Friday, March 11, 2016

வோட்டுப் போட்டாச்!

மாற்றம்  வேணுமா வேணாமா?

மனசில் இருப்பதைச் சொல்ல முஹூர்த்தம் குறிச்சாச்சு. இன்னும் 12 நாட்கள்தான் இருக்கு. மார்ச் 21க்குள் அனுப்பிருங்க. மார்ச் 24 தான் கடைசித்தேதின்னாலும் எல்லாமே போஸ்ட்டல்  வோட்டு என்பதால் மூணுநாளைக்கு முன்னால் அனுப்பச் சொல்லி இருக்காங்க.

மறுநாள் மார்ச் 25க்கு முடிவு சொல்லிருவாங்க.

அப்புறம் எண்ணி முப்பத்தியோராம் நாள் ஏப்ரல் 25 எது ஜெயிக்குதோ அது கொடி ஏறும். எங்க நாட்டுக் கொடிநாள் ஏப்ரல் 25 என்பதால் அன்றுமுதல் புதுசு!

ஏற்கெனவே கொடிமாற்றம் பற்றி சொல்லி இருக்கேன். இது ஒரு சரித்திர நிகழ்வுன்னு! எடுத்தேன் கவிழ்த்தேன்னு  செய்யற சமாச்சாரமில்லை இது. ஓட்டுப்போடும் உரிமையுள்ள நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டே  செய்றதால்  நிதானமாத்தான்  முடிவெடுக்க முடியும்.

ஏராளமான டிஸைன்கள் வந்து அதில் இருந்து அதுலே இருந்து வடிகட்டி எடுத்த ஒரு நாற்பது டிஸைன்கள் இங்கே.



அப்புறம் அந்த நாற்பதை இன்னும் வடிகட்டி அஞ்சாக்குனது இங்கே.


அதுலே ஜெயிச்சது என்னன்னும் சொல்லி இருக்கேன்.

இப்ப  கடைசியா ஒரு  கருத்துக்கணிப்புக்கு வோட் போடணும். வோட்டிங் பேப்பர்கள் மார்ச் 3 முதல்வீடுகளுக்கு வரத் தொடங்கியாச்சு.

இதுக்கிடையில் போன கருத்துக்கணிப்பில் ஜெயிச்ச கொடியை ஆதரிச்சு ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சு இருக்கு.  தெருமுனையில்  மேடை போட்டோ, பேட்டைக்குப் பேட்டை  போக்குவரத்தை பேஜாராக்கிக் கூட்டம் போட்டோ இல்லையாக்கும். இதுவும் நம்ம தபால்பெட்டிக்குத்தான் வந்து சேர்ந்துச்சு.

மாற்றத்துக்கு வோட் போடுங்க.

நாட்டின் முக்கிய நபர்களில் யார் யார் புதுக் கொடியை ஆதரிக்கறாங்கன்னு ஒரு பட்டியல்

 மாற்றத்துக்கான நாலு முக்கிய காரணங்கள்.

வியட்நாம் போரில் கலந்துகொண்ட நியூஸி  படை வீரர் LT.Col. Chris Mullane ONZM, MBE. President of  Devonport RSA  அவர்களின் கருத்து.


இப்படி  காரணங்களை அடுக்கி  ஒரு ப்ரோஷர்.

 நாம் அஸ்ட்ராலியாக்காரங்க இல்லை. பெருமைமிக்க கிவிக்கள்.அதனால் மாற்றத்துக்கு  வோட்டு போடுங்க.

இப்ப நடப்பில் இருக்கும் கொடி  நியூஸி மக்களால் தேர்ந்தெடுக்கப்படலை. கிடைச்ச சான்ஸை இப்பக் கோட்டை விட்டுட்டீங்கன்னா  இன்னும் பல தலைமுறைகள் காலம் வரை காத்திருக்கவேணும்.

இப்ப நடப்பில் இருக்கும் கொடியைப் பார்த்தால்  யாரும் சட்னு அஸ்ட்ராலியாக் கொடி சொல்லிருவாங்க. அப்படி ஒரு குழப்பம் இருக்கு. நம்மைவிட கூடுதலா 2 நக்ஷத்திரம் இருக்கே தவிர மற்றதெல்லாம் அப்படிக்கப்படியே:-(

புதுக்கொடியில் இருக்கும் பெரணி இலை பல வருசங்களா நம்மை  நியூஸி மக்கள்னு அடையாளப்படுத்தும் சமாச்சாரம். நாட்டுக்காக போரில் உயிர்துறந்த நம் மக்களின் கல்லறையில் கூட  பெரணி இலைச்சின்னம்தான் பொறிச்சுருக்கு. கவனிச்சுப் பாருங்க.




Silver Fern சின்னம்வெள்ளையர்கள் இந்த நாட்டில் வந்து குடியேறுனதுக்கு முன்னே இருந்த காலக் கட்டத்துலேயே   நம்ம மவொரி இனத்துடன் சம்பந்தப்பட்டது.


இப்படி காரணகாரியங்களைப் படிச்சுப் பார்த்தால்  நியாயமாத்தான் இருக்கு!கொஞ்சூண்டு யோசனை செஞ்சு பார்த்தால்.........   எங்க பாஸ்போர்ட்லேகூட முகப்பு அட்டையில் இருப்பது  ஸில்வர் ஃபெர்ன் இல்லையோ!!!!




அரசு அனுப்பிய வோட்டுச் சீட்டு அடங்கிய கவரில் ரெண்டு கொடிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே அளவில்  கொடிகளைப் பற்றியும், அவை சொல்லும் சேதிகள் குறித்தும் சொல்லி இருக்காங்க.



எல்லாத்தையும் சீர்தூக்கி ஆராய்ஞ்சதில் நடப்பில் இருக்கும் கொடியை விட  புதுக்கொடிதான் நியூஸியின் சமூகத்தைப் பிரதிபலிக்குது என்று உணர்ந்ததால்

மாற்றம் வேணுமுன்னு வோட்டுப் போட்டுட்டேன்! தபால் செலவு கூட இல்லை!


PINகுறிப்பு: இன்னும் எண்ணி ரெண்டே வாரத்தில் புதுசா பழசான்னு  தெரிஞ்சுபோயிரும். அப்போ மீண்டும் சந்திக்கலாம்.



Wednesday, March 09, 2016

பொங்கலுக்கும் புத்தகங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்குதோ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 5)

முதல் கட்ட சேதிகளின்படி 20 ஆம்  தேதி கடைசி நாள் என்பதால்  நாளை வரை காத்திருக்காமல் இன்றைக்கு (19 ஆம் தேதி) போயிட்டு வந்துடலாமேன்னு  கோபால் சொன்னதை உடனே  சரின்னு ஏத்துக்கிட்டேன். இந்தமுறை ஒய் எம் சி ஏ ராயப்பேட்டையாம்.

 சென்னை வெள்ளப் பாதிப்பு காரணத்தால் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களில் பதிப்பகங்களும் ரொம்பவே அடிபட்டிருக்குன்னு தகவல். ஏராளமான புத்தகங்கள் நீரில் மூழ்கிருச்சுன்னு கேட்டப்ப 'ஐயோ'ன்னு இருந்துச்சு. வழக்கமா ஜனவரியில் நடக்கும் புத்தகத் திருவிழாவை ஏப்ரலுக்கு மாத்தப்போவதாத்தான் சொன்னாங்க.

நமக்குப் போகச் சான்ஸ் இல்லையேன்னு  கவலையும் பட்டு மனதையும் ஒருமாதிரி தேத்திக்கிட்ட சமயம், சின்ன அளவில் விழா நடத்தப்போவதாக ஒரு சேதி வந்து பால் வார்த்தது. இதோ கிளம்பியாச்சு.

இருநூற்றுச் சொச்சம் கடைகளுடன், டாக்டர் ஏ பி ஜே. அப்துல்கலாம் அரங்கு! நுழைவு நன்கொடை ஐந்து ரூபாய்.



வேலைநாளாக இருந்தாலும் கொஞ்சம் மக்கள்கூட்டம் இருந்தது. வாசிப்புப் பழக்கம் இன்னும் போகலை என்பது மகிழ்ச்சியே!


தாகம் தீர்க்க ஜூஸ் கடை ஒன்னு.  ஜூஸை வாங்கிக் குடிச்சுட்டு , மற்ற  வசதிகள் எப்படி இருக்குமோன்னு பயம் வந்ததால் ...  ஜூஸ் வேணாமுன்னு ஒதுக்கவேண்டியதாப் போச்சு.

ஸ்டால்களைப் பார்த்துக்கிட்டே, ஒன்னுரெண்டு புத்தகங்களை வாங்கியபடியே  நகர்ந்து போனதில் 'சந்தியா' வுக்குப் போயிருக்கோம்.


பதிப்பாளருக்கு நம்மைக் கண்டதும் வியப்பு! சட்னு உதவியாளரிடம் அஞ்சு அக்காக்களை எடுத்துவரச் சொல்லிட்டு, எப்ப வந்தீங்கன்னார்:-)



இன்னும் ஒரு வாரத்துக்கு  திருவிழாவை நடத்திக்கச் சொல்லிட்டாங்கன்னு சொன்னார். அப்ப இன்னொருமுறை வரமுடிஞ்சா நல்லா இருக்குமுன்னு தோணுச்சு. நம்மாட்கள் யாராவது தெம்படறாங்களான்னு கண் பயணிச்சது. மருந்துக்குக்கூட  யாரையும் காணோம். (என்னவோ எல்லாரையும் பார்த்தவுடன் கண்டுபிடிச்சுரும் போல!)

சந்திரஹாசம் என்ற புத்தகத்துக்கு பிரமாண்டமான விளம்பரங்கள்  எங்கே பார்த்தாலும்!


இன்னொரு  ஸ்டாலில் தமிழில் குர் ஆன் இலவசமாக் கொடுத்தாங்க.  படிச்சுத்தான் பார்க்கலாமேன்னு  கை நீட்டினோம். சாஜிதா புக்  சென்ட்டர் நிறைய தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுருக்காங்க.

சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகங்கள்....  வாங்கி இருந்துருக்கலாம்னு...........  இப்போ தோணுது :-(

ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸில் பத்து ரூபாயில் புத்தகங்கள்!!!!


கிழக்கில்.......... வழக்கம்போல் சுஜாதாவின் ஆளுமை!

உயிர்மையிலும் கோலோச்சியவர் சுஜாதாதான்!

யானை!  இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!


ஸூட்கேஸைத் தள்ளியபடி ஒருத்தர்  புத்தகங்களை எடுத்துப் பின்னட்டைகளை பார்த்துக்கிட்டு இருந்தார். ஊருக்குக் கிளம்புனவர் அப்படியே இங்கே வந்துட்டாரோன்னு மெள்ளப் பேச்சுக் கொடுத்தேன். புத்தகத் திருவிழாவுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான்  ஸூட்கேஸோடு வந்துருக்கார்.  வாட் அ நீட் ஐடியா!!!  எனக்குத் தோணாமப் போச்சே...... ஆனால்  அவருக்கு ரெண்டு கை நமக்கு நாலுன்னு சொல்லிக்கிட்டேன் மனசுக்குள் :-)

ஆன்மீகம், சமையல் எல்லாம்  இன்னும்  மவுஸோடு நல்லாவே போகுதாம்!

காவ்யாவில் நம்ம பெருமாள் முருகனைப் 'பார்த்தவுடன்', இனி எழுதப்போவதில்லை என்று  முடிவெடுத்த சம்பவம் நினைவுக்கு வந்து கொஞ்சம் படுத்துச்சு. ஆனால் அவர் படைப்புகளை வச்சு  இன்னொருத்தர் ஒரு புத்தகம் போட்டுருக்கார்.



இதுக்குள்ளே நம்ம கையில் ஒரு பத்து புத்தகங்கள் வந்துருக்கு.  மனசில் வச்சுருந்த லிஸ்ட் காணாமப்போய் இருந்தது. சில புத்தகங்கள் தலைப்புக்காகவே வாங்க வச்சுருச்சு. அதுலே ஒன்னு.... 'உபரி வடைகளின் நகரம்'. ஹா....  நம்ம சமாச்சாரம் இவுங்களுக்கும் தெரிஞ்சு போச் :-)

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது..........  சில புத்தகங்களின் முகப்பு அட்டை பிரமாதம்!
சந்திரஹாசம் ஸ்டாலுக்கு வந்துருந்தோம். எதோ கடற்கொள்ளைக்காரரின் கூடாரம் போல் இருக்கேன்னு உள்ளே நுழைஞ்சோம். சினிமா செட்!  ஆ. வி. போட்டுருக்கு! வெங்கடேசன் என்றதும்  காவல்கோட்டையான்னு கேட்டதுக்கு ஆமாம் என்ற பதில். க்ராஃபிக் நாவலாம். தமிழில் புது முயற்சி. கதை கேட்கன்னு ஒரு ஆப்(பு) இருக்கு. அது இலவசம்தானாம். புத்தகத்துக்குள்ளே அதுக்கான பாஸ்வேர்ட் இருக்குமாம்.  மகள் ஒரு வேளை கதை கேட்பாளோ என்ற நப்பாசையில் வாங்கலாமேன்னார் நம்மவர்.



கதை கேட்க எப்படி இருக்கும் என்று போட்டுக் காமிச்சாங்க. சரின்னு வாங்கினோம். உடனே நம்மை புத்தகத்தோடு ஒரு போஸ் க்ளிக்கினாங்க.  விகடனில் ஒரு சிறுகுறிப்போடு படம் வருமாம். சிறுகுறிப்புக்கான தகவலைச் சொல்லிட்டு வந்தார் நம்மவர். (வந்ததான்னு தெரியாது.) 


பில்ராத் ஆஸ்பத்திரிக்காரங்க ஒரு ஸ்டால் போட்டு,  மருத்துவப் பரிசோதனைகளுக்கு விலைகுறைப்பு பட்டியல் போட்டு வச்சுருக்காங்க.


ஒன்னரை மணிக்கூறில்  ஒருவழியா  ஒரு சுத்து வந்தாச்சு. தடுக்கிவிழும்படி இல்லாமல் தரைவிரிப்பு எல்லாம் நல்லபடியாவே போட்டு வச்சுருந்தாங்க. அப்படியே தடுக்கி விழுந்தாலும் புத்தகக்கடையில் போய்த்தான் விழுவோம்:-) பார்க்கிங் தொல்லையும் இல்லை.  அமைப்பாளர்களுக்கு பாராட்டுகள்.



கிளம்பி தி. நகருக்கு வந்து,  பாண்டிபஸார் ப்ளவுஸ் பீஸுக்கான ஷாப்பிங் தொடங்குச்சு. இது மகளுக்கான ஷாப்பிங் என்பதால் கவனம் தேவை!  ஒரு காலத்தில் தைச்ச மேட்ச்சிங் ப்ளவுஸ்கள் எல்லாம்  சின்னத்தாப் போயிருக்கு! இப்பத்தான் தெரியுது அவளிடம் இருக்கும் புடவைகளின் எண்ணிக்கை என்னிடம் இருப்பதைவிடக் கூடுதல்னு!

சரி எப்படியோ.... புடவை கட்டுனாச் சரி. பாரம்பரியம் காப்பாற்றப்படட்டுமே!

தையல் கடைக்குப்போய் மகளின் ஆணைக்கிணங்க  நம்ம முஸ்தாஃபா மாஸ்டரிடம் வழிமுறைகளை விளக்கிச் சொல்லிட்டு அப்படியே காஞ்சிபுரத்தில் வாங்கிய நமக்கானவைகளையும் தைக்கக் கொடுத்துட்டு  சரவணபவனுக்குப் போய்  சூடா ஒரு பஜ்ஜியும்  காஃபியும் ஆச்சு.  எதுக்கும் வழித்துணைக்கு  இருக்கட்டுமேன்னு  கொஞ்சம் நொறுக்ஸ்.

அப்படியே திரும்பி அறைக்கு வரும் வழியில் பழமுதிர்ச்சோலையில் கொஞ்சம் பழங்களும் ஒரு தயிரும்.

ராத்திரி சாப்பாட்டுக்கு இங்கேயே எதாவது ரூம் சர்வீஸில் சொன்னால் ஆச்சு. இல்லையோ!

தொடரும்........:-)

PINகுறிப்பு:  இன்னும்  அங்கெடுத்த  புத்தகத் திருவிழாப் படங்களை ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். நேரமும் விருப்பமும் இருந்தால் க்ளிக்கலாம்