Monday, May 28, 2018

சொர்கத்துக்குப் பின் :-) சீனதேசம் - 17

சொர்கக்கோவில் முடிச்சதும் அடுத்த பிரச்சனை..... டாக்ஸி பிடிக்கறதுதான்.....  நாம் எந்தத் திசையில் போகணுமுன்னு  தெரியாததால்  இடது பக்கம் திரும்பி நடக்கறோம்..... போக்குவரத்தைப் பார்த்தால்....  டாக்ஸிகள் எல்லாம் எதிர்சாரியில் போகுது. எங்கியாவது போய் சாலையைக் கடக்கணுமேன்னு  வலப்பக்கம் திரும்பி நடக்கறோம். இப்படியே  டெம்பிள் ஆஃப் ஹெவன் வாசலையே சுத்திக்கிட்டு இருந்தால்  அவ்ளோதான் :-)  கடைசியில் ஒரு முச்சந்தியில் நிக்கவேண்டியதாப் போயிருச்சு :-)

மைக்கேல் சொன்னதுபோல கண்ணை மூடிக்கிட்டு சாலையைக் கடக்கலாமா?

போகட்டும், ஆம்புலன்ஸ் ரெடியாத்தான் இருக்குன்ற நிம்மதி !
எங்கெயாவது பாதசாரிகள் கடக்கும் வழி இருக்கான்னு தேடிக்கிட்டே ஆத்தங்கரைப்பக்கம் போயிருக்கோம்.  நல்ல சுத்தம். இதுதான் அகழியாவும் கோட்டைகளைச் சுத்திப்போய்க்கிட்டும் இருக்கு. சீனர்களுக்கு மரங்கள் மேலே ஆசை அதிகமாம். (சொல்லக் கேள்விதான் !) 

சாலை வேடிக்கை கொஞ்ச நேரம். டபுள் டெக்கர்  சூப்பர்! குட்டி வண்டி ஒன்னு  அழகு.   ஓட்டுநர் எங்கே.... லாக் பண்ணிட்டுப் போயிட்டாங்களே!

ஒரு டூரிஸ்ட்  பஸ் வந்து மக்களைக் கொட்டிட்டுப் போச்சு !
ஒரு காமணி நேரம் இப்படியும் அப்படியுமா அலைஞ்சபின் டாக்ஸி கிடைச்சுருச்சு :-) அட்டையை எடுத்துக் காமிச்சதும் மீட்டரைப் போட்டுட்டு வண்டியை எடுத்தார்.  நமக்கு நிம்மதி! ஸ்ஸப்பா..........

இங்கெல்லாம் மொழி அறியாத பயணிகள்,  தங்கற இடத்தோட விலாசத்தை எப்பவும் கையோடு வச்சுக்கணுமாம். போலிஸ் எந்த இடத்திலும் நம்மை நிறுத்தி விசாரிக்குமாம். இதுக்காகவே ஹொட்டேல்களில் தனியா கார்ட் அடிச்சு வச்சுருக்காங்க. அதுலே ரெண்டு எடுத்துப் பையிலே போட்டு வச்சுக்கணும் நாம்.  எதுக்கு வம்பு?
அரைமணி நேரப்பயணத்தில் வந்து சேர்ந்துட்டோம். முப்பத்தியஞ்சு  சீனக்காசு. நாட் பேட்!


கெஞ்சும் கால்களுக்குக் கொஞ்சம் ஓய்வு  கொடுத்தேன். எடு அந்த ஐஸிஹாட்!

கொண்டு வந்த தீனிகளில் கொஞ்சத்தை ஒரு டீயுடன் ஸ்வாஹா பண்ணி முடிச்சதும்,   கையிருப்பு அரிசியைப் பார்த்தா  ஒரு டம்ப்ளர் இருக்கு.  அதைக் களைஞ்சு மைக்ரோவேவில் வச்சேன்.

கீழே போய் வரவேற்பில் செக் அவுட் டைம் விசாரிக்கணும். ஒரு மணியாம்.  எட்டுநாள் தங்கல் என்பதால்  மூணுவரை கிடைச்சது. நாளைக்குக் கிளம்பறோம்.  இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் சின்ன அளவில் செஞ்சுக்கலாமேன்னு  வாங்ஃப்யூஜிங் பகுதிக்குப் போனோம். இதுதான் அந்த நடக்கற தெரு. மூணு நிமிட் நடைதான்.



பெரிய நகரங்களில்  'சிட்டி ஸ்கொயர்' என்னும் நகரச் சதுக்கங்களில்தான் எப்பவும் எதாவது நடந்துக்கிட்டே இருக்கும். அந்தக் கணக்கில் இதுதான் இங்கத்துச் சதுக்கம் மாதிரி. எதோ ஹாலிவுட்  படங்களுக்கான விளம்பரமா அங்கங்கே நிறைய செட் போட்டுக் கட்டவுட்ஸ் வச்சுக் கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க. இவுங்களோட ஃபில்ம்ஃபெஸ்டிவலா இல்லை அவார்ட் கொடுக்கறாங்களா   என்ன!
நமக்கும் சீனருக்கும் எக்கச்சக்க ஒற்றுமைகள் இருக்கும்போது இதுலே மட்டும் இல்லாமல் இருக்குமோ? சினிமா சினிமான்னு இங்கேயும்  சனம் ஓடிஓடிப் படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.



நாமும் விட்டுவைக்கலை.  இது அவெஞ்சர்ஸ்  படத்துக்கான  இன்ஃபினிடி வார்  ப்ரமோஷன் :-)
இத்தனை கூட்டத்துக்கிடையும் மாடுகள் மிரண்டு ஓடாமல் நின்ன இடத்துலேயே நிக்குதுகள் :-)
நேத்தே  பார்த்துவச்ச ஒரு கடைக்குப் போகணும் எனக்கு.  50% தள்ளுபடின்னு போடாம  ரெண்டு வாங்கினால் *** விலைன்னு போட்டு வச்சுருக்காங்க. இந்தக் கடையில் ஒரு விசேஷம் என்னன்னா.... நோ பேரம்!  எல்லாம் ஃபிக்ஸ்ட் ப்ரைஸ்.  சரியான விலைதானான்னு தெரிஞ்சுக்க, நேத்து நாம் வேற இடத்தில் வாங்கின லிட்டில் புத்தாவைப் பார்த்தால்  அதே முப்பத்தியஞ்சு. அப்பாடா.....  ஒரு பானை சோத்துக்கு  ஒரு  சோறு பதம் :-)
மகளுக்கு ஒரு ப்ரேஸ்லெட் வளையல், நீலக் கல் வச்சது, தாய்க்கு ஏறக்கொறைய அதே டிஸைனில் பச்சைக்கல்.

மோதிரங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு!  வாங்கிக்கலை....




பொம்மைக் கடைக்குள் புகுந்தோம். நம்ம ஜன்னு மாதிரி ஒருத்தி இருந்தால் ....   உங்களுக்குத் தெரியுமோ.... நம்ம ஜன்னுவும் பிறப்பில் சீனத்திதான். நம்ம வீட்டுக்கு வந்தாட்டு, இண்டியனா கன்வெர்ட் ஆனாள்.  இன்னொரு பொம்மை வாங்கப்டாது. ஜன்னு மட்டும்தான் இருக்கணுமுன்னு  'நம்மவர்'  கண்டிஷன் போட்டார். ஒரு பெண் குழந்தைதான் லிமிட்!

பழைய அழகோடு இப்பெல்லாம் பொம்மைகள் வர்றதில்லைப்பா...... காலமும் டேஸ்ட்டும் மாறிப்போச்சு பாருங்க.... க்ளாஸிக்கை யார் மதிக்கறா?  ப்ச்....
ப்ளாஸ்டிக் பை வேணாமுன்னு  இப்படிச் சொல்லிக்கிட்டு இருக்காங்க.....  ஆனால் சீனப்பொருட்களில் பலதும் ப்ளாஸ்டிக்தான் !
பாலா  கடை வச்சுருக்கார்!
அழகழகான சீனச்சாடிகள் !
இன்னும் சேர்மன் மாவோதான் இவுங்களுக்குக் குலச்சாமியா இருக்கார்! ஒரு தலைவனை இப்படிக் கொண்டாடறது நல்லாத்தான் இருக்கு!
வேடிக்கை போதுமுன்னு அறைக்கு வந்து  டின்னர் முடிச்சோம்.  நிறைய சாதம் பாக்கி. அதைப் புளிக்காய்ச்சலோடு கலந்து வச்சேன். மீந்துபோன புளிக்காய்ச்சல் (எம்டிஆர்)திருப்பிக் கொண்டுவர முடியாது.....  போகட்டும்....

மறுநாளைக்கான உடைகளை எடுத்து வச்சுட்டு,  செக்கின் செய்யப்போகும் பெட்டிகளை அடுக்கி எடுத்து வச்சுட்டுத் தூங்கியாச்சு.  ரைஸ் குக்கரை நாளைக்கு  அதுலே வச்சால் போதும்.

காலையில் எந்திரிக்கும்போதே கொடி ஏத்தி முடிச்சுருந்தாங்க. நாந்தான் லேட்.  குளிச்சு ரெடி ஆனோம். 'நம்மவர்' சொல்லிக்கிட்டே இருந்த இடத்துக்கு இப்போ போய் வந்துடலாமா?

பழக்கப்பட்ட சாலை என்பதால்  பரபரப்பில்லாமல்  நிதான நடையில்  ட்யானமன் கேட் (ட்யானமன் ஸ்கொயருக்கு  நேரா இருக்கு. முகப்பில் சேர்மன் மாவோவின் பெரிய படம் ஒன்னு வச்சுருக்காங்க! ) போய்ச்சேர்ந்தோம். பாஸ்போர்ட் காமிச்சு என்ட்ரி ஆச்சு. நாலு நாளைக்கு முன்  நாம் உள்ளே போய்ப் பார்த்த அதே வழிதான்.   பேலஸ் ம்யூஸியம் போகத் தனி டிக்கெட் வாங்கிக்கணும்.  உள்ளூர் மக்களுக்கு  எல்லாமே ஆன்லைனில்தான், க்யூஆர் கோட்.
தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்தவளைக் கூட்டி வந்துட்ட திருப்தி 'நம்மவருக்கு' :-)

இந்த  ட்யானமன் கேட்டுக்கும் பேலஸ் ம்யூஸியத்துக்குள்ளே போகும் முகப்பு வாசலான  மெரிடியன் கேட்டுக்கும் சுமார் ஒரு கிமீ தூரம். உள்ளேயும் நிறைய நடக்கணும் என்பதால் பொடிநடையில் போனோம்.
வெளிநாட்டு மக்களுக்காக ஒரு டிக்கெட் கவுன்ட்டர் வச்சுருக்காங்க. பாஸ்போர்ட் காமிச்சதும்  பாஸ்போர்ட் நம்பரைக் கம்ப்யூட்டரில் பதிஞ்சுட்டாங்க. அவ்ளோதான்! டிக்கெட்டுன்னு ஒன்னும் தனியாக் கையில் கொடுக்கலை.  பாஸ்போர்ட்தான் டிக்கெட்டாம்!  கேட்டில் காமிச்சால் போதுமாம்.  ஆளுக்கு அறுபது சீனக்காசு.

  ஒரு நாளைக்கு, உள்நாடு வெளிநாடுன்னு  மொத்தம்  எம்பதாயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி. காலையில் எட்டரைக்குத் திறக்கறாங்க.  மூடும் நேரத்தில் மட்டும்  கோடைகாலம் குளிர்காலமுன்னு கொஞ்சம் மாற்றம் இருக்கு. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மாலை அஞ்சரை, நவம்பர் முதல் மார்ச் வரை  மாலை நாலரை. பார்த்து வச்சுக்குங்க.
கவுத்துப்போட்ட 'ப' வடிவில்  கட்டடங்களும்  பெரிய முற்றமும்!  நேரா இருக்கும் கட்டடத்துலே அஞ்சு வாசல்!   நட்ட நடு வாசல் அரசருக்கு மட்டும்! அதுக்கு ரெண்டு பக்கமும்  இருக்கும் வாசல்கள் மற்ற அரச குடும்பத்தினர், மந்திரிப்ரதானிகளுக்கும்,  ரெண்டு பக்கமும் ஓரத்தில் இருக்கும்  சின்ன வாசல்கள் படை வீரர்கள், காவலாளிகள் , பணியாளர்கள் இப்படியானவர்களுக்குமாம்!

அந்த நட்ட நடு வாசலில் அரசர் கூடவே நடந்து போகும் பாக்கியம் அரசிக்கும் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதானாம். கல்யாணம் கட்டி வரும்போது, புதுக் கல்யாணப்பொண்ணை அந்த வாசல் வழியா அரசர் கூட்டி வருவார். அத்தோடு சரி!
மத்தபடி நாட்டு மக்களுக்கு  நகரின் இந்த பகுதிக்குள்ளேயே வர்றதுக்கு  அனுமதி இல்லை. மறுக்கப்பட்ட இடம் என்பதால்தான் ஃபர்பிடன் ஸிட்டின்னு பெயரே வந்துருக்கு!

 உண்மையில் இது அரண்மனைதான். பதினைஞ்சாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கட்டுனது.    சீனத்தை ஆண்ட ரெண்டு பேரரசுகளின் ( மிங் & கிங்) மன்னர்கள்  இங்கேதான் வாழ்ந்துருக்காங்க.  இருபத்தினாலு அரசர்கள்  ஒருவருக்குப்பின் ஒருவரா ஆட்சி செஞ்சுருந்தாங்களே!

இப்ப இந்த அரண்மனையை, உலகப்பாரம்பரியக் கட்டடங்கள் பட்டியலில்  யுனெஸ்கோ சேர்த்துருக்கு!  உலகப்புகழ்பெற்ற பத்து  அரண்மனைகளில்  இதுதான் நம்பர் ஒன்னு!

மொத்த வளாகமும்  நூத்தி எழுபத்தியெட்டு ஏக்கர்கள்.

(ஹப்பா......நேத்து  நாம் பார்த்த சொர்கக்கோவிலில் கிட்டத்தட்டக் காவாசிதான்!) 

கால் சிரிச்ச மாதிரி தோணுச்சு :-)

தொடரும்............:-)


9 comments:

said...

படங்கள் பிரமாதம்.

said...

படங்களை ரசித்தேன். அதுக்குள்ளே சீனப் பயணம் முடியப்போகுதா?

இடங்களின் பிரம்மாண்டம் பார்த்து, போகாமலேயே எனக்குக் கால் வலிக்குது. தொடர்கிறேன்.

said...

மிகஅருமை, நன்றி

said...

கோயிலுக்குப் போயிட்டு வந்ததும் ஒங்களுக்கு மீட்டர் போட்ட டாக்சியே கெடைச்சிருச்சே.

அவெஞ்சர்ஸ் படத்தை சீன மொழியில டப் பண்ணி வெளியிட்டிருக்காங்க. நீங்க போன சமயத்துலதான் மங்கி கிங் 3, மான்ஸ்டர் ஹண்ட் 2 எல்லாம் அங்க ரிலீசாயிருந்திருக்கும்னு நெனைக்கிறேன். இது ரெண்டும் சீனப்படங்கள். பிரம்மாண்டமான படங்கள்.

சிவப்பு நாயும் பாண்டாவும் அழகு. இப்பல்லாம் முன்ன இருந்த அழகு பொம்மைகள்ள இருக்குறதில்ல. பொம்மைப் படங்கள்ளயும் இருக்கிறதில்ல. ஏன்னா... பொம்மைகளையும் பொம்மைப்படங்களையும் கிட்டத்தட்ட மனிதமுகம் மாதிரியே அச்சு அசலா பண்றாங்க. அதான் அந்த அழகு போயிருதுன்னு நெனைக்கிறேன்.

மாவோக்கு இருக்கும் மரியாதை சீனாவில் கம்யூனிசம் இருக்கும் வரைக்கும் தான். ஒருவேளை குடியரசாக மாறினால் அப்போது மாவோவைக் கழட்டி விட்டுட்டு புதுசா யாராச்சும் தலைவராவாங்க.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க நெ.த.

இதுதான் நமக்கும் கால்நடைப்பயணமாகவே அமைஞ்சு போச்சு.

கால்வலி பயங்கரம். ஆனாலும் வலியோடு வலியா சமாளிச்சுட்டேன். பெருமாள் க்ருபை!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

வாங்க ஜிரா.

கோவிலுக்குப்போனதும் கைமேல் பலன்! ஆஹா....

புதுத்தலைவரா இன்னும் அங்கே யாரையும் மக்கள் இதுவரை ஏத்துக்கலை போல!

நம்மூரில் ஊழலை விரும்பாத தலைவரின் படம் போட்ட ரூபாய் நோட்டுகளை வச்சே ஏகப்பட்ட ஊழல் :-( பாவம்.... இல்லே அவர் !

பொம்மைகள்தான்... இப்ப ஏமாத்தமா இருக்கு! என்ன ஆனாலும் நம்ம ஜன்னு அழகு வராது:-)

said...

குட்டி வண்டி...சூப்பர்..


..