Monday, July 26, 2010

எங்கெங்கு காணினும் யானையடா........................(தாய்லாந்து பயணம் பகுதி 6)

இந்த பாங்காக் நகருக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமான்னு கேட்ட நான்ஸிக்கு, ஏன் தெரியாம? 'ரத்னகோஸின்' னு சொன்னதுக்கு, ரொம்பச்சரின்னு சொன்னவங்க, மூச்சுவிடாமக் கிடுகிடுன்னு என்னவோ நீள நீளமாச்சொல்லி ------- இதுதான் அந்தப்பெயர். உலகிலேயே நீளமான பெயரை உடைய நகர் இதுன்னாங்க. நெசமாவா?
நம்ம அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் இடப்பக்கம் எரவான் கோவில் தெரியுது. கோவிலின் ஜனநடமாட்டம் இருக்கு. பறக்கும் ரயில் பாதைகள் கிளைபிரிஞ்சு ரெண்டு வரிசைகளாய் இருப்பதில் போறதும் வாறதுமா ரயில்களின் ஓட்டம்.. மூணு இல்லை நாலு பெட்டிகள்தான். கண்ணை நேரெதிரா செலுத்தினால் எரிஞ்சு போய் கொடுமையா நிக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம். அதுக்குப் பின்னால்கொஞ்ச தூரத்தில் ஒரு புத்தர் கோவிலின் கோபுரம். ZEN என்ற பெரிய ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்னு வச்சு, சண்டையெல்லாம் வேணாம். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைச் சமரசமாத் தீர்த்துக்கலாம் னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னன்னு விசாரிக்கணும்.

இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னே (மே மாசம் 19, 2010) செஞ்சட்டைகள் என்னும் இயக்கத்துக்கும் அரசுக்கும் நடந்த போராட்டத்தில் செஞ்சட்டைகளின் செய்கை எல்லை மீறிப்போனதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு நடந்த கலாட்டாவில் பாங்காக் நகரத்திலேயே பெரிய ஷாப்பிங் செண்டரான செண்ட்ரல் வொர்ல்ட் என்ற 18 மாடிக் கட்டிடடம் முழுக்க தீ பரவி அதே தெருவிலே அதன் பக்கத்துலே இருந்த இன்னொரு 20- கடைகளுமா சேர்ந்து எரிஞ்சுப்போய் இடிஞ்சு விழுந்துருக்கு.
சாதாரணமா ஆரம்பிச்சச் செஞ்சட்டை ஆதரவாளர்களின் ஊர்வலம் இப்படி முடிஞ்சதில் எல்லோருக்கும் மனவருத்தமே. அரசாங்கத்துக்கு எதிராக் குரல் கொடுத்துப் போராடும் சங்கத்தால் நாட்டுக்குப் பெரும் இழப்பும் மக்களிடம் செல்வாக்குக் குறைவும் ஏற்பட்டதுக்கு அவுங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்துருக்கும். இனி இதெல்லாம் வேணாம். கருத்து வேறுபாட்டைச் சமாதானமாப் பேசித்தீர்க்கலாமுன்னு அரசு முடிவு செஞ்சுருக்கு. ஒருவேளை செஞ்சட்டைகளும் இந்த முடிவை ஏத்துக்குவாங்கன்னு மக்கள் நம்பறாங்க. அரசியல் வியாதிகளால் எல்லா நாட்டுலேயும் என்னென்னவோ ................ நடந்துருது.
மீசை வச்ச பெருமாள்
கருடவாகனம்

மணி ரெண்டாகப்போகுதே. வெளியே சாப்பாடு கிடைக்குதான்னு 1 பார்க்கலாமுன்னு போனேன். நம்ம ஹொட்டேல் வாசலில் ஒரு சாமி சிலை வச்சுருக்காங்க. கருடன் தோளில் நிற்கும் பெருமாள். நமக்குப் பழக்கப்பட்ட கருடவாகனமா இல்லாம பார்க்க வித்தியாசமான சிலை,.
பெருமாள் கையில் இருக்கும் சங்கு சக்கரத்தைப் பார்த்துத்தான் புரிஞ்சுக்கிட்டேன். தினமும் இங்கே பூஜை செய்து மலர் மாலைகள் எல்லாம் அணிவிக்கிறாங்க. கருடனின் காலருகில் உள்ள மேடையில் வகைவகையா யானைகள்!!!
அநேகமா எல்லா வீயாபார நிறுவனங்கள், வீடுகள், சூப்பர் மார்கெட்டுகள் இப்படி நான் பார்த்தவரை எல்லா இடங்களிலும் வாசலில் ஒரு சாமிச்சிலை இருக்கு. அதுக்குன்னே சின்னதா மண்டபம், இல்லேன்னா ஒரு ஸ்டேண்டு மேலே நிற்கும் குட்டி மண்டபம் இப்படி விதவிதமாச் செஞ்சு வச்சுருக்காங்க.
வேடிக்கை பார்த்துக்கிட்டே எதிர்வரிசையில் இருந்த எரவான் கோவிலுக்குப் போனேன். வேகாத வெய்யிலும் நல்ல கூட்டம். அங்கங்கே குடைகளை வச்சுருக்காங்க. தாய் நடனப் பெண்கள் குழுவினர் சிலர் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டும் சாப்பிட்டுக்கிட்டும் இருந்தாங்க. சுற்றிவரப் போடப்பட்டுள்ள இருக்கைகளில் சில நிமிஷம் உக்கார்ந்துருந்துட்டுக் கிளம்பிப்போனேன். நடைபாதை ஓரத்தில் இருக்கும் கடைகளில் பூமாலைகள் கோர்க்கும் வேலை சுறுசுறுப்பா நடந்துக்கிட்டு இருக்கு. .எரவான் ஹொட்டேல், ஃபோர் சீஸன்ஸ் ஹொட்டேல் ன்னு பலதும் வரிசையா இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்வாமி மாடங்கள். யானைச் சிற்பங்கள் விதவிதமா அலங்காரத்துக்கு வச்சுருக்காங்க.

ஹொட்டேல் யானை

அரசாங்கயானையும் பாப்பாவும்

பழங்களைத் தோல் சீவித் துண்டு போட்டு அழகாக கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் பனிக்கட்டிகள் மீது அடுக்கிவச்சு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். பார்க்கவும் சுத்தமாக இருக்கு.
நம்மூரில் இது போல் வச்சால் என்ன? சென்னையில் தர்பூசணிப்பழங்களைத் துண்டுபோட்டு நடைபாதையில் விற்பதைப் பார்த்துருக்கேன். பெட்ரோல் புகை, தெருப்புழுதி, மொய்க்கும் ஈக்கள் இத்துடன் அந்த நடைபாதையில் இன்னும் 'என்னென்னமோ அழுக்குகள்'. குறை சொல்றேன்னு என்னை ஏசக்கூடாது. சுத்தமா வச்சுக்கிட்டால் என்ன தப்பு? சாமி கண்ணைக் குத்திருமா?

மாம்பழத் திருவிழா போனபோது மாம்பழங்களைத் துண்டு போட்டு 2 விற்கலாமேன்னு கோபால் சொன்ன ஐடியாவைப் 'பட்'னு முறிச்சுபோட்டேன். மொச்சைக்கொட்டையாட்டம் ஈக்கள் சுத்துது. இதுலே நம்ம மக்கள் தின்னுட்டு வீசிப்போட்டக் குப்பைகள் வேற வேணுமா? முழுசாவே விக்கட்டும் அதுதான் நல்லதுன்னேன்.
பச்சையம்மன்னு நான் நினைச்சுக்கிட்ட இந்திரன் (பச்சைப் பளிங்கு) சிலை.

இந்திரன் தலையலங்காரம்!
முத்தலை ஐராவதம்

மறுபடிக் கோவில் வாசலுக்கு வந்து வெய்யிலுக்கு இதமா ஒரு இளநீரை வாங்கிக் குடிச்சுக்கிட்டே அக்கம்பக்கம் இருந்த மக்களிடம் பேச்சுக்கொடுத்தேன்.( பதிவில் வரும் சிலபலத் தகவல்கள் அப்படி சேகரிச்சதுதான்) கோவிலுக்கு வலது பக்கம் இருக்கும் சாலையில் நேத்து இரவு ஒரு சாமிச்சிலையைப் பார்த்ததும் அது பச்சை வண்ணத்தில் இருந்ததும் நினைவுக்கு வந்துச்சு. பச்சையம்மன் சிலையோ என்னவோ..... இன்னொரு முறை கண்டுக்கலாமுன்னு போனால்..... அது இந்திரன் சிலை(யாம்) முன்னால் அவர் வாகனமான ஐராவதம், மூன்று தலையோடு நிக்குது. ஆஹா......
அங்கிருக்கும் தானியங்கிப் படிகள் மூலம் நடை பாலத்துக்கு வந்தால் நம் தலைக்கு மேலே ரயில்கள் பறக்குது. ரெட்டை அடுக்குப் பாலங்கள். ரயிலுக்கு ஒன்னு. நமக்கு ஒன்னு. சாலைகள் ஓரம் நடக்காமல், கடக்காமல் நாம் மேம்பாலத்து வழியாவே ரொம்பதூரம் போகலாம். அங்கங்கே கீழே தெருவில் போய்ச் சேர்ந்துக்க படிகள் வச்சுருக்காங்க.

ரெண்டு மூணு ஷாப்பிங் ஆர்கேடுகளைப் பார்த்துட்டு ரெண்டு பொம்மைகளை ( இந்தவருசக் கொலுவுக்கு) வாங்கிக்கிட்டு அறைக்கு வந்து 'புன்னகைதேசம் சாந்தி'யுடன் தொலைபேசியில் கொஞ்ச நேரம் பேசினேன். அரைநாள் டூர் எப்படி இருந்துச்சுன்னதுக்குச் சின்னதா ஒரு (அரை) ப்ளேடு போட்டேன். இரவு உணவை அவுங்க கொண்டுவந்து தர்றேன்னாங்க. எதுக்கு வீண்சிரமம்? இங்கே ரெஸ்டாரண்டிலே சாப்பிட்டுக்குவோமுன்னா கேட்டால் தானே? ஒரு நேரமாவது வீட்டு சாப்பாடு சாப்பிடணுமாம். அப்படி ஒரு பிடிவாதம். ஒரு எட்டரை மணி போல கொண்டுவரேன்னு சொன்னாங்க.

எனக்கு போரடிக்குமேன்னு இவர் மடிக்கணினியை விட்டுட்டுப் போயிருந்தார். நீளப்பெயர் சரிதானான்னு தேடுனா ரொம்பச்சரி.

KRUNGTHEP MAHANAKHON AMON RATTANAKOSIN MAHINTHAR AYUTTHAYA MAHADILOKPHOP NOPPHARAT RATCHATHANIBURI ROM UDOM RATCHANI WET MAHASATHAN AMONPHI MANAWATAN SATHITSAKKATHATTIYA WIT SANUKAM PRASIT

சொல்லிப்பாருங்களேன். 169 எழுத்துகள்


க்ரங்தீப் மஹநகோன் அமோன் ரத்னகோஸின் மஹிந்தர் அயோத்தியா மஹதிலோக்போப் நோப்பாரத் ரக்ஷதனிபுரிரோம் உடோம் தசனிவெட் மஹாசதன் அமோன்பி மனவதன் சதிட்சக்கதாட்டியவிட் சனுகம் பராசி(த்)ட்

ஹைய்யோ..... விடிஞ்சது போங்க!!!!

நியூஸியில் இருக்கும் ஒரு நகரம் இரண்டாம் இடத்தில் இருக்கு,. 85 எழுத்துகள் தான்.

TAUMATA WHAKATANGI HANGAKOAU AUOTAMATE ATURIPU KAKAPIKI MAUNGA HORONUKUPOKAIWHEN UAKITAN ATAH

மூணாவது இடம் வேல்ஸ் WALES நகரம் ஒன்னு 58 எழுத்துகள்
LLANFAIRPWLLGWYNGYLLGOGERY CHWYRNDROB WLLLLANTY SILIOGOGOGOCH

வரிசையில் ரெண்டாவதா இருக்கும் ஒரு பெருமையோடு , தமிழ்மணம் பார்க்க ஆரம்பிச்சக் கொஞ்ச நேரத்துலேயே இவர் வேலையில் இருந்து திரும்பி வந்துட்டார். எப்படியும் வர ஆறரை ஆகுமுன்னு சொன்னீங்களேன்னா..... 'நீ போரடிச்சுக்கிடப்பேன்னு ஓடோடி வந்தேன் துள்சி' ன்னார்.


தொடரும்.........................:-)

Friday, July 23, 2010

நின்றார் நின்றார் நெடுமரமாக நின்றார் (தாய்லாந்து பயணம் பகுதி 5)

இந்திரவிஹாரம் என்ற பெயரே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இறங்கி உள்ளே போகும்போதே ஒரு சின்ன மண்டபத்தில் பிக்ஷூ ஒருத்தர் உக்காந்துருந்தார். அவர்முன்னே ரெண்டு பேர் மண்டியிட்டு நமஸ்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. முறைச்சுப் பார்த்தால் நல்லா இருக்காதேன்னு கண்ணை எதிர்ப்புறம் ஓட்டினால்..... சுவர் ஓரமாக நெடுக நிற்கும் கண்ணாடி அலமாரிகளில் தட்டுத்தட்டாப்போட்டு வரிசைவரிசையா பீங்கான் ஜாடிகள் விதவிதமா இருக்கு. இறந்தவர்களின் அஸ்தியாம். 'ஐயோ.... என்ன ஆச்சு? இவ்வளவு பேரா இறந்துட்டாங்க?'ன்னேன்.
புன்முறுவலோடு நான்ஸி சொன்னது...... "ஒரே நாளில் இறக்கலை இதெல்லாம். அந்தந்தக் குடும்பம் தங்கள் குடும்பத்தினரின் அஸ்திகளை, அதற்கான கட்டணம் ஒன்னு செலுத்தி இங்கே கொண்டுவந்து வைப்பது"
கொதிக்கும் பளிங்குக்கல் படிகள் நாலைஞ்சு ஏறி போனால், சின்னதா இருக்கும் நிழலில் ஒடுங்கி ஒரு கோவில்பூனை குறுகி உக்கார்ந்திருக்கு. க்ளிக்கிட்டு சந்நிதிக்குள்ளே நுழைஞ்சேன். புத்தர் 'இருந்தார்' நிலையில் போஸ்.

சுவர்களில் எல்லாம் அவர் வாழ்க்கைக் கதைகளைக் கையால் வரைஞ்சு வச்சுருக்காங்க. கோவில் முகப்பு, கதவுகள் எல்லாம் படு அலங்காரமா இருக்கு. முகப்புக்கு முன்னே 'செமா' வகைக் கற்களால் ஆன ஒரு அமைப்பு. . அடுக்கடுக்கா நில விளக்குபோல! அதன் உச்சியில் நாலுபுறமும் யானை!

இதுக்கு நேர் எதிரா இந்தப் பக்கம் ஒரு கண்ணாடித்தொட்டியில் பக்கவாட்டுலே இருக்கும் சின்னத்துளைகள் வழியா, வெளிவரும் நீர்த்தாரை.
இது புனித நீராம். பாவங்களைப் போக்குமாம். தலையில் தெளிச்சுக் கொஞ்சம் பாவத்தைப் போக்கிக்கலாமுன்னு நினைக்கும்போதே ஒரு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதைவந்து மொய்த்தது. எல்லோரும் தமிழாட்கள். ஆஹா.... நம்ம பாவம் கிடக்கட்டும். அவுங்க பாவம் ஒழியட்டும்னு கோவில் பக்கவாட்டு வாசலில் அடுத்த பக்கம் போனால்......
பெரியதொரு வளாகம். இடக்கைப் பக்கம் நெடுநெடுன்னு 32 மீட்டர் உசரத்தில் நிற்கிறார் புத்தர். 1867 இல் அரசர் நாலாம் ராமாவின் காலத்தில் இந்தச்சிலையைச் செஞ்சுருக்காங்க. சின்னச்சின்னக் கண்ணாடித் துண்டுகளை இதில் மொஸைக் வேலைப்பாடாப் பதிக்கவே 60 வருசங்கள் ஆச்சாம். இப்போ தங்க நிற அங்கியோடு வெயிலும் மழையும் காற்றும் கொண்டு வலக்கையை மடிச்சு அதில் பிடித்திருக்கும் பிக்ஷைப் பாத்திரத்தோடு நிற்கிறார். எனெக்கென்னவோ கொஞ்சம் அகலமான மூக்கோன்னு ஒரு தோணல். கால்நகங்களில் பூத்தொட்டிகள் வச்சு விட்டுருக்காங்க! என்னதான் அலங்காரமுன்னாலும் இப்படியா?
புத்தருக்கு எதிரா சுற்றிலும் கோவில் வளாகம் முழுசும் கூரைபோட்ட மண்டபம் மூணு பக்கங்களில் இருக்கு. அதில் சுவற்றோரமாக இன்னும் ஏராளமான கண்ணாடி அலமாரிகளும் அஸ்திப் பாத்திரங்களும் வரிசை கட்டி நிற்குது. புத்த பிக்ஷு ஒருவர் 24 மணிநேரமும் அயராமல் இருந்தவாக்கில் புத்தரை நமஸ்கரிச்சுக்கிட்டே இருக்கார். அச்சுஅசலான உருவம். நல்லாச் செஞ்சுருக்காங்க.


வளாகத்தின் சுவரைக்கூட விட்டுவைக்காமல் அதுலேயும் அடுக்கடுக்கா அஸ்திகளுக்கான ஷோ கேஸ்கள்.
இங்கேயும் ஒரு நான்முகன் இருக்கிறார்.
தோலுறிஞ்ச சேஷ புத்தர்னு முதலில் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் பார்த்தால் பக்தர்கள் கொண்டு வந்து அங்கங்கே ஒட்டிவைக்கும் தங்க ரேக்குகள்
எங்கே பார்த்தாலும் அஸ்தி ஜாடிகள்தாங்க
இங்கே மூணு கோவில் மிய்யூஸ் இருக்காங்க. அதுலே ஒருத்தர் எவ்வளவு கம்பீரமா ராஜா மாதிரி உக்கார்ந்துக்கார் பாருங்க.
இங்கேயும் வார புத்தர்கள் ஏழுபேரும் ஒரு மேடையில் காசு போடும்போது ஒவ்வொருத்தருக்கும் இத்தனை எண்ணிக்கைன்னு ஒரு கணக்கு இருக்காம் . ஒருத்தருக்கு ஒன்பது, ஒருத்தருக்கு பனிரெண்டு ஒருத்தருக்கு ஒன்னு இப்படி. அந்த எண்ணிக்கைக்கேற்றபடி ஒவ்வொரு உருவச்சிலை முன்பும் பாத்திரங்கள். பணம் கொஞ்சம் (?) உண்டியலில் போட்டுட்டு அங்கே ஒரு கிண்ணத்தில் செப்புக்காசுபோல் ஒன்னு நிரப்பி வச்சுருப்பதை எடுத்து அதை எண்ணிக்கைபடி போட்டுக்கலாம்.


டோக்கன் மாதிரி செப்புக்காசு. தேவலோகக் காசா இருக்கணும்.இல்லே?

டெர்ரகோட்டா ஓடுகள் அங்கே கிடைக்குது. நம் பிரார்த்தனைக்கு ஏற்றபடி அவைகளை வாங்கி அங்கே இருக்கும் ஸ்டேண்டில் நம்ம பெயரோடு வச்சுடலாம். கோவில் கூரைகளை மாத்தும்போது அவை பயனாகும். எல்லாம் கோவில் வருமானத்துக்கு வழி செய்யுது. பெரிய வளாகம். சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்காங்க.

வெளியே வந்து தெருவில் நாம் போய்ச்சேருமுன் இருக்கும் அலங்காரவளைவில், சித்தார்த்தர் தன்னுடைய முடியைத் தானே வெட்டிக் களைவதுபோல ஒரு சுதைச்சிற்பம் இருக்கு. பக்கத்தில் ஒரு குதிரையும் மண்டியிட்ட அரசனுமாய்...... புத்தர் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்க.
ஊருக்கு நடுவே இருக்கும் அரண்மனைத் தோட்டத்தையொட்டி வெளிப்பக்கமாய் இருந்த சாலையில் ஒரு பெரிய சுற்று முடிச்சு ஒரு நகைக்கடைக்குப் போய்ச்சேர்ந்தோம். வழியில் ஒரு இடத்தில் நல்லதா ஒரு கோவில் கண்ணில் பட்டுச்சு. அங்கே போகலாமான்னு கேட்டதுக்கு இந்த டெம்பிள் டூரில் மூணு கோவில்களும் ஒரு நகைக்கடையும், டூர் ஆஃபீஸ் போய் இன்னும் நமக்கு வேண்டியவைகளைத் தெரிஞ்செடுப்பதும்தான் அடக்கமாம். (இத்தைப் பார்றா???? மொதல்லேயே தெரிஞ்சுருந்தால் இந்த மூணு மணிநேரம் முழுவதும் கோவில்களிலேயே செலவழிச்சுருக்கலாம். அப்ப என்ன செய்வாங்களாம்??)

"நான்ஸி, பாங்காக்கிலே எத்தனை கோவில்கள் இருக்கு?"

"நானூறு."

"வாட்?"

"வாட்ஸ்தான்:-))))"

"ஹைய்யோ..............."


ஏற்கெனவே பயணத்துக்குக் கிளம்புமுன் நான் எடுத்த முன்முடிவை மனசுக்குள் பாராட்டிக்கிட்டே நகை பார்க்கக் கடைக்குப்போனேன். கல்லெல்லாம் வாங்கவே போறதில்லைன்னு இருக்கும்போது கண்ணிலே பார்த்தால் என்ன தப்பு? சிரிக்கும் பன்றிகளும் முயல்களும் காளைகளும், யானைகளுமா நம்மை வரவேற்பதுபோல் வாசல்படிகளில் வச்சுருக்காங்க. எல்லாம் தங்க நிறம். இன்னிக்கு ரொம்பவே தங்கம் பார்த்தாச்சு இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்ற மிதப்போடு கடைக்குள் நுழைஞ்சு அவுங்க காட்டுன அரிய கற்கள் பாலீஷ் பண்ணும் முறைகளையும் அடுத்த ஹாலில் இருந்த நகைகளையும் பார்த்து பாராட்டி நாலு வார்த்தை சொல்லிட்டு ஒன்னும் வாங்கிக்காம வெற்றிகரமா வெளியில் வந்தேன்.

அங்கே, நம்ம நான்ஸி போட்டுருப்பதுபோல உடை அணிஞ்ச (யூனிஃபார்ம்) எல்லா கைடுகளும் உக்காந்து கதைபேசிக்கிட்டு இருக்காங்க. சொல்லிவச்சு இங்கே கொண்டுவந்து விட்டுடறாங்க. நாம் வாங்கும் நகையில் ஒரு கமிஷன் இவுங்களுக்கு உண்டாம். அடுத்த ஸ்டாப் இவுங்களோட சுற்றுலா ஆஃபீஸ். அங்கே போனால் ஒரு பத்திருபது மேசை போட்டுக்கிட்டு ஆட்கள் நம்மைப் பிடிக்க ரெடியா இருக்காங்க. என்னென்ன பார்க்க விருப்பம்? எத்தனை நாள் இருக்கீங்க? எந்த டூர் வேணும் இப்படி ஏகப்பட்ட கேள்விகள். அரைநாள் முழுநாள்ன்னு மொத்தம் 21 வகைகள் வச்சுருக்காங்க. நமக்கு விருப்பமான சில டூர்கள் நாள் முழுசும், இல்லைன்னா காலை 6 மணின்னு இருக்கு. நடக்காத வேலை.

யோசிச்சுட்டு போன் செய்து புக் பண்ணறேன்னு சொன்னால் கூடாதாம். இப்ப இந்த விநாடியே பதிவு செஞ்சுக்கணுமாம். போன் பதிவு எடுக்கமாட்டாங்களாம். 'வேணாம் ஆளைவிடு'ன்னு தப்பிச்சு வெளியே ஓடிவந்தேன். நம்ம வண்டி ட்ரைவர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தவர் ஓடிவந்து சாப்பாட்டை மூடிவைக்கப் போனார். பாதி சாப்பாட்டுலே யாரையும் எழுப்பறது பாவம்னு எங்க பாட்டி சொல்வது மனசுலே இருந்துச்சு. கூடவே எல்லாக் கஷ்டங்களும் இந்த ஒரு சாண் வயித்துத்துக்குதான்னு வேற அப்பப்பச் சொல்வாங்க. வேணாம். நான் காத்திருக்கேன். நீங்க சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வாங்கன்னேன். அதுவரைக்கும் சும்மா இங்கே நிக்கணுமா? . கொஞ்ச தூரத்தில் எதிர்வரிசையில் இருக்கும் துணிக்கடைக்குப் போகலாம். அங்கே தாய் சில்க் கிடைக்குமுன்னு நான்ஸி என்னைக் கூப்பிட்டுப்போனாங்க.

பிளெயினா எல்லா நிறங்களிலும் ஸூட் துணி மாதிரி ஒன்னு நிறைஞ்சு கிடக்கு. ரெண்டே நாளில் தச்சும் கொடுப்பாங்களாம். மீட்டர் 600 பத். ரெண்டு மீட்டருக்கு மேலே வாங்கினால் 500ன்னு குறைச்சுக்குவாங்களாம். ஹிந்தி நடிகர் ப்ரேம் சோப்ரா ஒரு படத்தில் விதவிதமான நிறங்களில் ஸூட் போட்டுக்கிட்டு வருவார். அப்படி ஒரு ஸூட்டில் கோபாலை நினைச்சுப் பார்த்தேன்.................. ஐயோ.....விடு ஜூட்:-)

இதுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சுட்டு வந்துட்டார் ட்ரைவர். நன்றியால் அவர் நெஞ்சு நிறைஞ்சு போச்சாம். என்னிடம் சொல்லச்சொல்லி 'தாய்' மொழியில் நான்ஸிகிட்டே சொன்னாராம். ம் ம் ....இருக்கட்டும். பரவாயில்லை.

இப்ப ஹொட்டேலுக்குத் திரும்பிப்போய்க்கிட்டு இருக்கோம். அரைநாள் சுற்றுலா முடிஞ்சது. மீதி இருக்கும் அரைநாளை என்ன செய்யப்போறேன்னு கேட்ட நான்ஸிக்கு, எனக்கு கிராண்ட் பேலஸ் போகணும். எவ்வளவு நேரம் எடுக்குமுன்னு கேட்டேன். அது உங்க நடை வேகத்தைப் பொறுத்துன்னாங்க. இதுக்குக் கட்டணம் எவ்வளவுன்னா.....

"இன்னிக்குப் பிற்பகலே போறதுன்னா 2500. இன்னொரு நாள் போகணுமுன்னா 3000 பத். இன்னிக்கே வச்சுக்கலாமா? "

அட ராமான்னு கூவக்கூட முடியாது. ராஜாவைக் கூப்பிட்டதா ஆகிரும்! இப்போ இருக்கும் அரசரைப் பார்த்துருக்கீங்களான்னு நான்ஸியைக் கேட்டேன். இல்லையாம். தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்காங்களாம்.

'ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும். இன்னிக்கு நான் தயாரா இல்லை. நாளைக்கு போகலாமான்னு யோசிச்சுச் சொல்றேன். போறதா இருந்தால் மாலை 7 மணிக்கு முன் ஃபோன் செய்யறேன்'னு செல் நம்பரை வாங்கி வச்சுக்கிட்டேன்.

திரும்ப அறைக்கு வந்தப்ப மணி பனிரெண்டே முக்கால். மேஜைமேல் கிடந்த இந்தக் கோவில் சுற்றுலா ப்ரோஷரைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்...... மூணாவது கோவிலா இருந்துருக்க வேண்டியது Wat Benchamabopit என்ற மார்பிள் கோவில். 'இருந்தாரா' புத்தர் அங்கே இருக்கார். நமக்குக்கிடைச்சது Wat Indraviharn என்ற நின்றார் கோவில். கிடைக்கணும் என்றுள்ளது கிடைச்சுருச்சு!


இன்னிக்கு டூர் பரவாயில்லை. 'நின்றார், இருந்தார், கிடந்தார்'ன்னு மூணு நிலைகளில் 'சாமி'யைப் பார்த்தாச்சு.

தொடரும்.......................:-)

Thursday, July 22, 2010

கிடந்தாரே................ கிடந்தார். (தாய்லாந்து பயணம் பகுதி 4)

சைனா டவுனைக் கடந்து போனோம். எல்லாமே பழையகாலக் கட்டிடங்கள். கீழே கடைகளும் மாடியில் வீடுகளுமாய். மற்ற பகுதிகளில் இருப்பதைப்போல கடைநேரம் என்று ஒன்னு வச்சுக்கலை. அவுங்கவுங்க வசதிக்கேத்த நேரத்துலே கீழே வந்து வியாபாரம் செஞ்சுட்டுப்போறாங்களாம். ஆனா..... இவுங்களுக்குன்னே நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதால் எல்லாம் ஓரளவு நல்லாவே போகுதுன்னாங்க நான்ஸி. பாதித்தெருவை அடைச்சமாதிரி கைவண்டி வியாபாரம், அங்கங்கே அழுக்குன்னு சைனாடவுனுக்கான லக்ஷணங்கள் குறையாமல் இருக்குது.

Wat PO ' வாட் போ' வாசலுக்குப்போய்ச் சேர்ந்தோம். நாம் கோவில் என்பதைத்தான் இவுங்க வாட் ன்னு சொல்றாங்க. நுழைவுக் கட்டணம் 50 பத். ரொம்பக் கலர்ஃபுல்லான இடம் இது. ச்சடின்னு(chedi.) இந்தச் ' ச' வை ஒரு மாதிரி இழுத்து ச்சஅஅ டி'னு உச்சரிக்கணும்) சின்னதும் பெருசுமா கூம்புவச்சக் கும்மாச்சி கோபுரங்களுடன் ஏராளமா அங்கங்கே நிக்குது. சில முக்கிய அரசர்களின் அஸ்திகள் இதற்கடியில் புதைக்கப்பட்டு இருக்காம். அரசர்கள் முதலாம்ராமா & மூன்றாம் ராமா வின் அஸ்திகள் இருப்பவை ரொம்பப்பெரிய ச்செடியாக இருக்கு. (இப்போது இருக்கும் அரசர் (நயன்)ராமா . King Rama IX)


ரெண்டு மூணு பிரகாரங்களா சுவர் எழுப்பி அதற்கான வாசல்களில் நுழைஞ்சு போகும்விதமா அமைஞ்சுருக்கு. செடிகளோடு செடிகளாக போன்ஸாய் மரங்கள் அழகான தொட்டிகளில். எல்லா இடங்களும் படு சுத்தம். இதுவே ரெட்டை மகிழ்ச்சி .

பதிவர் மார்கோபோலோ

ஒரு வாசலில் ரெண்டுபக்கமும் நிற்கும் சிலை மார்கோ போலோ வாம். இன்னொரு வாசலில் இதேபோல் நிற்பவர் யுவான் சுவாங். ஆஹா.... நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க! இவுங்க ரெண்டு பேரும்தான் பயணக்கதைகளின் முன்னோடிகள்!!!
பதிவர் யுவாங் சுவாங்குடன் ஒரு (வலை) பதிவர்

நம்ம மருதீஸ்வரர் கோவிலைப்போல இது இவுங்களுக்கான மருதீஸ்வரர். ஒரிஜனல் தாய் மஸாஜ் இங்கே இருந்துதான் ஆரம்பிச்சதாம். மூலிகை எண்ணெய்களைக்கொண்டு மஸாஜ் செய்து விடுவாங்களாம். இந்தக்கலையைப் படிக்கும் பள்ளி இந்த வளாகத்துக்குள்ளே இருக்கு, மஸாஜ் பண்ணிக்கிறீங்களான்னு நான்ஸி கேட்டாங்க.. ஆளை விடுங்கன்னேன். தாய் மருந்து வகைகள், யோகாவின் பலநிலைகளைக் காட்டும் சிற்பங்கள், இவற்றை வடிக்கும் பயிற்சிப்பள்ளிகள் இப்படி பலதும் இந்த இடத்தில் இருக்கு. இவையெல்லாம் இந்தக் கோவில் வர்றதுக்கு முன்பே வந்துருச்சாம்.

கோவில் கட்டப்பட்டது 1778. அதுக்குப்பிறகு அரசர் மூன்றாம் ராமா காலத்தில் ( 1821 - 1851) ஒரு முறையும், 1982 இல் ஒருமுறையும் பழுதுபார்த்துச் சரி செய்யப்பட்டுருக்கு. முதல் முறை பழுதுபார்த்தக் காலக்கட்டங்களில்தான் (மூன்றாம் ராமா அரசில்) மருத்துவ விவரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் பலதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். மருத்துவப் பயிற்சிப்பள்ளிகள் இப்போ சமீபத்தில் 1962 தொடங்கப்பட்டவைகளாம்.

தாய் மருந்து வகுப்பு நடக்குது

புத்தபிக்ஷுக்கள் இப்பவும் இந்தப் பள்ளிகளை நடத்திக்கிட்டு இருக்காங்க. படிக்கும் மாணவர்களும் ஏராளம். மேலும் கட்டிடக்கலை, கட்டிடங்களை வெளிப்புறம் அலங்கரிக்கும் கலையைச் சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளும் இங்கே இருக்கு.
வண்ணமயமான கோபுரங்களுக்குக் கிட்டே போய்ப் பார்த்தால் மின்னும் ஃபோர்ஸலீன் ஓட்டுத் துண்டுகளால் அலங்கரிச்சு இருக்காங்க. கண்ணைப்பறிச்சுக்கிட்டுப் போகுது ஒவ்வொன்னும். எவ்வளவு பொறுமை வேணும் இதுக்கெல்லாம்? மலைப்புதான். சிலர் இதுமேலே எல்லாம் ஏறி நின்னு படம் எடுத்துக்கிட்டாங்க:( ( அது ஒரு இந்திய ஜோடின்னு சொல்லவும் வேணுமோ!)
இன்னொரு இடத்தில் தாய் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டபடி இருக்க, ஒரு பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் 'வாட்' பார்க்க வந்துச்சு. சுற்றி வந்தப்ப எருமை வாகனத்துலே எமன் உக்கார்ந்து பாசக்கயிறைக் கையில் வீசி வர்றான். இது யாருன்னு தெரியுமான்னு நான்சியைக் கேட்டால் ...ஊஹூம். ஏதோ ஒரு சிலை(யாம்) ஆஹா..... யமா உன்னை எப்படி உலகம் மறக்கும்?
பக்கத்துலே இன்னொரு மேடையில் சிவன் லிங்கரூபமாய்!! உசரம் கூடுதல். அவரைச்சுற்றிச் சின்னச்சின்ன சிலாரூபங்கள். லிங்கத்தில் ஒரு விரிசல்போல கோடு. இதுக்கு ஒரு கதையை நானே சொன்னேன். மார்கண்டேயனைக் கொல்ல யமன் வந்தப்ப அவன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான். ஆனாலும் யமன் பயப்படாமத் தன் தொழிலைப் பார்க்க, வீசுன பாசக்கயிறு மார்கண்டேயன் மேலும் சிவன்மேலும் விழுந்துச்சு. அந்த அடையாளம்தான் இது. (பொருத்தமா இருக்குல்லே?)
வளாகம் முழுசுவதும் அழகழகான ரெண்டு பக்கமும் திருகின காதுகளா இருக்கும் அலங்காரத்தோடு தங்கக்கதவு, தங்க நிலைவாசலோடு கோவில்கள். நிறைய சந்நிதிகள் மூடியே கிடக்கு. திறந்திருந்த ஒன்னில் நுழைஞ்சால் புத்தர் ஆதிசேஷன் மேல் சம்மணம்போட்டு உக்கார்ந்துருக்கார்.
இந்த சேஷனுக்கு ஏழு தலை. நாலு சுத்துச் சுத்தி மேலே வந்து குடைபிடிக்குது. தனித்தனியா ஏழு தலை. சின்னதா 'ஓ' ன்னு வாய்பிளந்து நாக்கைக் காமிக்குதுகள் எல்லாம். புத்தருக்கு ரெண்டு சிறகுகள் வேற! சுவர் ஓரமா ஒரு பக்கம் இருந்த கப்போர்டு மேலே ஏழுவித நிலைகளில் புத்தர் கிடந்தும் நின்னும் இருந்துமா இருக்கார். ஒவ்வொருத்தர் முன்னாலும் ஒரு பாத்திரம். பவதி பிக்ஷாம் தேஹி?
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு புத்தரை வணங்கணுமாம். சண்டே புத்தா, மண்டே புத்தான்னு .... அட!! எனக்குப் புதுத் தகவலா இருந்துச்சு. அந்தப் பாத்திரத்தில் பக்தர்கள் காணிக்கை போட்டுட்டுப் போறாங்க. தினம் வரமுடியலைன்னா? ஏழுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சம் போடுவாங்களா இருக்கும். ஆனா உண்மையில் இந்த ஏழு நிலைகள் புத்தர் கோவில் நகரின் வெவ்வேறு இடங்களில் தனிக்கோவில்களா இருக்கு.

பிரகாரத்தைச் சுற்றி அடுத்த வாசலில் நுழைஞ்சோம். இங்கே காலணிகளை வைக்க ஸ்டேண்டு எல்லாம் வச்சுருக்காங்க. குறிப்பறிந்தேன். பெரிய ஹாலின் வலது இடது பக்கங்களில் வாசல்கள். வலது வாசலில் நுழைஞ்சால்....... கிடக்கிறார். நெடுநீளமா கால் நீட்டி, ரெண்டு பாதங்களையும் ஒருசேரவச்சு, வலதுகையைத் தலைக்கு அண்டைக்கொடுத்து, இடது கைநீட்டி இடது தொடைமேல் வச்சு, லேசாக் கண்ணைத்திறந்து ஒரு கீழ்ப்பார்வை பார்த்துக்கொண்டு ..... ஒரு உசர்ந்த மேடைமேல்.......அடடடா......... அள்ளிமுடிஞ்ச கொண்டையில் சுருள்சுருளா முடிகள். பனிக்குல்லா போட்டதுபோல்...... அள்ளிக்கிட்டுப்போகுது!!!!! அட்டகாடமான வேலைப்பாடுகள் உள்ளத் தங்கத்தலையணை வேற!!!!!

இவர்மட்டும்தான் கால்நூற்றாண்டு அப்படியே இருக்கார். போனமுறையும் கிடப்பு இதேதான்! Reclining Buddha
பளபளன்னு தங்க நிறம். நீளமோ 46 மீட்டர்! பாதங்கள் ரெண்டும் அஞ்சு மீட்டர் அகலம்! மூணு மீட்டர் உயரம்! பாதத்தின் அடியில் ஜாதகக்குறிப்பு போல ஒரு டிஸைன். உலகத்தோட ஜாதகமாம்! பாதங்களின் விரல்கள் எல்லாமே ஒரே நீளம். விரல்களின் கணுக்களும் பின்புறம் ரேகைக் குறிகளும் மும்மூணு. (நமக்கெல்லாம் கை விரல்களில் மூணும் கால்விரல்களில் ரெண்டே பகுதியாவும் அவைகளில் மேல் பகுதியில் மட்டுமே ஒரே ஒரு ரேகைக்குறி இருக்கு) இங்கேயும் படம் எடுத்த ஒரு தடையும் இல்லை.

பாதங்களின் அடிப்புறம் உள்ள டிசைன்கள் 'மதர் ஆஃப் பேர்ள்' என்ற சிப்பிவகையைக் கொண்டு செய்யப்பட்டதாம்.


கிடந்தவரை 'இடம்' வந்தால்...... சின்னச்சின்ன பாத்திரங்களாக ஒரு நீண்ட வரிசை சுவத்தோரம் நிக்குது, இன்னொரு பக்கம் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள சின்னச்சின்ன அலுமினியக் கிண்ணிகளில் சில்லறைக்காசுபோல நிறைச்சு வச்சுருக்காங்க. காணிக்கையாக கரன்ஸிகளை உண்டியலில் போட்டுட்டு ஒரு கிண்ணத்தைக் கையில் ஏந்தி, வரிசையா நிற்கும் 108 பாத்திரங்களில் ஒவ்வொரு காசா போட்டுக்கிட்டே வந்து கடைசியில் இருக்கும் மேசை மீது வெறுங்கிண்ணியை வச்சுட்டுப்போறாங்க.
இவர் செவ்வாய்க்கிழமை புத்தர். ஆஹா...அடிச்சேன் ப்ரைஸ். இன்னிக்கு செவ்வாய்க்கிழமைதான்!!!!!! அமைஞ்சுபோச்சு பாருங்களேன்! புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!
வெளியே வரும் வாசலில் சின்னதா ஒரு ஹாலும் முன் பக்கமண்டபமுமா இருக்குமிடத்தில் வார புத்தர்கள் அனைவரது உருவச்சிலைகளும் வச்சு அங்கே பொதுமக்கள் பூ, பழங்கள் வச்சு ஊதுபத்தி ஏத்தி வழிபாடு நடத்திக்கிறாங்க. நோய்க்காக மருந்து எடுத்துக்கறவங்க, இங்கே அந்த மருந்து மாத்திரைகளைக் கொண்டுவந்து சாமி முன்வச்சுக் கும்பிட்டு எடுத்துக்கிட்டு போறாங்க. மருந்தீச்வரர்ன்னு நான் நினைச்சது சரியாத்தான் போச்சு.

விட்டுருந்த மழை மறுபடி ஆரம்பிச்சது. நாங்களும் ஓடிப்போய் வண்டியில் ஏறினோம்.

தொடரும்........................................:-)