Wednesday, May 30, 2012

வகுத்தல் தெரிந்த மனமே உனக்கு பெருக்கல் தெரியாதா?

இங்கெல்லாம் அப்படி நடக்காதுன்னு இறுமாப்பா இருந்ததுக்கு பலத்த அடி கிடைச்சுருச்சு. உலகெங்கும் ஊடகங்கள் ஒன்னுதான் போல! உண்மையின் உரைகல்லா இருக்க வேண்டியவைகள், பொய்மையைத் தூக்கிப் பிடிப்பதும் பத்திரிகை(அ)தர்மம்:(

 கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம ஐநூறுன்னு உள்ளூர் ரேடியோவில் ஒலிபரப்பிக்கிட்டு இருக்காங்க. அந்த நிகழ்ச்சியைக் கவர் பண்ண வந்த நிருபருக்கு உலகத்துலேயே பெரிய எண் ஐநூறு:)

 பத்தால் வகுக்கத் தெரிஞ்சவருக்கு பத்தால் பெருக்கத் தெரியலை பாருங்க!!!!

 ஒருவாரமாவே வீடுகளில் இருக்கும் லெட்டர் பாக்ஸ்களுக்குத் தகவல் வந்துக்கிட்டே இருந்துச்சு. சனிக்கிழமை மத்தியானம் வேற எந்த வேலையும் வச்சுக்காதீங்க, முக்கியமான வேலை ஒன்னு இருக்குன்னு கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 சூரியன் சதி பண்ணிட்டான். தலைக்குல்லா, கையுறை எல்லாம் போட்டுக்கிட்டு மறக்காம கெமெராவையும் எடுத்துக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம். கார் நிறுத்த இடம் தேடியதில் பிரமாண்டமான வெற்றிடம் கிடைச்சது. இம்மாம்பெரிய இடம் இங்கே எப்படி? நிலநடுக்கத்தில் இடிஞ்சுபோன கட்டிடத்தை அப்புறப்படுத்தி இருக்காங்கன்னு புரியுது. ஆனா..... முந்தி இங்கே என்ன இருந்திருக்கும்?
கூகுளாண்டவரை சரணடைஞ்சதும் காமிச்சுக்கொடுத்தார். மனம் விக்கிச்சுப்போனது உண்மை! பாரம்பரியக் கட்டிடங்களில் இதுவும் ஒன்னு!

 நகருக்குள் புகுந்து போகும்போதெல்லாம் அங்கங்கே இருக்கும் வெற்றிடங்கள், மூளையைக் கலக்கும். இல்லாமல் போனது என்ன? சரியாக் கவனிச்சு வச்சுக்காம ஒரு ஊரில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு வாழ்ந்து என்ன பயன்? தலையை உசத்தி அழகை அனுபவிக்காம எல்லாத்தையும் அலட்சியப்படுத்திட்டோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி.

 இருந்தப்ப அருமை தெரியலையே? இழந்தபின் புலம்பறேனே.....:(
நல்ல கூட்டம்தான். அநேகமா எதிரிக்கட்சி முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்துருந்தாங்க. இதுலே சிட்டிக் கவுன்ஸிலர்கள் சிலரும் உண்டு. அனைவரையும் வரவேற்ற பின் தீம் ஸாங் போட்டாங்க. புகைமூட்டமும் பனிரெண்டு டிகிரியுமா இருக்கும் சூழலில் நெஞ்சைப்பிழிவது போல் அந்தப்பாட்டு...... என்ன குரல்! ஆர்பாட்டமான பின்னணி இசை ஒன்னுமில்லாமல்... அப்படியே கத்தியை இதயத்தில் செருகுனமாதிரி.....
கோவிலைக் காப்பாத்தணும். அது நம்மால் முடியும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த நூறு ஸ்ட்ரக்ச்சரல் எஞ்சிநீயர்கள் இதைப் பழுதுபார்த்துத் திரும்ப உயிர்ப்பிக்க முடியுமுன்னுதான் சொல்றாங்க. உயிர்தெழ ஒரு சான்ஸ் கொடுக்க இந்த ஏஞ்சலீகன் நிறுவனம் சம்மதிக்க மாட்டேங்குதே!
கடந்த 30 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள பழைய பாரம்பரியக் கட்டிடங்களைப் பழுதுபார்த்துப் புனரமைக்கும் கலையில் வல்லவரான Marcus Brandt என்ற நிபுணர், உடைஞ்சுபோன மணிக்கூண்டை மட்டும் முற்றிலும் புதுமாதிரி கட்டிட்டு, சர்ச் கட்டிடத்தை நல்லபடி பழுதுபார்த்து பாதுகாப்பான கட்டிடமா மாற்றிட முடியும். இதுக்கு 55 மில்லியன் டாலர்களே போதும் என்றார்.
மேடையில் பேசியவர்கள் சொன்னதில் இருந்து நான் கிரகிச்சது.......

 பூரா உலகமும் 'இந்த சர்ச்' பற்றிய விவரங்களையும் அதுக்கு நேரப்போகும் சமாச்சாரத்தையும் கவனிச்சுக்கிட்டே இருக்கு.

 உலகெங்கிலும் பலர் சர்ச் புனரமைக்க நிதி வழங்க தயாரா இருக்காங்க.

 தன்னார்வலர்களா வந்து இந்த வேலையை முடிக்க நிறைய கல்வேலைக் கொத்தனார்கள் ரெடி. உள்ளூர் கல்வேலை கற்கும் இளைஞர்களுக்கு நல்ல பயிற்சிக்களமா இருக்கும்.

 கூடுதல் வரி ஏத்தி நகர மக்களைக் கஷ்டப்படுத்த வேணாம். நிதி அளிக்க உள்ளூர் தனிகர்கள் தயார்.

 அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் இருந்து (பேசிக்கிட்டு இருந்த மைக்கேலின் மகனின் நண்பராம்)ஒருவர் பத்தாயிரம் டாலர்களை அனுப்பி இருக்கார். இதுலே என்ன ஆச்சரியம் என்றால்..... அவர் ரோமன் கத்தோலிக்கர், யூத இனம் தவிர அவர் அஸ்ட்ராலியர்! (போதுண்டா சாமி.... சான்ஸ் கிடைச்சால் ஆஸிக்கு ஒரு ஊசிகுத்து )
நம்ம சிட்டிக் கவுன்ஸில் லெட்டர் ஹெட்டில் ஊரின் ஐகான் சர்ச் படம்தான் இருக்கு. (சர்ச்சை இடிச்சுட்டால்...... வேற படம் தேடணும். கவுன்ஸிலுக்கு ஸ்டேஷனரி செலவு கூடிப்போகாதோ?)

 இடிக்கணும் இடிக்கணும். ரெண்டு இல்லை மூணு மீட்டர் விட்டுட்டு பாக்கி எல்லாம் இடிக்கணுமுன்னு பிஷப்பம்மா சொல்றாங்களே. அப்ப..... குட்டிச்சுவரா நிக்க வைப்பாங்களா இருக்கும்,இல்லே?

 நாங்களும், அதாவது இடிக்கக்கூடாதுன்னு கோவிலைக் காப்பாத்தணுமுன்னு சொல்ற நாங்களும் கொஞ்சம் இடிப்போம்தான்!!!! எதுக்குன்னா பழுதான இடத்தை இடிச்சுச் சரிபடுத்தி மீண்டும் கட்டி முடிக்க. இது கத்தி! எப்படின்னா.... கறிக்கடைக்காரர் கையில் உள்ள கத்தி இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர் கையில் உள்ள கத்தி!!!! 

இடிப்பதா வேணாமான்னு தீர்மானத்தை கவுன்ஸில் ஓட்டுக்கு விட்டபோது பத்து பேர் வேணாமுன்னும் நாலு பேர் இடிச்சுக்கோன்னும் சொல்லி இருக்காங்க. (மொத்தமே 14 கவுன்ஸிலர்கள்தான் நம்மூரில்)
ஊர்வல விஷயத்தை பிஷப் விக்டோரியாவுக்கு நினைவுபடுத்த இன்னிக்குக் காலையில் ஃபோன் போட்டப்ப, 'வேற வேலை இல்லையா எனக்கு? காலங்கார்த்தாலே, இப்படி தூக்கத்தைக் கெடுத்து' ன்னாங்க.  அவுங்க சொன்னதை ஒலிப்பதிவாக்கி போட்டுக் காமிச்சதும் கூட்டம் முழுசும் கூவுச்சு.

தானாய் முடிவு எடுக்கலை. அந்தம்மாவுக்கு பின்புலத்தில் ஏதோ நடக்குது.
பிரதமருக்கு அனுப்பும் திறந்த மடல்ன்னு சிகப்பு நிற அட்டையில் கோவிலைக் காப்பாற்றனுமுன்னு அச்சடிச்சு அனுப்ப ஏற்பாடு. நாங்களும் எங்கள் விவரம் எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். மொத்தத்தையும் ஒன்னாச் சேர்த்து தபாலில் அனுப்புவாங்க. நல்லவேளை..... பிரதமருக்குத் தந்தி அனுப்புங்கன்னு சொல்லும் டெக்னிக் இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியலை:-)))))

 இன்னிக்கு உள்ளூர் பத்திரிகை ( இருப்பதே ஒன்னுதான்) கருத்துக்கணிப்புன்னு ஒரு கேவலமான சேதி போட்டுருக்கு. 54 சதம் நகர மக்கள் கோவிலை இடிக்கணுமுன்னாட்டாங்களாம்.
நெசமாவா? சம்பந்தமே இல்லாதவங்களைக்கேட்டா அப்படித்தான் சொல்வாங்க.

 கணக்குப்போட்டு பார்த்தால் மூணரை லட்சம் மக்கள்ஸ் இருக்கும் ஊரில் இந்த பத்திரிகை சர்குலேஷனே எம்பதாயிரத்து ஐநூறுதான். நம்ம பக்கங்களில் சலூனில் தினம் பேப்பர் வாங்கிப் போடுவது போல இங்கே சூப்பர்மார்கெட் தவிர எல்லா கடைகண்ணிகளிலும் வியாபார நிறுவனங்களிலும், பேங்க், டாக்டர்ஸ் வெயிட்டிங் ரூம்ஸ் இப்படி மக்கள் வந்துபோகும் இடமெல்லாம் இதை வாங்கிப் போட்டுருவாங்க. ஊரில் ஒரே ஒரு பத்திரிகை என்பதால் நோ அதர் ச்சாய்ஸ்:(

 வீடுகளில் நிறையப்பேர் வாங்குவதில்லை, நாம் உள்பட. சனிக்கிழமை மட்டும் வாங்குவோம் முக்கிய ஸேல்ஸ், ரியல் எஸ்டேட் விவரம் பார்ப்பதற்காக. இந்த அழகில் எப்போ எங்கே கருத்துக்கணிப்பு யாரை வச்சு நடத்தி தகவல் சேகரிச்சாங்களாம்? எல்லாம் பொய்:(

 பொட்டி வாங்கி இருப்பாங்களோன்னு ஒரு சம்சயம் கேட்டோ!
கிழடுகள்தான் இடிக்கவேணாமுன்னு சொல்லுதுன்னு ஏற்பட்ட குற்றச்சாட்டைப் பொய்ப்பித்த இளைஞர்களும் சிறார்களும் நாயார்களுமா ஐயாயிரம் பேருக்குக் கூடி இருந்த கூட்டம் கதீட்ரலை நோக்கி ஊர்வலமாப் போனோம். (ஒரு கி.மீ இருக்கலாம்)ரெண்டு ப்ளாக் கடந்ததும் கம்பித் தடுப்பு போட்டுருந்த சர்ச்சை தூரத்தில் இருந்து பார்த்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் வழிவிட்டு சாலைக்கு ரெண்டு பக்கமும் கூடுனதும் உள்ளூர் மந்திரவாதி 'த விஸ்ஸர்ட்' கூட்டத்திரை வரவேற்று, பிஷப்பம்மா     'போனதும்'  போகுமிடம் எதுன்னு சொல்லி வாழ்த்தினார்!
எங்கூரில் நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற கணக்கில்.... இது மாபெரும் கூட்டம்! எல்லாத்துக்கும் சாட்சியா தினம் பத்துமுறைக்குக் குறையாமல் எட்டிப்பார்த்துப்போகும் ஆஃப்டர்ஷாக்குகள்,  நின்னபாடில்லை. நேத்து பகல் இதே நேரம் ஒரு 5.2 !

14 comments:

said...

நல்ல ரிப்போர்ட்.

said...

\\நகருக்குள் புகுந்து போகும்போதெல்லாம் அங்கங்கே இருக்கும் வெற்றிடங்கள், மூளையைக் கலக்கும். இல்லாமல் போனது என்ன? //
ஹ்ம்..

said...

சரியாக் கவனிச்சு வச்சுக்காம ஒரு ஊரில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு வாழ்ந்து என்ன பயன்?//

இது இப்பத்தான் எனக்கும் கொஞ்ச நாளாத் தோண ஆரம்பிச்சுருக்கு. அதை கொஞ்சமாவது ஈடு கட்ட முயற்சிக்கணும்.

//இடிக்கணும் இடிக்கணும். ரெண்டு இல்லை மூணு மீட்டர் விட்டுட்டு பாக்கி எல்லாம் இடிக்கணுமுன்னு பிஷப்பம்மா சொல்றாங்க//

இவ்ளோ தூரம் பன்னிப்பன்னி சொன்னபிறகும் 'இடிச்சே ஆகணும்'ன்னு பிடிவாதமா இருக்காங்களே உங்கூரு அம்மாவும் பின்புலத்தாரும் :-(

said...

//, 'வேற வேலை இல்லையா எனக்கு? காலங்கார்த்தாலே, இப்படி தூக்கத்தைக் கெடுத்து' ன்னாங்க.//

நம்மூரு அரசியல்வியாதிகளைத் தூக்கிச் சாப்பிட்டிருவாங்க போலயே!!

said...

:( பாரம்பரிய சின்னங்கள் இடிக்கப்படலாகாது. நம்மால் திரும்பவும் கட்டி எழுப்புவதற்கு வாய்ப்பே இல்லை

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நன்றி.

said...

வாங்க கயலு.

வேற வழி? :(

said...

வாங்க அமைதிச்சாரல்.

இன்ஷூரன்ஸ் காசுக்காகத்தான் இப்படி அடம் பிடிக்கிறாங்கன்னு பரவலா ஒரு எண்ணம் இருந்தாலும் எனக்கு அப்படித் தோணலை.

மத நிறுவனங்களுக்கு 20 மில்லியன் பெரிய காசா என்ன?

வேற என்னமோ இருக்கு!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

மதத்துலேயும் அரசியலும் வியாதிகளும் இருக்கத்தானே செய்யுது:(

said...

வாங்க கோவியாரே.

ஏற்கெனவே பாரம்பரியம் மிக்க சரித்திரச் சின்னங்களா இருக்கும் கட்டிடங்களின் எண்ணிக்கையில் 35 சதமானம் போயே போச்:(

நிலநடுக்கம் விட்டு வைக்கலை.

இனி எழுப்பப் போகும் நகர் நியூஸியின் புத்தம் புதிய நகராம்.

said...

நிலநடுக்கம்தான் ஆட்டம்காட்டி விழுத்துகிறது என்றால் இவர்கள்வேறு தொலைத்திடுவாங்க போல.

said...

வாங்க மாதேவி.

போராடிப் பார்க்கத்தானே வேணும்.

சர்ச் மேலிடம் ஒன்னும் சொல்லலைன்னாலும் எர்த்க்வேக் ரெகவரி மந்திரி எஞ்சிநீயர்களையும் இன்னும் சில நிபுணர்களையும் சர்ச் உள்ளே போய்ப் பார்க்க அனுமதிச்சு இருக்கார்.

பார்க்கலாம் அவுங்க என்ன சொல்லப்போறாங்கன்னு!

said...

அன்புள்ள துளசி,
என் முதல் வருகை உங்கள் தளத்துக்கு. நீங்கள் எழுதிய ‘வகுத்தல் தெரிந்த மனமே உனக்கு பெருக்கல் தெரியாதா?’ வெகு அருமை! பெங்களூரில் பழைய கட்டிடங்களை இடித்து அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதைப் பார்க்கும் போது மனது மிக வேதனைப் படும். இடிப்பது சுலபம் மறுபடி எழுப்ப முடியுமா என்று தோன்றும். கட்டிடம் மட்டுமல்ல, பெரிய பெரிய மரங்கள் விழும்போது கூட மனம் துயரப்படும்.
வாழ்த்துகள்!
ரஞ்ஜனி

said...

வாங்க ரஞ்சனி.

முதல் வருகைக்கு நன்றி.

அழிப்பது சுலபம், வளர்ப்பது சிரமம் என்று புரிஞ்சுக்காதவரை இப்படி நடக்கத்தான் செய்யும்:(

ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்கள் உடனே நடணும். அதோடு போய்விடாமல் தொடர்ந்து பராமரிக்கணும். அதைச் செய்வாங்களா?


சிதிலமாக இருக்கும் பழைய கோவில்களைப் பார்க்கும்போதும்....மனசுக்கு வலிதான்:(