Wednesday, June 17, 2009

தண்ணிக்கு மேலே தண்ணி போகுமா? ஹைய்யோ...போகுதே.........(2009 பயணம் : பகுதி 32)

தொட்டில்லே போட்டுத் தாலாட்டுனா எப்படிச் சுகமாத் தூக்கம் வருமோ அதுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம தூக்கம் கண்ணை சுழற்றியடிக்குது. சிலுசிலுன்னு வீசும் காத்துலே வெய்யிலின் சிடுசிடுப்புக்கூட அவ்வளவா மனசுலே நிக்கலை. காரணம்? தரையில் இருந்து நூத்திப்பதினைஞ்சு அடி உயரத்துலே இல்லே நிக்கிறோம்!
தொட்டில்பாலம் போய்ப் பார்க்கலாமுன்னு அரண்மனையில் இருந்து கிளம்புனோம். கண்ணால் பார்க்கும்வரை இது என்ன.... தொட்டியா இல்லை பாலமா இல்லை கால்வாயா? என்ற குழப்பம்தான் இருந்துச்சு.

பசுமைப் பிரதேசங்களின் பசுமைச் சமாச்சாரங்களை ரசிச்சுக்கிட்டே வந்தப்ப, குறுக்கிட்டது ஒரு ஆறு. நீங்க இந்தப் பக்கம் பார்த்துக்கிட்டே அந்தப் பக்கம் வந்துருங்க. நான் அங்கேபோய்க் காரை நிறுத்தறேன்னு சொல்லி எங்களை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டார் ரமேஷ். நான் கால் வச்ச இடத்துலே தொட்டாச் சிணுங்கிச் செடிகள் படர்ந்திருக்கு. 'ஹைய்யோ.... எத்தனை நாளாச்சு இதுகளைப் பார்த்து' ன்னு கொஞ்சம் சிணுங்கவச்சுட்டு ரமேஷ் சொன்ன இந்தப் பக்கம் பார்த்தால்..... யானை!! நம்ம ஆளாச்சேன்னு மிதப்பாக் கண்ணைக் கொஞ்சம் மேயவிட்டா..... ஐயோ சிங்கம். இவ்வளவுதூரம் வந்துட்டோம்...இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? இங்கே பாருங்கடா ராசாங்களான்னு ரெண்டு க்ளிக்கிட்டு அடுத்தாப்போல இருந்த சுழல்படிக்கட்டில் ஏறினோம். நடுவாந்தரத்துலே மூணு இளைஞர்கள் உக்காந்து அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் காதலன். கூடப் படிக்கும் பொண்ணைக் காதலிக்கிறார். கேரளப்பைங்கிளி. ஆஹா.... பாரதியின் பேச்சை அப்படியே கேட்டுட்டீரேன்னு பாராட்டினோம். தெலுங்கு தெலுசான்னு கேட்டால்.....ஊஹூம் ....லேது(-: அரைக்கிணறுதான் அப்ப.
யானையும் சிங்கமும்

கிளாஸ் கட்டான்னதுக்கு இல்லையாம். ஒருமணியோட வகுப்பு முடிஞ்சுருச்சாம். நல்லாப் படிங்க. முதலில் படிப்பை முடிச்சுட்டு நல்லதா ஒரு வேலையைத் தேடிக்கிட்டாக் காதல் கைகூடுமுன்னு சொல்லி வாழ்த்தினோம். கோபால் தன்னுடைய கொசுவத்தியை ஒரு நிமிஷம் கொளுத்திவச்சுட்டாருன்னு நினைக்கிறேன். இல்லே..... பகல் சாப்பாட்டை ஸ்கிப் பண்ண மயக்கமோ என்னவோ....... எங்க ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் கோடி காமிச்சு எப்படி முப்பத்தியஞ்சு வருசத்தை ஜெயிச்சோமுன்னு சொன்னார். எனக்கே ஆச்சரியமாப் போச்சு. கல்லுளிமங்கன்..... இதுவரைக்கும் யார்கிட்டேயும் இப்படி 'லூஸ் டாக்' விட்டதேயில்லை!!!

இடுப்பில் கிண்ணம் கட்டிய ரப்பர் மரம்

உயரே வரும் வழி

சுழல்படி முடிஞ்சு நடைபாதை

நடைபாதை

மீதிப் படிகளைக் கடந்து சுழலின் முடிவுக்குப்போனால் இடப்புறமாக அழகான நடைப் பாதையொன்னு போகுது. லேசான ஏற்றம். அப்பத்தான் கவனிக்கிறேன், இது மலைப்பாதை! மலைச்சு நிக்காம மெதுமெதுவா நடந்தால் வலது பக்கம் முழுசும் இடுப்பில் கிண்ணம் கட்டி நிற்கும் ரப்பர் மரங்கள். நாம் பொதுவா வீட்டில் அலங்காரத்துக்கு வளர்க்கும் ரப்பர் மரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இலைவகையா இருக்கு. இடப்பக்கம் பாலத்துக்கான தூண்கள் அதுக்கு அந்தப் பக்கமாக் கொஞ்சம் தள்ளிச் சரிவில் அங்கங்கே சில வீடுகள். 'தேன் வேணுமா'ன்னு கேட்டாங்க அங்கே இருந்த ஒரு பெண். மலைத்தேனாம். நானும் மலைத்தேன். ரெண்டுபேர் இன்னொரு இடத்தில் துணிதுவைச்சுக்கிட்டு இருக்காங்க. பாதை முடிவில் படிக்கட்டுகள். ஏறுமிடத்துக்கு வந்தப்பப் பால் வாங்க ஒரு பாத்திரத்தைத் தூக்கிக்கிட்டு நிதானமா நடக்குது ஒரு பிஞ்சு. கூடவே அதன் அம்மா.

படி முடியும் இடம்
பால் வாங்கப் போகும் பிஞ்சு

தண்ணி போகுதா?

படியேறி மேலே வந்தால்...... அட! நிறைய சினிமாவில் இதைப் பார்த்துருக்கோமேன்னு ........ பாலத்தின்மீது நிக்கறோம். ஒரு மீட்டர் அகலத்தில் ஒரு பாதை! நமக்கு வலப்பக்கம் ஆறரை அடி அகலத்தில்
ஒரு சிமெண்டுக் கால்வாய். சலசலன்னு முழுசும் ரொம்பிப் போய்க்கிட்டு இருக்கு. நாம் அதுக்கு எதிர்நடை போட்டுக்கிட்டுப் போறோம். நீந்த அனுமதி இருந்தால் எதிர்நீச்சலே போட்டுருக்கலாம்! நல்ல ஆழம்தானாம் . ஏழடி. (அப்ப ஒரு அடி கூடுதல்னு சொல்லிக்கலாம்)
வாய்க்காலா இல்லை கால்வாயா?

துணிதுவைக்கும் பெண்களுக்கும், அங்கே இருக்கும் வீடுகளுக்கும் தண்ணி சப்ளை எப்படின்னு தெரிஞ்சது. அங்கங்கே ரப்பர் ட்யூப் போட்டு ஸைஃபன் முறையில் தண்ணி எடுத்துக்கறாங்க! பாலத்தின் மீது நடந்துக்கிட்டே கண்ணை ஓட்டுனால் சுத்திவரக் காடுகளும் தென்னைகளின் தலைகளும். கீழே நதி. நதியின் குறுக்கே சின்னதாப் பாலம். வாகனங்களும், ஆட்களுமா நடமாட்டம். பரளி ஆறாம். நாம் நடக்கும் பாலத்தின் பாதிதூரத்தில் ஒரு இளஞ்சோடி. கடலையான்னேன்....கல்யாணமாயிருச்சாம்!

கீழே ஆற்றின் ஏரியல் வியூ
கண்ணைச் சுழட்டுனாப் பச்சையோ பச்சை

எதிரே ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் மலையில் இருந்து இந்தப் பக்கம் மலைவரை இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த தண்ணீர்க் கால்வாய் கட்டிவச்சுருக்காங்க. பாலம், அதுலேயே தண்ணீர் தொட்டி. பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்துக்கு கோதையாற்றில் இருந்து தண்ணீர் வந்து சேருது. நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் கால்வாய்த் தண்ணீர் நதிக்கு அடுத்த பக்கம் இருக்கும் மலையைத் தாண்டிவந்து விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுக்குது இந்தத் தொட்டியா இருக்கும் பாலம் வழியாக!
எறும்பூறும் பாலம்????

அங்கங்கே ஆண்டவன் படைச்ச நதித் தண்ணீரை அடுத்த மாகாணத்துக்குத் தராம அணைகட்டிப் பிடிச்சுக்கிட்டு அடாவடி அடிக்கும் ஆட்கள் இதைப் பார்க்கணும். அவுங்கதான், தங்கள் எல்லையை விட்டு வெளிவந்த தண்ணிக்கே கணக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்களே. அதை வச்சு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு......இந்தமாதிரி பாலமோ தொட்டியோ கட்டக்கூட வேணாமே. தானே நதியின் போக்கிலே வரவிட்டால் போதாதா? ஹூம்.....
தொட்டிப் பாலம்

1966 வருசம் கட்டுன தொட்டிப் பாலம் இது. பிரமாண்டமான 28 ராட்சஸத்தூண்கள் கட்டி அது இந்தத் தொட்டியைத் தாங்கிக்கிட்டு இருக்கு. ஆசியாவிலேயே நீண்ட & உசரம் கூடுதலானத் தொட்டி உள்ள பாலமாக இது இருக்காம். மாத்தூர் என்ற ஊருலே கட்டி இருக்காங்க. இந்த ஊர் கன்யாகுமரி & திருவனந்தபுரம் ரெண்டுக்கும் சரிபாதி தூரத்துலே இருக்கு. அறுபது கிலோமீட்டர் எந்தப் பக்கம் போனாலும். நடு நிலமைன்னா இதுதான்:-))))

தகவல் பலகை

விளவன்கோடு, கல்குளம் பகுதிகளில் ஒரு காலத்தில் வறண்டநிலப்பகுதியா ஆனப்ப, அங்கே நீர்ப்பாசன வசதி செஞ்சா விவசாயம் கொழிச்சு நாடு நல்லாகுமுன்னு செஞ்ச ஏற்பாடு இது. யார் இதுக்கு முன்கை எடுத்ததுன்னு நினைக்கறீங்க? எல்லாம் அப்ப இருந்த முதல்வர் ஐயாதான். படிக்காத ஆனால் பண்பட்ட, நாட்டுநலனில் ஆழ்ந்த அக்கறையுள்ள மேதை நம் காமராசர்தான். (தனக்குன்னு நாலு காசு சேர்த்துவச்சுக்கத் தெரியாதத் துப்பில்லாத மனுசர். ஐயா.... போயிட்டீரே. விளம்பரம்கூடத் தேடிக்கத் தெரியாத என்ன மனுசரய்யா நீர்?)
அவரோட பதவிக்காலத்துக்குப்பிந்தான் இந்தத் திட்டம் பூர்த்தியடைஞ்சது. 1966ன்னு பார்த்த நினைவு.
சுழல்படிக்கட்டு ஒன்னு கட்டி, அங்கே குழந்தைகள் விளையாட ஒரு பூங்கா அமைச்சது எல்லாம் ஒரு மூணு வருசம் முந்திதான். செலவு பதினோரு லட்சமாம். (ஆட்டையைப் போட்டது எவ்வளவா இருக்குமுன்னு மனசு ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துச்சு)

பாலத்து முடிவுக்கு வந்தப்ப சின்னச்சின்னத் தீனிக் கடைகள். கார் பார்க்கு அங்கேதான் இருக்கு. பள்ளிக்கூடப் பசங்க சுற்றுலாவுக்குன்னு வந்து இறங்குனாங்க. அப்ப அதுதான் பாலத்துக்கு வரும் முகப்பு வழிபோல! நான் இடும்பின்னு ரமேஷுக்கு எப்படித்தான் தெரிஞ்சதோ:-)
சாம்பக்காய்/ பன்னீர்ப்பழமுன்னு சொல்லும் பழங்கள் கூறுபோட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. அயினிப் பழங்களும் இருந்துச்சு. பார்வைக்குப் பலாப்பழத்தின் மினியின் மினி!! நான் ஆசைக்கு ரெண்டே ரெண்டு வாங்கிக்கிட்டேன். முக்கால் காய். மறுநாள் முழுசாப் பழுத்துருமாம்.


அயினிச் சக்க
அயினி வாங்கலியோ அயினி...
டாரோ ( Taro)என்ற பெயரில் பஸிஃபிக் கடல் தீவுகளில் கிடைக்குது


பள்ளிக்கூடப் பசங்கள் சிலர் கையில் இருக்கும் காசுலே, தனக்குன்னு வாங்கிக்காம வீட்டுக்கு வாங்கிக்கிட்டுப் போறோமுன்னுச் சொன்னது வியப்பு. எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்துச்சு. இப்படி இருக்கும் விசாலமான மனசு எப்படி வளரவளரக் குறுகிப்போகுதுன்றது இன்னும் அதிக வியப்பே!

தொடரும்....:-)

பி.கு: மீண்டும் பயணத்தில் இருக்கின்றேன். இணைப்பு சரியில்லை. ஆனாலும் விடுவதாக இல்லை .வகுப்புக்கு வரும் கண்மணிகளுக்கு நன்றி.

29 comments:

said...

பயங்கர ஃபேமஸான மாத்தூர் தொட்டிப்பாலம் நிறைய விதவிதமான படங்கள் சூப்பரூ :))

said...

தொட்டி பாலம் நினைச்சுப்பார்த்தா சூப்பர் லொக்கேஷன் மாதிரி தெரியுது கதை பேசிக்கிட்டு உக்காந்திருக்கலாம் போல எம்பூட்டு நேரம் வேணும்னாலும்...! :)))))))

பால் வாங்கப்போகும் பிஞ்சு குழந்தை புகைப்படம் அழகு!

நம்ம ஊர்ல நிறைய இது போன்ற காட்சிகளை பார்க்கமுடியும் டவுசர் போடக்கூட தெரியாத குட்டீஸ் கையில ஒரு தூக்குவாளியை எடுத்துக்கிட்டு காலாங்கார்த்தால கிளம்பிடும்!: )))

said...

தகவல்களும் , புகை படங்களும் நல்லா இருந்தது... பேசும் பொழுது வாய்கால்ன்னு சொல்வோம், படிக்கும் பொழுது கால்வாய்ன்னு இருந்ததா ஞாபகம்

said...

உங்க கையில் படக் கருவி இருப்பது நல்லதாப் போச்சு, எல்லாத்தையும் சுட்டு சுட்டு தருகிறீர்கள். படத்தில் பலாப் பலம் மாதிரி சின்னதாக இருக்கே அதைத்தான் இங்கே துரியன் பழம் என்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

படங்களைப் பார்க்கும் போது அங்கு சென்று வரவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

said...

வாங்க ஆயில்யன்.

உண்மையாவே லொகேஷன் சூப்பர்தான்.

பிஞ்சுவயசுலேதான் பசங்க நமக்கு எல்லா உதவிக்கும் ஓடிவரும். பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சதும்..... வெளி விஷயங்கள் கத்துக்குமே:-)))

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

வாய்க்காலோ இல்லை கால்வாயோ தண்ணீர் ஓடுனாச் சரி:-)

வருகைக்கு நன்றி.

said...

படங்கள் எல்லாமே அருமை.... குறிப்பாக பெர்ஸ்பெக்டிவ்வில் எடுக்கப்பட்ட பாலம் புகைப்படங்கள்! :)

said...

வாங்க கோவியாரே.

தூரியான் பழம் இல்லைங்க இது. ஒரு பழம் ஒரு 5 செ.மீ அளவுதான் இருக்கு.

டூரியானின் மணமும் இதுக்கில்லை:-))))

said...

வாங்க வெங்கிராஜா.

நான் கெமெராக் கைநாட்டு. எப்படியோ படங்கள் நல்லா அமைஞ்சுபோச்சு:-)

நம்ம PIT வகுப்பில் சேர்ந்துதான் படிச்சுக்கிட்டு இருக்கேன் இப்போ!

said...

great travelogue.. Keep writing.. Looking fwd your review other location in KK Dist..

VS Balajee

said...

வாங்க பாலாஜி.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

நலமா?

உங்க கன்யாகுமரிப் பகுதியில்தான் சில நாட்களாச் சுத்திக்கிட்டு இருக்கேன். இந்தப் பயணக் கட்டுரைகளில் 22 பகுதியில் இருந்தே உங்க மாவட்டம்தான்.
அப்படியே நூலைப் பிடிச்சுக்கிட்டுப் பின்னாலே போய்ப் பாருங்களேன். மே மாசம்.

வருகைக்கு நன்றி.

said...

வந்துட்டேன் டீச்சர்..எல்லாமே புதுசு எனக்கு...ம்ம்ம்..நோட் பண்ணிவச்சிக்கிட்டேன்..ஒருநாள் போகனுமுல்ல அதுக்கு தான் ;)

said...

வாங்க கோபி.

கட்டாயம் நோட் பண்ணிவச்சுக்கணும். வருங்காலத்தில் கண்டிப்பாப் பயன்படும்.

அம்மாம் உசரத்துலே இருந்து வறுக்கும் கடலைக்கு வாசம் அதிகம்:-)))))

said...

அன்பு துளசி, லேட்டாயிடுச்சுப்ப்பா படிக்க.
தொட்டிப்பாலம் பர்க்க சூப்பர்.

அந்த அயினி நல்லா இருக்குமா. தேன் மாதிரி இருக்கே பார்க்க.

கோபால் கதை சொன்னாரா அவங்களுக்கு, அப்ப இன்னோரு ப்ளாகர் உருவாயிட்டார்:)

அப்படியே பசுமை கொஞ்சுதே பார்த்த இடமெல்லாம்!!

said...

தகவல்கள், புகை படங்கள், தகவல் அனைத்தும் சூப்பர். மிகுந்த தேடுதலுடனான பதிவு.

said...

வாங்க வல்லி.

இதுலே என்னப்பா லேட் கீட்டு?

நம்ம வீடு ரெண்டு ப்ளாக்கரைத் தாங்குமா?
ரிட்டையர் ஆனதும் எழுதச் சொல்லிடலாமா?

அயினிச்சுவை அப்புறம் மறுநாளில் தெரிஞ்சது.

said...

வாங்க டொக்டர்.

ரொம்ப போரடிக்கப்போகுதோன்னு பயந்துருந்தேன்.

மிகவும் நன்றி.

said...

உங்கள் பயண பதிவு ஏறக்குறைய நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தது.

//மலைத்தேனாம். நானும் மலைத்தேன்.// மிகவும் ரசித்தேன்.

said...

வாங்க நீல மலை.

புது வரவா?
நல்வரவு சொல்லிக்கறேன்.

ரசிப்புக்கு நன்றி.

said...

தொட்டிப்பாலத்துக்கு எத்தனை தடவை போனாலும் அலுக்காது .ஆனா முந்தி இருந்த த்ரில் இப்போ இல்லைன்னு தோணுது.பூங்கா, எல்லாம் சரிதான், ஆனா அழகுபடுத்தறதா சொல்லி தூணோட உயரத்த எல்லாம் மண்ணைப்போட்டு மறச்சிட்டாங்களே:-((.மூணு வருஷத்துக்கு முந்தி போன போது திக்குனு இருந்தது.ஆனா அந்த இயற்கை அழகும் காத்தும் எல்லாத்தையும் மறக்கடிச்சிரும்.
ஆகா... அயினிச்சக்க. ம்..ம்..(கொசுவத்தி)ஆனா அதை செத்த எலிய வாலப்புடிச்சு தூக்கிப்போடற மாதிரி புடிச்சிருக்கிறது நியாயமில்லை:-))).

said...

வாங்க ஐம்கூல்.

மண்ணை ரொப்பிக்கிட்டே வந்தா உசரம் மறைஞ்சுரும் என்றது ரொம்பச் சரி. கம்பீரம் குறைஞ்சுபோகுது(-:

நகநுனியால் பிடிக்கும் அளவுக்கு இலகுவா லேசா இருக்குன்னு காமிக்கத்தான் அந்த செத்த எலி போஸ்:-))))

said...

பசுமையான பயணம் மனதிற்கு இனிக்கிறது.

ரோஸ்கலரில் இருப்பது புளிப்பு சுவையுடையது இங்கு யம்பு என்பார்கள்.

said...

வாங்க மாதேவி.

ஆஹா....யம்பு.

மலேசியாவில் இந்தப் பழத்தை ரெண்டாக வெட்டிக் கொஞ்சம் உப்புத்தூளும் மிளகாய்த் தூவி விக்கறாங்க. நல்லாதான் இருக்கு.

said...

This is not that fruit which is available in Malaysia (Durian). This is Ayani Chakkai. Very tiny in size but soft &tasty. Whereas Durian is very very hard & the thorns are very sharp. We can eat durians by closing our nose. such a bad smell.

said...

வாங்க alchemyjobs.

(இப்படியெல்லாம் பேரு வச்சுக்கிட்டா எப்படிங்க!)

படத்துலே பெரூசாத் தெரியறதால் அதை டூரியான் பழமுன்னு நினைச்சுக்கிட்டாங்க போல!

வருகைக்கு நன்றி. ஆமாம்...முதல் விசிட்டா? மீண்டும் வரணும்

said...

தொட்டிப்பாலம் அழகிய இடம்.. வருஷம் 16 படத்தின் "பழமுதிர்சோலை" பாட்டை சில மாதங்களுக்கு முன் ஜெயா டிவி யில் பார்த்தபோது, சென்று வந்த இடம் என்பதாலேயே அந்தப் பாட்டு பிடித்தது...

தொட்டிப் பாலம் பற்றி எழுதிய சிறு பதிவு...


http://erodenagaraj.blogspot.com/2009/06/2.html

said...

வாங்க நாகராஜ்.

ரொம்பவே அழகான இடம்.

பதிவுகளில் போட்டுவச்சால் எப்பவுமே உயிர் இருக்கு:-)))))

said...

தொட்டிப் பாலத்தை ரசிச்சிருக்கீங்கன்னு உங்க பதிவுலேயே தெரியுது... அழகா தொகுத்து இருக்கீங்க... புகைப்படங்களுடனும்... அழகான கிண்டல் வரிகளுடனும்...

அருமை அக்கா... அருமை...

said...

பதிவுகள் தான் உயிர்த் துடிப்பானவை. முகநூல் பதிவுகள் நீர்க்குமிழிகள் தான்.

"தண்ணிக்கு மேலே தண்ணி போகுமா? ஹைய்யோ...போகுதே.........(2009 பயணம் : பகுதி 32)" - முகநூலில் திரு வெள் உவன் அவர்கள் ஒரு பதிவு போட்டிருந்தார். அதை பகிர்ந்தமைக்கு திருமதி துளசி கோபால் அவர்கள் அவரது தொட்டிப்பாலம் பதிவை பற்றி link கொடுத்தார்கள்.
காமிரா வசதி அவ்வளவு இல்லாத காலத்திலேயே அற்புதமான படங்களுடன் பதிவு கொடுத்திருக்கிறார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படித்து கருத்தை பதிவில் பகிர வேண்டுகிறேன்.
நன்றி சார் திரு வெள் உவன்.
நன்றி மேடம் திருமதி துளசி கோபால் - துளசி தளம்
நன்றி நண்பர்களே