Wednesday, January 19, 2022

கிளைக் கதைகள் :-)

பொங்கல் தயாரிப்புகளில் இருந்தால்  நடுநடுவிலே   வேற கொண்டாட்டங்களும் எட்டிப் பார்க்குதே! 
தென் இந்தியர்களுக்குக் குறிப்பாத் தமிழ்நாட்டிலே நம்ம ஆஞ்சியின் பொறந்தநாள் மார்கழி மாசம் மூலநட்சத்திரத்தில் கொண்டாடுறோமில்லையா....  ஆனால்  இந்தியாவின் பிற மாநிலங்களில்   நம்ம சித்ரா பௌர்ணமிதான்  ஆஞ்சியின் பொறந்த நாளாம்.     சரி போகட்டும்.... சாமி பொறந்தநாளை எத்தனை முறை கொண்டாடினால் என்ன ?

இந்தப் பொறந்தநாள்னு சொல்லும்போது, இங்கத்து மஹாராணியின் பொறந்த நாளையும் இப்படித்தான்  வெவ்வேற நாடுகளில் ( அவுங்க காலனியாக  இன்னும் இருக்கும் நாடுகளில் ) வெவ்வேற நாளில் கொண்டாடிக்கிறோம். உண்மையில் அவுங்க பிறந்தது ஏப்ரல் மாசம் 21.  ஆனால் நியூஸியில் ஜூன் மாசம் முதல் வாரம் வர்ற வீக் எண்டோடு சேர்த்து முடிச்சுப்போட்டு வச்சுருக்கோம்.  அண்டைநாட்டில்  எங்களை விட இன்னும் ஒரு வாரம் தள்ளி.  அதுலே பாருங்க... அங்கே வெவ்வேற மாநிலத்தில் வெவ்வேற நாள் கொண்டாட்டம்.  கொண்டாட்டமுன்னா கேக் வெட்டிக் கொண்டாடுறோமுன்னு நினைச்சுக்காதீங்க.  அரசு விடுமுறை என்பதே ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டுபோயிருது பாருங்க :-) போயிட்டுப்போகுது.....  எப்படியோ  மாட்சிமை தாங்கிய மஹாராணியம்மாவை ஞாபகமாவது வச்சுருக்காங்களே!

தமிழ்நாட்டு வழக்கத்தை விடக்கூடாதுன்னு நம்ம வீட்டிலும் ஆஞ்சி பிறந்தநாளை சின்ன அளவில் கொண்டாடினோம்.

எங்கூர்லே ரெண்டு இடத்தில் ஆஞ்சி இருக்கார்.  மூத்தவர் ஒரு வீட்டு வளாகத்தின் முன்புறம். தனியார் கோவில்னு  சொல்லலாம். அவுங்களே செலவு செஞ்சு ஜெய்பூரில் இருந்து வரவழைச்சுருக்காங்க.  ஃபிஜி இந்தியக் குடும்பம்தான். யார்வேணுமுன்னாலும் போய்க் கும்பிட்டுக்கலாம். ரோடில் போகும்போதே தெரியும் என்பதால் பலமுறைகள் போறபோக்கில் கும்பிடுதான். மூத்தவர், கொஞ்சம் வயசான தோற்றத்தில்தான் இருக்கார்.

இளையவர், நம்ம 'சநாதன தரம் ப்ரதிநிதி சபா'வில் கோவில் கொண்டுள்ளார். ஹால் இருக்கும் வளாகத்தில் ட்ரைவேயின் கடைசியில் தனியா ஒரு சந்நிதி கட்டி இருக்கோம். இந்த சபாவும் ஃபிஜி இந்தியர்கள் சேர்ந்து கட்டுனதுதான். நாமும் ஃபிஜி மக்களில் ஒருவராகத்தான் இருக்கோம். இளையவரும் ஜெய்ப்பூர் பளிங்கில் ஆனவரே.  ஆனால் இளைய வயதினராக ரொம்பவே ஃபிட்டாக இருக்கார்.


காலையில் நம்ம வீட்டில் பூஜை முடிஞ்சதும்,  சபா ஹாலில் இருக்கும் ஆஞ்சியைத் தரிசனம் பண்ணி வரலாமுன்னு போனோம். ஹாலுக்குப் பக்கத்தில் வசிக்கும் மாஸ்டர்ஜிதான் தினமும் காலையும் மாலையும் சந்நிதியைத் திறந்து விளக்கேத்திவச்சுப் பூஜை பண்ணும் பொறுப்பை ஏற்று நடத்திக்கிட்டு வர்றார்.  நாமும் அதே நேத்தில் அங்கே இருக்கும்படிப் போய்ச் சேர்ந்தோம். முதல்நாள் ஜனவரி முதல்தேதி என்பதால் ஆஞ்சிக்கு  அபிஷேகம், ஹவன் எல்லாம் சம்ப்ரதாயப்படி நடந்துருந்தது. புது உடுப்பெல்லாம் போட்டுக்கிட்டுப் பளிச்ன்னு இருந்தார் நம்ம ஆஞ்சி.


அன்றைக்கு மதியம் சாப்பாட்டுக்குப்பின்  நம்ம யோகா குழுவினரோடு  நடைப்பயிற்சிக்குப் போனோம்.  போன இடம், மூத்தவர் இருக்குமிடத்துக்குப் பக்கம்.  போற போக்கில் அவரையும் கும்பிட்டு, ஏழு கிமீ நடையை முடிச்சுட்டு வந்தோம்.  இந்த இடம் நம்ம மாநகரின்  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  பிரிட்டிஷார் இங்கே வந்து சேர்ந்த ஆரம்ப காலங்களில், நகர நிர்மாணத்துக்கான  கற்களை வெட்டி எடுத்த இடம் இது. அப்ப அங்கே வேலை செய்ய வந்த மக்கள் தங்குறதுக்காகக் கட்டுன    கட்டடமும்  நம்ம பார்வைக்குப் பாதுகாத்து வச்சுருக்காங்க. தனியார் வசத்தில் Halswell Quarry செயல்பட ஆரம்பிச்சது 1861 ஆம் ஆண்டு.  1925 வரை பல ஓனர்கள் கைமாறி இருக்கு. அப்புறம் நம்மூர் மாநகரசபை வசம் வந்துருச்சு. அப்படியும் 1990 ஆண்டுவரை கற்கள் வெட்டி எடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க. அதுக்குப்பின்தான்  இந்த இடத்தை சிட்டிக்கவுன்ஸில் ஒரு தோட்டமா மாத்திட்டாங்க. கிட்டத்தட்ட 149 ஏக்கர் !  

குழுவின் இளரத்தங்கள் பக்கத்தில் இருக்கும் குன்றின் மேலேறிச் சுற்றி வந்தாங்க. நாங்க  சமதளத்தில் நடந்தோம்.  மரத்தடியில் சின்ன ஓய்வுக்குப்பின் எல்லோருமாச் சேர்ந்து குழுவின்  அங்கம் ஒருவர் வீட்டில்  சின்ன அளவில் டீபார்ட்டியில் கலந்துக்கிட்டு புதுவருஷத்தைக் கொண்டாடினோம் :-)  எதையும் விட்டுவைக்கும் எண்ணம் இல்லையாக்கும்!    
இந்த வருஷம் எல்லாமே ரொம்பத் தாமதமா வந்துருச்சோ..... போனவருஷம் வந்துருக்க வேண்டிய  வைகுண்ட ஏகாதசி கூட  அடிச்சுக்கோ புடிச்சுக்கோன்னு மார்கழி மாசம் கடைசிநாளுக்கு வந்து சேர்ந்துச்சு. அன்றைக்குப் போகிப்பண்டிகை வேற !  பண்டிகை விருந்து சமையலா இல்லை ஏகாதசி விரதமான்னு  சீட்டுக்குக் குலுக்கிப் போட்டாகணுமோ ? 

அதிகாலை  வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறந்து  சாமிதரிசனம் முடிச்சுக்கிட்டுப் போகி கொண்டாடினால் ஆச்சு, இல்லையோ ? சொந்தமாக ஒரு சொர்கவாசல் அமைக்கும் எண்ணம் சட்னு அப்பத்தான் தோணுச்சு !  ஒரு ஃபோட்டோ ஃப்ரேமும்,  தங்க அட்டைகளும்   கைவசம் இருந்ததால்....   எண்ணியது எண்ணியவாறே!
ஒரு மூணு மாசத்துக்கு முன் பளிங்கில்  ஒரு பெருமாள்  சிலை வாங்கினது எவ்ளோ நல்லதாப் போச்சு பாருங்க !!!!


8 comments:

said...

விழாக்களும் படங்களும் நன்றாக இருக்கிறது.

said...

மகிழ்ச்சி தரும் கொண்டாட்டங்கள் தொடரட்டும்.... படங்களும் பதிவும் சிறப்பு.

said...

வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்வதே சிறந்த வாழ்வியல் முறை. நீங்கள் அவ்வாறு வாழ்வது போற்றுதலுக்குரியது.

வீட்டில் சொர்கவாசல் அமைத்தது வியக்கவைக்கிறது. முதல் முறையாக கேள்விப்படுகிறேன். அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

said...

அட! சொர்க்கவாசல் வீட்டுக்குள்ளேயே வந்திருச்சே!!! அழகான கலைநயமுள்ல அலங்காரம் துளசிக்கா. கைவேலப்பாடும்.

மகிழ்வான கொண்டாட்டங்கள்.

கீதா

said...

வாங்க மாதேவி.

பாராட்டுகளுக்கு நன்றிப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மனம் நிறைந்த அன்பும் நன்றியும் !

said...

வாங்க இணைய திண்ணை.

பெயரே புதுசா இருக்கே !

வீடே சொர்கமுன்னும் வச்சுக்கலாம்தானே :-)

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

வாங்க கீதா,

சொந்தமா ஒரு சொர்கம். தமக்குத்தாமே திட்டம்தான் :-)