Monday, April 22, 2024

பொட்டி வந்துருச்சா ?

நம்மூர்லே முக்கியமான பண்டிகைகள்  சமயம்,  வீட்டு வேலைகளில்  நமக்கு உதவி செய்யும் பணியாளர்களுக்குப்  பரிசு கொடுப்போம்தானே ! நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்த காலத்தில் பண்டிகை தினத்தின்  காலையிலேயே.....  வீட்டுக்கு வந்து  வாங்கிக்குவாங்க.  அதுக்கு அப்போ பேரு  'இனாம்' 
(Pic from Google. Thanks to owner )

ஆனா..... பிரபுக்களும் சீமாட்டிகளும் வெள்ளைக்கார ஸ்டைலில் இதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி வச்சு அன்றைக்குத்தான் பரிசுப்பொருட்களை ஒரு பொட்டியில் வச்சுக் கொடுப்பாங்களாம்.  அது முதல்நாள் பண்டிகை முடிஞ்ச மறுநாள்! ஏற்கெனவே அவுங்களுடைய பெரிய பண்டிகையான க்றிஸ்மஸ்  தினத்துக்கான  விருந்துன்னு ஏகப்பட்ட கேக், பிஸ்கெட், புட்டிங், ரோஸ்ட் அது இதுன்னு சமைச்சுக் கொண்டாடி முடிச்ச  மறுநாள் நிறைய சமாச்சாரங்கள் அப்படியப்படியே மீந்து போய் இருக்குமாம். அதையெல்லாம் என்ன செய்வது ?
 
எடு அட்டைப்பொட்டிகளை ! அடுக்கு பலகாரங்களை !  கொண்டுபோய்க் கொடு அநாதை இல்லங்களுக்கு !

இப்படிச் சமையல் மொதக்கொண்டு எல்லா வேலைகளையும்  செஞ்சு முடிச்ச  , மாளிகைப் பணியாளர்களுக்குப் பரிசும் பொட்டிகளில்தான்! 
அதனால் இந்த நாளுக்கு பாக்ஸிங் டே  (Boxing Day )ன்னு பெயர்  அமைஞ்சுருக்கு ! 

நம்ம பக்கங்களில் க்றிஸ்மஸ் தினத்துக்கு மட்டும்தான் அரசு விடுமுறை.  மற்றபடி வெள்ளையர் நாடுகளில்  பாக்ஸிங் தினத்துக்கும் சேர்த்துதான்  விடுமுறை.  மேலும் வருஷக்கடைசியில் வரும் இந்தப் பண்டிகைக்கு ஏழாம்நாள் அவுங்களுக்குப் புதுவருஷத் தொடக்கம் வேற இருப்பதால்  சுமார் ரெண்டு வாரமாவது  நாடுமுழுக்க  விடுமுறைதான். 

ஒரு சுவாரஸ்யமான சேதி.....  பண்டிகை, விழா நாட்கள்,  சனி ஞாயிறாக அமைஞ்சுருச்சுன்னால்..... அடடா...வடை போச்சேன்னு வருந்த வேணாம். தொடர்ந்துவரும் திங்கள் செவ்வாய் கிழமைகள்  அரசு விடுமுறையாக இருக்கும்! 

இங்கே தென்கோளத்தில் இருக்கும் நாடுகளுக்கு இது கோடைகாலம் என்பதால்   கோடைகால விடுமுறையும் கூடச் சேர்ந்துக்குது ! 

நாங்க நியூஸி வந்த புதுசில் முதல்முறையா 'பாக்ஸிங் டே' பற்றித் தெரியவந்தது. முதலில் நான் நினைச்சேன் 'குத்துச்சண்டை'  நடக்கும் போலன்னு !  இல்லையாம்.  அன்றைக்குக் கடைகளில் முக்கால்வாசிப் பொருட்கள் நல்ல கழிவில்  கிடைக்குமாம். சிலசமயம்  50 முதல் 75 வரையிலும் கூட ! ஒரு வருஷம், ஒரு  கார் விற்பனைக் கடையில்  இப்படி ஸேல் போட்டு,  முதலில் வரும் நபருக்கு மட்டும் 90% கழிவுன்னு போட்டதும், சனம்  முதல்நாள் ராத்ரியே போய் ஷோரூம்  வெளியே வரிசை கட்டி நின்னதெல்லாம் கூட நடந்துச்சு !

ஆகக்கூடி, பொட்டிகளில் வச்சு தானம் வழங்கிய தினம், இப்ப  ஸேல் சீஸனாக்கிப் போயிருக்கு !  நம்ம அக்ஷயத்ருதியையை நினைச்சுக்குங்க.  உண்மையை விட்டுட்டு எப்படி ஆக்கி வச்சுருக்கோமுன்னு !!!!

பண்டிகைக்கான அலங்காரப்பொருட்களை வண்டிவண்டியா வாங்கி, யானைவிலையில் போட்டு  பண்டிகைக்கு முதல்நாள் வரை விற்றதுபோக , பாக்கியானதையெல்லாம்,  டிசம்பர் 26 இல்  50% கழிவுன்னு ஆரம்பிச்சு  டிசம்பர் 31 தேதியாகும்போது 90% லே வந்து நிக்கும். 

இங்கே நியூஸியில்  'அவுங்க' பண்டிகையான  குட் ஃப்ரைடே, ஈஸ்டர், க்றிஸ்மஸ்  தினங்களில் முழுக் கடையடைப்புத்தான்.  டிவியில் கூட  கமர்ஸியல் கிடையாதுன்னா  பாருங்க !  சனமும் செய்வதறியாது திகைச்சுக்கிடக்கும்.....  அதனால் மறுநாள் காலையிலேயே கடைகளில் கூட்டம் அம்முவது வாடிக்கை.

இப்படிக் கோலாகலமாக இருக்கும் பாக்ஸிங் டே நாளில் நாம் யானை பார்க்கக் கிளம்பினோம். ஊருக்குள்ளே முப்பது யானைகளை ஓட்டிவிட்டுருக்காங்க.  இது ஒரு சம்மர் ஆக்டிவிட்டின்னு சொல்லலாம். எங்கெங்கே நிக்குதுன்னு ஒரு வரைபடம்  வேற  இருக்கும். போய்ப் பார்த்துட்டு அதன்கூட ஒரு படமெடுத்து அனுப்பி வைக்கணும்.  முப்பதையும் பார்த்து முடிச்ச பிள்ளைகளுக்கு ஏதோ பரிசும் உண்டு. 

நம்மூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்களைப் பறிகொடுத்து மனசொடைஞ்சு இருந்த காலத்தில், நம்மூர் சிட்டிக்கவுன்ஸில் இப்படி ஒன்னை ஆரம்பிச்சது. 'நிமிர்ந்து நில்' என்ற பெயரில்  49 பெருசு & 50 சிறுசுன்ற கணக்கில் ஒட்டைச்சிவிங்கிகளை ஊருக்குள்  அங்கங்கே வச்சதும்,  மக்கள் எல்லோரும் ஓடியோடிப்போய்ப் பார்த்ததும் எல்லாம் நம்ம துளசிதளத்துலேயே விரிவாக ஒரு பதிவில் வந்துருக்கு. அப்போப் பார்த்தது நினைவில்லைன்னால்.... இப்போப் பார்க்கலாம் இந்தச் சுட்டியில் !

https://thulasidhalam.blogspot.com/2015/02/blog-post_6.html

ரெண்டு மூணுமாசம் டிஸ்ப்ளேயில் வச்சுருந்துக் கடைசியில்  ஒரே இடத்தில் எல்லோரையும் கூட்டியாந்து வச்சு, ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஒரு தருமக் காரியத்துக்குக் கொடுப்பது வழக்கம் !  பெரிய பெரிய வியாபார நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்து அவுங்க அலுவலகத்தில் காட்சிப்பொருளா வச்சுருக்காங்க. பெருமைக்குப் பெருமை, தருமத்துக்குத் தருமம்!

https://www.facebook.com/media/set/?set=a.10203739811678337&type=3

 அப்புறம் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு 50 பெருசு, 5 சின்னதுன்னு பெங்குவின் பறவைகள் !

இப்போ  30 யானைகள். யானைக்குப் பெயரும் வச்சாச். எல்மெர் !  இந்த முறை மூளைக்காயத்துக்கு உதவி.   Laura Fergusson Brain Injury Trust 
நேத்து  நியூஸி க்றிஸ்மஸ் மரம் பார்க்கப் பீச் வரை போனப்ப வண்ணத்துப்பூச்சி யானையை தரிசனம் செஞ்சாச் ! இன்றைக்கு  நகரமையத்துக்கு வந்துருக்கோம்.

இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் ஆப் னு ஆப்பு வச்சுடறாங்க.  நம்ம மொபைல்ஃபோனில் அதை இறக்கினாலும் சரியா ஒன்னும் தெரியலை.  எந்தத் தெருன்னு குறிப்பிட்டு இருந்தால் சுலபம்.  நாம்தான் தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. ப்ச்.....

நகரமையத்துலே  அங்கங்கே  கொஞ்சம் க்றிஸ்மஸ் அலங்காரங்களையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே... யானைகளைத் தேடிப்போறோம்.  ஒரு பத்து யானைகள் கிடைச்சதும்,  நேரமாகுதுன்னு வீடு திரும்பினோம்.  இன்னொரு நாள் கிளம்பி வேற பேட்டைகளுக்குப் போகணும். ஆனால்..... நேரம் சரியா அமையலை. 

கடைசியில் ஏலம் விடுமுன் போய் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கணுமுன்னு நினைச்சதும் நடக்கலை.....
யானைக்காரியின் நிலையைப் பார்த்தீங்களா ?  ப்ச்.....  

5 comments:

said...

படங்கள் அழகு. பாக்சிங் டே விளக்கமும் இன்றுதான் அறிந்தேன்!

said...

யானைகள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது. இருந்தும் சிம்பன்சியார் பாசமாக இருக்கிறாரே.

said...

வாங்க ஸ்ரீராம்,

ரசித்தமைக்கு நன்றி !

said...
This comment has been removed by the author.
said...

வாங்க மாதேவி,

சிம்பன்சியார் பாசம் மிக்கவர் இல்லையோ !!!