Wednesday, January 15, 2020

பயணத்துக்குள் பயணம் (பயணத்தொடர் 2020 பகுதி 1)

தை பிறந்தால் வழி பிறக்குமாமே!   நம்ம பயணத்தொடருக்கும் இந்நன்னாளில் வழி பிறந்தேவிட்டது :-)

பயணம் முடிச்சு வந்து பதினைஞ்சு நாள் ஆச்சு. அது என்னமோ இந்த முறை, வழக்கத்துக்கு மாறா நம்ம உடல், நாம்  சொன்ன பேச்சைக் கேக்கலை....

இங்கே நியூஸி, க்றைஸ்ட்சர்ச்சில் இருந்து கிளம்பி, சிங்கை வழியாகச் சென்னை போய்ச் சேர்ந்தவிதம் எல்லாம்  இதுவரை  வந்த  பயணத்தொடர்களில் எழுதியவைகளின் ரிபீட் தான்.  அதனால் விஸ்தரிச்சு எழுதலை.





 உறவினர், நண்பர்கள் சந்திப்பு,  சென்னையில் சில குறிப்பிட்ட கோவில்கள், பாண்டிபஸார், கீதா கஃபே,  துணிமணிகள் வாங்குவது, தைக்கக்கொடுப்பது எல்லாம் அப்படிக்கு அப்படியே......

பண்டிபஸாரை அழகு படுத்தி இருக்காங்க. நல்ல விஸ்தாரமான நடைபாதை.  நடக்க முடியாதவர்கள்  கடைகளுக்குப் போய்வர ' இலவச வண்டி' அத்தனை கூட்டத்துக்கும் பயன்படுத்த சின்னச் சின்னக்குப்பைத் தொட்டிகள்  (உன் குப்பைத்தொட்டிகள் எந்நேரமும் நிறைந்து வழிவதாக ! ) நடந்து செல்வோர்  அக்கரையில் இருந்து இக்கரைக்கு வர வரிக்குதிரை வரைஞ்சு வச்சாலும், எதையும் சட்டையே செய்யாம, நிறுத்தாமல் போகும் வண்டியோட்டிகள், இந்த சாலையை ஒருவழிப்பாதையா மாத்தி இருந்தாலும் 'அதுக்கென்ன.... என்னைப்பொறுத்தவரை அது இருவழிப்பாதைதான்'னு சின்னக்குற்ற உணர்வு கூட இல்லாமல் எதிரில் வரும்  ரெண்டு, மூணு சக்கரவண்டி ஓட்டும் மக்கள், எதையும் கண்டுக்காமல் நிக்கும் ஏராளமான காவலர்கள்,    இப்படி ..... அதுபாட்டுக்கு அது.....

இந்த முறையும்  இந்தியப்பயணம் என்ற கணக்கில்,  உள்நாட்டிலேயே வடக்கு, தெற்குன்னு போய் வந்ததும் இல்லாம ஒரு வெளிநாட்டுப் பயணமும் போய்வர வாய்ப்பு அமைஞ்சது!

அதுபாருங்க......  நம்ம பக்கெட் லிஸ்ட் இருக்கே.... அதுலே என்னென்ன முடிக்கலாமுன்னு  பக்கெட்டுக்குள்ளே கையை விட்டால்..... அது என்னவோ பாட்டம்லெஸ் பக்கெட்டால்லெ இருக்கு!

அதுலே இருந்து கைக்கு ஆப்ட்ட ஒன்னுக்காக, சென்னை போய்ச் சேர்ந்தபின் ஒரு வாரம் கழிச்சு டிசம்பர் 1  ஆம் தேதி கிளம்பினோம். அதுக்கான டிக்கெட் புக் செஞ்சப்ப,  சென்னை, ஹைதராபாத், ஔரங்காபாத்னுதான் வழித்தடம். ஸ்பைஸ்ஜெட். நம்ம நல்ல காலம்,  கிளம்ப ரெண்டு நாட்கள் இருக்கும்போது, சென்னை-ஔரங்கபாத் நேரடிச் சேவை தொடங்கி இருக்கோமுன்னு சேதி அனுப்புனாங்க.  ஆஹா.... ஹைதராபாத் போய் மூணரை மணிநேரம் தேவுடு காக்க வேணாம். பழைய புக்கிங்கை கேன்ஸல் செஞ்சுட்டுப் புது டிக்கெட் எடுத்தோம். காசு கொஞ்சம் கூடத்தர வேண்டி இருந்துச்சு.  அது பரவாயில்லை.  நேரத்தை மிச்சப்படுத்தறோமே!   டைம் இஸ் மணி இல்லையோ!
பகல் 2.50க்குக் கிளம்பி 4.30க்குப் போயிடலாம். ஏறக்கொறைய ஒன்னே முக்கால் மணி நேரம்.  காலையில் அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பி ஓடாம, நின்னு நிதானமா பனிரெண்டே முக்காலுக்குச் சென்னை   உள்நாட்டு விமானநிலையம் வந்து சேர்ந்தோம். நல்லா பளிச்ன்னு சுத்தமாத்தான்  வச்சுருக்காங்க.



செக்கின் செஞ்சுட்டுக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு, நம்ம ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில்  கருப்பட்டி பாதாம் ஹல்வா டின் (200 கிராம். கலர்தான் யக் ) ஒன்னு வாங்கிக்கிட்டு, செக்யூரிட்டி செக்கப் முடிச்சு உள்ளே போயிட்டோம்.  நமக்கு நிறைய நேரம் இருக்கு. எதுக்குத்தான் இப்படி ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னால் வரச் சொல்றாங்களோ....  சலிப்புடன் உக்கார்ந்துக்கிட்டு இருக்கும்போது நக்ஷத்திர உதயம்.  மெள்ள  நின்னு நிதானமா நடந்து வர்றது யாருன்னு பார்த்தால் நம்ம பிரபு !  கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை எல்லாம் வித்துப் போச்சா?
ஒரு படம் எடுக்கலாமான்னு நினைக்கும்போதே.... கடைசி நிமிட்லே செல்ஃபோன் உடைஞ்சால் பயணத்துலே கஷ்டமாயிருமேன்னு..... அதுக்குள்ளே  விமான நிலையப் பணியாளர்கள் சிலர்  பிரபுகூட படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. உடைச்சு ஒன்னும் எறியலை.....    வணக்கம் சொல்லிட்டு, ஒரு படம் எடுத்துக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு, புன்னகையோடு 'எடுத்துக்குங்களேன்' னு சொன்னார்.  ஆச்சு.  நன்றி சொன்னோம்.

ஔரங்காபாத் ஃப்ளைட்டுக்குப் பயங்கரக்கூட்டம்.  காவி வேஷ்டி, துண்டும், கழுத்துலே  மணிமாலையுமா பலர் !  குழுவாக ஷிர்டி போறாங்களாம்.   இதுக்கும் விரதம் இருந்து மாலை போட்டுக்கிட்டுப் போறது எனக்குப் புது சமாச்சாரம்!  இந்தக் குழு இல்லாமல் வேறொரு குழுவும் இருந்துச்சு. மலேசியா மக்கள். முதல் குழு ரொம்ப பக்காவா ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்காங்க போல.  அவுங்களுக்கு ஆளுக்கொடு பொட்டலம் விநியோகம் ஆச்சு, குழுத்தலைவரால்.  உள்ளே.... வாழை இலையில் பொதிஞ்ச புளிசாதம்!  மசாலா விமானத்துக்கு ஏற்ற  மணம்தான் :-)
சரியான நேரத்துக்கு ஔரங்காபாத் போய்ச் சேர்ந்துட்டோம்.  சின்ன  சைஸ் விமானநிலையம்தான். ஆனால் ரொம்ப அழகாவும் சுத்தமாவும் இருந்துச்சு.  இங்கிருந்து  சிலபல கோவில்களுக்குப் போய்வர வண்டிகள்  கிடைக்குதுன்னு  ஸ்டால் போட்டு வச்சுருந்தாங்க.

ஆளுக்கொன்னுன்னு ரெண்டு கேபின் பேக் மட்டும்தான் கொண்டு போயிருக்கோம். 'நம்மவர்' ஒரு Backpack  தினசரிப் பயனுக்குன்னு கொண்டு வந்ததால், ஒரு கேபின் பேகை செக்கின் செய்ய வேண்டியதாப் போயிருச்சு. நம்ம பொட்டி வந்ததும் எடுத்துக்கிட்டு வெளியே வந்தோம்.
அம்பாஸடர் அஜந்தா ஹொடேலில் தங்கல்.  அவுங்களே ஏர்ப்போர்ட்டுக்கு வண்டி அனுப்பி இருந்தாங்க. ரொம்ப தூரமில்லை. ஒரு நாலு கிமீதான். வாசல் கேட்டுக்குள்ளே நுழைஞ்சால் ரொம்பப் பெரிய தோட்டம். ஏராளமான மரங்கள். ஒரு அரைக்கிலோ மீட்டர் தாண்டித்தான் கட்டடமே இருக்கு!  ஒரு பதிமூணு ஏக்கர் வரும் நிலமுன்னு சொன்னாங்க.  வாசலில்  ரெண்டு பக்கங்களிலும் நம்ம யானைகள் !  அப்ப நல்ல இடம்தான்,  இல்லே :-)
ரெண்டாவது மாடியில் நமக்கான அறை.  ஒரு ஸிட்டிங் ரூம், ஒரு படுக்கை அறைன்னு நல்லாத்தான் இருக்கு.  அறை ஜன்னல் வழி முன்புற வாசலைப் பார்க்கலாம்.  ஸிட்டிங் ரூமில்  ரெண்டு முக்காலிகள் என் கவனத்தை இழுத்தன.
செருப்புக்கேத்தபடி காலை வெட்டிக்கறதைப்போல..... ஒரு சதுரப் பலகையை வலது பக்க மூலைக்கும் இடது பக்க மூலைக்குமாக் குறுக்கா வெட்டி, மும்மூணு கால் வச்சுருந்தாங்க.  சுவரையொட்டிப் போட்டுக்கலாம். இந்தமாதிரி ஒன்னை இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறேன்.  அவ்ளோ பாதுகாப்பான டிஸைனாத் தோணலை. சின்னப்பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்குச் சரிப்படாது, கேட்டோ

ஏற்கெனவே மணி அஞ்சரையாகப்போகுது.  இப்ப வடக்கே குளிர்காலம், சட்னு இருட்டிப் போயிரும் என்பதால்  இப்ப வெளியே போகும் எண்ணம் இல்லை.  ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் ஒரு காஃபி குடிக்கலாமுன்னு போனோம்.
 
எங்கே பார்த்தாலும் பித்தளைப் பொருட்கள், பளபளன்னு மினுக்கலான  அலங்காரம்.  ரெஸ்ட்டாரண்டு பெயர் 'த சொஸைட்டி' !   வாசலாண்டை ரெட்டை மாட்டு வண்டியில் ஒருத்தர் போய்க்கிட்டு இருக்கார் :-)

ரெஸ்ட்டாரண்டில் யாருமே இல்லை. காஃபி வேணாம், நார்த்தீஸ்களுக்குச் சரியா தயாரிக்கத் தெரியாது. சாயா இருக்கட்டும். கூடவே எதாவது ஸ்நாக்ஸ் கிடைக்குமான்னா, பஜ்ஜி போட்டுத் தரேன்னு சொல்லி, அதெல்லாம் சமைச்சுக்கொண்டுவர ஒரு இருபத்தி அஞ்சு நிமிட்ஸ்  ஆகிருச்சு.  அதுவரைக்கும்  வெளியே தோட்டத்தைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனால்  பின்பக்கத் தோட்டத்தில் பெரிய புல்வெளியில் ஷாமியானா போட்டு ஜிலுஜிலுன்னு அலங்காரம். கல்யாணம் நடக்கப்போகுதாம்.  இன்றைக்கு  கல்யாண வரவேற்பு. 
மறுநாள் நாம் வந்த வேலையைப் பார்க்க வண்டி ஏற்பாடு செய்யவும்,  வைஃபை  கிடைச்சதால் வலை மேயவுமாக் கொஞ்சம் இருந்துட்டு,  ரூம் சர்வீஸில் ஒரு வெஜ் ஃப்ரைட் ரைஸ் சொல்லி, ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.
கல்யாண வீட்டு பேண்டு வாத்ய முழக்கம் நம்ம அறைவரை கேக்குது.  ம்யூஸிக் கச்சேரி போல....  சங்கீத்..... யார்யாரோசினிமாப் பாட்டுகளை (த்ராபையா) பாடிக்கிட்டு இருந்தாங்க. காதுக்குள்ளே இயர்ப்ளக் வச்சுக்கிட்டுத் தூங்கினோம்.

ராத்ரி எப்போ அமர்க்களம் எல்லாம் முடிஞ்சதுன்னு தெரியலை....   காலையில் எழுந்தப்ப, நிசப்தமா இருந்தது.  குளிச்சு முடிச்சு, ப்ரேக்ஃபாஸ்டுக்கு, த சொஸைட்டிக்குப் போனோம். நம்ம இட்லி இப்போ இன்டர்நேஷனல் ஐட்டம்  ஆனதால்    ரெண்டுவகைச் சட்னிகளோடு  காத்திருந்தது உண்மை :-) கொஞ்சம் நல்லாவே சாப்பிடணுமாம். ஊர்சுத்தக் கிளம்பறோமே.... 

வண்டி எட்டரைக்குச் சொல்லி இருப்பதால், சாப்பிட்டு முடிச்சுத் தோட்டத்துக்குப் போனோம். நேத்து பார்ட்டி நடந்த இடத்தைப் பார்க்கணுமே....சனம் சாப்பிட்ட கையோடு ஸ்பூன்களையெல்லாம் புல்தரையில் வீசிட்டுப் போயிருக்குது.  எவர்ஸில்வர்.....    பணியாட்கள் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  இன்றைக்கும் மாலையில் ஒரு கல்யாணம் நடக்கப்போகுதாம். இந்த ஹொட்டேல், கல்யாண விழாக்களுக்குப் பெயர் போனதாமே..... எப்பவும் எதாவது  விழா நடந்துக்கிட்டே இருக்காமே!   அறை வாடகையில் சம்பாதிக்கறதை விட கல்யாணத்துக்கு வாடகைக்கு விட்டே பணம் பண்ணிடறாங்க.
புதுமாதிரியான காய்கள் தொங்கும் மரம் பார்த்தேன். என்ன மரமுன்னு விசாரிக்கணும். 
ஸ்விம்மிங் பூல், டென்னிஸ் கோர்ட் எல்லாமும் இருக்கு. உள்ளூர் மக்களும் இங்கத்து க்ளப்பிலே மெம்பர் ஆகிட்டால்   வந்து பயன்படுத்திக்கலாமாம். காலை நேர நடைப்பயிற்சிக்கும்  உள்ளூர் மக்கள் வந்து  தோட்டங்களில் சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஹொட்டேல் கட்டடத்தையே ப்ரதக்ஷணம் பண்ணறதைப் பார்த்தேன். பொதுவா மக்களிடையே  ஹெல்த் கான்ஷியஸ் (மட்டும்) கூடி இருக்கு!
ரெண்டு நாய்களையும், ஒரு  காளை மாட்டையும் கொண்டு வந்து புல்தரையில் கொம்பு நட்டுக் கட்டி விட்டாங்க.  வில்லேஜ் லுக் கிடைச்சுருச்சு :-)

எட்டரைக்கு வண்டி வந்ததும் கிளம்பினோம். சுமார் ஒரு மணி நேரப்பயணம். 34 கிமீ போகணும்.

இப்பெல்லாம் நிறைய டூரிஸ்ட் வண்டிகள் நல்லாவே கிடைக்குது என்பதால், ஹொட்டேல் ட்ராவல் டெஸ்க்லே வண்டி எடுக்காமத் தனியார் வண்டிகளை எடுத்துக்கறதுதான்  வசதியா இருக்கு. இப்ப நாம் எடுத்துருக்கும் வண்டி, அல்ஃபா இண்டியா டூர்ஸ் & ட்ராவல்ஸ் கம்பெனியோடது. ஏர்ப்போர்ட் அரைவலில் இவுங்க ஸ்டால் பார்த்துட்டு விபரம் வாங்கி வச்சது நல்லதாப் போச்சு!

தொடரும்.......... :-)


22 comments:

said...

சுவாரஸ்யமான அனுபவங்கள்.  பிரபுவின் எளிமை!  அந்த காய் ஆப்பிள், பேரிக்காய், பலாப்பழம் சேர்த்து செய்த வகையோ...!

said...

வாங்க ஸ்ரீராம்.

நீங்க சொன்ன காய்கள் எதுவும் இல்லையாக்கும் !

said...

அந்த பழமெல்லாம் இல்லையா, ஒருவேளை - பப்பாளியோ ?

பறக்கையில் புளி சாதம் - வாவ்;

said...

மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

said...

நேயர் விருப்பம்.

முதல் விமான பயணம் முதல் இந்த விமான பயணம் வரைக்கும் இதுவரைக்கும் பயணித்த விமான பயணங்கள் குறித்து, தூரம், பயணித்த கண்டங்கள் குறித்து அறிய ஆவல்.

said...

சுவாரஸ்யமான துவக்கம் பதினைந்து நாட்கள் கழித்து யோசித்து எழுதியது போல் இல்லாது அன்றே எழுதியது போல இருப்பதே உங்கள் எழுத்தின் சிறப்பு...ஆவலுடன் தொடர்கிறோம்..வாழ்த்துக்களுடன்...

said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்துக்கள்க்கா 

அக்கா அந்த மரம் இலவம் பஞ்சு மரம் தானே .

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா... பறக்கையில் புளி சாதம் பக்கத்து இலையில் ! நமக்கெல்லாம் மணம் மட்டுமே :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

வாழ்த்துகளுக்கு நன்றி !

said...

வாங்க ஜோதிஜி,

இந்த முப்பத்தியெட்டு ஆண்டுகளில் மூணு கண்டங்கள் மட்டும் போகலை. முதல் ரெண்டு கண்டங்களுக்குப் போக இப்போதைய உடல்நிலை அனுமதிக்காது. No fitness for travelling Arctic and antarctic . மூணாவது எமகண்டம்தான்.....

said...

வாங்க யாதோரமணி,

இந்த ஔரங்காபாத் பயணம் போன வருஷம் டிசம்பர் முதல்தேதி. ஒன்னரை மாசம் ஆகிப் போச்சு.

வருகைக்கும், 'ஆவலுடன் தொடர்கிறேன்' என்று சொன்னதற்கும் மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க ஏஞ்சல்,

செல்லம். சரியாக் கண்டுபுடிச்சிட்டீங்க.... !

நாம் வழக்கமாப் பார்க்கும் ஒல்லியா உயரமா நெடுநெடுன்னு போகும் மரங்களாகவும், நீண்டு இருக்கும் காய்களாகவும் இல்லாததால் குழம்பிட்டேன். அப்புறம் படத்தை ஹொட்டேல் பணியாளர்களிடம் காமிச்சப்ப 'ரூயி'ன்னு சொன்னாங்க. !

said...

ஸ்ஸ்ஸ் அக்கா நான் இங்கேதான் இருக்கேன் :)))))))))))))ரஜ்ஜு எப்படி இருக்கான் :) கேர்ல்ப்ரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தானா :)))))))))

இந்த மரம் எங்க சர்ச்சில் மெட்றாஸில் இருந்தது .அப்புறம்  ஆயர் வீடு எக்ஸ்டெண்க்ஷனுக்கு அநியாயத்துக்கு 4 மரங்களை வெட்டினாங்க அப்போ எனக்கு 12 வயசு ..அப்போ பார்த்தது நினைவிருக்கு .

said...

\\பாட்டம்லெஸ் பக்கெட்டால்லெ இருக்கு\\ ஹா..ஹா..

பயண அனுபவங்கள் வழக்கம் போலவே சுவாரசியம்.

said...

அடுத்த பயணம் - ஆஹா மகிழ்ச்சி.

இந்த முறை சீக்கிரமாகவே ஆரம்பிச்சுட்டீங்க போல! தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்!

ஔரங்காபாத் - ஆஹா உங்கள் மூலம் நாங்களும் சுற்றி வரப் போகிறோம். நல்ல தொடக்கம். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பயணங்கள் எப்போதும் முடிவதே இல்லையே......

வருகைக்கும், ஊக்குவித்தமைக்கும் நன்றி !

said...

இந்த முப்பத்தியெட்டு ஆண்டுகளில் மூணு கண்டங்கள் மட்டும் போகலை. முதல் ரெண்டு கண்டங்களுக்குப் போக இப்போதைய உடல்நிலை அனுமதிக்காது. No fitness for travelling Arctic and antarctic . மூணாவது எமகண்டம்தான்.....

உங்கள் வார்த்தை தவறு. அதற்கு நான் வைத்திருக்கும் பெயர் விட்டு விடுதலையாகி........

said...

ஒளரங்கபாத் தொடர்கிறேன்.

said...

வாங்க கீதமஞ்சரி,

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க மாதேவி,

தொடர்வருகைக்கு நன்றிப்பா !

said...

கருடாழ்வார் , கருப்பட்டி அல்வா வுடன் அடுத்த பயண தொகுப்பை காண ஆவலுடன் நானும்...

said...

"பண்டிபஸாரை அழகு படுத்தி இருக்காங்க. நல்ல விஸ்தாரமான நடைபாதை.................எதையும் கண்டுக்காமல் நிக்கும் ஏராளமான காவலர்கள், இப்படி ..... அதுபாட்டுக்கு அது....."

வணக்கம், நான் இதே தி.நகரில் தான் இருக்கிறேன். உங்களின் பாண்டிபஜார் வர்ணிப்பு அருமை. உங்களின் படங்களும் நாங்கள் நேரில் பார்ப்பதுபோல் இருக்கு. நன்றி