Wednesday, April 03, 2024

நம்ம வீட்டில் பாராயணமும் சம்பந்தி வீட்டு நவராத்ரியும் !

வழக்கமா விஜயதசமியன்னிக்கு ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்  செய்வோம் என்றாலும்.....  நண்பர்களையெல்லாம் கூப்பிட்டுச் செய்வது  விஜயதசமி கழிஞ்சு வரும் சனிக்கிழமைகளில்தான்.  எப்பவாவதுதான் அபூர்வமா விஜயதசமிநாள் சனிக்கிழமையா லபிக்கும்! 
இந்தவருஷம் (2023) என்ன ஆச்சுன்னா.... நண்பர்கள்  பலரும் பயணத்தில்  !  அதனால் கொஞ்சம் தள்ளிப்போட்டது, டிசம்பர் 9 ஆம் தேதிக்குன்னு முடிவாச்சு. ஆனாலும்  வழக்கத்தை விட  ரொம்பவே குறைவுதான்  நண்பர்கள் வருகை.
நமக்கு கேட்டரிங் செய்யும் நண்பர் கிடைச்சதும் ஒரு அதிர்ஷ்டம்தான்.  அவர்தான் இன்றைக்கும்  விருந்து சமைக்கிறார். பிரஸாதம் மட்டும் நான் செஞ்சேன். 
நம்மவர் கேட்டுக்கொண்டபடி ஒரு சின்ன மாறுதலும் ஆச்சு. ' நம்மவனுக்கு இது முதல்முறை. அரைமணிநேரம் எல்லோரும்  இருந்து வாசித்தால்  நடுவில் குழந்தை  அழுதால் கஷ்டம். வழக்கம்போல் நாம் காலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்கலாம்.  சாயங்காலம்  நண்பர்கள் வருகையின்போது ஆரத்தி மட்டும் எடுத்தால் போதும்'னு சொன்னார்.

 எனக்கும் அது சரின்னு தோணுச்சு. முக்கியமா எல்லோரும் இருந்து வாசிக்க பூஜையறையில் இப்பெல்லாம் இடமில்லை. புது கொலுப்படிக்காக,  அங்கே இருந்த சோஃபாவையும் அங்கிருந்து எடுத்தாச்சுதானே !


ஆறரை மணிக்கு ஆரத்தி, ஏழு மணிக்கு டின்னர்னு எல்லாம் ஆச்சு.  ஒரு சில நண்பர்கள் ரொம்பத் தாமதமா வந்தாங்க. ஒருநாள் போல ஒரு நாள் இருக்கா என்ன ? 

மறுநாள் நம்ம சம்பந்திகள் வீட்டுலே ஹனுக்காப் பண்டிகை. இது யூதர்களின் தீபத்திருவிழா !  ரொம்ப காலங்களுக்கு முன்,  எதிரிகளிடமிருந்து தங்களுடைய கோவிலை மீட்டெடுத்த நினைவின் விழா என்றும் சொல்லலாம். 

 மொத்தம் எட்டுநாள் பண்டிகை. இந்த எட்டுநாட்களில்  வரும் வீக் எண்டில் சம்பந்தி வீட்டில் உறவினரை அழைத்துக்  கொண்டாடுகிறார்கள். மற்ற ஏழுநாட்களில் வீட்டுவரைக்கும் பூஜை.

முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிச்சதும் ஒரு மெழுகுத்திரி ஏற்றி,   இவர்கள் மதத்தின்படி இருக்கும்  மெழுகுவத்தி ஸ்டேண்டில்  வைக்கிறார்கள். ஒன்பது கிளைகள் இருக்கும் இந்த ஸ்டேண்டுக்கு  Menorah என்று பெயர். இதுலே ஏகப்பட்ட  டிஸைன்ஸ் இருக்கு. நம்ம எகிப்து பயணத்தில் பார்த்திருக்கோம். 
முதலில் ஏற்றும் மெழுகுத்திரியை இந்த   ஒன்பது வரிசையின் நடுவில் (அஞ்சாவது கிளை ) வைக்கிறாங்க.  மறுநாள்  இதேபோல் அஸ்தமிச்சதும் ஒரு மெழுகுத்திரி ஏற்றி முதல் கிளையில் வைக்கிறாங்க.  அஸ்தமனம் முதல் அஸ்தமனம் வரை ஒருநாள். இப்படியே எட்டுநாட்களில் எட்டு மெழுகுத்திரி  ஏற்றி வைக்கிறாங்க.  மொத்தம் ஒன்பது விளக்கு என்பதால் நான்தான்  நவராத்ரின்னு  சொல்றேன்.

ஹீப்ரூ கேலண்டர்படி Kislev மாசத்தின் 25 ஆம் நாள் ஹனுக்கா பண்டிகை ஆரம்பம். இவுங்களுக்கு நாள் ஆரம்பமே  சூரியன் அஸ்தமிச்ச பிறகுதான்.  லூனார் கேலண்டர்படித்தான் எல்லாமே !  உண்மையில் கண்ணுக்குத் தெரிஞ்ச சாமின்னால் அது சந்திரன்தான்.  அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசை ஒரு மாசம்னு சுலபமாக் கணக்கு வச்சுக்கலாம். சூரியக்கேலண்டர்படி கணக்கு வச்சுக்க எப்படி முடியும் ?  தினம் சூரியன் ஒரே மாதிரிதானே.......... வருது.    இல்லையோ ?  

ஆதிகாலத்தில் முதலில் வந்தது லூனார் நாள்காட்டியாகத்தான் இருந்துருக்க வேணும் !

இவுங்க  மட்டுமில்லை..... நம்ம யுகாதி, க்றிஸ்தவர்களின் ஈஸ்டர்,  இஸ்லாமியர்களின்  பண்டிகைகள் எல்லாமே சந்திரக்கணக்குத்தான் !

க்றிஸ்துன்னு  சொல்லும்போதுதான் நினைவுக்கு வருது.......   இந்த ஹனூக்காப் பண்டிகையை   யேசு க்றிஸ்துகூட கொண்டாடி இருக்கார் !  இவருடைய பொறந்த நாளான க்றிஸ்மஸ் பண்டிகையை  முதல் முதலாக் கொண்டாட ஆரம்பிச்ச காலத்துக்கு அறுநூறு வருஷங்களுக்கு முன்னாலே இருந்தே ஹனூக்கா கொண்டாடிக்கிட்டு இருந்துருக்காங்க யூதர்கள்  !

இந்தப் பண்டிகையைப்பற்றிய ஒரு தகவல் எனக்கு ரொம்பவே  பிடிச்சுப்போச்சு ! நாளுக்கொன்னு  இந்த மெழுகுத்திரியை ஏத்தறாங்க பாருங்க... அப்ப விளக்கு ஏத்துன முதல் அரைமணி நேரத்துக்குப் பெண்கள் எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு ! சில இடங்களில் சொல்றாங்க.... அந்த மெழுகுத்திரி முழுசா எரிஞ்சு முடிக்கும் வரை பெண்கள் வேலை செய்யக்கூடாதுன்னு !!!! ஹைய்யோ  !!!!  நான் மட்டும் இந்த சம்ப்ரதாயத்துக்குட்பட்டவளா இருந்தால் நல்ல தடியான பெரிய மெழுகுவத்தியை  ஏத்திவச்சுருவேன். அதுபாட்டுக்கு நாள் பூரா எரியணும், ஆமா :-)  ஜாலியோ ஜாலி..... வேலை முழுக்க நம்மவர் செய்யணும் !  என்ன ஒன்னு.... நியூஸியில்    ஹனூக்கா விழா கோடைகாலத்தில் வர்றதால் சூரியன் அஸ்தமிக்கவே  ராத்ரி ஒன்பது, பத்து ஆகிரும்.  அதுக்கப்புறம் மெழுகுத்திரி ஏத்திவச்சும், நமக்கு செய்ய வேண்டிய வேலை  ஒன்னும் பாக்கி இருக்காதுல்லே ? எட்டுமணி  நேரம் வேஸ்ட்... ப்ச்....

இந்த எட்டுநாட்களில் சாப்பிடாமல் விரதம் இருக்கக்கூடாதாம். அப்பாடா.....! தப்பிச்சேன்.  விரதமுன்னு சொல்றப்பதான் ஊரு உலகத்தில் இல்லாத அளவு பசி வந்துரும்.


விருந்தில் கூட சாப்பிடக்கூடாதவைகள்னு சில சமாச்சாரங்கள் உண்டு.    ஆனால் எண்ணெயில் பொரிச்ச பண்டங்கள் முக்கியமாம்.  பரிசுப்பொருள்  கொடுக்கல் வாங்கல் எல்லாம் உண்டு, கேட்டோ ! இவுங்க க்றிஸ்மஸ் பண்டிகையைக்  கொண்டாடறதில்லை. இந்த  ஹனூக்காதான் பெரிய பண்டிகை.   மகளுக்குக் கல்யாணம் ஆன வருஷம் முதல்  எங்களுக்கும் ஹனுக்காப் பரிசுதான் மகளும் மருமகனும் தர்றாங்க. இந்த வருஷப்பரிசு புள்ளையார் !
சம்பந்தியின் அப்பாவுக்கு  தொன்னுத்தியாறு வயசு ஆவதால் ,  சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தினாங்க.  நீல வண்ண உடைகள் போட்டுக்கணுமாம்!சம்பந்திகள் இருக்கும் ஊர் அடுத்த மாவட்டம். போகும் வழியில் எல்லாம் கிராமத்துக் காட்சிகள் ! ரசித்து அனுபவிச்சேன்னு தனியாச் சொல்லணுமா என்ன ? 
5 comments:

said...

செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனரே

said...

புதியதோர் பண்டிகை குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

அவரவர் மதம் அவரவருக்குத் தாய் போல! தாயைப் பழிக்கக்கூடாது தானே !

அன்பால் ஒன்றுபடுவோம் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நாம் அறியாதவைதான் உலகம் முழுசும் ! வாய்ப்புக் கிடைத்தால் தெரிந்துகொள்ளலாம் !

எனக்குப்பிடிச்சுப்போனது... அந்த மெழுகுவத்தி எரியும் நேரம்தான் :-)

said...

மகள் வீட்டு விழா பற்றி அறிந்தோம். சிறப்பான விழா.

கிராமத்துக் காட்சிகள் படங்கள் மனதுக்கு இனிது.