Friday, December 18, 2015

சிகப்பு விளக்கும் அங்கொரு சனியனும்!

இப்பெல்லாம் நியூஸிக் குளிர் அவ்வளவா விருப்பம் இல்லைன்னாலும் கூட குளிர்காலத்தில் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போன ரெண்டு சமாச்சாரமும் இருக்கு. அதுலே ஒன்னு  இந்த  டேலைட் ஸேவிங் இல்லாத நாட்கள். இதைப்பத்தி ஏற்கெனவே புலம்பித் தீர்த்தாச்சு. ரெண்டாவது  உள்ளூர் அப்ஸர்வேட்டரியில் போய் வானம் பார்ப்பது.  இதுக்கும் நினைச்சவுடனே போயிட முடியாது.  மேகமூட்டம் இல்லாத  தெளிவான வெள்ளிக்கிழமை இரவாகவும் இருக்கணும். பொதுமக்கள்  வரலாம் என்ற அனுமதியும் இருக்கணும்.  ஃபோன் செஞ்சு கேக்கலாமுன்னாலும்  அங்கே  அன்று மாலை ஏழரைக்குத்தான் ஃபோனுக்கு பதில் சொல்லவே யாராவது இருப்பாங்க.

இந்த அப்ஸர்வேட்டரி, எங்க கேண்டர்பரி யுனிவர்ஸிடியில் அஸ்ட்ரானமி படிக்கும் மாணவர்களுக்காக  இயங்குது.   இந்தமாதிரி பொதுமக்களை அனுமதிக்கும் நாட்கள் முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால்தான் நடத்தப்படுது. உள்ளூர் பத்திரிகையில் சேதி வருமான்னு பார்த்துக்கிட்டே இருப்போம் அப்பெல்லாம்.

இருக்குன்ற தேதி விவரம் கிடைச்சால் ஏழரைக்கு ஃபோன் போட்டுக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு ஓடுவோம்.  எப்படியும் போய்ச்சேர நமக்குக் கால்மணி ஆகும். இந்த ஓப்பன் நைட்  9 மணிக்கெல்லாம்  முடிஞ்சுரும் என்பதால் அரக்கப்பரக்கப் பார்ப்பதோடு சரி.  நுழைவுக் கட்டணம் ஒன்னும் அதிகம் இல்லை. ஒரு தங்கக்காசு கொடுத்தால் போதும்!  நம்மூர்லே ஒரு டாலர், ரெண்டு டாலர் காசுகள் தங்க நிறத்துலே அடிச்சு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு கொடுத்துடலாம்.

இங்கே இருக்கும் பெரிய டெலஸ்கோப்புக்கு  டவுன்ஸெண்ட் டெலஸ்கோப்புன்னு  பெயர். இதக் கட்டிடத்துக்கும்  டவுன்ஸெண்ட் அப்சர்வேட்டரின்னுதான் பெயர்.  எங்க ஊர் ம்யூஸியத்துக்கு  எதுத்தாப்லெ இருக்கும் வளாகத்துக்குள்ளே இருக்கு இது. ஏன் இங்கேன்னால்..........   இந்த வளாகம்தான்  ஊர் ஆரம்பிச்ச காலத்துலே (1873  இல்) சர்வகலாசாலையாக இயங்குன இடம். அப்போ இதுக்குப் பெயர்  கேண்டர்பரி காலேஜ்.

மாணவர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக  இங்கே இடம் பத்தலைன்னு  ஐலம் என்ற பேட்டைக்கு  யூனியை மாத்திக்கிட்டாங்க. இதுவும் ஒரே நாளில் நடக்கும் சமாச்சாரமா என்ன?  1961 முதல்  1974 வரை  பகுதிபகுதியா வகுப்புகளை இடமாற்றம் செஞ்சுருக்காங்க. அதுக்குப்பிறகு பழைய கட்டிடங்களோடுள்ள இந்த வளாகம் ஆர்ட் சென்ட்டரா ஆகிப்போச்சு. நகரத்து மத்தியில் இருக்கும் இடம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதுவும் கலை ஆராதகர்களுக்கு (இந்தச் சொல் சரியா?  என்னமோ வந்து விழுந்துருக்கே!) ரொம்பப்பிடிச்சுப் போன இடமாப் போனதில் எப்பவும்  பகல் நேரங்களில் ஜேஜேன்னு இருக்கும்.  பழைய க்ரேட் ஹாலில் விசேஷ இசை நிகழ்ச்சிகள் கூட நடக்கும்.  நம்ம எல் சுப்ரமணியம், புல்லாங்குழல் ரமணி கச்சேரியெல்லாம் இங்கே நடந்து,  நாமும் வந்துருந்தோம். 


டவுன்ஸெண்ட் அப்ஸர்வேட்டரி  மட்டும் இடம் பெயராமல் இங்கேயே இருந்துருச்சு. சுழல் படிக்கட்டோடு மேலே டவர் இருக்கும். அங்கே  பெரிய டெலஸ்கோப் பொருத்தி வச்சுருந்தாங்க. 1864 இல்  லண்டனில்  Cooke and Sons of York என்ற கம்பெனி செஞ்சுருக்கு. அங்கே  27 வருசம் குப்பை கொட்டுனபிறகு 1891 இல்  நியூஸி கேண்டர்பரி காலேஜுக்குத் தானமாக் கொடுத்துட்டாங்க. இம்மாம் பெரிசு , இலவசமாக் கிடைச்சுருக்குன்னு அதுக்குன்னு தனியா ஒரு  கட்டிடம்  கட்டினாங்க.  உச்சியில் கொண்டுபோய் டெலஸ்கோப் வச்சது  1897இல்.
நாலு/அஞ்சு வருசத்துக்கு முன்னே இங்கே வந்துபோன நிலநடுக்கம் இதை(யும்) விட்டு வைக்கலை. 2010 செப்டம்பரில் வந்தது, ஊருக்குள்ளே அடையாளம் தெரியாத வகையா உள்க்காயம் ஏற்படுத்திட்டுப் போனதை அப்போ நாங்க யாரும் கவனிக்கலை. நிலநடுக்கத்தில்  ஊரில் அழிவு ஒன்னும் இல்லைன்னு  மகிழ்ந்து போயிருந்தோம்.  அதிகாலை  4.40 என்பதால்  சேதம், ஒரு வீட்டு சிமினி விழுந்து  பார்க்கப்போன ஆளுக்குக் கையில் அடி என்பதுதான். 

அடுத்த ஆறு மாசம் கழிச்சு  பகல் 12.51க்கு வந்து வெறும் நாற்பதே விநாடியில் ஊரில் பாதியை அழிச்சுட்டு, 185 உயிர்களை காவு வாங்கிட்டுப்போனது  மகாபெரிய சோகம் எங்களுக்கு. மன்னிக்கணும்.   2011 ஃபிப்ரவரி 22 க்குப்பிறகு , ஊர் சமாச்சாரம் எதுன்னாலும் சொல்ல ஆரம்பிச்சதும் பேச்சு கடைசியில் போய் நிக்கறது நிலநடுக்கத்தில்தான்.  எத்தனை முறை புலம்பினாலும் மனசு இன்னும் ஆறலை. மேலாகப் பொருக்குத் தட்டிப்போய் உள்ளே ஆறாத ரணம் பாக்கி இருக்கு.

114 வருசம்  இங்கே உழைச்சுக்கிட்டு இருந்த டெலஸ்கோப்,  நிலநடுக்கத்தில் டவர் கட்டிடம் இடிஞ்சு விழுந்ததுலே சிக்கி  உடைஞ்சே போயிருச்சு.  இடிபாடுகளை அகற்றும் சமயம்,  மெஷீன் ஒன்னும்  அதிகமா பயன்படுத்தாமல்  கையாலேயே கற்களை நகர்த்தி வச்சுத் தேடுனதில்  உடைஞ்சு போன பாகங்களையெல்லாம் பொறுக்கி எடுத்துட்டாங்க. சின்னச்சின்னதா ஒரு மூணு பாகம் காணாமப்போயிருக்கு. மொத்தம் 35 டன்  இடிபாடுகளாச்சே. ஆனால் அதிசயம் பாருங்க  கண்ணாடி லென்ஸ் மட்டும் உடையாமத் தப்பியிருக்கு. ஆறு அங்குல விட்டம். ஒரு சின்ன தட்டு சைஸ்!


இங்கே நம்ம யுனிவர்ஸிட்டி ஃபிஸிக்ஸ் அண்ட் அஸ்ட்ரானமி பிரிவில் 48 வருச  அனுபவமுள்ள டெக்னீசியன் Graeme Kershaw, இதை நாம் ரிப்பேர் செஞ்சுடலாமுன்னு  சொல்லி இருக்கார். இதுக்கான நிதி திரட்டும் வேலையும் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு என்பது கூடுதல் சேதி.


சின்னப்பிள்ளையா இருக்கும்போது எப்பவாவது மொட்டை மாடியில் அம்மா, அக்காக்களோடு படுத்துக்கும்போது  ஒரே வரிசையில் இருக்கும் மூணு நக்ஷத்திரங்களை அம்மா எனக்கே எனக்குன்னு கொடுத்துட்டாங்க. அம்மாவுக்கு அவுங்க  அம்மா கொடுத்தததாம்.  இது இப்படி அம்மா நக்ஷத்திரங்களா வாழையடி வாழையா குடும்பத்தில்  கைமாறிக்கிட்டே வருது.  நானும் என் மகளுக்குக் கொடுத்துருக்கேன்  ஆன் ஒன்  கண்டிஷன். நான் போனபிறகு அவள் எடுத்துக்கலாமுன்னு :-)

அப்போ அதுக்குப் பெயர் எல்லாம் தெரியாது. நியூஸி வந்தபிறகுதான்  அதன் பெயரைத் தெரிஞ்சுக்கிட்டேன். Orion's Belt.  இதுக்குப் பக்கத்தில்(!)தான்  Pointers    என்ற  ரெண்டு பெரிய நக்ஷத்திரங்கள்  'அதா...  அங்கே பாரு'ன்னு சுட்டிக் காட்டுவது போலிருக்கும்.  அது காமிப்பது Southern Cross என்ற நாலு (பெரிய) நக்ஷத்திரங்களை!  இதுதான் நம்ம நியூஸி, ஆஸி கொடிகளில் இருக்கு. தெந்திசை காட்டும்!
வானசாஸ்த்திரம் பற்றி ஒன்னும் தெரியலைன்னாலும்  அம்மாந்தூரத்துலே என்னெல்லாம் இருக்குன்னு ஒரே வியப்புதான். மகளுக்கும் இதுலே விருப்பம் அதிகம் என்பதால்  டவுன்ஸெண்ட் அப்ஸர்வேட்டரி போகணுமுன்னால்  முதல்லே நிப்போம்.  அங்கெதான் இன்னும் பல நக்ஷத்திரக்கூட்டங்களை முதல்முதலில் பார்த்தது.  ஜுவல்பாக்ஸ் ன்னு ஒரு நக்ஷத்திரக்கூட்டம் இருக்குன்னு  தெரிஞ்சுக்கிட்டதும் அப்போதான்!  ஹைய்யோ....  என்ன அழகு!!!

நிலநடுக்கத்தின் பின் இதுக்கெல்லாம் வழி இல்லாமக் கிடந்தோம். அப்போ இங்கே நம்ம வீட்டில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் இருக்கும்  பக்கத்தூர்லே இருக்கும் ஜாய்ஸ்  அப்ஸர்வேட்டரி (இதுவும் நம்ம யூனி வானசாஸ்த்திரப் பிரிவின் ஒரு பகுதிதான்)  வருசாவருசம் மிட்விண்டர் (ஜூலை ) சமயம் நடக்கும்  குழந்தைகளுக்கான திருவிழாவில் ஒரு கொண்டாட்டமா பொதுமக்களுக்கான ஓப்பன் நைட் வைக்கப்போறோமுன்னு  சொல்லி இருக்கு. மகள் சேதியைக் கொண்டுவந்தாள். Canterbury Astronomical Society என்ற பெயரில் இப்போ  மூணு வருசமா இவுங்க ஃபேஸ்புக்கிலும் இருக்காங்க.
மிட்விண்டர் சமயம் பள்ளிக்கூடங்களுக்கு 2 வாரம் விடுமுறை உண்டு. அப்பதான் இந்த  Kids Festival நடக்கும். வெவ்வேற இடங்களில் எதாவது ஆக்டிவிட்டி இருக்கும்.  ஹேக்ளிபார்க் ஒருநாள் ராத்திரியில் போய்ப் பார்த்தமே அதுகூட ஒரு குழந்தைகள் திருவிழா ஐட்டம்தான்.

வெஸ்ட் மெல்ட்டன் என்ற ஊரில் இருக்கும் ஜாய்ஸ் அப்ஸர்வேட்டரி, 1963 இல்  கட்டுனது ஸாட்டிலைட் ட்ராக்  பண்ணிக்கும் ஸ்டேஷன் ஒன்னு வேணுமுன்னுதான். அந்த ஏரியாவில் நகரத்தின்  ஒளிவெள்ளம் இல்லாம  எல்லாம் அடக்கி வாசிக்கும் விளக்குகள்தான்.  தெரு விளக்குகள் கூட சின்ன ஒளியில் தரையைப் பார்க்கும் விதமாத்தான் அமைச்சு இருப்பாங்க. நல்ல இருட்டு இருந்தால்தான்  வானம் பார்க்க முடியும், இல்லையா?


ஓப்பன் நைட் வச்சவங்களிடம்  இன்பாக்ஸ் மூலமாத் தகவல்  கேட்டுக்கிட்டேன். மாலை ஏழுமணிக்கு திரும்ப அவுங்க ஃபேஸ்புக் பக்கம் பார்க்கச் சொன்னாங்க.  மேகக்கூட்டம் இல்லாத பளிச் வானம் இருந்தால்தான்  நமக்கு அனுமதி. ஒரு அரைமணி நேரத்தில் போயிடலாம் என்பதால் ஏழு மணிக்குக் காத்திருந்தோம். அந்தக் காலக்கட்டத்தில்தான்  வீனஸ், ஜுபிடர் கிரகங்கள்  பூமிக்குக் கிட்டேவந்து நமக்கு வெறுங்கண் தரிசனம் கொடுத்துக்கிட்டு இருந்ததுகள்.
மகள் ஒரு ஸைட் ( கூகுள் ஸ்கை மேப்) என்னுடைய  நோட்புக்கில் போட்டுக்கொடுத்துருக்காள். அதுலே தினம்தினம் நமக்கு என்ன தெரியுமுன்னு பார்த்துக்கலாம்:-)


'தயாரா இருங்க. ஏழுமணிக்குத் தகவல் பார்த்துட்டுக் கிளம்பினால் போய்ச்சேர சரியா இருக்குமுன்னு'.... சொல்லும்போதே    சாப்பிட்டுட்டுப் போயிடலாம் என்றார் நம்மவர். இவர் எட்டரை மணிக்காரர்.  கடிகார முள் கொஞ்சம் இப்படி அப்படிப் போயிடக்கூடாது!  ஐயோ... ஏழுமணிக்கு ரெடியா இருக்கணுமுன்னா ஆறரைக்குச் சாப்பிடணும்.  இதென்னடா நமக்கு வந்த சோதனைன்னு புலம்பிக்கிட்டே சமையலை முடிச்சு, அவருக்குக் கொடுத்துட்டு ஒன்னும் பாதியுமா சாப்பிட்டு முடிச்சேன்.


ஆச்சு மணி ஏழு. ஓப்பன்னு சேதி கிடைச்சதும் கிளம்பிப் போறோம்.  நகர எல்லையைத் தாண்டுனதும் கொஞ்சம் இருட்டுதான். அதுவும் நாம் மெயின் ரோடில் போகாமல்  கண்ட்ரி ரோடில் போறோம்.  நாம் அங்கே போறது இதுதான் முதல்முறை.


இடம் கண்டுபிடிச்சுப் போய்ச் சேரும்போது சரியா ஏழு இருபது. மினுக் மினுக்குன்னு சின்னதா விளக்கு வெளிச்சம் தரையோடு. வாசலில் ஒரு மேஜை போட்டு, நுழைவுக் கட்டணம் வாங்கிக்கிட்டு மக்கள்ஸை அனுமதிக்கிறாங்க. பெரியவங்களுக்கு பத்து, சின்னப்பசங்களுக்கு  (அஞ்சு வயசுக்கு மேல் 12 வரை) அஞ்சுன்னு  கொடுக்கணும்.

இருட்டுலே தரைவெளிச்சத்தைப் பார்த்துக்கிட்டே தட்டுத்தடுமாறி நடந்து போறோம். எல்லோரும் கிசுகிசுப்பான குரலில் பேசறோம்.  அப்ப வெளிச்சம்தான் சத்தத்துக்குக் காரணம்போல!
சிகப்புவிளக்கு எரியும் ஒரு சின்ன ஹாலில்  எல்லோரும் போய்ச் சேர்ந்தோம்.  ஒரு நாப்பது நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. ஏழரைக்கு  வகுப்பு ஆரம்பிச்சது. ஹவுஸ் கீப்பிங் ரூல்ஸ் சொல்லிட்டு, அன்றைக்கு நாம் என்னென்ன பார்க்க முடியும் என்றெல்லாம் சின்ன விளக்கம் கொடுத்துட்டு வெளியே  சின்ன  ஏத்தத்தில் இருக்கும் டெலஸ்கோப்புகளைப் போய்  பாருங்கன்னு சொன்னாங்க. மேடு பள்ளம் இருக்கும் பாதைன்னாதால் கவனமாப் போகணும். ஃப்ளாஷ் இல்லாமல் படங்கள் எடுத்துக்கலாம் என்றதும் மகிழ்ச்சியா இருந்தாலும்  இருட்டு வீட்டில் குருட்டெருமை கதைதான் இல்லையோ!
நாலு டெலஸ்கோப் அங்கங்கே.  மக்களும் பிரிஞ்சு போய் அங்கே இங்கேன்னு போய்ப் பார்த்துக்கிட்டு இருந்தோம். வழக்கமாப் பார்க்கக் கிடைக்கும் நகைப்பெட்டி,  சதர்ன் க்ராஸ்,  இன்னும் சில வெவ்வேற கேலக்ஸியில் இருக்கும் நக்ஷத்திரக்கூட்டமுன்னு  காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பெரிய கணக்கா நூறு, ஆயிரமுன்னு  மில்லியன்  கிமீ தூரம்னு சொன்னபோது பிரமிப்புதான். சிலர்  சொந்த டெலஸ்கோப் வச்சுக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. இது சின்ன சைஸ்தான். நிலாவைப் பார்த்தேன்.  பாட்டி வடை சுட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க, அன்றைக்கும்:-)  ஒரு பெரிய முயல் கூட இருந்துச்சு.

நமக்குத் தெரிஞ்ச சில நக்ஷத்திரங்கள் பெயரைச் சொல்லிக் கேட்டப்ப, முகம் சுளிக்காமல் (இருட்டுலே தெரியவாப்போது?) டெலஸ்கோப் செட்டிங்ஸ் மாத்திட்டு, காமிச்சது பிடிச்சுருந்துச்சு.

பௌர்ணமி கழிஞ்சு  அன்றைக்கு மூணாம் நாள் என்பதால் நிலாவும் லேட்டாத்தான் வந்துச்சு. எவ்ளோ லேட்டு? எட்டே முக்கால்.

மகள் வந்து  இன்னும் மேட்டிலிருந்த  டெலஸ்கோப்பில் பார்த்தாச்சான்னாள். நக்ஷத்திரக்கூட்டம்தான், பார்த்துட்டோம் என்றதும்,  'அங்கே இப்போ சாட்டர்ன் தெரியுது. நான் கேட்டதுக்கு   செட்டிங்ஸ் மாத்திக் காமிச்சாங்க'ன்னாள்.  ஆஹா..... சனியைப் பார்க்கலையேன்னு  ஓடினேன்.  வளையத்துக்குள்ளே  சனியர் இருக்கார்.
     மேலே:  சனியர்.  வலையில் சுட்டபடம்.  உரிமையாளருக்கு நன்றீஸ்


 புதுமைப்பித்தன்  என்ற பழைய எம்ஜிஆர் படத்தில்  வளையத்தில் நடந்து பாடுவதுபோல் ஒரு பாட்டு ஸீன் இருந்தது நினைவுக்கு வந்துச்சு. பாட்டுகூட நினைவில் இருக்கு. ’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று”  கல்யாணி ராகமாம்.  (என்ன இது எப்பப் பார்த்தாலும் சினிமாதானா? சனியன்) 


மணி ஒன்பதாச்சு. உள்ளே இருந்த டெலஸ்கோப் கொஞ்சம் உசரத்தைக் குறைச்சுக்கிட்டு  அடங்குச்சு. இடத்தை விட்டு  கொஞ்சதூரம் நகர்ந்து போயிருந்த அரைக்கோள  டூம்ஸ் எல்லாம்  திரும்பி வந்து  மூட  ஆரம்பிச்சது.  ஆட்டம் க்ளோஸ்.
பகலில் ஒருநாள்  சும்மா ட்ரைவ் வந்து இந்த  இடத்தைப் பார்க்கணும்! இப்படித்தான் இருக்குமாம்!

இப்படித்தான் ஒரு சனிக்கிழமையன்னிக்கு சனியரைப் பார்த்தேன்:-)10 comments:

said...

அருமையான அனுபவம் தான்மா!
நட்சத்திரங்களை நேரில் பார்த்தது போல் வர்ணனை இருந்ததுமா

said...

Orion hunter or Orion belt எனக்கும் ரொம்பப்பிடிச்ச ஒண்ணு, இதைப்பத்தி முன்னாடி ஒருக்கா எழுதினது :-)

//எனக்கு மிகவும் பிரியமான நட்சத்திரக்கொத்து ஒன்றும் உண்டு. அதற்கு கரடித்தலை என்றே பெயர் சூட்டியிருந்தேன். (அதன் உண்மையான பெயர் orion the hunter) அறுபது அல்லது எழுபது டிகிரி கோணத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பூமியின் சுழற்சியைப் பொறுத்து பாகையளவு மாறும். அதன் இடப்பக்கம் இந்தப்பக்கம் ஒன்றும் அந்தப்பக்கம் ஒன்றுமாக இரண்டு நட்சத்திரங்கள், அதில் ஒன்று இந்தக் கரடித்தலையிலிருக்கும் கண் மாதிரியே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதை ரசித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.//

said...

அந்த சனியர் யாரோ?

said...

Nice!!!! written well!!!

said...

Good!

said...

சனியனாரை சனியன்றுப் பார்த்ததை
நாங்களும் பார்ப்பதுபோல் படத்துடன்
சொல்லிப் போனவிதம் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

said...

கற்றது கையளவு கூட இல்லை. கல்லாதது உலகளவு என்பது என்னவோ உண்மைதான்.

said...

சனிக்கிழமையன்று சனீசுவர தரிசனம். சகல தோஷ நிவாரணம்.

ஆம்ஸ்டர்டாம்ல இப்படி ஒரு எடத்துக்கு ஆபிஸ்லருந்து கூட்டிட்டுப் போனாங்க. அதுல வானத்தப் பாக்குற மாதிரியே திரை வெச்சு.. பூமில தொடங்கி பால்வெளி மண்டலம் வழியா எங்கெங்கயோ கூட்டீடுப் போனாங்க.

சென்னைலயும் வீட்டுப் பக்கம் பெரியார் கோளரங்கம் இருக்கு. காவிரிக்கரையில் மட்டுமல்ல. எங்க வீட்டுப்பக்கமும் அரங்கம் இருக்கு. ஆனா இதுவரைக்கும் போனதில்ல. போகனும்.

said...

கருத்திட்ட அனைவருக்கும் சனியரின் அருள் பூரணமாக லபிக்கணுமுன்னு வேண்டிக்கறேன்.

@ ஜம்புலிங்கம் ஐயா,

சனீஸ்வரர்தான் அந்தச் சனியர்!

நன்றீஸ் மக்களே!

said...

சிகப்பு விளக்கும் சனியரும்☺நன்றாகவே இருக்கிறது.