Monday, December 14, 2015

மழையும் மனசும் மதமும் பின்னே மனிதமும்!

சம்பவங்களின் தீவிரம் மனசை அப்படியே முடக்கிப்போட்டுருச்சு என்பதே உண்மை. திங்கள்(நவம்பர் 30)  பதிவு போட்ட பின் புதனுக்கு என்ன எழுதலாமுன்னு யோசிச்சுக்கிட்டே செவ்வாய்க்கிழமை நம்ம பச்சை வீட்டில் போய், அங்கிருக்கும் செடிகளுக்கெல்லாம்  இன்று முதல்(டிசம்பர் 1)  சம்மர் ஆரம்பம் என்ற தகவலைச் சொல்லிக்கிட்டு இருந்தேன். 'ஆமாமாம்... பொல்லாத சம்மர். வெறும் 13 டிகிரிதான். அதுக்கே  கொண்டாட வந்துட்டியா போ போ'ன்னு சொல்லிக்கிட்டே (!) நம்ம ரஜ்ஜு வீட்டுக்குள்ளே ஓடிப்போச்சு.
'நம்பிக்கையோடு இருப்போம்டா'ன்னு பதில் சொல்லி வச்சேன்.


 சென்னை சமாச்சாரங்களை வலையில் வாசிச்சுக்கிட்டு இருந்தப்ப , மழை கனமா பெய்யுதுன்னு தெரிஞ்சது. தோழிகளும்  வாட்ஸ் அப்பில் வந்து சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஐப்பசியில் அடை மழை சகஜம்தானே? போனவருசம் பெரிய மழையில் மாட்டின அனுபவம் இப்பத்தானே எழுதினோமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்துட்டேன்.

மறுநாளிலிருந்து ஆரம்பிச்சது வெள்ளத் திருவிழா!  திகைச்சுப்போன மனசு  அப்படியே உலுக்கத் தொடங்கி இன்று வரை  அதன் அழிசாட்டியம் நிக்கலை.  செயற்கையோ இயற்கையோ ஒரு பேரிடர் நடந்துபோனால் அதன் பாதிப்பு எப்படின்னு அனுபவப்பூர்வம் அறிஞ்சதால் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் மனசும் ஓடாமல் அதிர்ச்சியில் உறைஞ்சு கிடக்கு.

வெறும் நாப்பது விநாடிகள்  ஆடுன பூமியால் ஊரில் பாதி அழிஞ்சுபோய்,  இப்பதான் திரும்ப மீண்டும் எழுந்து நிக்கத்தொடங்கி இருக்கோம். இன்னும் ரெண்டு மாசம் போனால் ஊர் அழிஞ்சு அஞ்சு வருசமாகப்போகுது.  இன்னும் அஞ்சாறு வருசங்கள் ஆகுமாம்  எல்லாம் சரியாகி பழையபடி  முழு நகரமாக ஆவதற்கு. ஆக்கத்தான் பல வருசம், அழிக்க ஒரு நொடி :-(


சகஜ நிலை சகஜ நிலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே அதுக்குத் திரும்பவே எங்களுக்கு  நாலுவருசம் ஆச்சு.  ஏடிஎம்லே காசு எடுத்து, கடையில் சாமான்கள் வாங்கி ஆக்கித் தின்னுவதுதான்  சகஜ நிலையா?  அதுவும் கழிவு நீர் கலந்த சாக்கடை நீர் புகுந்த வீடுகளையும் இடங்களையும்  கழுவி விட்டுட்டால் சகஜமாகிருமா?


சம்பவம் நடந்துக்கிட்டு இருக்கும்போது பதறாத மனமும் படாத கஷ்டமும் உண்டா?  எப்படி  உடனே எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னுமே நடக்காததைப்போல்  சகஜ நிலைக்குத் திரும்பமுடியும்? மனசை என்னதான் கல்லாக்கிக்கிட்டாலும்....   ஊர்முழுசும் வீசும் சாக்கடை துர்நாத்தம்  ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காதா?

ஓரளவுக்கு வசதியான மக்கள்ஸ் வீட்டைக்கழுவி வெள்ளையடிச்சுட்டு வீட்டுக்குள்ளே வந்துடலாம். வீடே இல்லாதவங்க,  இருந்த ஓட்டை வீடும்  காணாமப்போனவங்க எல்லாம் என்ன செய்வாங்க?

அரசு கொடுக்கும் நிவாரணத்தில்கூட  ஆட்டையைப் போடறாங்கன்னு  வாசிக்கும்போது.........  ச்சீன்னு போகுது. நேரடியா பேங்க் அக்கவுண்டுக்குப் போகுதுன்னு  சொன்னாலும்,  எல்லாருக்குமா  பேங்க் அக்கவுண்ட் இருக்கும்?


ஆனால் வெள்ள சமயத்துலே,  வயித்துப்பசி தீர்க்கவும்,  உயிர்களைக் காப்பாத்தவும் சாதி, இனம், மொழி, மதம் கடந்து உதவி செஞ்சவங்களை நினைச்சுப் பெருமைப் படத்தான் வேணும். யார் பெத்த பிள்ளைகளோ,  நல்லா இருக்கணும்! மனிதம்  இன்னும் மரணம் அடையலை என்பது எவ்ளவு விசேஷம் பாருங்க.

ஆச்சு. மழை நின்னு போச்சு. இனி  வரப்போகும் வியாதிகளை அண்டவிடாமல் எல்லோரும் கவனமா இருங்க.  பத்திரிகையும்  தொலைகாட்சியும் என்னதான்  இயல்பு நிலைக்கு மக்கள்ஸ் வந்தாச்சுன்னு கூவுனாலும்  நடைமுறையில்  அப்படி இல்லைன்னு இன்னும் ஃபேஸ்புக்கில்  கிடைக்கும்  பதிவுகள் சொல்லிக்கிட்டு இருக்கு.

குப்பை மலைகளைப் பார்க்கும்போது...........  கோபம் வர்றதை தடுக்கமுடியலை. மக்கள் எப்படி இவ்ளோ குப்பைகளைச் சேர்த்து வீசி இருக்காங்க?  இதெல்லாம் சாக்கடையிலும்,  மழைத்தண்ணி வடிஞ்சு போகும் கால்வாய்களையும் அடைச்சுக்கிட்டு இருந்தால்  எப்படி  தண்ணீர் தேங்காமல்  இருக்கும்?

நிவாரணமா உணவுப்பொருட்கள் கிடைச்சதும், அதை  சாப்பிட்டு முடிச்சு  அந்தத் தட்டுகளையும் கீழே வீசிப்போனதைப் பார்த்து எனக்கு துக்கமாப் போச்சு.

புதுவருசம்பொறக்க இன்னும்  19 நாட்கள்தான். எல்லாப் பீடைகளும் இத்தோடு போகட்டும். தைரியமா  இந்த அழிவில் இருந்து மீண்டு வர்றதைக் கவனியுங்க. நம்ம நிலைக்கு ஏத்தபடி  உதவின்னு  கொஞ்சம் செய்யலாம்.  ஒருவருக்கொருவர்  உதவி செஞ்சு  வாழ்க்கையை  முன்னுக்குக் கொண்டு போங்க.  ஒன்னே ஒன்னு..... அரசியல் வியாதிகளை வைக்கிற இடத்தில் வையுங்க. அதேபோல் செய்ய வேண்டியது சினிமாக்காரங்களையும்தான். பிரபலம் என்று நாமாய் நினைச்சுக்கிட்டு அவுங்களைத் தூக்கித் தலையில் வச்சுக்கிட்டு ஆடறதை நிறுத்துங்க.  அப்பதான்  அவுங்களும் தங்கள் உளறல்களை நிறுத்துவாங்க.

நல்லார் ஒருவர் 'உளறேல்'   அவர்பொருட்டு 
எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை! 

எவ்ளவோ சொல்லணுமுன்னு இருந்தாலும்,  மனசும் மூளையும் ஒத்துழைக்கலை என்பதே நிஜம் :-(

சகதி நிலையைத்தான் சகஜ நிலைன்னு சொல்றாங்களோன்னு  நம்ம கோபால்  வேற கேக்கறார்!



14 comments:

said...

சகதி நிலையைத்தான் சகஜ நிலைன்னு சொல்றாங்களோன்னு ஹா ஹா!

said...

இதையும் பாக்கனும்னு இருந்திருக்கு வாழ்க்கைல. வேறென்னத்தச் சொல்ல.

நீங்களும் சொன்ன மாதிரி மக்கள் ஒற்றுமையோட வந்து நின்னு உதவுனாங்க. அதைப் பாராட்டனும்.

said...

//குப்பை மலைகளைப் பார்க்கும்போது//

உண்மைதான். ஆனால், “குப்பை மேலாண்மை” என்ற ஒன்று இல்லாட்டியும், முறையான குப்பை சேகரிப்பையாவது தவறாமச் செஞ்சிருந்தா, இந்தளவுக்கு நிலைமையும் மோசமாகியிருக்காது, மக்களும் மோசமாகியிருக்கமாட்டாங்க - குப்பையைச் சிதறடிப்பதில் - என்று தோன்றுகிறது. அட்லீஸ்ட், இனியாவது, அரசு - மக்கள் இருதரப்பும் பொறுப்பா இருக்கணும்.

said...

//அரசியல் வியாதிகளை வைக்கிற இடத்தில் வையுங்க. அதேபோல் செய்ய வேண்டியது சினிமாக்காரங்களையும்தான். பிரபலம் என்று நாமாய் நினைச்சுக்கிட்டு அவுங்களைத் தூக்கித் தலையில் வச்சுக்கிட்டு ஆடறதை நிறுத்துங்க. அப்பதான் அவுங்களும் தங்கள் உளறல்களை நிறுத்துவாங்க. //

அப்படி போடுங்க அருவாளை



சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

said...

அது யாருங்க டீச்சர் "உளறியது"... மாட்டிக்கொண்டது ஆழ்வார்பேட்டை ஆண்டவனா?

said...

ஆம் மதுரைப் பதிவர் சங்கமத்துக்குப் போகும் போது கூட நல்ல மழை இருந்தது. ஆனால் இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. பூமி பிளப்பதும் புயல் அடிப்பதும் பெருமழை பெய்வதும் இயற்கையின் நிகழ்வுகள். ஆனால் மனிதன் அதன் முன்னே தூசு. தடுக்க இயலாது வேகமாய் புனரமைக்கலாம்நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவையாவது நல்லதாக இருக்கட்டும்

said...

சகதி நிலையை சகஜ நிலைன்னு சொல்லும் சிலர் - என்னத்த சொல்ல! அவங்க வீட்டில் கொண்டு இந்த சகதியைக் கொட்ட வேண்டியது தான்!

said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

said...

மழை நீர் சேமிக்கும்/சேரும் இடத்தில், கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை வைத்து இடை தரகர்கள் நய்சியமாக பேசியதில், விபரம் அறியாமல் மனைகளை (கனவு இல்லங்களை) கட்டியதும், நீர் நீளைகளை சுற்றி, பல அடுக்கு மாடி கட்டிடங்களும், தொழிற்சாலை அமைத்தும் ...அதில் கழிவு நீர் கலந்து...நீரின் பாதையை தடுத்தும்/தடுக்கப்பட்டதும்....பிளாஸ்டிக் உபயோகித்தல் அதிகரிப்பும்... உலக அளவில் புவி வெப்பம் அடைதல், இப்படி தன் பாதை எங்கிலும் தடைகள் இருந்த போதும், இயற்கையை யாரால் வெல்ல முடியும்...

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

இதை உணர்ந்து இயற்கையை போற்றி காப்போம்....

said...

மனிதம் இன்னும் மரணம் அடையலை என்பது எவ்ளவு விசேஷம் பாருங்க.
...............



உண்மை ..

said...

மனிதம் மரிக்கவில்லை என்பது இங்கு (சென்னையில்) தெள்ளத்தெளிவாகியிருக்கிறது.

said...

//மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன் பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம் போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. (அவங்கவங்க இருந்த இடத்துல, ரெண்டு நாளா மாட்டிக்கிட்டு,... நகரமுடியாம இருந்த சந்தர்ப்பத்துல,.. யோசிச்சதாத்தான் இருக்கணும்)//

//நம்ம மக்கள் கொட்டின குப்பையும் பழி வாங்கிடுச்சு. கடைத்தெருவில் ரெண்டு ரூபாய்க்கு பச்ச மொளகா வாங்கினாக்கூட பாலிதீன் கவர்ல போட்டுத்தான் கொடுப்பாங்க. இப்பிடி நெறைய சேர்ந்து போற ப்ளாஸ்டிக் குப்பைகளை மக்கள் அப்படியே போறபோக்குல வீசிட்டு போறதுதான்.. சாக்கடைகளில் போய் அடைச்சிக்கிட்டு மழைத்தண்ணி வடியவிடாம செஞ்சுடுச்சு. வெள்ளத்திலிருந்து மீண்டதும் அரசு செஞ்ச முதல்வேலை பாலிதீன் கவர்களுக்கு தடா போட்டதுதான்.//

முன்னத்தி ஏரான எங்களைப்பார்த்தாவது சுதாரிச்சிருக்கலாம்:-(

said...

இவ்வாறான சூழல் வரும்போதுதான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளமுடிகிறது.

said...

பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

சென்னை உண்மையாகவே சகஜ நிலைக்குத் திரும்பிருச்சாம். இல்லையா பின்னே? செயின் பறிப்புகள் நடக்குதாமே!


தனித்தனி பதில் எழுதாமப்போச்சு. மன்னிக்கணும்.