Tuesday, February 06, 2024

நீவிர் யாராக இருந்தாலும் உமக்கும் கோவிந்தா தான் !!!!

தமிழ் தெரியாதுன்னு ஒரேதாச் சொல்ல முடியாது. பழைய காலத்துலே புழங்கிய  ஒரு சில சொற்கள் இன்னும் மறக்காமல் நினைவடுக்கில் தங்கி இருக்குதுதான். ப்ரட்டாசி, கூளு, நமஸ்காரம்,  எப்டி, அவில், கோவிந்தா, மாரிம்மா  .......
நம்மூர் மஹாமாரியம்மன் கோவில் வந்த  விவரம் முந்தியே சொல்லி இருக்கேனில்லையா....  அங்கே கோவில் கட்டிக்க இடம் கொடுத்த நண்பர்,  இடத்தை வித்துட்டார். யாருக்கும் சொல்லாமலேயே  என்பதுதான் கஷ்டமாப் போயிருச்சு. ஒரு சின்னத்தகவலாச் சொல்லி இருந்தாக்கூட, நாங்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியாவது இடத்தை வாங்கியிருப்போம். 

கஷ்டம் வந்தது அம்மனுக்குத்தான் ! இப்படி அவளையும்  இடம் தேட வச்சுருக்குக் காலம்..... மஹாமாரியம்மனுக்கும் இடப்பெயர்ச்சி !  

அதுக்காக செய்ய வேண்டிய  பூஜை புனஸ்காரத்தையும் நிறுத்த முடியுமா ?  கோவில் நம்ம ஃபிஜி தமிழ்ச்சங்கம் வகையைச் சேர்ந்தது. தலைவர் வீட்டில் தாற்காலிகமாகக் குடிபுகுந்துருக்காள்.  நாமும் எப்பவாவது ஒரு வெள்ளிக்கிழமைகளில் போய்க் கும்பிட்டுக்கிட்டு வருவோம். 'உன் கதி இப்படியாச்சே'ன்னு புலம்பிட்டுத்தான் வருவேன். 
தலைவர் வீட்டிலும் தோட்டத்தில் ஒரு ஷெட் போட்டு அதுலே அம்மன் & குழுவினரை வச்சுருக்காங்க.  இடம் அநேகமாக் கிடைச்சுருமுன்னு தலைவர் சொல்லியிருக்கார்.  இனி இப்படி நடக்காமலிருக்க, நல்ல இடமாவே  சொந்தமா வாங்கிக்கணுமுன்னு நாங்க முடிவெடுத்துருக்கோம். 

கூழ் ஊத்தணும், பூஜைக்கு வாங்கன்னு சேதி அனுப்பினாங்க தலைவரின் மனைவி. இங்கே இந்த மொத்த ஃபிஜி தென் இந்திய மக்களில் நாம்தான் ஊர்க்காரங்க. ரெண்டு நாடுகளிலும்  இருந்ததால் முறைகள் எல்லாம் ஓரளவு நல்லாவே தெரிஞ்சவங்க.  குறிப்பிட்ட நேரத்துக்குப் போனோம்.  ஒரு நாலைஞ்சு குடும்பங்களும் வந்துருந்தாங்க.

அம்மன் சந்நிதிக்கு முன்னால் கொஞ்சம் மண்ணால் மெழுகி ( இங்கே சாணம் கிடைக்காது. ஊருக்குள் மாடு, ஆடுகளுக்கு அனுமதி இல்லை. நாய் & பூனைகள் மட்டுமே  நகரில் வசிக்கலாம் !)  அரிசிமாவுக்கோலம் போட்டு படையலுக்கான இடம் தயார் செஞ்சாங்க. அம்மன் விளக்கேத்தி வச்சு, மஞ்சள் புள்ளையார் புடிச்சு வச்சு சின்னதா பூஜை ஆரம்பிச்சது.  குடும்பம் குடும்பமாப் போய் தீபாராதனை காமிச்சுக் கும்பிட்டோம்.










கூழ் தயாரிச்சு பிரஸாதவகைகளோடு  அடுத்துள்ள மேஜையில் ! நம்ம பக்கம் போல கேழ்வரகு கூழ் கிடையாது.  ஃபிஜிக்குத் தமிழ்மக்கள் வந்த காலத்தில் அங்கே கேழ்வரகெல்லாம் ஏது ?  அரிசிமாவுலே கூழ் செஞ்சு படைச்சுருப்பாங்க போல ! அதுவே ஒரு வழக்கமா மாறி இருக்கு ! ஆச்சே,    140 வருசங்களுக்கு மேலே !  ஆனா விடாமக் கடைப்பிடிக்கிறாங்கன்றதுதான் முக்கியம், இல்லையோ ! நல்லா இருக்கட்டும் ! 

நம்ம மிஷல்தான் கூழ்ப்பானை(பக்கெட் ) தலையில் சுமந்து சந்நிதியை,  வலம் வர, நாங்களெல்லாம்  கோவிந்தநாம சங்கீர்த்தனம்  செய்தபடி சந்நிதியை மூன்றுமுறை வலம் வந்தோம்.  ( அதென்ன அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது கோவிந்தான்னு கேட்கப்பிடாது....   ஃபிஜியில் எந்த விழா  என்றாலுமே கோவிந்தா கோவிந்தாதான் ! )

https://www.facebook.com/1309695969/videos/1069728747536331/

மேலே உள்ள சுட்டியில் ஒரு மூணு நிமிட் வீடியோ க்ளிப்பைப் பார்க்கலாம்.

நம்ம மிஷலுக்கு அம்மன் பக்தி அதிகம்.  வீட்டிலும் ஒரு அம்மன் விக்ரஹம் வச்சுப் பூஜை செய்யறாங்க. அம்மா அம்மான்னு  உருகும் குடும்பமே ! தமிழ் தெரியாதபோதும்  இங்கிலீஷில் எழுதி வச்சு அம்மன் பாடல்களைப் பாடுவதில்  கெட்டிக்காரி.  தென் ஆஃப்ரிகா பாடகர் Preven Moodley (ப்ரவீன் முதலி )அனுப்பி வைக்கும் பாடல்களைக்  கேட்டுக்கேட்டே  பாட ஆரம்பிச்சு இப்போ நம்மூரில் நம்பர் ஒன் !  சின்னதா ஒரு உடுக்கை  அடிச்சுக்கிட்டேப் பாடும்போது.... சின்ன அம்மன்னு  எனக்குத்  தோணும் !

https://www.facebook.com/1309695969/videos/1084409032554205/

அம்மன் குழுவிற்கு தீப ஆரத்தி  காமிச்சுப் பூஜை முடிஞ்சது.  எல்லோரும் வீட்டுக்குள்ளே போனோம்.  ஒரு விஷயம்  குறிப்பாச் சொல்லவேணும் எனக்கு !



பொதுவா ஃபிஜி இந்தியர்களின்  தனிப்பட்டப் பூஜை,  பொது விழா, சத்சங்கம் இப்படி எதுவானாலும், குழந்தைகளின் பங்கு அதிலுண்டு. தீபாராதனை முடிந்ததும் ஆரத்தித் தட்டுகளைக் கையிலேந்தி எல்லோருக்கும் கண்ணில் ஒற்றிக்கக் கொண்டு போறது, பிரசாதம் விளம்பும் நேரம்  பக்தர்கள் அனைவருக்கும்  தட்டுகளை  விநியோகிப்பது,  பிரஸாதப் பாத்திரங்களைத் தூக்கும் வயதுடைய பிள்ளைகள் என்றாலும், அதைத் தூக்கிப்போய் வரிசையில் எல்லோருக்கும் விளம்புவதுன்னு சின்னச்சின்ன சேவைகளை ஆசையாகச் செய்றது பார்க்கவே ஒரு அழகு! 

அதே போல் தீபாராதனை முடிந்ததும் கண்ணில் ஒற்றிக்குமுன் சில்லறைக் காசுகளைத் தட்டில் போட மறப்பதே இல்லை. அது ஒரு அம்பது சென்ட் என்றாலும் கூட.....  இப்படிப் பழக்கி வைக்கும் பெற்றோர்களுக்குத்தான் உண்மையில் இந்தப் பாராட்டு ! 

பிரஸாதம்  ஸ்வீகரித்ததும் நாங்க கிளம்பிட்டோம். இன்னும் கொஞ்சநேரம் இருந்து லஞ்ச் எடுத்துக்கலைன்னு தலைவருக்கும்  மனைவிக்கும் ஒரே குறை !  நமக்கென்ன ரெண்டு வயிறா இருக்கு ? பேக் பண்ணித்தரேன்னு வம்படி பண்ணுனதை  அன்பா மறுக்கும்படி ஆச்சு.  சொல்ல மறந்துட்டேனே    ... படையலில் கூழ் மட்டுமில்லையாக்கும். கூடவே ஒரு கீரைப்பொரியலும் உண்டு !   



திரும்புமுன் அம்மனை இன்னொருக்காக் கும்பிட்டு, 'சீக்கிரம் இடத்தைக் காமி ஆத்தா'ன்னு வேண்டுதல் வச்சுட்டு வந்தேன்.


Friday, February 02, 2024

சங்கத்தின் வெள்ளிவிழா !

காலநிலையும், இப்போக் கொஞ்சம் மேம்பட்டு இருக்கு ! மூணு மாச வசந்தகாலத்தில் ரெண்டு மாசம் முடியப்போகுது.  செடிகளும் கடமையாற்றத் தொடங்கிட்டதால் தோட்டப் பராமரிப்பு, தோட்டவேலைன்னு அது ஒருபக்கம் ! செஞ்சுதான் ஆகணும்.  வண்ணப்பூக்களைப்  பார்க்கும்போது வர்ற மகிழ்ச்சிக்குக் கூலி !
தசரா முடிஞ்சு, வரும் பௌர்ணமிக்கு அடுத்து வர்ற  அமாவாசைதான் தீபாவளிப் பண்டிகை. அதுவரை கொஞ்சம் ஓய்வெடுக்கலாமுன்னு நாம் நினைச்சாலும், நம்ம சமூகம் அப்படி விட்டு வைக்கறதில்லையே..... 
எத்தனை குழு இருக்கோ அத்தனை தீபாவளியைக் கொண்டாட வேண்டி இருக்கு ! 
நம்ம தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் ஒரு  மூணுவருஷமா நிலுவையில் இருக்கு. அதான் கோவிட் வந்து புண்ணியம்  கட்டிக்கிச்சு இல்லையா ?  சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் வேற கொடுத்துருக்கு !  வழக்கமா நம்ம சங்க விழாவின் பாட்லக் டின்னருக்கு லீவு !  சங்கமே சோறு போடுதாம் !  ஆஹா....   முதல் முறையா  இலவசச் சோறு!

இந்த சனிக்கிழமை வச்சுக்கலாமுன்னு முடிவு செஞ்சு, இதோ அந்த நாளும் வந்துருச்சு.  வெள்ளிவிழா, நவராத்ரி & தீபாவளின்னு முப்பெரும் விழான்னு சொல்லிக்கலாம். எத்னிக் கம்யூனிட்டி தலைவரையும் அழைச்சுருந்தோம். நம்ம நண்பர்தான்.  எத்னிக் கம்யூனிட்டியின் பாராட்டுப் பத்திரத்தை  அளித்து சங்கத்தைப் புகழ்ந்து பேசினார் ! 


தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும், நியூஸியின் தேசியகீதமுமாய் விழா ஆரம்பம் ஆச்சு.  கலைநிகழ்ச்சிகளில்,  நம்ம பிள்ளைகளின்  நடனங்கள், உள்ளூர் பரதநாட்டியப்பள்ளி ( தோழியின் பள்ளிதான் )மாணவியரின் நடனம், பாட்டு  இவைகளுடன்  சீனர்களின் சிங்க நடனம் வேற!

கீழே சுட்டியில் பார்க்கலாம்.  இப்பெல்லாம் யூட்யூபிலே ஏத்தவே முடியலை...ப்ச்........

https://www.facebook.com/1309695969/videos/1990832351285925/






நம்ம தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச காலத்தில் அதில் சேர்ந்த முதல் மாணவியின்  குடும்பமும் வந்திருந்தாங்க. பள்ளிக்கூடத்தின் முதல் ஆசிரியை நாந்தான். அப்ப முதல்மாணவி யாராக இருக்கும் ? யூகிச்சுச் சொல்லுங்க, பார்க்கலாம் :-)






உள்ளுரில் உணவகம் நடத்தும் தோழிதான்  விருந்து படைச்சாங்க !








எத்தனையோ இடையூறுகள்,  முதுகில் கிடைச்சக் கத்திக்குத்துகள், தலைமைப் போர்,  வேறுபட்டக் கருத்துகள் என்று பலதரப்பட்ட அனுபவங்கள் இருந்தாலும் கூட , சங்கம் இவ்வளவு வருஷம் தாக்குப்பிடிச்சு  நிக்கறது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான சமாச்சாரம்.  நாம் ஆரம்பிச்சுவச்ச சங்கம் என்ற பெருமையும் கூட ! 







Thursday, February 01, 2024

விஜயதசமி

நவராத்ரி  கடைசிநாள் நாம் ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டுப் படுக்கபோறதுக்கு முன்னால்  சாஸ்த்திரத்துக்கு ரெண்டு பொம்மைகளைப் படியிலேயே படுக்க வச்சுட்டுப்போகணும். காலையில் புனர்பூஜை செஞ்சுட்டுப் பொம்மைகளைப் பெட்டியில் அடுக்கிடலாம்னுதான் கொலுவுக்கான நியதி இருக்குன்னாலும், நம்ம வீட்டில் விஜயதசமிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் உண்டு என்பதால்  அன்றைக்குப் பொம்மையைத் தூங்க வைப்பதில்லை.  இந்தப் பத்தாம் நாளைச் சேர்த்துத்தானே  தசரா என்கிறோம், இல்லையோ !
இது சனிக்கிழமையாக அமைஞ்சால் எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.  வேலைநாளில் வந்தால். அடுத்து வரும் சனிக்கிழமை வரை கொலுவை விட்டுவச்சுருவேன்.  இடும்பி ஸ்டைலே தனி ! ஆனால் இந்த  25 வருஷத்தில்   வழக்கமாகப்  பாராயணம் செய்ய வரும் நண்பர்கள் பலரும்  இந்தமுறைப் பயணத்தில் இருப்பதால்.....  அவர்கள் எல்லோரும் திரும்பிவந்தபின் வச்சுக்கலாம் என்ற முடிவு. எது எப்படின்னாலும்  விஜயதசமி நாளை வெறுமனே விடமுடியாது.  பிரசாதங்களைச் சின்ன அளவில் செஞ்சு, நானும் நம்மவரும் பாராயணம் செய்வோம்.  பெரிய எழுத்துப் புத்தகம்  நிறைய வச்சுருக்கேன். 
அப்பதான் 'சனிக்கிழமை நம்ம வீட்டுக்கு வரட்டுமா'ன்னு கேட்ட தோழிக்கு , அன்றைக்கு  நாம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் போவதால்  செவ்வாய்க்கிழமை தசராவுக்கு வரச் சொன்னது  நினைவில் வந்தது.  அவர்கள் இன்னொரு தோழியையும் கூட்டிவர அனுமதி கேட்டார்கள். நோ ஒர்ரீஸ் என்று சொல்லி இருந்தேன். செவ்வாய் முடியவில்லை என்றால்  புதன் வரட்டுமான்னு இன்னொரு கேள்வி. ..... ஹாஹா.... பண்டிகையே முடிஞ்சு போச்சு!

கொலுவுக்கு இங்கே நம்ம நண்பர்களுக்குப் பொது அழைப்புதான். அதிலும் குறிப்பிட்டு சிலநாட்களில் வரச்சொல்லிருவேன்.  அப்படி வந்தால் நமக்கும் அவர்களுக்குமே வசதி. அதைத் தவறவிட்டால் வேறொரு நாளை எப்படியாவது ஒதுக்கித்தர முற்படுவேன். ஆனால் அதெல்லாம் அந்த ஒன்பது நாட்களுக்குள் இருக்கணுமா இல்லையா ? 
சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல். ததியன்னம் தான் இன்றைக்கு  நிவேதனம்.  நாங்க ரெண்டுபேரும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம். வழக்கமா நம்ம எம் எஸ் அம்மாவின் ஸிடிதான் நம்முடன். இந்தமுறை சூர்யகாயத்ரி இருக்கட்டுமே ! சின்னப்பெண், எவ்வளவு ஸ்பஷ்டமா இருக்கு உச்சரிப்புன்னு.... கொஞ்சம் ஆச்சரியம்தான் !





பேரனும் மகளுமாக  வந்து பூஜையில் கலந்துகொண்டார்கள் !     ஒரு நாலுமணிபோல  அவுங்க கிளம்புனதும், நம்மவன் மெதுவா எழுந்து வந்தான். முகத்தில் தாங்கவொன்னா சோகம்.  சவலைப்பிள்ளை மாதிரிதான்.....

கொஞ்சநேரம் தூக்கிவச்சுக் கொஞ்சுனதும் ஓரளவு சரியானான்.  

சாயங்காலமாத் தோழியும் தோழியுமா வந்தாங்க. அவுங்க பிள்ளைகளைப் பார்த்ததும் நம்மவன் வந்து ஹலோ சொன்னான் !  ஏற்கெனவே வந்து போன மக்களென்பதால்  நினைவில் இருந்துருக்குமோ என்னவோ !



கூட வந்த இன்னொரு தோழி, ஒரு சின்ன நடனக்குழு வச்சுருக்காங்க. பிள்ளைகள் நல்லாவே ஆடுவாங்க. ஒரு பத்துப்பிள்ளைகள் இருக்கலாம். நிறைய முறை மற்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கேன்.  ஆடும் பிள்ளைகளை விட முடியுமோ ?  இங்கேயும் ஆடவச்சாச் ! 



இந்தத்தோழி நம்ம ஃபேஸ்புக் ப்ரெண்டும், நம்ம ஜன்னுவின் விசிறியும் கூட ! இன்னுமொரு முக்கியக்குறிப்பு.....   தமிழர் இல்லை !