காலையில் முக்கால் இருட்டில் கண்விழிச்சேன். கப்பல் வேகம் குறைஞ்சுருக்கு. பால்கனியில் போய்ப் பார்த்தால் கரையோர விளக்குகள் தெரிஞ்சது. பெனாங் வந்துட்டோம் போல ! ஏழுமணிக்குப்போய்ச் சேருவோமுன்னு சொன்னபடி நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் அரைமணி இருக்குல்லே..... டெர்மினல் போயிருவோம்தான்.
கப்பலில் இருந்து வெளியே போகக் கொஞ்சம் நேரம் ஆகும். ஃபார்மாலிட்டிகள் இருக்கே! 'கேங்வே திறந்தாச்சு' என்னும் அறிவிப்பு வரும்வரை கப்பலிலேயே இருங்கன்னு நேத்து கிடைச்ச நியூஸ் லெட்டரில் போட்டுருக்காங்கதான். சட்னு குளிச்சுத் தயாராகி ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.

க்ரஸாண்ட், ஸ்மூதி, ஃப்ரூட்ஸ், காஃபின்னு முடிச்சுட்டு, அறைக்குப்போய் பத்து நிமிட் உக்கார்ந்துட்டு, செல்ஃபோன் பார்த்தா.... சிங்கப்பூர் ஸிம் , வேலை செய்யுது. கிடைச்ச சான்ஸை விடலாமோ ? அனுப்பவேண்டிய செய்திகளை அனுப்பிட்டுக் கொஞ்சம் வலையும் மேய்ஞ்சுக்கிட்டேன். சட்னு இருண்டுக்கிட்டு வருது வானம்.... மழை ஆரம்பம். லிஃப்ட் இருக்குமிடத்துப் போனால் அதிசயமா வேற யாருமே இல்லை ! அட ! என்ன ஆச்சு மக்களுக்கு ? எல்லோரும் அதுக்குள்ளே வெளியே போயாச்சா என்ன ?
கீழே இறங்கி Piazza (நடுக்கூடம்)போனால் , ஒரே பேய்க்கூட்டம். இன்றைக்கு அவுங்களுக்கான நாள்தான் ! ஹாலோவீன் விழா!



நாலைஞ்சு க்ளிக்ஸோடு நிறுத்திட்டு, கப்பலை விட்டு வெளியே இறங்கினோம். மழைக்காகப் போட்டு வச்சுருக்கும் கூடார நடைபாதை வழியா க்ரூயிஸ் டெர்மினல் கட்டடத்துக்குள் நுழைஞ்சாச்சு. இந்த ஏரியாவுக்கு ஜார்ஜ் டவுன்ன்னு பெயராம் !
எஸ்கலேட்டர் வழியா மேலே போய் அங்கிருந்து பார்த்தால் எதிரில் தண்ணீருக்கு அந்தாண்டை பாழடைஞ்ச ஒரு பாரம்பரியக் கட்டடம். அதுக்குப்பின்னால் இருக்கும் கட்டடத்தில் Pulau Penang ன்னு பார்த்ததும் , நேத்தும் Pulau Langkawi ன்னு பார்த்தோமேன்னு..... இந்தப் புலாவ் எங்கே கிடைக்குமுன்னு விசாரிச்சால் புலாவ் என்ற மலேய் சொல்லுக்குத் தீவு என்று பொருளாம். ஆஹா.....
மழை வேற விடுவேனாங்குது.... கட்டடத்தில் என்ட்ரி பாய்ண்ட், ஹெல்த் ஆஃபீஸான்டை இருந்தவங்களிடம், தண்ணீர்மலைக் கோவில் எவ்வளவு தூரம்னு தமிழில் விசாரிச்சேன். கொஞ்சம்............ தூரம்தான். எப்படிப் போவீங்க ? டெக்ஸியா ? வாட்டர்ஃபால் தண்டாயுதபாணி டெம்பிள்னு சொல்லுங்க.
மேலே போக விஞ்ச் போடப் போறதா சொன்னாங்களே... போட்டாச்சான்னேன்
அதெல்லாம் இல்லை. படியேறித்தான் போகணும். மழை பேயுதே. குடை இருக்கா? ன்னாங்க.
நம்மவர் கையில் இருந்தச் சின்னக்குடையைக் காமிச்சதும்..... விடுவிடுன்னு அறைக்குள் போய் ஒரு குடையைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நாம் யாரு என்ன ஏதுன்னு கூட விசாரிக்காமல் சட்னு குடையைக் கொடுத்ததும்.... எவ்ளோ அன்புன்னு புரிஞ்சது. பெயர் கேட்டதும் 'மலர்' னு சொன்னாங்க. மலர்போல் மென்மையான மனசு! அவுங்க கூட வேலை செய்யறவரும் வந்து சேர்ந்தார். பெயர் விஜய் ! கட்சியில் சேர்ந்தாச்சான்னு கேட்டேன்..... ஒரே சிரிப்பு. பொதுவா மலேசியத் தமிழர்கள் சினிமாப்ரேமிகள்தான்.
நன்றி சொல்லிட்டுக் கிளம்பி நடந்தோம்.
இந்தப் பெரிய ஹாலின் அந்தாண்டை டூரிஸ்டுகளுக்கானக் கடைகள்.
வெளியே இறங்கி ஒரு சின்னப்பாலம் கடந்து அந்தாண்டைபோனால் , அங்கே போலிஸ் ஸ்டேஷன். வாசலில் இருந்தவரிடம் டாக்ஸி எங்கே கிடைக்கும்னதும். அதோ,,,, அந்த பில்டிங் உள்ளெ போங்கன்னார். அங்கே போனால் டூர் கம்பெனிகள் வரிசையா மேஜை போட்டு ஆபீஸாட்டம் வச்சுருக்காங்க. என்னென்ன டூர்னு விளம்பரமும்.
ஒரு இளைஞர் வந்து விசாரிச்சார். எல்லாருமே இயல்பா நம்மாண்டை தமிழிலேயே பேசறது எனக்குப் பிடிச்சுருந்தது. பெயர் மேகநாதன். அட............. ராவணனுடைய மகன் பெயர்னு சொன்னேன். ஆமாவா ? ஆமாம்.
ரெண்டேபேர், சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ளே திரும்பி வந்துறணும். (ஒப்பித்தோம்!)முன்னூத்தியம்பதுன்னு முடிவாச்சு. டூரிஸ்ட் வண்டிகள் நிற்குமிடத்துக்குப் போனோம். இதுவும் வேன் தான் ! தண்ணீர்மலை ஏரியாவுக்கு அரைமணி நேரத்தில் போயாச்சு. ஒரு கோவில் வளாகத்தில் போய் நிறுத்தினார். இது தண்ணீர்மலையின் அடிவாரம். இந்தக் கோவில் நாகநாதர் கோவில். நாம் போனப்பக் கோவிலில் சீரமைப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே போகமுடியாதேன்னு ச்சும்மாக் கோவிலைச் சுற்றினோம்.
புள்ளையாரைத் தனியா வெளியே ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. (பாலாலயம் !) புள்ளையார் பீடத்தைப் பார்த்தால் ரொம்ப நாளாக இங்கே இருக்காரோன்னு தோணுச்சு. வெளியே நின்னு எட்டிப்பார்த்த நம்மை, பூஜாரி ஐயா, உள்ளே வரச் சொன்னார். உற்சவர் ரொம்பவே அழகு !



மலையடிவாரம் என்பதால் பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கு வளாகம். அங்கங்கே அழகான சிலைகளும், ஒரு பெரிய சிவனுமாய் நல்ல அமைதியான இடம்.
வளாகத்தின் ஒரு பக்கம் மலைமேல் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோவிலுக்குப் போகும் படிகள்.
நின்னு பார்த்து மலைத்தேன். 513 படிகள் ! முடியுமா என்னால் இந்தக் காலை வச்ச்சுக்கிட்டு ? நம்மவர் ஏற்கெனவே இந்த பெனாங் தீவுக்கு ஆஃபீஸ் வேலை நிமித்தம் வந்துருக்கார். அப்போ மலையேறி முருகனை தரிசனம் செஞ்சுருக்கார். தான் பெற்ற இன்பம் வகையில்தான் இந்தப் பயணமே !
கீழே நின்னு படிகளையும் வரவேற்பு வாயிலையும் பார்த்தே கும்பிட்டுக்கிட்டேன். அந்த வளைவுக்குப் பக்கம் ஒரு கரும்பளிங்குக் கல்வெட்டு மூணு கோவில்களை இணைச்சுத் தகவல் சொல்லுது.
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், மதுரை பழமுதிர்ச்சோலை பற்றிய குறிப்பு, இதை 2020 இல் நிறுவிய ஜகர்த்தா பக்தர்கள்! மேலே கோவில் பற்றிய சிற்பம், வளைவின் தலையில் இருக்காம். பழுதுபார்க்கும் வேலை நடப்பதால் தலையை மூடி வச்சுருக்காங்க.
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், மதுரை பழமுதிர்ச்சோலை பற்றிய குறிப்பு, இதை 2020 இல் நிறுவிய ஜகர்த்தா பக்தர்கள்! மேலே கோவில் பற்றிய சிற்பம், வளைவின் தலையில் இருக்காம். பழுதுபார்க்கும் வேலை நடப்பதால் தலையை மூடி வச்சுருக்காங்க. மலையடிவார மரங்களை வெட்டும் வேலை நடக்குது ஒரு பக்கம். ப்ச்....
அங்கிருந்து கிளம்பி இப்போ வேறொரு கோவிலுக்குப் போறோம் ! வாங்க கூடவே, வர்றீங்கதானே ?
தொடரும்...........:-)


































0 comments:
Post a Comment