Friday, April 24, 2020

ஆடோ ஆடுன்னு ஆடினால்.... (பயணத்தொடர் 2020 பகுதி 43 )

நம்ம ஹொட்டேலின் எதிரில் இருக்கும் பாலம் கடந்து அந்தாண்டை நைல் கரையோரமாப் போறோம். டின்னர் நமக்கு ஆண்ட்ரியாவில் !  ஒரு ஏழரை கிமீ தூரத்தில் இருக்கு இந்த ஆண்ட்ரியா. அஞ்சடுக்குக் கப்பல் இது.
நம்ம அறை பால்கனி வழியாப் பார்த்தால் நைலின் மறு கரையில் மிதக்கும் ரெஸ்ட்டாரண்டுகள்  தெரியுதுல்லே....    அதே மாதிரிதான் இதுவும்.  என்ன ஒரு வித்தியாசமுன்னா....   அதெல்லாம் தண்ணியிலே நிக்குது.  இதுவும்தான். ஆனால்  அப்பப்ப கொஞ்ச தூரம்  நகர்ந்து போய்  தண்ணியிலே ஒரு சுத்து சுத்திட்டு வருதாம்.   Andrea Maadi Dinner Cruise.
க்ரீக் நாட்டைச் சேர்ந்த Mr. Andrea Philotheou  என்பவர் 1958 இல் தொடங்கிய   ரெஸ்ட்டாரண்ட் இது.  வியாபாரம் நல்லாவே சூடு பிடிச்சு இப்போ  ஈஜிப்ட் நாடு முழுக்க எக்கச்சக்கமான கிளைகள் விட்டுப் பெருகிருச்சு.  நாம்  இப்போ வந்துருக்கும் இந்த இடம்தான் தாய் வீடு. 61 வயசாகுது.

ஆண்டிரியாவுக்கு முன் போய் இறங்குனதும் அஸீஸ் நம்ம கூட வந்தார்.  இஸ்லாம் வண்டியைப் பார்க் பண்ணப் போயிட்டார்.  நிறைய விளக்குகளோடு ஜொலிக்குது இந்த அஞ்சடுக்குக் கப்பல்படகு.

 நைல்நதியின் இந்தப்பக்கக் கரை முழுக்க இப்படித்தான் சின்னதும் பெருசுமான ரெஸ்ட்டாரண்டுகள் தண்ணிக்குள்ளே நிக்குதே !
உள்ளே போனால்  எக்கச் சக்கமான கூட்டம் !
ஜன்னலாண்டை நமக்கு இடம் கிடைக்கலை.  ஆறு பேருக்கான  மேஜைகளை  அங்கே போட்டு வச்சுருக்காங்க. நாம் ரெண்டே பேர் இல்லையோ....   நம்ம டூரில் இங்கே வந்து சாப்புடறதும்  சேர்த்தி என்பதால்தான் இங்கே வந்துருக்கோம். இப்படியே பல டூர்கம்பெனிகளும்  பயணிகளை இங்கே கொண்டு வந்து விட்டுருது. .....  ட்ரிங்ஸ்  சமாச்சாரங்களுக்கு மட்டும் நாம்   தனியாக் காசு கொடுத்துடணும்.

பஃபே வகைதான்.  வெஜிடேரியன் ஃப்ரெண்ட்லியாம் ! (ஹாஹா....) தினமும்  மாலை மூணு பந்தி போட்டுடறாங்க. அஸ்தமன சமயம், அப்புறம் எட்டு/எட்டரை,  அதுக்கப்புறம் பதினொன்னுன்னு.....
சாப்பாட்டுக்கு ஒரு நீளக் க்யூ......  நாம்  கூட்டம் ஓயட்டுமுன்னு  உக்கார்ந்துருந்தோம்.  கூடத்தின் நடுவிலே கொஞ்சம் இடம் விட்டுவச்சுட்டு  இருக்கைகள் போட்டுருக்காங்க.  யாரோ ஒருத்தர் வந்து மைக் பிடிச்சுப் பாட ஆரம்பிச்சார்.  கூடவே வாத்யம் (கீ போர்டு) வாசிக்க இன்னொருத்தர். அவுங்க நாட்டுப் பாடல்களைப் பாடப்டாதோ.....    வெள்ளைக்கார சங்கீதம்தான்.....   அதுலேயும் நல்ல பாடல்கள் இருக்க,  இவர் த்ராபையாப் பாடிக்கிட்டு இருக்கார்.

நாங்க போய் நமக்கானதை எடுத்துவந்தோம். ஈஜிப்ஷியன் ரொட்டின்னு ஒன்னு இருந்தது.  எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமே...  சோறு கிடைச்சது. கூடவே கொஞ்சம்  காய்களும்.  அந்த ரொட்டி.... ஐயோ.... தொட்டுக்க எதாவது கறி வகைகள் இல்லாமல் வறட் வறட்ன்னு.... பல்லுக்குக் கேடு....  வேணாம்...
டிஸ்ஸர்ட் செக்‌ஷன் பரவாயில்லை.

பாடுனவர் இடத்தைக் காலி பண்ணதும்.... பெல்லி டான்ஸ் ஆரம்பம்.  கொஞ்சம் ஸாலிடான உடம்போடு ஒருத்தர் வந்து ஆடுனாங்க. ஜிலுஜிலுன்னு ட்ரெஸ் (!) தவிர ஆட்டம் ரொம்பவே சுமார்.  இங்கே எங்கூரில் மட்டும்  13 பெல்லிடான்ஸ் ஸ்கூல்  இருக்கு. வெள்ளைக்காரப் பிள்ளைகள்  நிறையப்பேருடன் , இந்த  டான்ஸ் ஒரு விதமான ஃபிட்னஸ் ஒர்க் அவுட் என்பதால்  இங்கே அம்பது அறுவது  வயசுப்பெண்களும்கூட  இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கறாங்க. இங்கே  படிக்கும் நபர்கள், இங்கத்து கல்ச்சுரல் விழாக்களில் வந்து ஆடுவாங்க.  இத்தனை வருஷங்களில் நிறையப் பார்த்தாச்சு. என்ன ஒன்னு  ஆண்ட்ரியாவில் ஆடுறது தொழில்முறை ஆட்டக்காரி.

உலகில் பொதுவா எல்லா சமாச்சாரங்களுக்கும் ஒரு சரித்திரம் இருக்கறதைப்போல இதுக்கும் ஒரு ஆறாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கு!  இதுக்குப் பொறந்த வீடு ஈஜிப்ட்தான். Pagan மதம் இருந்த காலங்களில் (இயற்கையைக் கடவுளாகக் கொண்டாடும் மதம்) பெண்மையைப் போற்றும் விதமாகப் பெண்கடவுளை கும்பிடும் போது  இந்த வகை நடனத்தை  ஆடுவாங்களாம்.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வெற மதங்கள் உருவாகினபிறகும் நடனம் மட்டும் தொடர்ந்து இருந்துருக்கு.  பைபிளில் கூட இதைப்பற்றி இருக்குன்னு சொல்றாங்க.  இறைவனை ஆடிப்பாடிக் கொண்டாடுங்கள்னு  வர்ற இடத்தில் இருக்கும்  அந்த ஆடிப்பாடி.... ஆடுதல், இதுதானாம் !
ஈஜிப்ட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தொடங்கிய  காலத்திலும்  நடனம் தொடர்ந்தே வந்துருக்கு.  முகமதிய மன்னர்களின் சபைகளில்  இந்த நடனத்தை ஆடுவாங்கன்னு  ஒரு ஓவியரின் சித்திரம் கூட ஒரு சான்றாக இருக்கே !  என்ன ஒன்னு அப்பெல்லாம் நடனமணிகள் உடுத்திய உடைகள் வேற மாதிரி!

(நம்ம பரதநாட்டியத்திலும் கூட அந்தக் காலத்தில் புடவையையே கட்டி ஆடி இருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஃபேஷன் மாறி, இப்ப  ரெடிமேட் மாதிரி  டெய்லரே தைச்சுக்கொடுக்கற ஸ்டைல் வந்தாச்சு. சினிமாக்காரங்களின் பரத நாட்டிய உடையின் ஸ்டைல் தனி. கூடுதல் கவர்ச்சிக்கானது.  அதை மேடையில் உடுத்தி ஆடுனா ஆபாசமா இருக்குமுன்னு தோணுது....)

இப்படியெல்லாம் 'பெருமை' வாய்ந்த இந்த நடனத்தை, இதே  கய்ரோவில்  தடை செய்த  காலமும் இருந்துருக்கு! 1830களில் இதை ஆடறவங்க ஜிப்ஸிகள்னு காரணம்  சொல்லி இருக்காங்க.  கய்ரோவில்தானே ஆடக்கூடாதுன்னுட்டு  அவுங்களும்  அப்படியே மிடில் ஈஸ்ட் நாடுகளுக்குப் போயிருக்காங்க.  இப்பவும் பெஸ்ட் பெல்லிடான்ஸ் நடக்கறது சௌதிஅரேபியாவில்தானாம் !

எது எப்படியோ... இப்ப இந்த ஈஜிப்ட்டைச் சுத்தி இருக்கும் பல நாடுகளிலும்  பெல்லிடான்ஸ் சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு.  அதைவிட மற்ற உலகநாடுகளிலும் இதைப் போற்றிப்புகழ ஆரம்பிச்சாச். இதுலே பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆடறாங்க. இந்தியாவில் இந்த நடனத்தைக் கத்துக்கிட்டு   ஆடுன முதல் நபர்  அருண் பரத்வாஜ். அப்புறம் அலெக்ஸ் விக்டர். 

ஆமாம்... எல்லா நடனத்தையும் கத்துக்கிட்ட நம்ம கமல்ஹாஸன், இதை விட்டு வச்சுட்டாரா என்ன?  சரி. நாமெல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுக்கறோம். கமல்தான் பெல்லி டான்ஸர்.  ஓக்கே ? படத்துக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சுச் சொல்லுங்க.

தனிநபரா மட்டுமில்லாமல், குழு நடனமாகவும்,  ரெண்டு மூணு பேர் சேர்ந்தும் கூட ஆடறாங்க..... பல நாடுகளிலும் நைட் க்ளப்பில்  பெல்லிடான்ஸ் ஆடிக்கிட்டுத்தான் இருக்காங்க. நம்மவர் பல பயணங்களில் (ஆஃபீஸ் வேலையாப் போறதுலேதான்ப்பா.....! ) பார்த்துருக்காராம்.  இதை எப்பச் சொன்னார் தெரியுமோ? நேத்து இந்தப்பதிவை எழுதும் சமயம்  :-)  விஆரெஸ்  வாங்கியே வருஷம் நாலாகுது, கேட்டோ !
அடடா.... உங்களை டான்ஸ் பார்க்க விடாமல் கதையடிச்சுக்கிட்டு இருந்துட்டேனே....  நோ ஒர்ரீஸ்... 'நம்மவர்' உங்களுக்காகவே  சின்ன வீடியோ க்ளிப் எடுத்துருக்கார். அதை இங்கே பார்க்கலாம். தவிர யூ ட்யூபில்  எக்கச் சக்கமான  நடனப்பதிவு கலெக்‌ஷனே இருக்கு. விருப்பம் இருப்பவர்கள் கண்டு உய்யலாம் !


நடனம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே 'நடனமணி',  பார்வையாளர்களுடன் படம் எடுக்க வந்தாச்சு.  ஒரு பொட்டாக்ராஃபர் வந்து படம் எடுக்கறார். சனம் அலை மோதுது.....  டின்னர் முடியறதுக்குள்ளே ப்ரிண்ட் போட்டுக் கொடுத்துருவாங்க. தனிக் கட்டணம் உண்டு.
இப்போ ஒரு ஸூஃபி டான்ஸர்  ஆட்டத்தை ஆரம்பிச்சார். பெரிய பாவாடை போல ஒன்னு உடுத்தி இருக்கார். நடன அசைவோடு தட்டாமாலை சுத்த ஆரம்பிச்சு, இடைவிடாமல் வேகமா சுத்திச் சுத்தி, கடைசியில் அந்தப் பாவாடை  தலைக்கு மேலே  குடைமாதிரி சுத்துது ! ஒரு கையால்  குடைபிடிச்சுக்கிட்டு, (குன்றைக் குடையாய் எடுத்தாய் ....)  மற்றொரு கையால்  கோப்பையில் இருக்கும் ஜூஸ் குடிக்கிறார் !   வாவ் !  இது எனக்கு முதல்முறையாப் பார்க்கக்கிடைச்சது.  இப்படி  மேலே போகுமுன்னு தெரியாததால்  வீடியோ எடுக்காமல் விட்டுருந்தேன்.... ப்ச்....






டின்னர் க்ரூஸ் னு சொன்னாங்களே.... இருந்த இடத்தில் நிக்கறோமென்னா ... அப்பதான் கப்பல்படகு மெள்ள நகர ஆரம்பிச்சது.....    மேலே மற்ற மாடிகளைப் பார்க்கலாமுன்னு  மாடிப்படியாண்டை போனால் அஸீஸ் வந்து சேர்ந்துக்கிட்டார்.  சாப்பிட்டாரான்னு கேட்டதுக்கு ஆச்சாம்.  மூவருமா படியேறிப்போறோம்.
ரெண்டாம்  மாடியும் ரெஸ்ட்டாரண்டுதான்.  அது டூர் க்ரூப்பில் இல்லாமல் வரும் தனி நபர்களுக்கானது....    சின்னக்கூட்டம்தான்.... ஒரு பத்திருவது பேர் இருக்கலாம். முதல் மாடிக்குப் போனோம். மொட்டை மாடிதான் ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. இங்கேயும் அவ்வளவாக் கூட்டம் இல்லை.  முக்கியமா...  இருப்பது Bபார் !




நதியின் இருட்டும் கரையோர வெளிச்சமுமா வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம்.  ஒரு சின்ன  வட்டம் போட்டுட்டுத் திரும்பி யதாஸ்தானத்துக்குப் போய் நின்னது கப்பல் படகு. கீழே இறங்கி வந்தால்  பெல்லிடான்ஸ் நடக்குது. அதே ஆட்டக்காரர், ஆனால் ட்ரெஸ் சேஞ்ச்!

சரி.... ஆடுங்கன்னுட்டுக் கிளம்பிட்டோம்.
நாளைக்குக் காலையில் நாலரைக்குக் கிளம்பணும்.  அப்ப..... மூணரைக்கு எழுந்தால்தான்  குளிச்சுக் கிளம்ப சரியா இருக்கும், இல்லையோ?

தொடரும்........ :-)


Wednesday, April 22, 2020

வாவ்.... வாட் அ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ் !!! (பயணத்தொடர் 2020 பகுதி 42 )

ஜாலியாக் கிளி போன பாதையில்....  நாமும் போவோமுன்னு எதிர்பார்க்கலை.... என்ன ஒன்னு கிளி போனது இப்படி.....

அப்ப  நாம்.... போனதோ......

ம்யூஸியத்துலே இருந்து கிளம்பி  வண்டிக்குள் நுழைஞ்சவுடன் செஞ்ச முதல்வேலை பவர் பேங்கை எடுத்து செல்லுக்கு உயிர் கொடுத்ததே !  பைக்குள் இருந்த கெமெராவும் வெளியில் வந்தது.   ஒரு  காமணியில் படகுத்துறைக்கு வந்திருந்தோம்.
நைல்நதி அதுபாட்டுக்கு நகரத்துக்குள்ளே நீண்டு போய்க்கிட்டு இருக்குது  பாருங்க. அதுலே அங்கங்கே இப்படிப் படித்துறைகள்  இருக்கு.

 இந்தப் படகுப்பயணமும் நம்ம டூரில் சேர்ந்தே இருக்கு என்பதால்....  ரெய்னா போய், அங்கே இருக்கும் ஒரு நபரிடம்  எந்தப் படகுன்னு விசாரிச்சுக்கிட்டு வந்தாங்க. இவுங்க டூர் கம்பெனி அவுங்க  வாடிக்கையாளர்களில் ஒன்னு !



போய்ப் படகில் ஏறினோம். பாய்மரப்படகு. படகுக்காரர் பெயர்  அலி.  நாம் போய் உக்கார்ந்ததும்  படகை மெல்ல நகர்த்தியதும் பாயை விரிக்க ஆரம்பித்தார்.....  'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.... லலா லா.... லா  ' மனசுதான் பாட்டை எடுத்துவிடுது :-)

நம்ம சீனப்பயணத்துலே  பேலஸ் டூர் போனப்ப, அழகழகான படகுகள் இருந்தனதான். ஆனால் அதுலே போக பெரிய க்யூ இருந்ததால் போகலை. அங்கே போகாததை....  இங்கெ  ஈடுகட்டியாச்சு.
மூணு பக்கங்களிலும் இருக்கைகள் போட்டு நடுவில் ஒரு மேஜையுமா நல்லாத்தான் இருக்கு.  ஆளுக்கொருபக்கம் உக்கார்ந்தாச் :-)
படகின்  முன்பக்கத்துக்குப் போயிட்டார் அலி.  மெள்ள நதியில் போய்க்கிட்டு இருக்கோம். இயற்கைக் காட்சிகளா ஒன்னும் இல்லை....  ரெண்டு கரைகளிலும் இருக்கும் கட்டடங்கள் (அதுலே நம்ம ஹொட்டேலும் ஒன்னு ) நதியில் போகும் மற்ற படகுகள் இப்படித்தான்.







ஆனாலும்  நல்ல இதமான காற்று !  எதையும் ஆழமாச் சிந்திச்சு மண்டையை உடைச்சுக்காம , நிம்மதியா வேடிக்கை பார்த்துக்கிட்டே  க்ளிக்ஸும் ஆச்சு.  ஒரு அரைமணி நேரம் உல்லாசமாச் சுத்திட்டு, படகுத்துறைக்குக் கொண்டு வந்து சேர்த்தார் அலி.  நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் டிப்ஸும்  கொடுத்துட்டுக் கிளம்பினோம்.




படியேறி மேலே சாலைக்குப் போனால் குதிரை வண்டி ஒன்னு. பயணிகள்  ஜட்கா சவாரி செய்யலாம்.  ஆனால் நாம் போகலை. வண்டி   பார்க்க நல்லாவே இருக்கு!
நாலரைக்கு ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   அஞ்சே காலுக்குத் திரும்பக் கிளம்பணுமாம்.  அஸீஸ் வந்து கூட்டிப்போவாராம்.   மறுநாளைக்கான  ஏற்பாடுகள் என்னன்னு ரெய்னா சொல்லிட்டு அவுங்களும்  வீட்டுக்குக் கிளம்பினாங்க.  பொதுவா ராத்திரி நேரத்தில் பெண்கைடுகள் வேலை செய்யறதில்லை. அதனால் மாற்று ஏற்பாடுகள் செஞ்சுருது  டூர் கம்பெனி.

நாங்களும் அறைக்குப்போய்  முக்கிய வேலையைச் செஞ்சோம். என்ன....  செல், கெமெரா எல்லாத்தையும் சார்ஜ் பண்ணறதை விட வேறென்ன முக்கியம் சொல்லுங்க :-)

கொஞ்சம் ஓய்வு, 'நம்மவர்' தயாரிக்கும் காஃபியைக் குடிப்பதுன்னு இதர வேலைகள்.


நாலரைக்கே சூரியன் மறைய ஆரம்பிக்குது. குளிர்காலம் இல்லையோ !   தகதகன்னு இருந்த ஜொலிப்பெல்லாம் போய்  வானம் மட்டுமே  ஆரஞ்சு....

இதுகூட அழகுதான் இல்லே?

நைல்நதிப் பாலத்துலே ட்ராஃபிக் ஆரம்பிச்சுருச்சு.....

அஞ்சு பத்துக்குக் கிளம்பிக் கீழே போனோம். அஸீஸ் காத்துக்கிட்டு இருந்தார்  லாபியில்!

போலாமா ?

தொடரும்....... :-)