Wednesday, December 27, 2023

ரெட்டைப் பொறந்தநாளைக் கொண்டாடியாச்

 உங்க துளசிதளத்தின் & தளத்தின் புரவலர் நம்ம கோபாலின்  பிறந்ததினத்தைக் கொண்டாட இந்திய அரசே விழாவொன்னு ஏற்பாடு செஞ்சதுன்னு சொன்னால் நம்புவீங்களா ? 

என்ன..... இல்லையா ? 

படங்காமிச்சால் நம்புவீங்கதானே ? இதோ.............. !
துளசிதளத்துக்கு 19 வயசு முடிஞ்சு 20 ஆரம்பிச்சாச்சு !  புரவலர் ரொம்பவே மூத்தவர். மறந்துறாம இருக்கணும் என்றுதான் இவருக்கும் தளத்துக்கும் முடிச்சுப்போட்டு வச்சேன் :-)

பொறந்தநாள்  ஞாயிற்றுக்கிழமையா அமைஞ்சதுலே சிலபல கூடுதல்பலன்கள் கிடைச்சது!

தோழியின் குழந்தையைத் தொட்டிலில் போட்டுப் பெயர்வைக்கும் விழா காலையில் முதல் நிகழ்ச்சி. நம்ம வீட்டில் சாமி கும்பிட்டு முடிச்சு,  நண்பர் குழந்தைக்குத் தொட்டிலிடும் வைபவத்திற்குப் போனோம்.  நம்ம அன்பு விநாயகர் கோவில் இவுங்க வளாகத்துலேதான் இப்போதைக்கு !  ரெண்டு ஆண்குழந்தைகளுக்குப்பின் இவள் பெண். குழந்தையின் அம்மம்மா இந்தியாவில் இருந்து மகளுக்கு  உதவி செய்ய  வந்துருக்காங்க. 
குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர்  தேர்வு செஞ்சுருந்தாங்க .  நயம் புன்னகை !  எப்பவும் புன்னகையோடு இருக்கட்டும் என்று வாழ்த்தினோம் ! 
இன்னும் இரண்டு நண்பர்கள் குடும்பமும் அழைப்பின் பெயரில் வந்துருந்தாங்க .ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் உள்ளவர்கள்தான் என்பதால்   பேச்சும் சிரிப்புமாக விழா நடந்துச்சு !



அங்கிருந்து கிளம்பி நேராப் போனது  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குத்தான். இப்பெல்லாம்  காலை நாலரை முதல் பகல் ஒரு மணிவரைக் கோவிலைத் திறந்து வைக்கறாங்க. நமக்கு நல்ல வசதியாகப் போச்சு.  நாம்தான் விழாக்களையெல்லாம் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் மக்களாச்சே ! அதுவும் விழாக்களுக்கான நேரம் சனிக்கிழமை  மாலையில்தான். 

நமக்கு  மாலை நேரங்களில் வேறு விழாக்களுக்குப் போக வேண்டி இருந்தால், சனிக்கிழமை கோவில் தரிசனத்தைப் பகல் ஒரு மணிக்குள் வந்து முடிச்சுக்கலாம்.

இன்று மாலை Meet & Greet  என்ற நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி நம்ம இந்தியன் ஹைக்கமிஷணரின் (Ms. Neeta Bhushan ji )  அழைப்பு !  யாரைச் சந்திக்கப்போறோமாம் ?  

Dr. Rajkumar Ranjan Singh, Hon'ble Minister of State, Ministry of External affairs, Government of India. 

சாயங்காலம் அஞ்சரைக்கு நிகழ்ச்சி. சந்திப்பு மட்டுமில்லாமல்  உள்ளூர் கலைஞர்கள் மூலம் சிலபல கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க.

தலைநகரில் (வெலிங்டன்) இருந்துவரும் விமானம் தாமதமாக வந்திறங்கியதால்  நிகழ்ச்சியும் தாமதம் ஆச்சு. ஆனால் ஒத்திகை பார்ப்பதுபோல்  சில நடனங்களை  ஆடினதில்  பொழுது நல்லாவே போச்சு. கூடியிருந்த மக்களும் நமக்குத் தெரிந்தவர்கள்தான் இல்லையோ !








மேலே படம்: இந்திய ராணுவ அதிகாரி & மனைவியுடன் .பணி ஓய்வு பெற்று, இப்போது நம்ம ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். எங்க ஊர் விஐபி !

அமைச்சர் வந்ததும் விளக்கேற்றி வச்சுக் கூட்டத்தை ஆரம்பிச்சு வச்சார். அரசியல்வியாதிகளின் பேச்சைப்போல் இல்லாமல்  ஏதோ நம் குடும்பத்துப் பெரியவர்களுடன் நடந்த சந்திப்பாகத்தான் எனக்குத் தோணுச்சு. 

 அறிமுகங்கள் எல்லாம் ஆச்சு.  நம்ம ஹைகமிஷணரும் ரொம்பவே அன்பானவர்களாத்தான் இருக்காங்க. நடன நிகழ்ச்சிகளா முதலில் பரதநாட்டியம், அடுத்து வெவ்வேறு மாநிலமக்கள் (மேற்கு வங்காளம், குஜராத்,  பஞ்சாப் ) வழங்கிய  நடனங்கள்ன்னு இந்திய விழாவாக இருந்தது உண்மை. எல்லோரும் நம்மவருக்குப் பொறந்தநாள் வாழ்த்துகளையும் சொன்னாங்க. 

படங்கள் எல்லாம் க்ளிக்கி முடிஞ்சதும்  முக்கிய விருந்தினர்கள் கிளம்பிட்டாங்க.  அமைச்சர் இன்று காலையில்தான் இந்தியாவிலிருந்து  வெலிங்டனுக்கு வந்தார். ஜெட்லேக் இல்லாமல் இருக்குமா ?

அமைச்சர் வாழ்கன்னு சொல்லி, ஏற்பாடு செஞ்சுருந்த  சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்துட்டு வீட்டு வந்தோம்.  பர்த்டே பார்ட்டி ஆச்சு ! 
நாளைக்கும் இதே நேரம் இங்கே வரணும். ஹிந்து ஸ்வயம் ஸேவக் நம்மூர் கிளை,  மூணுநாட்களுக்கு முந்தியே தகவல் அனுப்பி இருந்தாங்க.

 "மதன்மோஹன் வைத்யா ஜி, நம்மூருக்கு வருகை தருகிறார்.  அவர் நம்மையெல்லாம் சந்திக்க ஏற்பாடு செஞ்சுருக்கோம்"

சந்திப்புக்கு வர்றோமுன்னு பதில் சொல்லியிருந்தோம்.
மறுநாள் நம்ம நண்பரிடமிருந்து ஒரு செய்தி. நண்பர் இங்கே HSS இன் நம்மூர்க்கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கார்.  'விருந்தினரை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரவா'ன்னு  கேட்டதும் சரின்னுட்டோம். பகல் சாப்பாட்டுக்கு வர்றீங்களான்னதுக்கு, இல்லை. ஒரு நாலு மணிக்கு வர்றோமுன்னு சொல்லிட்டார்.  ஹாலில் சந்திப்பு ஆறு மணிக்கு என்பதால்  நம்ம வீட்டுக்கு வந்து, இங்கிருந்து போக சரியாக இருக்குமாம்.

வைத்யா ஜி  வீட்டுக்குள் வந்ததும், நம்ம ஊஞ்சலைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சார். நேராப்போய் அதுலே உக்கார்ந்தார். எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருந்தது. நம்ம வீடு நியூஸியில் இருக்கும் இந்தியவீடு ! உள் அலங்காரம் எல்லாம்  இந்திய ஸ்டைலில்தான். 

பூஜை அறைக்குப்போய்  ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டு, ரொம்ப நல்லா இருப்பதாகப் பாராட்டினார்.  நாம் எங்கே வாழ்ந்தாலும்  நம்  ஹிந்து பாரம்பரியத்தை விடக்கூடாது.  மனதில் பக்தியோடு இருப்பது நல்லதுன்னு எங்களுக்கு ஆசி வழங்கினார்.  ஊரிலிருந்து உறவினர் வந்ததுபோல் உணர்ந்தேன். 

இவரோடு  HSS உள்ளூர்க்கிளை &  'தலைமையகம் ஆக்லாந்து'  தலைவர்களும் வந்துருந்தாங்க.  அவர்களையும் பூஜையறைக்குள் கூப்பிட்டுக் காண்பிச்சார்.  நம்ம உள்ளூர் கிளைத் தலைவருக்கு  ஒரே வியப்பு !  இவ்வளவு நல்லா வச்சுருக்கீங்களே ! இதுவே கோவில் மாதிரி இருக்கேன்னார்.  

காஃபியா டீயான்னு கேட்டதும்,  சௌத் இண்டியன்ஸ்,  காஃபிதானே ரொம்ப நல்லாத் தயாரிப்பீங்க.  காஃபியே இருக்கட்டுமுன்னார்.  அடடா..... டிக்காஷன் இறங்க ரொம்ப நேரம் ஆகுமே.....  நெஸ்காஃபி போடவா?  இல்லை சௌத் இண்டியா   மூணாறு கண்ணன் தேவன் டீயான்னு கேட்டுட்டு மில்க் குக்கரில் டீ போட்டேன்.  டீ ரெடியானதும் விஸில் அடிச்சது :-)

ஒரு மணிநேரம் போனதே தெரியலை. 

இவர் 2018 இல் ஒரு கருத்தரங்குக்காக நம்மூருக்கு வந்துருக்கார். அந்த விவரங்கள் இதோ இந்தச் சுட்டியில் !   

சுட்டி வேலைசெய்யலைன்னா கீழே இருக்கு லிங்கு.

 https://thulasidhalam.blogspot.com/2018/11/blog-post.html


அப்புறம் எல்லோருமாக் கிளம்பி  ஹாலுக்குப் போனோம்.  இது நம்ம சிட்டிக் கவுன்ஸில் லைப்ரரியைச் சேர்ந்த ஹால்.  ரொம்ப நல்லாக் கட்டி இருக்காங்க.  எங்கூர் 2011 வருஷ  நிலநடுக்கத்துக்கு அப்புறம் கட்டுனது.  நிலநடுக்கம் வந்தாலும்  இடிஞ்சுபோகாத வகையில்  பாதுகாப்பான  கட்டடம்.  பொதுமக்களுக்கு வாடகைக்குக் கிடைக்கும்.  மகளின் கல்யாண ரிஸப்ஷன்கூட இங்கேதான் நடந்தது. 






இன்று  வேலைநாளாக இருந்ததால் சுமாரான கூட்டம். எல்லோருடனும் அறிமுகம் ஆச்சு. போனமுறை வந்திருந்தபோது பார்த்த சில முகங்கள் நினைவுக்கு வந்ததாகச் சொல்லி   நாம் வாழும் சமூகத்திற்கு நாம் செய்யவேண்டிய சேவைகள் பற்றியெல்லாம் சிறிதளவு விவரித்தார். ராத்ரி டின்னருக்கும் ஏற்பாடு  செய்ததால்  அங்கேயே சாப்பாடும் ஆச்சு.

ரெண்டுநாளாத் தொடர்ந்து, பொறந்தநாளைக் கொண்டாடுன திருப்திதான் எங்களுக்கு !

Friday, December 22, 2023

அந்த 108 நாட்கள் .........

நாளை நாளைன்னு நாட்கள் கடந்து போனதை என்னன்னு சொல்ல ? 
மனதின் வேகத்துக்கும் உடலின் தளர்வுக்கும் ஒத்துப்போகலை.......   ப்ச்...... சோம்பிக்கிடந்த காலம், போய்த் தொலையட்டும்.
துளசிதளத்தின் பொறந்தநாளைக்கூட  இங்கே உங்களோடு கொண்டாட முடியாமல் ஏதோ ஒரு தடங்கல்.....
இத்தனை வருஷங்களில் ரொம்பவே குறைந்த எண்ணிக்கையில்  பதிவுகள்  இருப்பது கடந்த ரெண்டு வருஷங்களில்தான்.  பதிவுகள் எழுதத்தான் முடியலையே தவிர.....  மற்ற எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டுத்தான் இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

செப்டம்பர் நிகழ்வுகள்னு பார்த்தால்....... ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமி, நம்மூர் செர்ரிப்பூக்கள் திருவிழா, புள்ளையார் சதுர்த்தி விழா, ஓணம் பண்டிகைன்னு வரிசைகட்டி வருமே !
 இந்த வருஷம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாசமே வந்துபோச்சு.  நம்ம கேரளா அசோஸியேஷன் ஏற்பாடு செய்திருந்த  விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் பிரபலப் பின்னணிப்பாடகர் எம் ஜி ஸ்ரீகுமார், குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்! உள்ளூர் நண்பர், மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் சமாச்சாரம் ! வழக்கம் போல்  வீகெண்டுக்கு நேர்ந்துவிட்டுருந்தோம்.
வீட்டு விசேஷமா அசல் ஓணம்/ வாமன ஜயந்திக்கு நம்ம ஜன்னுவுக்கு அலங்காரம் செய்ததோடு, த்ருக்காக்கரையப்பன் (ஓணத்தப்பன்) உருவங்களை நானே செய்து வச்சேன்.  அதுதான் இந்த வருஷத்து  ஸ்பெஷல். ஒரு பாயஸம் செய்து, பழங்களோடும் சின்னதா  ஒரு ஓணசத்யாவோடும்  ஓணம் கொண்டாடியாச்சு.

சாயந்திரம் நம்ம புள்ளையார் கோவிலுக்குப்போனால், க்ருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் கிடைச்சது ! 




இதுக்கு அடுத்தவாரமே க்ருஷ்ணாஷ்டமி !  கண்ணன் பிறந்தான், நம்ம கண்ணன் பிறந்தான்னு  வீட்டிலும், நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலிலும், நம்ம சநாதன தர்மசபாவிலுமாக் கொண்டாடினோம். ஃபிஜி மக்களுக்கு  எப்பவும் ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டமின்னா எட்டுநாள் கொண்டாட்டம். தினமும் சபாவில் பூஜை, ப்ரவசன் , ப்ரஸாதம், மஹாப்ரஸாதம்னு எல்லாம் பூரணமாக நடக்கும்.  உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  முதல்நாள் மட்டும் போய் வந்தோம். நம்ம வீட்டிலும் இந்த வருஷம் சாக்லேட் க்ருஷ்ணாதான்.
சுருக்கமா சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுப் போகணும் இப்போ.....
செப்டம்பர் மாசம்  ஆரம்பிச்சால் அது நம்மூருக்கு வஸந்தகாலம். உலகின் தென்கோள மக்கள் இல்லையோ நாங்க !  செர்ரிப்பூக்கள் மலரும் காலமும் வஸந்தத்தில்தான் என்பதால்  இப்போ ஒரு பத்து வருஷமா,  நம்மூர் ஹேக்ளி பார்க்கில் செர்ரிமரங்களைச் சாலையின்  ஒருபக்கத்தில் சுமார் ஒரு கிமீதூரம் நட்டுவளர்த்து ஒரே சமயம் அவை பூத்துக்குலுங்க ஆரம்பிச்சதும்  நாங்களும் செர்ரி ப்ளொஸம் ஃபெஸ்டிவல்  நடத்தத் தொடங்கியாச்சு.

என் நினைவைப் பொறுத்தவரை (இங்கே குப்பை கொட்ட ஆரம்பிச்சு இது 36வது ஆண்டு ) வீடுகளிலும் சாலைகளிலும் அங்கொன்னு இங்கொன்னுன்னு செர்ரிமரங்கள் இருந்தனதான். நம்ம பழைய வீட்டிலும் வாசல் கேட்டுக்குப்பக்கம் செர்ரி மரம் ஒன்னு இருந்தது.  பூத்து முடிச்சு, சின்னதாச் செர்ரிப்பழங்கள் கூட வரும்.  பறவைகளுக்குத்தான் கொண்டாட்டம். இப்போ இந்த செர்ரிப்பூக்கள் திருவிழாவில் நாம் பார்க்கும் மரங்கள் எதுவும் காய்ப்பதில்லை. வெறும் பூக்களை மட்டுமே காண்பிக்கும் வகை !

இந்த ஆண்டும் திருவிழாவுக்குப் போய் வந்தோம். எல்லாம் மிஞ்சிப்போனால் ரெண்டு வாரங்களுக்குத்தான். அப்புறம் ஒரே சமயம் பூக்களெல்லாம் புளியம்பூ போல  நிறம் மாறிக் கொட்ட ஆரம்பிச்சுரும்.  இந்த  ஆண்டு ரெண்டுநாட்கள் போய்வந்தோம்.  பொதுவாக  நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போகும்போது இந்த வழியாகத்தான் போவோம். அதேபோல ஒருநாள் கோவிலுக்குப் போகும்போது,  'செர்ரித்தெரு'வில் அவ்வளவாக் கூட்டம் இல்லை, பார்க்கிங் செய்ய இடமும்  இருக்கு என்பதால், கொஞ்சம் தோட்டத்தில் நடந்து படங்களை க்ளிக்கிவிட்டு, அப்படியே கோவிலுக்கும் போய் வந்தாச்சு.




அடுத்த ரெண்டாம்நாள் , எங்க யோகா குழுவினருடன் போவதாக ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடியால்  அதையும் விட்டுவிடாமல் செர்ரிப்பூக்கள்  திருவிழாவுக்குப் போயிட்டு, அப்படியே  நம்ம HSS  நடத்தும் கணேஷ் வொர்க்‌ஷாப்புக்கும் போய் வந்தோம். இந்த வருஷப் புள்ளையார் சதுர்த்திக்கு இப்போ நாம் செய்யப்போற கண்பதிதான்வீட்டுக்களிமண் ஸ்டாக் தீர்ந்துபோச்சு. இனி  கடைகளில் தேடணும். 








புள்ளையாருக்கு ஒரு பீடம் தயாராக்கி, அதுலே அவரை உக்காரவச்சதும் நம்ம 'இவன்' வந்து பார்த்தான் :-)


ஒரேஒரு வகைன்னு பதாம், முந்திரி, தேங்காய் பூரணம் நிறைத்த பால்கேஸரி மோதகத்துடன் சின்ன அளவில் பொறந்தநாளைக் கொண்டாடியாச்சு.

கணேஷ் சதுர்த்தியும்  நாலுமுறை கொண்டாடினோம். நம்மூரில் இப்போ ரெண்டு புள்ளையார் கோவில்கள்னு  சொன்னது நினைவிருக்கோ ? கூடவே நம்ம வீட்டிலும் சநாதன் தர்ம சபாவிலுமா நாலுமுறை ! கோவில்னு வந்துட்டா..... பண்டிகைகளை  வீக்கெண்டுக்கு ஒத்திப்போடக்கூடாதுதானே ? வெலிங்டன் நகரில் இருந்து நம்ம பண்டிட் வந்து  விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.




ஒன்னுமெ இல்லாமலிருந்த காலம் போய், இப்போ  ஏழு கோவில்கள் நமக்கு வந்துருக்குன்னு நினைக்கும்போது ப்ரமிப்புதான் ! கோவில் என்றதும்  கோபுரமும் ப்ரகாரமுமாக் கற்பனை பண்ணிக்க வேண்டாம். அப்படி ஒன்னு இன்னும் வரலை. ஆனால் வரப்போகுது, கூடிய சீக்கிரம் ! 
நம்ம அன்பு விநாயகர்,  கோபுரம் வச்ச கோவிலுக்குக் குடிபோகப் போறார் ! அவருக்கு நம்ம ஆறுமாதப் பேரனை முதல்முறையாக் கொண்டுபோய் காமிச்சோம். புள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் தரிசனம் !


Sunday, September 03, 2023

மன்னிக்கணும்......

 நண்பர்களே....   வணக்கம்

எதிர்பாராத வகையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை.  இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதும் எழுதவும் தோணலை...... 

இதோ இப்ப சரியாகும்..... நாளை சரியாகுமுன்னு பார்த்து நாட்கள் கடந்துபோகின்றன.

இதற்கிடையில்  பண்டிகை நாட்கள்  வேறு...        ஆனது ஆச்சுன்னு இன்னும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கறேன்.

அதுக்குள்ளே எல்லாம் சரியாகும் என்றொரு நம்பிக்கை.

நம்பிக்கைதானே வாழ்க்கை ! இல்லையோ...


மாப்பு ப்ளீஸ்..... 







என்றும் அன்புடன்,
துல்ஸி கோபால்