Monday, May 07, 2018

ஸில்க் ரூட் ......... சீனதேசம் - 8

நாம் எங்கே போகணும்,  எப்போ போகணும், என்ன பார்க்கணும் என்றெல்லாம்  ஒவ்வொரு டூர் கம்பெனியும் ஒரு 'ஐட்டிநரி' வச்சுருக்காங்க. அந்தக் கணக்கில் இப்போ போறது பட்டுப் பார்க்க !


வாசலைப் பார்க்கும்போது ஏதோ கடைக்குள் போறமாதிரிதான்.  வரவேற்பில் இருந்த பெண்,  மைக்கேலிடம் என்னவோ கேட்டுட்டு, லிஃப்ட் இருக்கும் திசையைக் கை காட்டுனாங்க. எங்களோடது சின்னக்கூட்டம்தானே. மொத்தம் ஆறேபேர்!
சீனப்பெருஞ்சுவரை ஸில்க் நூலில் பூத்தையல் போட்டு வச்சுருக்காங்க.   காரிடோர் முழுசும் பலநாட்டுக் கொடிகள். நம்மது இருக்கான்னு தேடும்போதே லிஃப்ட் மேலே இருந்து  இறங்கிருச்சு.

முன்பக்கத்து ஹாலில்  பட்டுப்பூச்சி வளர்ப்பு, அதுக்கான மல்பெரி இலைகள்னு காட்சிக்கு வச்சுருந்தாங்க.  அடுத்து  பட்டுப்புழுக்களின் கூட்டிலிருந்து  எப்படி பட்டுநூலை பிரிச்செடுக்கறாங்கன்னு..... ஒவ்வொரு கூட்டிலிருந்தும் பத்து முதல் பனிரெண்டாயிரம் மீட்டர் பட்டு நூல் கிடைக்குதாம்.  அது ஒவ்வொன்னும் தனியே ஒரு உருளையில் சுத்திருது. இப்படி அந்த மெஷீனில் பல உருளைகள்.

வெந்நீரில் போட்டு வச்சுட்டுத்தான் நூலை எடுப்பாங்களாம். ப்ச்.... பாவமாத்தான் இருக்கு. சீனர்களிடம் அஹிம்சையை எதிர்பார்க்க முடியுமா? தேள் நினைவிருக்கோ?

 ஆமாம்......நம்ம ஊர்களிலும் பட்டு இப்படித்தானே எடுக்கறாங்க?

அஹிம்ஸா பட்டுன்னு  நம்ம காதி க்ராஃப்ட் கடைகளில்  முந்தி பட்டுச்சேலைகள் விற்பனைக்கு வந்தது நினைவிருக்கு.  என் சித்திகள் இருவர்  ஆதாரப் பாடசாலை ஆசிரியர்கள் என்பதால் கதர் புடவைதான் பெரும்பாலான நாட்களில் கட்டிக்கிட்டுப் போவாங்க. கனமான கனமுன்னு சொல்வாங்க. அதிலும் மழைக் காலத்தில்  பள்ளியில் இருந்து வரும்போது நனைஞ்சுட்டா அவ்ளோதான்.... கல்லைக் கட்டி இழுத்து வருவதுபோல இருக்குமாம். துவைச்சுப் போட்டாலும் சட்னு காயாது. அந்தக் காலங்களில் இந்த ஆட்டோக்களெல்லாம் கிடையாது, பாருங்க....  பஸ், ரயில் பயணம்தான் அதிகம். டாக்ஸி எப்பவாவது..... அபூர்வம்!  உள்ளூரில் எங்கெ போனாலும் நடராஜா சர்வீஸ்தான் !

அப்போதான் இந்த அஹிம்ஸா பட்டு விற்பனைக்கு வந்தது.  ரெண்டுபேருமா அஞ்சு புடவை  வாங்கிக்கிட்டாங்க. பார்க்க ப்ரின்டட்  ஸில்க் மாதிரியேதான்.  கனமே இல்லை.... காத்து மாதிரி லேஸா... 

இப்பவும் கிடைக்குதான்னு தெரியலை..... அடுத்த பயணத்தில் விசாரிக்கணும்....

உருளையில் சேரும் நூலை ரெண்டுவிதமாப் பிரிச்சு எடுக்கறாங்களாம்.  இதுலேயும் பல தரங்கள் இருக்கு. ரொம்ப உயர்ந்தவகை பட்டு நூல்களை துணிகளா  நெய்ஞ்சுக்கறதுக்காக அனுப்பிடறாங்க. அதுக்கு வண்ணம் ஏத்தறது, ஆடைகளின் வகைக்கு ஏத்தபடி நூலை  ரெண்டோ  மூணோ சேர்த்து முறுக்கி எடுக்கறதுன்னு அதெல்லாம் வேற பிரிவு.
இப்ப நாம் நிக்கற இடத்தில்  கொஞ்சம் தரம் குறைந்த பட்டு நூல்களாம்.  அப்படியே உருவி எடுத்து,  அருவாமணைப் பலகை போல ரெண்டு சேர்ந்திருக்கும் கட்டைகளில் இருக்கும் அரை வட்டக் கம்பியில்  மாட்டி விடறாங்க.  ஒன்னுமேலே ஒன்னா மாட்டி மாட்டி.....  அப்படியே காயுது.   உலர்ந்தபிறகு பார்த்தா  வெண்பஞ்சு மாதிரியே  என் கண்ணுக்குத் தெரிஞ்சது.
அதை அந்த அரை வளையத்துலே இருந்து அப்படியே தொப்பியாட்டம்  எடுத்தால்  சுமார்  ஒரடிக்கு ஒரடி சதுரம் போல இருக்கு.  இதை இந்தப் பெரிய ஹாலின் நடுவிலே போட்டு வச்சுருக்கும் கட்டிலின் மேல்   பரத்திவிடணும்.


பார்வையாளர்களையே நாலு பக்கம் பிடிக்கச் சொல்லி  அப்படியே இழுத்துக் கட்டிலின் மேல் விரிக்கறாங்க. நம் குழுவின் மூவர் இதைச் செய்ய  நான் க்ளிக்ஸ் வேலை பார்த்தேன். எங்கேயும் நடுவுலே புட்டுக்காம , அறுபடாம அப்படியே  எலாஸ்டிக் போல  இழுத்த இழுப்புக்கு வருது!  நீராவியன்ன ஒரு விரிப்பு.  இப்படியே ஒன்னுக்கு மேலே ஒன்னுன்னு விரிச்சுக்கிட்டே போறங்க. எதோ ஒரு கணக்கு இருக்கு போல.
அப்புறம் பார்த்தால்.... கிலோ கணக்காம்.  யம்மாடி  இவ்ளோ, மெலிஸா இருக்கும் நூலில்  கிலோக்கணக்கு எடைன்னா எவ்ளோ வேணும்.....

இதை அப்படியே ரெண்டு மெல்லிய துணிகளுக்கிடையில் வச்சுட்டுத் துணியின் ஓரங்களைத் தைச்சுடறாங்க.  க்வில்ட் ரெடி.  பொதுவா நாம் கடைகளில் வாங்கும் க்வில்ட் களில் குறுக்கும் நெடுக்குமா தைய்யல் இருக்கும். இங்கே ஓரத்தையலோடு சரி.

குளிர்தேசத்தில் நாங்க பயன்படுத்தற க்வில்ட்களில்  உள்ளே இருக்கும்  பஞ்சு/ ஸிந்தடிக் ஃபில்லிங் எல்லாம்  எடுத்து உதறும்போது  உள்ளேயே சரிஞ்சு  விழுந்து அங்கங்கே  கொத்துகொத்தா நிக்கும். அதுக்காகத்தான்  ரொம்ப சரிஞ்சுடாமல்  இருக்கக் குறுக்குத்  தையல் போடறது.

இங்கே இதை நாம் எப்படி சுருட்டினாலும்  ஒன்னு சேர்ந்துக்காம விரிப்பாவே இருக்கு. 'நீங்களே சுருட்டிப் பாருங்க'ன்னு  சொன்னதும் ஆளாளுக்கு  அதை இப்படியும் அப்படியுமா சாப்பாத்தி மாவு பிசைஞ்சுட்டோம். எனக்குத்தான் மாவு பிசையும் அனுபவம் அதிகம். த மோஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பிசையர்.  உருண்டை மாவா அது வரவே இல்லை. ஒன்னும் ஆகாம அதுபாட்டுக்கு விரிப்பாவே  இருக்கே!
'அட அட'ன்னு  வாய் பிளக்கும்போதே அடுத்த  முக்கிய சமாச்சாரத்தைப் போர்டில் காமிச்சாங்க.
ஒன்னரைக்கிலோவில் இருந்து மூணு கிலோ எடை வரை இருக்கு!

நாம்  ஒன்னு வாங்கிக்கலாமுன்னு 'நம்மவர்' ஆரம்பிச்சார்.   வாங்குனா ரெண்டு, இல்லாட்டா வேணாம்.  அடுத்து  என்ன சைஸ்னு  கொஞ்சம் யோசனை.  நம்ம படுக்கைகள் சூப்பர்கிங் ஒன்னும் கிங் ஒன்னுமா இருக்குன்னு ரெண்டரைக்கிலோ சமாச்சாரம்,  ரெண்டுன்னு முடிவாச்சு.  அளவு பெருசாக ஆக, தடிமன் குறையும். அதனால் ஒன்னு  கொஞ்சம் மெலிசா இருக்குமாம். ஆனால் இது ஃபோர் சீஸன் வகையாம்.  எல்லாக் காலங்களுக்கும் பயன்படுத்திக்கலாமாம்.

பட்டுத் துணிகளில் இது ஒரு விசேஷம்தான். வெயில் காலத்தில் குளிர்ச்சியாவும், குளிர்காலத்தில்  சூடாகவும் உணர்வோம். இங்கே பார்வையாளர்களுக்காக டெமோ காமிக்கிறாங்களே தவிர ,   வேற இடத்தில் இருக்கும் தொழிற்சாலையில் செஞ்சு இங்கே  விற்பனைக்கு வந்துருது. அப்படியே அடுக்கடுக்காய் அடுக்கி வச்சுருக்காங்க.

நம்ம குழு அமெரிக்கத் தம்பதிகளும் ஒன்னு வாங்கினாங்க.   நம்ம 'ஸில்க் ரூட்'டின் தொடர்ச்சியா அடுத்த  ஹாலுக்குள் போறோம்.  உடைகளுக்கான பட்டுத் துணிகள், முக்கியமா ஸூட்டிங்ஸ் வகைகளுக்கானவை. ரெடிமேட் உடைகளும் வச்சுருக்காங்க.

நம்ம அமெரிக்கத் தம்பதிகள், ரங்ஸுக்கு பேண்ட்ஸ் தைச்சுக்கத் துணி வாங்குனாங்க. தங்க்ஸின் அம்மா தைச்சுக் கொடுப்பாங்களாம். உங்களுக்கும்  ஒன்னு வாங்கவான்னு கேட்டதுக்கு (அதான் நானே தைப்பேனே!!!) இவர் சட்னு அந்த இடத்தைவிட்டு எஸ் ஆகிட்டார் :-)
மகளுக்கு மட்டும் ஒரு ஸ்கார்ஃப் வாங்கினோம்.  அனிமல் லவ்வர் ஸ்பெஷல் :-)


எம்ப்ராய்டரி ரொம்பவே அழகழகாப் போட்டு, விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஒன்னும் வாங்கிக்கலை. முப்பத்தி மூணு வருசத்துக்கு முன்னே  ஒன்னு  தாய்லாந்துலே வாங்கியாச் :-)
ஒன்னுமே வாங்கக்கூடாதுன்ற முடிவோடு இந்த  ஸில்க் ஃபேக்டரிக்குள் நுழைஞ்சேன்....  ஆனால்....... 
க்வில்ட் கவர்களும் ரெடிமேடா தைச்சு விக்கறாங்க. ஸில்க்தான்.  தொடும்போதே வழுக்கிக்கிட்டுப் போகுது. ஆனால் சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்காப் பணம் என்ற கணக்கு ரொம்பச் சரி!

ஊர்லே போய்ப் பார்த்துக்கலாம்....எதாவது ஸேல் வராதா என்ன?

(ஊர் திரும்பின மறுநாளே வந்துருச்சு.   க்வில்ட் கவர் வாங்கியாந்து போட்டும் ஆச்சு. ச்சும்மா சொல்லக்கூடாது.... அருமையா இருக்கு! நம்ம ரஜ்ஜுவுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. கிடந்து உருண்டு ரசிக்கிறான் !!! நம்ம வீட்டில்  க்வாலிட்டி கன்ட்ரோல்  சீஃப் இவன்தான்.  )

நாம் அங்கே இருக்கும்போதே இன்னொரு டூர் கம்பெனி அவுங்க பயணிகளைக் கூட்டிவந்தாங்க. பெரிய குழு! நாப்பதுபேருக்குக் குறையாது. எல்லோரும் இந்தியர்கள்! அதுலே ஒருத்தர் நம்மூர் பட்டுப்புடவை கட்டியிருந்தாங்க.

இன்னொரு முக்கியமானதைச் சொல்ல மறந்துட்டேனே......  ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்த 'நம்மவர்' ரொம்ப நீட்டா அருமையா இருக்குன்னு  சொன்னார். விடமுடியுமா?

பயணங்களில் ரெண்ட் ரூம் பிரச்சனை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அவ்வளவாக் கிடையாது. நம்ம நாடு எப்போ இதுலே முன்னேறுமோ.....  ப்ச்....

வாங்கின பொருட்களை ரொம்ப நல்லா பேக் பண்ணித் தந்தாங்க. க்வில்ட் பொதி, கம்ப்ரெஸ் பண்ணதும்  ஒல்லியா, சின்னதா ஆகிருச்சு !

இங்கிருந்து கிளம்பி பகல் சாப்பாட்டுக்குக் கூட்டிப்போனார் மைக்கேல்.  டூரில் இதுவும் சேர்த்தி. என்ன பெயர் அந்த ரெஸ்ட்டாரண்டுக்குன்னு யாருக்குத் தெரியும்?  எல்லாம் சீனத்துலே இருக்கே..... போயிட்டுப்போகுது....
பேஸ்மென்ட்லே ஒரு டைனிங் ஹால்.  கன்ஃபூஸியஸ் சிலைதான்  பூஜை மாடத்தில்!   ஞானி. பல நல்லவைகளைச் சொல்லிட்டுப்போயிருக்கார்.   இவருடைய காலம் யேசு பிறக்கறதுக்கு அஞ்சரை நூற்றாண்டுக்கு முன்பு!  தனிமனித வாழ்வு, அரசாட்சி, நீதி, ஒழுக்கம்னு எல்லாத்தையும் எழுதி வச்சுருக்கார்.  சுருக்கத்தில் சொன்னால்  'சீனத் திரு வள்ளுவர்'.   நாலு நல்ல வார்த்தை சொன்னா, நாம் அவரை சாமியாக்கிருவோமில்லையா.....   அதே போல இவரை சீனதேசத்தில் சாமியா ஆக்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன். கன்ஃபூஸியஸ் மதம் என்றும் இருக்கு!
 'சாப்பாடு'ன்னதும் எதாவது வெஜிடேரியனுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மைக்கேலிடம் விண்ணப்பித்தேன்.  அதெல்லாம் கவலைப்படவே வேணாமுன்னு சொன்னார்.  வெண்சோறு வந்தது.
சின்னச்சின்ன கப் வைக்காமல், கொஞ்சம் பெரிய கிண்ணமும், சாப்பிடும் தட்டும் கூட வச்சுருந்தாங்க.  அப்புறம் நாலைஞ்சு 'நான் வெஜ்' கறி வகைகள்.  சுரைக்காய் போல ஒரு காய். முட்டைக்கோஸா இல்லை லெட்யூஸான்னு தெரியலை அதுலே ஒரு கறி. ஸ்ப்ரிங் ரோல்ஸ்  என்ன ஃபில்லிங்னு தெரியலை.... எல்லாக் கறிகளிலும் விளம்பிக்க ஒரு கரண்டியும் வச்சுருந்தது நைஸ் !

தர்பூசணிப் பழம் வந்ததும்,  நாந்தான்  மூணு துண்டு எடுத்துக்கிட்டேன். தாகசாந்திக்கு  பியரும் ஃபேண்ட்டாவும், ஸ்ப்ரைட்டும், தண்ணீருமா....
சாப்பாடானதும் கிளம்பி இதோ  போறோம்.... இன்னொரு சுவாரசியமான  இடத்துக்கு :-)

பொதுவா கைடும் ஓட்டுநரும் நம்ம கூட வந்து பந்தியில் உக்காருவதில்லை.....  ஆனால் 'நம்மவர்' சொல்லியிருக்கார், அவருடைய  வேலைவிஷயமா இங்கே வந்தப்பெல்லாம் பகல் சாப்பாடுக்கு கம்பெனி வண்டி ஓட்டுனரும்  பந்தியில்  உக்காருவாருன்னு....
நம்ம வண்டி ஓட்டுனரிடன், நீங்க சாப்ட்டாச்சான்னு  'சைகை மொழி'யில் கேட்டது, அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது !


தொடரும்.......... :-)


12 comments:

said...

நம்மூர் விலைக்கும் அங்கத்தி விலைக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லலையே....


தொடர்கிறேன். சுவாரஸ்யமான தகவல்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்மூர்ன்னா... இந்தியாவிலா? அங்கே இப்படி ஸில்க் க்வில்ட் பார்க்கலையே....

இங்கே நியூஸியிலும் பார்க்கலைதான். ஆனால் இங்கே கிடைக்கும் உயர்தர க்வில்ட் விலைகளோடு ஒப்பிட்டால் இது மலிவுதான்.

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

சுவாரசியமா இருக்கு. பட்டு வளர்ப்பு முழுமையான cycle, பட்டு எடுப்பதுவரை, நான் 7வது படிக்கும்போது, தாளவாடியில் (வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்திய இடத்திலிருந்து 1 கிலோமீட்டர்) பார்த்திருக்கிறேன். இப்போ நினைவில் இருப்பது, பட்டு எடுத்தபின்பு, மிஞ்சும் கூட்டில் (உள்ளே புழு செத்திருக்கும்) உள்ள புழுவிற்காக ஏகப்பட்ட கழுகுகள் அந்த இடத்தில் இருக்கும். தாளவாடியில், பட்டுப்புழு வளர்ப்பது குடிசைத் தொழில்போல உண்டு.

ஆமாம், சாப்பாட்டு ஐட்டத்தில் சாதம் தவிர வேறு எதுவும் வெஜ் இல்லையே. எப்படி சமாளித்தீர்கள்?

said...

நம்ம ஊர்லயும் பட்டுப்பூச்சியைக் கொன்னுதான் பட்டுநூல் எடுக்குறாங்க. அகிம்சா பட்டுங்குறது பட்டுப்பூச்சி கூட்டைக் கிழிச்சு வெளிவந்த பிறகு அந்தக் கூட்டிலிருந்து நூல் எடுத்து நெய்றது. கூடு கிழிஞ்சு போறதால நூல் ஒரே நீட்டமா வராது. அதுதான தரம் குறைவாகக் கருதப்படுது.

செயற்கைப்பட்டுன்னு ஒன்னு வந்தது. இப்பவும் இருக்கும்னு நினைக்கிறேன். மூங்கில் நாரில் செய்யும் பட்டு.

பட்டுப் பீதாம்பரம் அணிஞ்சிருக்கிறதா சாமியைச் சொல்றோம். மேல சொன்னதுல எந்தப் பட்டுன்னு தெரியலையே. பீதாங்குற பெயரே சீன கொரிய மொழிகள்ள இருந்துதான் இந்தியாவுக்கு வந்ததாம். அந்தப் பேரையே வடக்க பயன்படுத்துனப்போ, அதுக்கு பட்டுன்னு தமிழ்ல ஏன் பேர் வெச்சாங்கன்னு யோசிச்சிட்டே இருக்கேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க நெ.த.

பழைய காலத்தில் குடிசைத் தொழிலாகத்தான் இருந்துருக்கணும். பட்டு நெசவாளர்களுக்கு வேற எங்கிருந்து பட்டுநூல் வருதுன்னு பார்க்கணும்.... இறக்குமதி உண்டோ என்னவோ?

பயணங்களில் சாப்பாடு..... எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்தான். வேற வழி இல்லையே....

said...

வாங்க ஜிரா.

இப்பத்தான் நினைவுக்கு வருது.... நூலை எடுத்தபிறகு அந்தப் பட்டுப்புழுவின் கூடுகளை ரெண்டாய் வெட்டி அதில் வண்ணம் தோய்த்து மாலைகள் செய்து விற்பதைப் பார்த்துருக்கேன். காதியிலேயே கிடைச்சது!

பட்டு பட்டுன்னு பட்னு சொல்லிட்டாங்க போல!

ஆராய்ச்சி முடிந்ததும் நமக்கும் தகவல் சொல்லுங்க!

said...

இதெல்லாம் என்னங்க ..அந்தக் காலத்தில் நம்மாட்கள்மெலிதாக நெய்து முடித்த புடவைகளை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கலாமாம்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆமாம். நானும் கேள்விப்பட்டுருக்கேன். ஆனால் நேரில் பார்த்ததில்லை.

said...

ஓட்டுநர் 1 - ஓட்டுனர் 2

இம்போசிஷன் டைம்

said...

பட்டும் பார்த்தாச்சு..