Wednesday, September 05, 2018

அன்புமழையில் நனைந்தேன்..... (பயணத்தொடர், பகுதி 5 )

பத்திரிகையாளர், கைவினைப் பொருட்கள், க்ராஃப்ட், வெளி அண்ட் உள்ளலங்கார நிபுணர், உரத்த சிந்தனையாளர்  இப்படி பன்முகத் திறமையாளர்!!!  இவுங்களைப் பத்தி நான் சொல்றதைவிட, நம்ம 'தேன்' சொல்லி இருப்பதைப் பாருங்க!

அவுங்க பேரனுக்குச் சமீபத்தில் கல்யாணம் நடந்துருந்தது!  புது மணமகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது!   எப்படி நேரம் போச்சுன்னு  தெரியாம, எல்லோருமா பேசியும், கேட்டும் மகிழ்ந்தோம்!  உடலுக்கு மட்டுமே வயசாகுது, மனசு ரொம்பவே  இளமையாத்தான் இருக்கு !
இப்படி நல்ல நண்பர்கள் கிடைச்சதெல்லாம்  எதோ நான் எழுதும் ரெண்டெழுத்தும், இணையம் தந்த கொடையும்தான்!
உரத்த சிந்தனை ஆண்டுமலர் கொடுத்தாங்க. ரொம்ப மகிழ்ச்சி! கூடவே  இன்னும் சிலபல பத்திரிகைகள். கடைசியில் கிளம்பும் சமயம் 'சம்ப்ரதாயமா  இங்கேயும் 'வச்சுக்கொடுக்கல்' ஆச்சு. புடவை, ப்ளவுஸ் பிட், அழகா ஒரு ட்ரே அதுலே குட்டியூண்டு சம்புடம்! (மஞ்சள் குங்குமம்  வச்சுக்கலாம்!)  மங்கலச்சின்னமா வெத்திலை வகையறாவும், கூடவே மாதுளம்பழமும்!  இது என்ன அக்கிரமமா இருக்கு? வச்சுக்கொடுக்க ஒரு அளவே இல்லையா?
பெரியவங்க கொடுப்பதை வேணாமுன்னு சொல்ல மனசு வரலை! பெருமாளே கொடுத்தாப்டிதானே!

அங்கிருந்து கிளம்பி லோட்டஸ் வரும் வழியில்  நம்ம கீதா கஃபேயில் பகல் சாப்பாடு. மாடியில் ஏஸி டைனிங் ஹால் இருக்கு!
அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வு.  மூணே முக்காலுக்குக் கிளம்பி  கயிலையாம் மயிலைக்குப் போறோம்.  ராஜகோபுரத்தாண்டை மல்லிப்பூ!



கோவிலில் பூனை நடமாட்டம் கூடி இருக்கு! போனமுறை பார்த்தவை எல்லாம் இப்போ பெரிய குடும்பஸ்த்ரீகள் !  அதுவும் வாயிலார் சந்நிதிகிட்டே நாலைஞ்சு ! என்ன பொருத்தம் பாருங்க :-)  ஆனால் எல்லாம் நோஞ்சானாக்கிடக்கே!






நம்ம கற்பகாம்பாளைத் தரிசிக்கப்போனால்  வெளிப் படிக்கட்டுக்கு முன்னாலேயே நல்ல கூட்டம். இன்றைக்கு வியாழந்தானே.....  என்ன விசேஷமுன்னு   மெள்ள நகரும் வரிசையில் ஒட்டிக்கிட்டே முன்னேறிப்போனால்... இன்ப அதிர்ச்சி!  திருமஞ்சனம்! முதல்முறையாப் பார்க்கிறேன்! அப்புறம் கோவில் தகவலில் பார்த்தால் அன்றைக்கு உத்திரம் நக்ஷத்திரம்.  ஆனி மாசம்!  ஆஹா.... ஆனித்திருமஞ்சனம் தரிசிக்க முடிஞ்சதில் பரம திருப்தி எனக்கு!  (இப்படித்தான் எதிர்பாராத நேரங்களில் அருமையான சமாச்சாரங்களை அனுபவிச்சுக்கோன்னு சொல்லிடறான் எம்பெருமாள்!  அப்புறம் வேறெதாவது சமயத்தில் தலையில் ஒரு  அடியும்  கொடுப்பான்.  இதான் அணைக்கிற கை(யும்) அடிக்கும் என்பது!  )

இன்றைக்குக் கபாலிக்கும் திருமஞ்சனம் உண்டு!  அந்த சந்நிதியில் பயங்கரக்கூட்டம்.  'நம்மவருக்குத்' தொட்டுக்கும்பிட   தீபாராதனை கிடைச்சது. எட்டிப்பார்த்துட்டு நகர்ந்துட்டேன். உள்பிரகாரம் சுத்தி வந்தோம்.  பதஞ்சலி முனிவர்தான் இந்த ஆனித் திருமஞ்சனம் ஆரம்பிச்சு வச்சவராம்!
பயணக்குறிப்புகளா, தினம் கொஞ்சூண்டு ஃபேஸ் புக்கில் போட்டுக்கிட்டு இருந்தேன். அதான் லோட்டஸில் வைஃபை நல்லா இருக்கே!   அப்போ நம்ம ரோஷ்ணியம்மாவும் ஆனித்திருமஞ்சனம்னு ஃபேஸ்புக்கில் பின்னூட்டினாங்க!


மத்த சந்நிதிகளையும்,  மாடுபாப்பாக்களையும் தரிசனம் செஞ்சுட்டு, நேராப் போனது   வடக்கு மாடவீதி சரவணபவனுக்கு. ஒரு காஃபி வேண்டி இருக்கு.  என்னவோ மாற்றங்கள் அங்கெ!  தோஸாக்குடில் நட்ட நடுவில்  நிக்குது. ப்ச்....

லோட்டஸ் திரும்பும்வழியில் தோழி வீட்டுக்கு விஜயம். தோழி  வேற நாட்டில் இருக்காங்க இப்போ.  தோட்டம் எப்படி இருக்குன்னு  பார்க்கணும் எனக்கு!  தோழியின் மருமகள் வேற, 'அங்கே மாங்காய் நிறைய இருக்கு. எல்லாம் உங்களுக்கே'ன்னு சொல்லி இருந்தாங்க.  ஆனால் சீஸன் முடிஞ்சுருச்சே....  மற்ற செடிகள் நல்லாவே இருக்கு.
கொய்யாவில் இருந்த  ஒரே பழம் எனக்கு :-)

தோட்டக்காரர் நல்லாதான் பார்த்துக்கறார்.  வெயிலால் சின்ன வாட்டம் காமிச்ச 'எனக்கு' நானே தண்ணீர் பிடிச்சு ஊத்திட்டு வந்தேன். கூடவே சில க்ளிக்ஸ் ஆச்சு!

கண்ணாடி ரெடியா இருக்குன்னு  சேதி வந்தது. இந்த மூணுநாளா படிக்க முடியாமல் கொஞ்சம் சமாளிப்புதான். முதலில் போய் வாங்கிவந்து படிப்பறிவை மீட்டுக்கணும்.
ராமராஜ் ரொம்ப உதவியா இருந்தார்.  புதுக்கண்ணாடி நல்லாத்தான் இருக்கு. ஆனால் விலை அதிகமோன்னு .... அதுவும் ஏற்கெனவே இருந்த ஃப்ரேமில்தான் போட்டுத் தரச் சொன்னோம்.  லென்ஸ், வெளிநாட்டுச் சமாச்சாரமோ என்னவோ?
மோச்சியில் வாங்குன செருப்பில் பிரச்சனை இப்போ..... இதுவும் ரெண்டுநாளில்  காலில் இருந்து கழண்டுவர ஆரம்பிச்சுருக்கு. பாதம் இளைச்சுக்கிட்டே போகுதா என்ன?
திரும்ப மோச்சி கடையில் (பாண்டிபஸாரில் நம்ம கீதா கஃபேக்கு நேரா எதிர்வாடையில் இருக்கு) போய்க் கேட்டதுக்கு அங்கிருந்த  விற்பனைப்பிரிவு மேலாளர், தானே வந்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு, 'கொடுத்துட்டுப் போங்க. என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்'னு சொன்னார்.  செருப்பைக் கழட்டிக் கொடுத்துட்டு  வெறுங்காலில் போக முடியாதே....  நாளைக்குக் கொண்டுவரேன்னு சொல்லி வச்சேன்.

கொஞ்சதூரம்  போனப்ப, நம்ம  Bata கடை கண்ணில் பட்டது. வழக்கமா வாங்கிக்கும் Dr Scholls இருக்கான்னு பார்த்தால்  ஸ்லிப் ஆன் ஒன்னும் சரிப்படலை.  மாடல்ஸ் மாறிக்கிட்டே இருக்கு. ப்ச்....   பின்பக்கம் ஸ்ட்ராப் வச்சது  ஒன்னு கிடைச்சது. எப்படியும் இது கழண்டு வராதுல்லே?

வாங்கினதும்,  மோச்சியைக் கொடுத்துட்டே போயிடலாமேன்னு திரும்பவும் மோச்சிக்கே போனோம்.
அதே மேலாளர் ராஜேஷ்,  சரி செஞ்சு தர்றேன்னு  சொல்லி அதுக்கான ரசீது எழுதிக்கொடுத்தார். இந்திய வழக்கப்படி (எதுக்கெடுத்தாலும் ஃபோன் பண்ணறோம்,  செல் நம்பர் கொடுங்கன்னு எங்கெபோனாலும் கேக்கறாங்க!  காய்கறிக் கடையில் கூடன்னா பாருங்க.... ) எல்லாம் ஆச்சு. ஒரு பொருளை வாங்கும்போது இருக்கும் இனிப்புப் பேச்சு, அதைப் பற்றிய குற்றம் குறை சொல்லப்போகும்போது  இருக்காதுன்னு  இந்தியாவில் பலமுறை அனுபவிச்ச என்னால், ராஜேஷ் ரொம்பத் தன்மையாப் பேசுனதை நம்பவே முடியலை! கோடியில் ஒருவரை விடலாமோ? க்ளிக்! உங்க படத்தை நெட்லே போடப்போறேன்னு சொன்னேன்.
ஆச்சு மணி, ஒன்பதே கால். சாலையைக் கடந்தால் கீதா கஃபே.  தோசையும் பாலும்  போதும்.

இன்றைக்கு ரொம்பவே சுத்திட்டோம், இல்லே!   நாளைக்கு உள்நாட்டுப் பயணம் போறதால் அதுக்குண்டான வேலை பாக்கி இருக்கு!

தொடரும்...... :-)

Monday, September 03, 2018

அல்லிக்கேணி கண்டேனே..... (பயணத்தொடர், பகுதி 4 )

அஞ்சு பெருமாளை ஒரே இடத்தில் நாலு கோலத்திலும் ஸேவிக்கணுமுன்னால்  ரொம்ப மெனெக்கெடவே வேணாம். திவ்யதேசமாம்  திரு அல்லிக்கேணி பார்த்தஸாரதி கோவிலுக்குப் போனால் போதும்!  போனோம்.   
வழக்கத்துக்கு மாறா அல்லிக்குளம் பளிச்ன்னு இருக்கு! 
சமீபத்துலே எதோ விசேஷம் வந்தது போல !  முக்காடு போட்டு நிக்கும் தேரின் சக்கரம் எல்லாம் பெயின்ட் அடிச்சு, அழகா இருக்கே!



வெளிமண்டபத்தில் இருக்கும் அசோகவன சீதையும், ஆஞ்சியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு முறை போகும்போதும் இருக்காங்களான்னு  ஓடிப்போய்ப் பார்க்கும் வழக்கம் இருக்கு!  இருக்காங்க :-) இன்னொரு தூணில் நம்ம   லக்ஷ்மிநரசிம்ஹர். கோவிலுக்கு மதில் சுவர் கட்டி, உள்ளே மண்டபங்களை எல்லாம்  ஜெயிலில் போடாமல்  வச்சுருக்கக்கூடாதான்னு   என் ஆதங்கம்.


தூண்களில் இருக்கும் சிற்பங்களைக் கிட்டப்போய்ப் பார்க்க முடியாதபடி, மக்கள் தூண்களைச் சுத்தி இடம் போட்டு உக்கார்ந்துருக்காங்க. இங்கேயே தங்கிடறாங்க போல!  வயசானவங்களா வேற இருக்காங்க. சட்னு கை நீட்டும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு  :-(
கோவிலில் கூட்டம் வழக்கம்போல்!  இன்றைக்குத் தாயார் புறப்பாடு இருக்காம். அரைமணி காத்திருந்தால் ஆச்சு. அதுக்குள்ளே போய் மீசைக்காரனை தரிசனம் பண்ணிக்கலாம்.  இலவச தரிசன வரிசையில் போறதுதான் நல்லது. அப்பதான் ராமனையும், ரெங்கனையும்  பார்க்க முடியும்.
நெடுநெடுன்னு  நின்ற கோலத்தில்  முட்டைக் கண்களும், முரட்டுமீசையுமா  ஒன்பதடி உசரம்! நல்லா பளிச்ன்னு விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. வெளியே உள்ப்ரகாரத்தில் சந்நிதிக்கு  எதிரே இருக்கும் கம்பிக்கதவு பக்கம் நின்னால்கூடப் போதும். ரொம்ப நல்லாத் தெரிவார்.  முப்பது நாப்பதடி இடைவெளி இருந்தும்கூட !  (இப்படி ஏன் திருமலையில் விளக்கு போட்டு வைக்கக் கூடாது? நல்ல இருட்டுலே அவனை நிக்க வச்சு, வரிசையில் விடறோமென்ற பெயரில்  கூட்டமா அனுப்பி ரொம்ப தூரத்தில், இருட்டுக்குக் கண்பழகும் முன்னே இழுத்துக் கடாசுன அனுபவத்தை என்னால் மறக்க முடியலையே.....)

ரொம்ப நல்லா தரிசனம் ஆச்சு. குடும்பம் முழுசும் இன்றைக்கு பார்க்கக் கிடைச்சது!   சின்னதா ஒரு உத்தி சொல்லவா? ஒரு அர்ச்சனைச் சீட்டு மட்டும் வாங்கிக்கணும். பட்டர் ஸ்வாமிகளும் பொறுமை உள்ளவராக் கிடைச்சால் நமக்கு அதிர்ஷ்டம்!
ஐவரையும் தரிசனம் செஞ்சு, ஆண்டாளம்மாவுக்குத் 'தூமணி மாடத்து' பாடி (மனசுக்குள்ளேதான்... அனுராதா சுரேஷ் க்ருஷ்ணமூர்த்து  வெர்ஷன்) பிரஸாத ஸ்டாலுக்கு வந்து எனக்கொரு சக்கரைப்பொங்கலும். 'நம்மவருக்கு' ஒரு புளியோதரையுமா முடிச்சுட்டுத் தாயாரின் புறப்பாடும்  பார்த்துட்டு மன நிறைவுடன் கிளம்பினோம். 



ஆறேமுக்காலுக்குப் பாண்டிபஸார் வந்தாச்சு. கீதா கஃபேயில் ஈவ்னிங் டிஃபன். பஜ்ஜி & காஃபி. ரொம்பப் பழைய ரெஸ்ட்டாரண்டு இது.  பரிமாறும் வேலை செய்யறவங்க எல்லோருமே ஓரளவு கொஞ்சம் வயசானவங்கதான்.  இவுங்களில் ஒரே ஒரு இளைஞரா ராம்கிஷன் (வட இந்தியர்)இருக்கார். இவரையும் நமக்கு மூணு வருசமாத் தெரியும்!   நாங்களும் பலவருசங்களா வாடிக்கையாளர்கள்தான் என்பதால்  இந்த மக்களுக்குப் பரிச்சயமானவர்களா இருக்கோம். கல்லாவில் இருக்கும் பெரியவரை நானும் நாப்பத்தியேழு வருசமாப் பார்த்துக்கிட்டு இருக்கேன்! வயித்துக்கு ஆபத்து இல்லாத சாப்பாடு இங்கே!

'நம்மவரின்'  வாட்ச் உயிரை விட்டுருந்தது. கடிகாரம் ரிப்பேர் பண்ணும் கடை, இங்கே பக்கத்தில் இருக்கான்னு ராஜேந்திரனிடம் (பரிமாறினவரிடம்) விசாரிச்சால்...  எதுத்த வாடையையொட்டி வலப்பக்கம் வரும் தெரு முனையில் ரிப்பேர் பண்ணித் தருவாங்கன்னார்.  சிவஞானம் தெரு.  அங்கே கடையைத் தேடிக்கிட்டுப்போனால்  அப்படிக் கடையொன்னும் இல்லை.  ஆனால்... ரிப்பேர் பண்ணறவர் இருக்கார், மரத்தடியில் சின்ன  ஸ்டேண்டில் சிலபல கருவிகளை (!) வச்சுக்கிட்டு.
நாம் நினைச்சதுபோல பேட்டரிதான் போயிருந்துச்சு. சாதாரணம், பிராண்டட்னு ரெண்டு வகை வச்சுருக்காராம்.  ப்ராண்டடே இருக்கட்டும். நூத்தம்பது ரூபாயில் வேலை முடிஞ்சது அஞ்சே நிமிசத்தில்!  கடைக்காரர் ஹுஸைன், இந்தத் தொழிலில் நாப்பதம்பது  வருசமா இருக்காராம்!  சாலையோர எளிய மனிதர்களில் ஒருவர்!

 நாம் சென்னை வந்த நேரம் அண்ணன் ஊரில் இல்லை. இன்றைக்குச் சாயங்காலம்தான்  பெண்களூரில் இருந்து கிளம்பறாங்களாம். வீடு வந்து சேர ராத்ரியாகிரும். நாளைக்கு எப்படியும் அங்கே போக வேண்டிய விசேஷம் இருக்கு. நம்ம வீட்டுக் கல்யாணம் ஒன்னு ! ஞாயிறு முஹூர்த்தம் வச்சுருக்காங்க. இதை எதிர்பாராமல் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை பயணம் ஒன்னு ஏற்பாடு செஞ்சுட்டோம்.  பெண்வீட்டு நலங்கு நிகழ்ச்சியிலாவது கலந்துக்க முடியும் என்ற மகிழ்ச்சிதான். நாம் பொண்ணு ஸைடுதான், கேட்டோ!  நம்ம தாம்பரம் அத்தையின் பேத்தி !




பத்துமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். விசேஷ நிகழ்ச்சி என்றதால்  நம்ம  சொந்தபந்த மக்கள் எல்லாரையுமே ஒரே இடத்தில் பார்க்க முடிஞ்சது!  பொண்ணுக்கு அண்ணன்காரர், பிக்பாஸ் போல பையைத் தோளில் மாடிக்கிட்டுப் பம்பரமாச் சுத்திக்கிட்டு இருந்தார்.  எல்லாம் நாம்,  பொறந்தது முதல் பார்த்த பசங்கதான். இவ்ளோ பெரிய ஆளா வளர்ந்து நிக்கறாங்கன்றதை ஒரு நிமிஷம் நம்ப முடியலை :-)
கல்யாணத்துக்கு இருக்க முடியலைன்றது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது! அண்ணனோடும், அண்ணியோடும் கொஞ்சநேரம் செலவளிச்சுட்டுக் கிளம்பிட்டோம்.  அவுங்களும் இப்போ கொஞ்சம் பிஸிதான். இன்னும் மூணுநாளில் அமெரிக்கா கிளம்பறாங்க.

இதுக்கிடையில்  அங்கே கொஞ்சதூரத்தில் இருக்கும் ஃபேஸ்புக் நண்பரையும் கையோடு பார்த்துப்பேசிட்டு வரணும் என்ற திட்டத்தோடு அவுங்க விலாசம் எல்லாம் கேட்டு வச்சுருந்தேன். அவுங்களுக்கும் மகிழ்ச்சி!  எந்தெந்த தெருவில் திரும்பணும், என்ன லேண்ட் மார்க் என்ற விவரம் எல்லாம் பக்கவா அனுப்பி இருந்தாங்க. ஒரு  குழந்தை கூட, கரெக்டா போயிரும். ஆனா... நாம்தான் குழந்தைப் பருவத்தைத் தாண்டி கடைசிப் பருவத்துக்கு வந்துட்டோமா இல்லையா?   முக்கால் பகுதிவரை சரியாகப்போய், சின்னதாக் கடைசியில் கொஞ்சம் சுத்திட்டு, பத்மாமணி அவர்கள் வீட்டுக்குப் போயிட்டோம்.

தொடரும்...........  :-)