Wednesday, May 09, 2012

வந்து பார்த்து, வாழ்த்திட்டுப் போங்க!

ஆட இடமில்லைன்னு மனசெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்த ஊருக்கு, 'எதாவது செய்யணுமே(பாஸ்)' என்ற முடிவில் கொஞ்சம் உக்காந்து யோசனை செஞ்சு உள்ளுரில் இருக்கும் ஒரு ரேஸ் கோர்ஸ் ( இங்கே ரேக்ளா ரேஸ்கள் நடக்கும்) மைதானத்தில் கொஞ்ச இடத்தை முந்தியே கேண்டர்பரி ரக்பி லீக் அவுங்க ஆட்டங்களுக்காக வாங்கி வச்சுருந்ததைக் கெஞ்சிக்கேட்டு புதுசா ஒரு தாற்காலிக ஸ்டேடியம் கட்டிட்டாங்க ஏ எம் ஐ காரங்க.

 100 நாளில் வேலையை முடிச்சு, இப்போ ஊர்மக்களைக் கூப்பிட்டு 'வந்து பார்த்து வாழ்த்திட்டுப் போங்க' ன்னு அழைப்பு வச்சதும் நல்லா இருங்க(டே)ன்னு வாழ்த்தக் கிளம்பிப்போனோம் போன சனிக்கிழமை!

இலவச பஸ்கள் எல்லாம் விட்டு  மக்கள்ஸை வருந்திவருந்திக் கூப்பிட்டாங்கன்னு  அங்கே போனபிறகுதான் தெரிஞ்சது!

இந்த இடத்தில் கிடைச்ச சந்தர்ப்பத்தை விடாம உள்ளூர் பெருமை(யும்) கொஞ்சம் பேசத்தான் வேணும். ஒவ்வொரு பெரிய ஊருக்கும்(நம்மூர் மாநிலம்போலன்னு வச்சுக்குங்க) ஒரு அஃபிஸியல் ரக்பி டீம் இருக்கு. அததுக்கு ஒரு பேரோடுதான். எங்க கேண்டர்பரி கிறைஸ்ட்சர்ச்க்கு க்ருஸேடர்ஸ்ன்னு நாமம். 127 வருசமா இவுங்க விளையாடிக்கிட்டு இருக்காங்க. எங்கூரு கலரான கருப்பு & சிகப்பு நிறம்தான் இவுங்களுக்கும் என்றபடியால் இந்த ரெண்டுகலரிலும் பட்டைப்போட்ட ஜெர்ஸி, டீ ஷர்ட் இப்படித்தான் இவுங்க சீருடை இருக்கும். இவுங்க கலந்துக்கும் கேம் இதே ஊரில் நடக்கும்போது பார்த்தீங்க...... ஏதோ திமுக மாநாட்டுக்கு வந்துட்டோமோன்னு தடுமாறித்தான் போவோம். பலூன் தோரணம் கட்டிப் பறக்கவிடுவதில் இருந்து முகம் முழுக்க பப்பாதி கருப்பும் சிகப்புமா ஃபேஸ் பெயிண்ட் அடிச்சுக்க்கிட்டு இளைஞர், சிறுவர் பட்டாளம் ஊர்பூரா விரவிக்கிடக்கும்.


 அன்னிக்கு சூப்பர் மார்கெட்டுலே எதாவது சாமான் வாங்கிக்கப்போய் செக்கவுட்லே காசு கொடுக்கும்போது செக்கவுட் ஆபரேட்டர்கூட நடக்கும் சின்னப்பேச்சுலே இதுதான் பிரதானம். யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறே? இன்னிக்கு கேம் பார்க்கப் போறியா? மைதானத்துக்குப் போவியா இல்லே வீட்டுலே ஸ்கை டிவியில் பார்ப்பியான்னு ஆயிரம் கேள்விகளில் குசலம் விசாரிப்பு நடக்கும். பொறந்த வூட்டுப் பெருமையை உடம்பொறந்தாளிடம் கூவும் கதைன்னு எல்லாத்துக்கும் மையமாத் தலையாட்டி க்ரூஸேடர்ஸ்ன்னு சொல்லி வைக்கறதுதான். யாரும் பதிலுக்குக் காத்திருப்பதில்லை என்பது வேற விஷயம்:-)))



 இந்த ஸ்கை டிவி என்பது நம்மூர்லே பணம் கட்டிப் பார்க்கிறோமே அப்படி ஒன்னு. ஆனாலும் இந்தியாவிலே நாட்டுடமை பொதிகை கூடக் காசு கொடுத்துப் பார்க்கும்படியால்லே இருக்கு. இங்கே நாங்க வந்த சில வருசங்களிலேயே டிவி சார்ஜை எடுத்துட்டாங்க. ஒரு பத்து சேனல்வரை இலவசம்தான். அப்புறம்தான் வீட்டுக்கூரை மேலே டிஷ் ஒன்னை மாட்டிவச்சு இந்த ஸ்கை டிவி வர ஆரம்பிச்சது.

கனெக்‌ஷன் சார்ஜ்ன்னு ஒன்னும், அதுக்குப்பின் வாராவாரம் இம்புட்டுன்னு ஒரு சார்ஜும் கட்டணும். ஸ்கை இருக்கான்னு என்கிட்டே கேக்கும் நம்மாட்களுக்கு இருக்குன்னு சொல்லி ஜன்னல்வழியாத் தெரியும் ஆகாசத்தைக் காட்டுவேன்.

 ரொம்ப முக்கியமான மேட்ச்/கேம் வரும்போது கனெக்‌ஷன் சார்ஜு கூட வேணாம். இலவசமாப் போட்டுத் தர்றோம். முதல் 2 வாரம் அரை சார்ஜ்ன்னு ஸ்கை, ஆள் பிடிக்க அலையும். அல்ப ஆசைக்குத் தலையை ஆட்டுனா.....குறைஞ்சது ஒரு வருச ஒப்பந்தம் போடவேண்டியாகும். டிவியில் நேரடி ஒளிபரப்பாக் காமிக்கும் உரிமை இவுங்களுக்கு மட்டுமே! நாட்டுமக்கள் முழிச்சுக்கிட்டுக் கூவுனதுக்கு அப்புறம் முதல் அரை மணி கழிச்சு தாமதமா தேசிய ஒளிபரப்புலே காமிச்சுக்குங்கோன்னு பெரியமனசு பண்ணிட்டாங்க.



இந்த விளையாட்டுலே எனக்குப்பிடிச்ச அம்சம் என்னன்னா.... ஒரு பாதி ஆட்டம் முக்கால் மணி நேரம் என்ற கணக்கில் இடைவேளை எல்லாம் சேர்த்தாலே ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுரும். நாள் பூராவையும் நாசம் பண்ண வேணாம். எப்பவும் மாலை ஏழரைக்குத் தொடங்கி ஒன்பதரைக்கு முடிஞ்சுரும்.








குழந்தைகளைத் தரையில் உக்காரவச்சு அதுகள் இருக்கையைப் பிடிச்சுக்கிட்ட ஒரு அம்மா:-)))))


பெரிய வியாபார நிறுவனங்கள் எல்லாம் ஸ்பான்ஸார் செய்யறோமுன்னு பணம் கட்டி கார்ப்பரேட் பாக்ஸ்ன்னு உச்சாணிக்கொம்பில் அறைகள் வாங்கி வச்சுருப்பாங்க. கோபாலும் மகளும் அடிக்கடி அங்கே போய், எனக்கு ஸ்கோரை தொலைபேசிக்கிட்டே இருப்பாங்க. டிவியில் வருமுன் எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் கொடுக்கறாங்களாம்!! ஊரோடு சேர்ந்து ரெண்டும் கெட்டுக்கிடக்குன்னு விட்டுருவேன்:-)

ஒரு விளையாட்டுலே இருந்து டிமாண்ட் அனுசரிச்சுப் புதுப்புது கிளைகள் பரவுவதுபோல உள் நாட்டுலே விளையாட அந்தந்த ப்ராவின்ஸ் அணி, வெளிநாடுகளோடு விளையாட நேஷனல் டீம் ஆல் ப்ளாக்ஸ்ன்னு இருந்ததுலே மாற்றங்கள் வந்து, நாட்டுக்குப்பொதுவா ஆல் ப்ளாக்ஸ் மட்டும் அப்படியே வச்சுக்கிட்டு உள்நாட்டு அணிகளுக்குள் சூப்பர் 12, சூப்பர் 14, சூப்பர் 15ன்னு ஒவ்வொன்னா காலக்கிரமத்தில் இடம்பிடிச்சது. இது ரக்பி லீக். நம்ம பக்கத்தில் இந்த ஐ பி எல் அநியாயத்துக்கு அட்டூழியம் செய்வதுபோலன்னு சொல்லலாம்.



க்ரூஸேடர்களின் தாய்மண், கேன்டர்பரி என்பதால் ஜேடு ஸ்டேடியத்தில் நிரந்தர பங்கும் உரிமையும் அடைஞ்சு, நடக்கும் போட்டிகளைக் கொஞ்சம் ஷோவா நடத்த ஆரம்பிச்சாங்க. கேம் ஆரம்பிக்குமுன் ஏதோ பெரிய யுத்தத்துக்குத் தயாரா பாய்ஞ்சு வருவது போல அறைகூவலோடு கோட்டை வாசலுக்குள் (இதுக்குன்னே ஒரு கோட்டைவாசல் கட்டி நிறுத்தியாச்சு) இருந்து முதலில் ஒரு குதிரை வீரன் கையில் பிடிச்ச உருவிய வாளோடு மைதானத்தைச் சுத்தி வர்றதும், அதன்பின் நாலைஞ்சு குதிரை வீரர்கள் பாய்ஞ்சு பாய்ஞ்சு மைதானத்தை மூணு சுத்து சுத்துவதுமா ஷோ காமிச்சு, காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஆவேசத்தைக் கிளறிவிட அவுங்களும் (முக்கியமா க்ரூஸேடர் விசிறிகள்) உணர்ச்சிவசத்தில் கூவி வரவேற்கன்னு விறுவிறுப்பை ஆரம்பிக்க போட்டியில் ஆடும் ஆட்டக்காரர்கள் மைதானத்துக்கு வந்து ரெண்டு பார்ட்டிகளும் எதிரும்புதிருமா நின்னு பாடி கூவி கோஷமிட்டு ஆட்டம் தொடங்கும்.

யாரோ புண்ணியவான் நிகழ்ச்சி நடந்த ஒரு சமயம் பதிஞ்சு யூ ட்யூப்லே போட்டுவச்சதை உங்களுக்காகப் போட்டிருக்கேன். பாருங்க. லைவ் ரிக்கார்டிங் என்பதால் ஒலி சரியா இல்லை. ஆனாலும் ஒளி பார்க்கும் வகையில் இருக்கு. அன்னாருக்கு என் நன்றிகள்.

இதுக்கு க்ரூஸேடர்களுக்குன்னு ஒரு தீம் ம்யூஸிக் வேற! பாட்டு conquest of paradise என்று ஆரம்பிக்கும். நல்ல அர்த்தமுள்ள வரிகள் உள்ள பாட்டுதான்.
 "Paradise" we are living on, and the power within each of us, the power of "Love"! It lies in our hands whether this beautiful planet will be destroyed furthermore, or whether we will contribute to his preservation for the sake of our children's

இந்த அழகான பூவுலகை என்ன செய்யபோறோம்? அழிக்கப்போறோமா..... இல்லை நம் சந்ததிகளுக்கு விட்டுவைக்கப் போறோமா? த்சு த்சு த்சு த்சு.......

என்னமா எழுதிட்டேப்பா.........!!!! உங்களுக்காக ஒரு க்ளிப் கீழே போட்டுருக்கேன், பாருங்க. பெல்ஜியம் நாட்டுப் பாடகி டானா வின்னர் பாடுனது இது.


ஸ்டேடியம் வார்மிங்கில் கலந்துக்கப்போய்ச் சேர்ந்தோம். நிகழ்ச்சி பகல் 12 முதல் மாலை 5 வரை. குழந்தைகுட்டிகளுக்கு ஏராளமான கொண்டாட்டங்கள் இருக்கு, குடும்பத்தோடு வாங்கன்னு அழைப்பு. உண்மையைச் சொன்னா இந்த ஏரியா கொஞ்சம் சுமார். வீடுகள் எல்லாம் நகரின் மற்ற பகுதிகளைவிட மலிவு. உள்ளூர் சிறைச்சாலை இங்கேதான் இருந்துச்சு(!!) நிலநடுக்கத்தால் நகரின் மையமும் அதைச்சுற்றி இருந்த பகுதிகளும், முக்கியமா கிழக்குப்பகுதியும் வடகிழக்கும் இனி வசிக்க முடியாத நிலைக்கு மோசமாப் போயிட்டதால் அடிச்சது யோகம் இந்தப் பகுதிக்கு! இப்போ அங்கே முளைச்சுவரும் கட்டிடங்களையும் பழைய வீடுகள் எல்லாம் போய் புதுப்பொலிவோடு வந்துக்கிட்டு இருக்கும் வீடுகளையும் பார்க்கும்போது சட்ன்னு புரிஞ்சுபோகும்! எப்படி இருந்த நீ இப்படி அழகா ஆயிட்டேயே!!!!



பெரிய கார்பார்க் வசதிகளோடு அமைச்சுருக்கும் ஸ்டேடிய வளாகத்துக்குள்ளே நுழையும் வாசலில் இது ஸ்மோக் ஃப்ரீ ஏரியான்னு போட்டுருந்தாங்க. ரொம்ப நல்ல விஷயம். அங்கேயே ஒரு கூட்டம் என்னவோ எழுதிக்கொடுப்பதும் பதிலுக்கு ஒரு பொதி வாங்குவதுமா இருக்கு. அஞ்சு வயசுக்குட்பட்டவர்களுக்கும் அறுபத்தியஞ்சு வயசுக்கு மேற்பட்டவர்களுக்கும் டார்ச் லைட்டும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவும் தர்றாங்க(ளாம்) ரெண்டு கேட்டகிரியிலும் நமக்கு ச்சான்ஸே இல்லை:(


நாலு படி இறங்கி ஸ்டேண்டுக்குப் பின்பக்கமா இருக்கும் வழியில் போகணும். இடப்பக்கம் சிறுசுகளுக்கும் இளசுகளுக்கும் ஸ்கேட்டிங் போர்டுகள், ஷூக்கள் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஓடிஆடி முடிச்சுட்டுத் திருப்பிக் கொடுத்துடணும். பொழுதுபோக்குதான். வலப்புறம் முழுசும் பளபளன்னு மினுங்கும் கழிப்பறைக் கட்டிடங்கள் வரிசை. வெல் டன்.



திடலுக்குள் போக இவ்ளோ பெரிய க்யூ வரிசையான்னு ஒரு விநாடி அசந்தேன். பஞ்சு மிட்டாய் கொடுக்கறாங்களாம். போயிட்டுப்போகுது. திடலில் நாலுபக்கமும் இருக்கைகளோடு ஸ்டேண்டு. நமக்கு வலதும் இடதுமா மேற்கூரையுடன் அமர்க்களமா இருக்கு. நமக்கு முன்னும் பின்னும் மேற்கூரை இல்லாத மொட்டை. அதிலும் ஒரு பக்கம் பக்காவா நாற்காலிகள் போட்ட வசதி. எதிர்ப்பக்கம் வரிசையா பெஞ்சு. நாலுவரிசை உள்ள கேலரி. அதுக்கு பின்பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு கண்டெய்னர்கள்மேல் ஏற்றி நிக்கவச்ச பிரமாண்டமான ஸ்க்ரீன்.



விளையாட்டு நடக்கும்போது நடப்பதைக் காட்டுவாங்க. இப்போ 100 நாளில் கட்டி முடிச்ச இந்த ஸ்டேடியத்தை எப்படிக் கட்டுனாங்கன்னு படம்புடிச்சுக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. நல்ல கட்டுமானம். ஏகப்பட்ட ஸ்டீல் கம்பங்கள் வச்சுப் பாதுகாப்பாக் கட்டி இருக்காங்க. இங்கே போட்டுருக்கும் விளக்குகள் எல்லாம் டனேடின் என்ற ஊர்க்காரவுக கொடுத்த தானம். அவுங்க ஊர் ஸ்டேடியத்தை அப்க்ரேடு செஞ்சப்ப வேணாமுன்னு கழிச்சுக்கட்டுனதை நாங்க சந்தோஷமா வாங்கிக்கிட்டோம்.

லங்காஸ்டர் பார்க் ஸ்டேடியத்தில் ஸ்டாண்டுகளும் இருக்கைகள் இருக்கும் அமைப்புகளும் பழுதில்லாம இன்னும் ஜோராத்தான் இருக்குன்னாலும் விளையாடும் புல்வெளி நிலமெல்லாம் லிக்யூஃபேக்‌ஷன் என்ற காரணத்தால் புதைமணலா மாறிப்போச்சு. திடீர்திடீர்ன்னு நிலத்தடி நீர் கொப்புளிச்சு பொங்குது:(. அதுலே நடக்கவே பயமா இருக்குன்னா.... அப்புறம் எங்கே நின்னு பந்தடிப்பாங்க....... ப்ச்............
திடலின் புல்வெளியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குன்னு கம்ப்ரெஸ்ஸர் வச்சு காத்து அடிச்சு நிறைச்சு சறுக்குமரம், ஜம்ப்பிங் காஸல்ன்னு மூணு. இதுக்குத்தான் பெரிய வரிசை. புள்ளைங்க அதைப்பார்த்தே தரையில் குதிச்சுக்கிட்டுக் கிடக்குதுங்க.
 சின்னச்சின்ன விஷயங்களில், குழந்தைகளை ஆனந்தப்படுத்திடலாம்
 இல்லே!







ஏ எம் ஐக்காரங்க தண்ணீர்பந்தல் வச்சுருந்தாங்க. அரை லிட்டர்.
இந்தப்பக்கம் குதிரை வர்றதுக்கான கோட்டை வாசல். பழைய ஆடம்பரம் இல்லைதான். இடத்துக்குத் தக்கதா சின்ன வாசல். க்ரவுண்டுமே சின்னதாத்தான் இருக்கு. கோல் போஸ்ட் நட்டு அதுலே பிள்ளைகள் கிக் பயிற்சி செஞ்சு படிக்குதுங்க. காலரி ஸ்டேண்டுக்கும் இதுக்கும் நடுவில் இடைவெளி வழக்கமான அளவில் இல்லை விளையாடும்போது உதைச்சு அனுப்பும் பந்து கோல் போஸ்டைக் கடந்து பார்வையாளர் மேலே விழுந்துட்டா?

 ஹைய்யோ ,,,,கூல் அது ஃபன் என்று மகள் சொல்றாள்! இந்தியாவில் க்ரிக்கெட் பந்து ஒரு சின்னப்பொண் மேலே வந்து விழுந்து அடிபட்டுருச்சுன்னேன். . 'ஓ' என்றாள்.


ஸ்டில்ட் வாக்கர், ஒத்தைச்சக்கர சைக்கிளில் வேடிக்கை காட்டும் கோமாளி, ஸ்டில்ட் தேவதைன்னு சிலர்!

ஊருலே பாதிப்பேர் இன்னிக்கு இங்கேதான்! எங்களுக்கும் போக ஒரு இடம் வேணுமுல்லே?

Monday, May 07, 2012

கிடக்கறது கிடக்கட்டும் இளைஞனைத் தூக்கி மணையில் வை!

தோ............ குளிர்காலம் தெருமுனையில் நின்னு எட்டிப்பார்க்குது. ஊர் கிடக்கும் கிடப்பில் இளைஞர்களுக்கு வேற போக்கிடம் இல்லைன்னா.... ஆபத்துதான்! இங்கே முக்கிய மதம் என்ற லெவலுக்கு நாடே 'விளையாட்டு மதம்' பிடிச்சுக் கிடக்கு. கோடைகாலத்துக்கு க்ரிக்கெட் & குளிருக்கு ரக்பி. நாட்டின் எல்லா ஊர்களிலும் ரக்பி பார்க் ஒன்னு இல்லாமப் போனதா சரித்திரமே இல்லையாக்கும். எதாவது கப்பு கிப்பு ஜெயிச்சாலும் ஊருராக் கொண்டுபோய் காட்டிட்டுத்தான் மறுவேலையாக்கும்.


நாங்க இந்தூருக்கு வந்து சேர்ந்தப்ப லங்காஸ்டர் பார்க் என்ற நாமத்துடன் இருந்தது உள்ளூர் ஸ்டேடியம். இந்திய மக்கள் க்ரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்கலாம். இங்கிலாந்தில் மெழுகுவத்தி யாவாரம்  செஞ்சுக்கிட்டு இருந்த பெஞ்சமின் லங்காஸ்டர்,  இடத்தைப் பார்க்காமலேயே நியூஸிலாந்துலே ஒரு இடம் வாங்கிப் போட்டுக் கிட்டாத் தேவலைன்னு 150 பவுண்டு காசுகளை நியூஸிலாந்து கம்பெனிக்குக் கட்டுனார். இந்தக்கம்பெனி, உள்ளுர் பூமிபுத்திரர்களான மவொரிகளிடம் இருந்து ஒப்பந்தம் என்ற பெயரில் வாங்குன நிலங்களையெல்லாம் கூறுபோட்டுச் செமவிலைக்கு இங்கிலாந்தில் வித்துக்கிட்டு இருந்துச்சு.


 ஆமாம் போ...பெரிய நூத்தம்பது பவுண்டுன்னு யாரும் பல்லுமேலே நாக்குப்போட முடியாது. அந்தக் காலத்துலே அது பெரிய தொகை. அவுன்ஸ் தங்கம் அப்போ 18.93 டாலருக்கு கிடைச்சது. விவரம் சரியாச் சொல்லணுமுன்னா 1833 முதல் 1871 வரை இதே விலைதான். (ஹூம்.... அப்பவே ஒட்டியாணம் செஞ்சுக்காமப் போயிட்டேனே:(........  

 1872 லே தங்கம் விலை ஏறுச்சு! அநியாயமாஒரு செண்ட் ஏத்திட்டாங்கப்பா......!!! ஏத்திட்டாங்க. 18.94 !!!!!!    இந்தப்பதிவு எழுதி வெளியிடும் இத்தருணம் 1671.24 டாலர்கள்! (தங்கம் விலையை ஆராயப்புகுந்தால் அதுக்குன்னு தனிப்பதிவு போடணும். அம்மாந்தூரம் இப்பப்போகவேணாம். பின்னொருக்கில்.... பார்க்கலாம்) 

1850 வது வருசம் நாலு கப்பல்கள் புறப்பட்டு நியூஸிக்கு வந்து சேர்ந்துச்சு. மூணு மாசம் கழிச்சு அதே வருசம் டிசம்பர் 16க்கு மொதக்கப்பல் வந்து நின்னுச்சு. சர்வேயர்கள் நகரை எங்கே அமைக்கலாமுன்னு கணக்குப்போட்டுப் பார்த்து அவரவர் கட்டுன தொகைக்கு ஏற்ப நகர் எல்லைக்கு வெளியே பண்ணை அமைச்சுக்க இடம் ஒதுக்குனாங்க. அதே சமயம் நகர் எல்லைக்குள் வீடு கட்டிக்க, கால் ஏக்கர்ன்னு கொஞ்சம் இடமும் கொடுத்தாங்க. நம்ம பெஞ்சமின் லங்காஸ்டருக்கு நகருக்கு வெளியே கிடைச்சது அம்பது ஏக்கர். நல்ல அதிர்ஷ்டக்காரரா இருந்துருப்பார் போல!

கப்பல் நின்ன துறைமுக ஊரான லிட்டில்டன்னில் இருந்து நகருக்கு வரும் சாலையில் நகர எல்லையை ஒட்டியே இவ்ளோ இடம் கிடைச்சுப்போச்சு பாருங்க! பல்க் பையர் என்ற கணக்கில் இவருக்கு நகர எல்லைக்குள்ளே கால் கால் ஏக்கரா ரெண்டு வீட்டுக்கு இடங்கள் கிடைச்சது. ரெண்டு மனைகளிலும் வீட்டைக்கட்டிப்போட்டு ஒன்னு தன் குடுமபத்துக்குன்னு வச்சுக்கிட்டு இன்னொன்னை லீஸுக்கு விட்டு வருமானத்துக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டார் இந்த அதிர்ஷ்டக்காரர்.

அப்புறம் சில வருசங்களில்(1866) அவருடைய நிலத்துக்குப் பக்கத்துலே ரயில்பாதை வருதுன்னு கொஞ்சூண்டு இடத்தை அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாப் போச்சு. நஷ்ட ஈடா 198 பவுண்டு காசு கிடைச்சதாம்! 'குளிருக்கு இதமா வெய்யில் காய'ன்னு இங்கிலாந்துலே ஆரம்பிச்ச க்ரிக்கெட் விளையாட்டும் இவுங்க கூடவே இங்கே வந்துருந்துச்சு. அங்கங்கே பொது இடத்துலே விளையாடிக்கிட்டு இருந்தவங்க ஒரு க்ளப் மாதிரி ஆரம்பிச்சு தனியா ஒரு இடம் வாங்கி அதுலே விளையாடலாம். நிலம் வாங்கும் செலவை ஈடுகட்ட வேடிக்கை பார்க்க வரும் மக்கள்ஸிடம் கேட்(டு) வசூல் செய்யலாமுன்னு திட்டம். இடம் தேடுனப்ப வாகாக் கிடைச்சது பெஞ்சமின் லங்காஸ்டரின் இடம். அதுலே கிட்டத்தட்ட பதினொரு ஏக்கர் இதுக்குன்னு ஒதுக்கி அதை வித்துட்டார். எவ்வளவு காசுக்கு? 2841 பவுண்ட். இது நடந்தது 1880 வது வருசம். அதுக்குள்ளே நகரம் வளர்ந்து இந்த இடம் நகர எல்லைக்குள்ளே போயிருந்துச்சு! இந்த இடத்துக்கே லங்காஸ்டர் ப்ளொக் Lancaster block என்றும் பெயர் தானாவே ஏற்பட்டுப்போச்சு. முப்பதே வருசத்தில் எவ்வளோ லாபம் பாருங்க! அதிர்ஷ்டக்காரர் ஐயா இவர்!
 Lancaster Block in those days.


இந்த க்ரிக்கெட் க்ளப்புக்கு ஏது இவ்வளோ பணம் இதை வாங்கன்னு நினைச்சால்..... அப்பவே பணம் பண்ணிக்கத் தெரிஞ்ச விளையாட்டா இது மாறி இருந்துச்சு என்பதே நிஜம்:-) பப்ளிக் ஷேர் ஒன்னு பத்து பவுண்டு என்ற மேனிக்கு 450 ஷேர்களை வித்து 4500 பவுண்டு கையில் வச்சுருந்தாங்க. நிலத்துக்குக்கொடுத்தது போக மீதம் இருந்த பணத்தில் ஏழரை ஏக்கரில் புல் விதைச்சு நல்ல க்ரவுண்டு தயார் செஞ்சு Pபிட்ச் எல்லாம் ரோலர் போட்டு அருமையாச் செஞ்சுட்டாங்க. இந்த பிச்சுக்கு வெளியே பதினைஞ்சு அடி அகலத்தில் ஒரு ரன்னிங் ட்ராக் வேற! ஆகக்கூடி எல்லாவருக்கும் ஏதோ பயன்!

ஷேர் ஹோல்டர்ஸ் தவிர பொதுமக்களில் இந்த க்ளப்புக்கு வருசாவருசம் அங்கத்தினர் கட்டணமா ஆண்களுக்கு ஒரு பவுண்டு பத்து ஷில்லிங், பெண்களுக்கும், பதின்மவயதினருக்கும் பத்து ஷில்லிங், ஆறு பென்ஸ் என்று வசூலிச்சாங்க. அங்கத்தினரா இல்லாம ச்சும்மா விளையாட்டையும் போட்டிகளையும் பார்க்க வர்றவங்க கிட்டே டிக்கெட் போட்டுத் தனியா ஒரு கட்டணம். (இந்தப்பழக்கம் பிரிட்டிஷ் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் பரவி இருந்துச்சுல்லே?)


அடுத்த ரெண்டு வருசத்தில் (1882) ரக்பி விளையாட்டும் இந்த ஊருக்குள் வந்துருச்சு. க்ரிக்கெட் விளையாடும் இடத்திலேயே ரக்பி விளையாட்டையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. முன்னது கோடைகாலத்துக்குன்னா இது குளிர்காலத்துக்குன்னு பாகப்பிரிவினை:-) இதே வருசத்துலேயே பெஞ்சமின் லங்காஸ்டரின் நிலத்தின் (போனதெல்லாம் போக பாக்கி இருக்கும்) மதிப்பு ஏணிமேலே ஏறுவதுபோல விறுவிறுன்னு ஒரே ஏத்தமாகிப்போய் 11,775 பவுண்டாக ஆகி இருந்துச்சு. உண்மையான அதிர்ஷ்டக்காரர்தான் ஐயா இவர்!!!

 தன்னுடைய 86 வது வயசுலே(1887) பெஞ்சமின் சாமிகிட்டே போனப்ப இங்கே அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு 135,000 பவுண்டுகள்! அதுலே ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு எழுதிவச்சுட்டுத்தான் போயிருந்தார். நல்ல அதிர்ஷ்டக்காரர் ஐயா..... நல்ல அதிர்ஷ்டக்காரர்!
lancaster  Park


இந்த ஸ்டேடியம் லங்காஸ்டர் பார்க் Lancaster Park, என்ற பெயரில் எப்போதும் அவர் புகழைப்பாடி வந்தது. பணம் பெருசா... இல்லே  சரித்திரம் பெருசான்னு நடந்த போட்டியில் பணம் பாதாளம்வரை பாய்ந்துருச்சு ஒரு சமயம். ஸ்டேடியத்தை இன்னும் நல்லாக் கட்டிக்கலாமுன்னு எண்ணம் வந்ததும் ஜேடு என்ற கம்பெனி(Jade Software Corporation) நாங்க ஆதரவு தர்றோமுன்னு ஏகப்பட்ட பணம் செலவு செஞ்சு நவநாகரிக வசதிகளோடு கட்டி முடிச்சதும் நன்றிக்கடனா ஜேடு ஸ்டேடியம் (Jade Stadium)என்ற பெயர் மாற்றப்பட்டது 1998 முதல்.
jade Stadium

வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பதால் ஒன்பது வருசம் இருந்த பெயர்ப்பலகை 2007 இல் ஏ எம் ஐ பெயரை ஏந்திக் காட்சி கொடுத்ததும்(AMI Stadium) உண்மை!  இந்த ஏ எம் ஐ இன்ஷூரன்ஸ் கம்பெனி.   நஷ்டம் இல்லாம ஓடுன  யாவாரம்.  எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு நிலநடுக்கம் வரும்வரை! போன வருசம் 2011 ஃபிப்ரவரி 22 ஊரையே புரட்டிப் போட்டப்ப இதையும் விட்டுவைக்கலை:(
AMI Stadium  on 27/8/2011


 PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி மீதி, தொடரும்........

Wednesday, May 02, 2012

There is a dragon on the wall !!!

கண்களில் ஒரு மிரட்சியோடு எதிரில் இருக்கும் சுவரைப் பார்த்தபடியே கிசுகிசுப்பான குரலில் மகள் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அதற்குள் எங்கள் பேச்சைக் கவனித்துவிட்ட என் அண்ணன்,  'எங்கே எங்கே'  என்று பாய்ந்து வந்தார்.


அந்த ட்ராகனைக் காணோம்! அவள் கண் போன திசையில் குழல்விளக்கு மட்டும் கொட்டக் கொட்ட ஒளிர்ந்து கொண்டிருந்தது.  என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இருந்தேன். நாலரை வருசப் பேச்சு பாக்கி இருக்கேன்னு அதை முடிப்பதில் தீவிரமாக இருந்தது என் வாய்.

அதோ..... மறுபடி வந்துருக்குன்னு மகள் கை காட்டினதும்..... அட! இதுவா!!! மகளுக்கு அதனுடன் முதல் என்கவுண்ட்டர். (சம்பவம் நடந்து ஆச்சு 23 வருசம்!. இடம் சென்னை வீடு)  நியூஸியில் இல்லாதவைகளில் இதுவும் ஒன்னு. இதுக்குப்பெயர் 'பல்லி' என்று சொல்லி மகளுக்கு அறிமுகப்படுத்தி வச்சேன்:-)


 பூவுலகில் 5600 வகைகளுக்கு மேலேயே இருக்காம். ஒரு இனத்தில் இத்தனை வகைகளான்னு பிரமிப்புதான் வருது. ரெண்டு மூணு அங்குலத்தில் இருந்து பதினோரு அடிகள் நீளம்வரை வகைவகையா! உலகின் சின்னப் பல்லி 29 மில்லி(மீட்டர்)

உலகின் சின்னப்பல்லியும்
உலகின் பெரிய பல்லியும்

 நியூஸியில் வீட்டில் இருக்கும் வகைகள் இல்லையே தவிர Skink, Gecko என்ற வகைகள் உண்டு. அதுவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே!




 ஊரில் இருந்த மூணுவாரங்கள் மகளுக்கு இதைக் கவனிப்பதிலேயே பொழுது போச்சு. நம்மை வேற ஒன்னும் வாங்கித்தரச்சொல்லித் தொந்திரவு பண்ணலை. காஞ்சி வரதனைக் காணப்போயிருந்த சமயம் கோவிலில் தங்க வெள்ளிப் பல்லிகளைத் தொட்டு வருடிவர அவளுக்கு ஒரு ச்சான்ஸ் உண்டாக்கிக் கொடுத்தேன்.

இந்துமதத்தில் பல்லிக்கு ஒரு இ டம் கொடுத்துவச்சுருக்காங்க பாருங்க. பஞ்சாங்கத்தைப் பிரிச்சால் பல்லி விழும் பலன் உள்ள பக்கம் கட்டாயமா இருக்குல்லே! விழுந்தால் மட்டும் இல்லாம,  அது வாயைத் திறந்து  'சொன்னாக்கூட'  பலன் இருக்கு! மனிதர்கள் பேச்சை எல்லாம் காதைத் திறந்துவச்சுக் கவனிச்சுக்கிட்டே இருக்கும் பல்லி அப்பப்ப நம்ம பேச்சிலும் கலந்துக்கும். அது சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை! பல்லியே சொல்லிருச்சு பாருங்கன்னுவாங்க!!!!

 சண்டிகர் வீட்டுலே ஏராளமான ட்ராகன்கள். அறைக்கு ஒரு நாலைஞ்சுன்னு நின்னு முறைச்சுப் பார்க்கும். அறையில் உள்ள பல்லிகளை விரட்ட கடைகளில் ஒரு மருந்து கிடைச்சது. அதுலே சின்னதா அஞ்சு க்யூப்ஸ். பின்னாலே ஒட்டும் ஸ்டிக்கி டேப். அறையில் ட்யூப் லைட்டுக்குப் பக்கத்தில் ஒரு க்யூபை ஒட்டுனாப்போதும். பல்லி அறைக்கு வரவே வராதுன்னு போட்டுருந்துச்சு அந்த பாக்கெட்டிலே.    ஒட்டிவச்சேன். அன்று முதல் பல்லிகள் அதைத் தொடாமல் சுற்றிச் சுற்றிப்போக பழகிக்கிச்சுங்க.

புழுப்பூச்சிகளைப் பிடிச்சுத் தின்னு ஜீவிச்சுக்கும் என்று பல்லிகளைப்பற்றி எங்கோ வாசிச்ச காரணத்தால் அதுகளுக்கு சோறு போடலை நான்:)



காசியில் மட்டும் பல்லி ஒன்னும் சொல்லாது!!  பல்லி சொன்னாப் பலிக்கும் என்பதால் அங்கே 'மூச்'விடக்கூடாதுன்னு கடவுள் சொல்லி இருப்பார்! ஏற்கெனவே அங்கே கடைசி மூச்சைவிட ஒரு பெரிய கும்பலே காத்துக்கிடக்கும்போது இது வேற!

பல்லியை நாம் கொன்னுட்டாலோ இல்லை பல்லி நம்ம மேலே விழுந்துட்டாலோ நமக்கு தோஷம் ஆகிரும். தீர்க்கும் வழி? காஞ்சிக்குப்போகணும். (போறபோக்கிலே) பல்லி சாக்கிலே பட்டுப்பொடவை வாங்குனாலும் தோஷம் போகுமுன்னு கோபாலிடம் சொல்லணும்)

ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.

மேற்படி பாரா நம்ம கீதாவின் பதிவில் இருந்து சுட்டது. முழுப்பதிவும் இங்கே! நன்றி கீதா. 

 காஞ்சி கோவில் பல்லிகளின் புகழ் வடக்கே இமயமலைவரை பரவி இருக்குபோல. தனி மண்டபத்தின் விதானத்தில் கைக்கு எட்டாமல் உயரே இருக்கு. கலங்க வேணாம். ஏறி இறங்க ஏணிப்படிகள் எல்லாம் பக்காவா போட்டு வச்சுருக்காங்க. கோவிலுக்கு வரும் வட இந்தியப்பயணிகள் உள்ளே நுழையும்போதே 'சிப்கோலி கஹா(ங்) ஹை' ன்னுதான் கேக்கறாங்க. வரதனைப் பார்ப்பது ரெண்டாம்பட்சம்தான். பல்லிக்கு ஸ்ட்ரிக்ட் டைமிங் வேற! டிக்கெட் கூட வாங்கணும். வரதன் ஃப்ரீ சேவை சாதிப்பார். ஆனால் பல்லி?

 கோபால் ஒரு சமயம் பார்ஸிலோனா போனப்ப அங்கே இருக்கும் பல்லி பார்க்கில் Park Guell, இருந்து ஒரு பல்லி வாங்கியாந்தார். அதென்னமோ வாலில்லா பல்லியா இருக்கு!
பல்லிக்கு வால் அழகு இல்லையோ? ஆபத்து காலத்தில் வாலைக் கழட்டிவிட்டுப் போகும் குணம் வேற யாருக்கு இருக்காம்? பல்லி பல்லின்னு இருந்தப்ப பல்லியைப்பத்தி நம்ம அருண் நரசிம்மன் எழுதுனது ஆப்ட்டது. மனுசர் என்னமா பல்லியைப் பத்திச் சொல்லி சொல்லி ஸிக்ஸரா அடிச்சுத்தள்ளி இருக்கார் பாருங்க. ஹைய்யோ!!!  தலைப்பே  தூள்!!!!  நம்மாலே எசப்பாட்டோ எதிராட்டமோ ஆடமுடியாது என்பதால் அவரை இங்கே பார்த்து வாசியுங்கோ! ரொம்ப விவரம்!!!! 

ஏன் பல்லி கொன்றீரய்யா

இப்படியாக இருந்த காலத்துலே சமீபத்தில் ஒரு நாள் நம்மூர் சந்தையில் பித்தளைப் பல்லி ஒன்னு கண்ணில் 'விழுந்துச்சு'! வீட்டுக்கு ஒரு செல்லமா இருந்துட்டுப்போகட்டும். அப்பப்ப நம்ம சொல்லுக்கு எசச்சொல் சொல்லவும் வேண்டித்த்தானே இருக்குன்னு வாங்கியாந்தேன். அநேகமா இந்த நகரின் ஒரே பல்லி இதுவாத்தான் இருக்கணும்.
 சாப்பாட்டுலே விழுந்தால் விஷமாம். ஆனால் நான் பயப்படாம அடுக்களையில்தான் (மாட்டி) வச்சுருக்கேன்.

சொல்லமறந்துட்டேனே..... இந்த வருச தினக் காலண்டரில் என் ராசிக்கு எப்பப் பார்த்தாலும் 'பயம்' னு போட்டுருக்கேன்னு இன்னிக்கு பயத்தோட தேதியைக் கிளிச்சால்..... அப்பாடா.... பயம்ன்னு போடலை. அப்ப?  'அச்சம்' ' ன்னு போட்டுருக்கு! 

இனி யாருக்காவது பல்லி தோஷமுன்னா நம்ம வீட்டுக்கு வந்து அதைத் தொட்டு வருடி தோஷத்தைப் போக்கிக்கலாம். டிக்கெட் புக் இன்னும் அச்சடிக்கக் கொடுக்கலையாக்கும் கேட்டோ!