Tuesday, April 22, 2008

விதவிதமாய்ப் புது வருசம்.(நிறைவுப்பகுதி)

நம்ம மக்களுக்கு எதாவது குறைஞ்சபட்ச தண்டனை எதுக்காவது கொடுக்கணுமுன்னா 'வாய் பேசாம இருங்க'ன்னு சொல்லலாம். அதுவும் பூஜை, விழாக்கள், கலைநிகழ்ச்சின்னு இப்படி ஒன்றுகூடும் சமயத்தில் சொல்லணும்.கலையை ரசிக்கிறதுக்குத் தெரியலைன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். மேடையில் நிகழ்ச்சி நடக்கும்போது, அதில் ஈடுபட்டுள்ளவங்க எவ்வளவு நேரம் செலவழிச்சு இதுக்கெல்லாம் தயாரிப்பு செஞ்சுருக்காங்கன்னு ஒரே ஒரு நிமிசம் நினைச்சுப் பார்த்தாப் போதுமே.........




நாங்கள் பஞ்சாபி சொஸைட்டியின் பைஷாகி விழாவுக்குப் போனபோதே பதினொன்னரை மணி ஆகிருச்சு. அழைத்தபோது அவுங்களே சொன்னாங்க 'காலை 9 மணிக்கே புனிதநூல் கிரந்தசாஹிப் படிக்க ஆரம்பிச்சுருவோம். நீங்க அவ்வளோ சீக்கிரம் வரமுடியலைன்னா பரவாயில்லை. பதினொரு மணிக்கு மேலே வந்தாலும் சரிதான். ஆனால் கட்டாயம் வரணும்'




முந்தியெல்லாம் நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே (ஒரு அஞ்சு நிமிச நடை) இருக்கும் பள்ளிக்கூட ஹாலில்தான் மாசம் ஒரு நாள் இப்படி சத்சங்கமா கூடி, புனித நூல் படிப்பாங்க. பூசை முடிஞ்சதும் சாப்பாடு இருக்கும்.



சமீப காலமா இந்த ஜனவரியில் இருந்து ஹாலை வாடகைக்கு விடறதில்லைன்னு ஸ்கூல் போர்ட் தீர்மானிச்சிருக்கு. முக்கிய காரணம் பயன்படுத்திய பிறகு சரியாச் சுத்தம் செஞ்சுதரலை என்பதுதான். நம்ம உணவு வகைகளில் மசாலா மஞ்சள் தூள் எல்லாம் கலந்து செஞ்சுடறோம். அதைச் சாப்பிடும்போது கவனமாக் கீழே சிந்தாமல் சிதறாமல் தின்னா பரவாயில்லை. பரிமாறிக்கிட்டே வரும்போது சிந்தும் கறிகள், சின்னப் பிள்ளைகள் கொட்டிக் கவுத்துடும் சாப்பாட்டுத்தட்டுகள் அது இதுன்னு தரையில் கார்பெட் எல்லாம் அழுக்கும் ஆகி,அங்கங்கே மஞ்சள் கறைகள்.



நம்மிடம் வசூலிக்கும் வாடகையைவிட க்ளீனிங் செலவு கூடுதலாகிருது. இன்னும் சில இடங்களில் இந்தியர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்கறதும் கஷ்டம்தான். வீடு முழுக்க Curry Smell வருதுன்றது ஒரு காரணம். இன்னொரு காரணம் வீட்டில் இருக்கும் தோட்டப் பகுதியைச் சரியாப் பராமரிக்கறதில்லை என்பது.



தமிழ்ச்சங்கம் வாடகைக்கு எடுக்குமிடத்தில் கார்பெட் கிடையாது. மரத்தரைதான். நல்லதாப் போச்சு. ஆனா நடுத்தர அளவு கூட்டத்துக்குத்தான் சரிப்படும். ஒரு 100 பேர் உட்காரும் வசதி. தமிழ்த் தெரியாதவங்க அவ்வளவா நம்ம விழாக்களுக்கு வர்றதில்லை. இந்த பஞ்சாபி சங்கத்துக்கு ஏகப்பட்ட அங்கத்தினர் இருக்காங்க. அதைத்தவிர மற்ற இனத்து ஆட்களையும் அவுங்க அழைக்காம விடறது இல்லை.



இந்த முறை விழா காஷ்மீர்லே (அந்தப் 'பேட்டை'யின் பெயர்) ஒரு கம்யூனிட்டி ஹாலில் வச்சுருந்தாங்க. வெறும் காங்க்ரீட் தரைதான். பழைய படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம்ன்னு கொண்டுவந்து விரிச்சுபோட்டுருந்தாங்க. குளிர்காலம் வேற ஆரம்பமாயிருச்சு. தரையெல்லாம் ஒரேச் சில்.
அடுக்களையில் சிலர் தேநீர் தயாரிச்சுக்கிட்டும் வேணுங்கறவங்களுக்கு ஊத்திக் கொடுத்துக்கிட்டும் இருந்தாங்க. அங்கே போய் வாங்கி, உட்புறத் திறந்த வெளியில்வரும் இளம்(?)வெயிலில் நின்னு இதமாய்க் குடிச்சுக்கிட்டும் பலர் இருந்தாங்க. ஒரு அட்டைப்பெட்டியில் ஆரஞ்சு நிறத் துணிகள் இருந்தன. இவுங்க மத வழக்கத்தின்படிப் பூஜை சமயத்தில் அனைவரும் தலையை மூடி இருக்கணும் என்பது நியதி. பெண்களுக்குப் புடவை முந்தாணி, துப்பட்டா என்று இருப்பதால் பிரச்சனை இல்லை. இந்த சீக்கிய மத ஆண்கள் தலைப்பாகை கட்டுவதால் அவர்களுக்கும் பிரச்சனை இல்லாமல்தான் இருந்திருக்கணும். இப்ப சமீபகால நாகரிகத்தினால் பல சீக்கிய இளைஞர்கள் முடி வளர்த்துக்கொள்வதில்லை. 'க்ளீன்ஷேவ் சிக்'. அவர்கள் தங்களுடைய கைகுட்டையால் தலைமுடியை மறைத்துக் கொள்கிறார்கள். அப்படியும் கைகுட்டை(யா) இல்லாத ஆட்கள் கதி? அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரஞ்சுத்துணிகளைக் கிழிச்சுக் கொடுத்துக்கிட்டு ஒருத்தர் அடுக்களைவாசலில் நின்னுருந்தார். கோபால் கைகுட்டையால் தலையை மூடுனார். இவருக்கு டர்பன் கட்டினால் எப்படி இருக்கும்ன்னு கற்பனை செஞ்சுபார்த்தேன். அட! நல்லாத்தான் இருக்கு:-)))))


(ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி இந்த கைகுட்டை வைத்துக்கொள்ளும் வழக்கமே குறைஞ்சுவருது. டிஷ்யூ, செர்வியட்ஸ் எல்லாம்தான் இப்படிப்பட்ட விழாக்களிலும் கூட்டங்களிலும் பரவலாக் கிடைக்குதே)



சின்ன மேடையில் 'குரு க்ரந்த் சாஹிப்' வச்சுப் படிச்சுக்கிட்டு இருந்தார் ஒரு முதியவர். மேலே அலங்காரத்துணியால் செஞ்ச விதானம். அவருக்கு வலப்பக்கம் ஒரு சின்ன மேடை அமைப்பில் தபேலா, ஹார்மோனியம், மைக்குன்னு சில ஏற்பாடுகள். ஹாலில் நுழைஞ்சு நேரா புனிதநூல் உள்ள இடம்வரை நடைபாதை விரிப்பு. நேரா அதுலே நடந்து புனித நூலின் முன் விழுந்து கும்பிட்டுட்டு, நம்மால் முடிஞ்ச காணிக்கையை அங்கே வச்சுட்டு வருவது வழக்கம். இது நிர்பந்தமில்லை. விருப்பம் இருப்பவர்கள் செய்யலாம். நடைபாதைக்கு இரு புறமும் பெண்கள் ஒரு பக்கமாகவும் ஆண்கள் ஒரு பக்கமாகவும் அமர்ந்து வாசிப்பைக் கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கூட்டத்தில் சிலர் தங்களிடமுள்ளச் சின்னப் பிரார்த்தனைகள் அடங்கிய புத்தகத்தில் சில குறிப்பிட்ட பக்கத்தை உரக்க வாசிக்கும்போது அதைப் பின்பற்றி சில வரிகளைச் சொல்வதுமாக இருந்தனர். பிரார்த்தனைகள் ஸ்லோகங்கள் அச்சிட்ட சிறிய புத்தகங்கள் நிறைய அங்கே குவித்து வச்சிருந்தாங்க. பஞ்சாபி மொழியிலும் இந்தி மொழியிலுமாக குவியல்கள் இருந்தன.




ஒருவர் சொல்லி முடிச்சதும் யார்வேணுமுன்னாலும் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்கலாம். ஒரு ராகத்தோடு சொல்வதைக் கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாக இருக்கு. காதுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. எங்கள் பக்கத்தில் இருந்த ரெண்டு பெண்கள் (தெலுங்கர்) வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். குசுகுசுவென்று பேச ஆரம்பிச்சு, பேச்சு ஜோரில் இருக்குமிடத்தை மறந்து எதோ பார்க்கிலோ பீச்சிலோ உக்கார்ந்திருப்பது போல சத்தமாப் பேசிக்கிட்டு இருக்காங்க. என் இடது காதுக்கு ஸ்லோகமும் வலது காதில் வம்பளப்புமா இருந்து ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போச்சு. அந்தப் பக்கம் திரும்பி 'ஹஸ்தே'ன்னு சொன்னதும் கொஞ்ச நேரத்துக்குப் பேச்சு நின்னுச்சு.




இவுங்கன்னு இல்லே, ராமநவமி பூஜைக்குப் போனப்பவும் முன் பெஞ்சுலே இருந்த ரெண்டு பெண்கள் (ஃபிஜி இந்தியர்கள்) இப்படித்தான். (இந்தப் பதிவின் முதல் பத்தி இங்கே வரணும்!) இதுலே நாடு, மொழி என்ற பிரிவெல்லாம் இல்லையாக்கும்:-) அப்ப அந்தப் பெண்களிடம், 'நீங்க எவ்வளவு நாளைக்குப் பிறகு சந்திச்சுக்கிட்டீங்க?'ன்னு கேட்டேன். (ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதும், ஒரே ஏரியாவில் வசிப்பதும் எனக்குத் தெரியும்) அசட்டுத்தனமா சிரிச்சாங்க. கூடிவந்தால் ஒரு மணி நேரம். வாயைக் கட்டத்தெரியலை பாருங்க.




இருபது இல்லை முப்பது நிமிசத்துக்கு ஒருத்தரா மாறிமாறிப் புனித நூலைப் படிச்சுக்கிட்டும், கூடியிருப்பவர்கள் ஸ்லோகம் படிக்கும்போது புனித நூலுக்குச் சாமரம் வீசுவதுமா இருந்தாங்க. ஆக்லாந்துலே இருந்து இந்த நிகழ்ச்சிக்காக பஜனைப் பாடல்கள் பாட ரெண்டு ஆணும் ஒரு பெண்ணுமாக மூவர் மேடைக்கு வந்தாங்க. அந்த 'லீட் சிங்கர்' ஏற்கெனவே போன வருசம் விழாவுக்கு வந்திருந்தவர்தான். அருமையாகப் பாடினார். பஜன் என்பதால் இடையிடையே கூட்டத்தினரும் கலந்துகொண்டோம்.( இதுலே கோபால் ஒரு ரெண்டு நிமிசம் பதிவு செஞ்சதைப் போட்டுருக்கேன். கேளுங்க)



அப்புறம் அந்தப் பெண் மட்டும் தனியாக ஒரு பாடல் பாடினார். நம்ம தென்னிந்திய சங்கீதத்தையொட்டிய ஸ்வரவரிசைகளுடன் அந்தப் பாட்டு ரொம்ப நல்லாவே இருந்துச்சு. பஜன் முடிஞ்சதும் இவர்களுடன் வந்த ஒரு முதியவர் மைக் முன்னால் வந்து அமர்ந்தார். ஆன்மீகப்பிரசங்கம். பஞ்சாபியில் பேசினாலும், நமக்கு இந்தி ஓரளவு தெரிஞ்சிருந்து நல்லாக் கவனிச்சுக் கேட்டால் புரியுதுதான். சுருக்கமாச் சொல்லணுமுன்னா 'அருள் இல்லாதார்க்கு அவ்வுலகமில்லை'என்பதுதான் கருத்து. ரெண்டாயிரம் வருசமெல்லாம் பின்னோக்கிப் போகமுடியாதுன்றவங்களுக்கு இன்னும் சொல்லணுமுன்னா 'கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல'ன்ற சினிமாப் பாட்டு சொல்லும் விசயம்தான்:-)))))


நம்மாட்களுக்குக் கையில் மைக் பிடிச்சால் அதை எளிதில் விட்டுற முடியறதில்லை , (உண்மைத்தமிழனுக்கு, எனக்கு, இன்னும் சிலருக்கு எப்படிப் பதிவு எழுத ஆரம்பிச்சால் நிறுத்தமுடியறதில்லையோ அப்படின்னு வச்சுக்குங்க) அவர்பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறார். குழந்தைகள் ரெஸ்ட்லெஸ் ஆக ஆரம்பிச்சாச்சு. ஒரு குழந்தை அழுக ஆரம்பிச்சதும், எதோ சிக்னல் கிடைச்சாப்போல அடுத்து அடுத்துன்னு அங்கங்கே அழுகைச் சத்தம். (அதுகளாலே முடியுது, நம்மாலே முடியலையே) நேரமோ போய்க்கிட்டே இருக்கு. மணி ரெண்டரை. எங்க டேலைட் சேவிங்க்ஸ் இப்ப ரெண்டு வாரம் முன்னேதான் முடிஞ்சது. இன்னும் நம்ம 'பாடி க்ளாக்' அதுக்கேத்தமாதிரி மாறிக்கலை. இந்தக் கணக்குலே இப்ப மணி மூணரை. எல்லாருக்கும் பசிக் களைப்பு முகத்தில் பளிச்சுன்னு தெரிய ஆரம்பிச்சாச்சு. சாமரம் வீசுபவர்கூட முதியவர் எப்போ நிறுத்துவாரோன்னு பார்க்கும் முகபாவத்தில்.




பெரியவரோ இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை. தனக்குத்தானே அனுபவிச்சுச் சிரிச்சுப் பிரசங்கிக்கிறார். இடைஇடையே அவருக்கு முன்னால் துண்டுச்சீட்டு வைக்கிறாங்க. கார் பார்க்கில் குறுக்கும் நெடுக்குமா இடையில் நிறுத்தி இருக்கும் வண்டிகளை அங்கிருந்து அகற்றச் சொல்லி வண்டி நம்பர்
எழுதிய சீட்டுகள். 'நேரமாகுது. பிரசங்கம் போதும்' என்று ஒரு துண்டுச்சீட்டு அனுப்பலாமான்னு எனக்குத் தோணுச்சு.




பிரசாதங்களும், நைவேதிய உணவுகளுமா தட்டுக்களை புனித நூலுக்கருக்கில் தயாரா எடுத்து வைக்கிறார்கள் சிலர். இதுக்காக பெரிய பெரிய பாத்திரங்களில் இருந்து கொஞ்சம் எடுப்பதற்காக அதன் மூடிகளைத் திறந்தவுடன்......ஹால் முழுக்க பசியைத் தூண்டும் கறிகளின் மணம் பரவுது. எல்லாரும் தங்களையறியாமலேயே மூச்சை நல்லா இழுத்து மணம் பிடிக்கிறோம்:-)))



ஒருவழியா மூணடிக்க அஞ்சு நிமிசம் இருக்கும்போது ( பழைய மணி நாலடிக்க அஞ்சு நிமிசம்!!!) பிரசங்கத்தை முடிச்சார். கிடுகிடுன்னு படையலைச் சாமிக்குக் காமிச்சுட்டு, ஏழெட்டுப்பேராப் பிரிஞ்சு ஹல்வா பிரசாதம் அஞ்சே நிமிசத்தில் விநியோகிச்சு முடிச்சாங்க. புனிதநூலை பட்டுத்துணிகளில் நல்லாப் பொதிஞ்சு தலையில் வைத்து அங்கிருந்து எடுத்துக் கொண்டு போனார் ஒருவர். கையோடு சாப்பாடு பந்தி ஆரம்பிச்சாச்சு. ஹால் நீளத்துக்கு ஆறுவரிசைகளில் எல்லாரும் உட்கார்ந்தோம். நானக் கி லங்கர்.




ரொட்டி(சப்பாத்தி) பூரி, சீரக சாதம், மட்டர் பனீர், தால், காலி ஃப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு , பச்சைப்பட்டாணி எல்லாம் சேர்த்த கறி, ரெய்த்தா(தயிர்பச்சடி) ஜிலேபி, கீர்(பால்பாயாஸம்).இதுதான் மெனு.
இவுங்களை என்றென்றும் நினைவு வச்சுக்கணுமுன்னோ என்னவோ கறிகளில் உப்பு கொஞ்சம் கூடுதல். இருக்கும் கொலைப்பசியில் இதுவெல்லாம்கூட கவனிச்சேன்:-) பந்தி பரிமாறுதல் விசாரிப்பு இதுலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. ஓடியோடி உபசரிப்பு. சாப்பிட்ட எவர்சில்வர் தட்டுகளை எல்லாம் சுத்தம் செய்வதற்காக, சாப்பிட்ட இடத்தைக் கூட்டிப்பெருக்க, இப்படி எல்லா வேலைகளிலும் இளைஞர்கள் & ஆண்கள் சேவை செஞ்சாங்க.




உணவுக்குப் பிறகு கோர்ட்யார்டில் நண்பர்களையும் தோழிகளையும் சந்திச்சுக் கொஞ்ச நேரம் பேசி மகிழ்ந்து கிளம்பினோம். இன்னிக்கு நல்ல கூட்டம்தான் அநேகமா 350 பேர் இருக்கலாம். ஹாலின் உள்ளே அடுத்த நிகழ்ச்சியான 'பங்கரா நடனத்துக்குக்கான கொட்டு முழக்கம் கேட்டது. ஆடறவங்க ஆடட்டும்:-)))




அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

Monday, April 21, 2008

விதவிதமாய்ப் புது வருசம்.

'உள்நாட்டுக்காரனுக்கு ஒண்ணு. வெளிநாட்டுக்காரனுக்கு பல' இப்படி ஒரு 'புது(பழ)மொழி எழுதணும்போல இருக்கு. எந்தப் பண்டிகை, விழாவானாலும் அன்னிக்குத் தேதிக்குக் கொண்டாடுனமா அப்புறம் அடுத்த பண்டிகைக்கான ஆர்பாட்டத்தில் இறங்கினோமான்னு இல்லை. எதா இருந்தாலும் வெவ்வேற இடத்தில் பலமுறை கொண்டாடுனாத்தான் மனசு ஆறுதுப்பா எங்களுக்கு. ஒரு முறை (2 வருசம் முந்தி) தீபாவளியை 11 முறை கொண்டாடுனோம்:-)

தமிழக அரசின் ஆணை இவ்வளவு தூரம் எட்டலை. சித்திரை வருசப்பிறப்புக் கொண்டாட்டம் தமிழ்ச்சங்கத்தில் முந்தாநாள் சனிக்கிழமை மாலை நடந்துச்சு. வழக்கம்போல் போய்ச் சேர்ந்தோம் கையில் புளிசாதமூட்டையைத் தூக்கிக்கிட்டு.




நல்ல கூட்டம். ஒரு நூறுபேருக்கு இருப்பாங்க. அதுலே ஒரு அரைப்பங்கு புதியமுகங்கள். தமிழ்ச்சங்கத் தேர்தல் முடிஞ்சு (அண்டர் நியூ மேனேஜ்மெண்ட்) நடக்கும் முதல் விழா. இதைப் பற்றிய மற்ற 'நடந்த விவரங்கள்' எல்லாம் எழுதி இங்கே நம்ம தளத்திலேயே ஒரு ட்ராஃப்ட் ஆக சேமிச்சு வைக்கப்போறேன். இப்ப இதை வெளியிடலைன்னாலும் எங்காவது ஆவணப்படுத்தணுமுன்னு ஒரு தோணல். சேமிச்சுவைக்க இதைவிட நல்ல பெட்டகம் வேற எங்கே இருக்கு? தேவைப்படும்போது பயனாகும்:-)))))




சுநாமியில் இறந்தவர்களுக்கும், தமிழ்மொழிக்காக இறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் விழா ஆரம்பித்தது. இப்ப என்னடா திடீர்னு சுநாமியின் நினைவுன்னு யோசிச்சதில் கொஞ்சம் விளங்குன மாதிரி இருந்தது.

ஆஹா......விட்ட இடத்தில் இருந்து தொடக்கம். சுநாமி இழப்புகளுக்கான நிதி திரட்டி அனுப்பியதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு(??) காரணம் அப்போதிருந்து தமிழ்ச்சங்கத்திற்கு வராமலிருந்த ஒரு பகுதியினர் சமீபத்திய தேர்தலில் வென்று வாகை சூடியிருந்தனர்.


விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக, இந்த ஆண்டு நடக்கவிருக்கும் நியூஸிநாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இப்போதைய ஆளுங்கட்சி சார்பில் நிற்கவிருக்கும் வேட்பாளர், அவர் மனைவி, (இங்குள்ள வழக்கத்தை அனுசரித்து அரசியல்வாதிகள் தங்கள் மனைவியுடன், கூட்டங்கள் & விழாக்களுக்கு வருவார்கள்) ஆளுங்கட்சியின் 'Ethnic Liaison Officer' ஆக இருப்பவர் என்று மூவர் வந்திருந்தனர். இந்த லயசன் ஆஃபீசர் 'ராஃபா ஆண்டன்' எனக்கு பலவருசங்களாகப் பழக்கமுள்ள ஒரு நண்பர்தான்.எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் நல்ல தோழி. அசப்பில் பார்ப்பதற்கும் ஏறக்குறைய என்னைப்போலவே(அளவில்):-)))))


சங்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரும் வந்திருந்தார். இவரைப் பார்த்தே ஒரு ஏழெட்டு வருடமாகிறது. வேறொரு கருத்துவேறுபாட்டின் காரணம் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கனகாலமாகத் தவிர்த்துவந்தவர். பழைய முகங்களில் சிலரைக் கண்டதில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கும் எங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இருந்திருக்கக்கூடும். மேற்படி நபரைப் பேச அழைத்திருந்தார்கள். (இங்கே 1972ல் நம்ம ஊரில் குடியேறிய மூத்தத் தமிழர், இவர்தான். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு அடுத்து இன்னொரு இலங்கைத் தமிழர் இங்கே குடியேறினார். நாங்கள் இங்கே வந்த மூன்றாவதுத் தமிழர்களும். இந்தியாவில் இருந்து வந்த முதல் தமிழர்களுமாக இருந்தோம்.)

போனவருடம் புதிதாகச் செய்திருந்த தமிழ்ச்சங்க பேனரைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்த திருவள்ளுவர் படத்தைக் காண்பித்து 'இவர் 1330 கப்லெட்ஸ் எழுதியிருக்கார். இவர் 2000 வருசங்களுக்கு முன்னே இருந்தார் என்று விளக்கினார். புதுசா வந்திருக்கும் வெள்ளைக்காரர்களுக்கு நம் தமிழ் பாரம்பரியத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தார். பேச்சு முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தது. பரவாயில்லை. விருந்தினருக்கு நாம் என்ன பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகின்றோம் என்பது புரியவேணும்தானே?


அடுத்துச் சொன்ன வரிகள்தான் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. பேனரின் வலது பக்கம் தமிழில் எழுதியிருந்த 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதைக் காண்பித்து , இது சமீபத்திய கவிஞர் எழுதியது. இவர் பெயர் சுப்ரமண்யன். சுப்ரமண்ய பாரதி என்றும் சொல்வார்கள். இவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதி, ஃப்ரெஞ்சு அரசின் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரி என்னும் ஊரில் அடைக்கலம் புகுந்தார்......................

அப்புறம் இலங்கைப் பிரச்சனைகளைக் கொஞ்சம் சொல்லிவிட்டு, பழைய பாராளுமன்ற அங்கத்தினருக்கு பலமுறை இதைப் பற்றிச் சொன்னோம். அவர் காது கொடுத்துக் கேட்டார்.ஆனால் ஒண்ணும் செய்யவில்லை. நீங்கள் அவருடைய இடத்துக்கு வரப்போறீர்கள். நீங்கள் எதாவது செய்யணும் என்றும் கூறினார்.


அடுத்துப் பேசவந்த வேட்பாளர் ஒரு பத்திரிக்கையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். உலகம் முழுசும் போய்வந்துருக்காராம், இந்தியா இலங்கை தவிர! இலங்கைப் பிரச்சனையையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் இப்ப இவர் பேச்சில் இருந்து புரிஞ்சுக்கிட்டாராம்(????!!!!!!)


உலகம் முழுவதும் அரசியல்வாதிக்குத் தெரிஞ்ச ஒரே மொழி 'ஓட்டு' என்றது நம்ம மக்களுக்குப் புரிஞ்சாத் தேவலைன்னு எனக்கிருந்துச்சு.



கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. இங்கே நடனம் கற்பிக்கும் ஆசிரியை, தன் மாணவிகளுடன் நடனத்தில் பங்கேற்றார். மதுரை முரளிதரன் எழுதி இசை அமைத்த 'கோபியர்கள் கொஞ்சும் கோபாலன்' பாட்டுக்கு முதல் நடனம். அடுத்து அவரது 5 மாணவிகள் சுதா ரகுநாதனின் தில்லானாவுக்கு ஆடினார்கள். இதில் நான்குபேர் கேரளாவைச் சேர்ந்த பெண்கள். ஒருவர் (பிங்க் நிற உடுப்பில் ஆடுபவர்) உள்ளூர் வெள்ளைக்காரப் பொண்ணு. இவுங்க எல்லாரும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவங்க. கலைக்கு மதமோ மொழியோ பிரச்சனையே இல்லை பாருங்க. இதைப் படிச்சுட்டு இங்கத்துக் கேரளா சங்கத்துலே பரதநாட்டியம் ஜோரா நடக்குமுன்னு நினைச்சுறாதீங்க. அந்த சங்கமும் ரெண்டுபட்டுக் கிடக்கு. அங்கே போகாதவங்க, நம்ம தமிழ்சங்கத்து நிகழ்ச்சிகளில் கலந்துக்கறாங்க. எப்படியோ, 'ஊர் ரெண்டு பட்டா.....யாருக்கோ கொண்டாட்டம்' என்ற பழமொழி பொய்க்கலை:-) அதுக்குப்பிறகு காவடிச்சிந்து என்று 'வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்' பாட்டுக்கு ஆசிரியை தனியாக ஆடினார். உங்களுக்காக அந்தத் தில்லானாவை இங்கே வலை ஏத்தி இருக்கேன்.







ஒரு இளைஞர் ரெண்டு திரையிசைப் பாடல்கள் பாடினார். எல்லாம் ஒரு சோகம் கலந்த 1980 பாட்டுக்கள். நல்ல குரலாக இருந்துச்சு.

தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் (இருந்த) இருவர் வேறு ஊர்களுக்குப் போயிட்டாங்க. இப்பப் பள்ளிக்கூடமும் ஆசிரியரும் மட்டும் இருக்காங்க, மாணவர்கள் வருகையை எதிர்பார்த்து. இப்பப் புதிதாகச் சங்கத்தில் வந்து சேர்ந்துள்ள மக்களில் சில குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் தமிழ் கற்க வருவார்கள் என்று நம்பிக்கை இப்போதைக்கு எனக்கிருக்கு.


அதுக்குப்பிறகு வழக்கம்போல் சாப்பாடு. வகைகள் புட்டு இடியப்பம், சோறு,பூரி,உப்புமான்னு நிறையத்தான். கறிகள்தான் முக்காலும் மூணுவீதம் உருளைக்கிழங்குகளே:-))))) சாப்பாட்டுவகைகளை ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்த கோபாலிடம் மெதுவா..... பொருட்குற்றம் ஆகிப்போச்சுன்னு முணுமுணுத்தேன். 'அவர் யூனியில் பெரிய பேராசிரியர். அதையெல்லாம் கண்டுக்காதே'ன்னார். நானும் அதுக்குப்பிறகு வேட்பாளரின் மனைவிக்கு எந்தெந்த உணவு காரம், மசாலா எல்லாம் அதிகமாக இல்லாமல் அவுங்க சாப்பிடும்படி இருக்குமுன்னு பரிந்துரை செய்யறதில் மும்முரமா இருந்துட்டேன். அப்புறம் நான் சாப்பிடப் போனப்பப் பேராசிரியரும் என் அருகிலே இருந்து உணவு எடுத்து அவரோட தட்டிலே வச்சுக்கிட்டு இருந்தார். என் வாய்ச் சும்மா இருக்குமா?


'உங்க பேச்சுலே, யாதும் ஊரே....பாரதியார்ன்னு சொல்லிட்டீங்களே. அதை எழுதுனவர் கணியன் பூங்குன்றனார் ஆச்சே'ன்னேன். ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனவர், 'ஓ ஐ ஸீ' ன்னார். அவரை மேலும் சங்கடப்படுத்தவேணாமுன்னு வேற இடத்துக்குப் போயிட்டேன்.


அங்கே கௌபாய் வேசத்தில் வந்திருந்த இன்னொரு பஞ்சாபி நண்பர் நடன நிகழ்ச்சிகளைப் பத்தி என்கிட்டே அப்பப்பக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். அவர் இங்கே ஒரு JPயாக நியமனம் ஆகி இருப்பதைச் சொன்னார். நம்ம கம்யூனிடிக்கு பயனா இருக்கும். அதான் இந்தியாவில் எதாவது பேங்க், இல்லே Pan நம்பர் விஷயமா அனுப்பும் ஒரு கட்டுக் காகிதத்துக்கும் ஜேபி கையெழுத்து வேண்டி இருக்கே:-)


அவர் நினைச்சுக்கிட்டு இருக்கார் தான் மட்டுமே இங்குள்ள இந்தியரில் நியமனம் பெற்றாருன்னு. இல்லை. ஏற்கெனவே நம்ம நண்பர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. நீங்க இந்த வரிசையில் மூணாவதுன்னேன். அவசர உதவின்னா உடனே கூப்புடறேன்னு சொல்லி வச்சேன்:-) இவர் இப்போது இங்கே கம்யூனிட்டி ஒலிபரப்பில் இந்தியர்களுக்கான கீத்மாலா நிகழ்ச்சியில் ரேடியோ ஜாக்கியா இருக்கார். இந்த நிகழ்ச்சி 1998 ல் ஆரம்பிச்சப்ப நானும் ஒரு ஒலிபரப்பாளரா இருந்துருக்கேன். அப்ப நான் இந்தி மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், தெலுங்குன்னு எல்லாப் பாட்டுகளையும் கலந்தே ஒலிபரப்புவேன். அந்த வருடத்து சிறந்த சேவைன்னு அப்ப அவார்டும் கிடைச்சது. இந்த நிகழ்ச்சி இந்த வருட சிறந்த சேவைக்கான இறுதிச் சுற்றில் தேர்வு ஆகி இருக்காம். அதுக்கான விழா இன்னும் ரெண்டு வாரத்தில் ஆக்லாந்தில் நடக்குதாம். கேட்கவே நல்லா இருந்துச்சு. எனக்கும் ரேடியோ நிகழ்ச்சி நடத்தறதுலே ரொம்பவும் ஆர்வம்தான். மீண்டும் என்னோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்த வாங்கன்னு கூப்புட்டுக்கிட்டே இருக்கார். நேரம்தான் இல்லை. ஒரு நாள் விருந்தினர் ஒலிபரப்புன்னு போகணும்.


இடமிருந்து வலம்:-) Rafaa Antoun, Tulsi, Amrith(JP)


கிளம்பும் சமயம் எத்னிக் லயசன் ஆஃபீஸர் ராஃபா, மறுநாள் நடக்க இருக்கும் பைசாகி விழாவுக்கு வரலாமுன்னு இருக்கேன்னாங்க. எல்லாம் அங்கே கூடும் கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி ஒட்டு வேட்டையாடத்தான்.

'அங்கே கீழே தரையில்தான் உட்காரணும். இருக்கை வசதிகள் இல்லை'ன்னு அவுங்க ஆர்வத்துலே கொஞ்சம் தண்ணீரை ஊத்துனேன். 'ரெண்டு மூணு மணிநேரம் ஆகும். அதனாலே பனிரெண்டரை, ஒரு மணி போல வாங்க'

தொடரும்.........

Thursday, April 17, 2008

மனசு ஒண்ணும் சரியில்லை(-:

மனசு ஒண்ணும் சரியில்லை(-:
எல்லாம் 16 வயசுப்பிள்ளைங்க. கூடவே அவுங்க ஆசிரியர். 29 வயசுக்காரர்.
பள்ளிக்கூடத்தில் 'அவுட் டோர் எஜுகேஷன்' ட்ரிப் போன வகுப்பு மாணவர்கள்.
நதியில் திடீர்னு வெள்ளப்போக்கு வந்ததால் படகு கவிழ்ந்து விபத்து நடந்துபோச்சு. 7 உயிர் இழப்பு.



மத்த விவரங்கள் எல்லாம் இங்கே இருக்கு.