Monday, January 20, 2020

எல்லோரா குகைகளுக்குள்ளே..... (பயணத்தொடர் 2020 பகுதி 3)

வாசலுக்குள் நுழையும்போதே கைடு வேணுமான்னு சிலபேர் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. 'உள்ளே நிறைய சார்ஜ். நாங்க குறைஞ்ச செலவில் இந்த சேவையைச் செய்றோம்'னு வேற.....   விளக்கப் புத்தகம் விக்கறவங்க.....  'இது வெறும் நூறு ரூ தான். இதை வச்சுக்கிட்டேக் குகைகளைப் பார்த்துக்கலாமு'ன்னு  கூட்டமா நம்மை மொய்ச்சுக்கறாங்க.
எல்லோராக் குகைகளுக்குள் போய்ப் பார்க்க   ஒரு கட்டணம் உண்டு.  இந்தியர்களுக்கு  நாப்பது ரூ.    வெளிநாட்டு மக்களுக்கு அறுநூறு ரூ.  கொஞ்சம் அதிகம் இல்லையோ?  குகைகளைப்பற்றி விளக்கம்  சொல்லி நம்ம கூட வர்ற அரசு அனுமதி கொடுத்துருக்கும் கைடுக்கு ஆயிரத்து எண்ணூறு ரூ. கட்டணம்.  பத்துபேர் வரை இருக்கும் குழுவாக இருந்தாலும் இதே ஆயிரத்து எண்ணூறுதான்.  பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து இது கூடும்.
நாங்க ரெண்டே பேர்தான். அதுக்கு  ஆயிரத்து எண்ணூறு அதிகமுன்னு தோணுச்சு. மேலும் ஏற்கெனவே 'நம்மவர்' ஒருமுறை இங்கே வந்துருக்கார்.  அப்போ எடுத்த படங்கள் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை. டிஜிட்டல் கேமெரா (நம்மிடம்) வராத காலக்கட்டம்.  விளக்கப் புத்தகம் ஒன்னும் வாங்கி வந்துருந்தார்.  அதை இந்தப் பயணத்தில் எடுத்துப்போக மறந்துட்டேன்.

தனியார் வழிகாட்டியா, மயூர் என்பவர் தனக்கு 'அறுநூறு கொடுத்தால் போதும்'னு சொன்னார். என்ன மொழியில் சொல்லட்டுமுன்னு கேட்க, தமிழ்னு  வாய்வரை வந்ததை, முழுங்கிட்டு எது உங்களுக்கு வருமுன்னால், இங்லீஷ், ஹிந்தியாம்.  'ஹிந்தி சலேகா'ன்னு சொன்னோம். ஒரே ஒரு கண்டிஷன். அவர் 'குகைக்குள்' வந்து விளக்கம் சொல்ல அனுமதி இல்லையாம். 'அந்தந்தக் குகைகளைப்பற்றி குகைகளுக்கு வெளியே நின்னு விளக்குவேன். நீங்க அதுக்குப்பின் அந்தந்தக் குகைகளுக்குள்ளே போய்ப் பார்த்துட்டு வாங்க'ன்னார்.  'நம்மவர்' கைடே வேணாமேன்னு என்காதில் முணுமுணுத்தார். நாந்தான் ' இருக்கட்டும், ஓரளவு விளக்கம் கிடைச்சால்கூடப் போதுமு'ன்னு சொன்னேன்.
உலகப் பாரம்பரிய அம்சங்களில் ஒன்னு இது ! 
சின்னதாத் தோட்டமும், நடந்து போகும் பாதைகளுமா  இருக்கு.  மயூரே நமக்கு ஃபொட்டாக்ராஃபரா அப்பப்ப டபுள் ஆக்ட் கொடுத்தார் :-)

நமக்குப் பின்புலத்தில்தான் நான் தேடிவந்த குகைக்(!)கோவில் இருக்கு. ஆனாலும்  வலப்பக்கமாப் போய் ஒன்னாம் நம்பர் குகையிலிருந்து ஆரம்பிக்கலாம்னு சொன்னார் மயூர். நீங்க புத்தமதமான்னு கேட்டேன். ஆமாம்னு பதில். அதுதான் காரணமான்னதுக்கு, இல்லையாம்.  இருக்கும் குகைகளில் ரொம்பவே பழமையானது, அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம் என்பதால் அங்கிருந்து தொடங்கலாமுன்னு.....  ஆய்க்கோட்டே...
அஞ்சாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் குடைஞ்செடுத்த இந்த எல்லோராக் குகைகள் மொத்தம் முப்பத்தினாலு. இதுலே  முதல் பனிரெண்டு புத்தமதம் சார்ந்தவை. அடுத்து பதிமூணு முதல் இருபத்தியொன்பது வரை ஹிந்து மதம் சம்பந்தமுள்ளவை.  இந்தக்குகைகளில் சிற்பங்கள் செதுக்கிய காலக்கட்டத்தில் ஹிந்துமதம் என்றொரு மதம் இல்லை. சநாதனதர்மம்தான் அப்போ. இது ஒரு வாழ்க்கை முறை என்பதுதான்.  (முந்தி இவர் வாங்கிவந்த புத்தகத்தில் Brahmanism னு போட்டுருக்காங்க. பிடுங்கல் தாங்காம  மூணாம் நாள் வாங்கின புத்தகத்தில் Hinduism னு மாத்தி இருக்காங்க.  பழசு அம்பது ரூ. புதுசு நூறு. இடைப்பட்ட பதினைஞ்சு வருஷத்தில் விலைவாசி ரெண்டு மடங்கு ) முப்பது முதல் முப்பத்திநாலு எண்ணுள்ள குகைகள் சமணமதம் சார்ந்தவை.
மலைச்சரிவிலே இருக்கும் குகைகள் என்பதால்  சரிவின் கீழே எல்லாக் குகைகளுக்கும் பொதுவா ஒரு நீளமான பாதை இருக்கு. இந்த எல்லாக் குகைகளுக்குள்ளும் போய்ப் பார்க்க முடியாது. சிலபல குகைகளில் பழுது பார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டே இருப்பதால்..... நமக்கு எது கிடைக்குதோ அதுன்னு திருப்திப்பட்டுக்கணும்.
சில குகைகள் தனித்தனியாவே மேலேறிப்போய்வரப் படிகளுடன் இருக்கு. சில குகைகள் ஒரு தொகுப்பாய்  அபார்ட்மென்ட் ஸ்டையில்  பொது வெராந்தாவுடன் ! சில குகைகள் ரொம்பப் பெருசு. சில ரொம்பவே சின்னது.....,  மாடி வச்ச குகைகள்,  ஒரே தளம் உடையவை, மூணு தளம்  குகைகள், புத்தர் சிலைகள்  இருக்கும் குகைகள்,  ஒன்னுமே இல்லாத வெற்றுக்குகைகள்,  பெரிய ஹால் மாதிரித் தூண்களோடு இருப்பவை, தூண்கள் இல்லாத இருட்டு அறைகள், உள்ளே ஒரே மாதிரியே இருக்கும் (ஸேம் டிஸைன்- ரிப்ளிக்கா) குகைகள்ன்னு பல வகைகளில் பார்க்கலாம்.  புத்த பிக்குகள் தங்குமிடம்,  சமையலறை, உணவுக்கூடம்னு  விஸ்தாரமா இருப்பவைகளும் உண்டு. உள்ளே 'சாமி' இருக்கும் குகைகளுக்குள் மட்டும் காலணியோடு போகக்கூடாது.

சின்னதா ஒரு டார்ச் லைட் கொண்டு போயிருந்தோம். நம்ம வழக்கப்படி அது லோட்டஸில் விட்டுட்டு வந்த பெட்டியில் பத்திரமா உக்கார்ந்துருக்கு. எல்லோரா இருட்டுக்குகைக்குக் கடைசியில் வெளிச்சம் காமிச்சது நம்ம செல்ஃபோன்தான். எங்கே சார்ஜ் தீர்ந்துருமோன்னு திக் திக்...... விநாடிக்கு மேலே பார்க்கக்கூடாது.

முக்கியமான குகைகள்னு சொன்னால், 5,10,15,16, 21,29,32னு ஏழு குகைகள்தானாம் ! (16... இது ரொம்பவே முக்கியம்! நாம் வந்ததே இதுக்குத்தான் கேட்டோ ! )

மலைப்பகுதி என்பதால் 'நம்மவர்கள்'   கருப்பு முகங்களோடு குழந்தையும் குட்டியுமா இங்கேயும் அங்கேயுமாத் தாவித்தாவிப் போய் வர்றாங்க. சல்லியம் காரணம் குகைகளுக்கு கம்பிவலையும் கதவுகளுமாப் போட்டு வச்சுருக்காங்க. ஆனால் எல்லாக் குகைகளும் நல்ல சுத்தமாவே இருக்கு!  தினமும் கூட்டிப்பெருக்கறாங்களாம்!
புத்தமதக் குகைகள் ப்ரமாண்டமா இருந்தாலும், அங்கே செதுக்கி வச்சுருக்கும் புத்தர் சிலைகள் ஏறக்கொறைய ஒரே மாதிரியானவையே.....

ஹிந்துக்குகைகளில்தான் சுவாரஸ்யமான சிற்பங்கள் அதிகம். ஒருவேளை  எந்தெந்த சிலைகளில் இருப்பவர் யார் யார்னு நமக்கு 'ஓரளவு' விவரம் இருப்பது காரணமோ என்னவோ? இதோ லக்ஷ்மிவராஹர், இதோ சிவனும் உமையும், கயிலையைப் பெயர்த்தெடுக்கும்  தசகண்ட ராவணன் இப்படி..... அநேகம் !



திறந்த வாயை மூடாம  லயிச்சுப் பார்த்துக்கிட்டே கையோடு க்ளிக்ஸும் ஆச்சு.  அந்தக் குகைக்குப் பக்கத்துலே இருக்கும் கரடுமுரடான மலையின் மேல் நம்மைக்கூட்டிப் போறார் மயூர். சரியான ஷூஸ் போட்டுக்காம வந்துருக்கேன். கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.  ஒரு குறிப்பிட்ட பகுதிவரை ஏறினதும், அங்கே இருக்கும் கம்பித்தடுப்புக்குள் நுழைஞ்சு போறோம். இன்னும் கொஞ்சதூரம் நடந்தபிறகு பார்த்தால், கோபுர உச்சி தெரியுது.  ஆஹா....   கைலாசநாதர் கோவிலை,  ஆகாயத்திலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கோம் :-)   ஏரியல் வ்யூ !


மலையின் ஒரு பகுதியை மேலே இருந்து அப்படியே  நாலு பக்கங்களிலும் கேக் வெட்டறதைப்போல் வெட்டிக் கடாசிட்டு, நடுவிலே இருக்கும் பகுதியில் கோவிலை வடிவமைச்சுச் செதுக்கி இருக்காங்க.

அந்த முழு வடிவத்தையும் ஒரே ஃப்ரேமில் அடக்க முடியாது. பகுதி பகுதியாத்தான் க்ளிக்கினேன்.  இப்போ பதிவு எழுதும்போது வலையில் தேடினால் யூட்யூபில் ஒரு ஒரு நிமிட் வீடியோ ஒன்னு இருக்கு. இங்கே போட்டுருக்கேன், பாருங்க.  இதை எடுத்தவருக்கு நம் நன்றி.  இன்னும் விஸ்தாரமாப் பார்க்கணுமுன்னா.....  ஒரு ஒன்பது நிமிட் வீடியோவும் இருக்கு. விருப்பமும் நேரமும் இருந்தால் அதைக்கூடப் பார்க்கலாம்.  பதிவின் கடைசியில் போட்டு வைக்கிறேன். சரியா?


கீழே கோவில் வளாகத்தில் சனக்கூட்டம்......

மெள்ளமாக் கீழிறங்கி வந்தோம்.  இதோ கோவிலுக்குமுன்னால் நிக்கறோம்.  'என் சேவை இதோடு நிறையுது. மற்றபடி அந்தாண்டை இருக்கும் குகைகளில் எல்லாம் சொல்லிக்கறமாதிரி ஒன்னும் இல்லை'ன்னார் மயூர்.  உண்மைதான் போல.....  அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமே இல்லை.
அப்ப அந்த சமணக்குகைகள் ?

இந்த மலையின் தொடர்ச்சிதான் அவை இருக்குமிடம் என்றாலும்,  அங்கே போகும் பாதை இது இல்லை.  இதுக்குப்போக தனியா பஸ் விடறாங்க. அதுலே போகலாம் என்றார்.

சரி. மொதல்லே கைலாசநாதரை தரிசனம் செஞ்சுக்கலாம்.  உள்ளே எவ்ளோ நேரம் ஆகுமோ தெரியாது.  நேரம் இல்லைன்னா, நாளைக்குப் போனால் ஆச்சு, இல்லையா?


மயூருக்கு நன்றி சொல்லி அனுப்பிட்டு நாம் கைலாசத்துக்குள் நுழையலாம், ஓக்கே?

இதுதான் அந்த  ஒன்பது நிமிட வீடியோ க்ளிப்.
 நேரம் இருந்தால் பாருங்க.



தொடரும்....... :-)


7 comments:

said...

வெகு சிறப்பு அருமை நன்றி

said...

சிற்பங்கள் மிகவும் அழகு. காணவேண்டுமென்ற கனவு.உங்கள் பகிர்வில் மனம் குளிர்ந்தது.

said...

இதுவரை இங்கே சென்றதில்லை. உங்கள் பதிவு வழி நானும் பார்த்து ரசித்தேன்.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்வேன்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

உங்கள் கனவு விரைவில் மெய்ப்பட வேண்டும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சமயம், சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுவிடவே கூடாத இடம் இது!

விரைவில் அமையட்டும் !

said...

எல்லோராக் குகைகள்...


ரொம்ப அழகா இருக்கு மா...பார்க்க வேண்டிய இடம்...பசங்க இப்போ history பாடத்தில் படிக்குற னால பார்க்கும் ஆவல் அவங்களுக்கும்..


பிரமிப்பா இருக்கு...


பார்ப்போம் எப்போ வாய்ப்பு வருது ன்னு