Wednesday, April 12, 2023

குடும்பமும் கோவில் தெருவும் கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 35

காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் கிளம்பிட்டோம்.  தினமும் என்ன  வடைன்னு  இருந்துட்டேன்.  இன்றைக்குக் குடும்ப சந்திப்பு. எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரம் இல்லாததால் தினேஷ் நம்மை மல்லேஸ்வரத்தில் மச்சினர் வீட்டில் இறக்கிவிட்டால் போதும். 
போய்ச்சேரவே முக்கால் மணி ஆச்சு.  எதிர்பாராத விதமா  என் ஒரே நாத்தனார், சென்னையிலிருந்து வந்துருந்தாங்க. மச்சினர் மனைவிக்கு உடல் நலக்குறைவு. அதனால் உதவிக்கு வந்துருந்தாங்க. நாங்களுமே இதே காரணத்தால்தான் பெங்களூரு வந்ததும் கூட. போனஸ்தான் அந்த லேபக்ஷி !

என் காது அடைஞ்சு கிடக்குன்னு சொன்னேனே.......  அதுலே ஒரு மாற்றமும் இல்லை.  அதுவும் நல்லதுக்குத்தான்னு நினைச்சேன்.  பேசாம சைன் லேங்குவேஜ் கத்துக்கப்போறேன்.  எங்க நியூஸியில் இதுவும் ஒரு அஃபீஸியல் லேங்குவேஜ் தான். ஆமாம்.... நான் மட்டும் கத்துண்டா எப்படி ? என்னோடு பேசறவங்க எல்லோரும் கத்துண்டாத்தானே ....  நடக்கற  காரியமா ?  என்னமோ போங்க.... இப்போதைக்கு உலகம் அமைதியாக இருக்கு !  இருக்கட்டும்.
மேலே படம் : நம்மவரின் தங்கையும் தம்பியும்

நம்ம வீட்டில் இப்போது  குடும்பத்துக்கு மூத்தவர் என்ற  பதவி நம்மவருக்குத்தான் !  அண்ணனைப் பார்த்த 'மகிழ்ச்சியில் ' வீட்டின் பாசமலர்கள் ஊர்க்கதை எல்லாம் அளந்து சந்தோஷமா இருக்காங்க. எல்லாம் காதுலே 'விழுந்த' ஓர்ப்படியின் முகபாவத்துலே இருந்து கொஞ்சம் புரிஞ்சுக்க முடிஞ்சது.... அக்கப்போர்....  அப்ப  நான் ?  முகத்தில் புன்னகை இழையோட (கஷ்டப்பட்டு) சாந்தமா  முகத்தை வச்சுக்கிட்டு  இருந்தேன் :-)
மச்சினர் காய் வாங்கப்போய் வந்தார். ஆஹா..... தெரிஞ்சுருந்தால் கூடப்போயிருக்கலாமே...


சமையல் முடிக்கறதுக்குள்ளே    வெளியே கடைக்குப் போய் வரலாமுன்னு நாங்க கிளம்பினோம்.  மச்சினர் வீட்டில் கார் பார்க்கிங் இடம் கிடையாது என்பதால்,  பக்கத்துலே ஒரு நண்பர் வீட்டாண்டை வண்டியை நிறுத்தி வைக்கறதுதான் வழக்கம்.  வண்டி தேவைப்படும்போது ட்ரைவருக்குப் ஃபோன் பண்ணால், அவர் எடுத்துக்கிட்டு வருவார்.

அதே போல் தேவா வண்டியைக் கொண்டுவந்ததும் நாங்க மூவரும் கிளம்பினோம்.  எட்டாவது க்ராஸில் சேகர் ஸ்டோருக்குப் போறோம். பார்க்கிங்  கஷ்டம் என்பதால்... தேவா எங்களை இறக்கி விட்டுட்டு எங்கெயாவது  போய் நிறுத்திக்குவார். நம் வேலை முடிஞ்சதும்  கூப்பிட்டால் ஆச்சு.  அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப்போனாலும், எனெக்கென்னவோ சல்யமாத்தான் தெரிஞ்சது. 
ஸ்வச்பாரத் காரணமோ என்னவோ.....    அங்கங்கே சுகாதாரம் பேணல் !

மார்கெட்டாண்டை இறங்கிக்கிட்டோம். முதல் காட்சியே.... ஹைய்யோ!!!
பூஜைப்பொருட்கள், அலங்காரங்கள், சின்ன சிற்பங்கள்னு  கடை முழுக்க கலகலன்னு  இருக்கு.  மயிலை மாடவீதி விஜயா ஸ்டோர்ஸ் போலன்னு  வச்சுக்கலாம்.  ஆனால் விலை கொஞ்சம் அதிகமுன்னு தோணுது இப்போ !





மச்சினர் குடும்பம்  இங்கே  பலவருஷ வாடிக்கையாளர்.  'தேவை !' யானவைகளை வாங்கினேன்:-) ஒன்னரைக்கு வீடு திரும்பி, விருந்து சாப்பிட்டுக் கொஞ்சநேரம் ஓய்வு. இந்த வீட்டில் எனக்குப்பிடிச்சது.... கட்டும்போது வெட்டாமல் விட்டு வச்சுருக்கும் தென்னை !

சாயங்காலமாக் கிளம்பி டெம்பிள் ஸ்ட்ரீட் போறோம். எனக்கு ரொம்பவே பிடிச்ச தெரு ! 

நந்தி தீர்த் கோவிலுக்குப் போக வளாகத்தில் நுழைஞ்சால்...........   ஏகப்பட்ட அகல்கள் ஜ்வலிக்க  லிங்கமும் சிவனுமாக   .........   புதுசா இருக்கே !
இன்றைக்கு கார்த்திக் ஸோமவாரமாம். ஸ்பெஷல் பூஜை !  சூரியக் கேலண்டரைத் தொடரும் நமக்குத்தான் இது ஐப்பசி மாசம். கன்னடர்களுக்கு  சந்திரக் கேலண்டர் (லூனார் )தான்,  என்பதால் அவுங்களுக்கு இப்போ கார்த்திகை மாசம் !

எனக்கும்  இப்படி ஒரு காட்சி இது முதல்முறைஎன்பதால் கண்கள் விரிய ரசிச்சேன். எட்டுக்கைகளுடன் சிவனும்,  எதிரில்  ஒரு யாககுண்டமும் !  
போனமுறை இங்கே நாம் வந்தது 2014 இல். எட்டுவருஷ இடைவெளியில் ஏகப்பட்ட மாற்றங்கள் !! 

இந்தக்கோவில் பற்றிய நம்ம பதிவு இங்கே !

http://thulasidhalam.blogspot.com/2014/12/3.html

நந்தி தீர்த் கோவிலுக்குள் போறோம்.  யூகிச்ச மாதிரியே செல்வச்செழிப்பு கூடியிருக்கு !  எல்லாம் பளபளன்னு .......  அழகோ அழகு ! 



நிம்மதியான தரிசனம் அமைஞ்சது!   

வாங்க... அடுத்த கோவிலுக்குப் போகலாம். தெருப்பெயர் நல்ல தேர்வு !!!!
      
தொடரும்........... :-)




Monday, April 10, 2023

ஏகப்பட்ட வேணுகோபாலன்கள் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 34

மணி ரெண்டேகால் ஆச்சு. வயிறு  சோறு கேக்குது. கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப் போய்  சாப்பிட்டோம்.   நாலு மணிக்குக் கொஞ்சம் வெளியே போய் ஊர் சுத்த ஏற்பாடு !  தினேஷ் வந்துருந்தார்.  காலையில்  வந்துருந்த  ட்ரைவர் சந்த்ரசேகர்  அனுப்பியவர். 

சிவாஜி நகர் வரை போய் வரலாம்னு கிளம்பியாச்சு.  நல்ல கூட்டமான   மார்கெட் ஏரியாவில் நாங்க இறங்கிக்கிட்டோம். பார்க்கிங் கிடைப்பது மஹா கஷ்டம்.  தேவைப்படும்போது  தினேஷை வரச்சொன்னால் ஆச்சு.  செல்ஃபோன்தான் இருக்கே!

வேடிக்கை பார்ப்பதே என் வாடிக்கைன்னு கண்ணில்பட்ட அபூர்வங்களை க்ளிக்கிக்கிட்டே மெல்ல நடந்து போறோம். 

Our Lady of Good Faith Church நெடுநெடுன்னு நிக்குது. நம்மூரில் தடுக்கி விழுந்தா அங்கே ஒரு சர்ச் இருப்பதால்....  மேலோட்டமாப் பார்த்துக்கிட்டே கடந்தேன். நம்ம ஊருக்குப் பெயரே க்றைஸ்ட்சர்ச் தான் ! 
கொஞ்சதூரத்தில்  ஒரு மசூதி !  Masjid e Azam.  இது இருப்பதே ஜும்மா மசூதி ரோடுதான். அப்ப ஜும்மா மசூதி எங்கே ?  கண்ணில் படலையே.....  கூகுளார் சொல்றார், ஒரு நிமிட் நடைதான்  ரெண்டு மசூதிக்கும் இடையில்னு !!!!  
யோசனையோடு நடந்தால் சட்னு வள்ளியூர்  வந்துட்டாப்லே.........  ஹைய்யோ !!!!   பனங்கிழங்கு !  பார்த்தே வருசம் பல ஆச்சு !  அதும் பக்கத்துலேயே விளாம்பழம்!  ஹைய்யோ ஹைய்யோ....

வெளிநாட்டு வாழ்க்கையிலே ரொம்ப மிஸ் பண்ணறது இதைப்போல ஐட்டங்கள்தான்.  அமெரிக்கா போனப்ப நம்ம தோழி, பத்மா அர்விந்த் ( பதிவர், எழுத்தாளர் & மருத்துவர் ) கூட்டிப்போன காய்கறிக்கடையில்  வாழைப்பூ, வாழைத்தண்டு உட்பட அசல் இந்தியா பார்த்துட்டுப் பெருமூச்சு விட்டது உண்மை.  ஆனால் நியூஸியில் இது எதுவும் கிடைக்காது.... பூமிப்பந்தின் கீழ்ப்பகுதியில்  குளிரைத்தவிர வேறொன்னுமில்லையே....
கடைவரிசைகளுக்கிடையில் கொடிமரம் பார்த்துட்டுக் கால்கள் நின்னுபோச்சு. முகப்புவாசலில் நாமம் வேற !  வேடிக்கை கிடக்கட்டுமுன்னு உள்ளே நுழைஞ்சேன்.  ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி மூலவர் !  (பெயரே ரொம்பப்பிடிச்சுப்போச்சுன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே :-)  ஹாஹா !)




ருக்மிணி, சத்யபாமாவுடன்  ஜாலியா நிக்கறார் !  (இப்படி இருவருடன் தரிசனம் எனக்கு முதல்முறையோ? சரியா நினைவில்லையே..... பெருமாளே.. )
சுக்ரீவனும் ஆஞ்சியுமாக ஒரு தனிச் சந்நிதி !
மஹாலக்ஷ்மித் தாயார், புள்ளையார், சிவன், ஆஞ்சுன்னு  எல்லோரும்  இருக்காங்க.  கோவிலுக்கு வயசு நூறுக்கும் மேலே !  சிலாரூபங்களைப் பார்த்த்தால்  அப்படித்தான் தோணுச்சு !


பட்டர்ஸ்வாமிகள் தீப ஆரத்தி எடுத்ததும், தீர்த்தம், சடாரி வழங்கினார். 
நம்மவர் தரிசனம் முடிஞ்சதும் வாசப்படியில் போய் உக்கார்ந்தார்.  மூலவர் போலவே நம்ம (வேணு)கோபாலுக்கும் கமர்ஸியல் தெரு தரிசனம் :-)
பெருமாளும் தாயார்களும், ஆண்டாளும், நவநீத க்ருஷ்ணனும், ஸ்ரீ வேணுகோபாலனுமாய் உற்சவமூர்த்திகள் அருமை ! 



பட்டர்ஸ்வாமிகள் அனுமதியுடன் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு.  நன்றி சொல்லிட்டு வெளியே படி இறங்கினால் காசி விஸ்வநாதர் சந்நிதி.
 கம்பிச்சட்டங்களுக்கிடையில் அவருக்கும் கமர்ஸியல் தெரு தரிசனம்தான் !



இன்றைக்கு இந்தப் பதிவு எழுதும்போது இந்தக்கோவில் எங்கே இருக்குன்னு  சரியான விலாசம் தேடக்  கூகுளாரைக் கேட்டால்  ஏகப்பட்ட வேணுகோபால ஸ்வாமி கோவில்களைக் காமிக்கறார் !  
தீபாவளி அலங்காரமோ இல்லை எப்போதும் உள்ள ஸ்திர அலங்காரமோ தெரியலை, கமர்ஸியல் தெரு மின்னிக்கிட்டு இருக்கு ! உள்ளே போகலை. இந்த ஜூம்மா மசூதி ரோடுலேயே தொடர்ந்து நடந்தோம். ஒரு சின்னக்கடையில் நகைநட்டு அலங்காரம் பார்த்துட்டு ஜன்னுவுக்கு சில  ஆட்டுக்கம்மல்கள்  ஆச்சு. ஒரு இளம்ஜோடி, கொண்டை அலங்காரம் தேடி வந்தாங்க. 
தயக்கத்தோடு இருந்தவருக்கு,  மாடலா நின்னேன் :-)   பின்பக்கத்தலைதானே !  நோ ஒர்ரீஸ்.  நம்மவர்,  நீயும் வாங்கிக்கம்மான்னார்.  தயாளு !   வேண்டாம். குருவி தலையில் பனங்காய் ஆகாது :-)  எப்படியோ ஜோடியை வாங்க வச்சாச் :-)
நடந்து நடந்து காமத் ஹொட்டேலின் வாசலுக்கு வந்துட்டோம்.  ஆமாம்.... ஒரு காலத்தில் பெங்களூரில் எங்கே பார்த்தாலும் காமத் ஹொட்டேல் ரெஸ்டாரண்ட் இருக்குமே.... அதையெல்லாம் இப்பக் காணவே காணோம் ? 
தினேஷை வரச்சொல்லிட்டு அங்கேயே நின்றோம். எதிர்வாடையில்  கோபுரமும் மினாராவும் !  அது ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோவில் !  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு போல....  தினேஷ் வரும்நேரம் சமீபிச்சதால் அங்கே போகலை.

ராச்சாப்பாடு எங்கேன்னு  இன்னொரு தேடல்.  எம் டி ஆர் போனால் ஆச்சு, இல்லை ?
கப்பன் பார்க் தாண்டி செயின்ட் மார்க்ஸ் ரோடில் இருக்கும்  எம் டி ஆர் 1924  போனோம். 

கீழே : இது வலையில் சுட்டது. அன்னாருக்கு நன்றி. அரைகுறை வெளிச்சத்தில் நான் எடுத்தபடம் சரியா வரலை.
ஒயிட் ஹௌஸ் பில்டிங், முதல்  மாடி.   எந்த ஒரு  ஆடம்பரமும் இல்லாத சிம்பிள்  உள் அமைப்பு. 


எப்படி எம் டி ஆர்  ஆரம்பிச்சாங்கன்ற 'சரித்திரச் சுருக்கம்'  சுவரில் !  சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு என்ற மூணும் முக்கியமுன்னு.... அப்போ முதல் இப்போ வரை !

பொதுவா இந்த மூணும் ஒரு நாட்டில், அதன் மாநிலங்களில் இருந்தால் .... எவ்ளோ நல்லா இருக்கும்....................   ஹூம்........
இவுங்களோட ஃபேமஸ் மஸால்தோசைதான் எங்கள் மூவருக்கும்.  மெனு கார்ட் பாத்த நான் சந்த்ரஹாரா ஒன்னு ஆர்டர் செஞ்சேன். இது இவுங்க ஸ்பெஷல் ஐட்டம். ஞாயிறுகளில் மட்டுமே கிடைக்குமாம். இன்றைக்கு ஞாயிறுதான் இல்லை :-) அதிர்ஷ்டம் இருக்கு. 


இந்த 1 பை 2, 3 பை  5 இதெல்லாம் பெங்களூரில் சகஜம். பாருங்க நான் சொல்லாமலேயே மூணு ஸ்பூன் வந்துருக்கு !

1950களில்தான் இதைச் செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. அப்போ இதுக்குப்பெயர் ஃப்ரெஞ்ச் ஸ்வீட்.  கொஞ்சநாளில்  பக்கத்துலே இருந்த தியேட்டரில் என் டி ஆர் நடிச்ச சந்த்ரஹாரம்னு ஒரு படம் வந்து சக்கைப்போடு போட்டதும்,  இவுங்க தங்களுடைய கண்டுபிடிப்பான இனிப்புக்கு  சந்த்ரஹாரான்னு பெயரை மாத்திட்டாங்க.  போகட்டும், எம் டி ஆருக்கும் என் டி ஆருக்கும் ஒரே ஒரு எழுத்துதானே வித்யாசம் :-)

ரவா இட்லி கூட இவுங்க கண்டுபிடிப்புத்தானாம் ! 

நம்ம சந்த்ரஹாராவை மற்ற இருவரோடும் பங்குபோட்டாச் !  நல்லாதான் இருக்குன்னு நம்மவர் சொன்னார். நான் இனிப்புப் பிசாசு என்பதால் என் கருத்து முக்கியமில்லை.    
ஆச்சு இன்றைய ஊர் சுத்தல்னு ஷிவாஸ் கேலக்ஸி திரும்பிட்டோம். நாளைக்குக் காலை எட்டரைக்கு தினேஷை வரச் சொல்லியாச்சு.

தொடரும்............ :-)




Wednesday, April 05, 2023

பேரன் பிறந்துருக்கான்.... பள்ளிக்கூடத்துக்கு அஞ்சுநாட்கள் லீவு விட்டாச் !

பெருமாளின் அருளால் அவனோட நக்ஷத்திரத்துலேயே பேரன் பொறந்துருக்கான். 

பதிவு எழுத நேரமில்லை.... ஒரு அஞ்சுநாள் லீவு எடுத்துக்கறேன்.

மன்னிக்கணும் !