Wednesday, July 24, 2013

கோவா கஜா (பாலி பயணத்தொடர் 17 )


குகைக் கோவிலைக் கட்டுனது ஒன்பதாம் நுற்றண்டில். யானைக் குகைக் கோவில் என்று உள்ளூர் ஆட்கள் அடையாளப்படுத்துறாங்க. இதையும் 'கண்டு பிடிச்சு'ச்  சொன்னது நம்ம கோபால்தான். யானைகளை விட்டுப்பிரிய மனசில்லாமல் வெளிவந்து வண்டியில் ஏறினவுடன்,  கோவா கஜா போகலாமுன்னு புத்ராவிடம் சொன்னார்.  ம்ம்ம்ம்.... அது கொஞ்ச தூரமாச்சே...... இன்னும் அம்பதாயிரம் ஆகுமேன்னு இழுத்தார். பரவாயில்லை போங்கன்னதும்  வண்டி கிளம்புச்சு.

ஒரு  இருபத்தி எட்டு கிலோ மீட்டர்  ( ஸென்டானாவிலிருந்து  யானை சஃபாரிக்குப்  போன அதே தூரம்தான்) தொலைவில் இருக்கு  கோவா கஜா. நாலைஞ்சு கிலோமீட்டர் கடந்ததும் மழை ஆரம்பிச்சு வலுத்துக்கிட்டே போகுது.   ரெண்டு பக்கமும் கடைகள் நிறைஞ்சுருக்கும் ஒரு சின்ன சதுக்கம் கார் பார்க். வண்டிக் கதவைக்கூடத் திறக்க முடியாமல்  மழை அடிச்சுப்பெய்யுது. நம்மகிட்டே ஒரு சின்னக்குடைதான் இருக்கு.  இப்படி மழைன்னு தெரிஞ்சுருந்தால்  நம்ம அறை கைப்பிடிச்சுவரில் வச்சுருந்த குடையைக் கொண்டுவந்திருக்கலாம். புத்ராவிடமும் குடை ஒன்னும் இல்லை. ரொம்ப சர்வசாதாரணமா தினமும் இப்படித்தான் மழை பெய்யுமுன்னு சொல்றார். நேத்து என்னமோ அபூர்வமா மழை வரலை(யாம்!)  அடடா..... அதுதான் அறைகளில் குடைகள் வச்சுருந்தாங்களோ?

கோபால் மட்டும் சட்னு இறங்கிப்போய்  இன்னொரு குடையுடன் திரும்பி வந்து  என் பக்கத்துக் கதவைத் திறந்தார். வாடகைக்கு எடுத்தாராம். பத்தாயிரம் ரூபாய். தலையையும் தோளையும் மூட முடிஞ்சது.  என்ன ஒன்னு.... நியூஸி போல  குளிர் நடுக்கும் மழை இல்லை:-)

கடைகளின் முன்னே மழைக்கு மறைப்பை இழுத்துவிட்டுட்டு  சின்னதா  இடைவெளியில் எட்டிப் பார்க்கும் முகங்கள்.  சதுக்கம் விட்டு எதிர்ப்புறம் போய் படிகளில் இறங்கினால்  கல்பாவிய  பெரிய சதுக்கம். வலப்பக்கம்  நுழைவுச்சீட்டு வாங்கும் இடம். ஆளுக்கு பதினைஞ்சாயிரம் ருப்பையா.  டிக்கெட்டு வாங்கிக்கிட்டு அம்பு காமிச்ச பாதையில் போறோம். முழங்கால் வரை தொப்பலா நனைஞ்சு கிடக்கேன்.  போதாததுக்கு  தலையில் தண்ணீர் சொட்டுது.  குடைக்குள் மழை!!!!

இடப்பக்கம் சின்ன அறை போல் இருக்குமிடத்தில் ஜன்னலில் நம்ம டிக்கெட்டை நீட்டினால்  சரி பார்த்துட்டுத் திருப்பித் தரும்போது  வெளியில் ரெண்டு மரப்பெட்டிகளில் போட்டு வச்சுருக்கும் துண்டுகளில் ஒன்னை எடுத்து இடுப்பில் கட்டிக்கச் சொன்னாங்க. நல்லவேளை இது ஆண்களுக்கு மட்டும்:-) முழங்கால் மூடி இருக்கணும் என்பது பொது விதி இங்கே!


ஃபிஜியன் சுலு போல அதை இடுப்பில் சுத்திச் செருகிட்டு  படிகள் இறங்கிப் போறோம். நல்லவேளை கைப்பிடிக்கு  இரும்புக்குழாய் பிடிமானம் இருக்கு.  பைக்குள் இருக்கும் கெமெராவைக்கூட வெளியே எடுத்துக்கமுடியலை:( கீழே விழுந்து வைக்காமல் இருக்கணுமேன்னு கவனமாப் படிகள் இறங்கிப்போறோம்.  மலையின் மீது அடிச்சுப் பேயும் மழை வெள்ளம்   சரேலுன்னு இறங்கிக் குட்டிக்குட்டி நீர்வீழ்ச்சியா இரைச்சலோடு  படிகளின் ஓரத்தில் பாயுது.  அநேகமா நூறு மீட்டர்  ஆழம் கீழே  போகணும்.

படிகள் முடிஞ்ச இடத்துக்கு எதிரிலொரு பெரிய மண்டபம். சட்னு அதுலே புகுந்துக்கிட்டோம்.  நாலைஞ்சு உள்ளூர் மக்கள் நிதானமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. இளநீர், பழம் என்று சின்னதாக் கடை போட்டுருக்கவுங்க.  மண்டபத்தின் உள்ளே   நேரெதிரா இன்னொரு பக்கம் ஒரு மேடையும் அதில்மூணு அலங்காரக்  கதவுகளுமா இருக்கு. மேடையில் சிலர்  படுத்து ஓய்வெடுக்கறாங்க.  மேடை மேல் ஏறிப்பார்த்தார் கோபால். கதவுக்குப்பின்னே.....  ஒன்னுமே இல்லையாம்! ஓக்கே...  அப்ப இது பத்மாஸனா!   புனித நீராடும் பக்தர்கள் உடை மாற்றிக்கவாம்.  அங்கிருந்த ஒருவர் சொன்னார்.  இருக்காதுன்னு எனக்கொரு தோணல்.  மேடை போட்டா உடை மாற்றிக்குவாங்க?

ஒரு காலத்துலே முனிவர்கள் தவம் செஞ்சுக்க தங்கள்  வெறுங்கையாலேயே   பாறைகளைச் சுரண்டி  இந்தக் குகையை உண்டாக்குனதா ஒரு கர்ண பரம்பரைக் கதை இருக்கு. வெறுங்கையால் என்றதை நீக்கிட்டு  முனிவர்கள் கண்டுபிடிச்ச இயற்கை குகைன்னுகூட நாம் வச்சுக்கலாம்.   நாம் குகை என்று சொல்வதை வட இந்தியாவில்  குஃபா என்று சொல்வதைப்போல  பாலி மொழியில் கோவா( GOA)   என்கிறார்கள்.   யானைக்குகை  இங்கே  Goa Gajah .

தூரக்கே  இருந்து பார்த்தால் பெரிய யானை நிக்குது அதன் வயித்து பாகத்துலே  ரெண்டு ஜோடி கால்களுக்கு நடுவில்  நுழைவு வாசல்.


இது இங்கே  காடுகள் மண்டி, மண்மூடிக் கிடந்ததை 1923லே கண்டு பிடிச்சு செடிகொடிகளை அப்புறப்படுத்தி இருக்காங்க.  குகையின் முகப்பிலே  ராக்ஷச முகம் ஒன்னும்  சிலபல மிருகங்களும் செடிகொடிகளுமா இருக்கும்  சிற்பங்களுமாச் செதுக்கி இருப்பது கூட,   கண்டுபிடிக்கப்பட்ட பின்னே  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றுதான் சொல்றாங்க.

பாலி நாட்டுப் புராணங்களில்  அகஸ்திய முனிவர் இங்கே இருந்து சிவனை வழி பட்டுத் தவம் செஞ்சாருன்னும் காலன்   அணுகாமல்  இருக்க காலதேவதையின் முகத்தை குகை வாசலில்  வச்சாருன்னும் சொல்றாங்க. எமன் முகம்  எப்படி இருக்குமுன்னு நமக்கும் இப்போ தெரிஞ்சு போச்சு.

பக்கத்துலே ஓடும் நதிக்கு யானை ஆறு என்ற பெயர் இருப்பதால் இதை யானைக் குகைன்னு  சொல்ல ஆரம்பிச்சு இருக்கலாம். நாம் இப்போ நிற்கும்  மண்டபத்துக்கு  இடப்புறம்  குகைக்குப்போகும் பாதையும்,   ஒரு தீர்த்தக் கட்டமும் இருக்கு.  தீர்த்தக்கட்டம் ரெண்டு பிரிவா நடுவில்  ஒரு மேடையோடு  இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் மும்மூணு   சிலை மங்கையர்  கையில் குடம்  ஏந்தி  நிற்க குடத்திலிருந்து  பெருகி  ஊற்றும் நீர்த்தாரைகள் !


இந்த  தீர்த்த கட்டத்தில்   சப்தநதிகள்  சேர்ந்து   வந்து இதை சப்த தீர்த்தமா ஆக்கி இருக்காம். புனித  நதிகளான கங்கை, சிந்து,  யமுனை, சரஸ்வதி, கோதாவரி,  நர்மதை, சரயூ  ஆகியவை  ஒன்னா சேர்ந்து  இங்கே இருக்காங்கன்னு ஐதீகம்.  ஆறு சிலைகள் தானே இருக்கு. ஏழாவது எங்கேன்னால்.... நடு மேடையில் இருந்துருக்கணும் .  சிலை  கிடைச்சுருக்குன்னும்  சேதி.




இந்த  தீர்த்த கட்டத்தில் முழுகி எழுந்து  இங்கிருந்து  நீர் கொண்டுபோய்  பூஜைக்குப் பயன்படுத்தினாங்க,  ரிஷிமுனிவர்கள் என்றும்  ஒரு நம்பிக்கை.

1923 இல் குகையைக் கண்டு பிடிச்ச  இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின் 1950 இல் தான் தீர்த்தக்கட்டம் இருப்பதையே  அகழ்வாராய்ச்சி செஞ்சவுங்க  கண்டு பிடிச்சாங்களாம். அப்போ தோண்டி எடுத்த கற்களின்   குவியல்களை , குளத்துக்கு எதிர்ப்புறமா  அழகா ஒரு இடத்துலே அடுக்கி வச்சுருக்காங்க.

கிட்டே போய் பார்க்கலாமுன்னு  பேய்மழையில்  எங்கே?   குகைக்குள்  போனோம். அகலம் குறைஞ்ச ஒரு  நீண்ட  காரிடோர் போல ஒன்னு.  ஒரு வெள்ளைக்காரப் பெண்  வாசலைப் பார்த்தபடி  உக்கார்ந்துருந்தாங்க.  மழை கொஞ்சம் ஓயட்டுமுன்னு  இருக்காங்களாம்.  பாம்பு  வங்கி (ஆர்ம் பேண்ட்) ஒன்னு போட்டுருந்தாங்க. ரொம்ப அழகா இருக்கேன்னு விசாரிச்சதில் தோழி கொடுத்த பரிசாம்.  இந்தியாவில் வாங்குனது! ஆஹா....


காரிடார் முடிவில் இன்னொரு வாசல்.  ஒரு ஸீரோ வாட் பல்பு  எரிஞ்சாலும் உள்ளே  கும்மிருட்டு.  செல்ஃபோன் வெளிச்சம் காட்ட  கண்ணை இடமும் வலமும் ஓட்டினோம்.  ஒரு நாப்பதடி நீள இடம். அகலம்  ஒரு பதினைஞ்சடிஇருக்கும். இடப்பக்கம்  குழி பறிச்ச ஒரு மாடத்தில்  புள்ளையார்.  நான்கு கைகள், கையில் மோதகம்,  ஜெபமாலை , ஆயுதங்கள், ஓலைச்சுவடி இப்படி  எல்லாமே அம்சமா இருக்கு. எல்லாம் பார்ட் பார்ட்டாத்தான் பார்க்கணும்.  வர்றளவு  வரட்டுமுன்னு க்ளிக்கிவச்சேன்.





அடுத்து அடுத்து நீண்ட சுவரில் மாடங்கள்.   காலிதான். பத்மாஸனாவா இருக்கலாம்.  வலப்பக்கம் இன்னொரு மாடத்தில்  மூணு  சிவலிங்கங்கள். த்ரிலிங்கம். முகம் கை காலுன்னு  இல்லாததால் ' மொழுக்'னு ஜொலிக்கும் சிவன். மூவருக்கும்  வெள்ளை, கருப்பு, சிகப்புன்னு  உடைகள்.

(பீடத்துலே ஒவ்வொன்னுக்கும்  எட்டு குட்டி லிங்கங்கள் இருக்காம். அடடா..... இதெல்லாம் அப்புறமால்லே தெரியவந்தது!  இதுக்குத்தான் கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டுப் பயணம் போகணும்)

பூஜை செஞ்ச அடையாளமா  குருத்தோலைத் தட்டுகளும் பிரசாதங்களுமா கண்ணில் பட்டன. புள்ளையாரைப் பார்த்தால் பாவமா இருந்தார்.  அவருக்கு ஒரு துதி  சொல்லலாமேன்னு ' கஜானனம்' சொல்லிட்டு  ரெண்டு பாட்டு பாடினேன்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


விநாயகனே வினை தீர்த்தவனே.....

கணபதியே வருவாய்.....

அங்கே நம்மைத் தவிர வேற யாரும் இல்லை என்ற தைரியம்தான்:-)

கோபாலையும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னதுக்கு  அவருக்குத் தெரிஞ்ச ஒரே பாடலைப் பாடினார்.....   சினிமாப்பாட்டுதான்.    ' எல்லோரும் கொண்டாடுவோம்.... எல்லோரும் கொண்டாடுவோம்...'

தியானம் செய்ய நிஜமாவே தோதான இடம்தான் இது!  யாரும் வரமாட்டாங்க.  எல்லாம் அடங்கி இருக்கும் ,ஓசை உட்பட! இல்லையோ?

இதே குகைக்கு  புத்தமதத்தினரும்  சொந்தம் கொண்டாடுறாங்க.  கோவிலைச்சுற்றி இருக்கும் பெரிய தோட்டமும், இன்னும் கீழே கொஞ்சம் இறங்கிப்போனால் புத்தர் சிலையும் சின்னதா ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்காம். கடும் மழை காரணமா நாம் வேறெங்கியும் போகலை:(  அடர்த்தியான தோட்டம் இங்கிருந்தே தெரிஞ்சது.

இப்போ  சமீபத்துலே (1995) ஒரு பதினெட்டு வருசத்துக்கு முந்தி யுனெஸ்கோவின்  உலக பாரம்பரிய இடங்களின் ( UNESCO World Heritage Site) வகையில் சேர்க்கப்பட்டுருக்கு. இன்னும்  அகழ்வாராய்ச்சி  செய்வாங்க போல!


எங்கியாவது விழுந்து வைக்கப்போறோமோன்னு  கவனத்துடன் காலடி வச்சுப் படியேறி மேலே வந்து ஸராங்கை அவிழ்த்து   அங்கிருந்த ஒரு மரப்பொட்டியிலே போட்டுட்டுக் , குடையைத் திருப்பிக் கொடுத்துட்டுக் கிளம்பினோம். இப்படி ஒரு மழையை என்  வயசுக்குப் பார்த்ததே இல்லை. வானம் பொத்துக்கிட்டு ஊத்துதே!

ஈரக்குடையும் ஈர உடைகளுமா வண்டி பூராவும் நனைச்சு வச்சோம்.  நல்ல முறுகலாக் காய்ஞ்சு இருந்த ஒரே ஜீவன் புத்ராதான். வண்டியை வீட்டு இறங்கினால்தானே...............



தொடரும்.........:-)






Monday, July 22, 2013

யானை யானை அழகர் யானை (பாலி பயணத்தொடர் 16 )


ஒரு  சுத்து  சுத்தி வந்து தண்ணீரில் இறங்கி  ஓரமாவே வட்டம் போட்டுக் கரைக்கு ஏறி வந்து  ஆட்களை இறக்கி விட்டுக்கிட்டு பயங்கர பிஸியா இருக்குதுகள் நம்மாட்கள்.

நேரம் போவதே தெரியாமல் 'ஆ' ன்னு இருந்தேன்.  மைக்கில் நம்ம பெயரைக் கூப்பிட்டாங்க.  கொம்பனான்னு பார்த்தேன்...ஊஹும்.........   குழந்தை:(  அடப்பாவமே........

முதுகில் கால் வச்சு ஏறி இருக்கையில் உக்காரணும்.  கால் வைக்கும்போது , கணேசா மன்னிச்சுருன்னு மனசுக்குள் சொல்லி  உக்கார்ந்தேன். ஏற்கெனவே இருக்கை ஒரு பக்கமா சரிஞ்சு  இருக்கு.  இதுலே ..... கோபால்  பக்கத்துலே உக்கார்ந்ததும்  பேலன்ஸ் ஆகுமுன்னு பார்த்தால்....  ஊஹூம்........

அதெல்லாம் விழாது. நீங்க சேஃப்டி  பெல்டை போட்டுக்கோங்கன்னார்  மைக் பிடிச்ச மகராசர். இருக்கையின் ரெண்டு கைப்பிடிகளுக்கு நடுவில்  ஒரு பெல்ட்டு.  அதான் இன்ஸூரன்ஸ் இருக்கே!

மெள்ள அடி எடுத்து  வச்சாள் டெய்ஸி. வயசு வெறும் முப்பது. அம்பாரியும் அதுக்கேத்தமாதிரி ஆடுது. மரங்கள் அடர்ந்த தோட்டத்தின்  நடுவிலே யானைப்பாதை ஒன்னு போகுது.  நல்ல பசுமையான காடு.



நம்ம டெய்ஸியின் பாகன் பெயர்  ரட்னா. ஹிந்துவாம்!  நாம் இந்தியர் என்பதால்  'யானைச் சவாரி  அங்கே  இதை விட நல்லா இருக்குமே' ன்னார்.  யாருக்குத் தெரியும்?  இதுதான் எங்க  வாழ்க்கையில் முதல் முறை யானை சவாரின்னதும் அவருக்கு வியப்பு!  ஏன் ஏன்னா.... எங்களுக்கு யானை,  சாமின்னு சொல்லி வச்சேன். பொதுவா கோவில்களில் யானை வச்சுருப்போம் என்றேன். பிச்சை எடுக்கப் பழக்கி வச்சுருப்பதைச் சொல்லலை! கப்சுப்.


டெய்ஸிக்கு  வாக்கிங் போரடிக்குது  போல. அங்கங்கே ஸ்டாப் போட்டுக்கிட்டு  கயிறு கட்டின வேலிப்பக்கம் சாய்ஞ்சு  கையில்கிடைக்கும் கிளையை உடைச்சு வாயில் போட்டுக்கறாள்.  பசியோ என்னமோன்னு கேட்டால்..... இவளுக்கு எப்பவும் பசிதான்னு சொல்லிச் சிரிக்கிறார்  ரட்னா.

அவரைக் கிளிக்கினதும் உடனே நம்ம கேமெராக்களை வாங்கி நம்மையும் க்ளிக்கி உதவினார்.


நமக்கு முன்னாலும் பின்னாலுமா  யானைகள் வந்துக்கிட்டே இருக்கு/!  பார்க்குக்கு நல்லவருமானம் என்றாலும்  இத்தனை உயிர்களுக்கு சாப்பாடு போட்டு பராமரிக்கும் செலவும் இருக்கே! மேலும் இங்கே பணி புரிபவர்கள் ஏராளமா இருக்காங்க.

யானைச் சவாரின்னு சொன்னால்..... ஒரு அனுபவத்துக்கும் ஆசைக்கும் ஒருக்கா போகலாமே தவிர  அவ்வளவா  சௌகரியமில்லை. அந்தக் காலத்துலே இளவரசிகளும் அரசர்களும் அம்பாரிமேலே உக்கார்ந்து போனதை நினைச்சு  எவ்ளோ பொறாமைப்பட்டுருக்கேன்......   பாவம்.... அவுங்கெல்லாம்:(

சொல்ல மறந்துட்டேனே.... இவுங்களே  ஒரு  சஃபாரி லாட்ஜ் நடத்தறாங்க. இங்கேயே வந்து தங்கிக்கலாம். காலையில் கண் திறக்கும்போது  யானை தரிசனம் உறுதி!  எனக்கிது தெரியாமப் போச்சு:(  ஒரு நாள் இங்கே வந்துருக்கலாம்....  (மனப்புலம்பலுக்கு  சொல்லிவச்சேன்   நெவர்மைண்ட் நெக்ஸ்ட் டைம்)


பொதுவா அரை மணி நேரம் ஒரு சவாரி. நம்ம டெய்ஸி ஆற அமர நடந்து, இலை ஒடிச்சு,தின்னு இப்படி நிதானம் காட்டுனதில் . முக்காமணி ஆச்சு நமக்கு.   உள்ளே ஒரு  தடுப்புக்கம்பிக்குப் பின்னே தனித்தனியா ரெண்டு யானைகள் ! உடம்பு சரி இல்லையாம். மருந்து கொடுத்து தனியாக் கட்டி வச்சுருக்காங்களாம். ஐயோ பாவம்:(

ரட்னாவுக்கு என்ன தோணுச்சோ.... கோபாலிடம், 'யானை மேலே உக்கார விருப்பமா?'ன்னார். இவரும் ஆர்வத்தோடு  டக்ன்னு இறங்கி  ரத்னா சொன்னபடி ரெண்டு காலையும் கயித்துக்குள் நுழைச்சு  என்னமோ பொறந்தது முதல் யானை சவாரியில் பழக்கம் உள்ளவர்போல்  உக்கார்ந்துக்கிட்டார். (ஒருவேளை என் பக்கம்,  கனமா சரிஞ்சு சரிஞ்சுக்கிட்டு இருந்ததாலா?)
ஆஹா.... ரெண்டு பாப்பான்ஸ்:-) முழு சிம்மாசனமும் எனக்கே!!!

தோட்டப்பாதையில் ஒரு சுத்து  முடிச்சுத் தண்ணீர்க்குளத்தில் இறங்கினாள் டெய்ஸி.  ஓரமாகவே போகும்போது கரையில் நின்னுக்கிட்டு இருந்தவங்க எல்லோரும் கோபாலை ஆச்சரியமாப் பார்க்கறாங்க! யானை மேலே உக்கார்ந்தா எப்படி இருக்கு? அப்படி உக்காரப்பிடிக்குமா? ஆயிரம் கேள்விகள்:-)

டெய்ஸி கொஞ்சம் தண்ணீரை உறிஞ்சி பூமாரி பொழிந்தாள். ரெண்டு பேர் நல்ல கேமெரா வச்சுக்கிட்டு  நம்மை க்ளிக்குறாங்க.  மைக்காரர் என் கேமெராவை  வாங்கிக்கிட்டு க்ளிக்க ஆரம்பிச்சார்.  குளக்கரையில்  ஏகப்பட்ட கூட்டம்.

தலையைத் திருப்பினால்..... குழந்தையும் தாயும் தண்ணீருக்குள்ளே! ஆஹா..... அதானா:-) ஃபஜர்தான் அங்கே சூப்பர் ஸ்டார்! இந்தப் பதிவுவெளியிடும் இன்று குழந்தைக்கு வயசு நாலு மாசம்!

டெய்ஸி நம்மை இறக்கி விட்டதும் ரட்னாவுக்கு நன்றி  சொல்லி அன்பளிப்பு  கொஞ்சம்  கொடுத்தால் டெய்ஸிகிட்டே கொடுத்துருங்கன்னார்!!!!  (போச்சுடா..... இங்கேன்னா அன்பளிப்பு.  இந்தியான்னா பிச்சையா? நல்லா இருக்கே கதை!) அதுவும் சமத்தா வாங்கிக்கிச்சு:-)


நாம் இறங்குனதும் டெய்ஸிக்கு ஆஃப்  ட்யூட்டி:-) அதுக்குள்ளே மைக் காரர் வந்து நம்ம கேமெராவைத் திருப்பிக் கொடுத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துலே எலிஃபெண்ட் ஷோ இருக்கு. போயிறாதீங்கன்னார்.  அட! ஆமாம்லெ! விடமுடியுமா?


பாப்பாவை ரசிச்சுக்கிட்டே நின்னோம்.  அம்மாவை அப்படியே காப்பி அடிக்குது. அம்மாவுக்கு  சிறுதீனியா வாழைக்காய் துண்டுகளைப் பார்வையாளர்கள் கையால் ஊட்டிவிடச் சொல்றாங்க.அதுவும் 'ஆ'ன்னு வாய் திறந்து வாங்கிக்குது. (எனக்கு மும்பை எக்ஸ்ப்ரெஸில் தப்பி ஓடிவந்த பையன்  விவரம் சொல்லிக்கிட்டே 'ஆ'ன்னு வாய் காமிப்பது நினைவுக்கு வந்துச்சு.எனக்கு ரொம்பப்பிடிச்ச ஸீன்)

தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை  தும்பிக்கையால் துழாவி எடுக்கும் அம்மாவைப் பார்த்து சின்னதும் தும்பிக்கையை குளக்கரையில் நீட்டி  வச்சது படா தமாஷ்!   'ஐயோடா என் செல்லமே'ன்னு வாரி அணைச்சுக்கத் தோணியது உண்மை.



ஃபோட்டோ ஷாப்பை எட்டிப் பார்த்தோம்.  நாலு படம் எடுத்துருக்காங்க. எது வேணுமுன்னு சொன்னால் அதை  A4  அளவில் ப்ரிண்ட் செஞ்சு கொடுப்பாங்களாம்.  மானீட்டரில் காமிச்சதும் எதுன்னு முழிச்சதும்  நாலையும்  சேர்த்து வேணுமாலும்  அதே அளவில்  தரேன்னதும்  அப்படியே போடச்சொல்லி அங்கேயே நாலா கட் பண்ணிக் கொடுக்கச் சொன்னோம். வீட்டுலே ஸ்கேன் பண்ணிண்டால் ஆச்சு. லட்ச ரூபாய் ஆச்சு:-)



இதுக்குள்ளே ஷோ டைம் ஆரம்பிக்கப் போகுதுன்ற அறிவிப்பு கேட்டு  இன்னொரு பாதையில் போனோம். சின்னதா ஒரு அரங்கம் மூன்று வீரர்கள் நுழைஞ்சாங்க.  சின்னப்பசங்கதான். ஆனாலும் மூணு வெவ்வேற வயசில்! தலைவர்  எல்லோருக்கும் (தும்பிக்) கை தூக்கி  ஹலோ சொல்லிக்கிட்டே வந்து  கொடிக்கம்பத்தின் கயிற்றை இழுத்துக் கொடி ஏத்துனார்!!




இத்தனாம் பெரிய உடம்போடு சின்ன மரத்தண்டில் உக்கார்ந்தது  பாவமா இருக்கே! அதுவும் பின்பக்கம் பார்த்தால் ........

எலிஃபெண்ட் வாக் ம்யூஸிக் போய்க்கிட்டே இருக்கு.  பெயிண்டிங் செய்வது, ஹூலா ஹூப் சுத்துவது,  பாகனைக் கையில் தூக்கிக்கிட்டு பீம் வாக்கிங், கால்பந்து கோல் போடுவது, பாஸ்கெட் பால்  கோல், 2 + 4 = 6 ன்னு கூட்டல் கணக்கு போடுவது இப்படி எல்லாம் ஆச்சு.



படங்களின் தரக்குறைவுக்கு மாப்பு!



இந்த பீம் வாக்கிங்தான் எனக்கு ரொம்பப் பயமாப் போச்சு! இதுக்கே சின்னக் குட்டியூண்டு கண்ணு. அதையும் மறைக்கிறது மாதிரி பாகன் சரியா மூக்குமேலே உக்கார்ந்துருக்கார்.  கீழே இருக்கும்  மரத்தண்டு படிகளை எப்படிச் சரியாப்  பார்த்துக் காலை வைக்கப்போகுதோன்னு கொஞ்சம் உதறல்தான் எனக்கு. கரணம் தப்பினால்......  நல்லவேளை! அப்படி ஒன்னும் இல்லாம புள்ளையார் காப்பாத்திக்கிட்டு இருக்கார்.


எல்லாம் ஒரு ஏழரை நிமிச வீடியோவில் இருக்கு பாருங்க.  ஆறையும் ஏழையும் கை மாத்தி மட்டும் வச்சுருந்தாருன்னா  கதை கந்தல்:-))))))))))    தண்ணீர்த் தொட்டி மூடியைத் திறந்து கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு  நம்ம மேலும் தெளிச்சார் ஒருத்தர்.  எல்லாம் ஒரு இருவது நிமிசம் இருக்கும்.


என்ன அறிவுடா செல்லங்களான்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போனேன்.  இங்கேயே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு  கோபால்  சொல்லிட்டார்.  ரெஸ்ட்டாரண்ட் போனோம். நல்ல பெரிய ஹால்.

ஒரு வெஜிட்டேரியன் பீட்ஸாவும்  இன்னும் அவரவருக்கு வேண்டியதையும்  சொல்லிட்டு அங்கிருந்து குளத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.  ஒரே விளையாட்டுதான் இதுகள்.  கடமையைச் செய்யும் கூட்டம் ஒன்னு  ! அநேகமா இனி பகல் நேர ஓய்வு  அதுகளுக்குக் கிடைக்கும். லஞ்ச் டைம் ஆகுதே!

சும்மாச் சொல்லக்கூடாது....  சோம்பேறியா இல்லாமல்  ஒவ்வொன்னும் உழைச்சு சாப்பிடுதுகள்.

ம்யூஸியத்துக்குள்ளே  போனோம்.  அழகழகான யானை பொம்மைகள்.  சூப்பரா ஒரு  சுவரில் மாட்டும் ஒரு  வால் பேனல் இருக்கு!  ஹைய்யோ..... எத்தனையெத்தனை!!!!


நீளத் தந்தத்தில் யானைக் கூட்டம் ஒன்னு பிரமாதம்.  சுமத்ராவின் மிகப்பெரிய யானையின் தந்தங்கள்ன்னு  வச்சுருக்காங்க.  பிரமாண்டமான யானை ஒன்னு (Mammoth)  எலும்புக்கூடா  நிக்குது! அது மட்டும் உசுரோட இருந்துருந்தால்..... எப்படி இருக்கும்!!!!


மனசில்லா மனசோடுதான்  கிளம்ப வேண்டியாச்சு.  ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து  பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே     போதும்!   யானையும் ரயிலும் கடலும்  அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?


 தொடரும்............:-)

PIN  குறிப்பு:   ஃபஜர் ஸ்பெஷல்ன்னு தனியா ஒரு படப்பதிவு போடலாமுன்னு  இருக்கேன் . ஓக்கேவா?