Wednesday, February 16, 2022

சின்னச்சின்ன சந்தோஷங்கள் !

புள்ளையார் சதுர்த்தி முடிஞ்ச மறுநாள் காலை சாமி அறையைத் திறந்தால்.... சூரியன் வந்து புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு இருக்கான் !  இத்தனை வருஷத்தில்  முதல்முறைன்னு தோணுச்சு!  'நல்ல புத்தி கொடுக்கணுமுன்னு வேண்டிக்கோ.... எப்பப் பார்த்தாலும் என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிட்டே இருக்கேயே' அவனுக்கு  ரெண்டு வரி 'அர்ச்சனை' பண்ணிட்டு மத்த வேலையைப் பார்க்கப்போனேன்:-)
நேத்து பூஜையில் வைக்கப் புள்ளையார் கோலம் போட எடுத்துவச்சது ஒரு மூலையில் அப்படியே கிடக்கேன்னு அதைச் செய்து முடிச்சேன். அவசரக்கோலம், அள்ளித் தெளிச்சாளாம் னு தெளிச்சது ஓரளவு நல்லாவே வந்துருக்கு !  அச்சு, அச்சுதான் இல்லே :-)


புனர்ப்பூஜை முடிச்சுப் புள்ளையாரை இடம் மாற்றியாச். நேற்று சாப்பிட்டக் கொழுக்கட்டைகள்  அவருக்கு ஜீரணம் ஆச்சோன்ற கவலையில் இன்றைக்கு மஹாநைவேத்யம் மட்டுமே :-)
மகள் ஏதோ  ராக்கிங் ச்சேர் வாங்கி இருக்காளாம். அதை எடுத்துவர உதவி கேட்டாள். என்னன்னு கடையில் போய் உக்கார்ந்து பார்த்துட்டு  எடுத்துப்போய் அவள் வீட்டில் கொடுத்தோம்.  பசங்களின் வழக்கப்படி, புதுசா எது வந்தாலும் தனக்கேன்னு அவளுடைய செல்லம் அதைப் புடிச்சுக்கிட்டான் :-)  
சனிக்கிழமை கோவிலுக்குன்னு  போய்க் கும்பிட்டாச்சு.   கோவிட் காரணம் ஜெயிலுக்குள்ளேயே ஆரத்தி. பொறந்த இடம் அதுவே என்பதால் அவனுக்குப் பிரச்சினை இல்லை.  நாம்தான்பாவம்....  நாம் கண்ணாடி வழியேதான் தரிசிக்கணும்.  திரும்பி வரும்போது பார்த்தால்  செர்ரி மரங்களில் நல்ல பூக்கள் வந்துருக்கு. ஒரு பகலில் போய்ப் பார்க்கணும்.


நம்மவருக்குக் கொஞ்சம் உடம்பு சரி இல்லைன்னு டாக்டரிடம் போனால் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லி, அதுலே B12 பத்தாக்குறைன்னு வாரம் ஒரு ஊசி போட்டுக்கச் சொல்லிட்டாங்க. அதுக்காகப்போனால்.....  ரெண்டு மூணு வாளிகளில் டாஃபோடில்  வச்சுருந்தாங்க. வேணுமுன்னால் வீட்டுக்குக் கொண்டு போகலாமாம்.   நல்லது  இனி வாராவாரம் வீட்டுக்குப் பூ !  ஒரு நாலு வாரத்துக்குக் கிடைச்சது. அப்புறம்  சீஸன் முடிஞ்சுருச்சாம். 'கோவிட் லாக்டௌன், கடை அடைப்பு, ஃப்ளைட் கேன்ஸல்' இப்படிப் பலகாரணங்களால் பூக்களை விற்க முடியாத  விவசாயி, தானம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். ஐயோ... இந்த  வைரஸால் எத்தனை பேருக்கு கஷ்டநஷ்டம் பாருங்க.... ப்ச்....

நம்ம தோட்டத்தில்  வருஷத்துக்கொருக்கா வரும் எலிகள் வந்ததும், ரஜ்ஜுவுக்குக் காமிச்சேன். வேணாமாம்!  
சும்மாச் சொல்லக்கூடாது.....  ஒரே மாதிரி மரங்கள் ஒரே வரிசையில் நின்னு பூத்துக்குலுங்கினால் நல்லாதான் இருக்கு!   இப்ப ஊருக்குள்ளும் சில பேட்டைகளில்  செர்ரி மரங்கள் ரோடுக்கு ரெண்டு பக்கமும் வச்சுருக்காங்க.  இன்னின்ன மரம்தான் வைக்கணும், இதெல்லாம் வைக்கக்கூடாதுன்னு இப்பெல்லாம் பேட்டைக்குப் பேட்டைதான்  தீர்மானிக்குதாம். நம்ம ஏரியா பழசுன்றதால் ஆதிகாலத்தில் எல்லாம் கலந்துகட்டி வச்சது போலத்தான் இப்பவும். பக்கத்து வீட்டு மரம் அழகாத்தான் இருக்குன்னாலும், இலை உதிர்காலத்துலே  விழும் இலைகள் எல்லாம் நம்ம வீட்டுக்கூரையில் ஒட்டிப்பிடிச்சுக்கிட்டு மஹாஸல்யம்.  நாமே கஷ்டப்பட்டு  சுத்தம் செய்ய வேண்டி இருக்கு. முந்தியெல்லாம்  செஞ்சுக்கிட்டுத்தான் இருந்தோம். இப்ப வரவர முடியலை.  மரத்தை வெட்டினால் கொள்ளாம்.  பக்கத்துவீட்டாரிடம் புலம்புனப்ப, இனி  சுத்தம் செய்யும்போது அவுங்களும் நம்மோடு சேர்ந்து செய்வாங்களாம்.  மரத்தை வெட்ட மனசு வரலைன்னாங்க.  உண்மைதான். நல்லா இருக்கே. அதுலே பாருங்க.... அவுங்க மரம், அவுங்க வீட்டுக்கூரையில் மறந்துபோய்க்கூட ஒரு இலையை உதிர்க்காது!  

மனசோர்வு அதிகரிக்காமல் இருக்க அப்பப்ப நம்ம 'துளசிவிலாஸ்'  தெருச்சாப்பாடு போட்டுக்கிட்டு இருந்துச்சு.  மருமகனுக்கும் பிடிச்ச வகைகள் வேற !
ஆமாம்.....  இங்கே  34 வருஷமா இருக்கோமே ஒரு பவுர்ணமி சந்திர உதயத்தைக் கடற்கரையில் இருந்து பார்த்தோமா ? இல்லை ஒரு சூரிய உதயத்தைத்தான் பார்த்தோமா ? கடற்கரைக்குப் போகணுமுன்னா ஒரு அரைமணிப் பயணம். உதயம் பார்க்கக்கிளம்பினா ஒரு  இருபத்தியஞ்சு நிமிட்லே போயிடலாம். ஆனால்  குளிர்காலத்துலே  போய்வர்றது கஷ்டம்.சூரியன் தெரியுமான்னே தெரியாம எப்படிப் போறது ? வெயில் காலமுன்னா காலையில்  அஞ்சு அஞ்சரைக்கே அங்கே இருக்கணும். டேலைட் ஸேவிங்ஸ்  இருப்பதால்  உண்மையில் அப்போ நாலரை மணி. எழுந்து அப்படியே போயிட முடியுமா ? ஒரு காப்பித்தண்ணி ?  கணக்குப் போட்டுப் பார்த்தால்  நாலரைக்கே எழுந்திரிக்கணும்.(உண்மை மணி  மூணரை!) நடக்கறகாரியமா ? 

அதான் சந்த்ரோதயம் பார்க்கலாமுன்னு போனால்.....  சுத்தம். கிளம்பி வர்றது  ஒரு மலைக்குப்பின்னால் இருந்து. இது தெரியாமக் கிழக்கில் வருமுன்னு  நாம் கடற்கரையில் இருக்கோம்.  உதயமாகி அரை மணி நேரம் கழிச்சுத்தான்  கடல்தண்ணிக்கு மேலே  கண்ணில் பட்டான்.  இதுக்குப் பேசாம வீட்டுலேயே இருந்துருக்கலாம். இனி போவியா துல்ஸி ? 

நமக்குத்தான் நேரம் சரியில்லையே தவிர கிரகங்கள் எல்லாம்  கூடிப்பேசிக்கிட்டதுபோல ஒன்னா வந்துக்கிட்டு இருக்கு.   நோட்புக்கில்  ஸ்கைமேப் இருப்பதால் எதெது நம்ம வீட்டுக்கு மேலே வந்துருக்குன்னும் பார்த்துக்கலாம் :-)

பிரதமரின் திங்கக்கிழமை செய்தியின்படி ,  கோவிட் கண்ட்ரோலுக்கு வந்துருச்சுன்னாங்க. அப்பதான் தோணுச்சு.... ஏற்கெனவே   உள்ளூர்த் தோழியின் மகனுடைய கல்யாணத்துக்கு  ஆக்லாந்து போய்வர வாங்கிய  டிக்கெட் அப்படியே கிடக்கேன்னு. அங்கே கோவிட் கடுமையாக இருந்ததால் கல்யாணத்துக்குப் பத்துப்பேர் மட்டுமேன்னு  கணக்கு வச்சுருச்சு அரசு.  ஏர்நியூஸிலாந்து சொல்லுச்சு, உங்காசு என்னாண்டை பத்திரமா இருக்கு. அப்புறம் எப்ப வேணுமோ அப்போ பயன்படுத்திக்கோன்னு. ஏன்... திருப்பிக்கொடுத்தால் ஆகாதோ ? 

இப்பதான் லெவல் குறைஞ்சுருக்கு.  ஆக்லாந்து வேணாம்... ஹேமில்டன் போய் வரலாம். அங்கே பெருமாள் கோவில் இருக்கே !  போறது போறோம்... ஒரு நாலுநாள் தங்கி அக்கம்பக்கம் பார்த்துட்டு வரலாம்.  'நம்மவர்' பொறந்தநாளுக்குப் பெருமாள் தரிசனம் ஆகட்டும்னு ......  ரஜ்ஜுவை மகள் பார்த்துக்கறேன்னு சொன்னதால் ஹேமில்டனில் தங்குமிடம், போய்வர ஏர்டிக்கெட்டு எல்லாம்  ரெடி பண்ணிட்டோம். 
நம்மூர் சுதர்ஸன் ஹோமத்துக்கு வந்திருந்த பெருமாள் கோவில் பண்டிட்டுக்கும்  தகவல் அனுப்பியாச். 
ஜருகில்லாமப் பெருமாளைப் பார்க்கலாம் என்ற ஆசை வேற!  கோவிடுக்குப் பொறுக்கலையே....  வைகாட்டோவுக்கு வந்துருச்சாம்.  ஹேமில்டனில் இருந்து ஒரு 37 கிமீ தூரம்தான். கோவிட் நடந்து வந்தாலும்  கூட  நாம் போற நாட்களில்  அது ஹேமில்டனுக்குள் வந்துருக்கும். அதனால் போக வேணாமுன்னார் 'நம்மவர்'. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி.............  ஹூம்.

எத்தனைநாள்தான் இப்படி கண்ணுக்குத்தெரியாத கிருமியிடமிருந்து ஓடி ஒளியறது ?  வந்தா வரட்டுமுன்னு போய்வரலாம். அதான் ரெண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கிட்டோமே....

"அது வர்றது பிரச்சனை இல்லை. அந்த ஏரியாவுக்கு  திடீர்னு லாக்டௌன்  போட்டுட்டா.... எல்லா ப்ளேன் சர்வீஸும் கேன்ஸலாகிரும். நமக்கு வந்தாலும் வரலைன்னாலும் திரும்பி நம்மூருக்கு வர்றது  எப்படி ?  ரஜ்ஜுவின் கதி என்ன ஆகும்? "

 அடராமா..... 

வசூல்ராஜாவின்   வரும்படியைக் குறைக்க வேணாமேன்னு  கோவிலுக்கு ஒரு தொகை அனுப்பிப் பொறந்தநாளன்றைக்கு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செஞ்சாச்சு.  இது பீமரத சாந்தி வேற !

எனக்குத்தான்  மனசாகலை. சின்ன அளவிலாவது ஏதாவது செய்யணும்னு ஆசை. நம்ம யோகா பரிவார் இருக்கே!   யோகாவின் கூடவே ஃபுட்யோகாவும் நடத்தினால் ஆச்சு.  பரிவாருக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி :-) பரிவார் லீடரிடம் அனுமதி வாங்கியாச். உள்ளூர் பிகானிர்வாலாவில் சில ஐட்டங்களை ஏற்பாடு செஞ்சோம். குறிப்பிட்ட நேரத்துக்கு டெலிவரி செஞ்சுடறோமுன்னு சொன்னாங்க. அதே போல ஆச்சு!  ஓனர் நம்ம நண்பர்தான். 

Food Yoga அட்டகாசம்!  பரிவார், நமக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க.  கேக் ஏற்பாடு !  'நம்மவருக்கு ஸ்பெஷல் பர்த் டே !  


 ஆனால் இதெல்லாம் ரெண்டுநாளைக்கு முன்பே நடந்த கொண்டாட்டம்!  
அசல் பொறந்தநாளுக்கு நம்ம வீட்டுப்பெருமாளுக்குக் காஜுகத்லி சமர்ப்பியாமி.  முடிஞ்சதும்  நேராப்போய் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில் தரிசனம்.  இத்தனைநாள் பக்தர்களுக்கு தரிசனம் கண்ணாடி வழியாகத்தானேன்னு போனால் இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாகக் கோவில் திறந்துருந்தது ! 
டின்னருக்கு 'அப்னா பரிவாரோடு'  இங்கே போன வருஷம் திறந்த ஒரு ரெஸ்ட்டாரண்ட் விஜயம். செட்டிநாடு ஸ்பெஷல்னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க.    
சொல்ல விட்டுப்போச்சே..... நம்மவரின் ஒரு பொறந்தநாளில்தான் உங்கள் துளசிதளமும் ஆரம்பிச்சது. 2004 இல் ! 
அவரவருக்கான சின்னச்சின்ன சந்தோஷங்கள்.  நம்ம ரஜ்ஜுவுக்குக் காட்டுக்குள் போய்ப் பார்க்கும் ஆசையாம் :-)



9 comments:

said...

காஜுகத்லி - வாவ்

said...

' சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் மனதை நிறைத்து வைக்கிறது.

திரு . கோபால் அவர்களுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். துளசி தளத்துக்கும் வாழ்த்துகள்.

said...

படங்கள் யாவும் சிறப்பு.

said...

படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள். எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.

said...

படங்கள் எல்லாம் செம!!

பானி பூரி, காஜு கத்லி வாவ்!!

காட்டுக்குள்ள ரஜ்ஜு செம போஸ்!! எலி வேண்டாம்னு சொல்ற ரஜ்ஜு ஆச்சரியம்..

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மிகவும் நன்றி !

said...

வாங்க கீதா !

ரசித்தமைக்கு நன்றி.

செடி எலி யாருக்கு வேணும்? நிஜ எலியைக் கொண்டுவான்றான் !