Friday, June 26, 2009

கன்யாகுமரியில் கடைசிநாள்.....(2009 பயணம்: பகுதி 36)

இன்றைக்கும் ஏமாத்தத்தான் போறானா இல்லை ஒழுங்கா வருவானா என்ற 'கவலை'யோடுதான் கண்ணைத் திறந்தேன். அதே கவலையோடு ஒரு ஒற்றைப் பறவையின் தேடலும் இருந்துச்சோ? வந்தே வந்துட்டான்! சுற்றுப்புறம் அத்தனையும் க்ளிக்கி முடிச்சுக் காலை உணவுக்குப் பின் அம்மனை நோக்கிப்போனோம். தரிசனம் ஆச்சு. கோவில்மண்டபத்துக் கடையொன்றில் கம்பீரமாய் நிற்கும் கேசவன், நிலவிளக்கை ஏந்திவரும் ஷோபனா(அந்தப் பொண்ணைப் பார்த்ததும் எனெக்கென்னவோ ஷோபனாவின் சாயல்தான் முகத்தில் தென்பட்டுச்சு)வைக் கவனிச்சு, கேசவனைமட்டும் வாங்கினேன். இந்தமாதிரி சமயங்களில் கோபாலின் கண்களைமட்டும் கவனமாத் தவிர்த்துருவேன். நோ ஐ காண்டாக்ட்:-))))

இன்னும் ரயில் டிக்கெட் எந்த கதியில் இருக்குன்னே தெரியலை. ஹொட்டேலில் கணினி இணைப்பைக் கேட்டுவாங்கி அதுலே தேடிக்கிட்டு இருந்தார் கோபால். நானோ வரவேற்புப் பகுதியில் இருந்த புள்ளையார் கலெக்ஷன்களை நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அங்கே வேலைசெய்யும் பசங்களோடதாம். அருமையா இருந்துச்சு.
வெளியே பாறைகளுக்குப் படகுப் போக்குவரத்து ஜரூரா நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளை அன்னம்போல் இருக்கும் தேவாலயத்தைப் பார்க்கக் கிளம்பினோம். சென்னை போல அடாவடியாக இல்லாமல் ஆட்டோக்காரர் இருபது ரூபாய்தான் கேட்டார். எங்களை இறக்கிவிட்ட பிறகுத் திரும்பிப்போகாமல் காத்திருப்பதாகவும் சொன்னார். வெயிட்டிங் காசு வேணாமாம். எங்களுக்கு அங்கிருந்து திரும்பிவர அந்த இடத்தில் ஆட்டோ கிடைக்காதாம். அட! இவ்வளோ கரிசனமா? பேஷ் பேஷ்.
ரெண்டுபக்கமும் சின்னக் கூம்புக் கோபுரமும் நடுவில் ரொம்ப உயரமான கோபுரமுமாய் கம்பீரமா நிற்கும் கோவிலைப் பார்ப்பதே ஒரு பரவசம், நடுக்கோபுரம் 153 அடி உயரமாம். அதன்மேலே இருக்கும் சிலுவை, சொக்கத் தங்கமாம். கோதிக் ஸ்டைலில் கட்டி இருக்காங்க. கத்தோலிக்கர்கள் கையில் வச்சு ஜெபிக்கும் ஜெபமாலையில் இருக்கும் மணிகள் எண்ணிக்கையில் இந்த ஆலய கோபுரங்களையும் நிர்மாணிச்சு இருக்காங்களாம். இது எனக்குப் புதுச் செய்தியா இருந்துச்சு. கோவிலுக்கு வயசு நூறு.

மாதாகோவிலில் உள்ளெ நுழைஞ்சால் வித்தியாசமா 'ஹோ'ன்னு இருக்கேன்னு கவனிச்சதில் புரிபட்டுருச்சு, அங்கே பெஞ்சு வரிசைகள் ஒன்னும் இல்லை. கிறிஸ்துவமதக் கோவில்களில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே இந்த பெஞ்சுதான். இந்துக் கோவில்களில் தரையில் உக்காந்து பூஜை பார்ப்பது கஷ்டம். அதுவும் என்னைப்போல முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ரொம்பநேரம் கால்மடக்கி இருக்க முடியாது. நேரம் ஆக ஆக கடவுள் மேல் உள்ள பக்தி போய், எப்படா இந்தப் பூஜை முடியுமுன்னு ஆகிரும். மனம் லயிச்சு வழிபாடு நடத்தணுமுன்னா உடல் நோகக்கூடாது. இதுதானே நோகாமல் நோம்பு கும்புடறது? பேசாம நானே ஒரு கல்ட் ஆரம்பிச்சு பெஞ்சுலே உக்கார்ந்து பூஜை செய்யலாம் என்ற வகையை அறிமுகப்படுத்திறலாமா? இங்கேதான் வகைவகையான சாமியார் & சாமியாரிணிகள் இருக்காங்களே, நம்மதும் 'க்ளிக்' ஆயிருச்சுன்னா எங்கியோ போயிறலாம்!!! வாரப்பத்திரிக்கைகள் குமுதம் வகையறாக்களை ஒருதரம் புரட்டினாலே விதவிதமான 'கடவுள்கள்' விளம்பரம் கொடுத்திருப்பது தெரியும். நம்ம விளம்பரமும் வரணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்குங்கப்பா. பதிவர்களுக்கு முன்னுரிமையும் கூடவே இலவச தரிசனமும்:-))))

அப்புறம் விசாரிச்சதுலே இங்கே இருக்கும் மீனவர் குப்பத்து மக்கள்தான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வர்றவங்களாம். அதான் பெஞ்சுகிஞ்சு ஒன்னும் வேணாமுன்னு இருந்துட்டாங்களாம். (ஆனாலும் இது அநியாயம்)
ஆல்டரில் மேரியம்மா புடவை கட்டிக்கிட்டு குழந்தை ஏசுவைக் கையில் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கீழே அடுத்த படியில் சிலுவையில் தொங்கும் ஏசுபிரான். ஆல்டர் அருமையா இருக்கு. ரெண்டுநிமிஷம் நம்ம எல்லாருக்காகவும் பிரார்த்தனை செஞ்சேன். ( சாமியைப் பார்த்ததும் அது கொடு, இது கொடுன்னு யாசிக்கும் வழக்கத்தை நிறுத்தமுடியலை. குழந்தையைலிருந்தே வளர்ப்பு அப்படி. 'நல்ல புத்தியைக் கொடு'ன்னு சொல்ல ஆரம்பிச்சுவச்ச பாட்டியைத்தான் சொல்லணும்)
கர்ப்பக்கிரகத்தின் ரெண்டுபக்கமும் இருக்கும் சந்நிதிகளில் ஒன்றில் ஏசுநாதரும், அடுத்ததில் குழந்தை ஏசுவைத் தூக்கி வச்சுருக்கும் ஜோஸஃப் (அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்டோஃபராவும் இருக்கலாமோ? ஆனா அவர் குழந்தையைத் தோளில் தூக்கிச் சுமப்பாரில்லையா?) சிலைகளும்.
ஆலயத்தில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்குது.


வெளியே ஆலயமுகப்புக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உசரமான தூண்கள்போல ஒரு ஸ்தம்பம். கொடிமரமுன்னு வச்சுக்கலாமா?
இடதுபக்கம் ஒரு திறந்தவெளி அரங்கம்.அலங்கார அன்னை கலை அரங்கம். அடடா...சர்ச்சோட பெயர் சொல்லலையே...Church of Our Lady of Ransom.

உள்ளேயும் சரி, வெளியே மைதானத்திலும் சரி அழகான அமைதியான மனநிறைவான கட்டிட அமைப்புகள். கோவில் இருக்கும் தெருவும் ரெண்டுபக்கமும் மண்தரையாக இருந்தாலும் படு சுத்தமா இருக்கு. நமக்காகக் காத்து நின்ன ஆட்டோவில் ஏறினோம். மெயின் ரோடுக்கு வந்தோம். அங்கேயே ஒரு சிவன் கோயில் இருக்கு. குகநாதர் கோவில்.
அஞ்சு நிமிசம் பிந்திப்போச்சு(-: கோவிலை மூடிட்டாங்க.அறைக்குத் திரும்புனதும் அயினிச் சக்க கூப்புட்டது. லேசா அமுக்குனதும் அப்படியே பிளந்து சுளைகள் தெரிஞ்சது. ஹைய்யோ.... அப்படியே மினியிலும் மினிப் பலாச்சுளை. சதைப்பற்றெல்லாம் இல்லை. இத்துனூண்டு சுளையிலே முக்கால்வாசி கொட்டை! பகல் சாப்பாட்டுக்குக் கீழே ரெஸ்டாரண்டுக்குப் போனோம். தைரியமா எனக்கும் ஒரு சாப்பாட்டுத் தட்டை வாங்கிக்கிட்டேன். அங்கேயே ராத்திரி சாப்பாடு வாங்கிக் கொண்டுபோக ஏற்பாடு இருக்கான்ன்னு விசாரிச்சதில் நாம் கிளம்பும்போது சாப்பாட்டைத் தயாரிச்சுத் தரேன்னு சொல்லிட்டாங்க. ரயில் பயணத்துலே கண்ட இடத்தில் வாங்க வேணாமுன்னுதான்.
அஞ்சரைக்கு வண்டி. நாலுமணிக்குச் சாப்பாடு வந்துச்சு. ரொம்ப அழகாப் பார்ஸல் செஞ்சக் கட்டுச்சோறு மூட்டை. இப்போதைக்குக் கடைசியா அய்யனைக் க்ளிக்கி, போய்வரோமுன்னு சொல்லிக் கீழே வரவேற்புக்கு வந்தால் அரவிந்தன் அன்றைய மலர் அலங்காரத்தைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.அவரோட கலை உணர்வைப் பாராட்டுனதும் சின்ன வெட்கம் முகத்தில் வந்துச்சு. நல்ல பையர். நல்லா இருக்கட்டும்.
அம்பது ரூபா கொடுத்து ஒரு டாக்ஸி பிடிச்சு ரயில் நிலையம் போனோம். இந்தக் கட்டிடமே ரொம்ப அழகா இருக்கு. நாட்டின் கடைசிக்கோடி என்றதால் நெடுக்காக நிக்கும் ரயில் பாதை. இன்னும் நமக்கு இடம் இருக்கா இல்லையான்னே தெரியலை. விசாரிச்சதில் ' ரயில் பெட்டியில் ஒட்டிட்டோம். போய்ப் பாருங்க'ன்னாங்க.

என்னங்க, இவ்வளோ நீளமான ரயில்? நாம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கோம். சென்னையே வந்துருமோ? எஞ்சினுக்கு ரெண்டாவது பெட்டியில் நமக்கு இடம். பதினைஞ்சு வருசம் கழிச்சு முதல்முறையா ரயிலில் தூங்கப் போறோம். உள்ளே இருட்டா, அழுக்கு நீலக்கலரில் ஒரு உள் அமைப்பு. மேலேயும் கீழேயுமா ரெண்டடுக்கு. ஜன்னல்வழியா ஒன்னுமே தெரியக்கூடாதுன்னே அழுக்கை அப்படியே விட்டுவச்சுருக்காங்க. குறையே சொல்றேனேன்னு யாரும் வருத்தப் படாதீங்க. இருக்கும் லக்ஷணத்தைச் சொல்லியாகணும் இல்லையா?

கோவில்பட்டி வந்தால் கடலைமிட்டாய் வாங்கிக்கணுமுன்னு காத்திருந்தேன். ஆனால் கோயில்பட்டியெல்லாம் கடந்துபோய் ரொம்ப நேரமாச்சாமே!!! அக்கம்பக்கம் ஆட்கள் சாப்பிடும்போது நாங்களும் சாப்பிட்டு முடிச்சோம். ஆச்சரியமா அதுவரைக்கும் இளம்சூடாவே இருந்துச்சு சாப்பாடு. எண்ணெயில்லாச் சப்பாத்தி, வெஜிடபிள் கறி, ஃப்ரைடு ரைஸ். ஹொட்டேல் ஸீ வ்யூ கவனிப்பு நல்லாவே இருக்கு. இங்கே நம்மூரில் இருந்து போகும் வெள்ளைக்கார நண்பர்களுக்குத் தாராளமாப் பரிந்துரைக்கலாம்.

கருநீலக் கர்ட்டனுக்குள் எல்லாரும் முடங்கியாச்சு. தனித்தனிக் கூடுகளும் விதவிதமான குறட்டை ஒலிகளும். ஒரு சத்தம் அடங்குனா இன்னொண்ணு ஆரம்பிக்குது. ஏதோ டைம்டேபிள் போட்டுவச்ச மாதிரி:-) எழும்பூர் வருமுன் எழுந்துட்டோம். கூட்டிட்டுப்போக யாரும் வரவேணாம். நாங்களே வீட்டுக்கு வந்துருவோமுன்னு வீராப்பாச் சொல்லிவச்சுருந்தோம். டாக்சியைத் தேடுனா கிடைக்கலை. ஆட்டோகளின் அணிவகுப்புதான். பயணிகள் கவனத்துக்கு: எக்மோர் ஸ்டேஷனில் ப்ரீபெய்ட் டாக்சிகள் சர்வீஸ் கிடையாது.

வழிநெடுக எக்கச்சக்கமான தோரணங்களும் அலங்காரங்களும். போஸ்டர்களும் போலீஸுமா..... நமக்கு எதுக்கு இப்படியெல்லாம் வரவேற்பு? ஓசைப்படாம இருக்கலாமுன்னா விடமாட்டாங்களே......ஒருவேளை, யாரோ ஆட்டோ அனுப்பறாங்கன்னு.......கத்திப்பாரா தாண்டிப் போரூர் சாலையில் கூடுதல் அமர்க்களம். ஞாயித்துக்கிழமையிலே வேலைக்கு வந்த சடைவு காவல்துறையினர் முகங்களில். கொத்துக்கொத்தாக் கரைவேட்டிகள் அடையாள பேனரைப் பிடிச்சுக்கிட்டுச் சாலையோரமா நிக்கறாங்க. கண்ணுலேத் தட்டுப்பட்டாகணும். இல்லேன்னா வம்பு. நாளைக்கு எவனாவது போட்டுக் கொடுத்துட்டா? ராட்சஸ டெய்ஸிப்பூ போல டிஸைனில் கொடிகளால் அலங்காரம், நடுவிலே சம்பந்தப்பட்ட முக்கியஸ்தரின் முகம். இந்த டிசைனையும் இப்போதான் முதல்முறையாப் பார்க்கிறேன். சமீபத்திய வரவோ? இதுலெல்லாம் மட்டும் நம்மது அசுர வளர்ச்சி. என்ன விஷயமாம்? பிரமாதமா ஒன்னுமில்லே.... முதல்வர் ஆசுபத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு(??) போறாராம். ஹூம்.....உண்மையிலே 'நாம் போகவேண்டிய தூரம் ரொம்ப' என்று புரிஞ்சது(-:

"பனிரெண்டுநாள் காக்காபோல் சுத்தியாச்சு. இனி ரெண்டுவாரம் கம்ப்ளீட் ரெஸ்ட்" கோபால் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பா வந்துச்சு. அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?

தொடரும்.....:-))))

25 comments:

said...

பயணக்கட்டுரை ரொம்பவும் அருமையா இருக்கு

said...

ஆகா! நம்ம ஊருக்கு போயிருந்தீங்களா?
//அப்புறம் விசாரிச்சதுலே இங்கே இருக்கும் மீனவர் குப்பத்து மக்கள்தான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வர்றவங்களாம். அதான் பெஞ்சுகிஞ்சு ஒன்னும் வேணாமுன்னு இருந்துட்டாங்களாம். (ஆனாலும் இது அநியாயம்)//

அப்படியெல்லாம் இல்லை அக்கா ..பொதுவாக நகரங்களில் இருக்கும் ஆலயங்களில் தான் இருக்கைகள் இருக்கும் .கன்னியாகுமரி நகரம் இல்லையா என கேட்கக்கூடாது ..கன்னியாகுமரி சுற்றுலா தலம் ஆவதற்கு முன் வெறும் மீனவ கிராமம் தான் . குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களே இருப்பதால் இருக்கைகள் வைத்தால் சிரமம் தான் ..உதாரணமாக கன்னியாகுமரி அருகில் இருக்கும் எங்கள் மீனவ கிராமத்தில் மக்கள் தொகை சுமார் 6000 . எல்லோரும் கத்தோலிக்க மீனவர்கள் தான் ..ஞாயிறு திருப்பலி-க்கு குறைந்தது 5000 மக்களாவது செல்வார்கள் . ஞாயிறு இரண்டு திருப்பலிகள் .எனவே ஒரு திருப்பலிக்கு 2500 வருவார்கள் . இருக்கைகள் இல்லாத போதே நிரம்பி வழியும் ..இதில் இருக்கைகள் இருந்தால் 500 பேருக்கு மேல் உள்ளே இருக்க முடியுமா ? அது தான் இருக்கைகள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் ..நாகர்கோவில் போன்ற நகர ஆலயங்களில் ஞாயிறு அன்று 4 அல்லது 5 திருப்பலிகள் இருக்கும் .எனவே சமாளிக்கலாம் .மீனவர்கள் மட்டுமே உள்ள ஊரில்(கன்னியாகுமரி சுற்றுலா தலம் ஆன பிறகு மற்ற மக்களும் அங்கு வந்து விட்டார்கள் ,தவிர மற்ற மீனவ கிராமங்களில் மீனவர்கள் மட்டும் தான் இன்றளவும்) ,மீனவர்கள் என்பதால் பெஞ்சு தேவையில்லை என கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அப்புறம் அது என்ன மீனவர் என்றாலே குப்பம் ? குமரி மாவட்டத்திலுள்ள பிற மீனவ கிராமங்களுக்கும் போய் பார்த்திருந்தால் தெரியும் ..6000 மக்கள் வசிக்கும் எங்கள் மீனவ கிராமத்தில் ஒரு ஓலைக்குடிசை கூட கிடையாது.

said...

//அடுத்ததில் குழந்தை ஏசுவைத் தூக்கி வச்சுருக்கும் ஜோஸஃப் (அப்படித்தான் நினைக்கிறேன்//

ஆம்..புனித ஜோசப் தான்.

said...

கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?

:))))))))

said...

கட்டுரையும், படங்களும் அருமை. முக்கியமா புள்ளையார், மாதாகோயில் உள்படங்கள்.
//கோபால் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பா வந்துச்சு. அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?//
அதே!... அதே!..:-))))
ரெஸ்ட் என்பதே செஞ்சுகிட்டிருக்கற வேலைய விட்டுட்டு, இன்னொரு வேலைய செய்றதுதானே:-)))

said...

வாங்க ஞானசேகரன்.

பயனுள்ளதா இருந்தால் சரி. இல்லையா?

வருகைக்கு நன்றி

said...

வாங்க ஜோ தம்பி.
ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!

நலமா? குழந்தை எப்படி இருக்கார்?

பெஞ்சு போட்டால் இடம் அடைஞ்சுரும் என்பது ரொம்பச் சரிதான்.

மீனவர் என்பதால் பெஞ்சு இல்லை என்றதை நானும் அநியாயம் என்றே குறிப்பிட்டு இருக்கேன் பாருங்க.

ஆமாம்.... குப்பம் என்றால் நல்ல பொருளில் வராதா? கிராமம், குப்பம் எல்லாம் ஒரே அர்த்தத்தில் புழங்கப்படலையா? மக்கள் கூடி வாழும் இடங்கள் தானே குப்பம்?

காலப்போக்கில் நல்ல சொற்களுக்கும் வேற அர்த்தம் வந்துருச்சு(-:

அங்கத்து கிராமங்களில் ஓலைக்குடிசை இல்லை என்பது எனக்குப் புதுச் செய்தி. ஆனாலும் குடிசைக்கும் ஒரு அழகு இருக்கத்தானே செய்யுது? இப்பெல்லாம் ரொம்பச் செல்வந்தர்களுக்கு குடிசை அமைப்பைத் தங்கள் தோட்டவீடுகளில் வச்சுக்கறது ஒரு ஃபேஷனா ஆகிருச்சு:-)


அங்கே ஆலயத்தைச் சுற்றிலும் மட்டுமில்லைங்க, ஊரே பளிச்சுன்னு சுத்தமா இருக்கு. எந்த வீடா இருந்தால் என்ன? சுத்தமா இருக்கணும் என்பதுதானே முக்கியம்.

எனக்குக் குடிசை ரொம்பப் பிடிக்கும்.

அப்போ ஒரு சந்நிதியில் அப்பாவும் குழந்தையைத் தூக்கிவச்சுருக்கார். ஆஹா.....

இன்னொரு சந்நிதியில் ஏசு நாதரே அங்கியணிஞ்சு நிற்கிறார்.

வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றிப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அதென்னமோ இவர் ரெஸ்ட்ன்னு சொன்னதும் ஒரு நாள்கூட ரெஸ்ட் எடுக்க முடியாமத்தான் அமையும்:-))))

said...

வாங்க ஐம்கூல்.

உண்மையைச் சொன்னால் பயணங்களில் 'ரெஸ்ட்' கிடைப்பதே இல்லை. அப்போதான் கூடுதலா பிஸியா இருப்போம்:-)

said...

டீச்சர் முட்டி சாமியார் மாதிரி பென்ச் சாமியாரினியா? பேஷ் பேஷ்!!!

பலாப்பழம் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு...இது மட்டும் சாப்பிட குடுத்துவைக்கலை எனக்கு.

கன்யாகுமரி பார்க்க ரொம்பவே ஆவலை தூண்டுது உங்க தொடர்.

said...

யப்பா..எப்படியே ரயில் சென்னை வந்துட்டிங்க..இனி எங்க ஏரியா ! ;))

அம்மாவையும் பிள்ளையும் புகைப்படம் அருமை ;)

\\அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?
\\

;-)))))

said...

வாங்க சிந்து.

'பெஞ்சு சாமியாரிணி'. க்ளிக் ஆனா ஆச்சரியமே இல்லை. முக்கால்வாசி மக்களுக்கு மூட்டு வலி இருக்கு!

வாய்ப்புக் கிடைச்சால் விட்டுறாதீங்க குமரிக்கு போவதை.

said...

வாங்க கோபி.

உங்க ஏரியாவுலே முதல்லே கண்ணுலே படுவது.......

வேணாம். விடுங்க. இங்கே இப்படித்தான் என்ற மனப்பக்குவம் வரணுமுன்னு வேண்டிக்கலாம்(-:

ஆனா ....ஒன்னு. கார் ஓட்டும் நபர்களுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியலை என்றது வருத்தம்தான்.

இலக்கியம் எல்லாம் படிக்கவேணாம். ஒரு நாலைஞ்சு சொற்கள்.

உதாரணம்: STOP=????????

said...

கன்யாகுமரி,கிராமம்,ஓலைக் குடிசை, புனித சூசையப்பர்,யேசு எல்லாரையும் தரிசனம் செய்து வச்சிருக்கிங்க.

கட்டுரை,அதற்கு வர பின்னூட்டம் எல்லாமே விவரமா இருக்கறதனால

நிறையத் தெரிஞ்சுக்கறோம்.நன்னிங்கோவ்.

said...

ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு டீச்சர்..

எவ்வளவு அழகா செலவில்லாம தமிழ்நாட்ட சுத்தி காமிச்சுட்டீங்க..

நன்றி டீச்சர்..

said...

அந்த மாதா கோவில் அப்படியே வேளாங்கன்னி கோவிலின் கார்பன் காப்பி மாதிரி இருக்கு.
கச்ச - பழம் இங்கும்(சிங்கையில்) கிடைக்குது,ஒருமுறை ஆர்வம் மற்றும் டேஸ்ட் ஆர்வக்கோளாரில் பல சுளைகள் சாப்பிட்டு அன்று இரவு அவஸ்தைப்பட்டேன்.
பையர் - மரியாதை?
இரவில் ரயிலில் வரும் குறட்டையை வைத்தே ஒரு நாவலே எழுதலாம்.

said...

வாங்க வல்லி.

பின்னூட்டங்களில் எனக்கும் நிறைய விஷயங்கள் தெரியவந்தன. ஐம்கூல் போற போக்கில் கூலா எல்லாம் சொல்லிட்டுப் போனாங்க:-)

said...

வாங்க தீப்பெட்டி.

இது சும்மா ட்ரெய்லர்தான். உண்மை அனுபவமுன்னா நீங்களே நேரடியாப் பார்க்கணும்.
ஒவ்வொருவரும் உணரும் விதமும் தனித்தனிதான்.

லட்டு இனிக்குமுன்னு நான் சொன்னால் ஆச்சா? நீங்களும் தின்னு பார்க்கணுமுல்லெ:-)))))

said...

வாங்க குமார்.

இதே போல இருக்கும் ஆலயங்கள் இன்னும்கூட நிறைய இருக்கு. சிங்கையிலும் சிம்லிம் ஸ்கொயர் பகுதியில் ஒரு லூர்து மாதா சர்ச் இருக்கே.

தோளுக்கு மேல் உசந்த பையனுக்கு மரியாதைதான் இந்தப்'பையர்':-)

பதிவர் மௌலிக்கு நன்றி!

said...

வகுப்பை கவனிச்சு பதில் சொல்றதுதான், கவனமா படிக்கிற ஸ்டூடண்டுக்கு அடையாளம் . இல்லையா டீச்சர்:-)). ஷொட்டுக்கு நன்றி.உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.

Anonymous said...

பிள்ளையாரை இப்படி டிசைன் டிசைனா பண்ணி பாத்து மகிழ்ச்சிஅடையறமாதிரி வேறெந்தக்கடவுளையும் நாம பாத்து மகிழ்ச்சி அடையதில்லை. பிள்ளையார்கள் எந்த வடிவத்திலும் அழகோ அழகு.

said...

டீச்சர், படங்களும் செய்திகளும் அருமை.

எப்படி தான் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதுகிறீர்களோ.

said...

வாங்க சதங்கா.
அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கேப்பா.

போட்டோவைப் பார்த்ததும் கொசுவத்தி பரபரன்னுப் பத்திக்குதே:-)

said...

ஐம்கூல்,

பேசாம உங்களையே நம்ம வகுப்புக்கு லீடராப் போடலாமான்னு யோசனை.

ஏற்கெனவே (செல்ஃப்) அப்பாய்ண்டட் லீடர் வகுப்புப் பக்கமே எட்டிப்பார்க்கறதில்லை இப்பெல்லாம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

புள்ளையார் ஒரு கைப்புள்ளே. எடுப்பார் கைப்புள்ளேன்னு சொல்லவந்தேன்.
அதான் அவுங்கவுங்க மனசுபோல ஆயிரத்தெட்டு வகையில் இருக்கார்:-)