Bபர்கிட் ரோடைத் தாண்டி நிக்குது வால் பகுதி. நாம் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டே ஆட்டோவில் போறோம். வெங்கடநாராயணா சாலை திரும்பி நேராப் போகும்போது சவுக்கு கட்டைகள் வச்சுக் கட்டுன வரிசைக்குள் மனிதர்கள். வருசப்பிறப்புக்குப் பெருமாளின் பார்வைக்காக நிக்கறாங்க. நேத்து இரவு முழுசும் கோவிலை மூடவே இல்லையாம்.
நமக்கு சனிக்கிழமைப் பெருமாள்தான் எப்பவும் என்றபடியால் வேற எங்கே பார்த்தாலும் சரின்னு சிவா விஷ்ணு கோவிலுக்குப் போய்கிட்டு இருக்கோம். மஹாலக்ஷ்மி தெரு உஸ்மான் சாலை சந்திப்பில் இறங்கி சாலையைக் கடந்தால் கோவில். மணி பத்தாகப் போகுது. ரெண்டு முழம் 'துளசி'யோடு பெருமாளை சேவிச்சாச்சு. தொட்டடுத்த சந்நிதியில் தாயார். எதிரில் தனிச்சந்நிதியில் ஹனுமன். அடுத்து ஸ்ரீ ராமர் அண்ட் கோ. இங்கேயும் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகம்தான். ஆனாலும் தரிசனம் அஞ்சு நிமிசத்தில் ஆச்சு. பெருமாளுக்கு இடப்புறத்தில் இருக்கும் இடத்தில் யாக குண்டமும் ஆண்டாள் படமும்தான். சின்னதாகவேனும் ஆண்டாளுக்கு ஒரு சந்நிதி கட்டி இருக்கலாமோ? . தனியா வச்சு அடைக்காமல் திறந்த வெளியில் எல்லோரையும் பார்த்தபடி இருப்பதுகூட ஒருவேளை நல்லதாப்போச்சோ?
போனமுறை பார்த்தப்ப, கோவிலில் தரை எல்லாம் பெயர்த்து பளிங்குக்கல் போடும் வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரங்கள் புது வர்ணம் அடிச்சு ரொம்ப நல்லா இருக்கு.
ஆண்டாள் இருக்குமிடத்தில் இடப்புறமா முருகனுக்குத் தனிச்சந்நிதி. அப்புறம் அப்பா அம்மாவுக்குத் தனித்தனியா சந்நிதிகள். கடந்து போனால் நவகிரகம். தெருவைப் பார்த்த மாதிரி புள்ளையார் சந்நிதி. நவகிரகத்துக்கு அந்தப் பக்கம் காசி விஸ்வநாதர். விஷ்ணுவுக்கு ஒன்னு, சிவனுக்கு ஒன்னு புள்ளையாருக்கு ஒன்னுன்னு தெருவைப் பார்த்தமாதிரி மூணு வாசல்களும் மூணு சின்னக் கோபுரங்களுமா இருக்கு இந்தக் கோவில். இங்கேயும் ஸ்ரீநிவாசப்பெருமாள்தான் நின்ற கோலம்.. தரிசனம் முடிஞ்சதும் கோபாலுக்கு ஒரு வேஷ்டி வாங்கித்தரலாமேன்னு (புது வருசத்துக்கு ஒரு புதுத்துணி இருக்கட்டுமே) பாண்டி பஸார் ராம்ராஜ் ஷோ ரூம் போனோம்.அதிகாலை பத்தரை மணிக்கு வாசலில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க பக்கத்துக் கடையில்.. ரங்கோலி. கடைக்குள்ளே போனால் ஷர்ட் எல்லாம் மாடியில் இருக்குன்னதும் வேட்டியை விட்டுட்டு சட்டைக்குத் தாவினோம். நல்ல பெரிய கடைதான். ரெண்டரை வருசமா இங்கே இருக்காமே! நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்:( மூணு ஷர்ட் (அதுலே ஒன்னு பட்டு) எனக்கு ஒரு நைட்டி வாங்கியாச்சு. பெண்களுக்கான உடைகள் செக்ஷன், சின்னதா ஒரு மூலையில்!
வெளியே வந்தால் கோலம் அநேகமா முடியும் நிலையில். அழகா இருக்குன்னு பாராட்டிட்டு பக்கத்துலே இருக்கும் நரசூஸ் போய் காப்பிப்பொடி வாங்கிக்கிட்டேன். ஒரு மூணு மாசம் தாங்கும். இப்ப நரசூஸ் இன்ஸ்டண்ட் காஃபி வேற போடறாங்க. அதுலேயும் சின்னப் பாக்கெட்டா ( 50 கிராம்) வெவ்வேற சிக்கிரி அளவில். 30% கூட இருக்கு. ரொம்ப மோசம்:(
உன் ஷாப்பிங் அவ்ளோதானே? இனிமேல் வாங்க ஒன்னும் இல்லைதானே? இப்படியே பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டே இருந்தார் கோபால். யாருக்குத் தெரியும்? திடீர்னு கண்ணுலே பட்டா வாங்கிக்கணும். அது என்னன்னு எனக்கே தெரியாது. இன்ஸ்டண்ட் பதில் கொடுக்க நமக்குத் தெரியாதா:-))))சரியா ஒரு மணிக்குச் சாப்பாடு. எங்கே? அதே ஞானாம்பிகா! வாணி மஹால். இனிப்புக்கு ரஸகுல்லா. மெனு இங்கே படத்தில்.
சாப்பாட்டை முடிச்சுட்டு இந்த ஆண்டுக்கான முதல் பதிவர் சந்திப்பை பதிவர் வல்லி சிம்ஹன் வீட்டில் நடத்திட்டு, நம்ம கபாலியைக் கண்டுக்கலாமேன்னு போனால்........எள் போட்டால் எண்ணெய் விழுமுன்னு சொல்வாங்க பாருங்க அப்படி ஒரு கூட்டம். நெரிசல். தாங்காதுன்னு அப்படியே ஜகா வாங்கிக்கினோம்.
ஆறு மணிக்கு துயில் வெளியீடு. சரியான நேரத்துக்குக் கட்டிடத்தின் உள்ளே நுழைஞ்சால் , முன்னால் டாக்டர் ருத்ரன். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு 'புத்தக வெளியீடு எங்கே'ன்னு கேட்டவரிடம் மாடின்னு கைகாமிச்சு மேலே போனால் ரசிகர்கள் கூட்டத்துடன் எஸ்.ரா. பேசிக்கிட்டு இருக்கார். ரசிகையின் வணக்கம் ஒன்னு. ரெண்டு க்ளிக்ஸ்.கொஞ்ச நேரத்துலே பரபரன்னு ஹால் நிறைஞ்சுருச்சு. மேடையிலும் நல்ல கூட்டம். நம்ம கிருஷ்ணப்பிரபு வந்து கண்டுக்கிட்டுப் போனார். கவிதாயினி மதுமிதா வந்து பக்கத்துலே உக்கார்ந்தாங்க. வெளியீடு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை. துயிலின் 'முதல்' பிரதியை இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். அவர் பேச்சு கச்சிதமா இருந்துச்சு. நாவலுக்கு அறிமுக உரையாக சித்ரா ரொம்ப நல்லாப் பேசுனாங்க.
சுத்துமுத்தும் பார்வையை ஓட்டிக்கிட்டு இருந்த கோபால், ஒரு பொன்மொழியைக் கவனிச்சுப் பார்த்துட்டு எனக்கும் காமிச்சார். அட!!!!!!!!!!!!!!!!!!!!!
விழாவை சில பகுதிகளாப் பிரிச்சு நிகழ்ச்சிகளைத் தொகுத்து இருந்தாங்க. இயக்குனர்கள் ஒரு ஏழெட்டுப்பேர் 'பேசி' முடிச்சதும் ஈரோடுலே புத்தகக் கண்காட்சி அமைக்கும் பொறுப்பாளரா இருக்கும் குணசேகரன் பேசி 'முடிச்சதும்' அடுத்த பகுதிக்குச் சின்ன இடைவெளி. நமக்கு நேரமாயிருச்சுன்னு கிளம்பிட்டோம்.
நம்ம பாரதி மணி ஐயாவுடன் நாலு வார்த்தை. எப்ப வந்தீங்கன்னார். விடியக் காலையில் கிளம்பறேன்னேன்.தெரிஞ்ச முகங்களா நம்ம இவுங்களுக்கு, ஒரு Hi & bye.
விழாவின் மற்ற விவரங்களை 'ச்சும்மா' நம்ம கார்த்திக்கின் பதிவில் இருந்து இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.
எனக்குக் கடைசிவரை இருந்து எஸ்ரா பேச்சைக் கேக்க ஆசைதான். ஆனால் காலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். மறுநாள் நீஈஈஈஈண்ட பகலாக இருக்கப்போகுதேன்னு ............
அரைத்தூக்கத்தோடு குளிச்சு முடிச்சு ரெடியாகும்போது ஃப்ளைட் கேன்ஸலாயிருச்சுன்னார் கோபால். சென்னை விமானநிலையப் பக்கத்தில் போட்டிருக்காம். தொலை பேசலாமுன்னா யாராவது ஃபோனை எடுத்தால்தானே? கிங்ஃபிஷருக்கு போன் அடிச்சா......... இல்லையே சரியான நேரத்துக்குக் கிளம்புதுன்றாங்க. மறுபடி சென்னை விமானநிலையத்தை வலையில் பார்த்தால்............. கேன்சல்டு.. மறுபடி கிங் ஃபிஷரைக் கேட்டால் நேத்து அந்த ஃப்ளைட் கேன்ஸலாச்சுன்றாங்க. நேத்து விவரம் அப்படியே கிடக்கு. இதுபோல முக்கிய விஷயத்தை உடனுக்குடன் அப்டேட் பண்ண வேணாமா? இதை நம்பி தூங்கப்போயிருந்தா என்ன கதி?
அஞ்சு மணிக்கு வண்டி வந்துருச்சு. லோடஸ்ஸில் கணக்கை செட்டில் செஞ்சுட்டு விமானநிலையம் போய்ச் சேர்ந்து அங்கேயே ஒரு காஃபி (யக்) குடிச்சுட்டு செக் இன் பண்ணி உள்ளே போனால் ........... கேபின்பேக் லே இருந்த பருப்புப் பொடி துரோகம் செஞ்சு புளிக் காய்ச்சலைக் காட்டிக்கொடுத்துருச்சு. தூக்கி எல்லாம் எறிய முடியாதுன்னு அந்தப் பெட்டியையும் திரும்பிக் கொண்டுபோய் 'உள்ளே' அனுப்பிட்டு வந்தார்.டெல்லி வந்து சேர்ந்து அஞ்சு மணி நேரம் தேவுடு காத்து, நாலரை மணி சண்டிகர் ஃப்ளைட்டில் ஏறி வீடு வந்தப்ப மணி ஆறு. டெல்லி விமான நிலையம் எங்கே பார்த்தாலும் அபிநய முத்திரைகளோடு (ராரா.... ) அலங்காரமாத்தான் இருக்கு.
உள்ளே அசப்பில் பார்த்தால் கொஞ்சம் சிங்கை விமானநிலையத்தின் சாயல். நிறைய ட்ராவலேட்டர்ஸ் போட்டு வச்சுருக்காங்க. கிறிஸ்மஸ் & பனிமனிதர்கள் பொம்மை அலங்காரம். எல்லாம் ஓக்கே. கார்பெட்டின் தரம்தான் சரியா இல்லைன்னு கேட் கிட்டே நம்ம பக்கத்துலே உக்கார்ந்துருந்த கொரியன்களுக்கு ஒரே கவலை. தொட்டுத் தொட்டுப் பார்த்து மாய்ஞ்சு போயிட்டாங்க.
அடுத்தமுறை புதுப்பிக்கும்போது நல்லது கிடைக்கட்டுமுன்னு வேண்டிக்கலாமா?
பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!
Wednesday, February 02, 2011
கேபின் பேகில் புளிக்காய்ச்சல் வேண்டாமே ப்ளீஸ்:-)))))
Posted by
துளசி கோபால்
at
2/02/2011 07:32:00 PM
40
comments
Labels: அனுபவம் Chennai Delhi எஸ்.ரா.
Monday, January 31, 2011
(ஒரே கேக்குலே) நாற்பெரும் விழா!
முதல்லே பருப்பும் நெய்யும். அப்புறம் ஒரு சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம் ஊறுகாய்ன்னு ரொம்ப சிம்பிளா வீட்டுச்சாப்பாடு ருசியில் அதிகம் காரமில்லாம வயித்துக்கு இதமா சாப்பாடு! எல்லாம் ஞானாம்பிகா கேட்டரர்ஸ்தான். ரெண்டு நாளைக்கு முன்னால் பகல்நேரக் கச்சேரியும் மாலை எதோ நாடகமுன்னு சொன்னாங்களே அதெல்லாம் என்னன்னு கண்டுக்கலாமுன்னு வாணி மஹால் வந்தா...........நமக்கு அவ்வளவா சுவாரசியமில்லாத நிகழ்ச்சி போய்க்கிட்டு இருக்கு. கீழே இருக்கும் ஹால் காலி. வாசலுக்குப் பக்கத்தில் இருந்தவங்ககிட்டே என்ன நிகழ்ச்சி அடுத்துன்னா............... 'நாங்க சாப்பிட வந்துருக்கோமு'ன்னு சொன்னாங்க. "இங்கெயா? சாப்ட்டாச்சா?"
"இனிமேத்தான். சில ஃப்ரெண்ட்ஸ் வரவுக்குக் காத்துருக்கோம். "
மனசுலே குறிச்சு வச்சுக்கிட்டதை இன்னிக்கு வெளியே எடுத்தேன். வாங்கி வந்த புத்த்கங்களையெல்லாம் பெட்டியில் அடுக்கிட்டு வாணிமஹாலுக்குக் கிளம்பினோம். மணி பனிரெண்டேகால்தான். அவ்வளவா பசி இல்லை. ஆனாலும் கேண்டீன் பக்கம் எட்டிப்பார்த்தோம். மதியச் சாப்பாட்டுக்காக டைனிங் ஹால் மேசைகளை மாத்தி மூணு வரிசையா பந்தி ஏற்பாடு. பகல் மூணுவரை சாப்பாடு இருக்குமாம். பேசாம ஒரு காஃபியைக் குடிச்சுட்டு ஒருமணி கச்சேரியைக் கேட்டுட்டு வந்து பகல் சாப்பாட்டை ஒரு கை பார்க்கலாமுன்னு ஐடியா வந்துச்சு.மாடிப்படி அருகில் பச்சைச் சட்டை இளைஞர் தோளில் மிருதங்க பையுடன் நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு மணிக் கச்சேரிக்கான்னேன். ஆமாம்ன்னார். எங்கேயோ பார்த்த நினைவு...............
ஏஸி ஜாலில் ஈ காக்காய் இல்லை. நிம்மதியா உக்கார்ந்துக்கிட்டுக் குட்டித்தூக்கம் போடலாம். அழகான ராமர் படம் ஒன்னு மாட்டிவச்சுருக்காங்க. ஓபுல்ரெட்டிகாருவின் படமும் தொங்குது.
ஒரு மணிக்குக் கால்மணி இருக்கும்போது சரசரன்னு சத்தம். கிடுகிடுன்னு நாலைஞ்சு பேர் அரங்கத்தில் நுழைஞ்சாங்க. மேடைக்குப் போனாங்க. மைக் செட் பண்ணுவதும் ஸ்ருதி செக் பண்ணுவதுமா பரபரன்னு ஆரம்பிச்சு......... 'டாண்' னு ஒரு மணிக்குக் கச்சேரி ஆரம்பிச்சது.எண்ணி மூணே பேர். சுஷ்மா சோமசேகரன்(சிங்கை) பாட்டு, ஸ்மிதா கிருஷ்ணன்(அமெரிக்கா) வயலின். குரு பரத்வாஜ் (உள்ளூர்) மிருதங்கம் (காரைக்குடி மணியின் சிஷ்யர்) எல்லாம் அண்டர் 23 டீம். அதுவே கண்ணுக்குக் குளுமையா இருந்துச்சு.
சுஷ்மாவின் குரல் வளம் அருமை. 'நம் கணபதே நமோ நமோ'ன்னு ஆரம்பிச்சதுலேயே நம்மைக் கட்டிப்போடப் போறாங்கன்னு புரிஞ்சுபோச்சு. சங்கரி, அம்பா, ஷ்யாமளே, சந்த்ரமௌலி, சாவித்ரி, பஞ்சஷாந்தி ஸ்வரூபிணி, பாண்ட்யகுமாரின்னு படபடன்னு அம்பாள் பெயர்களே பாட்டுமுழுசும் சுத்திச்சுத்தி வருது. யார் எழுதுனாங்களோ?
இந்த இசைக்கச்சேரிகளில் எப்பவும் எனக்கொரு சின்னக் குறை இருக்கும். என்ன பாட்டு, ராகம், தாளம்னு ஒரு வரி பாட்டின் ஆரம்பத்துலே சொல்லிட்டா நல்லா இருக்குமே................. அனாவஸியமா அது என்ன ராகமுன்னு மண்டையைக் குடைஞ்சுக்கிட்டு பாட்டை அப்போ அனுபவிக்காமல் கோட்டை விடுவதில் இருந்து நாம் தப்பிக்கலாமேன்னுதான்....................... இதே போல நிகழ்ச்சி முடிஞ்ச வினாடியே திரை போட்டுட்டு அதுக்குப்பிறகு உள்ளே சன்மானம் கொடுப்பதையும் கொஞ்சம் மாத்திக்கலாம். திரையை ஒரு வினாடி மறுபடித் திறந்து ரசிகர்கள் முன்னிலையில் அந்தக் கவரைக் கொடுக்கப்படாதோ? நாமும் கைதட்டி ஊக்கப்படுத்தலாமே..... அது ஒருவேளை வெறுங்கவராக இருந்தாலுமே!
வயலின் ஸ்மிதா நல்லாதான் வாசிச்சாங்கன்னாலும் விளையாட்டுப் புள்ளையா வயலினை ரெண்டு முறை கைநழுவ விட்டுட்டாங்க. oops...........
முதல் கச்சேரியா இருக்கலாம். இசைவிழாவின் சீரியஸ்னஸ் புரிபடலை போல!
குரு பரத்வாஜ் மேடை அனுபவம் நிறைய இருக்குன்னு வாசிப்புலேயே காமிச்சார். (இப்ப நினைவுக்கு வந்துருச்சு. போன வருசம் பாரதிய வித்யாபவனில் இவர் வாசிப்பைக் கேட்டுருக்கேன்). தாயே த்ரிபுர சுந்தரி உமா மஹேஸ்வரி, இதி ஜென்மமிதியா ஓ ராமா (தியாகராஜர். முதல்முறையாக் கேட்கறேன்) படிப்படியா நம்மை உயர்த்தும் படி பதினெட்டாம் படி (சீஸன் அனுசரிச்சு) இப்படிப் படபடன்னு நாலைஞ்சு பாட்டு, 20 நிமிசத்துக்கு ஒரு ராக ஆலாபனைன்னு ஒரு மணி நேரத்துலே கச்சிதமா இந்த ஒருமணிக் கச்சேரி முடிஞ்சது. கீழே போய் சாப்பிடப்போனோம். முதல் பாராவைப் படிச்சீங்கதானே?
ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம் உபசரிப்பு. என்னமோ அவுங்க வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்கோமுன்னு நம்மை நினைக்க வச்சுடறாங்க. நான் வெறும் பருப்பு சாதம் மட்டுமேன்னதுலே பரிமாறுனவர் இது வேணாமா, அது வேணாமான்னு கேட்டே பரிதவிச்சுப் போயிட்டார். மறுநாள் புத்தாண்டை முன்னிட்டு பெரிய விருந்தே நடக்கப்போகுது. மெனுவைக்கூட வெளியில் எழுதிப்போட்டாச்சு. 200 ரூ மதிப்புள்ள உணவு வெறும் 120தான்னு வேற காதில் ஓதினார். இருக்கட்டும். இன்னிக்கு சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்கிட்டால் நாளை பார்க்கலாம்.
மூணு மணிக்கு ஒரு காத்திருப்பு. மூணரைக்கு சீனா ஐயாவும் அவர் மனைவி செல்வியும் வந்தாங்க. அடுத்த சில நொடிகளில் கவிதாயினி மதுமிதாவும் அவுங்க கணவரும் வந்தாங்க. இன்னும் சில தோழிகளுக்கும் சொல்லி வச்சுருந்தேன். சீனா ஐயாவைச் சந்திக்க வாங்கன்னு. போதிய அவகாசம் கொடுக்காமத் திடீர்னு அழைச்சதால் அவுங்களாலே வரமுடியலையாம்
நேத்து நீங்க செல்லில் கூப்பிட்டப்ப, மக்கள் வரிப்பணத்தில் உண்டாக்கிய 'கலைஞரின் செம்மொழி பூங்கா' வில் இருந்தேன்னு சீனாவிடம் சொன்னால்......... 'அட! நானும் அங்கே இருந்துதான் கூப்பிட்டேன்'றார். அட ராமா............. அப்புறம் பதிவுலகம், பதிவர்கள்ன்னு கொஞ்சம் பேச்சு போனது. தருமியை செல்லில் கூப்பிட்டார். நாங்களும் அவரோடு நாலு வார்த்தைகள் பேசுனோம். நாலு பதிவர்களும் ஒரு வாசகரும், ஒரு ஆதரவாளருமா பதிவர் (குடும்ப) சந்திப்பு ஜேஜேன்னு களை கட்டிருச்சு:-)சீனாவும் செல்வியும் அருமையா ஒரு கேக் கொண்டு வந்துருந்தாங்க. கூடவே பழங்களும். அன்னிக்கு அவுங்க மகளின் பிறந்தநாள். சரியா வருசக் கடையில்!!! மதுமிதாவும் தீனிகளோடு ஆஜர். நாமும் ஏற்கெனவே வாங்கி வச்சுருந்த இனிப்புகளுடன் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து காஃபி வரவழைச்சுட்டோம். பிறகு? பார்ட்டிதான்!
நம்ம சீனா ஐயா ஒரு 12 நாளுக்கு முன்னால்தான் மணி விழா கொண்டாடி இருந்தார். நமக்குத்தான் போய்க் கலந்துக்க முடியலை. அதனால் இப்போ அவரைக்கொண்டே கேக் வெட்டியாச்சு. கோபால் சொல்றார் 'மணியைப் பாரு'ன்னு! அப்போ மணி சரியா நாலரை. எங்க நியூஸிக் கணக்குப்படி அங்கே இரவு 12. புது வருசம் பொறக்குது:-)
ஆஹா.... இப்படி நாற்பெரும் விழா! டேட் லைனில் நியூஸி இருப்பதால் எப்பவும் போல உலகிலேயே புதுவருசத்தைக் கொண்டாடுன முதல் ஆட்களா நாங்க:-)))))))))))) (எங்கே இருந்தாலும் விட்டுறமாட்டொம்லெ)ஒரு ஆறுமணி போல கிளம்பிட்டாங்க. நாங்களும் ஒரு ஆட்டோ பிடிச்சு ம்யூஸிக் அகெடமி போனோம். புத்தாண்டைக் கொண்டாட சென்னை ரெடியா இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் மின்விளக்கு அலங்காரங்கள். இந்த முறை ஆட்டோக்காரர் ரவி நியாயமான தொகையாக் கேட்டார். கழுத்தில் மாலையைப் பார்த்து முதலில் கொஞ்சம் தயங்குனேன். பேச்சுக்கொடுத்ததில் அது 'துளசி' மாலையாம். சின்னவயசு முதலே போட்டுருக்காராம். கல்லூரி நாட்களிலும் கழட்டவே இல்லையாம். பட்டதாரி. எல்ஜியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். அந்த வேலை போயிருச்சாம். இப்போ ஆட்டோ ஓட்டறார். மாலை 7 மணிக்கு அப்புறம் வேலை செய்யமாட்டாராம். நேரா வீடு. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். மனைவிக்கு சன் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவில் பணி. ஆறு வயசில் ஒரு பெண் குழந்தை. பெயர் ஜனனி ( எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்) தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்பு. மாசம் 3500 செலவாகுதாம் கல்விக்கு. இயல்பா பேசிக்கிட்டே அகெடமி உள்ளே கொண்டுபோய் இறக்கினார்.
வருசக் கடைசியிலாவது ஒரு நல்ல ஆட்டோக்காரரைச் சந்திச்சதுலே பரம திருப்தி எனக்கு. புதுவருச வாழ்த்தைச் சொல்லிட்டு டிக்கெட் எடுக்கப் போனோம். இன்னும் முக்கால் மணியில் உஸ்தாத் ஆலம் கான் சரோட் வாசிக்கிறார். இப்போ உள்ளே காயத்ரி க்ரீஷ் பாட்டு நடந்துக்கிட்டு இருக்கு. அதையும் போய்க் கேளுங்கன்னு தாராள மனசோடு சொன்னார் கவுண்ட்டரில் இருந்தவர்.
பால்கனிக்குப்போய்ச் சேர்ந்தோம். (இங்கே ரெண்டு பால்கனிஸ் இருப்பதை இன்னிக்குத்தான் கவனிச்சேன்) 'தனி' நடந்துக்கிட்டு இருக்கு. பிடிச்ச ஐட்டம் என்பதால் சுவாரசியமாப் போச்சு.
ஏழு மணிக்கு உஸ்தாத் ஆலம் கான் ஆரம்பிச்சார். இவர் சரோட் புகழ் உஸ்தாத் அலி அக்பர் கான் அவர்களின் மகன். அதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். இவரோட தம்பி தம்பூரா. தப்லாவுக்கு மிட்டாய்க்கலர் ஜிப்பாவுடன், சுபாங்கர் பானர்ஜி.
ரெண்டு மணி நேர நிகழ்ச்சி. அதுலே ஒன்னரை மணி நேரம் சரோடுக்கு ஸ்ருதி சேர்க்கறதும், மைக்கை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றதும்,. அப்பப்ப தம்பியின் தம்புராவை வாங்கி அதுக்கு ஸ்ருதி சரியாக்குறதுமா குனிஞ்ச தலை நிமிராம உஸ்தாத் ஆலம்கான் பார்த்துக்கிட்டார். 'விறுவிறுன்னு வாசிக்கப்போறார்............ நாம் வா வா சொல்லத் தொண்டையை ரெடியா வச்சுக்கணும்'னு திட்டத்தோடு வந்த எங்களுக்கு.............. எப்படி இருந்து இருக்கும்னு உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்..........
ஹிந்துஸ்தானி சங்கீத ரசிகர்களா வந்துருந்த அத்தனைபேரும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு வெளியே வந்தோம். உண்மையைச் சொன்னால் கூட்டமே இல்லை. அதிலும் பாதிப்பேர் தாங்கமுடியாம பாதியிலேயே எழுந்து போயிட்டாங்க. இதோ வாசிக்கப்போறார் இதோ வாசிக்கப்போறாருன்னு கடைசிவரை அஞ்சாநெஞ்சர்களா இருந்தவங்க கொஞ்சம்பேர்கள்தான். போகட்டும் 2010 வருச நட்டக் கணக்குலே............... எழுதிறணும்..
Posted by
துளசி கோபால்
at
1/31/2011 05:56:00 PM
20
comments
Labels: அனுபவம் chennai Music fesival
Friday, January 28, 2011
(பூம்பூம்)மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்.
இருக்குன்னு தெரியும். ஆனா எட்டுமாசமா போக வாய்க்காதது இந்த மாட்டுப் பொங்கலுக்கு வாய்ச்சது. திடீர்னு செஞ்ச ஏற்பாடுன்னு அழைப்பிதழ் நொடியில் வந்தது டெக்ஸ்ட் மெஸேஜ் மூலமா. இடத்தை உரப்பிக்கணுமுன்னா கார்த்திக் ரெஸ்ட்டாரண்டுலே முன்பதிவு செஞ்சுக்குங்கன்னாங்க. தமிழர்களுக்கான சேதி முதல் சோறு வரை ஒருங்கிணைப்பாளரா இருப்பது 'கார்த்திக்'தான். முதல்நாள் போய் பதிவு செஞ்சு ஸீட்டுக்கான சீட்டு வாங்கியாச்சு.
மனிதப் பொங்கலாச்சேன்னு நேத்து மாலை சண்டிகர் முருகனைப் பார்க்கப்போனால் கோவில் வாசலில் சாம்பலும் கரியுமா ஏதோ அடுப்பு வச்ச அடையாளம். காலையில் வாசலில் பொங்கல் வச்சாங்களாம். அட! இதைப்பத்தி ஏன் முன்னாலேயே சொல்லலைன்னு நம்ம குருக்கள் கிட்டே கேட்டால்...... 'அவுங்க வந்து பொங்கல் வச்சாங்க'ன்னார். இந்த 'அவுங்க' என்பது நம்ம தமிழ் ஆட்களைத்தான். ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள் இங்கே இருக்காங்க. அவுங்க யாரும் கோவில்பக்கம் வராதது நமக்கு ரொம்பவே மனக்குறைதான். இன்னிக்குப் பொங்கல் வைக்கவாவது வந்தாங்களேன்னு கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்துச்சு.
இவுங்க எப்படி இங்கே வந்தாங்கன்னா............. காமராஜர்தான் காரணம்.
இங்கே சண்டிகர் நகர நிர்மாணத்திற்கு (1954) வேலை செய்ய, காமராஜர் ஆட்சி காலத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ,வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தப்பியவர்கள், இப்போ இங்கே சண்டிகர் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நல்ல மாதச் சம்பளத்துடன் வாழ்கிறார்கள். மூணுதலைமுறையா ஆகி இருக்கு. குடும்பங்கள் பெருகி இன்னிக்கு ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள். நகரின் மொத்த ஜனத்தொகையில் ஏழு சதமானத்துக்கும் மேல்.
மேலே உள்ள பத்தி நம்ம தளத்தில் போனவருசம் எழுதுனது. இன்னும் கொஞ்சம் விவரம் வேணுமுன்னா இங்கே பாருங்க.
பத்தரைக்கு விழா ஆரம்பம். சரியா பதினோருமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். பாரதி பவன். செக்டர் 30B. கட்டிடத்தின் முன்வாசலில் போட்டிருக்கும் பெயர்ப்பலகையில் முன்னே நிற்பது தமிழ்! சண்டிகர் தமிழ் மன்றம். ஆஹா..............ஒரு பத்துப்பேர் நமக்கும் வேணுமுல்லே? அவுங்க படங்கள் வரிசையா நிலைவாசல் மேலே. அண்ணாதுரை, காமராசர், வ.உ.சி, வள்ளுவர், காந்தி, பாரதி, நேரு, சுபாஷ் சந்த்ரபோஸ், இந்திரா அம்மையார், பகத் சிங். அகலமான ரெட்டைக் கதவுகளோடு வாசல். பதினோராவது படமாக வாசல் நிலையில் முருகனின் குடும்பப் படம். உள்ளே நுழைஞ்சால் பத்தடி அகலத்தில் ஹால். வலது பக்கம் மாடிப்படி. இடது பக்கம் ரெண்டு கழிப்பறைகள். எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கதவு.மாடிப்படி ஏறி மேலே போனால் கீழே இருப்பது போலவே சின்னதா நீண்ட ஹால். தெருப்பக்கம் பார்த்த பால்கனிக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொன்னா ரெண்டு சின்ன அறைகள். அவ்ளோதான் கட்டிடமே!
யுனிவர்ஸல் ஸ்டூடியோவில் படத்துக்கு போட்ட செட் நினைவுக்கு வருதே!
கீழே இறங்கிவந்து எதிர்ப்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தால் துணிச்சுவர்கள் வச்ச பந்தல். அலங்காரத்தோடு களைகட்டுது. நல்ல பெரிய இடம்தான். 2 Kanal இருக்கும். வடக்கே ஹரியானா பஞ்சாப், ஹிமாச்சல் ப்ரதேஷ், ஜம்மு & காஷ்மீர் இங்கெல்லாம் நில அளவை இப்படித்தான் கனால் ன்னு சொல்றாங்க. ஒரு கனால் என்பது 510 சதுர மீட்டர். பழங்கணக்குன்னா அரைக்கால் ஏக்கர். இன்னும் நம்மூர் கணக்குன்னா 2 கிரவுண்டுக்கும் கொஞ்சம் அதிகம். இந்த தமிழ் மன்றம் இருக்குமிடம் ரெண்டு கனால் என்பதால் நாலரை கிரவுண்டுக்கு பரந்துருக்கு.
அந்தக் காலத்துலே (1972) தமிழன்பர் ஒருத்தர் 35 ஆயிரத்துக்கு வாங்கித் தமிழ்ச்சங்கத்துக்கு தானமாக் கொடுத்துட்டார். இன்றைய மதிப்பில் இது 40 கோடிக்கு உசந்துருக்கு. இவ்வளோ பெரிய இடத்துலே பக்காவா ஒரு கட்டிடம் கட்டி தமிழ்ச்சங்கப் பயன்பாட்டுக்கு வச்சுக்கணுமுன்னு ஆசைதான். ஆனால்.............. நிதி வசதி இல்லையே:( தமிழ்மன்றக் காரியதரிசி நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகரின் கவலையைக் கேட்டால் நமக்கும் கவலையா இருக்கு.
பெரிய ஹால் ஒன்னு வசதிகளோடு கட்டி நம்முடைய பயனுக்குப் போக மற்ற நாட்களில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கு விடலாம். வருமானம் வரும். கட்டிடம் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வாடகையில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து கடனை அடைக்கலாம். இப்படி எல்லாம் எங்களுக்கு யோசனை இருந்தாலும் கோடிகளைக் கடன் வாங்க பயமா இருக்கு, நம்மைப்போல சாதாரண மனுசர்களுக்கு. அங்கங்கே என்னன்னா............. லட்சக்கணக்கான கோடிகளில்........... சரி. நல்ல நாளுலே, இன்னிக்கு அந்த கொடுங்கணக்கெல்லாம் வேணாம்........... அப்புறம் ஒரு நாளு வச்சுக்கலாம்
காஞ்சி சங்கர மடம், ஒரு முறை இங்கே கட்டிடம் கட்டித் தருவதாகவும், அதுலே ஒரு பகுதியை மடத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்குவாங்கன்னும் ஐடியா கொடுத்துருக்காங்க. நம்ம ராஜசேகர்தான் முதல் ஆளா நின்னு இதுக்கு எதிர்ப்பைக் காமிச்சிருக்கார். தமிழ்மன்றத்தில் மதத்தின் குறுக்கீடு இருக்கக்கூடாது. அனைத்து மதத் தமிழர்களுக்கும் பொதுவா இருக்க வேண்டிய இடமுன்னு சொல்லி இருக்கார். அதனால் அந்த ஐடியா கைவிடப்பட்டுச்சாம். இது எங்களுக்கு பரம சந்தோஷமே!
வங்கின்னதும் இன்னொன்னு சொல்லத்தான் வேணும். இங்குள்ள தென்னாட்டு வங்கிகள் பலவிதங்களிலும் தமிழ்மன்ற நடவடிக்கைகளுக்கும், நம்ம கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கும் உதவிக்கிட்டே இருக்காங்க. அதிலும் 'கெனெரா பேங்க் அது உங்களுடைய பேங்க்' என்னும் விளம்பர வரிகளை உண்மையாகவே கடைப் பிடிக்கிறாங்க.
இங்கே இருக்கும் தென்னிந்தியர்களும் நம்மாலான உதவிகளைச் செய்யணும் என்ற எண்ணத்தோடு, உதவி செய்யப் பின் வாங்குவதே இல்லை.
இப்பக்கூடப் பாருங்க நம்ம கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நிதி சேகரிப்பு ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கு சண்டிகரிலும் சுற்றிலுமுள்ள பல ஊர்களிலும் இருக்கும் எல் அண்ட் டி கம்பெனி மக்கள்ஸ் நல்லாவே வாரிக் கொடுக்கறாங்க.
இந்த வங்கிகளும், எல் அண்ட் டியும் இல்லைன்னா பலவிதத் திட்டங்கள் நடந்துருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். இன்றைய விழாவிலும் இந்த தென்னிந்திய வங்கிகளின் அதிகாரிகள்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு உதவிக்கிட்டு இருந்தாங்க.மேடை அலங்காரம், இசைக்கருவிகள், சவுண்டு சிஸ்டம், ஒலிபெருக்கி எல்லாம் சரிப்படுத்தக் கொஞ்ச நேரம் ஆயிருச்சு. இந்த நிகழ்ச்சி நடத்திக்க நிதி வேணுமே..... வருகை தந்தவங்க ஆளுக்கு நூறு ரூ என்ற கணக்கில் பணம் செலுத்திக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு. அதை இப்போதான் அறிவிச்சாங்க. அதுக்கு நிதி வசூல் பொறுப்பாளரா கண்ணன் என்றவரை உடனடியா நியமிச்சாங்க..
இந்தக் குளிரிலும் நடன நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு உடை அணிஞ்ச சின்னப்பெண்கள் நடுக்கத்தோடு காத்திருந்தாங்க. பரதநாட்டிய உடைகள்! பார்த்தாவே மனசுக்கு நிறைவா இருந்துச்சு எனக்கு.'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...........' தமிழ்த்தாய் வாழ்த்தோடு.....நிகழ்ச்சிகள் ஆரம்பம். ராதா & ரம்யா சகோதரிகள் அழகாப் பாடுனாங்க. தெரிஞ்சவரை மக்களும் கூடச் சேர்ந்துக்கிட்டோம். உள்ளுர் சுந்தரகாண்டம் பஜன் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் மகன் (குழந்தைப்பிள்ள)ரொம்ப அழகா கணபதியை நமஸ்கரிச்சுப் பாடுனது ரொம்பவே நல்லா இருந்துச்சு.
முதல் நடனமா பிள்ளையார் பாடலுக்கு ரெண்டு சிறுமிகள். வடக்கும் தெற்குமா சேர்ந்து ஆட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு.எங்களுக்கு சூடான காஃபி வந்தது. குளிரில் உக்காந்துருக்கோமே! காபியோடு நிக்காம பஜ்ஜியா, பனீர் பக்கோடா. ரச வடை, லட்டு இப்படி அடுக்கடுக்காத் தீனிகள் வரவர கண்ணுக்கும் வாய்க்கும் வேலையோ வேலை.
லட்டு உபயம் எல் அண்ட் டி( ராஜ்புரா) காரர்.
இத்தனை விதமா எப்படி? பக்கத்துலே ஒரு கலியாணம் நடக்குதாம். இங்கே சிலவகைச் சமையலுக்குப் பொறுப்பேத்துக்கிட்டவர்தான் அங்கேயும் சமைக்கிறாராம். அங்கே செய்யும் ஸ்பெஷல் ஐட்டங்களை இங்கேயும் அனுப்பிக்கிட்டே இருக்காராம். ஆஹா.... இனி மேல் முஹூர்த்தநாளில்தான் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை வச்சுக்கணும்:-))))' கேசாதி பாதம் தொழுன்னேன் கேசவா' பாட்டுக்கு மூன்று சிறுமிகள் ஆடுனாங்க.
ரம்யா ராஜசேகரின் 'ராரா..............' பாட்டு தூள் கிளப்பிருச்சு. 'லகலக சொல்லத்தான் யாருமில்லை! வயசான(?) மக்களுக்குக் கொசுவத்தி ஏத்த ராதா ராஜசேகரின் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'.
நிகழ்ச்சியைத் தொய்வில்லாமல் நடத்திக்கிட்டே போன சுரேஷ் (வங்கி) அருமையான தமிழில் பேசியது, ஆள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதில் பழம் தின்னு கொட்டை போட்டவர்னு சொல்லாமல் சொன்னது.
இடைக்கிடை பலவிதங்களில் உதவி செய்துகொண்டிருக்கும் மக்களுக்கு மாலை மரியாதைன்னு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தார் நம்ம ராஜசேகர். இது உண்மையாவே போற்றப்படவேண்டிய குணம். நம்ம கிருபானந்த வாரியார் அவர்கள் கூட 'குமுதம் வினா விடை புத்தகத்தில் புண்ணியங்களில் அனைத்துக்கும் தலையானது நன்றி பாராட்டுதல். பாவங்களில் பெரிய பாவம் நன்றி மறப்பது என்று சொல்லி இருக்கார்.
நடனம் ஆடி முடிச்சவுடன் மேடையை விட்டு ஓடும் சிறுவர்சிறுமிகளை அப்படியே விட்டுடாமல் திரும்பக்கூப்பிட்டு சபைக்கு முன் நிறுத்தி அவர்களை நம்ம ராஜசேகர் பாராட்டிய விதமும் அருமை. ( இவரிடமிருந்து நிறைய பாடம் கத்துக்கலாம்)
பரதம் ஆடிய குழந்தைகள் மாடிக்குப்போய் உடை மாற்றி அடுத்துவரும் நடனங்களுக்கு சட் புட்டுன்னு தயாராகி வந்தாங்க. கொஞ்சம் கூட சோம்பல் இல்லாமல் வளை, பொட்டு, நகை நட்டுன்னு எல்லாத்தையும் கவனமாப் பார்த்து மேட்ச் பண்ணிக்கிட்டு வந்தது, அவுங்க ஆர்வத்தை விளக்கிச்சு. இந்த முறை எல்லாம் ஹிந்திப் பாட்டுகள். பர்ஸோரே மேஹா மேஹா ன்னு ஆடுனப்ப.............. ரொம்ப ரசிச்சு இயல்பா ஆடுறமாதிரி இருந்துச்சு. பெற்றோரின் விருப்பத்துக்காக பரதம் கத்துக்கிட்டாலும், சினிமா நடனமுன்னு வரும்போது சிறகடிக்கும் உணர்வுதான். அப்படி ஆக்கி வச்சுருக்கு இந்த சினிமா என்னும் பவர்ஃபுல் சமாச்சாரம்.
ஒரு நிமிசம் சூழலை மறந்து நியூசியில் இருப்பதுபோல் இருந்துச்சு எனக்கு. அங்கேயும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமில்லாம ஹிந்தி, ஆங்கிலம் இப்படி எல்லா மொழிகளிலும் கர்நாடகம், ஹிந்துஸ்தானி, சினிமாப் பாட்டுன்னு பாரபட்சமில்லாம கலந்துகட்டி அடிப்பதுதான். (பத்து வருசமா கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளரா இருந்த என் அனுபவம் பேசுது)
ஒரு சிறுமி, I'm a barbie girl ஆட ஆரம்பிச்சதும் மொத்தக் குழந்தைகள் பட்டாளத்தையும் மேடையில் ஏத்திவிட்டுட்டார் ராஜசேகர். பார்ட்டி டைம்!!!!!ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.... பாடுன இளம்பெண் குரல் அருமை. தமிழ் படிக்கத்தெரியாத ஒரு தமிழ் இனம் வெளிமாநிலங்களில் தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழுதி வச்சு பாடுறாங்க. குறைஞ்சபட்சம் தமிழ் பேசத்தெரியுதேன்னு தான் நாம் நினைக்கணும். தமிழ்நாட்டுலேயே தமிழ் படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு இவுங்க எவ்வளவோ மேல். இல்லையா?
நம்ம கோவில் வழிபாடுகளிலும் சரி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் சரி, ஒரு வித்தியாசமும் இல்லாம தென்னிந்தியர் அனைவரும் சேர்ந்தே பங்களிப்பு செய்யறாங்க. அதே போல் வடக்கர்களும் வேறுபாடில்லாமல் கலந்துக்கறாங்க.
வடக்கர்கள் வழக்கப்படி ஒரு பார்ட்டின்னா எல்லோருமே ஆடனும் என்ற நியதியை அப்படி லேசா விட்டுறமுடியாதுன்னு எல்லா ஆண்களையும் 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்னு கைதட்டி ஆடவச்சார் ராஜசேகர். பிறகு அதே பாட்டுக்கு அங்குள்ள அனைத்துப் பெண்களையும்.!
சம்பிரதாயத்தை மீறக்கூடாதாமே...........:-)16 வகை சாப்பாடு வாழை இலையில் பரிமாறுனாங்க. இருக்கைகள் பத்தலைன்னு மூணு பந்தி. நாங்க ரெண்டாவது பந்தியில் இருந்தோம். சாப்பிடும்போது எத்தனை வகைன்னு எண்ணுனீங்களான்னார். தண்ணீரோடு பதினாறுன்னேன். இன்னும் மூணு இருக்குன்னார். ஐஸ்க்ரீம், பீடா, அரை அடி நீளக் கரும்புத்துண்டுகள். மேடை அலங்காரத்தில் வச்சுருந்த கரும்புகளை அழகாத் துண்டு போட்டு அடுக்கி வச்சுருந்தாங்க ஒரு பக்கம்.
மனநிறைவோடு கொண்டாடி மகிழ்ந்தாலும்............'அவர்கள்' வந்து கலந்துக்காதது கொஞ்சம் குறையாகத்தான் எனக்குப் பட்டது.
எதாவது செய்யணும் பாஸ்..............
Posted by
துளசி கோபால்
at
1/28/2011 06:06:00 AM
26
comments
Labels: அனுபவம் Chandigarg தமிழ்மன்றம்
