Friday, January 12, 2018

கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு..... (இந்திய மண்ணில் பயணம் 101)

ரொம்பநாளா.....  சரியாச் சொன்னா  ரொம்ப வருசங்களாத் தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்த ஒரு  சமாச்சாரம் இன்றைக்குக் கண்டிப்பான்னு முடிவு செய்யும்போதே....   சமீபத்து சமாச்சாரம் ஒன்னும் நினைவுக்கு வந்துச்சு.  ரெண்டும் இன்றே வச்சுக்கணும்.  நோ ஒர்ரீஸ்.

மகளும் சேதி அனுப்பிட்டாள்....  ஒன்னும் தேவை இருக்காதாம்.....  என்னதான் யோசிச்சும் ஒன்னுமே தோணலையாம்....  என்னென்ன ச்சாய்ஸ் இருக்குன்னு தெரிஞ்சால் தேவலையாம்....   நடக்கற காரியமா.....   இது  சிங்காரச்சென்னை....   என்னென்னவோ இருக்குதான்.... லிஸ்ட் போட இதுவா சமயம்?

இவர் வேற ராத்திரியே பொட்டிகளைக் கட்டி வச்சு எடையும் பார்த்துட்டார்.  இந்தமுறை  ஒரு எலெக்ட்ரானிக் ஸ்கேல்  கொண்டு போயிருந்தோமே....   இனி மூச் விடப்டாது.... சரியா?  அடுத்த ஸ்டாப்பிங்கில் ஒரு ரெண்டு கிலோ வரை சமாளிக்கலாமாம்.  எப்படியும் அங்கேயும் எதாவது வாங்கிடுவேனாம் !

ஆ.... நெசமாவா? இதை எப்படியும் பொய்ப்பிக்கத்தான் வேணும்..... 'அங்கே 'வாங்கும் எண்ணம் இல்லைன்னு!  இங்கேயே  பக்கத்துலே இருக்கும் சுஸ்வாதில் இருந்து சாயங்காலம்  ரெண்டு கிலோவுக்கான  இனிப்பு & உப்புப் பண்டங்கள் வாங்கி எடையை ஈடு கட்டுனால்தான் மனசு சரியாகும்.....
காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனப்ப....  இனி  இது கிடையாதேன்னு மனசுக்குள் ஏக்கம்....  துக்கத்தோடு துக்கமா  ரெண்டு வடையோடு சாப்பிட்டேன்.  எட்வின் வழக்கம்போல் உற்சாகமா என்ன வேணும்னு  கேட்டு, உபசரிச்சுக்கிட்டே  இருந்தார்.  நல்ல மனிதர். நம்மவருக்குக் கொஞ்சம் உடம்பு சரி இல்லாதப்ப ரசம்சாதம் ஏற்பாடு செஞ்சு கொடுத்ததை நன்றியோடு நினைச்சுக்கிட்டேன்.
ஒன்பதரைக்கு வண்டி வந்துருச்சு.  ஏற்கெனவே முடிவு செஞ்சபடி  நேராப் பரங்கிமலை,  சர்ச்க்குப் போறோம்.  ஒரு இருவது நிமிட் பயணத்துலே மலையடிவாரம் போய்ச் சேர்ந்தாச்சு. மேலே இருக்கும் கோவிலுக்குப் போக பாதை இருக்கு. வழியெல்லாம்  அங்கங்கே சில சர்ச்சுகள் இருக்குதான்.   கிறிஸ்துவமதத்தில்   எந்தப்பிரிவு அவைன்னு தெரியலை....


சின்ன குன்றுதான் இந்த இடம்.  அந்தக் காலத்துலே சின்னமலைன்னு பெயர்.  பரங்கியர்கள் வந்து இந்த இடத்தைப் பிடிச்சுக்கிட்டு மேலே  அவுங்க மதத்துக்கான  கோவிலை எழுப்புனதும்,  இது பரங்கிமலை ஆகிருச்சு.
வெள்ளைக்காரர்களைத்தான் பரங்கியர்கள்னு அப்போ சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  வெள்ளை நிறத் தோல் இருக்கும் மனுசங்களை அற்புதமாப் பார்த்த காலம் அது!  பரங்கிக்காய் நிறம் காரணமோ என்னவோ?

யேசுநாதரின் சீடர்  தோமஸ் இங்கே வந்து, இங்கேயே தங்கிட்டார்னு  சொல்றாங்க. எதிரிகளுக்குப் பயந்து  ஒரு குகையில் ஒளிஞ்சுருந்தாருன்னும் சொல்றாங்க. போர்ச்சுக்கீஸியர்கள் (பரங்கீஸ் !) இந்த சர்ச்சை 1523 ஆம் வருசம் கட்டுனதாக சர்ச் குறிப்பு சொல்லுது.
செயின்ட் தோமஸ்,  இங்கிருந்த காலக்கட்டத்தில்தான்  அவரை எதிரிகள் (!)  ஈட்டியால் குத்திட்டாங்கன்னும் அவர் மரணம் அடைஞ்ச இடத்துலே  சமாதி கட்டி அதன் மேலே தேவாலயம் கட்டுனாங்கன்னும் சரித்திரக்குறிப்புகள்  சொல்லுதாம்.

யேசுநாதரின் பனிரெண்டு நேரடியான சீடர்களில் நாலு பேர் சமாதிகள் மேலேதான் நாலு வெவ்வேற நாடுகளில் கோவில் எழுப்பி இருக்காங்க. அதுலே ஒன்னு  நம்ம சென்னை (மெட்ராஸ்) சாந்தோம் சர்ச்சுன்னு  தெரியுமோ?

எனக்குக் காலக்கட்டங்களில்தான் குழப்பம். யேசுநாதர் காலம் ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்.  அவர் சிஷ்யர் எப்போ  பாரதம் வந்தார்? அப்போ பாரதம் என்ற பெயர் இருந்ததா?  அம்பத்தியாறு நாடுகளும்,  அதுக்கான மன்னர்களுமா நிரம்பி இருந்த பகுதி இல்லையோ   இப்போதைய இந்தியா?   சர்ச் பதினாறாம் நூற்றாண்டு  கட்டுனதுன்னா....  தாமஸ் இறந்துபோய் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கட்டுனாங்களா?  இங்கேதான் இறந்தாருன்னு எப்படித் தெரியும்?  ப்ச்......  சரி விடுங்க. சொன்னாக் கேட்டுக்கிட்டுப் போயிடலாமுன்னு தோணுது....

உண்மையில் இப்ப சாந்தோம் (செயின்ட் தோமஸ் என்ற பெயர்தான் சென்தோமுன்னு மரூவி இருக்குல்லே? )சர்ச் இருக்குமிடத்தில் நம்ம கபாலி கோவில் இருந்துச்சாமே..... சர்ச் கட்டறதுக்காக கோவிலை  இடிச்சுட்டுக் கபாலியை  இடம் மாத்திட்டாங்கன்னும்  முந்தி   எழுதுன நினைவு. ப்ச்.... என்னவோ போங்க.....
மலைமேல் போகும் நுழைவு வாசல் பாதையில் போய் பார்க்கிங் இடத்துலே வண்டியை நிறுத்திட்டுக் கொஞ்சம் படிகள் ஏறி மேலே போனோம். நடந்து போக விருப்பம் இருந்தால் ஒரு 135 படிகள் ஏறியும் இங்கே வரலாம்.


ஜோடிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதுன்னு அங்கங்கே அறிவிப்பு.  இது இளஞ்சோடிகளுக்குத்தானே?  நமக்குமா?  செல்லங்களுக்கும் அனுமதி இல்லையாம்....ப்ச்......  யேசுநாதர் ஆடுகளிடம் அன்பா இருந்தாருல்லே?  ஆட்டுக்குட்டியைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கும் படம் எத்தனை பார்த்துருக்கோம்!
படி ஏறிப்போனால்  வளாகத்தில் முன்னால் ஒரு செல்லம் ஓரமாப் படுத்துருக்கு!
ஒரு மேடையில் யேசுநாதரின் விலாவில் இருக்கும் காயத்தைத் தொட்டுப் பார்க்கும் தோமஸ் னு ரெண்டு பேர் இருக்கும் சிலைகள்.  இவர் ஒரு சந்தேகப்பிராணின்னு பைபிளில் வாசிச்சு இருக்கேன். யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைஞ்ச மூணாம்நாள் (ஈஸ்ட்டர்) உயிரோடு  வந்தார்னு சொல்றாங்கல்லே.... அப்போ  தனக்குமுன்னே வந்த யேசுவை இவர்  முதலில் நம்பலையாம். 'நாந்தான். வேணுமுன்னா தொட்டுப் பாரேன்'னு  சொன்னதும், விலாவில் இருக்கும் காயத்தைத் தொட்டுப்பார்த்து உணர்ந்தார். அப்புறம்தான் இன்னும் சிலருக்குக் காட்சி கொடுத்துட்டு, பூத உடம்போடு பரலோகம் போனார் யேசு!
நாங்க கோவிலுக்குள் (சர்ச்சுன்னு  சொல்லணும். அதென்னவோ கோவில்னே வந்துருது)  போறோம்.  சின்னதா அழகா இருக்கு!சட்னு பார்த்தவுடன் நம்ம   லஸ் சர்ச்போலத்தான் இருக்கு. ரெண்டுமே போர்ச்சுக்கீஸியர்களால் கட்டப்பட்டது. ஒரு ஏழு வருசம்தான் வித்தியாசம்.  லஸ்சர்ச் 1516, இது 1523 .  அங்கே கொஞ்சம் அகலம் அதிகம் ரெட்டை வரிசை பெஞ்சு.  இங்கே குறுகலா நீளமா இருப்பதால் ஒத்தை வரிசை பெஞ்சு!


வாசலுக்குள் நுழையும்போது ரெண்டு பக்கமும் சுவரில் மாடங்கள். அதுக்குள்ளே  டவுட்ஃபுல் தோமஸ் சம்பவங்கள்!
வாசலில் ஒரு உருளியில் தண்ணீரில் மிதக்கும் பூக்கள் !    உள்ளேயும் ஒரு இடத்தில் சிலுவைக்குத்துவிளக்கும் உருளியில் மிதக்கும்  பூக்களும்!
நீளமான கூடத்தில்  பெஞ்சுகள் வரிசையா.....  கண்ணெதிரே.... ஆல்ட்டர். (இவுங்க கருவறை!)


அங்கே ஒரு கற்சிலுவை பதிச்சுருக்காங்க. இங்கே கோவில்கட்ட  அஸ்திவாரம் தோண்டுனபோது கிடைச்சதாம்!

நிறைய படங்களும், மாடங்களும், அவற்றில் சுதைச் சிற்பங்களுமா இருக்கு!   இங்கே நியூஸியிலும்,  இதுவரை போய் வந்த மற்ற நாடுகளிலும் சர்ச்கள், குறிப்பா கத்தோலிக் சர்ச்களுக்குப் போயிருப்பதால்  புது சமாச்சாரமாத் தோணலைன்னாலும், சில குறிப்புகளும்,  காட்சிகளும் புதுமையா இருந்தது உண்மை.
செயின்ட் தோமஸின்  கால்விரல் எலும்பு ஒரு சந்நிதியில் (!) இருக்கு. கண்ணாடி ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.

தொட்டடுத்த சந்நிதியில்  கர்ப்பிணி  மேரிமாதா!  மாங்காய்மாலையும்,  பதக்கம் சங்கியும், கல்வச்ச நெக்லெஸ்களும், நகைநட்டுமா சூப்பர் ! பளிங்குச்சிலைன்னு  நினைக்கிறேன். (வளைக்காப்பு கோலம்?!!!)


பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, வரம் கிடைத்தபிறகு  நன்றிக் கடனாத் தொட்டில்கள் காணிக்கையாக் கொடுக்கறாங்க.ஒரு கண்ணாடி அலமாரி நிறைய புனிதர்களின் திருப்பண்டம் !  ரெலிக்ஸ் (Relics) என்றதை யாரோ அந்தக் காலத்தில் திருப்பண்டம்னு தமிழ்ப்படுத்தி இருக்காங்க ! 
ஜெருசலெம் நகரில்  இருந்து  கொண்டுவந்த  கூழாங்கற்கள்  ஒரு மாடத்தில் !
பக்தர்கள் மெழுகுவத்தி ஏத்திக்கத் தனியா ஒரு ஸ்டேண்டு வச்சு ஒரு இடம். ரொம்பநல்லது.... கண்ட இடத்தில் ஏத்தி புகை படியாம இருக்கட்டும்.

வெளியே சாமி ஊர்வலத்துக்கானச் சின்ன சப்பரங்கள்!பிரகாரம் சுத்திவரப்போனோம்......   நல்ல பெரிய இடம்தான்!  கோவிலுக்கான கொடிமரம்  பளிச்!   மதர் தெரேஸா சிலையும் வச்சுருக்காங்க.  தொட்டடுத்து கலை நிகழ்ச்சிகள், விழாக்கள், பிரசங்கங்கள் நடத்திக்கும்    கூரை போட்ட மேடை அமைப்பு.
சர்ச்சின் பின்பக்கம் ஒரு பெரிய பிரமாண்டமான  ஹால் போல  உயரமா  கூரை போட்டு இடம் ஒன்னு,  தியானம் செஞ்சுக்கத் தோதா இருக்கு!
இங்கே ஒரு 175 வயசான ஆலமரம். மரத்தினடியில் ஒரு பெஞ்சில் வீடில்லாத யேசு தூங்கறார்!  கிடந்த கோலம்....

ஹிந்துக்கோவில்களுக்கும் இந்தக் கோவிலுக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. முக்கியமா எங்கே பார்த்தாலும் உண்டியல்கள் :-)

ஒரு வேற்றுமை என்னன்னா.....  கோவிலும், பிரகாரமும் சுத்தமா இருக்கு.

இங்கே சர்ச் வருமுன்  மாரியாத்தா கோவில் ஒன்னு இருந்துச்சுன்னும்,  கீழே இருக்கும் குகையில் முருகன் சிலை இருந்ததுன்னும் ஒரு சேதி கேள்விப்பட்டுருக்கேன்.

கூடுதலா எதாவது விவரம் கிடைக்குமான்னு  வல வீசுனப்பக் கிடைச்சவைகளைப் படிச்சு இப்ப எனக்குத் தலை சுத்துது !!!!!

குகைக்கு நாங்க போகலை. அங்கே யேசுநாதர் சிலை ஒன்னு இருக்காம். அங்கேதான் தோமஸ், எதிரிகளிடமிருந்து  ஒளிஞ்சுருந்துருந்தார்னு  ஒரு பக்தை சொன்னாங்க. கீழே இறங்கிடலாம். திரும்ப மேலே ஏறிவர என் முட்டிவலி இடங்கொடுக்காதே! பட உதவி கூகுளாண்டவர் !
மாரியும் மேரியும் ஒன்னுதானேன்னு நினைச்சுக்கணும்.  எங்கே , யாரை வணங்கினாலும் அது என்னையே வந்து சேருமுன்னு  கீதையில் இருக்கே!  ஞாயித்துக்கிழமைகளில் கிறிஸ்துவர்கள் சர்ச்சுக்கு போறாங்க. ஞாயிறு தவிர  மத்த நாட்களில் பொதுவா ஹிந்துக்கள்  கத்தோலிக்க சர்ச்சுகளுக்குப் போய்க்கிட்டுதான் இருக்காங்க.  நம்ம  சென்னை ஹைகோர்ட்க்கு எதிரில் இருக்கும் ஆர்மீனியன் தெரு சர்ச்சில் செவ்வாய்க்கிழமைகளில் அந்தோணியார் தரிசனத்துக்குக்கூடும் பக்தர்களில் 99.9% ஹிந்துக்கள்தான்!

எந்த சாமியா இருந்தால் என்ன?  எல்லாம்  ஒரு  நம்பிக்கைதான்!  நம்புனாத்தான் கடவுளே!

மலைமேலே இருந்து பார்த்தால் விமான நிலையமும், இறங்கும், ஏறும் விமானங்களுமா சுத்திவர காட்சி சூப்பர்!
சந்தர்ப்பம் கிடைச்சால் ஒருமுறை போய் வரலாம் இங்கே!  எனக்கு   இன்றைக்குத்தான் வாய்ச்சது!

படங்கள் நிறைய எடுத்துட்டேன். ஒரு ஆல்பமா  போட்டு வைக்கணும்.


அடுத்துப்போனது இன்னொரு சின்ன ஆசையை நிறைவேத்திக்க...  :-)

  கூடுதலா ரெண்டு படங்கள், நம்ம   ஸ்ரீராமுக்காக :-)


 

தொடரும்......... :-)


18 comments:

said...

Tim Schmalz தான் இந்த ஹோம்லெஸ் ஜீசஸை வடிவமைத்தவர் .இதில் வேடிக்கை என்னவென்றால் பல நகரங்களில் இச்சிலைகளை வைக்க மக்கள் ஒப்புகொள்ளவில்லையாம் !! இன்னும் ஒரு சிலை லண்டன் பகுதியில் ஒரு பார்க் முன்பு காத்திருக்கு இடம் தேடி //Can you find a home for Jesus? ... Can you find him a home in London?என்று எல்லார்கிட்டயும் கேட்டுப்பார்த்தாங்க // இப்போ உங்க பதிவில் வாசித்து தெரிஞ்சுகிட்டேன் ஹோம்லெஸ் ஜீசசுக்கு கடைசியில் சென்னைதான் இடம் கொடுத்திருக்கு .
இங்கே லண்டனில் கவுன்சில் அலோ பண்ணலை இந்த சிலையை வைக்க மெதடிஸ்ட் சர்ச்காரங்களும் பெட்டிஷன்லாம் போட்டு பார்த்தாங்க approval கிடைக்கலை .
நான் இதுவரை இந்த தாமஸ் மவுண்ட் போனதேயில்லை ..படங்கள் அழகு ,,அதென்ன செல்லங்களுக்கு நோ என்ட்ரி கர்ர்ர் ...

said...

நானும் சென்றிருக்கிறேன் செயின்ட் தாமஸ் மவுண்ட்டுக்கு. இது பிருகு முனிவர் வாழ்ந்த மலை என்கிற வழக்கம்போல பக்கச் செய்தியும் உண்டு. அங்கிருக்கும் செல்லம் சூப்பர். படங்கள் அழகு. டிசம்பர் 15 தேதி வாக்கில் இங்கு பெரிய விழா நடக்கும். இந்தப் பகுதியைத் தாண்டிச் செல்லவே முடியாது.

said...

வாங்க ஏஞ்சலீன்.

சிலை பற்றிய விவரம் எனக்குப் புதுசு! வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பது சரிதான் !!!! இல்லே? :-)

அடுத்த பயணத்தில் ஒரு சின்ன ட்ரிப் மலைக்குப் போயிட்டு வாங்க ! அழகா இருக்கு !

said...

வாங்க ஸ்ரீராம்.

பண்டிகை, சிறப்பு பூசைகள் விவரம் இருந்தது அப்போ! க்ளிக் பண்ணினேன். இப்போ அந்தப் படங்களையும் பதிவின் கடைசியில் சேர்த்தால் ஆச்சு!

அமாவாசை, பௌர்ணமி, கிரிவலம் எல்லாம் இருக்கு தெரியுமோ?

ஒரு பத்து நிமிட் கழிச்சுப் பாருங்க !

said...

படங்கள் பார்த்து விட்டேன்.

சொல்ல மறந்துபோன விஷயம் ஒன்று. இந்த மலைக்குக் கீழே உள்ள இடம் நந்தவனமாக இருந்ததாகவும், அங்கு தவத்தில் இருந்த பிருகு முனிவர் ஆஸ்ரமத்துக்கு ராமன் வந்து அவன் கால் பட்ட இடம் என்று எம் ஜி ஆர் வீடு செல்லும் வழியில் நந்தவனம்பாக்கம் என்ற இடத்தில ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உண்டு. கோவில் கல்வெட்டில் இந்த விவரம் இருக்கும். அநேகமாக அங்கும் சென்றிருப்பீர்கள்.

said...

அருமை நன்றி

//அதுக்கான மன்னர்களுமா நிரம்பி இருந்த பகுதி இல்லையோ இப்போதைய இந்தியா? // அப்போதைய இந்தியா ன்னு வந்திருக்கணுமோ ?

said...

செயின்ட் தாமஸ் மவுண்ட்டு பார்த்தாச்சு இன்றைக்கு உங்கள் தயவால்...


பல தகவல்கள்....மேரி மாதாவின் படங்கள் வெகு அழகு...

said...

எந்த ஆலயத்துக்குப் போனாலும் அது தேவாலயமாய் இருந்தாலும் வாய் என்னவோ நாராயணா என்றுதானே சொல்கிறது

said...

//யேசுநாதரின் பனிரெண்டு நேரடியான சீடர்களில் நாலு பேர் சமாதிகள் மேலேதான் நாலு வெவ்வேற நாடுகளில் கோவில் எழுப்பி இருக்காங்க.//

நாலு இல்லை; மூன்று பேர் மட்டும் தான்.

இவ்விடத்தில் மதமற்ற ஓரு நினைவுச் சின்னமும் உண்டு. இந்தியாவின் புவியியல் அமைப்பை வரைபடமாக்க முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், இந்தப் பரங்கிமலையில் இருந்து தான் நில அளவைப் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன் நினைவாக அப்போது சர்வேயர் ஜெனரலாக இருந்த வில்லியம் லாம்ப்டனின் சிலையை அந்த ஆலமரத்தின் கீழ் இன்றும் காணலாம். அந்த நில அளவையின் முடிவில் தான் உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கண்டுபிடித்தார்கள். அப்போது சர்வேயர் ஜெனரலாக இருந்த எவரெஸ்ட் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள். இத்தகவல்களை எல்லாம், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி புத்தகத்தில் படிக்கலாம்.

- ஞானசேகர்

said...

@ ஸ்ரீராம்,

நீங்க சொல்லும் நந்தவனம்பாக்கம்தான் இப்போ நந்தனம் ஆகி இருக்கோ? பெருமாள் கோவில் விவரம் தெரியலையே..... அடுத்த பயணத்தில் தேடிப்பார்க்கிறேன்.

தகவலுக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

அப்ப ஏது இந்தியா? இப்ப இந்தியான்னு சொல்லும் பகுதியைக் குறிப்பிட இப்போதைய இந்தியான்னு சொல்லி இருக்கேன் :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்து வாசித்துப் படங்களையும் பார்த்ததற்கு நன்றீஸ் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கண்ணனே அப்படித்தானே சொல்லி இருக்கான்! எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவை எல்லாம் என்னையே வந்து சேரும்னு!

கடவுள் ஒருவர்தான். அவரை வெவ்வேற மதத்துலே வெவ்வேற பெயர் வச்சுக் கும்பிடறாங்க இல்லையோ?

உண்மை சொல்லணுமுன்னா இங்கே நியூஸியில் கண்கண்ட கடவுள் சூரியன் தான்! அவனை யாராவது படைச்சிருக்கணும்தானே? இயற்கையே படைச்சிருந்தால் அதுதான் சூரியனுக்கு மேலதிகாரி. பெரிய கடவுள் :-)

said...

வாங்க ஞானசேகர்.

தேசாந்தரி வாசிக்கலையே.... :-(பனிரெண்டு சீடர்களில் ஆறு பேர்கள் சமாதிகளை கண்டுபிடிச்சுருக்காங்க இதுவரைன்னு சரித்திர சம்பவங்கள் நடந்த இடங்களை அகழ்வாராய்ச்சி செய்யும் குழு சொல்றாங்க. அதுலே சென்னை ஸாந்தோம் சர்ச்சும் ஒன்னு. ஈரான், இத்தாலி, ஸ்பெய்ன், க்ரீஸ், துருக்கின்னு சான்றுகள் வாசிச்சுருக்கேன்.


ஆனால் சமாதி மேலே தேவாலயம் கட்டுனது நாலு பேருக்குத்தான்னும் சொல்றாங்க. இத்தாலி, ஸ்பெய்ன், க்ரீஸ், சென்னைன்னு.....

ஆலமரத்தடியில் வில்லியம் லாம்ப்டனின் மார்பளவுச்சிலை இருக்குதான். படமும் எடுத்துருக்கேன். ஆல்பம் போட்டு வைக்கலாமுன்னா.... நேரம் கிடைக்கலை:-(

ஊன்றி வாசிச்சுருக்கீங்க ! நன்றிகள்.

தேசாந்திரிகள், நினைவில் வச்சுக்கறேன்!
said...

மன்னிக்கவும். அது நந்தம்பாக்கம். நந்தவனம்பாக்கம் இல்லை. நந்தனம் வேறு.

said...

சமாதி மேலே தேவாலயம் கட்டியது மூன்று பேருக்கு மட்டும் தான். சாந்தோம் தேவாலயத்தின் பின்புறத்தில் தோமையாரின் கல்லறை இருக்கிறது. அதற்குச் செல்ல படிக்கட்டுகளில் இறங்கும்போது, நாம் படிக்க நேரிடும் முதல் தகவலும் அதுதான். அந்த மூன்று தேவாலயங்களின் பெயர்களையும் சொல்லி இருப்பார்கள். விக்கிபீடியாவும் இதே மூன்று தான் சொல்கிறது.

- ஞானசேகர்

said...

@ஸ்ரீராம்.

நந்தம்பாக்கம் ஓக்கே! தேடலாம்.... :-)

said...

@ ஞானசேகர்.

மேலகதிகத் தகவல்களுக்கு நன்றிகள் !