Wednesday, September 22, 2010

அம்பதாயிரமா!!!!!! நெசமாவா??????? ( போன பதிவின் தொடர்ச்சி)

இடைவெளியில்லாத கட்டங்கட்டமாக் கட்டுன கட்டடங்களின் கூட்டத்தில் இருந்து, சட்னு பிரிஞ்சு போகுது பாதை. தொழிற்பேட்டைகளா இருக்கும் பகுதி. ஏராளமான ட்ரக்குகள் கேன்வாஸ் போர்வை போர்த்தி வரிசைகட்டி நிக்குது. நெருக்கமான குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள்ளே ஒரு சின்னக் கூட்டம் நடைபாதையில் கூடி நிற்குமிடம் போய் புள்ளையார் நின்னார்.
தேங்காய் பழம், ஊதுவத்தி, கற்பூரம்ன்னு பூஜை சாமான்கள் உள்ள தட்டுகளும், இனிப்புகளுமா சிலர் வந்து வணங்குனாங்க. நம்ம குருக்கள் பிரகாஷ், பூஜைத் தட்டுகளை வாங்கி தீபாராதனை செய்தார். நாம் கொண்டு போயிருந்த சுண்டல், சாம்பார் சாதங்களை விநியோகிச்சோம். லேசா மழை தூற ஆரம்பிச்சது. பிள்ளைகள் எல்லோரும் வரிசையில் வந்து பிரசாதங்களை வாங்கிக்கிட்டாங்க. இந்தப்பகுதி, மிகுதியாக தமிழர்கள் வசிக்கும் இடமாம். வாதாம் கொட்டைகளைத் தலையில் சுமந்து விற்கும் வட இந்தியப்பெண்களின் நடமாட்டம் அங்கே இருந்தது.
ராம்தர்பாரை விட்டுக் கிளம்பி ஏதேதோ சாலைகளைக் கடந்து சட்னு கிளை பிரிஞ்சு போகும் வழியில் போய் இடதுபக்கம் திரும்பினால்...... குறுகலான தெருக்கள், கூட்டம்......மேற்கு மாம்பலம் வந்துட்டோமா என்ன? இங்கேயும் கூட்டமாகக் காத்திருந்த மக்கள் புள்ளையாரை வரவேற்று, உள்ளே போகும் வழியை அவருக்கு காமிச்சாங்க. நியூ மௌலி விகாஸ் நகர். முத்துமாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்னார் புள்ளையார்.கோவில் பூசாரி ஐயா, சூடத்தட்டை குருக்களிடம் கொடுத்தவுடன், அதை வாங்கி சூடம் கொளுத்தி அர்ச்சனை செய்துத் திருப்பித் தந்தவுடன், தேங்காய் பழம், பொரி ஊதுவத்தி எல்லாம் வச்சுருக்கும் பூஜைத் தட்டுக்களோடு வரிசையில் வந்து நின்ன மக்களுக்கெல்லாம் துன்னூறு வச்சார். நானும் போய் எனக்கும் துன்னூறு வையுங்கன்னதும் ஒரு வினாடி திகைச்சு நின்னவர், வாயெல்லாம் சிரிப்போடு நடுங்கும் கைகளினால் கவனமாக என் நெத்தியில் திருநீறு வச்சது ஒரு புது அனுபவம்.
பிள்ளைகள் எல்லோரும் ஓடிவந்து என்னைச் சூழ்ந்துக்கிட்டாங்க. காரணம் நம்ம கையில் இருக்கும் கேமெரா. நல்லாத்தமிழ் பேசறாங்க. பள்ளிக்கூடம் போகாததும் கூட ஒருகாரணமா இருக்கலாம். இந்தப்பகுதி முழுசும் தமிழர்கள்தான்.
கள்ளக்குறிச்சிக்கு அருகில் அந்தியூர் கிராமத்தில் இருந்து மாரியம்மாள், கலியாணம் முடிச்சு இங்கே வந்து வருசம் இருவதாச்சு. ரெண்டு பெண் குழந்தைகள். இவுங்க மாமியார், தங்கை இப்படி பல சொந்தங்கள் இங்கேதான்.
பூஜைகள் முடிஞ்சதும் இங்கே மாரியம்மன் கோவிலில் விருந்துக்கு எல்லாம் தயாரா சமைச்சு வச்சுருக்காங்க. மணி இப்பவே மூணே முக்கால். இதுவரைக்குமா சாப்பிடாமக் காத்துருந்தாங்க? அடடா...... விருந்தோம்பலை ஏத்துக்க முடியாமப் போயிருச்சு. ஏற்கெனவே சாப்பிட்டு முடிச்சுதான் கிளம்பி இருந்தோம். மேலும் இருட்டுமுன்னே பிள்ளையாரை நதிக்கரைக்குக் கொண்டு போகணும். நம்ம கோவில்வகையில் கொண்டுபோயிருந்த சாம்பார் சாதம் சுண்டல் வகைகளை எல்லோருக்கும் விநியோகம் செஞ்சோம். அரை பக்கெட், சுண்டல் பாக்கி இருக்கு.
தமிழர்கள் இங்கே வந்த வரலாறைக் கொஞ்சம் பார்த்தோமுன்னா..... இங்கே சண்டிகர் நகர நிர்மாணத்திற்கு (1954) வேலை செய்ய, காமராஜர் ஆட்சி காலத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ,வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தப்பியவர்கள், இங்கே சண்டிகர் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நல்ல மாதச் சம்பளத்துடன் வாழ்கிறார்கள். மூணுதலைமுறையா ஆகி இருக்கு. குடும்பங்கள் பெருகி இன்னிக்கு ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள். நகரின் மொத்த ஜனத்தொகையில் பத்து சதமானத்துக்கும் மேல்.

இவ்வளவு பேர்கள் இருந்தும் முருகன் கோவிலில் ஏழெட்டு நபர்களுக்கு மேல் சந்திச்சதில்லையே:( காரணங்கள் பலவும் இருக்கு. கோவிலுக்கும் இந்தக் குடியிருப்புக்கும் தூரம் அதிகம். அதனால் என்ன..... தினமுமா வரணும்? நல்ல நாட்களில் விசேஷ நாட்களில் வரலாமேன்னு 'மூக்கை நுழைச்சேன்'.

குடியிருப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட இனம் என்று சொல்லப்படும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆலயப்பிரவேசம் அரிதாக இருந்த காலங்களின் வடு இன்னும் மறையாமல் நெஞ்சிலே காலங்காலமா நிக்குது. அதுலே உண்டான தாழ்வு மனப்பான்மையால் மற்ற தமிழின மக்களுடன் கலந்து பழக முன்வரலை. அதுக்காக சாமி கும்பிடாமல் விடமுடியுமா? தங்கள் குடியிருப்பிலேயே அரசாங்கத்தின் பொது இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி மாரியம்மன் சிலைகளை ப்ரதிஷ்டை செஞ்சு அவுங்க வழக்கமா கும்பிடும் முறைகளில் வழிபாடு நடத்திக்கிட்டு இருக்காங்க.

சின்னதா இருந்தாலும் அழகான கோவில். ரெண்டு அறையாப் பிரிச்சு உள்ளே கருவறையில் ' ட' வடிவத்துலே ஒரு மேடையில்
அஞ்சாறு மாரியம்மன் சிலைகளும், உற்சவ மூர்த்தியா ஒரு உலோகச்சிலையும், அய்யனார் சிலை ஒன்னுமா வச்சுருக்காங்க.
விஜய் என்ற சிறுவன்தான் என்னை உள்ளே கூட்டிப்போய் சாமி தரிசனம் செஞ்சு வச்சுட்டு, சாமிகூட ஒரு படம் எடுத்துக்கணும்னு கேட்டுக்கிட்டார். தமிழ் நல்லாவே பேச வருது. பள்ளிக்கூடம் போறதில்லை என்றது வருத்தமா இருக்கு.

தமிழை ஒரு பாடமொழியா வச்சு இங்கே ஒரு பள்ளிக்கூடத்தை ஏன் வைக்கலை? அரசு ஏன் எந்த உதவியும் செய்யாமல் இருக்கு? இத்தனை பேர் இவ்வளோ ஓட்டு இருக்கும்போது இவுங்களுக்கு ஏன் பிரதிநிதி யாரும் இல்லை? கொஞ்சம் உள்ளே போய் ஆராயத்தான் வேணும்.

அப்புறம் பார்க்கலாமுன்னு விடாமல் இப்பவே கொஞ்சூண்டாவது தெரிஞ்சுக்கணுமுன்னு எனக்கொரு வேகம். அரசாங்கச் சலுகைகள் ஏதும் இல்லையான்னதுக்கு வந்த பதில் இல்லை. நம் தமிழ்நாட்டில் இருக்கும் சலுகை பெறக்கூடிய சாதிகள் பட்டியலுக்கும், இங்கே வடநாட்டில் இருக்கும் சாதிப்பட்டியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்காம். அந்தப்பெயர் இங்கத்துப் பட்டியலில் இல்லாததால் உரிமையோடு கேட்டு வாங்கும் சலுகைகள் ஒன்னுமே கிடைப்பதில்லையாம்:(

கனரா பேங்க் அதிகாரி ஒருவர் சிலவற்றை எனக்கு விளக்கினார். இங்கே கோவிலையொட்டிய இடத்தில் வாராவாரம் தமிழ்மொழி வகுப்புகள் எடுக்கலாமேன்னால்..... அதற்கும் ஆரம்ப காலங்களில் முயற்சி செய்தும் சிலர் படிக்க முன்வந்து..... கொஞ்ச காலத்துக்குப்பிறகு படிப்படியாக் குறைஞ்சு , இப்போ யாரும் வருவதில்லை என்ற குறை. மேலும் இங்கே இளைஞர்களுக்கு, இலவசக் கணினிப்பயிற்சி கொடுக்கலாமென்று அதே வங்கியின் மூலம் பத்து கணினிகள் ஏற்பாடு செய்தும் கொடுத்துருக்கார் இந்த அதிகாரி. மேலும் இவர்களுக்கு ஆபத்தில் உதவியாக இருக்கட்டும் என்று இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கார் இவர். வருடம் வெறும் ஒம்போது ரூபாயைக் கட்டினால் ஒரு லட்சத்துக்கு காப்பீடு என்ற திட்டம். அதில் நிறையப்பேர் சேர்ந்துள்ளார்களாம். எல்லாம் நாலைஞ்சு வருசமா ஓசைப்படாமல் நடக்கும் விஷயங்கள்.

செம்மொழி மாநாடு நடத்திய தமிழக அரசு, இங்குள்ள தமிழர்களையும் கொஞ்சம் கண்டுக்கிட்டால் மொழி இங்கே அழியாமல் இருக்கும்.

அந்த இடத்தில் இருந்த நேரம் முழுசும் ஏதோ தமிழக கிராமங்களில் இருப்பதுபோலத்தான் எனக்கு தோணுச்சு. எல்லோரும் தமிழையே பேசி, காது நிறைஞ்சதென்னமோ நிஜம். படிப்பு என்ற விஷயத்தை யாரும் மறந்துறக்கூடாதேன்னு என்ற பதைப்பும் எனக்கு இருக்கு. எப்படி உதவலாம் என்றதுதான் புரியலை.
சண்டிகர் தமிழ்மன்றமும் செயல்பாடு அவ்வளவா இல்லாமக் கிடக்குதாம். தமிழர்களையும், மன்றத்தையும், கோவில்களையும் சேர்த்து ஒருங்கிணைச்சு ஏதாவது செஞ்சா நல்ல நிலைக்குக் கொண்டு வந்துறலாம் என்ற நப்பாசை. 'எதாவது செய்யணும் பாஸ்' என்றதுதான் இப்போதைக்கு.
முக்கால் மணி நேரம், மக்கள் அன்போடு அளித்த பூஜைகளையும், நைவேத்தியங்களையும் ஏத்துக்கிட்ட பிள்ளையாருக்கு, அந்த ஏரியா தமிழர்களின் 'தலை,' தேங்காயில் கற்பூரம் வச்சு திருஷ்டி கழிச்சுச் சூறைத்தேங்காய் உடைச்சதும் நாங்க கிளம்பி பதினைஞ்சு நிமிசத்தில் சண்டிகர் எல்லையை விட்டு, பஞ்சாப் மாநிலத்துக்குள்ளே நுழைஞ்சோம்.


தொடரும்.....................:-)

29 comments:

said...

//செம்மொழி மாநாடு நடத்திய தமிழக அரசு, இங்குள்ள தமிழர்களையும் கொஞ்சம் கண்டுக்கிட்டால் மொழி இங்கே அழியாமல் இருக்கும்//

இப்ப அந்த ஓட்டெல்லாம் அடுத்த மாநிலத்துக்கில்ல போகுது.இந்த மக்கள் தமிழ் நாட்டுல இல்லியே.. இருந்திருந்தா.. அடடா!! அம்பதாயிரம் ஓட்டாச்சேன்னு அரசு கவனிச்சிருக்குமோ என்னவோ.

said...

இங்கயும் அப்படி எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு ஏரியா இருக்கு.. அவங்க முருகன் மற்றும் மாரியம்மன் கோயில் கட்டி இருக்காங்க.. ஆனா அவங்க பிள்ளையார் கோயிலுக்கு சில சமயம் வந்தாலும் அவர்களுக்கு மட்டும் சரியாக அர்ச்சனை
செய்யப்படரதில்லன்னு ஒரு ஆதங்கம் இருக்கிறது.. ;(

நல்ல விவரமெல்லாம் கேட்டிருக்கீங்க..அங்க இருக்கிற பவர் ஆசாமிங்க யாருக்காச்சும்
ஒரு ஐடியாவை கிளப்பிவிடுங்க
நீங்க அங்க இருக்கிற காலத்துகுள்ள..

வங்கி ஊழியருக்கும் பாராட்டுக்கள்.

said...

இப்படிப்பட்ட தமிழர்கள் நாடு முழுக்க நிறைஞ்சி இருக்காங்க. மும்பையில கூட தாராவி ஏரியாவுல போய் பார்த்தா பள்ளி வாசமே இல்லாத சிறுவர்கள் எத்தனை, எத்தனையோ. இவர்களுக்கென்று தமிழ் பள்ளிகள் கூட மஹராஷ்டிர அரசால் நடத்தப்ப்டுகின்ற்ன. ஆனாலும் அதில் சேர இவர்களுடைய பெற்றோர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. என்ன செய்வது?

said...

ஊர் மணம் மாறாத புன்னகை பூத்த முகங்கள்...... படங்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போல உள்ளது.

said...

வங்கியாவது உதவுகிறார்களே!

said...

வணக்கம் டீச்சர்...ரொம்ப நாளா க்ளாஸ் பக்கம் வரமுடியலை...

பாடத்தையெல்லாம் படிச்சுட்டு வந்திடுறேன்.

said...

முதலில் நீங்க 50 ஆயிரம் பேர் இருக்கங்கன்னு சொன்னதும் நான் நம்பக் கஷ்டப் பட்டேன். இப்ப இந்த அன்பு நிறைஞ்ச முகங்களைப் பார்க்கும்போது உங்கள் ஆதங்கம் புரிகிறது.பாங்கில் உதவி செய்த மாதிரி இன்னும் ஏதாவது நடக்க வழி பிறக்கட்டும்.

said...

அம்பதாயிரமா? அதுவும் சண்டிகர்லயா??!! நீங்க சொன்னா நெசமாத்தாத்தான் இருக்கும்.

ம்ம்.. நம்மூருல பிழைப்புத் தேட வந்துள்ள சேட்டுகளையும், மலையாளிகளையும் நம் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் என்று திட்டும் “மண்ணின் மைந்தர்கள்” கவனிக்க!!

அப்புறம் அந்த அதிகாரி(களு)க்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

said...

very nice akka & super photos!!

said...

இங்கே நம்ம ஊரில் தினக் கூலி, நாளை நிலைமை என்ன என்று தெரியாதவங்க கூட படிக்க வைக்கிறாங்க. ஓரளவு தின வருவாய் இருந்தால் அங்கே இங்கே கடனாவது வாங்கி தனியார் பள்ளியிலேயே சேர்த்திடறாங்க.

நல்ல சம்பளத்தில் இருக்காங்க, வேலை இல்லா கொடுமை இல்லைனா, அப்போ அங்கே என்ன கல்வி இருக்கோ அதை தேடிச் சென்று படித்து இருக்கலாமே. அத்தனை மக்களுமா படிக்கலை?
அவங்களுக்குன்னு ஒரு அமைப்பு கூட இல்லையா?

அப்புறம் அந்த மூட்டை பிஸ்தா nuts மாதிரி தெரியுது.

said...

மக்களும், கோவிலும் கிராமத்தையே நினைவுப்படுத்துகின்றன டீச்சர்.

said...

Dear author,
''ambathayirama !! '' this is really interesting to know about the tamils in chandigarh. gives great surprise that they are about 10% in the total population .

said...

//இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கார் இவர். வருடம் வெறும் ஒம்போது ரூபாயைக் கட்டினால் ஒரு லட்சத்துக்கு காப்பீடு என்ற திட்டம். அதில் நிறையப்பேர் சேர்ந்துள்ளார்களாம். எல்லாம் நாலைஞ்சு வருசமா ஓசைப்படாமல் நடக்கும் விஷயங்கள்.//

பரவாயில்லை.இந்த உதவியாவது கிடைச்சிருக்கே?வாழ்த்துக்கள்

said...

//வாங்க ஜிஜி.

நீங்க பதிவர் ஆகலையா இன்னும்?//

நான் வலைப்பக்கத்திற்கு புதியவள் அம்மா.. இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்து உள்ளேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அப்ப..... ஓட்டு வங்கிக்கு முன்னால் மொழி ஒன்னுத்தும் ஆகாதா? :(

said...

வாங்க கயலு.

ஆளுக்கேத்தமாதிரி அர்ச்சனை செய்வதை ஆண்டவனும் விரும்ப மாட்டான்:(

மனத்தளவில் நம்மாளுங்க இன்னும் வளரலைன்னுதான் வருத்தம்.

said...

வாங்க டி பி ஆர்.

பிள்ளைங்க நாலு எழுத்துப் படிச்சு முன்னுக்கு வரணும். இதுக்குப் பெற்றோர்கள் ஈடுபாடு ரொம்ப அவசியம். எப்போ உணரப்போறாங்க இவுங்க?

said...

வாங்க சித்ரா.

எனக்கும் அப்படியே ஆச்சரியமாப் போயிருச்சு அங்கே போனதும். அசல் தமிழ்நாட்டுச் சூழல்! மக்களும் வெள்ளந்தியா இருந்தாங்க.

said...

வாங்க குமார்.

சலுகைகள் இருக்கான்னுகூட தெரிஞ்சுக்காம இருக்காங்க.

வங்கிக்கு நானும் நன்றி சொன்னேன்.

said...

வாங்க சிந்து.

ஆற அமர இருந்து வாசிங்க. எங்கே போயிறப் போகுது?

said...

வாங்க வல்லி.

அதாம்ப்பா..... எதாவது செய்யணும்.....இங்கிருந்து கிளம்புறதுக்குள்ளே.

said...

வாங்க ஹுஸைனம்மா.

வீடு தேடும் அலைச்சலில் இங்கேயும் வந்து பார்த்ததுக்கு நன்றி.

நானும் கண்ணில் பார்க்கும்வரை நம்பாமல்தான் இருந்தேன்!

said...

வாங்க மேனகா.

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடி நடந்துச்சா? காலா ஜாமூன் பாக்கி இருந்தா...பார்ஸல் அனுப்புங்க:-)

said...

வாங்க விருட்சம்.

அதேதாங்க. அரசாங்கப்பள்ளிகளில் போய் உள்ளூர் படிப்பையாவது படிக்கலாமுல்லையா?

படிப்பின் முக்கியத்துவம் இங்கே நிறைய மக்களுக்குப் புரியலை. அதுவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் பள்ளிக்கூடத்தை எட்டியும் பார்ப்பதில்லை:(

said...

சொல்ல விட்டுப்போச்சுங்க விருட்சம்.

அது வாதாங்கொட்டைகளே.

படத்தைப் பெருசு பண்ணிப் பாருங்க.

said...

வாங்க சுமதி.

அச்சு அசல் தமிழ்நாட்டு கிராம மக்களே!

said...

வாங்க சிவஷண்முகம்.

எனக்கு வியப்புதான். அதிலும் மாலை வேளைகளில் 7 மணிக்கு செக்டர் 47 போனா..... தோசை இட்லி, வடைன்னு வளாகம் முழுசும் தமிழ்க்காரர்கள் நடத்தும் கையேந்தி பவன்கள்.

கூட்டம் அப்படி அம்முது நம்ம சாப்பாட்டுக்கு!

said...

வாங்க ஜிஜி.

தமிழ்மணத்துலே இணைச்சுக்கிட்டீங்களா?

நல்வரவு.

said...

வெள்ளை மனது கொண்ட மக்கள்.

உங்கள் எண்ணம் போல் வருங்கால சிறார்களின் படிப்புக்கும் உதவிகிட்டும் என்றால் மிக்கமகிழ்ச்சி.