Monday, January 22, 2018

சங்கொடு.... சக்கரம்...... (இந்திய மண்ணில் பயணம் 104)

 சின்ன ஓய்வுக்குப் பிறகு  பொடி நடையில்  பக்கத்துத் தெருவில் இருக்கும் முஸ்தாஃபா நகை சென்ட்டருக்குப் போறோம். கோவிலுக்குப் போக வேணமான்னு நம்மவர் கேட்டார். இல்லை.... மகள் வேலையை முடிச்சுக்கிட்டுப் போகலாமுன்னு சொன்னேன்:-)
நியூஸியில் இருந்து கிளம்பி இங்கே வந்த தினமே  கல்யாண மோதிரம் பார்க்க இங்கே வந்தோமுன்னு எழுதி இருந்தேன். அது ஆச்சே  செப்டம்பர் 18. இப்போ நவம்பர் 6 !   புது டிஸைன்ஸ் வந்துருக்கான்னு பார்த்தால்....  ஒன்னும் இல்லை.  முந்தி பார்த்து வச்சதைக்கூடக் காணோம்.  விற்பனைப்பிரிவுப் பெண்கள் கூட அவ்ளோ உதவி இல்லை. 'வாங்குனா வாங்கு, வாங்காட்டிப் போ' ன்ற மனோபாவம்! சலிப்பு அதிகம்....

நாங்கள்  'பத்துபஹட்டில்' பார்க்கலாமுன்னு  செராங்கூன் சாலையில் காளியம்மன் கோவிலை நோக்கிப் போறோம்.  அம்மனைக்  கும்பிட்டுக்கிட்டு, அப்படியே கோமளவிலாஸில் ஆளுக்கொரு காஃபி.  மணி ஆறரை ஆகுது.  இப்ப எதாவது சாப்பிட்டால்... அப்புறம் ராச்சாப்பாடு  வேண்டி இருக்காது....    இப்ப  வேணாம்.....

எதிர்வாடையில் நடக்கும்போது மெர்லின் நகைக்கடை கண்ணில் பட்டது.  கல்யாண மோதிரங்களைப் பார்த்தால்  நமக்குத் தேவையான மாதிரி இருந்தது.   க்ளிக்கி மகளுக்கு அனுப்பினோம்.  ஸ்டேண்ட்பை யில்  இருக்கச் சொல்லி இருந்தோம். நியூஸியில் நடுராத்திரி பனிரெண்டு.  பாவம்தான். ஆனால் இதை விட்டால்.... அப்புறம் தொடர்பு கஷ்டம்....
ப்ளெயின் மோதிரங்கள்தான். கொஞ்சம் அகலமா வேணும் என்பதுதான் முக்கியம்.  உள்ளே எழுதணுமாம் !   ஓக்கே ஆச்சு.  ஆனால் ஒரு மோதிரத்துக்கு  சைஸ் கொஞ்சம் மாத்தணும்.  சரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க,  கடை மேனேஜர் டோரிஸ்.


கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்ததில் நானும் டோரிஸும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் :-)  (இப்பவும் வாட்ஸ் அப்பில் பேசிக்கிட்டு இருக்கோம்)  எங்கூரில் ஒரு ப்ளம் வெரைய்ட்டிக்கு பேர் 'டோரிஸ்' னு சொன்னேன். உண்மைதான்பா!

மகள் கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தப்ப, கல்யாண உடை, வெள்ளைக்கார டிஸைன்  கௌன் தானேன்னதுக்கு  இல்லை காக்ரான்னு சொல்லி செல்லில் இருந்த படத்தைக் காமிச்சேன்.  'நான் உங்க பொண்ணா இருக்கக்கூடாதான்னு இருக்கு'.... ன்னாங்க. அதனால் என்ன நீ(ங்களும்) என் பொண்ணு(மாதிரி)தான்னேன். கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க டோரிஸ்.  காஃபி வேணுமான்னு கேட்டு, எனக்குக் கப்புச்சீனோதான் பிடிக்குமுன்னு  சொன்னதும் ஓடிப்போய் காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாங்க. மெஷீன்தான் செய்யுதுன்னாலும்....  :-) ஹிஹி...
அப்போ இன்னொரு ஜோடி மோதிரம் பார்க்க வந்தாங்க. தங்க்ஸுக்கு  சங்கு டிஸைன்  வேணுமாம். இங்கே ஏராளமா அடுக்கி வச்சுருக்காங்க.  சங்கு  டிஸைன் நல்லதுல்லேன்னு  ரங்க்ஸுக்கு  எண்ணம். யாரோ சொன்னாங்களாம்....   பஞ்சாயத்து என்னிடம் வந்துச்சு.  விடமுடியுமோ?

நம்மாட்கள்தான்.  சமீபத்துலே கல்யாணம் ஆனவங்க..
'சங்கு பெருமாளுக்கானது. அதைப் போட்டுக்கிட்டால் நன்மைதான்.  இங்கெ பாருங்க.... இதை    இருவது வருசங்களாப் போட்டுக்கிட்டு இருக்கேன்'னு என் கையைக் காமிச்சேன். உடனே  தங்க்ஸ் சொல்றாங்க.... 'இந்த டிஸைன் ரொம்ப நல்லா இருக்கே.... எங்கே வாங்குனீங்க? '

"இதே சிங்கப்பூரில்தான். அப்பெல்லாம்  நல்ல கனமா நகைகள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. தங்கம் விலை ஏற ஏற  கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆனது போல் எல்லாம் தளுக்கால்லே இருக்கு....."

சங்கு இருக்கும் கையைக் காமிச்ச கையோடு சக்கரம் இருக்கும் கையையும் காமிச்சேன்!  விடமுடியுமா?  அகம் ப்ரம்மாஸ்மி .....

அப்பவே சங்கு வாங்குன கையோடு சக்கரம் இருக்கான்னு கேட்டதுக்கு  ஆர்டர் பண்ணா செஞ்சு தரோமுன்னு சொன்னாங்க. ரெண்டு மூணு வாரம் ஆகுமாம். நமக்கேது நேரம்?   அப்ப இப்ப எப்படி கையில்?
ஓ... அதுவா.... சிங்கையில் வெவ்வேற கடைகளில் பலமுறை தேடியும் கிடைக்கலை. அப்புறம்.... சென்னையில் நமக்குத் தெரிஞ்ச  சீனிவாசன் ஆச்சாரி (மங்கேஷ் தெரு, தி நகர்) செஞ்சு கொடுத்தார்.  சிங்கை சமாச்சாரம் (சங்கு) கொஞ்சம் பார்க்க நளினமா இருக்கும்.  இவர் செஞ்சு கொடுத்தது   அதைவிட கனம் கூடுதல் என்றாலும்  பார்க்கக் கொஞ்சம்  முரட்டுத்தனமா இருக்குன்றதை ஒத்துக்கத்தான் வேணும்.

இவுங்களுக்காகவும் நம்ம டோரிஸ் கூட பேரம் பேசி மோதிரத்தை வாங்கினதும்,  இன்றைக்கு நல்ல நாள் (!) இப்பவே  போட்டுவிடுங்கன்னதும்  ரொம்பவே வெக்கத்தோடு போட்டுக்கிட்டாங்க தங்க்ஸ்.

பெரியவங்களா, லக்ஷணமா   'நல்லா இருங்க'ன்னு அவுங்களை வாழ்த்திட்டு, ரெடியான நம்ம மோதிரங்களையும் வாங்கிக்கிட்டு எதிர்வாடையில் இருக்கும் கோமள விலாஸுக்கு இன்னொரு முறை! ராச்சாப்பாடுதான்.  இங்கேயும் அங்கேயுமா நடக்க முடியாது.... மணி எட்டு  எட்டு.

வழக்கமான ரெண்டு இட்லி எனக்கும் நம்மவருக்கு ஒரு ஊத்தப்பமுமா முடிச்சுட்டு நேரா  நம்ம சிங்கைச் சீனு தரிசனம்.  கோவில் ஒன்பது மணிக்கு மூடிருவாங்கன்றதால்   கொஞ்சம் காலை வீசிப்போட்டுப்போனோம்:-)
அப்படியும் எட்டேமுக்கால் ஆகிருச்சு.  இட்லி சைஸ் ரொம்பப் பெருசு  இங்கெல்லாம்.....

அவசரடியா ஓடுனது ரெண்டு சமாச்சாரங்களுக்கு.  ஒன்னு  கல்யாண மோதிரங்களைப் பெருமாள் காலடியில் வச்சு வாங்கிக்கணும். ரெண்டாவது  நன்றிக் கடனுக்கான அர்ச்சனை.  முக்திநாத் யாத்திரை நல்லபடியா  அமையணுமுன்னு  வேண்டிக்கிட்டுப் போனேனே.....
அர்ச்சனை டிக்கெட் வாங்கும் கவுண்டர் மூடிட்டாங்க. நாளைக்கு அர்ச்சனை செஞ்சுக்கணும்.  பெருமாள் வழக்கம்போல் ஜொலிப்போடு நிக்கறார்!  மனம் நிறைய நன்றியோடு  கும்பிட்டுக்கிட்டோம்.  பட்டர்ஸ்வாமிகளிடம் மோதிரங்களைக் கொடுத்துப் பெருமாள் காலடியில் வச்சு  ஆசி வாங்கிக்கணும் என்றதும்,  அவரும்  கொண்டுபோய் வச்சு ஒரு ஆரத்தியும் காமிச்சுட்டு, எடுத்துவந்து தந்தார்.  ரொம்ப நிறைவா இருந்துச்சு.

நம்மவர் வழக்கம்போல் அவருடைய தூண் பக்கத்துலே போய் உக்கார்ந்துட்டார்.  நான் மட்டும் கோவிலை வலம் வரும்போதே  டு இன் ஒன் என்று க்ளிக்கிக்கிட்டே வந்தேன்.
தாயாரின் துவாரபாலகியர் ஸ்ரீ நிர்மால்யஹாரிணி, ஸ்ரீ நிவேத்யஹாரிணி. நம்ம ஆண்டாளம்மாவின் துவாரபாலகியர்  ஸ்ரீ   பூமிம், ஸ்ரீ ஸதீம்!

தாயார், ஆண்டாள் சந்நிதிகளில் நிற்கும் துவாரபாலகியரின்  புடவைகளை அவிழ்த்து  மடிச்சு வச்சுக்கிட்டு இருந்தார் ஒரு பட்டர்.  பட்டுப்பொடவை கசங்கிருமுன்னா?   வேறு நூல்புடவை சுத்திவிடுவாங்களான்னு பார்த்தால் இல்லை.  ஏற்கெனவே சிலையில் செதுக்கி இருக்கும் புடவைகள் போதுமுன்னு விட்டுட்டாங்க போல!
நம்ம ஆஞ்சி  இடுப்பில் ஒரு சின்ன வேட்டியும், கழுத்தில் துளசியுமா படு சிம்பிளா    நிக்கறார்!


ஒவ்வொரு சந்நிதியா  மூடிக்கிட்டே வந்தாங்க. கடைசியில்   மூலவர்  சந்நிதி !  மேளதாளம்  நாதஸ்வரம் வாசிச்சாங்க , வாத்ய கோஷ்டிக்காரங்க. பெருமாளுக்கு முன் திரை போட்டு உள்ளே  தீபாராதனை காமிச்சு, பிரஸாதமா  பால் நைவேத்யம்  செஞ்சு, நமக்கும் கிடைச்சது.  அதுக்குப்பின் கருவறை வாசல்   வெள்ளிக் கதவுகளைச் சார்த்தினார் பட்டர்ஸ்வாமிகள்!
த்வாரபாலகர்கள் ஸ்ரீ கிஷ்கிந்தனும், ஸ்ரீ தீர்த்தனும்  உடை மாற்றிக்கலை !
கோவில் நடை, நாளின் கடைசியில் சாத்தறதை இப்பத்தான் முதல்முதலாப் பார்க்கிறோம்!

கோவில் இரவு ஒன்பதுவரை திறந்துருக்கும்னு அறிவிப்பு. அதே போல ஒன்பது கழிஞ்சுதான்   சந்நிதிகளை மூட ஆரம்பிக்கறாங்க.   நாலைஞ்சு பட்டர்கள் பரபரன்னு  வேலை செஞ்சாலும்  ஒன்பதரைக்குக்கிட்ட ஆயிருது. நாங்கள்  அதுவரை கோவிலிலேயே உக்கார்ந்துருந்தோம்.
ஹைய்யோ..... என்ன ஒரு அமைதி!  உள்ளும் புறமும்தான்!

"காலையில்  சுப்ரபாதத்துக்கு   வர்றேன்!  குட் நைட் பெருமாளே!  "


தொடரும்........... :-)


8 comments:

said...

படங்கள் அழகு. டோரிஸ் உங்க பொண்ணு மாதிரின்னதும் வந்த கஸ்டமரை மடக்கி வியாபாரம் செய்ய வச்சுட்டீங்க போல!

said...

சிங்கை பெருமாள் தரிசனம் கண்டேன்.

நீங்க மகளின் திருமணத்துக்கு முன்பு, 106 திவ்யதேச தரிசனம் முடிச்சிட்டீங்களா? அருமை.

said...

"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" தலைப்பைப் பார்த்துத்தான் காலையிலேயே படிக்க வந்தேன்.

said...

டீச்சரோடு புதன்கிழமை சுப்ரபாதம் பார்க்க வரோம், பெருமாளே !
நன்றி.

said...

மோதிரத்தின் உட்புறம் பொறிப்பது என்றால் என்ன கான்செப்ட் அது? அவர்கள் பெயரைப் பொறித்துக்கொள்வார்களா? ஆணுக்கும் மோதிரம் உண்டா (நிச்சயதார்த்தத்துல அல்லது கல்யாணத்துக்குப் பிறகும் எப்போதும் போட்டுக்கொள்வார்களா, அந்த பர்டிகுலர் மோதிரத்தை)?

said...

வாங்க ஸ்ரீராம்.

மகள் கடைக்கு ஏதோ என்னால் ஆன உபகாரம் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

சுப்ரபாதம் கேட்க தயாரா இருங்கோ !!!

பிரஸாதமும் உண்டு :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மூன்று கேள்விகளுக்குப் பதில்கள் :-)

1. ஆமாம். மொத்தம் ஒன்பது பாக்கி இருந்ததே. அதை முடிச்சுட்டு வந்தாச் :-)

2. ஆண்டாளுக்கான தலைப்புன்னா..... தடக்கையள் ! பாவம்.... ஆண்டாள்.... அவள் தலையை உருட்டியாறது..... இப்போ...ப்ச்...

3. நிச்சயதார்த்தத்தில் மோதிரம் போடறதில்லை. பையர், பொண்ணை ப்ரப்போஸ் செய்ய மோதிரம் வாங்கிப் போடுவார்!. சம்மதம் சொல்லிப் போட்டுக்குவாங்க காதலி.

பெயரைப் பொறிக்கணுமுன்னா மோதிரத்தின் வெளியில்தான். இவுங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பெரிய வரி எழுதிக்கொடுத்தாங்க. என்ன மொழின்னு தெரியலை..... அதை உட்புறம் என்க்ரேவ் பண்ணிக்கக் கொஞ்சம் அலையவேண்டியதாப்போச்சு. 22 காரட் காரணம்.

திருமணமான ஆண்கள் போட்டுக்கும் தாலி இந்த மோதிரம். ஆளோடஇடதுகை மோதிரவிரலைப் பார்த்தால் ஆள் கல்யாணம் ஆனவரா இல்லையான்னு தெரிஞ்சுரும்:-)

தாலி கட்டல் இல்லை. ஒருவொருக்கொருவர் மோதிரம் அணிவித்தல்தான்! இந்த மோதிரத்தைக் கொண்டு வந்து மணவறையில் தர்றது பேஜ்பாய் என்பவர். மகள் கல்யாணத்தில் அவர் ஒரு ரெண்டு வயசுக்குழந்தை! ஃப்ளவர் கேர்ளின் தம்பி :-)