Monday, January 05, 2026

பகிர்ந்துண்ணுவீர் !

அடுத்துப்போன கோவில் வாசலில் நம்மை வரவேற்றவர்களிடம்  ரெண்டு வார்த்தை பேசிட்டு, ரெண்டு க்ளிக்ஸும் ஆச்சு.   ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.   

தண்ணீர்மலை ஸ்ரீ நாகநாதர் கோவிலில் இருந்து இங்கேவர ஏழே நிமிட்தான் !  நாம் அந்தக்கோவிலுக்கு இதே சாலையில்தான் போயிருந்தோம்.  நான் வலதுபக்கம் உக்கார்ந்திருந்ததால்.... இடது பக்கம் இருந்த இந்தக் கோவில் என் கண்ணுக்குப் படலை. ஆனால் ஒரு பெரிய கட்டடத்தின் வாசலில் நாலைஞ்சுபேர் ஒரே போல புடவை உடுத்து அலங்காரமாக நிற்பதையும் சுற்றி ஒரு சின்னக்கூட்டம் இருப்பதையும் பார்த்தேன்தான்.  க்ளிக்கவும் செய்தேன்தான். ஆனால் காடி போகும் வேகத்தில் படம் சரியா வரலை.

இப்ப இந்தக் கோவில் வாசலில் நின்னு சுத்தும் முத்தும் பார்வையை ஓடவிட்டால்....  அந்த அழகான பெரிய கட்டடம் எதிர்வாடையில்  தெரியுது !  கல்யாண மண்டபமாக இருக்கவேணும். 
சரி இருக்கட்டும்னு நாம் கோவில் வளாகத்தின் வெளியே நடைபாதையையொட்டி இருந்த  ஸ்டேண்டில் காலணிகளை வைக்கும்போது சின்ன யோசனை வந்தது உண்மை.  வரவேற்பாளர்கள் கைவரிசையைக் காண்பிச்சாலோ ?  காணாமல் போனால் ,  நம்ம பீடை ஒழிஞ்சு, நமக்கு நல்லகாலம் வருதுன்னு சொல்லக் கேள்வி.  நடப்பது நடக்கட்டும்னு வளாகத்துள் நுழைஞ்சேன்.  முதலில் அங்கே மாடத்தில் 'நான்' !!!  இருக்கட்டும். நல்லா இருக்கட்டும் !  நேரே பார்த்தால் ஒரு பெரிய மண்டபம். 
 

 அதன் சுவரில்  மீனாக்ஷி சுந்தரர் திருக்கல்யாணம்!   ஹைய்யோ....... என்ன ஒரு அழகு !

நம் வலப்பக்கம் கோவில் வாசல்.  கோவில் வாசலுக்கும் மண்டபத்துக்கும் இடையில் சின்ன சந்நிதியில் புள்ளையார் ! ஒரு ஏழுபடிகள் ஏறிக் கோவிலுக்குள் போறோம்.   நடுவில்  சிவன் இரண்டு மனைவிகளுடன் உக்கார்ந்துருக்கார். பச்சை வண்ணம், மலைமகள் ! நீலவண்ணம் யார்?  ஒருவேளை கங்கையோ ?  அப்படித்தான் இருக்கணும். ஜடாமுடிக்குள்  இல்லாம வெளியில் வந்து உக்கார்ந்துருக்காள் !!! 
                                                     
கோவிலுக்குள் அடுத்தடுத்து ரெண்டு கொடிமரங்கள் & ரெண்டு சந்நிதிகள்.   ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும், ஸ்ரீ மீனாக்ஷிக்கும் !  சிவன்,  லிங்க ரூபத்திலும்,  மீனாக்ஷி, மனித உருவிலுமாக  இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார்கள் ! 


இந்தாண்டை கோவில் வரலாறு கரும்பளிங்குக் கல்வெட்டில் ! 
ஸ்வாமி தரிசனம் முடிச்சுக் கருவறையை வலம் வர்றோம். 
நமக்கு  இடது பக்கச் சுவரையொட்டி மற்ற சந்நிதிகள். நால்வர், சரஸ்வதி,  புள்ளையார், உற்சவர்கள்  , முருகன் தன் மனைவியருடன்.....இப்படி !
கோஷ்டத்தில் லிங்கோத்பவர். நமக்கிடதுபக்கம் கம்பியழி போட்டுருக்கு.





திறந்த கம்பிக்கதவினூடே  நுழைந்தால்.............  ஆஹா.........பெருமாள் சந்நிதி!!! நின்ற திருக்கோலத்தில் தகதகன்னு ஜொலிக்கிறார் !   குலசேகரன் படிக்கருகில் ஜயனும் விஜயனும் 
                 
இந்தாண்டை உற்சவமூர்த்திகள் !  
மூலவர் ஸ்ரீ  வெங்கடாசலபதியோன்னு நினைச்சது, உண்டியல் பார்த்ததும் கன்ஃபர்ம்டு ! 

விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர், பெரிய திருவடி, மஹாலக்ஷ்மித்தாயார்னு சுத்திவர மாடச்சந்நிதிகள் !  தீபாரத்தி, துளசி& தீர்த்தம், சடாரி எல்லாம் கிடைச்சது.  பட்டர் ஸ்வாமிகள், கொஞ்சம் நம்மைப்பற்றி விசாரித்தார். நாமும் நியூஸி என்று சுருக்கமாகச் சொன்னோம்.  ப்ரஸாதமாக  ஆளுக்கொரு லட்டு !
உண்மையிலேயே நான் எதிர்பார்க்கவேயில்லை, இங்கே பெருமாள் தரிசனம் லபிக்குமுன்னு ! மனசு நிறைஞ்சுருச்சு !
இங்கிருந்து வெளியே போகத் தனி வாசல் ! வெளியே வந்ததும்தான் அடடா....  கருவறை வலம் முடிக்கலையேன்னு.... பக்கத்து வாசல் வழியாத் திரும்பக் கோவிலுக்குள் போனோம். 
நவக்ரஹ சந்நிதி சுத்திட்டு  வெளியே  வந்தால், திருக்கல்யாண மண்டபத்தில்  நமக்காக வரவேற்பாளர் ஒருவர் காத்திருக்கார்.  நம்மவர் ப்ரஸாத லட்டுவை அவருடன் பகிர்ந்துகொண்டார்.  சிந்தாமல் சிதறாமல் செல்லம் போல் வாங்கி வாயில் போட்டுக்கொண்டது அழகோ அழகு ! நம்மவர்தான் லட்டைப் பிட்டுத்தரும்போது கொஞ்சம் தரையிலே விழுந்துருச்சு. ப்ச்.... செல்லம் அதையும்  அழகா எடுத்து வாயில் போட்டுக்கிச்சு.

https://www.facebook.com/reel/867076479587521

கோவிலுக்கு எதிரே இருந்த பூக்கடை + பெட்டிக் கடையில் ஒரு சேவல். கட்டியெல்லாம் போடாமலேயே சமத்தா நிக்குது. அந்தக் கடையில் ராகுகாலம், எமகண்டம் நேரங்கள் எழுதிய போர்டு !!!! 
நாம் காடிக்குத் திரும்பினோம். அங்கே காத்திருந்த மேகநாதன், எதிர்ப்பக்கம் இன்னொரு கோவில் இருக்கு. வாங்க போகலாமுன்னு சாலையைக் கடந்து அந்தக் கல்யாணமண்டப வாசலில் கொண்டுபோய் விட்டார்.

தொடரும்.......:-)

Friday, January 02, 2026

புலாவ் (pulau) ன்னா பிரியாணிச் சோறு இல்லையா ?

காலையில் முக்கால் இருட்டில் கண்விழிச்சேன். கப்பல் வேகம் குறைஞ்சுருக்கு. பால்கனியில் போய்ப் பார்த்தால் கரையோர விளக்குகள் தெரிஞ்சது.  பெனாங் வந்துட்டோம் போல !  ஏழுமணிக்குப்போய்ச் சேருவோமுன்னு சொன்னபடி நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும்  அரைமணி  இருக்குல்லே.....  டெர்மினல் போயிருவோம்தான். 
கப்பலில் இருந்து வெளியே போகக் கொஞ்சம் நேரம் ஆகும். ஃபார்மாலிட்டிகள் இருக்கே!  'கேங்வே திறந்தாச்சு' என்னும் அறிவிப்பு வரும்வரை கப்பலிலேயே இருங்கன்னு நேத்து  கிடைச்ச நியூஸ் லெட்டரில்  போட்டுருக்காங்கதான்.  சட்னு  குளிச்சுத் தயாராகி  ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். 



 
க்ரஸாண்ட், ஸ்மூதி,  ஃப்ரூட்ஸ், காஃபின்னு  முடிச்சுட்டு,  அறைக்குப்போய் பத்து நிமிட் உக்கார்ந்துட்டு,  செல்ஃபோன் பார்த்தா.... சிங்கப்பூர் ஸிம் , வேலை செய்யுது. கிடைச்ச சான்ஸை விடலாமோ ? அனுப்பவேண்டிய செய்திகளை அனுப்பிட்டுக் கொஞ்சம் வலையும் மேய்ஞ்சுக்கிட்டேன்.  சட்னு இருண்டுக்கிட்டு வருது வானம்.... மழை ஆரம்பம். 
லிஃப்ட் இருக்குமிடத்துப் போனால் அதிசயமா வேற யாருமே இல்லை ! அட !  என்ன ஆச்சு  மக்களுக்கு ?   எல்லோரும் அதுக்குள்ளே வெளியே போயாச்சா என்ன ? 
                
கீழே இறங்கி    Piazza  (நடுக்கூடம்)போனால் ,  ஒரே பேய்க்கூட்டம்.  இன்றைக்கு அவுங்களுக்கான நாள்தான் ! ஹாலோவீன் விழா!  
                    
நாலைஞ்சு க்ளிக்ஸோடு  நிறுத்திட்டு,  கப்பலை விட்டு வெளியே இறங்கினோம்.  மழைக்காகப் போட்டு வச்சுருக்கும்  கூடார நடைபாதை வழியா  க்ரூயிஸ் டெர்மினல் கட்டடத்துக்குள் நுழைஞ்சாச்சு.  இந்த  ஏரியாவுக்கு ஜார்ஜ் டவுன்ன்னு பெயராம் !


எஸ்கலேட்டர் வழியா மேலே போய் அங்கிருந்து  பார்த்தால் எதிரில் தண்ணீருக்கு அந்தாண்டை  பாழடைஞ்ச ஒரு பாரம்பரியக் கட்டடம். அதுக்குப்பின்னால்  இருக்கும்   கட்டடத்தில்  Pulau Penang   ன்னு பார்த்ததும் , நேத்தும்  Pulau Langkawi  ன்னு பார்த்தோமேன்னு..... இந்தப் புலாவ் எங்கே கிடைக்குமுன்னு விசாரிச்சால் புலாவ் என்ற மலேய் சொல்லுக்குத் தீவு என்று பொருளாம். ஆஹா.....

மழை வேற விடுவேனாங்குது....   கட்டடத்தில்  என்ட்ரி பாய்ண்ட், ஹெல்த் ஆஃபீஸான்டை இருந்தவங்களிடம்,  தண்ணீர்மலைக் கோவில்  எவ்வளவு தூரம்னு தமிழில் விசாரிச்சேன்.  கொஞ்சம்............ தூரம்தான்.  எப்படிப் போவீங்க ? டெக்ஸியா ? வாட்டர்ஃபால் தண்டாயுதபாணி டெம்பிள்னு சொல்லுங்க.  

மேலே போக விஞ்ச்  போடப் போறதா சொன்னாங்களே... போட்டாச்சான்னேன்

அதெல்லாம் இல்லை. படியேறித்தான் போகணும்.  மழை பேயுதே.  குடை இருக்கா? ன்னாங்க.

  நம்மவர் கையில் இருந்தச் சின்னக்குடையைக் காமிச்சதும்.....  விடுவிடுன்னு அறைக்குள் போய் ஒரு குடையைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நாம் யாரு என்ன ஏதுன்னு கூட விசாரிக்காமல்  சட்னு குடையைக் கொடுத்ததும்....  எவ்ளோ அன்புன்னு புரிஞ்சது.  பெயர் கேட்டதும்  'மலர்'  னு சொன்னாங்க. மலர்போல் மென்மையான மனசு! அவுங்க கூட வேலை செய்யறவரும்  வந்து சேர்ந்தார். பெயர் விஜய் !  கட்சியில் சேர்ந்தாச்சான்னு கேட்டேன்..... ஒரே சிரிப்பு.  பொதுவா மலேசியத் தமிழர்கள் சினிமாப்ரேமிகள்தான். 
நன்றி சொல்லிட்டுக் கிளம்பி நடந்தோம்.
இந்தப் பெரிய ஹாலின் அந்தாண்டை   டூரிஸ்டுகளுக்கானக் கடைகள்.  
வெளியே இறங்கி ஒரு சின்னப்பாலம் கடந்து அந்தாண்டைபோனால்  , அங்கே போலிஸ் ஸ்டேஷன். வாசலில் இருந்தவரிடம்  டாக்ஸி எங்கே கிடைக்கும்னதும். அதோ,,,, அந்த பில்டிங் உள்ளெ போங்கன்னார். அங்கே போனால் டூர் கம்பெனிகள் வரிசையா மேஜை போட்டு ஆபீஸாட்டம்  வச்சுருக்காங்க.  என்னென்ன டூர்னு  விளம்பரமும்.
ஒரு இளைஞர் வந்து விசாரிச்சார்.  எல்லாருமே இயல்பா நம்மாண்டை தமிழிலேயே பேசறது எனக்குப் பிடிச்சுருந்தது. பெயர் மேகநாதன்.  அட.............   ராவணனுடைய மகன் பெயர்னு சொன்னேன். ஆமாவா ?  ஆமாம்.

 ரெண்டேபேர், சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ளே திரும்பி வந்துறணும். (ஒப்பித்தோம்!)முன்னூத்தியம்பதுன்னு முடிவாச்சு.  டூரிஸ்ட் வண்டிகள் நிற்குமிடத்துக்குப் போனோம். இதுவும் வேன் தான் !  தண்ணீர்மலை ஏரியாவுக்கு அரைமணி நேரத்தில்  போயாச்சு.   ஒரு கோவில் வளாகத்தில் போய் நிறுத்தினார். இது தண்ணீர்மலையின் அடிவாரம். இந்தக் கோவில் நாகநாதர் கோவில். நாம் போனப்பக் கோவிலில் சீரமைப்பு வேலைகள்  நடந்துக்கிட்டு இருக்கு.  உள்ளே போகமுடியாதேன்னு ச்சும்மாக் கோவிலைச் சுற்றினோம். 

புள்ளையாரைத் தனியா வெளியே ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. (பாலாலயம் !)  புள்ளையார் பீடத்தைப் பார்த்தால்  ரொம்ப நாளாக இங்கே இருக்காரோன்னு தோணுச்சு.  வெளியே நின்னு எட்டிப்பார்த்த நம்மை, பூஜாரி ஐயா, உள்ளே வரச் சொன்னார்.  உற்சவர் ரொம்பவே அழகு !   

            

மலையடிவாரம் என்பதால்  பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கு வளாகம். அங்கங்கே அழகான சிலைகளும், ஒரு பெரிய சிவனுமாய் நல்ல அமைதியான இடம்.
  வளாகத்தின் ஒரு பக்கம் மலைமேல் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோவிலுக்குப் போகும் படிகள். 

                       
நின்னு பார்த்து மலைத்தேன். 513 படிகள் !  முடியுமா என்னால் இந்தக் காலை வச்ச்சுக்கிட்டு ?  நம்மவர் ஏற்கெனவே இந்த பெனாங் தீவுக்கு  ஆஃபீஸ் வேலை நிமித்தம் வந்துருக்கார்.  அப்போ மலையேறி முருகனை தரிசனம் செஞ்சுருக்கார்.  தான் பெற்ற இன்பம் வகையில்தான் இந்தப் பயணமே !

கீழே நின்னு படிகளையும் வரவேற்பு வாயிலையும் பார்த்தே கும்பிட்டுக்கிட்டேன்.  அந்த வளைவுக்குப் பக்கம் ஒரு கரும்பளிங்குக் கல்வெட்டு மூணு கோவில்களை இணைச்சுத் தகவல் சொல்லுது.       தண்ணீர்மலை  ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், மதுரை  பழமுதிர்ச்சோலை பற்றிய குறிப்பு, இதை  2020 இல் நிறுவிய ஜகர்த்தா  பக்தர்கள்!  மேலே கோவில் பற்றிய சிற்பம், வளைவின் தலையில் இருக்காம். பழுதுபார்க்கும் வேலை நடப்பதால் தலையை மூடி வச்சுருக்காங்க. 
               
மலையடிவார மரங்களை வெட்டும்  வேலை நடக்குது ஒரு பக்கம். ப்ச்....
அங்கிருந்து கிளம்பி  இப்போ வேறொரு கோவிலுக்குப் போறோம் ! வாங்க கூடவே, வர்றீங்கதானே ?
தொடரும்...........:-)