Monday, October 03, 2005

நியூஸிலாந்து. பகுதி 10


தெற்குத்தீவு

நம்முடைய ·பெரி இப்போது தெற்குத் தீவின் மேலெ உள்ள 'பிக்டன்' என்ற இடத்திற்கு வந்து விட்டது. காரையும் வெளியே எடுத்தாயிற்றல்லவா?
நேரே 'ஹைவே #1 'இல் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!


இந்த ரோடு , தெற்குத் தீவின் கோடிவரை செல்லும்! நாம் போகும் வழியில், 'ப்ளென்ஹெம்' என்ற ஊரைத் தாண்டுவோம். இது, திராட்சைத்
தோட்டத்திற்குப் பெயர் பெற்றது. ( ஹைதராபாத் ஞாபகம் வருதா? ) இந்த திராட்சைகள் எல்லாம் 'ஒயின்' செய்யவே பயன்படுகின்றன!
நிறைய ஒயின் தொழிற்சாலைகள் இங்கே இருக்கின்றன. அது இருக்கட்டும். நாம் ஒரு நல்ல ஊரைத் தாண்டவேண்டும்.


இதன் பெயர் 'கைக்கோரா' இங்கே விசேஷமாகப் பார்க்க வேண்டியது, 'கடல் சிங்கங்கள்!'


'ஸீ லயன், ஸீல் 'என்னும் பிராணிகளை அதன் இயற்கைச் சூழலில் பார்க்கக்கூடிய இடம். 'ஸில் காலனி' என்னும் இடத்திற்கு போகவேண்டும்.
இது கைக்கோராவிலே உள்ள இடம்தான். நல்ல சாலை வசதிகள் உண்டு. அங்கே போனால், ஆயிரக்கணக்கான கடல் சிங்கங்களைப்
பார்க்கலாம்! கூட்டம் கூட்டமாக, வெயிலில் பாறைகளின் மேல் தூங்கிக்கொண்டும், தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டும், மற்ற சிங்கங்
களுடன் சண்டை போட்டுக்கொண்டும், இது எதுவுமே போரடித்தால், தன்னைத்தானே சொரிந்துகொண்டும் இருக்கும் இவைகளைப் பார்ப்பதே
ஒரு ஆனந்தம்! அதிலும் சின்னச் சின்னக் குட்டிகளைப் பார்த்தால், 'குறு குறு' என்ற பார்வையுடன் அழகாக இருக்கும்.


இங்கே இந்த ஊரில்தான், 'வேல் வாட்ச்' என்னும் திமிங்கிலச் சுற்றுலா இருக்கிறது. அமெரிக்காவில், 'சாண்டியேகோ' என்னும் இடத்தில் உள்ள
கடல்வாழ் உயிர்கள் உள்ள பூங்காவில், திமிங்கிலங்களைப் பார்த்தவர்களுக்கும் இது வேறு விதமான விஷயம்!. திமிங்கிலத்தை அதன் இயற்கைச்
சூழலில் பார்க்க இதைவிட வசதியான இடம் ஏதுமில்லை என்பதே என் எண்ணம்.


படகில் சென்றும் பார்க்கலாம் அல்லது 'ஹெலிக்காப்டர்' மூலமாகவும் பறந்து பார்வையிடலாம்! இங்கே கோடைகாலமான டிசம்பர் மாதம் முதல்,
·பிப்ருவரி மாதம் வரை, உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்கள் இந்த கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கவே, முக்கியமாகத் திமிங்கிலங்களைப்
பார்க்கவே ஏராளமாக வருகின்றனர்!



சில சமயங்களில், திமிங்கிலங்கள் ஏதோ காரணத்தினால், கரையில் வந்து ஒதுங்கி, தற்கொலை செய்துகொள்கின்றன! அப்போது, எந்த ஊர்க் கரை
யில் அவை வந்து சேர்கின்றனவோ, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் எப்படியாவது அவைகளை மீண்டும் கடலில் கொண்டு சேர்க்கவும்,
உதவி வரும்வரை அவை உயிர் பிழைத்திருக்க, அவைகளின் மேல் நீரை வாரி வாரி ஊற்றிக் கொண்டிருப்பதையும் அடிக்கடி தொலைக்காட்சியில்
பார்க்க முடியும். அங்கே உள்ள பள்ளிகளில் இருந்து, எல்லாப் பிள்ளைகளும் இந்த உயிர் மீட்புப் பணியில்தான் ஈடுபட்டு இருப்பார்கள்.


'கைக்கோரா'வை விட்டு வந்துகொண்டே இருந்தால் அடுத்த பெரிய ஊர் 'கிறைஸ்ட்சர்ச்'தான். ஆனால், நாம் ஊருக்குள்ளெ போகாமல்,
இதே ஹைவேயில் பயணத்தைத் தொடரலாம். இந்த 'கிறைஸ்ட் சர்ச்'சைக் கடைசியாகப் பார்க்கலாம். எப்படியும், நாம் திரும்பிப் போகவேண்டிய
பன்னாட்டு விமான நிலையம் இங்குதானே உள்ளது!


போய்க்கொண்டே இருந்தால் 'டிமரு' என்ற சிறிய ஊர் வரும். இங்கே ஒரு துறைமுகம் இருக்கிறது. கப்பல் வழியாக வியாபாரங்களுக்கு
உதவி என்பதைத் தவிர விசேஷமாக ஒன்றுமில்லை.


அடுத்து வருவது 'ஓமரு' என்னும் ஊர். இங்கே 'பெங்குவின்' பறவைகளைப் பார்க்கலாம், அதன் இயற்கைச் சூழலில்! காலையில் இரை தேடி,
இவை கடலுக்குள் சென்றுவிடுமாம். பிறகு அங்கேயே பகல் முழுதும் இருந்துவிட்டு, மாலையில் கொஞ்சம் இருட்டின பிறகுதான் இவைகள்
கரைக்குத் திரும்பி வருமாம். இந்த 'பெங்குவின் பறவை காலனி' யில் செடி, புதர்களுக்கு நடுவேயெல்லாம், கூடு ( வீடு) செய்து
வைத்துள்ளனர்.


கான்சர்வேஷன்( இதற்குத் தமிழில் என்ன?) துறையினர் இந்தப்பகுதியை, அதன் இயற்கைத் தன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.


மாலை, இருட்டுவதற்கு முன், நாம் அங்கே போய், இவர்கள் கட்டிவைத்துள்ள பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருந்து
நாம் கடல் தண்ணீரைப் பார்க்கமுடியும். முதலிலேயே சொல்லிவிடுவார்கள் நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று!


பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..) டார்ச் லைட்டோ, ·ப்ளாஷ் உள்ள கேமெராவோ உபயோகிக்கக்கூடாது. எழுந்து நடக்கக்கூடாது.
அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும்.


நாமெல்லாம், தண்ணீரையே பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், பாதுகாவலருக்கு எப்படியோ தெரிந்துவிடும்.
நமக்கு எச்சரிக்கை விடுவிப்பார். அதன்பின் ஒரே அமைதிதான்.


நாமெல்லாம், அண்டார்டிக்காவில் உள்ள 'எம்பரர் பெங்குவின்' போல'மெகா சைஸில்' ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இங்குள்ளவை
மஞ்சள் கண் பெங்குவின்கள். கோழியைவிடச் சின்ன சைஸில் இருக்கும்! சுமார் ஒரு அடி உயரம் இருக்கும்!


முதலில் ரெண்டு மூன்று பறவைகள் கடற்கரையில் தோன்றும். தண்ணீரிலே வந்து கரை ஏறியவைதான். அப்படியே அங்கேயே நின்றுகொண்டிருக்கும்.
நேரம் போகப் போக நூற்றுக் கணக்கில் வந்து சேரும். மணலிருந்து ஏறி நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குமுன் 'பாதையைக் கடக்க' எல்லாம்
வரிசையில் நின்று கொண்டிருக்கும். அவர்கள் கூட்டத் தலைவன் வந்து, போகலாம் என்று சொன்னால்தான் போகவேண்டுமாம்!


ஆரம்பப் பள்ளிகளில், முதலாம் வகுப்புப் பிள்ளைகளை நினைவூட்டும் விதத்தில், அந்த வரிசையில் பேச்சும், ஒன்றை ஒன்று தள்ளுவதும்,
இடிப்பதும், வரிசையில் இருந்து தள்ளிவிடுவதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும். அல்லது இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். அபிமான
நடிகரின் படம் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதைப்போல! ஒரே 'கல பிலா' சத்தம்தான்.


ஆஹா, இதோ வந்துவிட்டார், தலைவர்! தலைவர் முதலில் பாதையை இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு, ஏதோ கட்டளை இட்டவுடன், எல்லாம்
வரிசையாகப் பாதையைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும். அந்த மெல்லிய இருட்டிலும் எப்படியோ தங்கள் வீடுகளை அடையாளம்
கண்டு கொள்ளுமாம்!


இவ்வளவு நேர்த்தியான ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் இவை உண்மையிலேயே அதிசயப்பறவைகள்தான்! இவைகளை இந்த இடத்தில் மட்டுமே
நாம் காணமுடியும் என்பதால், சுற்றுலா வரும் கூட்டத்தினர் தவறாமல் இங்கு வருவார்கள்.


இந்த 'ஓமரு'விலிருந்து கிளம்பி அதே ஹைவே நம்பர் ஒன்றில் போனோம் என்றால் அடுத்துவரும் பெரிய ஊர் 'டனேடின்'. இந்த ஊர்
'ஸ்காட்லாந்து' மக்கள் முதலில் குடியேறிய இடம். ஆகவே எல்லா இடங்களிலும், கட்டிடங்களும், மற்ற அலங்காரங்களும் நமக்கு
'ஸ்காட்டிஷ்' நாகரிகத்தையே நினைவூட்டும் விதமாக இருக்கும்.


இங்கே ஒரு பல்கலைக் கழகம் உள்ளது. கல்வி ஆண்டில் மட்டுமே ஏராளமான மாணவர் கூட்டத்தோடு 'கல கல'
வென்று இருக்கும் இந்த ஊர், பல்கலைக் கழக விடுமுறை தொடங்கியதும் ஒரு நான்கு மாதத்திற்கு 'வெறிச்'சென்று ஆகிவிடும்! ஆனால்
அதே சமயம் இங்கு கோடை காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் அந்த இழப்பை ஈடுசெய்து விடுவார்கள்.


இந்த நகரின் முந்திய 'மேயர்' ஒரு இந்தியப் பெண்மணி! இவர் மேயர் பதவியை ஒன்பது வருடங்கள் வகித்தார்! 'க்ளென் டர்னர்' என்ற
கிரிக்கெட் ஆட்டக்காரை மணந்தவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒன்பது வருடங்கள் அதாவது மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு
வென்றது போதும் என்று, இந்த முறை இவர் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை.போன வாரம்தான் இங்கே நகராட்சித் தேர்தல் நடந்துமுடிந்தது!


புதிய மேயராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஒரு சீனர். ஒரு சீனர் மேயரானது இதுவே முதல் முறை!


இந்த ஊரில் இன்னுமொரு விசேஷம் உண்டு. உலகத்திலேயே மிகவும் உயர்ந்த சரிவுள்ள தெரு இங்கேதான் இருக்கின்றது! புதுக் கார்
வாங்கியவுடன், அநேகமாக எல்லோருமே ஒருமுறை, இந்தத்தெருவில் பயணம் செய்ய விரும்புகின்றனர். கார் எஞ்சின் பலத்தை அறிய இது
ஒரு நல்ல வாய்ப்பாம்! செங்குத்தாக தெரு மேலே போகிறது. ஒருமுறை மேலே போய்விட்டு, திரும்பி வரும்போது, அதல பாதாளத்தில் விழுவது
போன்ற உணர்வில் நமக்கு வயிறு கலங்கிவிடும். ஆனால், இதை அனுபவித்து உணர்வதற்காக எப்போதும் இந்தத்தெருவில் கார் நடமாட்டம்
இருந்துகொண்டே இருக்கும்! இந்தத் தெருவின் பெயர்'பால்ட்வின் ஸ்ட்ரீட்' 38 டிகிரி கோணத்தில் உயர்ந்துள்ளது. சின்னத்தெருதான்.நடந்தும்
போகலாம். மேலே நமக்காக ஒரு குடிநீர் குழாய் வசதியும் உண்டு! ( ஏறுவதற்குள் மூச்சிளைத்து, தொண்டை காய்ந்துவிடுமே, அதற்கான
முன் எச்சரிக்கை!)


இங்கே ஒரு கடற்புறா காலனியும் உண்டு. 'ஆல்பட்ராஸ்' என்னும் பிரமாண்டமான பறவைகளின் குடியிருப்பு இது. இவைகள் இரண்டு
இறக்கையையும் விரித்தால் வரும் நீளம் ஆறு அடிக்கும் மேலே! இவைகளைச் செல்லமாக 'ஆல்பி' என்று அழைக்கின்றனர்! எல்லா இடங்களிலும்
பறவைகளுக்குத் தொந்திரவில்லாமல், பார்வையாளர் போய்ப் பார்ப்பதற்குத் தகுந்த முறையில் ஏற்பாடுகள் நல்ல முறையில் செய்திருக்கின்றனர்.



மீண்டும் அதே ஹைவேயில் பயணம் செய்தால், 'இன்வெர்கார்கில்' என்ற சிறிய ஊரை அடையலாம். இங்கெல்லாம் இயற்கை அழகுதான்.
அதைக் கடந்து பயணம் செய்தால், ப்ள·ப்' என்னும் ஊரை அடைவோம். இதுதான் தெற்குத் தீவின் கடைசியில் உள்ள ஊர். கோடியில்
இருப்பதே இதன் பெருமை. இந்த ஊரில், 'பாவா' என்று அழைக்கப்படும் கடல் சிப்பிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்கிறது.
இது ஒரு தனி மனிதரின் சொந்தப் பொழுது போக்காக ஆரம்பித்ததாம். இந்த 'பாவா' சிப்பிகள் மிகவும் அழகான வண்ணங்களில் இருக்கின்றது!
இவைகளை அணிகலன் செய்யவும் உபயோகிக்கிறார்கள். நீலமும், பச்சையுமாக அசப்பில் பார்த்தால், நம் தேசீயப் பறவையான மயிலின்
இறகுகளை நினைவூட்டும் வர்ணங்கள்!



இங்கிருந்து படகில் பயணம் செய்தால் வரும் மற்றொரு சிறிய தீவுதான், 'ஸ்டூவர்ட் ஐலண்ட்' எனப்படுவது. இந்தத்தீவுடன் இந்த நாட்டின்
எல்லைக்கோடு முடிவடைகிறது! மொத்தமே முப்பது ஆட்கள்தான் இங்கெ வசிக்கின்றனர்! இங்கிருந்து நேரே போனால் நீங்கள் தென் துருவத்தை
அடைந்துவிடலாம்!


இந்தச் சிறிய தீவைச் சென்றடைவதற்கு, ஒரு சிறிய விமானமும் உண்டு என்றாலும், கால நிலையை அனுசரித்தே படகும் விமானமும் தங்கள்
சேவையைச் செய்கின்றன. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலேயே, இந்தச் சேவைகள் சிலசமயம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது!


பயணக்கதை எழுதும் சிறப்பான எழுத்தாளர் 'திரு மணியன்' அவர்களை யாருக்காவது நினைவிருக்கின்றதா? அவர், தனது தென்கோடியை
நோக்கிய பயணக்கதை எழுத இங்கு வந்திருந்தபோது, எங்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவருக்கும், 'ஸ்டூவர்ட் தீவு' போகும்
வாய்ப்புக் கிட்டவில்லை.இந்த நாட்டின் கடைசி எல்லை வரை போகமுடியாததில் அவருக்கு ரொம்ப வருத்தம்தான்!



இங்கிருந்து நீங்கள் திரும்பி, இதே வழியாகவும் வரலாம். அல்லது, இயற்கை அழகை ரசித்துக்கொண்டே,'குவீன்ஸ் டவுன்' என்னும் ஊரின்
வழியாகவும் 'கிறைஸ்ட்சர்ச்' வந்து சேரலாம்.இந்த 'குவீன்ஸ் டவுன்' உங்களுக்குத் தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலம் பரிச்சயமான
ஊர்தான். பரந்து விரிந்த நீர்நிலைகளிலும், பனி படர்ந்த மலைகளிலும், நம் கதாநாயகனும், நாயகியும் பாடி ஆடுவதைத்தான் பல படங்களிலும்
பார்த்திருப்பீர்களே!


இந்த இடத்தில்தான், 'பஞ்சி ஜம்ப்' என்னும் மிகவும் உயரத்திலிருந்து, கீழே குதிக்கும் பொழுது போக்கு விளையாட்டு நடக்கிறது! குதிப்பதற்கு
முன், உங்களின் எடையை சரிபார்த்து, அதற்கேற்ற அளவிலான கயிறுகள் உபயோகித்து, கால்களைக் கட்டிக் கொண்டு தலைகீழாக குதிக்க
வேண்டும்! ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்றுதான் குதிப்பீர்கள். கீழே தண்ணீரைத் தொட்டவுடன், அங்கே தயாராக உள்ள படகில் உங்களைத்
திருப்பி அழைத்து வருவார்கள். உங்கள் 'தாவல்' வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு வழங்கப்படும்! மேலும் நீங்கள் குதித்தற்கான
சான்றிதழும், 'நான் பஞ்சி ஜம்ப் செய்தேன்' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட ஒரு 'டி சர்ட்'ம் உண்டு! இவையும் சுற்றுலாப் பயணிகளைக்
குறிவைத்தே நடக்கும் ஒரு தொழிலாகிவிட்டது! நல்ல பாதுகாப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும், குதித்தபின், திரும்பிவரும்போது,
'குடல் எல்லாம் தொண்டை வரை' வந்த உணர்வுதானாம்! இந்த 'த்ரில்'க்கும் கூட்டம் வருகிறது!


அடுத்த வாரம் பார்க்கப் போவதுதான், தெற்குத் தீவின் மிகப் பெரிய ஊரான 'கிறைஸ்ட் சர்ச்'. இதுதான் நான் வசிக்கும் இடம்.


நன்றி: சங்கமம் 2004

Saturday, October 01, 2005

நியூஸி மாநாடு.

மக்களே,

நேற்றைய வலைஞர்களின் மாநாடு மிகவும் சிறப்பா நடந்துச்சு.மாநாட்டுக்கு வந்த மகாஜனங்கள் எல்லாம் ஊரைச் சுத்திப்பாக்கறேன்னு போய், இந்த ஊரோட அழகுலே மயங்கி ரொம்பநேரம் மெய்மறந்து நின்னு/பார்த்து மாநாட்டுக்கு தாமதமாவந்து சேர்ந்தாங்க.

எப்படிப் பார்த்தாலும் நம்முடைய தேசியகுணமான 'காலம் தவறுதலைக் கடைப்பிடிச்சு நாமெல்லாம்அசல் இந்தியர்கள்னு நிரூபிக்க வேணுமா இல்லையா?:-))))))

அவுங்களையும் சொல்லி என்னங்க பண்ணறது. ரெண்டே நாளுலே இங்கே இருக்கற அழகையெல்லாம் அள்ளிப் பருக முடியுமோ?


வலைப்பதிவாளர்களும், வாசகர்களும்னு கூட்டம் களைக்கட்டியே இருந்துச்சு. மனிதர்கள் மட்டுமில்லாமமிருகங்களும் கலந்துக்கிட்ட முதல் வலை மாநாடு இதுவாத்தான் இருக்கணும்.


'எல்லாத்தைப் பத்தியும் பேசுனோம்' இப்படி சொன்னா நல்லாவா இருக்கு?
'சூரியனின் கீழே இருக்கும் எல்லாவிதமான விஷயங்களைப் பற்றியும் விவாதித்தோம்'இது எப்படி இருக்கு?


இங்கே பதிவுகளிலே குஷ்பு விஷயம் நார்நாராக் கிழிஞ்சிக்கிட்டு இருக்கறப்ப, மாநாட்டுலேபங்குபெற்ற ச்சின்னஞ்சிறுவன் (வயசு வெறும் ஒம்போதரைதான்!) அப்படியே எளிதா இது சம்பந்தமாஒண்ணு சொன்னார்.
ரெண்டு பூனைங்களை 'மேட்' செய்யவச்சுட்டா, குட்டி போடும்னு சொல்லி எங்க வாயை ஒரேடியாபிளக்கவச்சுட்டார். இப்பெல்லாம் வயசுவித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் தெரியுது.மாநாட்டுலே மிருகங்கள் சார்பா கலந்துக்கிட்ட ஒருத்தரைவச்சுத்தான் இந்தப் பேச்சே வந்துச்சு.அவர் சொன்னதுமுற்றிலும் சரின்னு அந்த பார்வையாளர் ச்சும்மாத் தலையை மட்டும் ஆட்டிஅவர்கருத்தை ஒத்துக்கிட்டார்.


செவிக்குமட்டுமில்லாம கொஞ்சம் வயித்துக்கும் உணவு கிடைச்சது. எல்லாத்தையும் விவரமாச் சொல்லிதாணுவோட வயித்தெரிச்சலைக் கிளப்பணுமான்னு யோசனையா இருக்கு:-)


விருந்துலே கடைசி ஐட்டமா வந்த 'ஐஸ்க்ரீமை மட்டும்' மிருகங்களின் பிரதிநிதி எடுத்துக்கிட்டார்.வெற்றிகரமாக நடந்த இந்த மாநாடு, இரவு 11.30க்கு முடிவடைந்தது.


பெண்களுக்கு 33 சதமானம் னு சொல்ற கணக்குலே இல்லாம மாநாட்டுலே பெண்களின் பங்கு சரியா50% இருந்தது குறிப்பிடத்தக்கது.இவர்களிலே ஒருவர், பின்னூட்டம் கொடுக்க முடியலை, ப்ளொக்கர் கணக்கு இல்லைன்னு சொல்லி வருத்தப்பட்டார்.அப்ப நீங்கதான் அந்த 'அன்னானி'யான்னு கேட்டு வச்சேன். பாவம் பதறிட்டார். பின்னூட்டத்துக்காகமட்டும்கூடநீங்க ஒரு ப்ளொக்கர் கணக்குத் துவங்கலாம். 'நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்புல்லே'ன்ற பொன்மொழியைச்சொல்லி அவுங்களை ஊக்குவிச்சு என் கடமையைச் செவ்வனே செஞ்சு முடிச்சேன்:-)


இளைய பார்வையாளருக்கு எங்கள் 'வாக்குவாதங்கள்'எல்லாம் ஒரு தாலாட்டுப்போலப் பரம சுகமா இருந்ததுன்னுபடத்தைப் பார்த்தாவே புரிஞ்சிடும்.


மாநாட்டை நல்லபடியாக நடத்திக் கொடுத்த அனைவருக்கும், வராமலிருந்து( நல்லவேளை) வாழ்த்தியவர்களுக்கும்நன்றி கூறிக்கொண்டு என் சிற்றுரையை முடிக்கின்றேன்.







நன்றி வணக்கம்.

கிறைஸ்ட்சர்ச், நியூஸிலாந்து.
1/10/2005

நியூஸிலாந்து. பகுதி 9

கப்பல் காத்திருக்கு!



இப்போது நாமெல்லாம், தெற்குத்தீவை நோக்கிப் போகின்றோம். அப்படியே விமானத்துலே போனால் ஒரு 40நிமிசம் போதும். ஆனால் வழியிலே வேடிக்கை ஒன்றும் பார்க்க முடியாதல்லவா?ஆகவே, நாம் வெல்லிங்டன் நகரிலிருந்து, 'குக் ஜலசந்தி' ( எல்லாம் நம்ம கேப்டன் ஜேம்ஸ் குக் தான்.இவர்தானே இந்த நாட்டைக் கண்டுபிடிச்சவர்)வழியாகக் கப்பலிலே போகிறோம்.


இது ஒரு 3 மணிநேரப் பயணம். நாம் போய்ச் சேருமிடம், 'பிக்டன்' என்னும் ஊர். அங்கிருந்து 'கார்'பயணம்.விருப்பம் என்றால் ரயிலிலும் போகலாம்! கார் தான் வசதி. நம் காரையுமே இந்தக் கப்பலிலே கொண்டுவந்து விடலாமே!
வரும் வழியில், ரொம்பவுமே குளிராக இல்லையென்றால், வெளியில் நின்றுகொண்டு, அவ்வப்போது துள்ளிக் குதித்துவிளையாடும் 'டால்·பின்' மீன்களைப் பார்த்து ரசிக்கலாம்!


இதைவிட வேகமாகப் போகும் '·பாஸ்ட் ·பெரி சர்வீஸ்' உண்டு.அதிலே போனால் இரண்டு மணி நேரம்தான். நாம்ஊரைச் சுற்றிப் பார்க்க அல்லவா வந்திருக்கிறோம். ஆகவே நிதானமாக எல்லாவற்றையுமே ரசிக்கலாம்!
எல்லாவற்றுக்கும் முன்பாக உங்கள் கைக்கடிகாரங்களில், இப்போது காண்பிக்கும் நேரத்தைவிட ஒரு மணி அதிகமாகவைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் கடிகாரம் காண்பிக்கும் நேரம் பத்து என்றால் அதைப் பதினொன்றாக ஆக்கிவிடுங்கள்!


இதைப் பற்றிய முழுவிவரமும் கீழே தருகின்றேன்!


பகல் நேர சேமிப்பு ( Day light Saving)


பகல் நேரச் சேமிப்பு நாளைக் காலை இரண்டு மணி முதல் ஆரம்பிக்கும் என்று தொலைக்காட்சியிலும், செய்திதாள்களிலும் வந்திருந்தது. இரவு தூங்கப்போகும் முன்பு வீட்டிலுள்ள கடிகாரங்களை ஒரு மணி நேரம்கூட்டி வைக்க வேண்டும்.


பகல் நேரச் சேமிப்பு என்றால் என்ன?


பூமத்திய ரேகைக்கு மேலும், கீழுமாய் கடக, மகர ரேகைகள் இருக்கின்றனவல்லவா? இவற்றிற்கு இடையில்உள்ள பகுதி 'ட்ராபிக்கல்' பகுதி என்று அழைக்கப்படுகின்றது. இங்கெல்லாம் சூரியன் உதயமாகும் நேரமும்,அஸ்தமிக்கும் நேரமும் காலை 6 மணி, மாலை 6 மணி என்று இருக்கும். பகல் நேரமும், இரவு நேரமும் அநேகமாக 12 மணி அளவில் இருக்கும். கோடைக் காலங்களில் சூரியன் 6 மணிக்கு சிறிது முன்பாகவும்,குளிர் நாட்களில் 6 மணிக்குச் சற்றே பிந்தியும் உதயமாகும். அதுவும் கூட அநேகமாக ஒரு பத்து நிமடவித்தியாசம்தான்!


இந்த 'ட்ராபிக் ஆ·ப் கான்ஸர், ட்ராபிக் ஆ·ப் கேப்ரிகார்ன்' ( கடகம், மகரம்)இரண்டுக்கும் மேலேயும்,கீழேயும் உள்ள நாடுகளில், கோடைக்காலம் என்றால் காலை சூரியோதயம் ஆறுமணிக்கு முன்பே ஆரம்பித்துவிடும். இதுவே கோடைக்காலம் ஆரம்பித்து நாட்கள் போகப் போக இன்னும் சீக்கிரமாக சூரியோதயம் நிகழும்.அதுபோலவேஅஸ்தமன சமயமும் 6 மணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தள்ளித்தள்ளி போகும். டிசம்பர் மாதம் 22 தேதியன்று பகல் பொழுது மிகவும் நீண்டு இருக்கும். காலை 4 மணி அளவில் சூரியோதயம்ஏற்பட்டு, மாலை 9 மணிவரையும் அன்று பகல் பொழுது சூரிய வெளிச்சம் இருக்கும்! அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பகல் பொழுது சுருங்கி வர ஆரம்பிக்கும். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மிகக் குறைந்தபகல் பொழுது உள்ள நாளாகும். இவைகளையே 'லாங்கஸ்ட் டே, ஷார்ட்டஸ்ட் டே' என்று சொல்வார்கள்.


பூமத்திய ரேகைக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் குளிர்காலம் இருக்கும்போது, தெற்கேயுள்ள பகுதிகளில்கோடைக் காலமாக இருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமல்லவா?


பகல் பொழுது அதிகமாக இருக்கும் நேரங்களில் பகல் நேரத்தைச் சேமிக்கிறார்கள். மொத்தமே ஒரு நாளுக்கு 24 மணிதானே? எப்படி நேரத்தைச் சேமிக்க முடியும்? எந்த வங்கியில் இதை சேமிக்கிறார்கள் என்றெல்லாம்கேள்விகள் எழுகின்றதல்லவா?


இங்கே நியூஸிலாந்தில் குளிர் காலம் முடிந்து வசந்தகாலம் செப்டம்பர் 1 முதல் தொடங்கி விடுகின்றது.குளிர் காலத்தில், ஜூன் 22க்கு, ஏழரைமணிக்கு நேரும் சூரியோதயம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துஅக்டோபர் 3ஆம் தேதி காலை 6 மணி 1 நிமிடத்திற்கு நடைபெறும். இந்த வருடம் 'லீப்' வருடம் என்பதால்இது அக்டோபர் 2ஆம் தேதி நிகழ்ந்தது! மறு நாளிலிருந்து 5மணி, 59 நிமிடம், அதற்கு அடுத்தநாள் 5 மணி57 என்று குறைந்துகொண்டே வரும்.
சீக்கிரம் பொழுது விடிந்துவிடுவதால், எல்லோருக்கும் சீக்கிரமே விழிப்பு வந்து விடுமாம். (ஆனால் இதுஎல்லோருக்கும் பொருந்துமா? 'கும்பகர்ணர்கள்' இங்கே மட்டும் இருக்க மாட்டார்களா?) அப்படி சீக்கிரம்எழுந்திரிப்பவர்கள், வேலைக்கோ, பள்ளிகளுக்கோ செல்வதற்காகத் தயாராகிவிட்டு, நேரம் போகாமல்சும்மாதானே இருப்பார்கள்? இங்கே வேலை காலை 8.30க்கும், பள்ளிக்கூடங்கள் 9 மணிக்கும் ஆரம்பிக்கும்.சும்மா இருக்காமல் சீக்கிரமாக வேலைக்கோ, பள்ளிகளுக்கோ சென்றுவிட்டால், சீக்கிரமாக வீடு திரும்பலாம்.எல்லோரையும் எப்படி சீக்கிரமாகக் கிளம்ப வைக்க முடியும்? சிலபேர், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்என்று நினைத்துவிட்டால்?
அப்போது எல்லோரையும் காலை நேரத்தில் விரட்ட என்ன வழி? ஆஹா! 'யூரேகா!' கண்டுபிடிச்சாச்சு!கடிகாரத்தில் காலை 6 மணியை 7 என்று மாற்றிவிட்டால் எல்லோரும் நேரமாகிவிட்டதே என்று அவதி அவதியாகக்கிளம்பிவிடலாம் என்று யாரோ 'ப்ரகஸ்பதி' கண்டுபிடித்ததுதான் இந்த பகல்நேர சேமிப்பு.


இதை 'ஒரிஜனலாகக் கண்டுபிடித்த நாடு' இங்கிலாந்துதான். இங்கே புலம் பெயர்ந்த வெள்ளையர்களுக்குஅது 'தாய்நாடு'அல்லவா? என்ன இருந்தாலும் பாசம் போகுமா? அங்கே என்ன மாற்றங்கள் நேர்ந்தாலும்,அதை ஓரளவாவது புலம் பெயர்ந்தவர்களும் கடைப்பிடிப்பது ஒரு மரபாக ஆகிவிட்டதே!
இங்கே நியூஸிலாந்தில் இதைத் தொடங்குமுன் ஒரு கருத்துக் கணிப்பு நடந்ததாம். அதில் நிறையபேர் இதைஆதரித்து ஓட்டுப் போட்டதால் இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இது தொடங்கி இந்த ஆண்டோடு சரியாகமுப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மாற்றமாக இருந்தாலும் நியாயமாக நடப்பதாகக் காண்பிப்பதற்கு ஒரு பொதுக் கருத்துக்கணிப்பு, தேர்தல் நடக்கும் சமயம் சேர்த்து நடத்தப்படும். ஓட்டுச் சீட்டுபோல ஒன்றுதரப்படும். அதை நாம் வழக்கமாக்ப் போடும் ஓட்டுச் சீட்டோடு சேர்த்து இரண்டு சீட்டாகப் பெட்டியில் போடவேண்டும்!



முதலில் கோடைகாலம் ஆரம்பித்தபோது மட்டும் என்றிருந்து, படிப்படியாகக் கூடிப்போய் இப்போது வசந்தகாலம்தொடங்கி ஒரு மாதம் ஆனதுமே இதையும் ஆரம்பித்துவிடுகின்றனர். அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்றுஆரம்பித்து, கோடை முடிந்து, இலையுதிர் காலம் மார்ச் மாதம் ஆரம்பித்தபின்னர் மூன்றாம் வாரம் இதுமுடிவடையும்.

இதனால் என்ன பயன்?


அரசாங்கம் சொல்கிறது இப்படி. சீக்கிரம் வீடு திரும்புவதால், மாலை நேரங்களில் குடும்பத்தாருடன் கூடுதல்நேரத்தைச் செலவிடலாமாம்! உடற்பயிற்சி, பொழுது போக்கு நடவடிக்கைகள் என்று ஏதாவதில் அந்த நேரத்தைச்செலவிடலாமாம்! ஒரு மணி நேரம் கிடைப்பது என்பது பல விஷயங்களுக்கு உதவியாக இருக்குமாம்!


விவசாயிகளும், பால்ப் பண்ணை வைத்திருப்போரும் இதை ஆதரிக்கவில்லை. காலை 5மணிக்குப் பால் கறக்கும்வழக்கம் என்று வைத்துக்கொண்டால், பகல் நேரச் சேமிப்பின்போது,அரசாங்கம் அறிவித்த நேரம் காலை மணி 5 மணி என்பது,உண்மையாக 4 மணிதானே! அப்படி இருக்கும்போது இருட்டில் யார் போய் பால் கறப்பது, மற்றும்விவசாய வேலைகளைக் கவனிப்பது என்று அவர்கள் இதை விரும்பவில்லை. முதல் 5 வருடங்கள் அவர்கள் இதைஎதிர்த்தும், அவர்கள் கடிகாரத்தில் நேரத்தை மாற்றாமல் எப்போதும் போலவே இருந்தார்களாம்.


இதனால் அவர்கள் பலவித இடைஞ்சல்களுக்கும் ஆளானார்களாம். கறந்த பாலை, வாங்கிக் கொண்டுபோக வரும்'டாங்கர்கள் லாரிகள்' ஒருமணிநேரத்திற்கு முன்பே வந்துவிடுமல்லவா? பிள்ளைகளும், பள்ளிக் கூடங்களுக்கு ஒருமணி நேரம்தாமதமாகப் போய்ச் சேர்வார்கள் அல்லவா? இந்தக் குழறுபடிகள் எல்லாம் சகிக்க முடியாமல் போனவுடன், அவர்களும்அரசாங்க நேரத்தையே கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாடு முழுவதும் ஒருமணி நேரம் கடிகாரத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதால் உண்மையாகவே நன்மை உண்டா என்றுஎன்னைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


சரி, சீக்கிரம் எழுந்தாயிற்று. சீக்கிரம் வேலைக்குப் போகவேண்டுமே என்று வழக்கத்தைவிட ஒரு மணி முன்பாகவேகாலை உணவு சாப்பிடவேண்டும். பகல் நேர 'லஞ்ச் ப்ரேக்'12 மணி என்றால் அப்போது உண்மையான நேரம்காலை 11 மணிதான். இதேபோலத்தான் மற்ற உணவு நேரங்களும். எல்லாம் ஒரு மணி முன்னே.


நம் உடலில் 'பாடி க்ளாக்' எனப்படும் ஒரு கடிகாரம் உண்டல்லவா? அதற்கு உண்மையான 7.30க்குக் காலை உணவுஅருந்தும் பழக்கம் என்றால், அரசாங்கம் சொல்கின்ற 7.30 ஆகிய நேரம் உண்மைக்குமே 6.30 அல்லவா? எப்படிப் பசி எடுக்கும்? சரி, தொலையட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் வயிற்றைப் பழக்கப்படுத்தி முடிப்பதற்கும், இந்தப்பகல் நேர சேமிப்பு முடியவும் சரியாக இருக்கும்! அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உணவருந்த மீண்டும் வயிற்றைப் பழக்க வேண்டும்!



இது மட்டுமல்ல. இங்கே சின்னக் குழந்தைகளுக்குப் படுக்கை நேரம் 7.30. பகல் நேரச் சேமிப்பின் போது 7.30 என்றால்உண்மையிலேயே அப்போது 6.30தான். பிள்ளைகள் எப்படித் தூங்கப் போவார்கள்?


இன்கே தொலைக் காட்சிகளில், மாலை 6 மணி செய்திதான் முக்கியமான தொன்று. அதுவும் (உண்மையான 5 மணிக்கே)அரசாங்க 6 மணிக்கு ஒளிபரப்பப் படும். அது முடியும் முன்பே, சாப்பாடு, பிள்ளைகளைக் குளிப்பாட்டுதல் என்று பல வேலைகள் இருக்குமல்லவா?


மேலும், தனியார் கம்பெனிகளில் கொஞ்சம் பெரிய உத்யோகத்தில் இருப்பவர்கள், காலையில் 8.30 வேலைக்குப் போனாலும், மாலையில், பதிவாகவே நேரம் சென்றுதான் திரும்புவர். அவர்களும், இன்னும் வெளிச்சம் இருக்கிறதே என்று கூடுதலாகஅலுவலகத்தில் இருந்துவிட்டே திரும்புவார்கள். அப்புறம் எல்லோரும் சீக்கிரம் எழவேண்டுமென்றால், சீக்கிரம் தூங்கப் போகவேண்டாமா?


இதோ இன்றைக்கு அக்டோபர் 3. ஒருமணி நேரம் சீக்கிரம் எழுந்தாயிற்று. இதைச் சரிக்கட்டி,அந்த ஒரு மணி நேரத்தை மீண்டும்எடுக்க நான் மார்ச் மூன்றாம் வாரம் வரும், ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். அப்போதும் செய்தித்தாளிலும்,தொலைக்காட்சிகளிலும்அறிவிப்பார்கள், இன்று இரவு படுக்குமுன்பு, கடிகாரத்தை ஒரு மணி பிந்தி வையுங்கள், அதாவது இரவு 2 மணி என்று கடிகாரம்காட்டும் நேரத்தை இரவு மணி 1 என்று மாற்றிக் கொள்ளணும்!


இங்கே பலருடன் இதைப் பற்றிப் பேசிப்பார்த்தபோது, அவர்களும் இதையேதான் சொல்கின்றனர். இதை மறுபடி மாற்ற வேண்டுமென்றால்ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கவேண்டும். அந்தக் கருத்துக் கணிப்பு எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று இன்னொரு கருத்துக் கணிப்பு மூலம் உறுதி செய்ய வேண்டும்!


நானும் இந்தப் பதினேழு வருடங்களாகப் புலம்பிக்கொண்டிருக்கின்றேன். இந்த பகல் நேரச் சேமிப்பால் பயன் என்ன என்று?


உங்களுக்கு, ஏதாவது பயன் என்று தெரிந்தால் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்!


நன்றி: சங்கமம் 2004


இந்த வருசம்(2005) இது ஆரம்பிக்கிறது நாளைக்கு அக்டோபர் 2. புலம்பிக்கிட்டே ஒருமணி நேரம் முன்னாலெ சாப்புடப்போறேன்.வேற வழி?
****************************************************