குழந்தையின் கால், கிழிஞ்சுருந்த ஏணைத் துணிவழியா வெளியே நீட்டிக்கிட்டு இருந்துச்சு. பட்டுப்போலச் சின்னப் பாதங்கள். அதுலே கிச்சுக்கிச்சு மூட்டி விளையாடுதுங்க மத்த பசங்கள். அந்த ஏணைக்கு ஓய்வு ஒழிச்சலே கிடையாது. ஒன்னு புள்ளை தூங்கும், இல்லேன்னா அதையே ஊஞ்சலா நினைச்சுக்கிட்டு நாங்க பசங்க எல்லாம் ஆடி ஆட்டம் போடுவோம். குப்புறப் படுத்துக்கிட்டு காலாலே உந்தியாடறதுதான். சின்னச் சின்ன வெளையாட்டுச் சாமான்களைக் கொஞ்ச தூரத்துலேப் பசங்க வைக்கும்போது, ஆடிக்கிட்டே அதைக் கைநீட்டி எட்டி எடுக்கணும். வத்தலகுண்டு மாரியம்மன் திருவிழா சமயத்துலே தொட்டில்ராட்டினம் ஆடுன அனுபவம் இப்ப கைகொடுக்குது எனக்கு. ' குழந்தைக்கு உடம்பு நோகும். அப்படியெல்லாம் ஆடாதீங்க'ன்னு அக்கா விரட்டிக்கிட்டே இருக்கும். நாங்க யாரும் அக்கம்பக்கம்போய் விளையாடவே மாட்டோம். எங்களுக்குள்ளேயே ஆட்டம் போடறதுதான்.
ஹாலாட்டம் இருக்கும் வீட்டு நடுவில் கூரையில் இருந்து நல்ல தாம்புக் கயிறு கட்டிவிட்டுருப்பாங்க. அதுலே ஒரு பெரிய நீளமான 'எஸ்' கொக்கி. ரெட்டு மாதிரி கெட்டியா இருக்கும் துணியை, லுங்கி போல ரெண்டு ஓரத்தையும் சேர்த்துத் தைச்சு வாங்கிப்போம். அதை அப்படியே அந்தக் கொக்கியில் கொசுவி மாட்டுனா தொட்டில். குழந்தை ஈரம் பண்ணிருச்சுன்னா அந்தத் தொட்டில்துணியை, நல்ல பாகம் கீழே வர்றதுபோல இழுத்துக்கலாம்.
மறுநாள் அதைத் துவைச்சுக் காயவச்சு எடுக்கணும். மழைக் காலத்துலே சட்னு காயாது பாருங்க. அப்பப் பழம்புடவையைக் கட்டிவிடறதுதான். அதுலே தொங்காதீங்க, கிழிஞ்சுருமுன்னுக் கத்திக்கிட்டே இருந்தாலும், நட்டநடுவிலே இருக்கும் தொட்டிலைப் போறப்ப வாறப்பத் தொடாமப் போகமுடியுதா என்ன?
' இவளாலேதான் சீக்கிரம் துணி கிழிஞ்சுருது'ன்னு என்னையும் சிலசமயம் திட்டும். 'தொட்டிலைப் பார்த்தா விடமாட்டா'ன்னும். நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது, தொட்டில்லேதான் தூங்குவேனாம். எல்லாப் புள்ளைங்களும்தான். இதுலே என்ன விசேஷம்? நல்லாக் கொள்ளுக்கொள்ளுன்னு பேசிக்கிட்டு ரெண்டு மூணு வயசு வரையும் தொட்டில் வேணுமுன்னு அடம்பிடிச்சா எப்படி? அதுலேயும் அக்காதான் ஆட்டணும். பாதித் தூக்கத்துலேயும் வேற யாராவது ஆட்டுனாக் கண்டுபிடிச்சுருவேனாம். 'நீங்க ஆட்டாதீங்க. பெரியக்காவை வரச்சொல்லுங்க'ன்னு சொல்வேனாம். 'வாய் இந்தக் கிழி கிழியுது. பாய்லே படுத்தா என்ன'ன்னு தினமும் திட்டு வாங்குவேனாம். அக்காதான் அப்பப்ப இதைச் சொல்லும். மூத்த பசங்க ரெண்டும், 'நீங்க ஆட்டாதீங்க. பெரியக்காவை வரச்சொல்லுங்க'ன்னு என்னைக் கேலி பண்ணும்.
ஒருநாள் நான் குழந்தையை ஆட்டிக்கிட்டே எதேச்சயாக் கண்ணை உசத்தி அண்ணாந்து பார்த்தா....... ஓலைக்கும் மூங்கிலுக்கும் இடையில் வெள்ளையா எலி நகர்ந்து போச்சு. எங்கேதான் போகுதுன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.. அது அந்த இடத்தைக் கடந்து போய்க்கிட்டே இருக்கு. "அக்கா, சட்னு வந்து பாருங்க. நீளமா எலி போகுது''ன்னு சொன்னேன். விருட்னு குழந்தையைத் தூக்கிக்கிட்டு, என்னையும் ஒரு கையாலே தரதரன்னு இழுத்துக்கிட்டு வெளியே வந்துருச்சு அக்கா. நல்ல வேளையா மதீனா அக்காவோட கொழுந்தன் வீட்டுலே இருந்தார். குரல் கொடுத்ததும் ஒரே எட்டுலே வேலியைத் தாண்டிக் குதிச்சு ஓடிவந்து, எங்கெ எங்கென்றார். உள்ளே கையைக் காமிக்குது அக்கா. அப்படியே அதுக்கு முகமெல்லாம் வேர்த்துவிட்டுருக்கு. ஆச்சரியம் என்னன்னா.....'அது' இன்னும் நகர்ந்து போய்க்கிட்டே இருக்காம். அடுப்பாண்டை இருந்த விறகுக் கட்டையை ஒரு கையிலே பிடிச்சுக்கிட்டு, பார்வையை அங்கே இருந்து எடுக்காம ஓடிப்போய் அண்ணனை வரச்சொல்லுன்னு மெதுவாச் சொல்றார்.
கொஞ்ச நேரத்துலே அக்கம்பக்கம் ஆம்பளையாளுங்க எல்லாம் வந்துட்டாங்க. வீட்டுக் கோடியில் மூங்கிலோடு சேர்ந்து சுவத்துப் பக்கம் இறங்கிருச்சாம். அங்கே சுத்திவர நின்னுக்கிட்டுக் கடப்பாரையில் கொஞ்சம் கொஞ்சமாச் சுவத்தை இடிச்சுக்கிட்டு நின்னாங்க. வெளியே போயிருந்த மாமா, எதுக்கு இம்புட்டுக் கூட்டமுன்னு பார்த்துக்கிட்டே வந்துருக்கார். விசயம் இதுன்னதும், புள்ளெகுட்டி இருக்கற இடம். விட்டுறக்கூடாது. சுவத்தை இடிச்சே பார்த்துறலாமுன்னு சொன்னதும் மெள்ள இடிக்க ஆரம்பிச்சாங்க. எல்லாரும் கவனமா தூரமாத் தள்ளி நின்னுக்கிட்டே, எந்த நிமிசமும் ஓடிறலாம் என்ற மாதிரி இருந்ததை நான் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு நின்னேன். தாய்க்கோழி, குஞ்சுகளைச் சிறகில் ஒளிச்சு மூடறமாதிரி அக்கா புள்ளைங்களை அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு வாசப்பக்கம் பாத்திரம் தேய்க்கும் இடத்தில் போட்டுருந்த ஒரு கல்லுமேலே ஏறி நிக்குது. ஒரு அடி உசரம் வரும் கல்லுதான். எனக்குச் சிரிப்பாவும் வருது பயமாவும் இருக்கு. நான் அப்பப்ப இங்கே வந்து 'அங்கே' என்ன நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.
நேரம் போய்க்கிட்டு இருக்கு. தேடறதைக் காணோம். ஆளாளுக்கு ஒன்னு சொல்றாங்க. இம்புட்டுதூரம் இடிச்சுட்டுச் சும்மா விட முடியாது. இங்கே லேசாத் தெரியுதுன்றார் ஒருத்தர். 'செங்குத்தா இறங்கியிருக்கு. இன்னும் கொஞ்சம் சுவத்தை இடிச்சுட்டாப் போதும். கீழ்ப்பக்கமா கடப்பாரையோடு தயாரா நில்லுங்க. தெரிஞ்சதும் ஒரே போடு'
அதே போல ஆச்சு. கடப்பாரை முனையால் மண்ணோடு சேர்த்து ஒரே குத்து. அதுக்குமேலே சுவத்தை இடிச்சுக்கிட்டே போகவும் சடார்னு துள்ளி வால் இந்தப் பக்கம் சுழட்டி விழுந்து..... பாதிசனம் ஓடிருச்சு. கோதுமை நாகமாம். ஆறடின்னாங்க. விட்டுருந்தா, நம்ம மேலே வஞ்சம்வச்சு வந்துருக்குமாம். அக்காவைச் சுத்திப் பொம்பளையாளுங்க கூட்டம்.
அன்னு அண்ணன் இருக்காரு பாருங்க, அவரோட அம்மாதான் நாகத்துக்கு சாந்தி செய்யலேன்னா தோஷமுன்னு சொல்லி, 'தீவச்சு எரிச்சுப் பாலூத்துங்க'ன்னாங்க.
புள்ளைங்கெல்லாம் எரியுற நாகத்தை வேடிக்கை பார்க்குதுங்க. அக்கா 'தரணி கண்ணைப் பொத்து'ன்னு கத்துது. , என் இடுப்புலே ஏறி உக்கார்ந்துக்கிட்டு இருந்த தரணி இறக்கிவிடு, கிட்டேப்போய்ப் பார்க்கணுமுன்னு அழுவுது. நல்ல வேடிக்கை. அப்புறம் கரிஞ்சுபோய்க்கிடந்ததுக்குக் கொஞ்சம் பால் ஊத்துனோம். மாமா குழிதோண்டி அதைப் புதைச்சார்.
அன்னிக்கு ராத்திரி வீட்டுக்குள்ளே போகப் பயந்துக்கிட்டு எல்லாரும் திண்ணையில் நெருக்கியடிச்சுக்கிட்டுப் படுத்தோம். பொதுவாப் பாய்லே படுக்கறவங்க, வீடுபூராவும் உருண்டு வட்டம் போட்டுக் காலையில் பார்த்தால் மூலைக்கொன்னாய் கிடப்போம். இன்னிக்கு பயமோ என்னவோ ஆடலை, அசங்கலை. மறுநாள் தோண்டுன சுவத்துலே மண்ணைக் குழைச்சு வச்சு அடைச்சாங்க. ஆறடி சமாச்சாரம், அப்புறம் அக்கம்பக்கத்துப் பேச்சுலே வரும்போது ஏழடி எட்டடின்னு வளர்ந்துக்கிட்டே போச்சு:-)
அக்கா... புள்ளைங்களோடு கல்லுமேலே ஏறி நின்னதை இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ரெட்டைப் பாம்பை எட்டிமரத்துக்கிட்டே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு, பயமே இல்லாம அங்கே போய்வந்துக்கிட்டு இருந்த பொம்பளை, குழந்தைத் தொட்டிலுக்கு மேலே, 'அது' ஊர்ந்து போகுதுன்னதும் எப்படி நடுங்கிருச்சு பாரு.
ஒருநாள் பேச்சுவாக்குலே, பரண்மேலே இருக்கும் பழையபொட்டியிலே கொலுப்பொம்மைங்க கிடக்குன்னுச்சு. மாமா வந்ததும் பொட்டியை இறக்கித்தாங்கன்னு பிடிவாதம் புடிச்சு ஜெயிச்சேன். மாமாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். அம்மை வார்த்துச் செத்துட்டாங்களாம். அவுங்க இருந்தப்ப வருசாவருசம் கொலு வைப்பாங்களாம். ரொம்ப வருசமாச்சு. எல்லாம் அக்கா, கலியாணங்கட்டமுன்னே நடந்த விசயமாம். தங்கச்சி மேலே இருந்த பிரியத்துக்காகப் பொம்மைப்பெட்டியை இங்கே கொண்டுவந்து வச்சுக்கிட்டாராம். இல்லேன்னா அப்ப அவுங்க அம்மா இருந்த துக்கத்துலே எல்லாப் பொம்மைகளையும் உடைச்சே போட்டுருப்பாங்களாம். பொட்டியிலே இடமில்லைன்னு ஒரு பெரிய செட்டியார் பொம்மையைத் துணியிலே சுத்தி மூலையில் வச்சுருக்கார்.
நம்ம வீட்டுலே கொலுவச்சா எவ்வளோ ஜோரா இருக்கும். இந்த வருசம் வைக்கலாமான்னு சொன்னதுக்கு, 'ஆமா இங்கே கிடக்கிற கிடப்புக்கு இதுதான் குறைச்சலு'ன்னு சலிச்சுக்கிச்சு. கலியாணம் கட்டுன புதுசுலே இந்தப் பொட்டியைக் கண்டுபிடிச்சு, ஆசையா மாமாகிட்டே கொலுவைக்கலாமுன்னு கேட்டதுக்கு, 'வேணாம். அம்மாவுக்குப் புடிக்காது'ன்னுட்டாராம். நாங்க, ஆளுக்கு ஒரு பொம்மைன்னு எடுத்துவச்சு விளையாடி ஒவ்வொன்னா உடைச்சது வேற விஷயம். செட்டியாரை மட்டும் சுவத்தோரமா வச்சுக் கைகுழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கிட்டு இருந்தோம். அதுவும் மார் தேய நீச்சலடிச்சு வந்து பொம்மையைப் புடிச்சுக்கிட்டு எந்திரிக்கப் பார்க்கும். முடியலைன்னா அழுதுக்கிட்டே மூக்கைக் கடிச்சுரும். மொன்னை மூக்குச் செட்டியாரா ரொம்ப நாள் அவர் அங்கேயே கிடந்தார்.
அண்ணன் ஒரு சமயம் ரெண்டு நாளு லீவு கிடைச்சப்ப இங்கே என்னைப் பார்க்க வந்துருந்தார். பிள்ளைங்க கூச்சல், வீட்டுவேலை, இன்னபிற சமாச்சாரங்களைப் பார்த்துட்டு ஒன்னும் சொல்லாமத் திரும்ப மெட்ராஸ் போயிட்டார். படிக்கவே அமைதியான நேரம் கிடைக்காத சூழ்நிலைன்னு அவர் மனசுலே சட்னு பட்டுருக்கு போல. எனக்குப் படிக்கத் தோதா ஒரு இடம் வேணுமுன்னு தீர்மானிச்சு மெட்ராஸ்லே ஒரு போர்டிங் ஸ்கூலில் இடம் வாங்கிட்டார். இந்தப் பள்ளிக்கூடத்துலே ஒரு விசேஷம் என்னன்னா...... இங்கேதான் என் அம்மா படிச்சாங்க. என் ரெண்டு சித்திகளும்கூட இங்கேதான் படிச்சாங்களாம். அவுங்க ஆலோசனைப்படிதான் என்னை இங்கே சேர்த்தாங்க.
அங்கே போனது, அங்கே அப்ப இருந்த சூழ்நிலை, மத்த விவரம் எல்லாம் நிஜமாவே தனியா எழுதவேண்டிய 'கதை'தான். இப்ப நினைச்சுப்பார்த்தால் இனிமையான வாழ்க்கை. ஆனா அப்போ ஏன் அவ்வளவாப் பிடிக்கலைன்னு புரியலை. ஆனா அங்கே 10 பிள்ளைகளுக்கு நான் அக்காவா இருந்தேன்:-)
அங்கேயும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருந்துச்சு. இப்போ, இந்தக் கதை நாயகி 'அக்கா' என்றதால் அக்காவைப் பார்க்கப் போலாம்.
தொடரும்.........
Friday, December 05, 2008
அக்கா ( பகுதி 7 )
Posted by
துளசி கோபால்
at
12/05/2008 09:19:00 AM
55
comments
Labels: அனுபவம்
Wednesday, December 03, 2008
அக்கா ( பாகம் 6)
மாமா ஒரு வேலையும் செய்யமாட்டாருன்னு நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கணும். அந்தூருலே வாரச்சந்தை, திங்கக்கிழமை கூடும். சந்தை கூடும் இடம் ஆசுபத்திரிக்குப் பக்கத்துலே இருக்கும் மைதானம். இதைத் தொட்டு ஒரு ஆரம்பப்பாடசாலையும் இருக்கு. பள்ளிக்கூடம் திங்கள் மதியத்துக்கு மேலே லீவு. சந்தைக்கூட்டம் பிள்ளைங்களுக்குத் தொந்திரவா இருக்குமுல்லே?
வாராவாரம் சந்தைக்குப்போய் சாமான் வாங்கிவர்றது மாமாவோட வேலை. நானும் ராணியும் கூடவே நாலைஞ்சு பைகளைக் கொண்டு போவோம். காய்கறி, வெங்காயம் பூண்டுன்னு வாங்கி அந்தப் பைகளில் பாதி வரை ரொப்புன ஒன்னை நான் தூக்கிக்குவேன். கனமான சிலது மாமா. நம்ம ராணிக்கும் ஒரு பெரிய பை. கவலைப்படாமத் தூக்கிக்கிட்டு வருவாள். அதுலெ என்ன இருக்குமுன்னு சொல்லுங்க பார்க்கலாம். பொரியும், பொரிகடலையும். வறுத்த நிலக்கடலை ஒரு உழக்கு தனியா வாங்கிக்குவார். அது அக்காவோட ஸ்பெஷல்.
நம்ம பக்கத்துவீட்டு கணேஷ் சாரும் சந்தைக்கு வந்துக் கொஞ்சம் சுத்திட்டு, கொஞ்சம் காய்கறின்னு வாங்கிக்குவார். அவரும் பொரி, நிலக்கடலை ரெண்டும் சேர்த்து ஒரு பெரிய பொட்டலம் வாங்குவார். கோமாளித் தொப்பி மாதிரி கூம்பா இருக்கும் இந்தப் பொட்டலம். அன்னிக்கு அவருக்கு ராச் சாப்பாடு பொரிதான். கூம்பை ஒரு கையில் புடிச்சுக்கிட்டு, இன்னொரு கையாலே பள்ளிக்கூட வேலைகளைப் பார்த்துக்கிட்டோ, இல்லை பொஸ்தகம் எதானும் படிச்சுக்கிட்டோ பொரியை அள்ளி அள்ளி வாயிலே போட்டு அரைச்சுக்கிட்டு இருப்பார். அரிக்கேன் விளக்கு ஒன்னு அவரோட ட்ரங்குப் பொட்டி மேலே உக்காந்துருக்கும். அதுதான் அவரோட மேஜை. அது கல்லு வீடுல்லே.... பக்கவாட்டுலே ஒரு ஜன்னல் இருக்கு. அதுவழியாத் தெரியறதுதான்! பச்சைக் காய்ங்க எதுவும் ஒருவாரம் வரை தாங்காதுன்றதாலே எல்லாரும் ரெண்டு மூணு நாளைக்கு வர்றமாதிரிதான் வாங்கறது.
வாரத்துக்கு நடுவுலே காய் எதாச்சும் வேணுமுன்னா, இன்ஸ்பெக்டர் வீட்டுலே போய் வாங்கி வருவேன். அவர் டீவோவா இருந்து ரிட்டயர் ஆனவராம். நல்ல நாய் இருக்கு அங்கே. முதல்லே ரெண்டு வாட்டி என்னைப் பார்த்துக் குரைச்சது. அப்புறம் அடிக்கடி அங்கே போனதுலே பழகிருச்சு. இன்ஸ்பெக்டரம்மா நல்லா தாட்டியா இருப்பாங்க. என்ன வேணுமுன்னு கேட்டுக்கிட்டு அவுங்களே போய் காய்களைப் பறிச்சுக்கிட்டு வந்து தருவாங்க. நாங்க யாரும் கூடப்போய்ப் பார்க்க விடமாட்டாங்க. 'நான் வர்றவரை இங்கே உக்காந்துரு'ன்னு சொல்லிட்டுப் போவாங்க. நான் அந்த டைகர் கூட விளையாடிக்கிட்டு இருப்பேன். முருங்கைக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, முளைக்கீரை பூசணிக்காய், அவரை, புடலைன்னு அங்கே கிடைக்கும்.
இந்தப் பேட்டை எனக்கு நல்லாப் பழகிருச்சு. ரெண்டு மூணு வீட்டுலே பன், பிஸ்கட்டு எல்லாம் செஞ்சு கடைக்குப் போடுவாங்க. வீட்டுக்கு வெளியே பெரிய சமாதிபோல கட்டி இருக்கும். நான்கூட மொதப் பார்த்தப்ப அங்கெ யாரையோ புதைச்சுருக்கு நினைச்சேன். அப்புறம் பார்த்தா தகரத்துலே ஒரு குட்டிக் கதவு இருக்கு. அதுக்குள்ளே தான் பன் மாவைத் தகரத் தட்டுலே அடுக்கி உள்ளே வைச்சு எடுக்கறாங்க. சூடா பன் வாசனை நல்லா இருக்கும். சிலநாள் அங்கே போய் வாங்கிக்கிட்டு வருவேன். ஒரே ஒரு பொட்டிக்கடை இருந்துச்சு. துணி துவைக்க நீலக்கலர் பார் சோப் அங்கே வாங்குவோம். 'நிப்பட்டு' அங்கே நல்லா இருக்கும். சோம்பலே இல்லாம ஓடிப்போய் ஓடி வருவேன்.
அந்த ஏரியா முழுசும் செம்மண் பூமி. வெறுங்காலுலே நடந்து நடந்து காலெல்லாம் மண்ணு புடிச்சுக் கிடக்கும். 'செருப்புப் போட்டுக்கிட்டுப் போ'ன்னு அக்கா கத்தும். செருப்பை கூரைச் சரிவிலே உள்புறமா சொருகி வச்சுருப்போம். அதை எடுத்தாவே தரணி கண்டுக்கும். அக்கா எப்பவும் பாதித்துணிக்குச் சோப் போட்டுக்கிட்டு இருக்கும்போதுதான், 'சோப் பத்தாது, ஓடிப்போய் வாங்கியா'ன்னும். நம்ம லைன் தான் ஊருக்கே கடைசி. அங்கெ இருந்தே சோளக்காடுதான் கண்ணுக்கு எட்டுன தூரம் வரை. ரொம்ப தூரம் காட்டுக்குள்ளே போனா ஒரு எட்டி மரம் வரும். அதுதான் இந்தப் பகுதிக்கு கொல்லைக்காடு. ஆளுக போய்வந்தே சோளக்காடுலே ஒரு ஒத்தயடிப் பாதை உரம்புடிச்சுக் கிடந்துச்சு. வீட்டுலே ஒரு காந்திக் கக்கூஸ் கட்டிக்கலாமுன்னு அக்கா கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அடுத்தவருசம் பார்க்கலாமுன்னு மாமா சொல்லிக்கிட்டே இருந்தார். அக்கா எப்பவும் இருட்டோட எந்திருச்சு போயிட்டு வந்துரும். ஒருதடவை 'சரசர'ன்னு ரெண்டு பாம்பு பின்னிப்பிணைஞ்சு போறதைப் பார்த்தது முதல் டார்ச் லைட் எடுத்துக்கிட்டு போக ஆரம்பிச்சது.
பள்ளிக்கூடத்துலே என்னைச் சேர்க்கறதுக்கு முன்னாலே மூணு செட் பாவாடை சட்டைத் துணி எடுத்துத் தைக்கக் கொடுத்துருந்தோம். இப்பப் பொழுதெல்லாம் தேவை இருக்கோ இல்லையோ, துணிமணிகளை வாங்கிக் குவிச்சுக்கிட்டு இருக்கோமே அப்படியா அந்தக் காலத்துலே? தீபாவளி, பொங்கல், பொறந்தநாள் இப்படித்தான் துணிமணி எடுப்பாங்க. பள்ளிக்கூடம் திறக்கச்சொல்ல அதுக்குன்னு ரெண்டு மூணு சட்டைத்துணி.
அக்காவுக்கும் புள்ளைங்களுக்கும் மாமாவே துணிமணி எடுத்தாருவார். பொதுவா ஆம்புளைங்களுக்குத் துணியில் 'கலர் பார்க்கத்' தெரியாது. என்னவோ ரெண்டு நூல்புடவை, அதுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஜாக்கெட்டுத் துணின்னு இருக்கும். அக்கா ஒன்னுமே வாயைத் திறந்து சொல்லாது. பேசாம வாங்கிவச்சுக்கும். இதே எங்கூட்டுலே இருந்தப்ப?
அப்பவும்தான் அக்கா கடைகண்ணிக்குப்போய் துணி எடுக்கக் கூட வராது. ஆனா அம்மா, கடைக்காரப்பையன் கிட்டே ஏழெட்டு எடுத்து வீட்டுக்குக் கொண்டுவரச் சொல்வாங்க. உள்ளூர் மருத்துவர்ன்னா ஒரு மரியாதை இருந்துச்சுல்லே. கடையிலும் வியாபாரம் ஆகணுமே. அவுங்க சொன்னதுக்கு ரெட்டையா நல்லதுகளையெல்லாம் மூட்டைகட்டிக்கிட்டு கொண்டாந்துருவாங்க. அந்தப் புடவைகளைப் பார்த்து அக்கா தனக்குப் பிடிச்சதை ரெண்டு மூணு எடுத்துக்கும். சின்னக்காவும் நானும் கடையிலேயே போய்ப் பார்த்து எடுத்துக்குவோம்.
புள்ளைங்க பாடு பிரச்சனையே இல்லை. அதான் அடுக்கடுக்கா இருந்துச்சுங்களே. அதுங்க வளர வளர நல்ல கவுனுங்க கைமாறிக்கிட்டே வரும். தினப்படிப் போட்டுக்கும் சீட்டி கவுனுங்க, இதுங்க பிரட்டற பிரட்டலில் நாலுமாசம் வந்தா ஜாஸ்தி. எனக்குத் துணி எடுக்கணுமுன்னதும் நான் மாமாகூடவே போய் வாங்கியாந்தேன். அங்கெல்லாம் கடைக்காரரே, பசங்களைப் பார்த்துட்டு, எவ்வளவு துணி எடுக்கணுமுன்னு சொல்வார். நாலுகெஜம் வேணும். வளர்ற புள்ளையில்லே. பாவாடைக்கு டக் வச்சுத் தைச்சுக்கிட்டா வேணுங்கறப்பப் பிரிச்சுவிட்டுக்கலாம்னு. சரி...இது கிடக்கட்டும். எங்கே விட்டேன்......
அந்த தையல்காரர் பெயர் மன்னார். அவுங்க வீட்டுலே வீட்டுக்குள்ளேயே ஒரு பெரிய பாம்புப் புத்து, கூரையை தொடும் அளவில் இருக்கும். மனைப் பாம்பாம். மஞ்சள் குங்குமம் எல்லாம் புத்துக்கு பூசி வச்சுருப்பாங்க.....
மேல்சட்டை இல்லாம, ஒரு துண்டைக் கழுத்துலே போட்டுக்கிட்டு, வீட்டுக்கு முன்புறம் நாலைஞ்சு தென்ன ஓலைப் போட்டுருக்கும் பந்தலில் தைய்ய மிஷினைப் போட்டுக்கிட்டுத் தைப்பார். சுருள் சுருளா ஸ்பிரிங்குத் தலைமுடி அவருக்கு. நம்மூட்டுலே எல்லாருக்கும் அவர் தச்சுக் கொடுக்கறதுதான். நம்மூட்டுக்குப் போகும் வழியிலேதான் பாம்பு வீடுன்றதால் பகல் நேரத்துலே அந்தப் பக்கம் போனால் உள்ளே எட்டிப் பாப்பேன்,சினிமாவில் வர்றதுபோலப் புத்துலே பாம்பு உக்கார்ந்துருக்கான்னு. ஒருநாளும் அது கண்ணுலே அகப்படலை.
பள்ளிக்கூடம் திறந்த மொத நாள் மாமா கூட்டிட்டுப்போய் சேர்த்துவிட்டார். வகுப்புக்குப் போய் உக்காந்தா எல்லாம் புது முகங்கள். பெல் அடிச்சதும் மொத்தப் பள்ளிக்கூடமும் முன் மைதானத்துலே கூடி கடவுள் வாழ்த்து, தலைமை ஆசிரியர் பேச்சு எல்லாம் ஆச்சு. திரும்ப வகுப்புக்குப்போய் உக்கார்ந்தோம். புது சார் எங்களுக்கு வகுப்பாசிரியர். அவர் உள்ளே நுழைஞ்சதும் எனக்கு திடுக்குன்னு ஆகிப்போச்சு. நம்ம டெய்லர் இங்கெ எங்கெ வந்தார்?
எனக்குக் கண்ணு பொட்டையாத்தான் போயிருக்கு. இவர் எங்கே அவர் எங்கே? போனவருசம்தான் பி.டி. முடிச்சாராம். கலியாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சாம். எங்களுக்கு வகுப்பு ஆசிரியரா வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். நங்க எல்லாம் அமைதியா(!) வகுப்பில் உக்கார்ந்து இருப்பதே சொல்லுதாம் நாங்க எவ்வளவு நல்ல மாணவர்கள்ன்னு. சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டார். இவர் பெயர் திருமால். ரொம்ப ஸ்டைலா, ஸ்மார்ட்டா இருந்தார். தலையில் சுருள்சுருளா ஸ்பிரிங்கு போல முடி.
வீட்டுக்கு வர்றவழியில் மன்னார் வழக்கம்போல, வெளியே துணிகளைத் தச்சுக்கிட்டு இருந்தார். வந்து அக்காகிட்டே 'எல்லாத்தையும்' சொன்னேன். திருமால் சாரும் மன்னாரும் ஒருத்தரா இல்லையான்னு எனக்குப் பயங்கர சந்தேகம். அக்கா விழுந்துவிழுந்து சிரிச்சாங்க.
மாமாதான் திருமால் சாருக்கு நம்ம வீட்டுக்கு இடதுபுறம் இருந்து ஆரம்பிக்கும் தெருவில் வாடகை வீடு பார்த்துக் கொடுத்தார். அந்த உரிமையில் நானும் ராணியும், அக்கா கொடுத்து அனுப்புன பூவை எடுத்துக்கிட்டு அவர்வீட்டுக்குப் போனோம். வாத்தியார் வீட்டம்மா கதவைத் திறந்தாங்க. பாவாடை தாவணி போட்ட ஒரு அக்கா! ரொம்ப அழகா இருக்காங்க. திருமால் சாரும் பகல்தூக்கத்துலே இருந்து எழுந்துவந்தார். கொஞ்ச நேரம் எங்களைப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திங்கறதுக்கு என்னமோ கொடுத்தாங்க. சார் முன்னால் வச்சுத் திங்க எனக்கு வெக்கமா இருந்துச்சு. ராணிதான் ஒன்னுவிடாம எல்லாத்தையும் வேட்டுவச்சாள். சிமெண்டுத் தரையோடு வீடு நல்லா இருந்துச்சு. புது வீடு. சீமை ஓடு போட்டக் கல்வீடு.
அடிக்கடி வந்துட்டுப்போன்னு அந்த அக்கா சொன்னாங்க. சரின்னு தலையாட்டுனேன். கொஞ்சநாள் கிணத்தடி லேடீஸ் க்ளப்புலே திருமால்சார் வீட்டு அக்கா, பாவாடைதாவணியில் இருக்கறதே பேச்சா இருந்துச்சு. கல்யாணம் ஆனபிறகு புடவைதான் கட்டணுமாமே!!
தொடரும்.........
Posted by
துளசி கோபால்
at
12/03/2008 07:55:00 AM
63
comments
Labels: அனுபவம்
Monday, December 01, 2008
அக்கா ( பாகம் 5 )
வத்தலகுண்டு 'மெட்ராஸ் கேஃபே'யில் ஒன்னு இல்லே ரெண்டு ஜாங்கிரி மட்டும் அப்பப்ப வாங்கித் தின்னவளுக்கு, இதோ கண் முன்னாலே தட்டுத்தட்டா ஜாங்கிரி, லட்டு, மைசூர்பாக்கு, பர்ஃபி, இன்னும் பெயர் தெரியாத இனிப்புகள் தன்னைச் சுத்தி அடுக்கி வச்சுருக்கறதைப் பார்த்தால் எதோ சொர்க்கத்துக்கு வந்தாப்புலே இருந்துச்சு.
(வயித்துக் கடுப்புக்கு 'ஜீரா'வோட ஜிலேபி தின்னாச் சட்னு குணமாகுமாம். ஐடியா கிடைச்சுருச்சு. அதுவுமில்லாம ஜுரம் மாதிரி இதைக் கண்டுபிடிக்க முடியாதுல்லே. ரெண்டுமுறை போயிட்டேன்னு அம்மாட்டே சொல்லி, அவுங்க மருந்துக்குப்பியில் கை வைக்கப்போகும் முன்பே..... காசு கொடுங்க. ஜிலேபி வாங்கிக்கறென்னு நானே வைத்தியமும் சொல்லிருவேன். ஜாங்கிரியும் ஜிலேபியும் ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த அப்பாவி!)
இங்கே பள்ளிக்கூடத்துலே கால்பரிட்சை, அரைப்பரிட்சை லீவு வந்தப்ப என்னை அனுப்பிவைக்கணுமுன்னு அக்காவோட நாத்தனார்( மாமாவின் அக்கா) சொல்லிட்டுப் போயிருந்தாங்க. பக்கத்து ஊர்தான். அவுங்களைப் பத்தி இங்கே முந்தி எழுதி இருக்கேன். நாங்க அவுங்களைச் சித்தின்னு கூப்புடுவோம். அவுங்களுக்குன்னு பிள்ளைங்க இல்லை. மகன்கள் எல்லாம் மூத்தாளொட பிள்ளைங்க. நான் போய் இருக்கும் நாட்களில் என்னை ரொம்ப ஆசையாப் பார்த்துக்கிட்டாங்க. தினம் எக்கச்சக்கமா பலகாரங்கள். மிட்டாய்க்கடை வீடாச்சே. அடுப்புக்குப் பக்கத்தில் ஸ்டூல் போட்டு உக்காந்து பலகாரங்கள் செய்முறையெல்லாம் பக்காவா மனசுலே நிறைச்சுக்கிட்டேன். சமையலில் ஒரு ஆர்வம் வந்தது அப்போதான். அந்தச் சித்தப்பா ரொம்பவே வயசானவர். அங்கே வீட்டுலே நான் தின்னுவது பத்தாதுன்னு கைநிறையக் காசைக் கொடுத்து எதுவேணுமுன்னாலும் வாங்கிக்கோன்னு சொல்வார். சித்தியும் அடுப்பு வேலை முடிஞ்சு, தினமும் மாலை நேரத்துலே அவுங்களோட நல்ல நல்ல புடவைகளைக் கட்டிவிட்டுத் தலைநிறைய பூச்சூட்டி அக்கம்பக்கம் கோயிலுக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவாங்க. ஜோக்கெல்லாம் சொல்லிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாங்க.
ஐயோ ஒன்னு சொல்லவந்தா அதுலே வேறொன்னு ஞாபகம் வருது பாருங்க. இது அக்கா சம்பந்தமுள்ளதுதான் அதனாலே இங்கே சொல்லிக்கலாம். அக்காவோ மாமாவோ கோயிலுக்குப் போய் நான் பார்த்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனா..... இந்த ஊர்லே கோயில் எங்கே இருக்குன்னே எனக்குத் தெரியாது! அக்கா வீட்டுலேயும் சாமிப் படங்கள்னு ஒன்னும் இல்லை. பொதுவா எங்க வீடுகளில் கிழக்குப் பார்த்தச் சுவத்துலேயே தரையில் இருந்து ஒரு முழ உசரத்துலே, அரைச்ச மஞ்சளை வச்சு வட்டமாப் பூசிவிடுவாங்க. ஒரு சாண் விட்டத்துலே ஒரு வட்டம். அவுங்கவுங்க கை அளவா இருக்குமோ என்னவோ! அதுலே நடுவுலே நேரா மூணு கோடு குங்குமத்துலே இழுப்பாங்க. செவப்பா ஒரு நூத்திப்பதினொன்னு:-) வெள்ளை நாமக்கட்டியைத் தண்ணி தொட்டுக் குழைச்சு அந்த குங்குமக்கோட்டின் கீழ் பாகத்துலே ஒவ்வொரு கோட்டுக்கு அடியிலும் ஒரு ஆங்கில 'வி' போடுவாங்க. அதுக்குக் கீழே நெத்திப்பொட்டு அளவுலே குங்குமம் தொட்டு ஒரு பெரிய பொட்டு( ஏதோ ஒரு படத்துலே ஜெயசித்ரா வச்சுக்கிட்டு இருப்பாங்களே அந்த சைஸ்.) அதுக்கு நாலு பக்கமும் குட்டியா நாமக்கட்டி குழைவில் வெள்ளையா நாலு பொட்டு(இப்போ நாம் வச்சுக்கற சைஸில்) இதுக்கு நடுவீடுன்னு சொல்வாங்க.
வீட்டு முன்கதவு நிலவாசப்படியிலும் இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் மஞ்சள் பூசி குங்குமக்கோடு, நாமக்கட்டின்னு எல்லா உபசாரமும் வீட்டுக்குள்ளே சுவத்தில் செஞ்சமாதிரியேதான். அளவு மட்டும் சின்னதா இருக்கும்.
சிலவீடுகளில் குறுக்குக்கோடும் மைனஸ் நாமக்கட்டியுமா இருக்கும். அவுங்க சிவனைக் கும்பிடுறவங்களாம். இங்கே நிலைப்படியிலும் குறுக்குக்கோடுகள்தான் இருக்கும். ஒரு வீட்டைப் பார்த்தவுடன் அந்த வீட்டு மனுசங்க எந்த சாமியைக் கும்புடறாங்கன்னு கண்டுபிடிக்க இதைவிட எளிதா ஒரு வழி இருக்க முடியுமா? ஆளுங்க நெத்திகூட வேணாம். வாசல் நிலையே போதும் ஆஹா ஆஹா.....
வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை மஞ்சள் அரைச்சு, பூசின்னு இது ஒரு முக்கிய வேலையா இருக்கும். கற்பூரம் சாம்பிராணி, விளக்குன்னு அங்கேதான் ஏத்தி வைப்பாங்க. அங்கேதான் சாமியும் கும்பிடுவாங்க. படையல்கூட இங்கேதான் வச்சுப் படைப்பாங்க. குடும்ப வழக்கத்தின்படி
அக்கா வீட்டிலும் ஒரு 'நடுவீடு' சுவத்தில் வரைஞ்சு வச்சுருக்காங்களே தவிர வாரவாரம் அதுக்கு மேற்பூச்சுப் பூசியோ, விளக்கு வச்சுக் கும்பிட்டோ நான் பார்த்ததே இல்லை. அதுபாட்டுக்கு அது இருக்கும். முந்தியாவது அடுப்பாங்கரை அந்த சுவத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அதைக் கவனிச்சுக் கும்பிட்டிருக்குமோ என்னவோ.... இப்ப அடுப்பு முன்வாசல் திண்ணைக்கிட்டே இடம் மாறுனபிறகு அந்த மூலையை யாருமே சட்டை செய்யறதில்லை.
இந்த 'நடுவீட்டு'ச் சுவர் சாமியிலேயும் எங்க பாட்டி, அவுங்க வீட்டுலே ஒரு புதுமையைப் புகுத்திட்டாங்க. பாட்டி வீட்டில் சுவற்றில் மஞ்சள் பூசமாட்டாங்க. அதுக்குப் பதிலா ஒரு சதுரமான மரப்பலகையில் (ஒரடிக்கு ஒரடி இருக்கும்) மஞ்சள் பூசி, சுவத்துலே செய்யும் எல்லா அலங்காரத்தையும் ஒன்னுவிடாம அதுலே வரைஞ்சு வச்சுருப்பாங்க. சனிக்கிழமைதான் எங்க பாட்டிக்கு வெள்ளிக்கிழமை. முற்றத்துலே அந்தப் பலகையைக் கொண்டுவந்து வச்சு கழுவி மறுபடி எல்லாம் செஞ்சுக் கொஞ்சநேரம் வெயிலில் காயவச்சு ஈர வாசனை போனதும் சாமி அறையில் சுவத்துலே சாய்ச்சுவச்சுப் பூக்கள், விளக்கு, கற்பூரமுன்னு அமர்க்களமாக் கும்புடுவாங்க. இதுக்கு மேலே ஒரு பலகை அடிச்சு, கிருஷ்ணன், பிள்ளையார், லக்ஷ்மின்னு வெள்ளிப்படங்கள் வரிசையா இருக்கும். தளுக்கா இருக்கும் வெள்ளித் தகட்டில் சாமி உருவங்களை அச்சடிச்சு வச்சு, அதுக்கு ஒரு கண்ணாடி ப்ரேம் போட்டு நகைக்கடையில் விற்பனைக்கு வந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது. இந்த மஞ்சள் பலகைக்கும் கண்ணாடி போட்டுட்டா வேலை மிச்சமாச்சேன்னு சொல்வேன். போடீ சோம்பேறின்னு வைவாங்க. சாமி அறைக்கு ஏகபோக உரிமை எங்க பாட்டிக்குத்தான். அங்கேயே ஒரு ஓரத்துலே கட்டில் போட்டு அதையே அவுங்க படுக்கை அறையாவும் ஆக்கிக்கிட்டாங்க. எங்க பாட்டியோட 'கதை' ரொம்ப விசித்திரமாவும் விசனமாவும் இருக்கும். 'அப்புறம் கதை'களில் விலாவரியாச் சொல்றேன். இப்போதைக்கு ஒரு சின்னக் குறிப்பு மட்டும் தரவா? அவுங்களுக்கு ஆறுவயசில் கலியாணம். அதுக்குப்பிறகு ஏழே மாசத்தில் கைம்பெண்(-:
இப்போ எல்லாமே ரொம்ப மாடர்னா ஆகி, நெத்திப்பொட்டுக்கே ஸ்டிக்கர்ன்னு வந்துருச்சு பாருங்க. அதே போல புது யுகத்தில் நிலை வாசப் படியில் மஞ்சள், சிவப்புப் பெயிண்டாலே வரைஞ்சு வச்சுக்கறாங்க. நிம்மதி. மஞ்சள் அரைக்கும் வேலையும் மிச்சம். சிக்கனமா இருந்தமாதிரியும் ஆச்சு. இல்லீங்களா?
சொல்லவந்ததை விட்டுட்டு அங்கே இங்கேன்னு தாவறதுலே நான் சரியான குரங்குதான். என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.....ம்ம்ம்ம்ம்ம் சித்தி, மிட்டாய்க் கடை.....கோவில்......ஆங்... அங்கேயே போகலாம் வாங்க.
நான் திரும்ப வந்தபிறகு தினமும் அங்கிருந்து பலகாரங்கள் ரெகுலரா பஸ்ஸில் வர ஆரம்பிச்சது அப்போ இருந்துதான். மிட்டாய்க் கடையில் அன்னைக்குப் போட்ட வகைகள் வந்துரும். மாமாவும் டென்னிஸ் ஆடிட்டு வீட்டுக்கு வரும்போது அந்தப் பையைப் பிடிச்சுக்கிட்டு வந்துருவார். எல்லாம் ஃப்ரீ கூரியர் சர்வீஸ்:-))))) இதுவும் போதலைன்னா பள்ளிக்கூடம் விட்டு வரும்வழியில் நாயர்கடையில், மாமா அக்கவுண்டுலே என்ன வாங்கிட்டு வரணுமுன்னு மதியானம் சாப்பாடு முடிச்சுப் பள்ளிக்கூடம் போகும்போது அக்கா சொல்லி விடுவாங்க. மாலையில் பள்ளிக்கூடம் விட்டுக் கூட்டமா பசங்க வர்றதாலே எனக்குக் கழுகு பயம் கிடையாது.
அக்கா எனக்காக தின்பண்டம் தனியா எடுத்து வச்சுருப்பாங்க. அக்காவின் பெரிய மகளுக்கும் எனக்கும் ஆறே வயசுதான் வித்தியாசம். பசங்க ஆரம்பப் பள்ளியில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்து, அவுங்க பங்கை எல்லாம் தின்னு முடிச்சுருப்பாங்க. உயர்நிலைப்பள்ளி விட்டு நான் வீடுவர லேட்டாகிரும். பசங்க என்னைத் தின்ன விடாதுன்னு அக்கா ஒரு 'ஐ'னா பாஷை யில் எனக்கு விவரம் சொல்லுவாங்க.
"உய்னுள்ளே முய்னூனாவது டைனப்பாலே வைனச்சுருக்கேன். எய்னெடுத்துக்கோ. இய்னுதுகளுக்கு தைனராதே"
"சைனரி ஐனக்கா"
பெரியவள் பயங்கரி. கொஞ்சநாளா இதைக் கவனிச்சுக்கிட்டே இருந்துருக்கா போல. சூத்திரத்தைக் கண்டுபிடிச்சுட்டாள். ஒரு நாள் அக்கா சொல்லி முடிச்சதும்,
'சிய்னித்தி. எய்னெனக்கு மைனட்டும் கொய்னஞ்சம் தைனரயா?'
அக்காவும் நானும் வியப்போடு சிரி சிரின்னு கண்ணுலே தண்ணிவரும்வரை சிரிச்சோம்.
தொடரும்.................
Posted by
துளசி கோபால்
at
12/01/2008 09:29:00 AM
61
comments
Labels: அனுபவம்
