Friday, April 28, 2023

அம்மன் கூப்பிட்டாள் !! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 41

நம்ம பூனா மாமியின் பெண் வீட்டு விஜயம் ஒன்னு இருக்கு.  கும்மோணம் போயிருந்தாங்க. நேத்து இரவு வந்துட்டாங்கன்னு தகவல் வந்தது. ஃபோனில் விசாரிச்சப்ப,  உடனே  வரச் சொன்னதால் நாங்களும் கிளம்பினோம்.  அதே மயிலைதான்.  

குடும்பப் பேச்சுகள் எல்லாம் ஆனதும் (! ) சம்ப்ரதாயமான வச்சுக்கொடுக்கலில் எனக்கொரு ஸல்வார் செட் கிடைச்சது. நான் வழக்கம்போல்  ஒன்னும் கொண்டுபோகலை. நம்ம சுஸ்வாத் ஸ்வீட்ஸ் தான்  எல்லோருக்கும் :-) இப்பெல்லாம்  நியூஸியில் இருந்து சாக்லெட் வாங்கிக்கொண்டு போகும் வழக்கம்கூட போயே போச்!  அங்கேயே அருமையான  வகைகள் கிடைக்குதே இப்பெல்லாம் ! அதனால்  சுஸ்வாத் தீனிகள்தான் ! லோட்டஸுக்குப் பக்கத்தில் வேற இருக்கே !  நல்ல வசதி :-)

நான்  வரேன்னு சொன்னதும் என் ஃபேவரிட் அரிசி உப்புமா கிளறி ரெடியா இருந்தது.  நம்ம பூனா வாழ்க்கையில்  மாமி செய்யும் அரிசி உப்புமாவும், இனிப்பு ஊறுகாயும் அடிக்கடி தின்னு ருசிகண்டவள் நான் ! பகல் சாப்பாடு நைவேத்யத்தில் ஆச்சுன்னதும், பார்ஸல் ரெடி பண்ணியாச்சு நமக்கு. மாமியும் மாமாவும் பெருமாள்கிட்டே போயிட்டாலும் பிள்ளைகளிடம் எங்களுக்கான அன்பைக் கொடுத்துவச்சுட்டுத்தான் போயிருக்காங்க ! அது அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது ! பசங்களும் பெரியம்மா பெரியம்மான்னு ஆசையாத்தான் இருக்காங்க !

இந்த வீட்டுக்கு வருவது இதுவே கடைசி முறை ! அப்போ ? பொழிச்சலூரில் புது வீடு ரெடியாகுது!  ரெண்டுபேரும் வேலையில் இருந்து ரிட்டையர் ஆகிட்டாங்க. நகரச் சந்தடிகளில் இருந்து விலகி இருக்கும் உத்தேசம் !  அதான் இப்பெல்லாம் சென்னை  மாநகரம் விரிவடைஞ்சுக்கிட்டே  போகுதே !  (இந்தப் பதிவு எழுதும் சமயம், புது வீட்டு க்ருஹப்ரவேசம்  நடந்து நாலு நாட்கள் ஆச்சு ! ) 

கச்சேரி ரோடில் வரும்போதுதான்   அம்மன்கோவில் வளைவு  கண்ணில் பட்டதும் , உடனே வண்டியை அங்கே திருப்பச் சொன்னேன்.  பல வருஷங்களாக இதே ரோடில் எத்தனையோ முறை போய் வந்தாலும் அவள் கூப்பிட்டது இன்றைக்குத்தான் !
அருள்மிகு  முண்டகக்கண்ணியம்மன் கோவில் வாசலில் இறங்கியாச்சு. தாமரை போல் உள்ள கண்களை உடையவள் ! பங்கயற்கண்ணி !! 
கோவிலுக்குள் நுழைஞ்சதும் இடதுபக்கம் இருக்கும் அரசும் வேம்பும் இருக்கும் மேடையில் நிறைய நாகர்களும். புள்ளையாரும் இருக்காங்க.  மரத்தில் நிறைய வேண்டுதல் கயிறுகளும் தொட்டில்களும் !
நாம் நேரா மூலவர் சந்நிதிக்குப் போயிட்டோம்.  வாசலில் நின்னவங்களை, உள்ளே வரச் சொல்லி பூசாரி ஐயா கூப்பிட்டாரு. எனக்குக் கொஞ்சம் வெலவெலத்துப்போச்சு. நல்ல பெரிய உருவத்தில் அம்மன்!   பின்னால் இருக்கும்  பிரபையில் அஞ்சுதலை நாகம்!  ரொம்பவே அழகான நகைநட்டு, புடவையில் நம்மைப் பார்க்குற மாதிரி இருக்காள் !  கற்பூர ஆரத்தியெடுத்து நம்மாண்டை ஜோதியை நீட்டினதும் தொட்டுக் கும்பிட்டுக்கிட்டோம். அஞ்சு நிமிஷம் அங்கே நின்னுக்கிட்டு இருந்ததும், உள்ளூற இருந்த ஒருமாதிரி  'பயம்' போயி, கொஞ்சம் ஸ்நேகமான உணர்வு வந்துச்சு.
மேலே படம் : கூகுளம்மன் அருளியது !

இன்னொருக்கா அம்மனைக் கைகூப்பிக் கும்பிட்டு கருவறைக்கு வெளியே காலடி வைக்கறதுக்கு முன்னால்  ப்ரஸாதமா ஒரு மஞ்சள் பையைக் கொடுத்தார் பூஜாரி ஐயா. நம்மவர் வாங்கிக்கிட்டார். அதுக்குள்ளே வேற சிலரும் கருவறைக்கு வந்துட்டாங்க. நாங்க பிரகாரம் சுத்தக் கிளம்பினோம்.  கருவறையைச் சுத்திட்டுப் பின்பக்கம் போகும்போதே  தென்னோலை வேய்ஞ்ச கூரை ! மேலே திறந்த வெளியா வானம் பார்த்திருக்கும் முற்றத்தில்தான் கருவறை அமைஞ்சுருக்கு. அதுவும் ஓலைக்கூரையோடு ! இதைத்தவிர கோவிலில் மற்ற பகுதிகள் எல்லாம் கட்டடங்களே !



இதே போல் ஒரு ஓலைக்குடிசையில் இருக்கும் அம்மனை, ரொம்பச் சின்ன வயசுலே பார்த்துருக்கேன். எங்க வத்தலகுண்டு பக்கத்துலே தேவதானப்பட்டின்னு ஒரு சின்ன ஊர் இருக்கு. அங்கே  இருக்கும் அம்மன் கோவில் வாசலில் நிக்கும் வேப்பமரத்தில் பால் ஒழுகுதுன்னு செய்தி  பரவுனதில்,  நம்ம குடும்ப நண்பர்கள் , வண்டி கட்டிக்கிட்டு  குடும்பத்தோடு கிளம்பிப்போகும்போது என்னையும் கூப்டுக்கிட்டாங்க. அவுங்க  பழைய வத்தலகுண்டு மாரியம்மன் கோவிலுக்கு, கொம்புக்குத்தண்ணி ஊத்த அவுங்க போகும்போதும்  என்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவாங்க.

பங்குனி மாசம் தொடக்கத்துலே நல்லதா, மூணுகிளையா இருக்கற வேப்பக்கம்பை எடுத்து, அரைச்ச மஞ்சளைப் பூசி, குங்குமம் வச்சு
ஒரு மேடையிலெ நடுவிலெ நட்டு வச்சிருவாங்க. இது கோயிலுக்கு முன் வாசல்லே இருக்கும். தினமும், கோயிலுக்குப் பக்கத்துலெ
இருக்கற குளத்துலெ பொம்பிளங்க முங்கி எந்திருச்சு, கையோட கொண்டுவந்துருக்கற குடத்துலே தண்ணி மொண்டுகிட்டுப் போய்
அந்தக் கம்பத்துக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, சுத்திவந்து கும்பிட்டுகிட்டு, கோயிலுக்குள்ளெ போய் சாமி கும்பிடுவாங்க. இதுபோல ஒரு
மாசம், தினமும் நடக்கும்! ஆளுங்க, குடும்பக் கஷ்டங்களுக்காக, சாமிகிட்டே நேந்துகிட்டு, இப்படி ஒரு மாசம் பூரா தினமும் வந்து 'கொம்பு'க்கு தண்ணி ஊத்துவாங்க!

மேலே இருப்பது நம்ம பதிவு ஒன்னில் இருந்துதான்  !

கூரைக்குடிசைக்குப்பின்பக்கம்  ஒரு சந்நிதி , நாகம்மாவுக்கு!

அதுக்கு இந்தாண்டை ஒரு கிணறு போல !  மேலே இரும்புகம்பி படல் அடிச்சு வச்சுருக்காங்க. அதன் மேல் தேய்ச்சுக் கமிழ்த்திய குடங்கள் !  அப்பதான் அந்த வேலையை முடிச்சுட்டு கொஞ்சம் ஓய்வா உக்கார்ந்துருக்காங்க சில பெண்கள்.  கொஞ்சம் விசாரிச்சுப் பார்த்தேன்.  அம்மன் ரொம்பவே  குளிர்ந்த மனசோடு இருந்து  வரும் பக்தர்களுக்கெல்லாம்  அருள்பாலிக்கணும் என்றதுக்காக காலை கோவில் திறப்பதிலிருந்து உச்சிகால பூஜை வரை ரெண்டுமணிக்கொருமுறை அபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்குமாம் !  அதுக்குண்டான குடங்கள்தானாம் ! 
கோவிலுக்கு நம்ம சரீரத்தால்  உழைப்பதுதான் உண்மையான சேவைன்னு நான் நினைச்சுக்குவேன்.  நம்மால் முடியாததை அவுங்க செய்யறாங்கன்னு  அவுங்கமேல் மரியாதையும் அன்பும் வந்தது. 
உங்களைப் படம் எடுத்துக்கவான்னு கேட்டதும், அக்கான்னு குரல் கொடுத்தவுடன், இன்னுமொரு  பெண்மணி வந்தாங்க. அவுங்கதான் ரொம்ப வருஷமாக் கோவில் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். ரொம்ப நல்லது நாலு நல்ல வார்த்தையும்  கொஞ்சம் அன்பளிப்பும் ஆச்சு.
கொஞ்சம் இந்தப்பக்கம் சப்தமாதாக்களுக்கான சந்நிதி !  
வலம் முடிஞ்சு கருவறையாண்டை வந்துருந்தோம்.  அந்தாண்டை உற்சவருக்குத் தனிச்சந்நிதி. அழகா அலங்காரத்துடன் இருக்காள்.
அப்பதான்  அங்கிருந்த ஒருத்தர் சொன்னார், மூலவர் திருமேனி ஸ்வயம்புன்னு !  தாமரைமொட்டு வடிவத்துலே  இருக்காம். அதுக்குமேலே சந்தனத்தால்   முகம் செய்து அலங்கரிச்சுருக்காம். அட !
வெளியே இருந்தே அம்மனை இன்னுமொருக்காக் கும்பிட்டுக்கிட்டு கோபுரவாசல் கடந்து வெளியே வந்துட்டோம். வாசலில் இருந்தவன்  சட்னு தலை குனிஞ்சுக்கிட்டான் :-) 
எத்தனை முறை இந்தப் பக்கம் போயிருந்தும், இன்றைக்குத்தான் நம்மைக் கூப்பிட்டுருக்காள். அதென்ன இத்தனை காலம் நமக்கு வரத்தோணலையே..... 
கோவில் தலவரலாறு வலையில் தேடுனப்ப,  இந்த இடத்தில் ஒரு தாமரைக்குளம் இருந்ததாகவும், அதன் கரையில் இருந்த  ஆலமரத்தின் பக்கம் ஒரு சமயம் அம்மன் சுயம்புவாகத் தாமரை மொட்டு வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கிட்டாள்னும் தெரிஞ்சது. எல்லாம் 1300 வருசங்களுக்குமுன் நடந்த சம்பவம்!  அப்போ நல்ல தமிழ்த் தெரிஞ்சவங்களா  எல்லோரும் இருந்துருப்பாங்கதானே......    முண்டகம் என்றால் தாமரை என்பதால் அம்மனுக்கு முண்டகக்கண்ணின்னு பெயரும் ஆச்சு !   ஓலைக்கூரை கொட்டகை ஒன்னு போட்டு அம்மனைக்கும்பிட ஆரம்பிச்சாங்களாம்.  காலப்போக்கில் தாமரைக்குளம் தூர்ந்து போய் அந்த இடத்தில்தான் இப்ப இருக்கும் கோவில் உருவாகி இருக்கு !  (ஆஹா.....  ஏரி குளம் ஆக்ரமிப்பைத் தொடங்கி வச்சவள்  நம்ம அம்மனா என்ன ? )

கட்டடம் கட்ட நினைச்சப்ப, அதுக்கு அம்மன் உத்திரவு தரலையாம். அதனால்  அம்மனுக்கான குடிசையை அப்படியே விட்டுட்டுச் சுத்திவரக் கட்டடம் எழுப்பி இருக்காங்க.

சந்நிதிக்குப்பின்பக்கம்  கல்லாலமரம் இருக்குன்னு  அப்பதான் தெரிஞ்சது. நான் கவனிக்காமல் விட்டுட்டேன் போல......  அடுத்த பயணத்தில் கூப்பிடுவாள்னு நினைக்கிறேன்.

இவ்ளோ தூரம் வந்துட்டு அடுத்தாப்லெ இருக்கும் பெருமாளை விடமுடியுதா?  நேரே அங்கே போனோம்.  நம்ம நர்த்தகியின் நினைவு வரலைன்னு சொன்னால் அது பொய்:-)அதே போல நம்ம வித்யா சுப்ரமண்யம் அவர்களின் நினைவும் வந்தது. ஒருநாள் கட்டாயம் போய் 'கண்ணனை' தரிசிக்கணும்.
கோவிலில் அவ்வளவாக மாற்றம் ஒன்னுமில்லை.  ஒரு 14 வருஷங்களுக்குமுன் எழுதிய பதவுதான் சாட்சி :-)

http://thulasidhalam.blogspot.com/2009/09/blog-post_15.html

பேயாழ்வார் அவதார ஸ்தலம்.  தாயார் அமிர்தவல்லி தோன்றிய  கோவில் புஷ்கரணியில் செல்லம் உக்கார்ந்துருந்தது.  முன்னைக்கு இப்போ கோவில் நல்ல பளிச் !


ஆண்டாள் சந்நிதியில் ஒரு ஏழெட்டுப்பெண்கள்  ரெண்டு வரிசையா அமர்ந்து திருப்பாவை வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.  நடுவில் நடந்து போக வேணாமேன்னு இந்தப்பக்க மண்டபத்தின் ஓரமா உக்கார்ந்து  நம்ம 'தூமணி மாடத்தை'  எனக்கே கேக்காத கள்ளக்குரலில் பாடினேன். காது இருக்கும் அழகில் கேட்டுட்டாலும் ! 
மெல்ல நடந்து வலத்தை முடிச்சுட்டு மூலவராண்டை வந்தப்ப......  அவர் திரைக்குப்பின்னால் !
சாயரக்ஷை பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கும் நேரம்.  கோவில் வாத்யக்காரர்கள் வாசிப்பில் !  அந்த மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்.....  ராஜவாத்யத்தில் 'பண்டுரீத்தி கோலு....'  கேட்டப்போ....மனசு அப்படியே மயங்கி நின்னது !  ராமா ராமா...... எதிரில் இருக்கும்  மண்டப முகப்பில் ராமர் புன்னகைத்தார் !
சின்னதா ஒரு வீடியோ க்ளிப் இந்தச் சுட்டியில் !

https://www.facebook.com/100005772932412/videos/792910565117996/

பெருமாள் தரிசனம் ரொம்பவே திருப்தியா அமைஞ்சது!
எப்படியும் இன்றைக்கு டெய்லர் கடைக்குப் போகவேண்டியநாள் தான் என்பதால் மயிலையில் இருந்து பனகல் பார்க் வந்து, பரிசாகக் கிடைச்ச ஸல்வார் செட்டையும் தைக்கக்கொடுத்துட்டு, ஏற்கெனவே தைச்சு ரெடியா இருந்தவைகளை வாங்கிக்கிட்டு, 'நிதானமா தைச்சு வச்சாப்போதும். ரெண்டு வாரம் கழிச்சுத்தான் வருவேன்'னு  அவர் வயித்தில்  பாலை வார்த்துட்டு லோட்டஸுக்கு வந்தோம்.   இனி விஜி வீட்டுக்குப் போகலாம். நாளைக்கு வந்தால் போதும்.

டின்னருக்கு  மாமி மகளின் அரிசி உப்புமா  இருக்கு! அப்பதான் மேஜை மேல் வச்சுருந்த  அம்மன் ப்ரஸாதம் இருந்த பை கண்ணில் பட்டது. 

எடுத்துத் திறந்து பார்த்தால்........... அம்மாடியோ !!!!  ரெண்டு பைகளில்  சம்பங்கிப்பூ மாலை, பூக்கள், தேங்காய், வாழைப் பழம், எலுமிச்சம்பழ மாலை, மஞ்சள், குங்குமம்னு .........
ஒன்னும் வாங்காமக் கோவிலுக்குப் போனவளுக்கு, இவ்வளவா ?

அம்மனே ஆசையாக் கொடுத்துருக்கும்போது.... அம்மன் வேஷம் கட்டிப்பார்க்கத் தோணுச்சு ! ஆனால் முகத்தில் தான் அருளே இல்லை......ப்ச்....


தொடரும்............ :-)                                                            


4 comments:

said...

அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

அம்மன் வேடம் போட்டால் அருள் தானாகவே வந்துவிடுமே.

said...

வாங்க மாதேவி,

சரியாச் சொன்னீங்க !!!! வந்ததே :-)