Monday, February 04, 2019

பன்முகத்திறமையாளருடன் ஒரு இனிய சந்திப்பு ! (பயணத்தொடர், பகுதி 63 )

இன்றையக் கணக்கில்  இன்னும் அரைநாள் இருக்கு.......   சந்திக்க நினைத்தவர்களை சந்திச்சுக்கலாம். தோழி வீட்டுக்குப் புறப்பட்டோம். இப்ப சில வருஷங்களாகத்தான் தெரியும்.  ஃபேஸ்புக் ப்ரபலம் !  வெறும் எழுத்தோட நின்னுடாமல் இன்னும் பல சமாச்சாரங்களில்  பூந்து வெளையாடறாங்க.!  சமீபத்து சமாச்சாரம்.....    ஆன்மிகக் கதைகள் தொலைக்காட்சியில்  சொல்றது ! கோபுரம் டிவியில் அட்டகாசமாக் கதை சொல்றாங்க.... நீங்களும் பாருங்க!!


இவுங்களும் இப்போ இந்தியாவுக்கு வந்துருக்காங்க. அதுவும் அவுங்க வீடு இருக்கும் ஊருக்கு நாமும் வந்துருக்கோம்!  விடமுடியுமோ?

வரவான்னு அனுமதி கேட்டு, விலாசம் எல்லாம் வாங்கிக்கிட்டு இதோன்னு  கிளம்பினோம். போற வழியில் நம்ம முரளிகடையில் காஃபியைக் குடிச்சுட்டுப்போகணும்.  அங்கெ போனா.....  தூண்டில்களில் பஜ்ஜி :-)

 வீட்டைத் தேடிப்போகும்போது ஒரு திருப்பத்தைத் தவறவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம். அப்புறம் திரும்ப அவுங்களைக் கூப்பிட்டு சரியான இடத்தில் திரும்பிப்போனா....  இதோ எதிரில் ஓட்டமும் நடையுமா வந்துக்கிட்டு இருக்காங்க  நம்ம சுமிதா ரமேஷ்!

வலைப்பழக்கத்தில் ஒரு வசதி என்னன்னா.....  புதுசா, முதல்முறை பார்க்கிறோம் என்ற சங்கோஜம், தயக்கம் எல்லாம் போயிருது. தினம் பார்த்துப்பேசும் நெருக்கம் வர்றது உண்மை! இதுலே இன்னொன்னு என்னன்னா.....  அவுங்களை மட்டுமில்லை, அவுங்க குடும்பமே நமக்குத் தெரிஞ்சுரும். கோபாலைப் பார்த்தே அடையாளம் தெரிஞ்சு வந்து பேசுனவங்க நிறையப்பேர்!  இத்தனைக்கும் அவுங்களோட எனக்கு வலைப்பேச்சே இல்லை!


மகள், அப்பா, அம்மா, இன்னுமொரு உறவினர்னு எல்லோருடனும் கலகலப்பான பேச்சு! இத்தனை அழகு எங்கிருந்து வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்! 'அம்மா' !!!
அடை சாப்பிடச் சொன்னாங்க......     ஆசைதான். ஆனால்.... வயித்துக்குள்ளே பஜ்ஜி !  கிளம்பும் சமயம் வச்சுக்கொடுத்தலில்  மீண்டும் ஒரு எவர்ஸில்வர் கிண்ணம் !  'நம்மவரோடு' நான் 'ஐ கான்டாக்ட்' வச்சுக்கலை :-)

கிளம்பிவரும்போது தண்ணீர் இல்லாக் குளம்  கண்ணில் பட்டது. தீர்த்தவாரி நடந்த காலமும் உண்டாம்! இப்போ......   காவிரி பாயும் மண்ணில் இதென்ன சோதனை..... ப்ச்.....
அடுத்துப்போனது நம்ம ரெங்கனின் அரண்மனைக்கு! ரங்கவிலாஸ் மண்டபம் கலகலன்னு இருக்கு! பெரியவரை தரிசனம் பண்ணிக்கப் போகலை.  அவர்  இருக்குமிடத்தில் நாமும் இருக்கோம் என்றதே போதும். நம்மை அவர் பார்த்துக்குவார். 


நேராப் போய் கெமெரா டிக்கெட் வாங்கினேன்.  கால் போன போக்கில் ஒரு சுத்து.  ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு  உணர்வும் அனுபவமும். சாயங்காலம் ஆனதும் நிலமும் மனமும் குளிர்ந்துருது!  பூனை உலா......

ரங்க விமானம் பார்த்ததும்  சட்னு கண் நிறைஞ்சது.  நாளைக் காலை ஊரைவிட்டுக் கிளம்பறோம்.... இதுதான் கடைசி..... போயிட்டு வரேன்னு சொல்லிக்கணும், இல்லே?


தாயாரின் சந்நிதி மண்டபத்தில்தான்  மக்கள் விஸ்ராந்தியா உக்கார்ந்துருக்காங்க.  தாயின் மடியில் சுகம்! தாழம்பூ பார்த்ததும்  வாங்கினேன். இது  நிஜமாவே மனசு வந்து தாயாருக்குத் தர்றதுக்குத்தான் :-)

சுலபதரிசனம் எப்போதும் தர்றது தாய்தான்! ஆச்சு.  மேட்டழகிய சிங்கர் படிகளில்  எந்த யோசனையும் இல்லாமல் நிச்சிந்தையா உக்கார்ந்து அனுபவிக்கிறேன்.  இன்றே கடைசி, இன்றே கடைசி.....

மணி எட்டுத்தான் ஆச்சுன்னாலும் பல சந்நிதிகள் மூடிக்கிடக்கு.


குரு வணக்கம் செஞ்சுக்கிட்டுத் 'தெரிஞ்ச' தெய்வங்களுக்கெல்லாம்  நன்றியுடன்  கும்பிட்டு போட்டுக்கிட்டே போறோம். எதோ ஒரு மண்டபத்துக்குள் போகும் வழி திறந்துருந்ததும், அதுக்குள்ளே போனால்.....  பேபி க்ருஷ்ணா !  முதல்முறையா இங்கே  நுழைய வாய்ப்பு !
அடப்பாவமே.... குழந்தைக்கு இப்படியா பட்டை நாமம் போடறது?
 





இன்னும் நமக்குத்  தெரியாமல் மூடிக்கிடக்கும்  மண்டபங்களும் சந்நிதிகளும் ஏராளம் இங்கே!   அவனாக் கூப்பிட்டுக் காமிக்கும்வரை  பொறுமை காக்க வேணும்!

கொடிமரம் ஸேவிச்சு பெரிய திருவடி ஸேவிச்சு வெளியே வரும்போதே 'இனி எப்போ?' ன்ற  நினைவில் துக்கம்  கூடவே வருது....

ராச்சாப்பாடு ஒன்னு பாக்கி இருக்கே.....  நேத்து நம்ம கீதாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப அவுங்க சொன்ன இடத்தில் இதுவும் ஒன்னுன்னு  ஸ்ரீராகவேந்திரா அன்னபூரணி ஹோம்லி மெஸ் போறோம். இதே அம்மாமண்டபம் ரோடில் இருந்து  கோவிலுக்குப் போறவர்ற   வழியில்தான் இருக்கு.



பேருக்கேத்தாப்லெ குடும்பமே அங்கே ஆக்கிப்போடறாங்க ! குழந்தையும் குட்டியுமா கூட்டுக்குடும்பம் போல ! பிள்ளைகள் அங்கங்கே உக்காந்து வீட்டுப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.. ஆம்பியன்ஸ்ன்னு இப்பெல்லாம் சொல்றாங்களே.... இங்கே குடும்ப ஆம்பியன்ஸ். இதுவும் ஒரு விதத்தில் நல்லாத்தான் இருக்கு. இந்தக் காரணம் ஒன்னு போதும்..... கூடுதல் சுத்தம் எதிர்பார்க்கக்கூடாதுன்றதுக்கு!
வாசல் முற்றத்தில் கொஞ்சம் பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க.  இங்கே ஒரு ஓரமா கையலம்பக் குழாய்!
  உள்ளே நான் உக்கார்ந்துருக்கும்  இடத்தில் எனக்குப் பின்னால் ஒரு ஜன்னல் தெரியுது பாருங்க.....  அதன் வழியா நாம் சாப்பிட்ட இலையைத் தூக்கிப்போட்டுடணும்!  ஈஸி டிஸ்போஸல் ! அந்தாண்டை மாடு இருக்குமோ?

ஆளுக்கொரு தோசையும் பாலுமா முடிச்சுக்கிட்டோம். ரமேஷ் சப்பாத்தி வாங்கிக்கிட்டார்.


நம்ம சுமி வீட்டில் இருந்து திரும்பி வரும்போது வழியில் உதிரி மல்லி ஒரு சின்னப்பொதி பத்து ரூபாய்க்குக் கிடைச்சது. அறைக்கு வந்ததும்  ஊசி நூலால் கோர்த்தேன்.  நல்ல அடர்த்தியா மூணு முழம் வந்தது!  பயணத்தில் எப்பவும் ஊசிநூல் வச்சுக்கறது நல்லது.  சட்னு ஒரு பட்டன் தைக்கவோ, ஒரு தையல் போட்டுக்கவோ, இல்லே இப்படிப் பூ கிடைச்சால் கோர்த்துக்கவோ முடியும் :-)

கொஞ்சம் துணிமணிகளை அடுக்கிட்டு, மறுநாளைக்கு வேண்டியவைகளை  எடுத்து வச்சுட்டுப் படுத்தாச்சு. நல்லா ரெஸ்ட் எடுக்கணும். நாளை ஒரு  இருநூத்தஞ்சு கிமீ பயணம் இருக்கு!

தொடரும்..... :-)


தமிழ் இளங்கோ.............. மறைவு.....



இவரை இரண்டு முறைகள் சந்தித்துள்ளோம்.....


மனம்  நம்ப மறுக்கிறது.........   :-(



வருந்துகின்றோம்.


Friday, February 01, 2019

ஆனைக்கா போகணும், அகிலாவைப் பார்க்கணும்! .....(பயணத்தொடர், பகுதி 62 )

வழக்கம்போல் இந்த முறையும் நின்னு நிதானமா ராஜகோபுரத்தைப் பார்க்க வாய்க்கலை.  அதன்வழியாவே கார் போகும் பாதையும் இருப்பதால் அந்தாண்டை போய் பார்க் செஞ்சுக்க முடியுது.
முதல்வேலை முதலில்னு  அகிலாவைத் தேடிப்போனால்  அஞ்சு வருஷத்துக்கு முன்னே பார்த்த அதே அழகோடு நின்னுக்கிட்டு இருந்தாள். பாப்பானும் அதே அர்ஜுன் நாயர்தான்.  அவருக்குத்தான் வயசான அடையாளம் இருக்கே தவிர, நம்ம செல்லத்துக்கு  அப்படிஒன்னும் இல்லை. ஆச்சே அவளுக்கும் பதினைஞ்சு !
பதினொரு மணி வெய்யில்,  கூடுதல் என்பதால்,  அவளுடைய மஹலுக்குள் போக ரெடியா இருந்தாள்.  போய் வா மகளே....
மல்லப்பன் கோபுரவாசலுக்கு ரெண்டுபக்கமும்  புள்ளையாருக்கும், சுப்ரமண்யருக்கும் சந்நிதிகள்.  கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம்.
திருமாமணி மண்டபம் தாண்டி, கார்த்திகைக் கோபுரம்!
 இங்கேயும்  பழுதுபார்த்துப் புதுவண்ணம் பூசிக்கிட்டு இருக்காங்க.  ரெண்டு கோபுரங்களுக்கிடையில் சின்னதா  ஒரு நந்தவனம். நாகலிங்கமரங்களும் இருக்கு! இதுவரைஒரு மாறுதலும் இல்லை.... எல்லாம் வழக்கம்போல்!

மண்டபத்துக்குள் நுழைஞ்சால் ஒரு புதுஅறிவிப்பு  பார்த்தேன்.  ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருநீற்றான் மதில் வலம் வர்றாங்களாம்!
 அந்த போஸ்டரில் இருந்த அழகான , கம்பீரமான சிவன்  எனக்குப் பிடிச்சுருந்தார். இப்படி ஒரு சிவன் சிலையை  நம்ம நேபாள் பயணத்தில் பார்த்தேன். அப்படி ஒரு அழகு! வாங்கிக்கலையேன்னு இப்பவும் ஒரு ஏக்கம் இருக்கு....

மண்டபம் முழுசும் கோவில் சப்பரங்களை நிறுத்தி வச்சுருக்காங்க.  அது பரவாயில்லை. ஆனால் வைக்கப்போரை எதுக்கு இங்கே வச்சுருக்காங்கன்னு தெரியலை. கோசாலைக்கு போகுதோ என்னவோ....
ஊஞ்சல் மண்டபத்தாண்டை சிலர்.  பெரிய கொடிமரமும் நந்தியுமா நாம்  மூலவராண்டை வந்துட்டோமுன்னு காட்சி கொடுக்கறாங்க.
சிவன் கோவிலில் எப்படிக் கும்பிடணுமுன்னுகூட ஒரு தகவல் பார்த்தேன்.  யானைக்கு முழங்கால்  பிரச்சனை. கீழே விழுந்து கும்பிடறதெல்லாம்  இனி கனவில் மட்டும்.
கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யறவங்க பட்டியல் ஒன்னு போட்டுருக்காங்க. ரொம்ப நல்லது. இதைப் பார்க்கும் சிலருக்காவது அடுத்த முறை தானும் உதவலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்யும்.
அதேபோல இன்னொரு இடத்தில் கோவில் இடத்தை அனுபவிக்கும் பலர், கோவிலுக்கான  வாடகையைத் தராம பாக்கி வச்சுருக்காங்கன்னு  தெரிஞ்சது. சிவன் சொத்து குல நாசம் இல்லையோ? இதுவும் நல்லதுதான். பெயர் இருக்கே..... அசிங்கப்பட்டுப்போனோமேன்னு சிலராவது பாக்கியை அடைக்க முன்வரலாம்.

மண்டபத்து வரிசைத்தூண்களைப் பார்த்து இப்பவும் பிரமிச்சு நின்னேன்.  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத வகை !
முதலில் மூலவரை தரிசனம் செஞ்சுக்கணும். பத்து ரூபாய்  ஸ்பெஷல் தரிசனம். இல்லைன்னா, நவ துவார சுவர் வழியாப் பார்க்கணும்.  நல்லாவே பார்த்தால் ஆச்சு. இப்பெல்லாம்  வரிசையில் நின்னு நிதானிக்கப் பொறுமை இருக்கறதில்லை.  கோவில் கட்டணத்தில்  பெருமாள் கோவில்களை விட சிவன் கோவில்கள் கொள்ளை அடிப்பது  கொஞ்சம் என்ன... ரொம்பவே  குறைவுதான்.  பத்து ரூபாயே இருக்கட்டும். அவரிடமே கெமெராவுக்கும் ஒரு டிக்கெட் வாங்கினதும் நிம்மதி. ஜம்புகேஸ்வரர் தரிசனம் ஆச்சு!
ஆமாம்... கோபுரவாசல் கடந்து கோவிலுக்குள் நுழையும்போதே  கட்டண வசூல் வச்சுருக்கலாமே.....  சந்நிதிவாசல் வரை காத்திருப்பானேன்?  முக்கியமா அந்த கெமெரா டிக்கெட் ஆரம்பத்துலேயே வாங்கிட்டால் நிம்மதியாப் படம் எடுக்கலாம்.


அம்மன் தரிசனத்துக்குப் போகும் வழியில்  பாதையின் ரெண்டு பக்கங்களிலும் இருக்கும்  மண்டபங்களின் தூண்கள் அற்புதங்களே! எத்தனையோ முறை பார்த்து ரசிச்சது போக, இப்பெல்லாம் எல்லாம் அந்தந்த இடத்தில் ஒழுங்கா இருக்கான்னு பார்க்கும் பழக்கம் வந்துருக்கு.
ஒவ்வொருமுறையும், 'பெருமாளே.... யாரும் இதுலே கைவைக்காமல் இருக்கணுமே'ன்ற  வேண்டுதல்தான்.  சிற்பங்களின் அழகைச் சிதைக்கவே கைகள் கொடுத்துட்டானோ சிலருக்கு?

இனிமே க்ளிக்ஸ்தான். அதான் கெமெரா டிக்கெட் வாங்கியாச்சே :-)

நம்ம அகிலாண்டேஸ்வரி, வழக்கம் போல் புன்சிரிப்புடன் தரிசனம் கொடுத்தாள்!  அம்மா, தாயே நல்லா இரு!
கொஞ்சம் கூட்டம் அதிகம்தான். ஒரு முப்பதுபேருக்குக் குறையாம இருப்பாங்க. அம்மன் சந்நிதி வாசலுக்குள் இருக்கும் திண்ணையில்  மாலையும் கழுத்துமா ஒரு தம்பதியர்!  இப்படி யாரையாவது பார்த்தால் என்னால் சும்மா இருக்கமுடியாது. வாழ்த்திட்டுத்தான் மறுவேலை!  நல்லா இருங்கன்னு மனசார வாழ்த்தக் காசா பணமா?
மல்லிகா துரைராஜ்  ஜோடிக்கு அறுபதாங்கல்யாணமாம். மருமகள் சொன்னாங்க. அவுங்க சுற்றம்தான் இங்கத்துக்'கூட்டம்'னு புரிஞ்சது:-)

பக்கத்து கிராமமாம்.  கிராம வாழ்க்கையில் அதுவும் விவசாயத் தொழில்ன்னாலே கஷ்டங்கள் நிறைய. அதெல்லாம் மாப்பிள்ளை முகத்தில் படிஞ்சாப்லெ  எனக்குத் தோணுச்சு!  பெருமாளே.... இவுங்க நல்லா இருக்கட்டும்!

ப்ரகாரம் சுற்றப்போனோம். சின்னதா மரக்கொடிமரம்! அதுக்கு அந்தாண்டை இருக்கும் அம்மன் திருமணமண்டபத்துலே உண்மையிலேயே நல்ல கூட்டம்.  என்னன்னு எட்டிப் பார்த்தால்.... அங்கேயும் ஒரு கல்யாணம்!  நான் பரபரன்னு உள்ளே நுழைஞ்சதும், 'இவளுக்கு வேற வேலையில்லை'ன்னு  வெளியே இருக்கும் ஒரு நாலுகால் மண்டபத்தில் (முந்தி 'குரத்தி' மண்டபம்னு பார்த்த நினைவு)போய் உக்கார்ந்துட்டார் 'நம்மவர்'

இங்கேயும் அறுபதாங்கல்யாணம்தான். கொஞ்சம் பெரிய குடும்பம் போல!  வீடியோ , ஃபோட்டோன்னு அமர்க்களப்படுது!  மணமக்களை வாழ்த்தினேன்.  அவுங்க அனுமதியுடன் சில க்ளிக்ஸ். கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க வச்சுருந்த பைகளில் ஒன்னு எனக்கும்!  வேண்டாம்னு அன்போடு மறுத்தாலும்  மணமக்கள் கேக்கலை. 'எங்க நினைவா வச்சுக்குங்க'ன்னு .....   நல்லதுன்னு வாங்கிக்கிட்டேன்! பக்கத்துலேதான் கல்யாண விருந்துக்கு ஏற்பாடாம். 'இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க'ன்றாங்க.  விருந்தோம்பல் !
"நீங்க இப்படி அன்பா உபசரிச்சதே எனக்கு வயிறும் மனமும் நிறைஞ்சு போச்சு" 

(நமக்காப் பேசத்தெரியாது ?)

கையில் பையோடு வர்றதைப் பார்த்த 'நம்மவர்' முழிக்கிறார்!  'பை, கனம்,   எடை,  செக்கின் பேக்....'   அவர் கவலை அவருக்கு...... :-)
ரிட்டர்ன் கிஃப்ட் கிண்ணத்துலே ரொம்பவே அழகா  தம்பதியர் பெயர், விவரங்கள் எல்லாம் 'அச்சடிச்சு' இருக்காங்க! பாத்திரத்தில் பெயர் பொறிக்கும் காலம் போயிருச்சு போல !


(வைஸாக் வாழ்க்கையில் கண்ணாடியில் கூடப் பெயர் பொறிப்பேன்னு சொல்லி, நம்ம எவர்ஸில்வர் பாத்திரங்களில் அசிங்கமா பொறிச்சுக் கொடுத்ததை நினைச்சா.......  ப்ச்.... நல்லவேளை....  குடும்பம் நடத்த ஆரம்பிச்ச காலம். ஆறாறுன்னு ரெண்டே செட் பாத்திரங்கள்தான்.  இன்னும் வச்சுருக்கேன். தினப்படி பயனாகுது  )






ப்ரகாரம் சுற்றல் இன்னும் முடியலை. நல்லா சுத்தமாத்தான் இருக்கு ! பெரிய இடம் இல்லையோ!  பதினெட்டு ஏக்கர்!
கோவில்கதை சொல்லலையேன்னு  நினைச்சால்....   இங்கே க்ளிக்கவும் :-)  எழுதி ஆறு வருஷம் ஆனாலும் கதை என்னமோ அதே தான் !
உள்ப்ரகார வலம் முடிச்சுத் திரும்ப  கொடிமரத்தாண்டை வந்துருந்தோம்.  வலம் வரும்போதே  புள்ளையார், முருகன் சந்நிதிகளில் தரிசனம் கம்பிக் கதவு வழியாக் கிடைச்சது!

கோவிலில் இருக்கும் சந்நிதிகளின் வரைபடம் இப்போப் போட்டு வச்சுருக்காங்க!  ரொம்ப நல்லது.  கோபுரங்களின் பெயர்கள் பார்த்தால் ரங்கத்துக் கோபுரப்பெயர்களே அநேகமா இங்கும்! (ஒரு சில எழுத்து மாற்றத்தோடு!)கோவில் பிரகாரங்களில் அங்கங்கே போட்டு வச்சுருக்கும் பெயர்ப்பலகைகளுக்கும், இப்போ இங்கே போட்டு வச்சுருக்கறதுக்கும் வித்தியாசங்கள் இருக்கு. இனிமே  இதைப்போலவே அங்கே  மாற்றுவார்களோ என்னவோ....
கோபூஜைக்கான கோமாதா மஞ்சள் குங்குமத்தோடு  தயாராக இருந்தாள்.  இன்னும் பத்து நிமிட்டில் பூஜை நடக்குமாம்.  பார்த்துட்டே போகலாமுன்னு  மண்டபத்தில் உக்கார்ந்தோம். வெளியே அடிக்கும் வெயிலின் சுவடு கூட உள்ளே இல்லை!  நல்ல குளிர்ச்சி!
உச்சிகால பூஜைக்காகப் புடவை கட்டிய குருக்கள் ரெண்டுபேர் (மெரூன் ரெட் சேலை, சின்ன பார்டர். ஜரிகை இல்லை) கோபூஜை செஞ்சாங்க. கூட்டம் இருந்தாலும், நாம் உக்கார்ந்த இடத்தில் இருந்து நல்லாவே தரிசனம் செஞ்சுக்க முடிஞ்சது!
PC. Google

இந்தக்கோவிலிலும் இப்போ பேட்டரிகார் வச்சுருக்காங்க. நடக்க முடியாதவர்களுக்கும்,  சீனியர் சிட்டிஸன்களுக்கும் உதவி!
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை  அஞ்சரை முதல் பகல் ஒரு மணி. அப்புறம் மத்யானம் மூணு மணிமுதல்  இரவு எட்டரை வரை. இப்பவே மணி ஒன்னு ஆகப்போகுதுன்னு நாங்களும் கிளம்பினோம்.
வாசலில் ஒரு கடையில்  காளிமார்க் பன்னீர் ஸோடா  கிடைச்சது :-)  பகல் சாப்பாடு நம்ம பாலாஜி பவனில்!

தொடரும்....... :-)