Friday, February 11, 2022

கட்டைக் கொஞ்சம் தளர்த்தினால் போதுமே..... ஆரம்பிச்சுறமாட்டோம் ?

எங்கூர் பொதுவாகவே அழகுன்னாலும் இந்த செப்டம்பர் மாசம் இருக்கு பாருங்க....   ஒரு தெய்வீக அழகா மாறிடும்.  நியூஸியில் வஸந்தகாலம் ஆரம்பிக்கறது செப்டம்பர் ஒன்னு முதல் !  வஸந்தம் வர்றதுக்கு ரெண்டு வாரம் இருக்கும்போதே... நிலத்தடியில் சூடு வந்துருமோ என்னவோ.... வஸந்தகாலப்பூக்கள்  வெளியே வர ஆரம்பிச்சுரும்.     
அதனால்  ஆகஸ்ட் கடைசி வெள்ளியை கேன்ஸர் சொஸைட்டிக்குக் கொடுத்தாச். டாஃபோடில் பூக்கள்தான்  எங்கே பார்த்தாலும்!  இதையே கேன்ஸர் சொஸைட்டி தனக்கடையாளமா எடுத்துக்கிச்சு.

 அன்றைக்குப் பூராவும் ஊருக்குள்ளே எங்கே பார்த்தாலும்  Fund Raising னு  வாலண்டியர்கள்  குட்டி வாளி  நிறைய பூக்களுடன் இருப்பாங்க. பக்கத்துலே ஒரு உண்டியலும். நாம் விருப்பமான காசைப் போட்டுட்டு ஒரு பூ எடுத்துக்கலாம்.  இப்படித்தான் இருந்தது நாம் இங்கே வந்த ஆரம்பகாலங்களில். அப்புறம் எப்பன்னு சரியா நினைவில் இல்லை..... நிஜப்பூக்கள் மறைஞ்சு அந்த இடத்தை செயற்கைப்பூக்கள் பிடிச்சுக்கிட்டது. அதுலேயே சேஃப்டி பின் இருப்பதால் சட்டையில் குத்திக்க வசதின்றது ஒரு காரணமா இருக்கலாம். இந்தப்பூக்களும் சீன சமாச்சாரம்தான். சப்ளை செய்யும் சாக்கில் இதிலும் காசு பண்ணிடறாங்க சீனர்.  என்ன ஒரு சாமர்த்தியம் பாருங்க !!!!

அதிலும் ஏர்லி ச்சியர்ஸ் என்னும் பூக்கள்  முந்திரிக்கொட்டைகளே !  பார்க்கறதுக்கு மல்லிகை மாதிரி. அருமையான மணமும் கூட ! கொஞ்சம் பெருசா குண்டுமல்லி மாதிரியே இருக்கும். சிலசமயம் ஆகஸ்ட் முதல் வாரமே வந்துரும். போனவருஷம் குளிர்காலம் ஆரம்பிச்சதுமே நம்ம வீட்டில் பூத்து நின்னுச்சு ஒரு செடி. கால விவரம் தெரியாத அப்பாவி....
ஏற்கெனவே லெவல் நாலில் இருக்கு நாடு.  வெளியே தலைகாட்ட முடியாம எல்லோரும் குமைஞ்சுக்கிட்டு இருந்தோமா.... செப்டம்பர் ஒன்னு முதல் ஒரு லெவல் கீழே போங்கன்னாங்க.  இது ஆக்லாந்து நகரம் தவிர. அங்கேதான் கோவிட் தலைவிரிச்சுக் கூத்தாடிக்கிட்டு இருக்கே ! 

ஆகஸ்ட் மாசம் நம்ம ரஜ்ஜுவுக்கு தடுப்பூசி போடணும்.   கோவிட் காலத்தால் அவசர  சிகிச்சை தவிர வேற சமாச்சாரங்களுக்கு வெட் க்ளினிக் திறக்கலை. நமக்கும் தகவல் அனுப்பி இருந்தாங்க, லெவல் மாறினதும் கூப்புடறோமுன்னு.  போகட்டும், நாமும்தான் பயணம் ஒன்னும் போகலையே....  ஹாஸ்டலில்  விட்டுட்டுப் போகணுமுன்னால்தான் தடுப்பூசி விவரம் பார்ப்பாங்க.   இவனால் மற்ற பூனைகளுக்கு ஏதும் ஆபத்து வந்துறக்கூடாதில்லையா ? 
லெவல் மாறினதும் உடனடியா ஃபோன் பண்ணாங்க.  நாங்களும் அவசரடியா இவனைத் தூக்கிட்டுப் போயிட்டோம். எப்பவும்  வெட் செக்கப் போகும் முதல்நாள் நான் ரொம்ப டென்ஷனில் இருப்பேன். சரியான நேரத்துக்குக் காணாமப்போயிருவான் என்பதால்  காலையில் வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வச்சு அடை காக்கணும். இவனும் இன்றைக்கு ஏதோ விசேஷமுன்னு புரிஞ்சுக்கிட்டு வெளியே போயே ஆகணுமுன்னு தர்மக்கூச்சல் போட்டுக்கிட்டு இருப்பான். இன்றைக்கு நல்ல வேளையா வீட்டுக்குள்ளேயே இருந்தானா, சட்னு அமுக்கிப் பிடிக்க முடிஞ்சது:-)
அங்கே வெட்டில் வழக்கம்போல 'சிஸ்டம்' இல்லை. கார்பார்க்கில் இருந்து  வந்துட்டோமுன்னு  போனில்  உள்ளே தகவல் அனுப்பினால்,  முழுக்கவசம் அணிஞ்ச வெட் நர்ஸ் வெளியே வந்து, நம்ம வண்டியில் இருந்து  கூண்டைத் தூக்கிப் போவாங்க. அங்கே  செக்கப் நடக்கும்போது,  வெட்நரி டாக்டர் நம்மோடு ஃபோன் தொடர்பிலேயே இருப்பார்.  என்ன ஏது எப்படி இருக்கான்னு சொல்லிக்கிட்டே வருவார். ஊசி போட்டு, வயித்துக்குப் பூச்சி மாத்திரை,  உடம்பில் ஏதும் பூச்சி வராமல் இருக்க அதுக்கு ஒரு மருந்துன்னு  எல்லாம் போட்டுட்டுத் திரும்பக் கூண்டுக்குள் வச்சதும் வெட்நர்ஸ் கூண்டைத் தூக்கி வந்து நம்ம காருக்குள் வச்சுருவாங்க. அதே போல் ஆச்சு மத்தவங்களுக்கு.

காருக்குள் கத்திக்கிட்டு இருக்கான்னு நாம் கூண்டைத் தூக்கி வெளியில் வச்சோம்:-)
டாக்டர் ஃபோனில் பேசும்போது, 'கொஞ்சம் பல்லில் காறை படிஞ்சுருக்கு.  சுத்தம் செய்யணும். அதுக்கு ஒருநாள்  இங்கே அட்மிட் ஆகணும். இப்ப லெவல்  மூணுலே இருப்பதால்  கஷ்டம். இன்னும் ஒரு லெவல் இறங்கினதும்  கொண்டுவாங்க. அப்படியொன்னும் அவசரமில்லை'ன்னார். மத்தபடி ஆல் இஸ் வெல் :-)
அப்பாடா.... முக்கியமான ஒரு வேலை முடிஞ்சதில் நமக்கு நிம்மதி. வீட்டுக்கு வர்ற வழியில் எல்லாம் ஐயோ, அம்மான்னு கத்திக்கிட்டே வந்தான். வழக்கம்போல் சாமியறைக்குக் கொண்டுபோய் நமஸ்காரம் பண்ணிட்டுத் திறந்து விட்டதும், ஏதோ நாங்கள் அவனுக்கு துரோகம் செஞ்சுட்டோமுன்னு கோபமாப்போய் ஊஞ்சலுக்கடியில் உக்கார்ந்தான். எங்கள் கைக்கு எட்டாதாமே !! :-)
எல்லாம் ஒரு அஞ்சு நிமிட்தான். என்னமோ சரியில்லைன்னு தலையைத் தூக்கிப் பார்த்துட்டு புழக்கடைக் கதவுப்பக்கம் போய்  முறைச்சுப் பார்த்துக்கிட்டே இருந்தானா..... நான்  அடுக்களை வேலையை முடிக்கலாமுன்னு போனவள்  யதேச்சையா ஜன்னல் வழியாப் பார்த்தால்.... ஆஹா.... எதிரிகளின் நடமாட்டம் !    கொஞ்ச நேரத்தில் இன்னொரு எதிரியும் சாவகாசமா நடந்து போனான்!   ரஜ்ஜு அலெர்ட் ....   ரஜ்ஜு அலெர்ட்.... 
பகல் சாப்பாடானதும் நாங்களும்  டாஃபோடில் லான் வரை போய் வரலாமுன்னு கிளம்பினோம்.  எங்கூர் பொட்டானிகல் கார்டன் , ஹேக்ளி பார்க் பக்கம்தான் இது இருக்கு. பார்க்கைச் சுத்திக் கரைகட்டி விட்டாப்ல  ஓடும் ஏவான் நதி(!)யின் வெளிப்புறச் சுத்துப்பக்கம். அந்தாண்டை  பார்க்குக்குள் போய்ப் பார்க்க அனுமதி இல்லையாம். கோவிட் புகாமல் இருக்க பூட்டி வச்சுட்டாங்க :-)
இன்றைக்கு நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலில் வியாஸ பூஜை. லெவல் நாலில் இருந்ததால் இத்தனைநாட்கள்   கோவிலையே மூடித்தான் வச்சுருந்தாங்க. நித்யப்படிப்பூஜைகள் முடங்காமல், கோவிலிலேயே தங்கி இருக்கும் பட்டர்கள்  பார்த்துக்கிட்டாங்க.  கோவிலில் இருந்து  இந்த வியாஸ   பூஜையைப்பற்றிய அறிவிப்பும், அதில்   Zoom Meeting வழியா காலை பத்து மணி முதல்  பங்கெடுக்கலாமுன்னும் இமெயில் அனுப்பி இருந்தாங்க.  திடீர்னு  லெவல் இறங்கியதால் புதுசா வேறொரு ஏற்பாடு செஞ்சுக்க நேரமில்லை.
 



நாங்களும்  டாஃபோடில் பூக்களைப் பார்த்துட்டு,  கோவில் ஒருவேளை திறந்துருந்தால் சாமி தரிசனம்  செஞ்சுக்கலாமேன்னு  போனோம். அப்பதான் பூஜை முடிஞ்சு கோவில் மக்கள்  எல்லாத்தையும் காலி பண்ணிக்கிட்டு வெளியே வர்றாங்க. கோவில் மண்டபத்தை (ஹால்)மூடியாச்சு.  சாமிக்கு திரை போடப்போறாங்க. கண்ணாடிச்சுவர் வழியா தரிசனம் அமைஞ்சது. கோவில் அன்பர் & நண்பர் ஒருவர், ஓடிவந்து அபிஷேகத்தீர்த்தம் கொடுத்தார். கூடவே  வியாஸருக்குச் சார்த்திய மாலை, ப்ரஸாதம் எல்லாமும். மனநிறைவா இருந்தது. சட்னு க்ளிக்கக்கூடத் தோணலை.  

வீட்டுக்கு வந்ததும் பார்த்தால் ஐயா நல்ல தூக்கத்தில் !  இன்றைக்கு எங்கள் யோகா வகுப்புநாள் என்பதால்  Zoom Yoga ஆச்சு.

லெவல் குறைஞ்சதால் மூடியிருந்த ரெஸ்ட்டாரண்டுகளைத் திறந்தாங்க. ஆனால்  உள்ளே உக்கார்ந்து சாப்பிடும் சர்வீஸ் இல்லையாம். டேக் அவே மட்டும்தான். என்னவோ காணாததைக் கண்டதுபோல் சனம் பாயுது. நம்ம பங்குக்கு நாமும் பிகானிர்வாலா இண்டியன் ரெஸ்ட்டாரண்டுக்குப் பாய்ஞ்சோம். ஃபோன் ஆர்டர் கொடுத்துட்டு, நாம் நேரில் போய்  ஜன்னல் வழியா வாங்கிக்கணும். !  (கோவிட்,  கதவு மூலமாக மட்டுமே நுழையும்!!) அன்றைக்கு நல்ல அனுபவப் படிப்பினை கிடைச்சது நமக்கு. டேக் அவே மெனுவில் தோசை வாங்கக்கூடாது !

வீட்டுக்குக் கொண்டுவந்து பார்த்தால் தோசை சவசவன்னு இருந்தது. ப்ச்.....

மறுநாள் உயிர்த்தோழி மகனுக்குக் கல்யாணம், நம்ம சிங்காரச் சென்னையில்தான். அங்கேயும்  லாக்டௌன் கட்டுப்பாடுகள் இருந்ததால்  100 பேருக்கு மேல் அனுமதி இல்லையாம். கல்யாணம் முழுசும் லைவா பார்க்க ஏற்பாடு செஞ்சுருந்தாங்க என்பதால்  நாங்கள் மூணுபேரும்  ஆறஅமர உக்கார்ந்து பார்த்தோம்.  ஒரு பட்டுப்பொடவைகூடக் கட்டிக்காமல் கல்யாணத்துக்குப் 'போனது'  விசித்திரமா இருந்தது.  

அதுக்கடுத்தநாள்  நம்ம வீட்டு ராணியம்மாவுக்குப் பொறந்தநாள். லெவல் குறைஞ்சதால்  குடும்ப நபர்கள் சந்திச்சுக்கலாமுன்னு சொன்னது அரசு. ஒரே பபுள் என்றால் ஓக்கே !  அச்சோ.... பபுள் உடையாம இருக்கணுமே :-) கேசரி வெட்டிக் கொண்டாட்டம் ஆச்சு. 



வழக்கமா மகளின் பொறந்தநாளுக்கு நம்ம கோவிலுக்குக் கொஞ்சம்  அரிசி பருப்பு கொண்டுபோய்க் கொடுக்கறதுண்டு என்பதால்  மூடி இருந்தாலும் பரவாயில்லை... அங்கே வச்சுட்டு வரலாமுன்னு போனோம்.  ஆரத்தி நேரத்தில் யாராவது இருப்பாங்கதானே ? சனிக்கிழமையா வேற இருக்கு. இப்படி சாமி தரிசனம் கூட கிடைக்கமாட்டேங்குதேன்னு புலம்பிக்கிட்டுப் போனால்  கண்ணாடிச்சுவர் வழியா தரிசனமும் ஆச்சு.  கண்ணில் ஒத்திக்க ஆரத்தியும் கிடைச்சது !  

என்னவோ போடா பெருமாளே.... ஜனங்களை இப்படி ஆட்டி வைக்கிறாய்..... ஹூம்....




8 comments:

said...

அருமை சிறப்பு, நன்றி

said...


அமைதியான விழாக்கள்.

இங்கு ஓப்பன் ஆகவே விட்டாகிவிட்டது எல்லோருக்கும் வந்து வந்து போய்கொண்டே இருக்கிறது அவ்வளவு பாதிப்பு இல்லாததால் தப்பி இருக்கிறார்கள்.

said...

எப்பவும் வெட் செக்கப் போகும் முதல்நாள் நான் ரொம்ப டென்ஷனில் இருப்பேன். சரியான நேரத்துக்குக் காணாமப்போயிருவான் என்பதால் காலையில் வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வச்சு அடை காக்கணும். இவனும் இன்றைக்கு ஏதோ விசேஷமுன்னு புரிஞ்சுக்கிட்டு வெளியே போயே ஆகணுமுன்னு தர்மக்கூச்சல் போட்டுக்கிட்டு இருப்பான். இன்றைக்கு நல்ல வேளையா வீட்டுக்குள்ளேயே இருந்தானா, சட்னு அமுக்கிப் பிடிக்க முடிஞ்சது:-)//

ஹாஹாஹா சிரிச்சுட்டேன். இந்த அனுபவம் இங்கும் உண்டே. எப்படித்தான் மூக்குல வியர்க்குமோ.....ஓடி ஒளிஞ்சுக்குவாங்க! இப்ப சென்னைல எங்க வீட்டு க்ளோயி பல்லுக்கு டாக்டர்கிட்ட போக அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணினா விடு ஜூட் அம்மா காணாம போய்டுவாங்க!

ரஜ்ஜு எல்லாம் ரசித்தேன்.

உங்கள் கொண்டாட்டங்கள் எல்லாமும். படங்களும் எல்லாமும் சூப்பர்

கீதா

said...

இங்கேயும் இப்படியாக மூடுவதும் திறப்பதும் என குழப்படிகள் நிறையவே. இங்கே கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை தொடர பலரும் விரும்புவது இல்லை. நாட்கள் இதுவரை நல்லபடியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

அப்படியே விட்டுவிட்டதும் கூட நல்லதுதானாம். வந்து போனவுங்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றுதான் சொல்கிறார்கள்.

said...

வாங்க கீதா,

பசங்க படு ஸ்மார்ட். நம்ம பழைய வீட்டில் வீட்டின் எதிர்சாரியில் வெட். அங்கிருந்து செக்கப் நாளுக்கு லெட்டர்தான் வரும். அப்போ ஏது செல்ஃபோன் எல்லாம் ? மெயில்மேன் கடுதாசியைப் பொட்டியில் போட்டதும் இதுகளுக்குத் தெரிஞ்சுரும்போல. சரியா அந்த நாளில் காணாமப்போயிருவாங்க. ரோடைக் கடந்துபோய் வேற நாள் டைம் வாங்கி வருவேன். ஒரு கட்டத்தில் வெட் நம்ம நிலையைப் புரிஞ்சுக்கிட்ட வெட், நமக்கொரு சலுகை கொடுத்துட்டார்.

"எப்பப்பிடிக்க முடியுமோ அப்போ கொண்டுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணால் பார்த்துருவேன்."

ஆஹா.....

இத்தனைக்கும் நாங்க வெட் என்ற சொல்லையே வீட்டுலே சொல்லமாட்டோம். இத்தனாம்தேதி இத்தனை மணிக்கு 'அங்கே' போகணும் என்பேன் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

போனவாரத்தில் இருந்து எங்கூருக்குள் கோவிட் நுழைஞ்சுருச்சு. நம்ம தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துலே ஒரு பையனில் ஆரம்பம். இப்போ அஞ்சு பள்ளிகளிலாம். ப்ச்...