Monday, September 20, 2010

நீங்க வரலையா? அதனால் என்ன? நான் வரேன்!

கிளம்புனவரோடு ஒட்டிக்கிட்டே நானும் போயிட்டேன். இப்படி ஒரு எளிமையான பக்தியைப் பார்க்கும் ச்சான்ஸ் கிட்டுமுன்னு எதிர்பார்க்கவே இல்லை!

போனவருசம் புள்ளையார் சதுர்த்தியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உதவியுடன் முடிச்சுக்கிட்டேன். போதும் ஒருமுறை நோகாம நோம்பு கும்பிட்டதுன்னுட்டான் கணேசன். கொழுக்கட்டை வழக்கம்போல் தகராறு. விட்டேனா பாருன்னு சின்னக் கிண்ணம் நிறைய தேங்காய், வெல்லம் சேர்த்து இனிப்புப் பூரணம் பண்ணி வச்சுக்கிட்டேன். தோழி ஒருத்தரின் அம்மா சொல்வாங்களாம், பூரணம் பண்ணாவே கொழுக்கட்டை செஞ்ச பலன் வந்துருமுன்னு. வாழைப்பழச் சோம்பேறிக்கு வசதியான பொன்மொழி! இந்த மாதிரி நல்ல விஷயங்களைமட்டும் என்ன ஏதுன்னு கேக்காம 'கப்'னு பிடிச்சுக்குவேன்.

ஒரு கப் அரிசிமாவு.......... சரி வேணாம் விடுங்க. எண்ணி அஞ்சே அஞ்சு கொழுக்கட்டைகளை அஞ்சாமல் செஞ்சு, பாகிஸ்தானில் இருந்து மடியா வந்த பத்லா சேமியாவைப் பாயசமாக்கி, ஒரு கொண்டைக் கச்சான் சுண்டலும் பண்ணி வச்சு, அஞ்சு மணிக்கு வரப்போகும் கோபால் வருகையை எதிர்நோக்கி இருந்தேன். அவர்தான் புள்ளையாரான்னு கேக்கப்பிடாது!
தாய்லாந்தில் இருந்து அன்னிக்குத்தான் வர்றார். வந்தார். ரெண்டுபேருமா சேர்ந்து சாமியைக் கும்பிட்டோம். கொழுக்கட்டையை (கஷ்டப்பட்டு) தின்னும் நேரம் வேதனையைப் பொறுக்க முடியாமல் பவர் போயிருச்சு. மெழுகுவத்தி வெளிச்சத்தில் மேக்கப் போட்டுக்கிட்டு நான் தயாரானதும், நாங்க கிளம்பி நம்ம கோவிலுக்குப் போனோம். அடைமழை வேறு பிடிச்சுக்கிச்சு.
அடடா...... என்னன்னு சொல்வேன்? ஜகஜ்ஜோதியா புள்ளையார் ஜொலிப்போட நிக்குறார். கரண்டு நின்ன கலாட்டாவில் கேமெராவை எடுக்காமப் போயிட்டேனே:(
'இதுக்குப்போய் பெருசாக் கவலைப்படாதே. நான் இன்னும் ஒரு எட்டுநாள் இருக்கப்போறேன்'னு சொன்னார் பெரியவர். கோவிலில் வலம் வந்தால், சின்ன அரங்கமேடையில் லவகுசர்கள், சீதா, கண்ணன், யசோதா, வால்மீகி, தொட்டில் கண்ணன், ஒய்யாரமாக் கால்நீட்டி அமர்ந்திருக்கும் பிள்ளையார் இப்படி ஒரு கொலு! கண்ணை ஓட்டுனப்ப ஒரு சங்கு ஆப்ட்டது, என்னப்பா ஒரு ஆச்சரியம்? பிள்ளையார் மாதிரி தும்பிக்கை சுழிச்சு இருக்கு!!!!
தினமும் மாலை 7 மணிக்கு பஜனை உண்டு. அதுக்குப்பிறகு லங்கர். 'கட்டாயம் போயிறணும்.' அட.....சாப்பாட்டுக்கில்லைங்க. பக்திப் பரவசத்தில் பஜனை செய்யணுமுன்னுதான். இன்னிக்குக்கூடப் பாருங்க மெனு.....இட்லி, சட்னி & சாம்பார் ஆளுக்கு நவ்வாலு வச்சு விளம்பிடலாம்னு திட்டம். நான் சாப்பிடாமலே கிளம்பிட்டேன். இவருக்கும் பயண அலுப்பு. சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமுன்னுதான். வீட்டுக்கு வந்தால் மழையும் விட்டபாடில்லை கரண்டும் வந்தபாடில்லை:(
மறுநாள் கோவிலுக்குப் போனால் எதிரில் இருக்கும் மைதானத்தில் டெண்டுகொட்டாயில் திடீர் கோவில் (நேற்றுப்பெய்த மழையில்)முளைச்சுருக்கு. ஏர்ஃபோர்ஸில் இருக்கும் மராட்டியர்களின் கைவரிசை. நமக்குத்தான் எல்லாத்துக்கும் ஒரு கொசுவத்தி இருக்கே! பூனா வாழ்க்கையை மனசில் ஓட்டிக்கிட்டே அங்கே போய் தரிசனம் முடிச்சுக்கிட்டோம்.
அடுத்து நம்ம கோவிலுக்குப் போய் வேணுங்கற அளவு க்ளிக் செஞ்சுக்கிட்டேன். நமக்கு இப்போ கோவிலின் (அன்)அஃபீஸியல் ஃபோட்டாக்ராஃபர் என்ற உரிமம் வேற கிடைச்சுருக்கு.
பஜனை நடந்துக்கிட்டு இருக்கு. கேரள சமாஜ பஜனைக்குழு அன்பர்கள் போடுபோடுன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தப்பக்கம் தமிழர்களா ஒரு ஏழெட்டுப்பேர் உக்கார்ந்துருந்தோம். இந்தப்பக்கம் ஒரு பாட்டு தொடங்கறதுக்குள்ளே விநாடி இடைவெளியில்லாம அவுங்க சுப்ரமண்யா, ஐயப்பான்னு எடுத்துவிட்டுக்கிட்டு இருக்காங்க. கடவுளுக்கு மொழித்தகராறு இல்லை. ஆனால் நம்ம ஆளுங்களுக்கு(ம்) ஒரு ச்சான்ஸ் கொடுக்கவேணாமா? மைக்கை நகர்த்தி வைக்கக் கிடைச்ச 001 விநாடி கேப்புலே ' ஒருமணிக்கொருமணி எதிரெதிர் ஒலித்திட' ஆரம்பிச்சுட்டார் ராஜசேகர்! இவர்தான் முருகனின் காரியதரிசி. நாங்களும் கூடவே சிந்து பாட ஒட்டிக்கிட்டோம். அவுங்க விடறதா இல்லை. நாங்களும்தான். சபாஷ் சரியான போட்டி!!!! ஆறெழுத்து மந்திரமுன்னு ஆரம்பிச்சு அஞ்சு நாலு மூணு ரெண்டு ஒன்னுன்னு குறைச்சுக்கிட்டே வந்த ஒரு மலையாளப்பாட்டு அட்டகாசமா இருந்துச்சுன்றதையும் ஒத்துக்கொள்ளத்தானே வேணும். அண்ணாவில் ஆரம்பிச்சு, நைசா தம்பியே எல்லாத்தையும்,( நான் புகழ் பாடும் பாட்டைச் சொல்றேன் ) எடுத்துக்கிட்டார். தம்பி முருகனுக்கு அரோஹரா!

ஒம்போது மணிக்கு பஜனை, மகா ஆரத்தி முடிஞ்சு சாப்பாடு உண்டு. நமக்கு அவ்ளோநேரம் இருக்க முடியாது. முழங்கால் வலி முடுக்க ஆரம்பிச்சதும் எழுந்து வந்துட்டோம். நாளைக் கதை நாளைக்கு..... .

அடுத்தநாளில் டெண்டுக் கொட்டாய் காணாமப்போய் இருந்துச்சு. ஒவ்வொருநாளும் போக இயலாமல் கிடைக்கும் நாட்களில் போய் ரெண்டு பஜனைப் பாட்டுகளைக் கேட்டுட்டு வந்தோம். சனிக்கிழமை போனப்ப புள்ளையாருக்கு முன்னால் ஒரு நந்தி முளைச்சுருந்தார். நம்ம கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு ஏற்ற பொருத்தமான சைஸ்! அரசு மருத்துவமனையில் கட்டிடங்களை விரிவாக்க அங்கே இருந்த சின்ன கோவிலை இடிச்சுட்டாங்க. சாமி எங்கே போனாரோ தெரியலை. நந்தி மட்டும் நம்ம கோவிலுக்கு வந்துட்டார். (கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!) இனிமேல் ப்ரதோஷ பூஜைகளை ஆரம்பிச்சுடலாமுன்னு ராஜசேகர் அறிவிச்சார்.
மறுநாள் பிள்ளையாரை விஸர்ஜனம் செய்யப்போறோம். பதினொன்னுக்குப் பஜன், 12 மணிக்கு ஆரத்தி, பனிரெண்டரைக்குச் சாப்பாடு. 1.31க்கு கிளம்பி ஆறுநோக்கிப் போறோம் ஒன்னரைவரை எமகண்டம். பக்கா ப்ளான். எல்லாமே சரியா 'இந்திய நேரத்துக்கு' நடந்துச்சு:-)
இன்னிக்கு பஜனை ஸ்பெஷல் ஏர்ஃபோர்ஸ் மனைவியரின் தீர்த்தமண்டலி. முதல் நாள் புள்ளையார் சதுர்த்தியன்னிக்கு இவுங்க வந்து பாடித்தான் ஆரம்பமே ஆச்சு. இந்தியா பூராவும் வந்து பாடுனதா அர்த்தம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பரதகண்டம் அனைத்துப் பாகங்களிலும் உள்ளவர்களின் பிரதிநிதிகளாச்சே! அதனால் கடைசி நாளிலும் நீங்க வந்து பாடி அவரை வழி அனுப்புன்கன்னு கேட்டதும் சந்தோஷமா வந்தாங்க. தென்னிந்தியாவில் காணக்கிடைக்காத விசேஷம் இவுங்க ஆட்டம் & பாட்டம். ஒருத்தர் எழுந்து ஆடிப்பாட, பின்பாட்டுக்கு மொத்தக்கூட்டமும் கரைகாணா மகிழ்ச்சியுடன் மேளங்கொட்டி, தாளம்தட்டி ஆடுவதைப் பார்த்தால் நமக்கும் கூடவே போர் ரெண்டு குத்தாட்டம் ஆடலாமான்னு தோணியதென்னவோ நிஜம். என்ன நெளிவு, என்ன ஆட்டம், என்ன Bபாவம். மனத்தளைகளை மீறிய கொண்டாட்டம் அது!

பனிரெண்டரைக்கு சாப்பாடு கொண்டுவந்து தரச்சொல்லி கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் குணாவிடம் சொன்னால்..... சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேன்னு அடம்பிடுச்சு 12.25க்கே மணக்க மணக்க சாம்பார்சாதத்தைக் கொண்டுவந்து இறக்கிட்டார். இன்னொரு பெரியபாத்திரத்தில் தனியா சாம்பார் வேற! இதுக்கிடையில் 12 மணிக்கு ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் 'காமிச்சு' சக்கரைப் பொங்கலை விநியோகித்து ஆடிப்பாடும் கோஷ்டிக்குக் கொஞ்சம் குளுகோஸை ஏத்துனோம். கோவில் குருக்கள் ப்ரகாஷின் கைப்பக்குவம்.
பாட்டுகளுக்கிடையில் திடீர் திடீர்னு, 'வெற்றிவேல் முருகனுக்கு' ன்னு ராஜசேகர் ஆரம்பிச்சதும் ஏர்ஃபோர்ஸ் தீர்த் மண்டலி கப்சுப்ன்னு ஒடுங்கிரும். அதுக்காக விட்டுறமுடியுமா? புதுசா ஒன்னுமில்லை. பயந்துறாதீங்க. ஹரஹரான்னு நீங்க சொல்றதுதான் இது. கொஞ்சம் நீட்டி ஹரோஹரான்னு சொல்லுங்கன்னு சொல்லவச்சுட்டாருல்லே. அடுத்தமுறை அந்த ஹ வை அ வாச் சொல்லிக் கொடுத்துத் தமிழ் கற்றுத்தந்த புண்ணியத்தைத் தேடிக்கப்போறேன்:-)

தீபாரதனை முடிஞ்சு பிள்ளையாரை ஸ்தானத்தில் இருந்து நகர்த்த ஆரம்பிச்சப்போ மணி சரியா 1.32. எமகண்டத்தில் நகருவேனான்னு கெட்டியா இடம் புடிச்சு களிமண் புள்ளையாரா உக்கார்ந்துருந்தார். அலங்கரிச்ச வேனில் ஏத்தும்போதுதான் களிமண் கனம் தெரிஞ்சது.
இந்தப்பக்கம் அவரை சரியா நிக்கவச்சு ஆடாமல் இருக்க ஏற்பாடுகள் நடக்கும் சமயம் இன்னொரு பக்கம் சாம்பார்சாத விநியோகம். சுடச்சுட இருக்கும் சாம்பார் சாதத்தில் இதயம் நல்லெண்ணையைச் கலந்து கோரியெடுத்து தட்டுகளில் விளம்புனதும் அப்படியே வாயில் வழுக்கிக்கிட்டுப்போய் வயித்தில் விழும்போதே இதயத்தில் இடம் பிடிச்சது. அட்டகாசமான ருசி.
இந்த வடநாட்டு மக்களுக்கு சாம்பாரின் மகிமை நம்மைவிட நல்லாவே தெரிஞ்சுருக்கு! ஆப் லோகோங்கோத் தரா சாம்பார் பனானாகே ஹம்கோ நை ஆத்தி. அடியாத்தீ............அதெப்படி வரும்? நாங்க நாங்கதான், நீங்க நீங்கதான்! கவலைப்படாதீங்க. முருகன்போடும் சோறு. ருசியே தனி. வெளுத்துக் கட்டுங்க! சொன்ன பேச்சை மறுக்காமல் ஒரு கட்டு கட்டுனாங்க.
நாங்க எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுக் கோவிலைச் சாத்திப் பூட்டிட்டுப் புள்ளையாரை வளாகத்தைவிட்டு வெளியில் கொண்டுவரும்போது மணி சரியா 2.25. ஒன்லி 55 நிமிஷம் லேட்.
முன்னால் ஒரு வண்டி, பின்னால் நம்ம வண்டி. நடுவிலே புள்ளையார், நமக்குப்பின் கோவில் ஏற்பாடு செஞ்சுருந்த பஸ்.

ராம்தர்பாரை நோக்கிப் போனோம். நானே வரேன்னு தமிழர்கள் குடி இருப்பை நோக்கி அண்ணல் போறார். அவரைத் தொடர்ந்து நாங்களும் போறோம்.

பதிவின் நீளம்கருதி மீதி நாளை.

தொடரும்..............:)



28 comments:

said...

சுவராஸ்யமான பதிவு!!

said...

கண்பதி பப்பா.. மோரியா
புட்ச்சா வர்ஷி லவ்கர் யா :-))

said...

எங்கிருந்தாலும் நம் கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

எல்லாம் சரி, கொழுக்கட்டை இல்லாமல் பிள்ளையாரை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலையே??? ரவை அல்லது மைதா எங்கேயும் சுலபமாக் கிடைக்கும் இல்லை?? அரைகிண்ணம் ரவை, அரை கிண்ணம் மைதாவிலே ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்துக் கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்துக்குங்க, அதிலே அரை கிண்ணம் பால் ஊத்தி வைங்க. பாலோடு கலந்து வைங்க நினைவா.

அரை மணி நேரம் கழிச்சு அதை நல்லாப் பிசைந்து சப்பாத்தி மாவு பதத்துக்குக் கொண்டு வந்துடுங்க. அப்புறம் என்ன??? சப்பாத்தியாக மெலிதாய் இட்டுக் கொண்டு, வட்டமான மூடியால் சின்னச் சின்ன வட்டங்களாய்க் கத்திரிச்சு உள்ளே பூரணத்தை வைச்சுப் பொரிச்சு எடுங்க, எந்த எண்ணெயா?? நெய்யிலே கூடப் பொரிக்கலாம், உங்க கொலஸ்ட்ரால் இடம் கொடுத்தால்!

said...

சாம்பார் சாதம் போல் சுவையா இருக்கு டீச்சர் பதிவு:))))

said...

வாங்க மேனகா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மோரியாரே......பப்பா மோரியாரேன்னு பாடிப்பாடி மகிழ்விச்சோம்ப்பா:-)

உங்க ஊர்லே புதன்கிழமைதானா?

said...

வாங்க டாக்டர்.

இங்கே சண்டிகரில் கலாச்சாரத்துக்கு என்ன பஞ்சம்?

அட்டகாசமான கோவில்கள் இருக்கு!

said...

வாங்க கீதா.

பிரசாதத் தட்டைப் பார்க்கலையா? அஞ்சு கொழுக்கட்டை நீராவியில் வேகவச்சாச்சு. மோதக டிஸைந்தான் வரலை:(

இப்பெல்லாம் எண்ணெயில் பொரிப்பதையெல்லாம் நிறுத்தியாச்சுப்பா.

மீதம் ஆன பூரணத்தை ஒரு நாள் சுகியனாச் செஞ்சுட்டேன்.

said...

வாங்க சுமதி.

அப்போ நல்ல ருசிதான்:-)))))

said...

பிள்ளையார் சதுர்த்தி சுவாரசியமாத்தான் போயிருக்கு. ரொம்ப சந்தோஷம். நாங்களும் பதிவு போடுவோம்ல. வர்றேன்.

said...

//தென்னிந்தியாவில் காணக்கிடைக்காத விசேஷம் இவுங்க ஆட்டம் & பாட்டம். ஒருத்தர் எழுந்து ஆடிப்பாட, பின்பாட்டுக்கு மொத்தக்கூட்டமும் கரைகாணா மகிழ்ச்சியுடன் மேளங்கொட்டி, தாளம்தட்டி ஆடுவதைப் பார்த்தால் நமக்கும் கூடவே போர் ரெண்டு குத்தாட்டம் ஆடலாமான்னு தோணியதென்னவோ நிஜம். என்ன நெளிவு, என்ன ஆட்டம், என்ன Bபாவம். மனத்தளைகளை மீறிய கொண்டாட்டம் அது!//

மனத்தளைகளை உடைக்கத்தான் இதுதான், நீங்களும் கலந்துருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

நான் ரெண்டு பகுதியா போடறேன். நீங்க ஒரு நாலாவது போடணும்,ஆமா!!!

ஹைதை ஸ்பெஷல் நாலு:-))))

said...

வாங்க நிகழ்காலத்தில்.

கேமெரா உமன் ஆடலாமான்னு தெரியலை:-))))

said...

அட்டகாசம்..
எனக்கும் இங்க நார்த்ல பெண்கள் கவலையில்லாமல் ஆண்களைப்போல ஆடி பாடி மனத்தளை உடல்தளை இல்லாம இருக்கிறது பிடிச்சிருக்கு..




நம்ம ஊரில் தான் பெண்கள் ஆடினாலே மானாட மயிலாடன்னு திட்டிருவாங்க...

said...

கடையாக பிள்ளையார் கிளம்பு போது வந்தாச்சு ;))

said...

Arumayana episode, vadanattulae Vinayagar Chathurthi live relay.

-Sri :)

said...

கொழுக்கட்டை ஆட்டமும் பாட்டுமென நகைச்சுவையான பதிவு.

said...

பிள்ளையாரும் மற்ற தெய்வங்களும் பார்க்கப் பார்க்க அருமை. உணவும் அருமை. ஆட்டம்,பாட்டு எவ்வளவு உற்சாகம். இந்த அனுபவம் உண்மையிலேயே சுவாரஸ்யம். நம்மளை அறியாமலேயே நம்மை ஆட வைக்கும் போல இருக்கிறது துளசி.

said...

அருமையான ,நகைச்சுவையான பதிவு.

said...

அங்கேயும் நம் ””இதயத்தின்”” ஆட்சிதானா?
பாயசத்திற்கு வெல்லம்தான் சேர்த்திருக்கிறீர்களா?(சர்க்கரை சேர்ப்பதைவிட இதுதான் மிகவும் சுவையாக இருக்கும்)
நைவேத்தியப் பொங்கலும் நெய் ‘ஒழுக’ சூப்பராகத் தெரிகிறது.

said...

வாங்க கயலு.

நம்மூரில் பெண்கள் சினிமாவிலும் டிவியிலும் மட்டுமே(கெட்ட ஆட்டம்) ஆடலாமாம்!

said...

வாங்க கோபி.

அவசரமா வந்ததுலே 'சி' விட்டுப்போச்சு:-)

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்.

இன்னிக்கும் ஒரு இடுகை தொடரா வந்துருக்கு. லைவ் ரிலே என்றதால் மூணாவது பகுதியும் வரத்தான் வேணும். அதுலே நான் 'அட!' போட்ட விஷயம் உண்டு.

said...

வாங்க மாதேவி.

ஆட்டம் இன்னும் முடியலையாக்கும்,ஆமா:-)

said...

வாங்க வல்லி.

இசை அப்படிப்பா! பூனாவில் இருக்கும்போது கொட்டு சத்தம் கேட்டதும் ஒன்னரை ரெண்டு வயசெல்லாம் தானே ஆடத்தொடங்கும்:-)

said...

வாங்க ஜிஜி.

நீங்க பதிவர் ஆகலையா இன்னும்?

said...

வாங்க பிரகாசம்.

நான் பாயசத்துக்கும், சர்க்கரைப் பொங்கலுக்கும் கோல்டன் சிரப் என்ற ( டின்னில் கிடைக்கும்) வெல்லப்பாகு சேர்ப்பேன்.

கொண்டுவந்த டின் தீரப்போகுது. அது முடிஞ்சதும் கிளம்பிப்போகணும்:-)