Wednesday, May 09, 2012

வந்து பார்த்து, வாழ்த்திட்டுப் போங்க!

ஆட இடமில்லைன்னு மனசெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்த ஊருக்கு, 'எதாவது செய்யணுமே(பாஸ்)' என்ற முடிவில் கொஞ்சம் உக்காந்து யோசனை செஞ்சு உள்ளுரில் இருக்கும் ஒரு ரேஸ் கோர்ஸ் ( இங்கே ரேக்ளா ரேஸ்கள் நடக்கும்) மைதானத்தில் கொஞ்ச இடத்தை முந்தியே கேண்டர்பரி ரக்பி லீக் அவுங்க ஆட்டங்களுக்காக வாங்கி வச்சுருந்ததைக் கெஞ்சிக்கேட்டு புதுசா ஒரு தாற்காலிக ஸ்டேடியம் கட்டிட்டாங்க ஏ எம் ஐ காரங்க.

 100 நாளில் வேலையை முடிச்சு, இப்போ ஊர்மக்களைக் கூப்பிட்டு 'வந்து பார்த்து வாழ்த்திட்டுப் போங்க' ன்னு அழைப்பு வச்சதும் நல்லா இருங்க(டே)ன்னு வாழ்த்தக் கிளம்பிப்போனோம் போன சனிக்கிழமை!

இலவச பஸ்கள் எல்லாம் விட்டு  மக்கள்ஸை வருந்திவருந்திக் கூப்பிட்டாங்கன்னு  அங்கே போனபிறகுதான் தெரிஞ்சது!

இந்த இடத்தில் கிடைச்ச சந்தர்ப்பத்தை விடாம உள்ளூர் பெருமை(யும்) கொஞ்சம் பேசத்தான் வேணும். ஒவ்வொரு பெரிய ஊருக்கும்(நம்மூர் மாநிலம்போலன்னு வச்சுக்குங்க) ஒரு அஃபிஸியல் ரக்பி டீம் இருக்கு. அததுக்கு ஒரு பேரோடுதான். எங்க கேண்டர்பரி கிறைஸ்ட்சர்ச்க்கு க்ருஸேடர்ஸ்ன்னு நாமம். 127 வருசமா இவுங்க விளையாடிக்கிட்டு இருக்காங்க. எங்கூரு கலரான கருப்பு & சிகப்பு நிறம்தான் இவுங்களுக்கும் என்றபடியால் இந்த ரெண்டுகலரிலும் பட்டைப்போட்ட ஜெர்ஸி, டீ ஷர்ட் இப்படித்தான் இவுங்க சீருடை இருக்கும். இவுங்க கலந்துக்கும் கேம் இதே ஊரில் நடக்கும்போது பார்த்தீங்க...... ஏதோ திமுக மாநாட்டுக்கு வந்துட்டோமோன்னு தடுமாறித்தான் போவோம். பலூன் தோரணம் கட்டிப் பறக்கவிடுவதில் இருந்து முகம் முழுக்க பப்பாதி கருப்பும் சிகப்புமா ஃபேஸ் பெயிண்ட் அடிச்சுக்க்கிட்டு இளைஞர், சிறுவர் பட்டாளம் ஊர்பூரா விரவிக்கிடக்கும்.


 அன்னிக்கு சூப்பர் மார்கெட்டுலே எதாவது சாமான் வாங்கிக்கப்போய் செக்கவுட்லே காசு கொடுக்கும்போது செக்கவுட் ஆபரேட்டர்கூட நடக்கும் சின்னப்பேச்சுலே இதுதான் பிரதானம். யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறே? இன்னிக்கு கேம் பார்க்கப் போறியா? மைதானத்துக்குப் போவியா இல்லே வீட்டுலே ஸ்கை டிவியில் பார்ப்பியான்னு ஆயிரம் கேள்விகளில் குசலம் விசாரிப்பு நடக்கும். பொறந்த வூட்டுப் பெருமையை உடம்பொறந்தாளிடம் கூவும் கதைன்னு எல்லாத்துக்கும் மையமாத் தலையாட்டி க்ரூஸேடர்ஸ்ன்னு சொல்லி வைக்கறதுதான். யாரும் பதிலுக்குக் காத்திருப்பதில்லை என்பது வேற விஷயம்:-))) இந்த ஸ்கை டிவி என்பது நம்மூர்லே பணம் கட்டிப் பார்க்கிறோமே அப்படி ஒன்னு. ஆனாலும் இந்தியாவிலே நாட்டுடமை பொதிகை கூடக் காசு கொடுத்துப் பார்க்கும்படியால்லே இருக்கு. இங்கே நாங்க வந்த சில வருசங்களிலேயே டிவி சார்ஜை எடுத்துட்டாங்க. ஒரு பத்து சேனல்வரை இலவசம்தான். அப்புறம்தான் வீட்டுக்கூரை மேலே டிஷ் ஒன்னை மாட்டிவச்சு இந்த ஸ்கை டிவி வர ஆரம்பிச்சது.

கனெக்‌ஷன் சார்ஜ்ன்னு ஒன்னும், அதுக்குப்பின் வாராவாரம் இம்புட்டுன்னு ஒரு சார்ஜும் கட்டணும். ஸ்கை இருக்கான்னு என்கிட்டே கேக்கும் நம்மாட்களுக்கு இருக்குன்னு சொல்லி ஜன்னல்வழியாத் தெரியும் ஆகாசத்தைக் காட்டுவேன்.

 ரொம்ப முக்கியமான மேட்ச்/கேம் வரும்போது கனெக்‌ஷன் சார்ஜு கூட வேணாம். இலவசமாப் போட்டுத் தர்றோம். முதல் 2 வாரம் அரை சார்ஜ்ன்னு ஸ்கை, ஆள் பிடிக்க அலையும். அல்ப ஆசைக்குத் தலையை ஆட்டுனா.....குறைஞ்சது ஒரு வருச ஒப்பந்தம் போடவேண்டியாகும். டிவியில் நேரடி ஒளிபரப்பாக் காமிக்கும் உரிமை இவுங்களுக்கு மட்டுமே! நாட்டுமக்கள் முழிச்சுக்கிட்டுக் கூவுனதுக்கு அப்புறம் முதல் அரை மணி கழிச்சு தாமதமா தேசிய ஒளிபரப்புலே காமிச்சுக்குங்கோன்னு பெரியமனசு பண்ணிட்டாங்க.இந்த விளையாட்டுலே எனக்குப்பிடிச்ச அம்சம் என்னன்னா.... ஒரு பாதி ஆட்டம் முக்கால் மணி நேரம் என்ற கணக்கில் இடைவேளை எல்லாம் சேர்த்தாலே ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுரும். நாள் பூராவையும் நாசம் பண்ண வேணாம். எப்பவும் மாலை ஏழரைக்குத் தொடங்கி ஒன்பதரைக்கு முடிஞ்சுரும்.
குழந்தைகளைத் தரையில் உக்காரவச்சு அதுகள் இருக்கையைப் பிடிச்சுக்கிட்ட ஒரு அம்மா:-)))))


பெரிய வியாபார நிறுவனங்கள் எல்லாம் ஸ்பான்ஸார் செய்யறோமுன்னு பணம் கட்டி கார்ப்பரேட் பாக்ஸ்ன்னு உச்சாணிக்கொம்பில் அறைகள் வாங்கி வச்சுருப்பாங்க. கோபாலும் மகளும் அடிக்கடி அங்கே போய், எனக்கு ஸ்கோரை தொலைபேசிக்கிட்டே இருப்பாங்க. டிவியில் வருமுன் எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் கொடுக்கறாங்களாம்!! ஊரோடு சேர்ந்து ரெண்டும் கெட்டுக்கிடக்குன்னு விட்டுருவேன்:-)

ஒரு விளையாட்டுலே இருந்து டிமாண்ட் அனுசரிச்சுப் புதுப்புது கிளைகள் பரவுவதுபோல உள் நாட்டுலே விளையாட அந்தந்த ப்ராவின்ஸ் அணி, வெளிநாடுகளோடு விளையாட நேஷனல் டீம் ஆல் ப்ளாக்ஸ்ன்னு இருந்ததுலே மாற்றங்கள் வந்து, நாட்டுக்குப்பொதுவா ஆல் ப்ளாக்ஸ் மட்டும் அப்படியே வச்சுக்கிட்டு உள்நாட்டு அணிகளுக்குள் சூப்பர் 12, சூப்பர் 14, சூப்பர் 15ன்னு ஒவ்வொன்னா காலக்கிரமத்தில் இடம்பிடிச்சது. இது ரக்பி லீக். நம்ம பக்கத்தில் இந்த ஐ பி எல் அநியாயத்துக்கு அட்டூழியம் செய்வதுபோலன்னு சொல்லலாம்.க்ரூஸேடர்களின் தாய்மண், கேன்டர்பரி என்பதால் ஜேடு ஸ்டேடியத்தில் நிரந்தர பங்கும் உரிமையும் அடைஞ்சு, நடக்கும் போட்டிகளைக் கொஞ்சம் ஷோவா நடத்த ஆரம்பிச்சாங்க. கேம் ஆரம்பிக்குமுன் ஏதோ பெரிய யுத்தத்துக்குத் தயாரா பாய்ஞ்சு வருவது போல அறைகூவலோடு கோட்டை வாசலுக்குள் (இதுக்குன்னே ஒரு கோட்டைவாசல் கட்டி நிறுத்தியாச்சு) இருந்து முதலில் ஒரு குதிரை வீரன் கையில் பிடிச்ச உருவிய வாளோடு மைதானத்தைச் சுத்தி வர்றதும், அதன்பின் நாலைஞ்சு குதிரை வீரர்கள் பாய்ஞ்சு பாய்ஞ்சு மைதானத்தை மூணு சுத்து சுத்துவதுமா ஷோ காமிச்சு, காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஆவேசத்தைக் கிளறிவிட அவுங்களும் (முக்கியமா க்ரூஸேடர் விசிறிகள்) உணர்ச்சிவசத்தில் கூவி வரவேற்கன்னு விறுவிறுப்பை ஆரம்பிக்க போட்டியில் ஆடும் ஆட்டக்காரர்கள் மைதானத்துக்கு வந்து ரெண்டு பார்ட்டிகளும் எதிரும்புதிருமா நின்னு பாடி கூவி கோஷமிட்டு ஆட்டம் தொடங்கும்.

யாரோ புண்ணியவான் நிகழ்ச்சி நடந்த ஒரு சமயம் பதிஞ்சு யூ ட்யூப்லே போட்டுவச்சதை உங்களுக்காகப் போட்டிருக்கேன். பாருங்க. லைவ் ரிக்கார்டிங் என்பதால் ஒலி சரியா இல்லை. ஆனாலும் ஒளி பார்க்கும் வகையில் இருக்கு. அன்னாருக்கு என் நன்றிகள்.

இதுக்கு க்ரூஸேடர்களுக்குன்னு ஒரு தீம் ம்யூஸிக் வேற! பாட்டு conquest of paradise என்று ஆரம்பிக்கும். நல்ல அர்த்தமுள்ள வரிகள் உள்ள பாட்டுதான்.
 "Paradise" we are living on, and the power within each of us, the power of "Love"! It lies in our hands whether this beautiful planet will be destroyed furthermore, or whether we will contribute to his preservation for the sake of our children's

இந்த அழகான பூவுலகை என்ன செய்யபோறோம்? அழிக்கப்போறோமா..... இல்லை நம் சந்ததிகளுக்கு விட்டுவைக்கப் போறோமா? த்சு த்சு த்சு த்சு.......

என்னமா எழுதிட்டேப்பா.........!!!! உங்களுக்காக ஒரு க்ளிப் கீழே போட்டுருக்கேன், பாருங்க. பெல்ஜியம் நாட்டுப் பாடகி டானா வின்னர் பாடுனது இது.


ஸ்டேடியம் வார்மிங்கில் கலந்துக்கப்போய்ச் சேர்ந்தோம். நிகழ்ச்சி பகல் 12 முதல் மாலை 5 வரை. குழந்தைகுட்டிகளுக்கு ஏராளமான கொண்டாட்டங்கள் இருக்கு, குடும்பத்தோடு வாங்கன்னு அழைப்பு. உண்மையைச் சொன்னா இந்த ஏரியா கொஞ்சம் சுமார். வீடுகள் எல்லாம் நகரின் மற்ற பகுதிகளைவிட மலிவு. உள்ளூர் சிறைச்சாலை இங்கேதான் இருந்துச்சு(!!) நிலநடுக்கத்தால் நகரின் மையமும் அதைச்சுற்றி இருந்த பகுதிகளும், முக்கியமா கிழக்குப்பகுதியும் வடகிழக்கும் இனி வசிக்க முடியாத நிலைக்கு மோசமாப் போயிட்டதால் அடிச்சது யோகம் இந்தப் பகுதிக்கு! இப்போ அங்கே முளைச்சுவரும் கட்டிடங்களையும் பழைய வீடுகள் எல்லாம் போய் புதுப்பொலிவோடு வந்துக்கிட்டு இருக்கும் வீடுகளையும் பார்க்கும்போது சட்ன்னு புரிஞ்சுபோகும்! எப்படி இருந்த நீ இப்படி அழகா ஆயிட்டேயே!!!!பெரிய கார்பார்க் வசதிகளோடு அமைச்சுருக்கும் ஸ்டேடிய வளாகத்துக்குள்ளே நுழையும் வாசலில் இது ஸ்மோக் ஃப்ரீ ஏரியான்னு போட்டுருந்தாங்க. ரொம்ப நல்ல விஷயம். அங்கேயே ஒரு கூட்டம் என்னவோ எழுதிக்கொடுப்பதும் பதிலுக்கு ஒரு பொதி வாங்குவதுமா இருக்கு. அஞ்சு வயசுக்குட்பட்டவர்களுக்கும் அறுபத்தியஞ்சு வயசுக்கு மேற்பட்டவர்களுக்கும் டார்ச் லைட்டும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவும் தர்றாங்க(ளாம்) ரெண்டு கேட்டகிரியிலும் நமக்கு ச்சான்ஸே இல்லை:(


நாலு படி இறங்கி ஸ்டேண்டுக்குப் பின்பக்கமா இருக்கும் வழியில் போகணும். இடப்பக்கம் சிறுசுகளுக்கும் இளசுகளுக்கும் ஸ்கேட்டிங் போர்டுகள், ஷூக்கள் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஓடிஆடி முடிச்சுட்டுத் திருப்பிக் கொடுத்துடணும். பொழுதுபோக்குதான். வலப்புறம் முழுசும் பளபளன்னு மினுங்கும் கழிப்பறைக் கட்டிடங்கள் வரிசை. வெல் டன்.திடலுக்குள் போக இவ்ளோ பெரிய க்யூ வரிசையான்னு ஒரு விநாடி அசந்தேன். பஞ்சு மிட்டாய் கொடுக்கறாங்களாம். போயிட்டுப்போகுது. திடலில் நாலுபக்கமும் இருக்கைகளோடு ஸ்டேண்டு. நமக்கு வலதும் இடதுமா மேற்கூரையுடன் அமர்க்களமா இருக்கு. நமக்கு முன்னும் பின்னும் மேற்கூரை இல்லாத மொட்டை. அதிலும் ஒரு பக்கம் பக்காவா நாற்காலிகள் போட்ட வசதி. எதிர்ப்பக்கம் வரிசையா பெஞ்சு. நாலுவரிசை உள்ள கேலரி. அதுக்கு பின்பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு கண்டெய்னர்கள்மேல் ஏற்றி நிக்கவச்ச பிரமாண்டமான ஸ்க்ரீன்.விளையாட்டு நடக்கும்போது நடப்பதைக் காட்டுவாங்க. இப்போ 100 நாளில் கட்டி முடிச்ச இந்த ஸ்டேடியத்தை எப்படிக் கட்டுனாங்கன்னு படம்புடிச்சுக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. நல்ல கட்டுமானம். ஏகப்பட்ட ஸ்டீல் கம்பங்கள் வச்சுப் பாதுகாப்பாக் கட்டி இருக்காங்க. இங்கே போட்டுருக்கும் விளக்குகள் எல்லாம் டனேடின் என்ற ஊர்க்காரவுக கொடுத்த தானம். அவுங்க ஊர் ஸ்டேடியத்தை அப்க்ரேடு செஞ்சப்ப வேணாமுன்னு கழிச்சுக்கட்டுனதை நாங்க சந்தோஷமா வாங்கிக்கிட்டோம்.

லங்காஸ்டர் பார்க் ஸ்டேடியத்தில் ஸ்டாண்டுகளும் இருக்கைகள் இருக்கும் அமைப்புகளும் பழுதில்லாம இன்னும் ஜோராத்தான் இருக்குன்னாலும் விளையாடும் புல்வெளி நிலமெல்லாம் லிக்யூஃபேக்‌ஷன் என்ற காரணத்தால் புதைமணலா மாறிப்போச்சு. திடீர்திடீர்ன்னு நிலத்தடி நீர் கொப்புளிச்சு பொங்குது:(. அதுலே நடக்கவே பயமா இருக்குன்னா.... அப்புறம் எங்கே நின்னு பந்தடிப்பாங்க....... ப்ச்............
திடலின் புல்வெளியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குன்னு கம்ப்ரெஸ்ஸர் வச்சு காத்து அடிச்சு நிறைச்சு சறுக்குமரம், ஜம்ப்பிங் காஸல்ன்னு மூணு. இதுக்குத்தான் பெரிய வரிசை. புள்ளைங்க அதைப்பார்த்தே தரையில் குதிச்சுக்கிட்டுக் கிடக்குதுங்க.
 சின்னச்சின்ன விஷயங்களில், குழந்தைகளை ஆனந்தப்படுத்திடலாம்
 இல்லே!ஏ எம் ஐக்காரங்க தண்ணீர்பந்தல் வச்சுருந்தாங்க. அரை லிட்டர்.
இந்தப்பக்கம் குதிரை வர்றதுக்கான கோட்டை வாசல். பழைய ஆடம்பரம் இல்லைதான். இடத்துக்குத் தக்கதா சின்ன வாசல். க்ரவுண்டுமே சின்னதாத்தான் இருக்கு. கோல் போஸ்ட் நட்டு அதுலே பிள்ளைகள் கிக் பயிற்சி செஞ்சு படிக்குதுங்க. காலரி ஸ்டேண்டுக்கும் இதுக்கும் நடுவில் இடைவெளி வழக்கமான அளவில் இல்லை விளையாடும்போது உதைச்சு அனுப்பும் பந்து கோல் போஸ்டைக் கடந்து பார்வையாளர் மேலே விழுந்துட்டா?

 ஹைய்யோ ,,,,கூல் அது ஃபன் என்று மகள் சொல்றாள்! இந்தியாவில் க்ரிக்கெட் பந்து ஒரு சின்னப்பொண் மேலே வந்து விழுந்து அடிபட்டுருச்சுன்னேன். . 'ஓ' என்றாள்.


ஸ்டில்ட் வாக்கர், ஒத்தைச்சக்கர சைக்கிளில் வேடிக்கை காட்டும் கோமாளி, ஸ்டில்ட் தேவதைன்னு சிலர்!

ஊருலே பாதிப்பேர் இன்னிக்கு இங்கேதான்! எங்களுக்கும் போக ஒரு இடம் வேணுமுல்லே?

20 comments:

said...

ஹூம், கொடுத்து வச்சவங்க. நாங்க பார்த்து பெருமூச்சுதான் விட முடியும்.

said...

அழகா கமெண்டரி கொடுத்திருக்கீங்க. பாராட்டுகள் டீச்சர். தல வரலாறு மாதிரி கள வரலாறும் மிகவும் சுவாரசியமா இருக்கு. இவ்வளவு பக்கமா இருக்கே, பந்து பார்வையாளர் மேலே பட்டுடாதான்னு யோசிச்சிட்டிருக்கும்போதே அடுத்ததா உங்களுடைய கேள்வி பார்த்து ஆச்சரியம். தண்ணீர்ப்பந்தல்... இன்னொரு வியப்பு. (என்னவொரு பொருத்தமான பெயர்)

அப்புறம்... விளையாட்டு எப்படியிருந்தது? நல்லா எஞ்சாய் பண்ணினீங்களா?

said...

அருமையான தகவல்கள் மேடம். கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள் அருமை.

said...

100 நாள்ல கட்டுன ஸ்டேடியமா.. அருமையாயிருக்கே..

விளையாட்டையும் நல்லா எஞ்சாய் செஞ்சுருப்பீங்கதானே..

said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

said...

Article and photoes are very good.

said...

Lovely pictures and narration. Thanks

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நம்மூர்களில் கூட அரசு ஒதுக்கும் நிதியில் ஒரு அம்பது சதவிகிதம் அததுக்கான கட்டிட வேலைகளில் ஒதுக்கினால் பிரமாதமா வரும். ஆனால் ........... அதுலே 98 சதம் தின்னுடறாங்களே:(

said...

வாங்க கீதமஞ்சரி.

ஜூன் முதல்தேதிதான் இங்கே அஃபிஸியல் விண்ட்டர். அப்போதான் ஆடத் துவங்குவாங்க. மகிழ்ச்சியோடு நிலம் அப்போ ஆடாம இருக்கணும்!

அன்னிக்கே எந்தெந்தநாள் கேம் என்று ப்ளானர் போஸ்ட்டர் எல்லாம் கொடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க. நாங்க அதையெல்லாம் வாங்கிக்கலை:(

said...

வாங்க ராம்வி.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நல்லாதான் கட்டி இருக்காங்க. மே பீ 2% ஈட்டன்:-))))

ஸ்டேடியம் வார்மிங் டே அன்னிக்கு கேம் இல்லை. ஆனால் எங்க க்ருஸேடர்ஸ் 'வீரர்கள்' வந்து மக்களோடு கொண்டாட்டத்துலே கலந்துக்குவாங்க. விழா மாலை 5 வரை இருக்குன்றதால் நாலுமணி போல வருவாங்களா இருக்கும்.

அதுக்கெல்லாம் நாம் காத்திருக்கலையாக்கும்.

said...

வாங்க வலைஞன்.

அடடா..... இப்படி ஒன்னு இருக்கா?

இணைச்சுருவோம்!!!!

said...

வாங்க மோகன் குமார்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

ரசிப்புக்கு நன்றி.

நாட்டு நடப்பைச் சொல்லியாகணும் என்ற கடமைப்பா இது:-)))))

said...

இந்த அழகான பூவுலகை என்ன செய்யபோறோம்? அழிக்கப்போறோமா..... இல்லை நம் சந்ததிகளுக்கு விட்டுவைக்கப் போறோமா? த்சு த்சு த்சு த்சு...

ரொம்ப திகிலாத்தான் கிடக்கு ....

said...

இந்தத்ட களம் ஆடாமல் நல்லா இருக்கணும்.படங்களும் குழந்தைகளும் அழகு.சூப்பர்.

said...

அட! வாழ்த்திடுவோம். விரைந்து முளைத்துவிட்டதே.

ஸ்ரேடியம் அழகாக இருக்கின்றது.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரொம்பச் சரி.

நினைத்தால் திகிலேதான்!!!!

said...

வாங்க வல்லி.

ஆட்டத்துக்கு மட்டும் கேரண்டீ உண்டு.

ஆடும் களத்துக்கு கேரண்டீ இல்லை:(

said...

வாங்க மாதேவி.

அங்கே நடந்த முதல் கேமுக்கு மகள் போய் வந்தாள். லைட்ஸ் எல்லாம் பிரமாதமாம்.

பார்வையாளர்களுக்கு ஐ லவ் கிறைஸ்ட்சரச் பேட்ஜ் மற்றும் சில அன்பளிப்புகள் எல்லாம் கொடுத்து அசத்திட்டாங்களாம்.

கடைசியில் 'வாணவேடிக்கை' 'அமர்க்களமாம்.

எல்லாத்தையும் அவளும் க்ளிக் செஞ்சு கொண்டுவந்து காமிச்சாள்.

எப்படியோ நல்லா இருந்தால் சரி.