரம்மனை நோக்கிப்போறார்.

'நீ சிருஷ்டித்தவைகளை அடியோடு அழிப்பதுதான் முதல்வேலை'ன்னு போகும்போது மகாவிஷ்ணு எதிரில் வந்து, 'எதுக்காக இத்தனை கோபம்? கொஞ்சம் மனசை அமைதிபடுத்திக்குங்க. ப்ரம்மன் ஏதோ தெரியாத்தனமா செஞ்ச பிழையைப் பொறுத்தருளணும். ப்ரம்மன் ஒருமுறை படைச்சுட்டான்னா அது பிரளயம் வந்துதான் அழியணும் என்பது விதி. அதை மாற்ற யாருக்குமே அதிகாரம் இல்லை. பெரியமனசோடு ப்ரம்மனை மன்னிக்கணுமு'ன்னு வேண்டி, 'இந்த இடம் இனி ருத்திரபூமின்னு அழைக்கப்படும் என்றார்'

. பூஜைப் பாத்திரங்கள், சாமி விக்கிரஹங்கள் விற்கும் கடைகள் வீடுகளையொட்டிய திண்ணைப்பகுதிகளில் ஆரம்பிச்சு ரோடுவரை வந்து, ஏற்கெனவே சின்னதா இருக்கும் ரோட்டை இன்னும் குறுக்கி வச்சுருக்கு.



கீக்கிடமான ஒரு இடத்துலே கோவில் தேர் ஒன்னு நிக்குது. மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் ஏராளமான கோக்களும் கோப்பாப்பாக்களுமா ஜேஜேன்னு இருக்கும் பகுதியில் கோவிலின் நுழைவாசல் இருக்கு. உள்ளே போனால் விஸ்தாரமான வெளிப்ரகாரம். வாங்கன்னு வரவேற்றார் ஒரு பண்டிட். எதாவது பித்ரு கார்யங்கள் செய்யணுமான்னு விசாரிச்சார். ' 'இல்லை'ன்னதும், இப்படியே போய் வலதுபக்கம் திரும்புனால் மூலவர் சந்நிதி. நீங்களே தொட்டுக் கும்பிடலாம்.னு சொல்லிட்டுப் போனார். இங்கே இடது பக்கம் மந்திரங்கள் சொல்லும் சப்தம் கேட்டுச்சு. கோடிமுறை ருத்ரம் சொல்றாங்களாம். . .

அங்கே வெளியே பட்டியல் போட்டு வச்சு நமக்கிஷ்டமான தொகையைக் கட்டி இதுக்கு உதவலாமுன்னு அறிவிப்பு பார்த்தேன். வழக்கமா இப்படியெல்லாம் பார்த்தால் அறிவிப்பைப் படிச்சுக்கிட்டேக் கடந்து போகும் பழக்கம்தான் நமக்கு. இன்னிக்கு என்னமோ...மனசுலே ஒரு தோணல். என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.

இது ஏறக்குறைய ஒரு வருசப் ப்ரோக்ராம். ஒரு நாளைக்கு 27,951 முறை ருத்ரம் சொல்றாங்களாம். வருசம் முடியும்போது ஒரு கோடியே ஏழு லக்ஷத்து எழுபதாயிரத்து நூத்தி முப்பத்தி அஞ்சு முறை ஓதி முடிஞ்சுருக்குமாம். போன வருசம் ஏப்ரல் மாசம் 27க்கு ஆரம்பிச்சது. இந்தவருசம் மே மாசம் 16 தேதிக்கு முடியப்போகுது. உலக 3 சரித்திரத்தில் இது முதல்முறையாச் செய்யப்படுது. ஆஹா.... 'சரித்திரம்' என்றதால்தான் மனசு சரின்னு சொல்லுது!