
பயணவிவரம் பகுதி 1
இந்த முறை ஊருக்குப் போனது வழக்கமான 'சதுர' முறையிலெ இருந்து 'வட்டமா' ஆகிருச்சுங்க.புரியலீங்களா?
சரி, இப்படி சொல்லிரட்டுமா? எ.ஆ.மு & எ.ஆ.பி.
எழுத ஆரம்பிச்சதுக்கு முன்னே, எழுத ஆரம்பிச்ச பின்னே!!!! ( சந்தடிசாக்குலே இதையும் சொல்லிக்கறேன்.நான் எழுத ஆரம்பிச்சுச் சரியா ரெண்டு வருசம் ஆகுதுங்க. அதுக்குமுன்னே சின்னச்சின்னதா நம்ம தமிழ்ச்சங்கஆண்டுமலர்லே சிலவருசங்களா எழுதுனதைக் கணக்குலே(!) சேர்த்துக்கலைங்க)
முந்தியெல்லாம் ஊருக்குப் போகலாமுன்னு முடிவு செய்யறப்பவே அங்கே இருந்து 'வாங்கி'வர்ற லிஸ்ட் எழுத ஆரம்பிச்சுருவேன். எதுவும் வுட்டுறக்கூடாது பாருங்க. அடிக்கடி எங்கே போகமுடியுது? கடைசியாப் போயே வருஷம் மூணாச்சு.
இப்பத்தான் வலைஞர் வட்டத்துலே இணைஞ்சுட்டோமே! அதானாலே நமக்கு ஊருஒலகமெல்லாம் தம்பி, தங்கைங்க நிறைஞ்சு போயிட்டாங்கல்லே. கூடியவரை நாம எந்த ஊருக்குப் போறோமோ அங்கே இருக்கற வட்டங்களை( அட, நட்பு வட்டங்களைப்பா!) சந்திச்சுரணுமுன்னு ஒரு தீர்மானம் போட்டுக்கிட்டு நம்மைச் சந்திக்க விரும்பறவங்க விவரத்தையெல்லாம் பதிவுமூலமே சேகரிச்சுட்டேன். அநேகமா எல்லாருமே 'செல்' நம்பர் தந்திருந்தாங்க.
ச்சென்னையிலே காலு குத்துனப்பத்தான் தெரிஞ்சது 'செல் இல்லாதவன் புல்'ன்னு! ஜோதியிலே கலந்துரணுமேன்னு அவசர அவசரமா ஒரு 'சிம்'கார்டு வாங்கிக்கிட்டேன். ஏர்டெல்! இதுக்குக்கூட ரேஷன்கார்டு கேக்கறாங்கப்பா. இந்தவிஷயத்தை என்னோட அண்ணன் கையிலே விட்டுட்டதாலே தப்பிச்சேன்னு வச்சிக்குங்க.
கைப்பையிலேயே எப்பவும் வச்சுக்கிட்டு இருந்த லிஸ்ட்டை( ஆக்களோட செல் நம்பர் லிஸ்ட்டுங்க) எடுத்துவச்சுக்கிட்டு நானும் செல்லும் கையுமா ஆகிட்டேன். நம்ம கிருபாசங்கர், ஸ்டேஷன் பெஞ்சு ராம்கி, அல்வாசிட்டி விஜய், அருணா ஸ்ரீநிவாஸன் இப்படிச் சிலபேரைக் கூப்புட்டு வந்த விஷயத்தைக் கொஞ்சம் கசிய விட்டேன்.
இது எல்லாத்துக்கும் முன்னாலே, காலுகுத்துன ராத்திரிக்கு மறுநாள் விடியக்காலையிலே பக்திப் பரவசத்தோட நம்ம வூட்டுக்கு ரொம்பப் பக்கத்துலே இருந்த திருப்பதி தேவஸ்தானம் நடத்தற பெருமாள் கோயிலுக்குப் போனோம்.
எப்பவும் அங்கே துளசி, ரோஜான்னு பூ வித்துக்கிட்டு இருப்பாங்கதானே. இப்பப்பார்த்தா இதுங்கூட அடிஷனலாஅல்லி/தாமரைன்னு பிங்க் நிறத்துலே ஏராளமா துளசி கூடவே இருக்கு. என்னன்னு கேட்டா 'ஹஸ்பெண்டுக்குத் துளசியும், ஒய்ஃப்க்குத் தாமரையுமாம். இந்த ஒய்ஃப் எங்கே இருக்குன்னு மேல்விவரம் கேட்டா, நம்ம பூக்காரப்பொண்ணு(பேரு சாமுண்டீஸ்வரி)
'என்னாம்மா இப்படிக் கேக்குற? ஊருக்குப் போயிருந்தியா? எவ்ளோ நாளாச்சு, உள்ளேமகாலட்சுமி வச்சு.அதுக்குத்தாம்மா இந்தப்பூவு'ன்னு சொல்லிக் கையிலே இருந்த பூவை (அல்லியா தாமரையான்னு தெரியலைங்க)அதோட காம்பை ஒரு கையிலே புடிச்சுக்கிட்டு அதோட தலையிலெ ஒரு தட்டு. ஹை! பூ இதழ் இதழா மலர்ந்துருச்சு!அன்றலர்ந்த தாமரை....ஆஹா..... ஒரு ரெண்டு முழம் துளசியை அலுங்காமக் குலுங்காமப் பந்தாச் சுருட்டி அதன்நடுவிலே ஒரு தாமரை.
பத்து ரூபா கொடுத்துப் பூவை வாங்கிக்கிட்டு உள்ளே போனா, பெருமாள் பக்கத்துலே அவருக்குவலதுபுறம் சாக்ஷாத் மகாலக்ஷ்மி. மூக்குலே நத்து, கழுத்துலே நீலக்கல் அட்டிகை, காசுமாலைன்னு அமர்க்களமாப் பட்டுப்பொடவையோட அமர்ந்த திருக்கோலம். ஆனா முகத்துலே சிரிப்பே இல்லை. பெருமாளைப் பார்த்தால் வாயோரம் ஒரு புன்முறுவல். அய்யா நல்லா சிரிக்கறார். அம்மா ஏன் இப்படின்னு மனசுலே தவிப்பா இருக்கு. திரும்பஉத்து உத்துப் பார்க்கறேன். ஒரு 'கன்சர்ண்டு லுக்' இருக்கு. அதுக்குள்ளே கூட்டம் நகர்ந்து நம்ம முறை வந்துருச்சு,சாமி முன்னாலே நிக்கறதுக்கு. பயபக்தியோடு அந்தப் பூவை நீட்டுனா, அதை ஒரு கையாலே வாங்கி, பெருமாள் பாதத்துலே ஒரு கடாசு கடாசுனார் பட்டர். அதுலே இருந்த தாமரை தரையிலே விழுந்தது. நமக்குத்தான் மனம் பதைச்சதே தவிர, அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. இப்பத்தெரிஞ்சுபோச்சு, அம்மாவின் 'லுக்'குக்கு என்னஅர்த்தமுன்னு.
தீபாரதனை காட்டும்போதும் நம் கையில் இருக்கும் நோட்டுக்கேத்தபடிதான் நாம் கண்ணில் ஒற்றிக்கொள்ள 'முறை' வருது. இத்தனைக்கும் 'காணிக்கைகளை உண்டியலில் சேர்க்கவும்'னு எக்கச்சக்க அறிவிப்புப் பலகைகள். இதையெல்லாம் ரொம்பப் பொருட்படுத்தக்கூடாதுன்னு மனசை எச்சரிக்கை செஞ்சுக்கிட்டே தியானமண்டபம்/ஹால்லே வந்து உக்கார்ந்த பிறகும் மனசு ஒருமுகப்படலை. என்னமோ சரியில்லைன்னு ஒரு தோணல்.
அடுத்தடுத்த சிலநாட்களும் இதேதான். அப்பத்தான் ஒண்ணு கவனிச்சேன். சாமி சிலைகளுக்கும் நமக்கும் நடுவிலேஒரு ச்சின்ன இடுப்பளவு உயரமுள்ள தடுப்பு இருக்கே, அது பூஜை செய்யற பட்டருக்குத்தானே? அதுக்குள்ளேயும் சிலர் போய் சாமிக்குப் பக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கத்த்துலே நிக்கறாங்க. அவர்களுக்குத் தனிமரியாதை. யாரோ பெரியமனுஷங்க, வி.ஐ.பி.ங்க போலன்னு பார்த்தா, இல்லையே(-: ஆனா குபேரனோட பிரதிநிதிங்களா இருந்தாங்கன்னுகாசு கைமாறினப்போத் தெரிஞ்சது.
திருப்பதியிலேதான் இப்படின்னா, இங்கேயுமா? கடவுளுக்கு முன்னாலே எல்லோரும் சமம் இல்லையா? மனசுலேபெரிய உறுத்தலா இருந்துச்சு. ஆனாலும் தினமும் விடாமப் பூ வாங்குனேன். காரணம் எனக்கு அந்த 'சாமுண்டீஸ்வரி'யைப்பிடிச்சுப்போச்சு. நல்ல களையானமுகம். புன்சிரிப்பு. 'லட்சுமிகரம்'னு சொல்வாங்களே அது... கையில் ஒரு அஞ்சு
மாசக் குழந்தைவேற. அவுங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டும்ன்னு......
எதுக்கும் ஒரு முடிவு வர்றதுபோல மன உளைச்சலுக்கும் ஒரு முடிவு வந்துச்சு. எப்ப? 9 நாள் கழிச்சு!
தொடரும்....
Friday, March 10, 2006
வட்டமும் சதுரமும்.
Posted by
துளசி கோபால்
at
3/10/2006 07:38:00 PM
26
comments
Wednesday, March 08, 2006
கொஞ்சம் கொஞ்சமா........
படிக்கவேண்டியது தலைக்குமேலே கிடக்கே, கொஞ்சம் கொஞ்சமா மேய்ஞ்சுரலாமுன்னுஆரம்பிச்சேன். நான் ஊருக்குப் போனபிறகு வந்த வாரங்களிலே நட்சத்திரப் பதிவை மட்டும்ஒரு பார்வை பார்த்துட்டு மேலே போகலாமுன்னு நினைச்சா........... 'ஒண்ணுக்கு ஒண்ணு வாங்கலை. எதுவுமே லேசுப்பட்டதில்லை'ன்னு கிடக்கு.
நம்ம குமரனோட வாரத்துலேதான் பயணப்பட வேண்டியதாப்போச்சு. அவரென்னன்னா ,'டென் தவுசண்ட்வாலா'மாதிரி, பத்தொம்போது ( இன்னைக்குக் கணக்குக்கு!) சரவெடி வெடிச்சுக்கிட்டு இருக்கார். ஒரு பதிவுக்கே 'சரக்கில்லாம' முறுக்கிக்கிட்டிருக்கற நான் எங்கே, இளங்கன்று பயமறியாதுன்னு சொல்றாப்போல முணுக்குன்னா பதிவு தொடங்கி விளாசற என் தம்பி( ஆமா, இப்பமட்டும் பாசம் பொத்துக்கிட்டு வருதோன்னு யாரோ அங்கே முணங்கறது உங்களுக்குக் கேக்குதா?) எங்கே?
பிப்ரவரி 5 ஆம் தேதிக்குன்னு ஒரு முக்கியத்துவம் இருக்கு. அன்னிக்குக் 'காதல்' பத்தி ஒரு நட்சத்திரப்பதிவு வந்திருக்கு.பதிவு, அதுலே சொல்லப்பட்ட விஷயம்,அது வந்த நாள்னு எல்லாம் சேர்ந்து ( எப்பன்றதா முக்கியம்?அட, அதை இப்பத்தான் படிச்சேங்க.) மனசு 'ஜிவ்'ன்னு பறந்து ஒரு ஆட்டம் ஆடித்தான் ஓஞ்சது.
'தாணு'வோட வாரம் மனசுக்குள்ளே நம்ம கல்லூரிக் காலத்தை கொண்டு வந்துச்சுன்னு பார்த்தா, அதுக்கப்புறம் வந்த 'சிவா'வோடபுராணம் கிராமத்தைக் கண்ணுலே கொண்டுவந்து நிக்க வச்சது. அடடாடா... என்னமா எழுதறப்பா தம்பி. கள்ளமில்லாதமனுஷங்களைப் பத்திப் படிக்கறப்பவே கண்ணுலெ குளம் கட்டிக்கிச்சு. நாகரீகம்னு சொல்லி எதையெல்லாம் இழந்துட்டோமுன்னு நினைச்சா வர்ற துக்கம் இருக்கே..... கொன்னுட்டப்பா சிவா!
மோகன்தாஸ், காதலர் தினத்தைப் பத்தி எழுதுனப்பவே நைஸா அவரோட காதல் அனுபவங்களையும் சொல்லிட்டார்.கூடவே அம்மா செண்ட்டிமெண்ட், துளசி அம்மா( அம்மான்னு சொன்னா நான் அடிக்க வரமாட்டேனாமே! நியூஸியிலே இருந்து புனேவுக்குக் கை நீளாதாமா? ஆனா நான் புனேவிலே இருந்த ஆள். நமக்கும் அங்கே ஒரு கூட்டம் இருக்கு என்பதைஇங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். பாருங்க, இவரோட பதிவைப் படிச்சதும் ஏதோ பேச்சுப் போட்டிக்கு வந்தாப்புலேவார்த்தைங்க வந்துவுழுது!)ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதையும் பார்த்தேன்.
இவரோட ஹாக்கர்/க்ராக்கர் பதிவு பயனுள்ளதாக இருந்துச்சு. அதான் பெரியவங்க சொல்லிட்டுப் போயிட்டாங்களேப்பா,'வல்லவனுக்குவல்லவன் இந்த வையகத்திலுண்டு'ன்னு! 'நீ தடுக்குலே பாய்ஞ்சா நான் கோலத்துலே பாய்வேன்'னு இருக்கணும்போலெ. இதெல்லாம்யாருக்குத் தெரியுது....ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். 'சுருட்டு'பத்தி எழுதுனதும் நல்லா இருந்துச்சு. அது எனக்குப் புதுச் செய்தியும் கூட.சிங்கர் (ஒரு மரியாதைதான்!) பதிவைவிட அவரோட படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்ன இருந்தாலும் நான் பூனைவிரும்பி இல்லையா?அவருக்கு வந்த பின்னூட்டத்துலே'எண்டமூரி விரேந்திரனாத்'னு சொல்லி துளசிதளத்தைக் குறிப்பிட்டு இருந்தாங்கஒரு அனானி, இல்லே? போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சரித்திரக்கதைகள், கொலைகதைன்னு கலக்கிட்டாருப்பா.
நம்ம பச்சோந்தியின் வாரம் வேற விதமா இருந்தது.அப்படியே படிக்காம ரெண்டு மூணு முறை திருப்பித் திருப்பிப்படிக்கவேண்டியதாப் போச்சு. சமூகவியலாளர், நமக்கிருக்கும் திருட்டு புத்தி(!)ன்னு பலவிஷயங்களைத் தெரிஞ்சுக்கமுடிஞ்சது.
நகந்து நகந்து 'நிலா'வோட வாரத்துலே பாதியிலே வந்து சேர்ந்துக்கிட்டேன். போட்டி, தேர்தல்னு ஜமாய்ச்சுட்டாங்க.ஆனாலும்'பெற்றோருக்குச் சுயப் பரிசோதனை'ன்னு போட்ட பதிவு சூப்பர்ங்க. கடைசியாப் போட்ட விடைபெறும் பதிவும் மனசைக் கலக்கிடுச்சு.
ஸ்ருசல் இந்த வாரம் கலக்கிக்கிட்டு இருக்கார். அறிமுகத்துக்காக போட்டிருக்கற படம் அருமை!
எப்படியோ 'சாவி'கிடைச்சிருச்சு. நேத்துத் தண்ணி குடிச்சுட்டு கணினி ரூமுக்கு வந்தப்ப 'சட்'னு மூளை(!)யில் ஒரு பொறி( இல்லே பொரி யா?)சாவி வச்ச இடமோன்னு ஒரு இடத்தைப் போய்ப் பார்த்தேன். சாவிக்கொத்துகள் உட்கார்ந்திருந்தன.( இதுக்குத்தான் அடிக்கடி தண்ணி அடிக்கணும்போல)
இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லிடறேன். போன பதிவுலே வந்த 'டெர்ரகோட்டா புள்ளையார்' மண்டபத்துலே கிடைச்சார்.இதுமட்டுமில்லாம இன்னும் பல புள்ளையார்களையும் தந்தார், அந்த மண்டபத்துலே புலம்பிக்கிட்டு இருக்கறவர்.இதுக்குத்தான் நாம் ஒரு 'தீம்' வச்சுக்கணும். நமக்கு என்ன பரிசு கொடுக்கணுமுன்னு மத்தவங்க யோசிச்சுக் கஷ்டப்படக்கூடாதுல்லெ?
எல்லோரும் நல்லா இருங்க. நம்ம டிபிஆர் ஜோசஃப் ஃபைலை நாளைக்கு எடுத்துக்கணும்:-)
Posted by
துளசி கோபால்
at
3/08/2006 08:44:00 PM
35
comments
Saturday, March 04, 2006
அர்ரைவுடு சேஃப்லி வித் அம்னீஷியா

மொத வேலை
மக்கள்ஸ்!
எப்படி இருக்கீங்க? எல்லாரும் சுகம்தானே?
ஒருவழியா தேர் நிலைக்கு வந்துருச்சு. தமிழ்மணம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? எப்படியோ 36 நாளை ஓட்டிட்டிட்டேன். நடுவிலே ஒரு தோழி வீட்டுலே ஒரு நாள் தமிழ்மணம் 'பார்க்க' முடிஞ்சது.கணினி மையங்களிலே( இதுமட்டும்தான் தமிழ்!) தமிழ் ஃபாண்ட் இல்லீங்க. அப்படியும் பழக்கம் வுட்டுப் போயிரக்கூடாதுன்னு தினமும் தமிழ்மணம் தொறந்து பார்த்து, அந்தச் சதுரங்களையும், கேள்விக்குறிகளையும் 'படிச்சு'ப் பார்த்தாச்சு. ஹூம்....
நேத்துப் பகல் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பின்னூட்ட மாடரேஷன் போட்டுரலாமுன்னு வந்து பார்த்தா, ஜனங்க எழுதோ எழுதுன்னு எழுதித் தள்ளியிருக்கீங்களேப்பா! இதையெல்லாம் படிச்சு முடிக்கவே இன்னும் ஒரு 36 நாளு வேணும்போல! அர்ரியர்ஸ் வச்சுக்கிட்டு படற அவஸ்தையெல்லாம் உங்களுக்குத் தனியாச் சொல்லணுமா, என்ன?
இதுலே குறிப்பா சிலர் எனக்குப் போட்டியா என் 'பட்டத்தை'ப் பறிக்க சதி செஞ்சு அதுலே வெற்றியும் அடைஞ்சிருக்காங்க.(நற நற) பூனையில்லா வீட்டில் ஓடித்திரியும் எலிக்குட்டிகள்:-))))) பிழைச்சுப் போகட்டும். (நற நற)
எனக்கு 'ஞாபகசக்தி' யானைமாதிரின்னு அலட்டிக்கிட்டு இருந்தேனே, அதுகூடப் பொய்யாப் போயிருச்சுங்க. அதுலேகூடப்பாருங்க, இந்த 'செலக்டிவ் அம்னீஷியா' ஒரு குறிப்பிட்ட நிமிசத்தைப் பத்தித்தான்.
போறதுக்கு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாலே, என்னோட சாவிக்கொத்தைப் பத்திரப்படுத்தறேன்னு(!) ஒரு இடத்துலேவச்சேன். இப்ப அது எந்த இடமுன்னு தெரியலை. ஒவ்வொரு ஷெல்ஃப் முன்னாலேயும் போய் அப்படியே சிலை மாதிரிநின்னு முழிக்கறேன். நினைவுபடுத்திப் பாக்கறேனாம்! கிடைக்கறவரை இந்த 'நிலை' தொடரும். இப்படியானதுக்குக் காரணம் என்னவா இருக்குமுன்னு யோசிச்சப்ப, 36 நாளில் 'வழக்கத்துக்கு மாறா' செஞ்ச காரியங்களாலோன்னு சந்தேகம் வருது.
1. டி.வி. தொடர்கள் பார்த்தது.
2. தமிழ்மணம் படிக்காமல் இருந்தது.
3. வீட்டுவேலைன்னு ஒரு துரும்பையும் எடுத்துப்போடாம இருந்தது.
4.சென்னை சில்க்ஸ், குமரன், நல்லின்னு ஓடித்திரிஞ்சது( இப்ப இதுலே புதுசா 'சரவணா ஸ்டோர்ஸ்' வேற சேர்ந்துக்கிச்சு)
5. முழுக்கமுழுக்கச் செல்பேசியும் கையுமா இருந்தது.
6.தினமலர், ஹிந்து, தினகரன் பேப்பர்களைத் தினந்தவறாமல்'வாங்கி'ப் படிச்சது.
7. சக வலைஞர்களைச் சந்தித்துப் பேசியது!
8. சிங்கப்பூரில் ஒருகிராம் தங்கம்கூட வாங்காம பல நகைக்கடைகளை வலம் வந்தது. என்ன மன உறுதி!!( அதெல்லாம் மதுரையிலேயே கொஞ்சம் வாங்கியாச்சு)
இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.... .....
கொஞ்சம் பொறுங்க, சாவியைத் தேடிட்டு வந்துடறேன்!!!
Posted by
துளசி கோபால்
at
3/04/2006 07:26:00 PM
83
comments
