Wednesday, May 23, 2018

சொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 15

இன்றைக்கு நல்ல நாளாக் கொடுக்கச் சொல்லிப் பெருமாளை வேண்டிக்கிட்டே எழுந்து தயாராகிக் காலை காஃபியை குடிச்சதும்தான் நேத்து ராத்ரி சமைச்ச சாதம் பாக்கி  இருக்கேன்னு நினைவுக்கு வந்துச்சு. ப்ரஞ்ச் முடிச்சுக்கலாமுன்னு ஐடியா! வெண்ணெய் வேற இருக்கே :-)
பத்தரை மணிக்குக் கிளம்பிக் கீழே போய்  டாக்ஸிக்குச் சொன்ன பத்து நிமிட்டில் வண்டி வந்துருச்சு. டெம்பிள்  ஆஃப் ஹெவன் போறோம். எல்லாரும் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டு, அதன் பயனா சொர்கம் போவாங்க.  இங்கே என்னன்னா சொர்கத்துக்கே ஒரு கோவில் கட்டி விட்டுட்டாங்க.   கும்பிட்டா நேரடியா சொர்கம்தான், இல்லே?  இது(வும்)  ரொம்ப தூரம் இல்லை. நாலு கிமீக்கும் குறைவுதான்.  ட்யனமென் ஸ்கொயர் இருக்கும் பத்து லேன் சாலையைக்  குறுக்கே கடந்து நேராப்போறோம்.

மரத்துக் கிளையிலே கரடியா உக்கார்ந்துருக்கு? இல்லை கருப்பு நாயா?  போற போக்கில்  க்ளிக்குனதுதான்.  இந்தப் பயணத்துலே,  அன்றன்று எடுத்த படங்களை  லேப்டாப்பில் லோட் பண்ண முடியாமல் ஒரு பிரச்சனை. எடுத்த படங்கள் என்ன அழகில் வந்துருக்குன்னு  தெரியலை.....  ஆறது ஆகட்டுமுன்னு படபடன்னு க்ளிக்கிக்கிட்டே போறேன். ஊருக்குப்போய்த்தான் பார்க்கணும். நல்லவேளை நூத்திநாப்பது ஜிபிக்கு உண்டான எஸ்டி கார்ட்ஸ் கொண்டு வந்துருக்கேன் என்பதால் இடப்பத்தாக்குறை பிரச்சனை இல்லை.

டாக்ஸிக்கு சீனக்காசு முப்பதுதான் ஆச்சு. உள்ளே போகக் கட்டணம் உண்டு. ஆளுக்கு முப்பத்திநாலு.  வெளியவே உள்ளே என்ன இருக்குன்றதுக்கான விளக்கம் .

முகப்பு வாசலைக் கடந்து உள்ளே போறோம்.  பெரிய இடம்தான். வரிசையா மரங்களுக்கிடையில் கல்பாவிய பாதைகள்!  ஒரு நூறு மீட்டர் இருக்கும்.
அடுத்து வர்றது, சீனக்கூரை அமைப்புடன் இருக்கும் அலங்கார நுழைவுவாசல்.  மூணு பகுதிகளும், பிரமாண்டமானக் கோட்டைக்கதவுகளுமா இருக்கு!  அதோ.... அங்கே தூரத்தில் கோவில் கோபுரம் !  அடடா......   என்ன அழகுப்பா!!!

கடந்து உள்ளே காலடி எடுத்து வைக்குமிடமே வளாகம் எவ்ளோ பெருசா இருக்கப்போகுதுன்னு கட்டியம் சொல்லுது!  இதுவும் நூறு மீட்டருக்குக் குறையாது.  தூரத்துலே என்னமோ  டிவி ஸ்க்ரீன் மாதிரி இருக்கேன்னு பார்த்தால் குழந்தைகளுக்கான கார்ட்டூன் ஓடிக்கிட்டு இருக்கு!  உலகம் பூராவும், சின்னப்பசங்களை இந்தக் கார்ட்டூனும் டிவியும் எப்படிப் புடிச்சுப்போட்டுருக்குன்னு பாருங்க....
எங்கூர் ஹேக்ளிபார்க்கை நினைவுபடுத்தும் விதமா வரிசை வரிசையா நட்டு வளர்ந்து நிக்கும் மரங்கள் !
இந்த வளாகம்  கொஞ்சம் பெருசுதான். ஒன்னுமில்லை.... ஒரு இருபத்தியேழு லட்சம் சதுர மீட்டர்னு கணக்கு சொல்றாங்க. அறுநூத்தி அறுபத்தியேழு சொச்சம் ஏக்கர் நிலமாம்! யம்மாடியோ...   (கால் வலி நிச்சயம்!)

பதினைஞ்சாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கட்டியிருக்காங்க. பொங்கல் பண்டிகைக்குன்னே கட்டுனாங்கன்னு சொல்லணும். அந்தந்த வருசம்  விளைச்சல் அமோகமா இருக்கணுமுன்னு கோவில் கட்டி,  காவு கொடுத்து,  சாமி கும்பிட்டுக் கொண்டாடும் இடம்!

நாங்க ஒரு பக்கம் சுத்தி மேலே கோவிலுக்குப் போகும் படிகளுக்கு வந்தால் அங்கேயும் ஒரு  டிக்கெட் கவுன்ட்டர் இருக்கு. விலை மலிவு வேற!  விசாரிச்சால் நம்ம டிக்கெட் தோட்டத்துக்கும் கோவிலுக்கும் சேர்ந்தே இருக்காம். தோட்டம் பார்க்கத் தனிக் கட்டணம். உள்ளே வந்தவங்க, மனசு மாறி திடீர்னு மேலே கோவில் பார்க்கணுமுன்னா இங்கே கோவிலுக்கான டிக்கெட் வாங்கிக்கலாம். ரொம்ப நல்லது. இவ்ளோ பெரிய தோட்டத்தைச் சுத்திட்டு மனசு மாறினால்........   அது சரி,  திரும்ப எவ்ளோன்னு நடக்கறது  வளாகத்தின் முன்வாசல் டிக்கெட் கவுன்ட்டருக்கு! நல்லாத்தான் யோசிச்சுச் செஞ்சுருக்காங்க.!
படிகளில் ஏறி மேலே  சீனக்கூரை வாசலுக்குப் போனால்  தானியங்கி டிக்கெட் செக் இருக்கு. அதுலே  நம்ம டிக்கெட்டை வச்சு எடுத்துக்கணும். யூ மே கோ நௌ :-) turnstile தள்ளினால் ஆச்சு .

உள்ளே பிரமாண்டமான  சதுர முற்றம்.  வாசலுக்கு நேரா இன்னும் உயரத்தில்  கோவில்.  முற்றத்தின் ரெண்டு பக்கங்களிலும்  கட்டடங்கள் தனித்தனியா....
மேலே கோவிலுக்குப் போக படிகள். ஏறிப்போகும்போதே  வட்ட  வட்டமா  பிரகாரங்கள் போல  இடுப்பளவு சுற்றுச்சுவர். மூணாம் பிரகாரத்தின்  நட்ட நடுவில் வட்டக்கோவில்!
கேரளக்கோவில்களில் இப்படி வட்டக் கருவறைகளைப் பார்த்துருக்கோம்!  இங்கே மேலே மூணடுக்குக் கூரை. அதுக்கும்மேலே  ரப்பர்ஸ்டாம்ப் கைப்பிடி டிஸைனில் ஒரு அமைப்பு!
சாமி எந்தப் பக்கம் இருப்பாருன்னு தெரியாதே.... அதுதான் வட்ட வடிவ அமைப்புலே கோவில் கட்டீருக்காங்க!  சொர்க்கத்துலே கோவில் இப்படித்தான் இருக்கணுமுன்னு கணிப்பு.

இங்கேயும் வாசல் மூணு!  உள்ளே கால் வச்சுப் பார்க்க அனுமதி இல்லை. ஒரு கம்பித்தடுப்புப் போட்டு வச்சு, அதுக்கு அந்தாண்டை நின்னு விளக்கம் சொல்றாங்க சில பெண்கள். கோவில் கைடு?  பயணிகள் அதிகம் வர்ற இடம் என்பதால் அவுங்களுக்குக் கூடுதல் தகுதியா இங்லிஷ் தெரிஞ்சுருக்கு!  நமக்கும் நல்லது.
முப்பத்தியெட்டு மீட்டர் உசரத்துலே விதானம்.  வட்டக் கட்டடத்தின்  விளிம்போரத்தில்  பெருசா பனிரெண்டு சிகப்புக் கலர் தூண்களில் தங்கக்கலர் டிஸைன்கள் போட்டு,  சுத்திவரக் கூரையைத் தாங்கி நிக்குது!  இது  தூணுக்கு ரெண்டு மணின்னு  நாளின் இருபத்திநாலு மணி நேரத்தைக் குறிக்குமாம்.  வட்டத்தின் விட்டம் முப்பத்தியாறு மீட்டர். மேலே போகப்போகக் குறுகி இருக்கு.

அங்கே இருந்து   இறங்கும்   ட்ராகன் படம் வரைஞ்ச நாலு சிகப்புத் தூண்கள், வட்டத்தை நாலாப் பிரிக்குதே அவை நாலு பருவங்களாம்.

இந்த பனிரெண்டு தூண்கள் மட்டுமில்லாமல் இன்னும்  கொஞ்சம் ஒல்லியான சின்னத்தூண்கள் பனிரெண்டு இருக்கு.    இவை பனிரெண்டு மாசத்தைக் குறிக்கும் பனிரெண்டு தூண்கள். ஆகமொத்தம் அங்கிருக்கும் இருபத்தியெட்டுத் தூண்கள், நிலாவின்  வளர்ந்து குறுகும் (ஃபுல் மூன், நியூ மூன் ஃபுல் மூன்)  இருபத்தியெட்டு விதத்தைச் சொல்லும் கணக்குன்னு  என்னென்னவோ சொல்லிக்கிட்டே போறாங்க விளக்கம் சொல்லும் அம்மிணி.   ( அமாவாசை டு அமாவாசைன்னு திதிகள் கணக்கு போல !)

இவுங்களும் லூனார் கேலண்டர்தான் பயன்படுத்தறாங்க!
கண்ணுக்குத் தெரிஞ்ச சாமிகளா, சூரியனும் சந்திரனும் இருப்பதால் இவைகளை வச்சுத்தான் கேலண்டர் பல நாடுகளில்.  உலகத்துக்குப் பொதுவா இன்னொரு கேலண்டரா இங்லிஷ் கேலண்டரையும்  ( Gregorian calendar)எடுத்துக்கிட்டோம்.  இது புழக்கத்தில் வந்தது 1582 இல்தான். அதுக்கும் முந்தி வெவ்வேற விதமா அவுங்க நாட்களையும் மாசங்களையும் கணக்குப் பண்ணியிருக்காங்க.   ஆனால் உண்மையைச் சொன்னா.... நம்மதுதான் ஆதிகாலத்து சமாச்சாரம்.  சூரியனும் சந்திரனும்  எத்தனை யுகங்களா  இருக்கோ... யாருக்குத் தெரியும்?

இத்தனைக்கும் நடுவிலே  உள்ளே இருக்கும் பளிங்கு ஆசனத்தில் ராஜாவும் அவர் குடும்பத்தினரும்  வந்து  உக்கார்ந்து,  விளைச்சல் அமோகமா இருக்கணுமுன்னு சாமி கும்பிடுவாங்களாம். வருசத்துக்கு ரெண்டுமுறை, அரசரும் குடும்பத்தினரும் விசேஷ உடுப்பெல்லாம் போட்டுக்கிட்டு இங்கே வந்து தங்கி மரக்கறி  சாப்பாடுகளை மட்டும் சாப்பிடுவாங்களாம். விரதம் ?  அந்த ரெண்டுமுறை எப்பன்னா.....மிட் வின்ட்டர், மிட் சம்மர்னு  சூரியன்  வடக்கேயும் தெற்கேயுமா போய் வர்ற  சமயமாம்.  ஐயோ.... இது நம்ம உத்தராயணம், தக்ஷிணாயணம் இல்லே? 

அவுங்க சொல்லச் சொல்ல,  எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டே க்ளிக் பண்ணுனதுதான்.  படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.
இந்த மொத்தக் கோவில் கட்டடமும் முழுக்க முழுக்க மரத்தால் கட்டுனதுதான். ஒரு ஆணி கூட  அடிக்காமல் கட்டுனதாம்!   ஒரு சமயம் மின்னல் தாக்கி எரிஞ்சே போனதைத் திருப்பியும் கட்டியிருக்காங்க.
வட்ட முற்றத்தில் நின்னு  நாமும் கொஞ்சம் க்ளிக்கினோம்.  உயரத்தில் இருப்பதால்  அங்கிருந்து சுத்திவரப் பார்க்கும்போது பிரமிப்புதான்!
மேலே போய்வரும் படிவரிசைகளுக்கிடையில் இருக்கும் இடத்திலும் மார்பிள் பலகையில் ட்ராகன்களைச் செதுக்கி வச்சுருக்காங்க.  சிங்கமும் ட்ராகனும்தான் ரொம்பவே ஒசத்தி இந்த சீனக் கலாச்சாரத்துலே!
பிரகாரம் விட்டிறங்கி  ரெண்டு பக்கமும் இருக்கும்  ஒரு  நீளக் கட்டடத்துக்குள் போனால்....  சாமி சந்நிதிகளா  இருந்துச்சு.   நடுவிலே பெருசும், பக்கத்துக்கு நாலா    சேர்த்து மொத்தம் ஒன்பது சந்நிதிகள். சின்னச்சின்னப் படிகள் வரிசையின் மேலே  அலமாரி போல ஒன்னு.  அதுலே விக்ரஹம் ஏதும் இல்லை.  ஒரு திரை போல துணி மட்டும்.  சிதம்பர ரகஸியம் ? சீனத்தில் என்னவோ எழுதி இருக்கு!


 இன்னொரு கட்டடத்தில்  சின்னதா  ம்யூஸியம் இருக்கு.  இந்தக் கோவிலின் கட்டட அமைப்புகளையெல்லாம்  அப்படியே சின்ன  மாடலாப் பண்ணி வச்சுருக்காங்க. கூடவே கட்டடங்களைப் பத்தின விளக்கங்களும்!

இதைப் புதுப்பிச்சுக் கட்டுனப்ப எந்தமாதிரி டைல்ஸ் சீனக்கூரைக்குப் போட்டாங்கன்ற தகவல்களும் உண்டு!
சிகப்பும் பச்சையுமா மூங்கில் மாதிரியே டிஸைன் செஞ்ச ஓடுகள்.  கீழே முடியும் இடத்துலே  அரசர்களுக்குரிய அடையாளம்..... ட்ராகன்தான் இலட்சினை!
இந்த முற்றத்தின் ஒரு மூலையில் சின்னதா ஒரு பொட்டிக்கடை. கூடவே பழங்கால உடுப்பு வாடகைக்கு எடுத்துப் போட்டுக்கிட்டுப் படம் புடிச்சுக்க ஒரு ஏற்பாடு!
கொஞ்சம் அந்தாண்டை ஒரு வாசலும் மூடிய கதவுமா இருக்கேன்னு பார்த்தால் இதுக்குப் பெயர் எழுபது வருசக் கதவுன்னு தகவல் பலகை!

பதினெட்டாம் நூற்றாண்டில் (1781) ஆட்சியில் இருந்த அரசருக்கு எழுபது வயசாயிருச்சு. அவரால் முன்னைப்போல  சட்புட்டுன்னு நடக்க முடியலை. வயோதிகம்.....  அதனால் இங்கே நடக்கும் பூஜை புனஸ்காரங்களுக்கு வந்து கலந்துக்க ஒரு தனிக் கதவு கட்டி,  ரொம்ப தூரம் நடக்காம  இதன் வழியா வர ஏற்பாடு ஒன்னு செஞ்சாங்க.  கதவாண்டைவரை  வர பல்லக்கு இருந்துருக்குமோ?

ராஜா நினைச்சாரு.... 'நமக்குத்தான் வயசாகி இப்படி நடக்க முடியலை. ஷார்ட்கட் வழி இருக்குன்னு தெரிஞ்சா நம்ம குடும்பத்துப் பயபுள்ளைகளும்  நடக்கச் சோம்பல் பட்டுக்கிட்டு இது வழியா வர ஆரம்பிச்சா நல்லாவா இருக்கும்?  போடு ஒரு அரச கட்டளை! எழுபது வயசான அரசர் மட்டுமே இதன் வழியா உள்ளே வரலாம்.  அறுபத்தியொம்பதுன்னாக்கூட அனுமதி இல்லை !'

எந்த நேரத்துலே இப்படி ஒரு  சட்டம் போட்டாரோ...... அவருக்குப்பின் அரியணை ஏறுன  எந்த அரசருமே எழுபதை எட்டிப்பார்க்கவே இல்லையாம்!  அடப்பாவமே.....  பூட்டுன கதவு இன்னைக்கும் பூட்டுனபடியே இருக்கு!
மூட்டுவலி கேஸ்களுக்கு அனுமதி கொடுத்துட்டுப் போயிருக்கப்டாது? ப்ச்...

அடுத்த பகுதிக்குப்போக  கோட்டைக்கதவுகளோடு ஒரு கட்டடம். பத்துப் படிஏறி இறங்கணும்.  எல்லாக் கட்டட நுழைவுகளும் மூணு  வாசலோடு இருக்கு.  நடுவாசல்  சாமிக்கு மட்டும்!    கிழக்கு வாசல் அரசருக்கும் மேற்குவாசல்  மற்ற மந்திரி ப்ரதானிகளுக்கும்!
 இந்தக் கட்டடத்துலேயே ஒரு  நினைவுப்பொருள் கடை. காஃபியும் கிடைக்கும். சீன உடுப்புகளோடு பொம்மைகள் விற்பனைக்கு !  ரொம்பவே அழகு!
பத்துப் படிகள் இறங்கியதும் ஒரு பிரகாரம். இங்கேதான்   பலி கொடுக்கும் இடமும், பலியிட்டவைகளைச் சுட்டு எரிக்க உண்டான விறகடுப்பும்.  அப்படித்தான் எழுதி இருக்காங்க.  இது  யாக குண்டம்னு நினைக்கிறேன். நல்ல உயரமா இருக்கு. ஏழெட்டுப்படிகள் ஏறிப்போகணும்.  பலியிட்டவைகளின் ரத்தம் பெருகி ஒரு குழியில் போய்ச் சேர, வாகாய் கட்டியும் விட்டுருக்காங்க.

 அங்கங்கே வெளிச்சத்துக்குக் கட்டைகளை எரிக்க  இரும்பாலான  அமைப்புகள். இதுலேயே குளிரும் காய்ஞ்சுக்கலாம்.


  இண்டுவுக்கு டிமாண்ட் வந்துருச்சு :-)

 அதென்னமோ  ஹால் மாதிரி கட்டி இருப்பவைகளைம், ஒரு வளாகம் இல்லை ப்ரகாரத்துக்குள் வரும் நுழைவு வாசல்களையும் ஒரே மாதிரி ப்ரமாண்டமாக் கட்டி வுட்டுருக்காங்க.

 பெருசா மூணு வாசல்,  மூணு கேட்.....  இருந்தால் அது நுழைவுவாசல்னு  புரிஞ்சுக்கணும்:-)  கோவிலின் இந்தப் பகுதியைக் கடந்து அப்படியே  வெளியே போகலாம்.
வெளியேன்னா.... வெளியே இல்லையாக்கும்.... ஓடிப்போய்டாதீங்க.....

தொடரும்....:-)


7 comments:

said...

அந்த இடங்களின் அழகை உங்கள் படங்களில் கொண்டு வந்து எங்களுக்கும் கொடுத்ததற்கு நன்றி. ரசித்தேன்.

said...

மிக அருமை. நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி

said...

அழகான கோயில். விளக்கின் சுடர் எல்லாப் பக்கமும் பாக்குற மாதிரி இறைவன் எல்லாப் பக்கமும் பார்க்கிறான். அதுனால வட்டக் கோயில் பொருத்தம் தான்.

நிறைய கூட்டம் வருதுன்னும் தெரியுது. அதான் அங்கயும் கடை தொறந்திருக்காங்க. அந்தச் சீனப் பொம்மைகள் ரொம்ப அழகு.

முடியாதவங்க பல்லக்குல வர்ரதுல தப்பில்ல. 70 வயசுன்னு சட்டம் போடாம, ஒடம்புக்கு முடியாதவங்கன்னு அந்த மன்னர் சட்டம் போட்டிருக்கலாம்.

said...

ஏ...அப்பா.... படங்கள் அருமை. இவ்வளவு தூரங்கள் நடப்பது மிகவும் கஷ்டமே...

ஒவ்வொரு இனத்தின் சொர்க்கம், நரகம், கடவுள் கான்சப்ட், மனிதனின் குழப்பத்தையே காட்டுகிறது...

said...

பிரமாண்டமான கோவில் தான்..அருமை..